New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 02. மணிமேகலையின் பாடுபொருள் முனைவர் இரா. குமார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
02. மணிமேகலையின் பாடுபொருள் முனைவர் இரா. குமார்
Permalink  
 


 2. மணிமேகலையின் பாடுபொருள்   முனைவர் இரா. குமார்

 

தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்களையும் தமிழர்களின் பண்பாட்டையும் தமிழின் இனிமையையும் மணிமேகலை எடுத்துரைக்கின்றது. அந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. அதில் முப்பது காதைகள் உள்ளன. இக்காதைகள் ஒவ்வொன்றுக்கும் தலைப்பெயர் உண்டு. இச்சிறப்புடைய இந்நூல் உலக இன்பத்தைப் பழித்துத் துறவறமே சிறந்ததென உரைக்கின்றது. அதன்கண் நாட்டின் சிறப்பு, நகரங்களின் காட்சி, சமூகநீதி, அரசியல், தொழில்கள், கலை வளர்ச்சி, துறவு, அன்னதானம், பழவினை, மறுபிறப்பு, சீவகாருண்யம், சொர்க்கம் - நரகம், மத தத்துவங்கள் போன்றவை மணிமேகலையில் நிறைந்து கிடக்கின்றன. இவைகளை மிகுதியாகப் புலப்படுத்தும் இந்நூலில் பாடுபொருள் சிறந்துள்ளது. அதனைக் கூலவாணிகன் சாத்தனார் கட்டுக்கோப்பான கதையமைதியுடன் வெளிப்படுத்தியுள்ளார். அதனை விளக்கிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

 

அரசியல் புரட்சியைச் சிலப்பதிகாரமும், சமுதாயப் புரட்சியை மணிமேகலையும் ஏற்படுத்துவன. பழங்காலத்துக் காவியங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைத் தழுவிய கதைகளாக அல்லது தெய்வத்தைத் தழுவிய கதைகளாகத்தான் இருக்கும். காவியத்தின் காவியத் தலைவர்கள் அரசர்களாகவோ அல்லது கடவுளர்களாகத்தான் இருப்பார்கள். இந்த முறைக்கு மாறானது மணிமேகலைக் காவியம். 

சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் கதைத் தொடர்பு உண்டு. சிலப்பதிகாரத்தின் கதைப் போக்கு வேறு; மணிமேகலையின் கதைப் போக்கு வேறு. சிலப்பதிகாரம் அரசியலைப் போதிப்பது; மணிமேகலை அறத்தைப் போதிப்பது. சிலப்பதிகாரமாவது ஒரு பணக்காரக் குடும்பத்தின் கதை. மணிமேகலையோ ஒரு பரத்தையின் மகளைப் பற்றிய கதை. இந்நூல் ஆசிரியரோ ஒரு பரத்தையின் மகளைக் கதைத் தலைவியாக வைத்துக் காவியம் படைத்துப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். 

நீதியிலே நின்று ஆளவேண்டும்; ஆட்சி அறநெறியில் நிற்காவிட்டால் நாடு நலிவுறும்; நன்மையான எச்செயலும் நடைபெறாது; மக்களின் ஒழுக்கப் பண்பு மறைந்தொழியும்; நாட்டிலேயே வறுமைப்பேய் புகுந்து எல்லா நன்மைகளையும் சிதறடித்து விடும் என்ற கருத்துக்கள் மணிமேகலையில் அமைந்திருக்கின்றன.

மணிமேகலைத் துறவு என்றழைக்கப்படும் இந்நூல் புத்தமதக் கொள்கைகளைப் பாராட்டிப் பேசுகிறது. ஏனைய மதங்களைப் பொய்மதங்கள் என்றும் அவைகள் கூறும் கருத்துக்கள் பொய்யுரைகள் என்றும் கண்டிக்கின்றது. நாடு, மொழி, இன பேதமில்லாமல் எல்லா மக்களையும் பட்டினிக் கொடுமையிலிருந்து காக்க வேண்டுமென மொழிகின்றது; உயிர்களுக்கெல்லாம் உணவளிப்பதே உயர்ந்த அறம்; அதுவே புத்த தர்மமென இந்நூல் நவில்கின்றது. துறவு பூண்ட மணிமேகலை சோம்பித் திரியவில்லை. பசியால் வருந்துவோர்க்கு உணவிடுவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தாள்.

 

மணிமேகலையின் பாடுபொருள் அமைப்பு

 

கோவலனது காதற் பரத்தை மாதவி. அவள் மகள் மணிமேகலை. கோவலன் பரத்தையின் நட்பால் செல்வத்தை இழந்தான். மனைவியுடன் சேர்ந்து மதுரைக்குச் சென்றான். அங்கு கொலை வாய்ப்பட்டான். அதனால் அரசும் மதுரையும் அழிந்தன.

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாதவி இச்செய்திகளைக் கேட்டதும் தாங்க முடியாத துக்கம் கொண்டாள். புத்த சங்கத்தை அடைந்தாள். பிக்குணியானாள். தன் மகள் மணிமேகலையும் பிக்குணியாக்கினாள். இந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவதுதான் இந்நூல். அது சிலப்பதிகாரத்தின் பின் நடந்த நிகழ்ச்சிகளை நவில்வதாகவே அமைந்திருக்கின்றது.

மாதவி வாழ்வை வெறுத்து அறவணஅடிகளிடம் உபதேசம் பெற்றுப் புத்த சங்கத்தை அடைந்தாள். அவள் தன் மகள் மணிமேகலையைக் கணிகையர் தொழிலில் ஈடுபடவிடாமல் புத்த தருமத்தை மேற்கொள்ளும்படி செய்தாள்.

மணிமேகலையில் முப்பது காதைகள் உள. அவை 1. விழாவறைக் காதை, 2.ஊர் அலர் உரைத்த காதை, 3. மலர் வனம் புக்க காதை, 4. பளிக்கறை புக்க காதை, 5. மணிமேகலாத் தெய்வம் வந்து தோன்றிய காதை, 6. சக்கரவாளக் கோட்டம் உரைத்தக் காதை, 7. துயிலெழுப்பிய காதை, 8. மணிப்பல்லவத்துத் துயருற்ற காதை, 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை, 10. மந்திரங் கொடுத்த காதை, 11. பாத்திரம் பெற்ற காதை, 12. அறவணர் தொழுத காதை, 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, 14. பாத்திர மரபு கூறிய காதை, 15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை, 16. ஆதிரை பிச்சையிட்ட காதை, 17. உலகவறிவி புக்க காதை, 18. உதய குமரன் அம்பலம் புக்க காதை, 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, 20. உதய குமரனை வாளாலெறிந்த காதை, 21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை, 22. சிறைசெய்காதை, 23. சிறைவிடு காதை, 24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை, 25. ஆபுத்திரனோடு மணிப்பல்லவம் அடைந்த காதை, 26. வஞ்சி மாநகர் புக்க காதை, 27. சமயக் கணக்கர் தம் திறம் உரைத்த காதை, 28. கச்சி மாநகர் புக்க காதை, 29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, 30. பவத்திரு மறுகெனப் பாவை நோற்ற காதை என்பனவாகும்.

காவிரிப்பூம்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இருபத்தெட்டு நாட்கள் இந்திரவிழா நடைபெறுவது வழக்கம். அவ்விழா வழக்கம் போல் தொடங்கியது. அவ்விழாவில் மாதவியின் குடும்பத்தினர் நடனமாடி மக்களை மகிழ்விப்பது வழக்கம். இவ்விழா நிகழும் இவ்வாண்டு மாதவி நடனமாடச் செல்லவில்லை; மணிமேகலையையும் நடனமாட அனுப்பவில்லை. அதனால் ஊரார் பலபடப் பேசினார்கள். அது கேட்ட மாதவியின் தாய் சித்திராபதி வருத்தமடைந்தாள். அத்துடன் நில்லாது அவள் ஊரார் கூறும் பழிமொழியைக் கூறிவருமாறு தன் தோழி வயந்தமாலையை மாதவியிடம் அனுப்பி வைத்தாள். மாதவியிருந்த மலர் மண்டபத்தை அடைந்த வயந்தமாலை சித்திராபதி உரைத்ததை நவின்றாள். அது கேட்ட மாதவி கண்ணகி மகள் மணிமேகலை. இவள் தவநெறி செய்வதற்குத் தகுந்தவள்; பரத்தமைத் தொழிலுக்கு உரியவள் அல்லள்; யான் அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவநெறியை மேற்கொண்டேன். அதனால் அங்கு வருவதற்கில்லை என மொழிந்தாள். அதை வயந்தமாலை சித்ராபதியிடம் உரைத்தாள். மாதவி உரைத்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலைத் தான் கட்டிக் கொண்டிருந்த மாலையில் கண்ணீர் உகந்தாள். அதுகண்ட மாதவி அவள் கண்ணீர் துடைத்தாள். மலர் வனம் சென்று புதுமலர் பறித்து வருமாறு கூறினாள். அது கேட்ட மாதவியின் தோழி சுதமதி வயதுப்பெண் தனியே செல்வது தகாது; நான் மணிமேகலையுடன் செல்கிறேன். உவவனம் ஒன்றுண்டு. அதனுள் பளிங்கு மண்டபம் உண்டு. அதனுள் இருந்து பேசினால் கேட்காது. அதனுள் பதுமபீடம் இருக்கிறது. அது தெய்வதச்சனால் இயற்றப்பட்டது என்றாள். அதன்பின் மணிமேகலையும் சுதமிதியும் அவ்விடத்திற்கு மலர் பறிக்கச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றதை மதயானையான காலவேகனை அடக்கி அவ்வழி வந்த உதயகுமரன் கண்டான்; உடன் அவ்விடத்திற்குத் தேரில் சென்றான். அவன் வரும் தேரொலி கேட்ட மணிமேகலை பளிங்கு மண்டபத்திற்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். அவ்விடம் வந்த உதயகுமரன் சுதமதியிடம் மணிமேகலையுடன் நீ இங்கு வந்தது எனக்குத் தெரியும். அவள் இங்கு புத்த சங்கத்தைவிட்டுத் தனித்து வரக் காரணமென்ன? என வினவினான். அது கேட்ட சுதமதி உதயகுமரனுக்கு உடம்பின் நிலையாமையையும் மணிமேகலை தவநெறிப்பட்டதையும் எடுத்துரைத்தாள். அத்தருணத்தில் அவள் கூறியதை உதயகுமாரன் பொருட்படுத்தாது பளிக்கறையினைச் சுற்றிக் கையால் தடவி வந்தான். உள்ளே நுழைவதற்குரிய வழியறியாதவனாய்த் திரும்பிச் சென்றான். அவ்வாறு செல்லும்போது சுதமதியை நோக்கி, நான் சுதமதியைச் சித்திராபதி மூலம் அடைவேன் எனக் கூறிச் சென்றான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை அவ்வறையைவிட்டு வெளியே வந்தாள். வந்தவள் சுதமதியிடம் என் மனம் உதயகுமரன் பின் சென்றதற்குரிய காரணமென்ன? என வினவினாள். 

இந்திர விழாவைக் காண மணிமேகலா தெய்வம் ஒரு பெண்ணுருவில் வந்தது. வந்த தெய்வம் சுதமதியிடம் நீங்கள் இங்கே வருவதற்குரிய காரணமென்ன? எனக் கேட்டது. அது கேட்ட அவள் இதுவரை நடந்தது உரைத்தாள். அதுகேட்ட அத்தெய்வம் நீங்கள் இச்சோலைக்கு வெளியில் சென்றால் மணிமேகலையை உதயகுமரன் பிடித்துக் கொள்வான். ஆகவே நீங்கள் இச்சோலையின் மேற்குத் திசையிலுள்ள சக்கரவாளக் கோட்டத்தின் வழியாகச் செல்லுங்கள் என்றது. அது கேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டத்தைச் சக்கரவாளக் கோட்டமெனக் கூறக் காரணமென்ன? என்றாள். அதற்குப் பதிலுரைக்கும் தருணத்தில் சுதமதி தூங்கிவிட்டாள். மணிமேகலையை அத்தெய்வம் மயங்கும்படி செய்து மணிப்பல்லவத் தீவிற்குக் கொண்டு சென்றது.
மணிப்பல்லவத் தீவிலிருந்து வந்த மணிமேகலாத் தெய்வம் உதயகுமரனிடம் சென்று அவனுக்கு அரச நீதியை எடுத்துரைத்தது. அதன்பின் உவவனம் வந்து தூங்கிக்கிடந்த சுதமதியை எழுப்பியது. அத்துடன் நில்லாது அவளிடம் நான் கோவலனது குலதெய்வம். என்பெயர் மணிமேகலாத் தெய்வம். என்னைப் பற்றி மாதவி அறிவாள். மணிமேகலையை மணிப்பல்லவத் தீவில் வைத்திருக்கிறேன்.அங்கு அவள் அவளது பழம் பிறப்பை உணர்ந்து ஏழாம் நாள் இங்கு வருவாள். இதை மாதவியிடம் கூறுவாயாக எனக் கூறி மறைந்தது. அதன்பின் அவள் அக்கோட்டத்திலுள்ள உலக அறவி என்னும் பொது மன்றத்திலே தங்கினாள். அவ்விடத்துத் தூணில் குடிகொண்டிருந்த தெய்வமொன்று இவளிடம் உன் பழம் பிறப்பையும் அவளது பழம் பிறப்பையும் அவள் உணர்ந்து வருவாள் என்றது. அதுகேட்ட அவள் அங்கே இரவுப்பொழுது தங்கியிருந்தாள். பின்னர் காலையில் மாதவியிடத்து வந்து நிகழ்ந்தது உரைத்தாள். அதுகேட்டு மாதவி வருந்தினாள்.

மணிமேகலை மணிப்பல்லவத் தீவிலிருந்து எழுந்து மாதவியைத் தேடினாள். புத்த பீடிகையை வணங்கி பழம்பிறப்பு (தானும், சுதமதியும், மாதவியும் முற்பிறப்பில் சகோதரிகளென) உணர்ந்தாள். அவள் முன் மணிமேகலாத் தெய்வம் தோன்றி நீ முற்பிறப்பில் இராகுலன் என்ற பெயரில் தற்போதுள்ள உதயகுமாரனை மணந்திருந்தாய். நீ இளமையாக இருப்பதால் சமயக் குரவர்கள் சமயநெறி உரைக்க மாட்டார்கள். ஆகவே நீ மாறுவேடம் கொண்டு சமயநெறி கேட்பாயாக. கேட்டபின் புத்த தர்மத்தைப் பின்பற்றுவாயாக எனக் கூறியது. அத்தோடு மட்டுமல்லாது அவளுக்கு மூன்று மந்திரங்களையும் கூறி மறைந்தது. 

அம்மந்திரங்களாவன: 1. வேற்றுருக்கொள்ளும் மந்திரம், 2. வான்வழியே செல்லும் மந்திரம், 3. பசியில்லாமல் வாழும் மந்திரம் என்பனவாகும்.

மணிமேகலாத்தெய்வம் சென்ற பின்னர் அத்தீவைச் சுற்றிப் பார்த்தாள் மணிமேகலை. அப்பொழுது அத்தீவின் தெய்வமான தீவதிலகை அவள் முன் தோன்றி நீ யார்? எனக் கேட்டது. அதற்கு அவள் தான் காவிரிப் பூம்பட்டினத்து உவவனத்திலிருந்து வந்த செய்திவரை உரைத்தாள். அது கேட்ட தீவதிலகை தன்னுடைய வரலாற்றை நான் இந்திரனின் ஏவலால் புத்த பீடிகையைக் காத்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை. இங்கே கோமுகி என்ற பொய்கை உண்டு. அதிலே அமுதசுரபி என்ற பாத்திரம் அமிழ்ந்து கிடக்கிறது. அது புத்தர் அவதார தினத்தன்று (வைசாக சுத்த பூரணிமை) தோன்றும். அந்நாள் இந்நாள் தான். அது உன் கையில் கிடைக்கலாமென நினைக்கிறேன். அதன் வரலாற்றை உன் ஊரிலுள்ள அறவண அடிகள் உரைப்பார் எனக் கூறியது. உடனே அவ்வமுத சுரபியை அடைய ஆவல் கொண்ட அவள் புத்த பீடத்தை வணங்கி, அக்குளத்தினை வளம் வந்து நின்றாள். அவ்வாறு நின்றவளது கையில் அமுதசுரபி எழுந்து வந்து தோன்றியது. அது கண்ட அவள் புத்த தேவனை வணங்கிப் போற்றினாள்.

பசிப்பிணியை ஓட்டுவதே உலகத்தில் சிறந்த அறமாகும். ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே உன் கடமையாகக் கொள்ளவேண்டுமெனத் தீவதிலகை மணிமேகலைக்குப் போதித்தாள். அதன்பின் நீ உன் ஊருக்குச் செல்வாயாக எனக் கூறிப் பிரிந்து சென்றாள் தீவதிலகை.





__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: 02. மணிமேகலையின் பாடுபொருள் முனைவர் இரா. குமார்
Permalink  
 


புத்தபீடிகையை வணங்கிய மணிமேகலை வான்வழியே பறந்து காவிரிப் பூம்பட்டினத்தை அடைந்தாள். மாதவி சுதமதியைச் சந்தித்து நிகழ்ந்தது உரைத்தாள். அதன்பின் அறவண அடிகளைத் தரிசிக்க அவர்களுடன் மணிமேகலை சென்றாள். அவ்விடம் சென்ற மணிமேகலை அறவண அடிகளை மும்முறை வலம் வந்து வணங்கினாள். அதன்பின் அவரிடம் நிகழ்ந்தது உரைத்தாள். அது கேட்ட அறவண அடிகள் அமுதசுரபி கொண்டு மக்களின் பசிப்பிணி போக்க வேண்டுமென்பதையும், புத்தர் மீண்டும் அவதரிக்கப் போவதையும், அதனால் மக்கள் அடையப்போகும் நன்மையினையும் எடுத்துரைத்தார். அதுமட்டுமன்றி ஆபுத்திரன் வரலாறு, அமுதசுரபியின் கதை, அது கோமுகிப் பொய்கையில் புகுந்ததற்குரிய காரணம் ஆகியவற்றைத் திறம்படக் கூறினார்.

மணிமேகலை அறவண அடிகளை வணங்கி விடை பெற்றுக்கொண்டு வீதிவழியே வந்தாள். அவ்வாறு வந்தவளை மக்கள் சூழ்ந்து கொண்டனர். மணிமேகலை தான் வைத்திருக்கும் அமுதசுரபியில் பத்தினிப் பெண்ணிடம் பிச்சை ஏற்க வேண்டுமென்றாள். அது கேட்ட யானைப்பசி உடைய காயசண்டிகை ஆதிரை என்பவள் கற்பில் சிறந்தவள். அவள் வீடு இது தான் எனக் கூறியதோடு அவள் வரலாறும் உரைத்தாள். அதுகேட்ட மணிமேகலை அவ்வீடு சென்று ஆதிரையிடம் அமுதசுரபியில் பிச்சை பெற்றாள். அதில் வளர்ந்த உணவினை யானைப் பசி கொண்ட காயசண்டிகைக்கு இட்டாள். அவளது பசி தீர்ந்தது. அதன்பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலையிடம் உரைத்ததுடன் அவளைச் சக்கரவாளக் கோட்டத்துள்ள உலக அறவியிலிருந்து அன்னதானம் செய்து கொண்டிரு எனக் கூறினாள். அதனையடுத்துத் தன் ஊருக்குச் சென்றாள்.

மணிமேகலை உலக அறவியை அடைந்து, அங்குள்ள சம்பாவதித் தெய்வத்தையும், கந்தில் பாவையையும் வணங்கிப் பலரையும் உணவுண்ண அழைத்து உணவு வழங்கினாள். மணிமேகலையின் இச்செயலும், மாதவியின் செயலும் சித்திராபதிக்கு மன வேதனையைத் தந்தது. அவர்களின் செயல்கள் கணிகையர் குலத்திற்கு ஏற்றதல்ல என நாடகக் கணிகையிடம் சித்திராபதி உரைத்தாள். அதன்பின் அவள் அரண்மனைக்குச் சென்று உதயகுமரனிடம் மணிமேகலை உலக அறவியிலிருந்து உணவளித்துக் கொண்டிருப்பதைக் கூறினாள். அது கேட்ட அவன் அவ்விடம் விரைந்தான். அவனைக்கண்ட மணிமேகலை அவனை வணங்கிச் சம்பாபதிக் கோயிலுக்குள் சென்றாள். சென்றவள் காயசண்டிகை உருவில் உருமாறி அமுதசுரபியுடன் வெளியே வந்தாள். அதுகண்ட உதயகுமரன் மணிமேகலை உள்ளே இருந்து கொண்டு காயசண்டிகையிடம் அமுதசுரபியைக் கொடுத்தனுப்பி இருக்கிறாள் என மாறாக உணர்ந்தான். அச்சினத்தால் அவன் சம்பாபதித் தெய்வத்தை நோக்கி நீ எனக்கு மணிமேகலையைக் காட்டாவிட்டால் எத்தனை நாளானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் எனச் சூளுரைத்தான். அதனை அவ்விடம் உள்ள தெய்வமொன்று நீ இவ்வாறு சூளுரைப்பதால் பயனேதுமில்லை என உரைத்தது. அது கேட்ட உதயகுமரன் வருந்தி அரண்மனை அடைந்தான். உருமாறிச் சென்றவள் அன்று முதல் பசித்தோர்க்கு உணவளித்து வந்தாள். அவள் அந்நகரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்றாள். அங்கு பசித்திருந்தவர்க்கு உணவளித்தாள். அது கண்டு அதிசயித்த காவலர்கள் அதனை அரசனிடமும் அரசியிடமும் உரைத்தனர். அரசன் அவளை அழைத்துவர ஆணையிட்டான். காவலர்கள் அவளிடம் அரசனின் ஆணையைக் கூறினர். அதுகேட்ட அவள் அமுதசுரபியுடன் சென்று அரசனை வணங்கி நின்றாள். அது கண்ட அரசன் நீ யார்? என்றான். அதற்கு அவள் யான் விஞ்சை மகள். இது பிச்சைப் பாத்திரம் அம்பலத்தில் உள்ள தெய்வம் இதை எனக்கு அளித்தது. அது தெய்வத் தன்மை உள்ளது என்றாள். அது கேட்ட மன்னன் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். சிறைச்சாலையை அறச்சாலையாக்க வேண்டும் என்றான். மன்னன் அதற்கு ஒப்புதல் அளித்து ஆணையிட்டான். அன்று முதல் சிறைச்சாலை அறச்சாலை ஆயிற்று.

மணிமேகலை உலக அறவியிலிருந்து வெளிவரும்போது கைப்பற்றிக் கொண்டு வருவேன் என எண்ணி உலக அறவியை அடைந்தான் உதயகுமரன். அப்பொழுது காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்னும் வித்தியாதரன் அவளைத்தேடி எங்கும் காணாதவனாய் உலக அறவிக்கு வந்தான். அவன் உலக அறவியிலிருந்து அவள் உணவளிப்பதைக் கண்டான். அதனைப் புகழ்ந்துரைத்தான். ஆனால் மணிமேகலை அவற்றில் மணங்கொள்ளாது அங்குநின்ற உதயகுமரனிடம் சென்று உடம்பின் நிலையாமையைக் கூறிக்கொண்டிருந்தாள். அதனைக் கண்ணுற்ற காஞ்சனன், இவள் அவனைக் காதலிப்பதனால்தான் ஊருக்கு வரவில்லை என்று மாறாகக் கருதினான். அதனை உற்றுநோக்க அவ்விடத்தே அவன் தங்கினான். அயலான் ஒருவன் இருப்பதனால் இவள் வேறிடம் போகமாட்டாள், இன்று நள்ளிரவு இவளை வந்து காண்போம் என்று எண்ணியவாறு சென்றவன், அவ்வாறே நள்ளிரவு அவ்விடம் வந்து உலக அறவியினுள் நுழைந்தான். அதனை ஒளிந்திருந்து கண்ணுற்றக் காஞ்சனன், அவன் காயசண்டிகையைத் தேடி வந்தான் என்பதை உணர்ந்து அவனை வெட்டி வீழ்த்தினான். அதன்பின் காயசண்டிகையைக் கைப்பற்றிச் செல்ல அவளை நெருங்கினான். அப்பொழுது கந்தில்பாவை இவள் காயசண்டிகை அல்லள், மணிமேகலை. காயசண்டிகைக் கடும்பசி நீங்கி உன்னைக் காண ஆகாயமார்க்கமாக வந்து கொண்டிருக்கும் போது விந்தாகடிகை என்னும் காவல் தெய்வம் அவளை இழுத்து விழுங்கிவிட்டது. அந்த உண்மையை நீ உணராமல் கொடுமை செய்தாய். இத்தீவினை உன்னைச் சும்மா விடாது என உரைத்தது. அதுகேட்டு தன் உள்ளம் வருந்தியவனாகக் காஞ்சனன் தனது ஊருக்குப் போய்விட்டான்.


உதயகுமரன் இறப்பினைக் கண்ட மணிமேகலை மாறுவேடத்தைக் களைந்து அவனை நெருங்கினாள். அவளைக் கந்தில் பாவை தடுத்து உதயகுமரன் இறந்தது பழைய வினையின் பயன். இனி வரும் பிறவிகளில் நீ ஆண்பிள்ளையாகத்தான் பிறப்பாய் இனி உன் இறப்புவரை நடக்கப்போவது இதுதான் எனக் கூறியது. பொழுதும் விடிந்தது. மக்கள் சம்பாபதியையும் கந்தில் பாவையையும் வழிபட வந்தார்கள். உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டனர்.அவர்கள் சக்கரவாளக் கோட்டத்தில் முனிவர்களுக்கு இச்செய்தி உரைத்தனர். அம்முனிவர்களுள் ஒருவர் அரசனிடம் சென்று பத்தினிப் பெண்டிரை விரும்பி உயிரிழந்தோரின் கதைகளை எடுத்துரைத்தார். காமத்தின் காரணமாகக் உதயகுமாரன் இறந்ததையும் நவின்றார். அது கேட்ட மன்னன் உதயகுமாரனுக்காக உள்ளம் வருந்தவில்லை; அவனுக்குத் தகுந்த தண்டனையே கிடைத்தது என்றார். இருப்பினும் தன் மகன் செய்த செயல் வெளிப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினார். உடனே அமைச்சர்களுள் ஒருவனான கோழிக ஏனாதியை அழைத்து மணிமேகலையைச் சிறைப்பிடிக்கும்படி உத்தரவிட்டான். மணிமேகலைச் சிறைப்பட்டாள்.

புதல்வனை இழந்து வருந்திய இராசமாதேவியை வாசந்தை என்ற முதியவள் சமாதானப்படுத்தினாள். இராசமாதேவி மணிமேகலையைத் துன்புறுத்த எண்ணினாள். ஆனால் அதனை வெளிப்படையாகக் காட்டாமல் உதயகுமரனைப் இகழ்ந்து, மணிமேகலையைப் புகழ்ந்தாள். அவளைச் சிறைவீடு செய்து அவளை ஒப்படைக்கும்படி அரசனிடம் வேண்டினாள். அரசனும் அவ்வாறே செய்தான். இராசமாதேவி மணிமேகலையைப் பைத்தியக்காரியாக்க மருந்தூட்டச் செய்தாள். கற்பழிந்தவள் என்று பழிசுமத்த முயன்றாள். புழுக்கறையிலே அடைத்துப் பட்டினி போட்டாள். அவற்றால் மணிமேகலைக்கு ஒன்றும் ஆபத்து விளையவில்லை. அதனை அறிந்த இராசமாதேவி மணிமேகலையிடம் மன்னிப்புக் கேட்டாள். மணிமேகலை அவளை வணங்கி உதயகுமரனின் பழம்பிறப்பு உரைத்தாள்.

உதயகுமரன் இறந்த செய்தி கேட்டுச் சித்திராபதி இராசமாதேவியை அடைந்தாள். மணிமேகலையால் அந்நகருக்கு வரப்போகும் தீமை உரைத்து அவளைத் தன்னோடு அனுப்புமாறு வேண்டினாள். அது கேட்ட இராசமாதேவி மணிமேகலை உன்னுடன் வருவதற்கு உரியவள் அல்லள், அவள் என்னிடம் இருக்கட்டும் என்றாள். மணிமேகலை நிலையறிந்த மாதவி சுதமதியுடன் அறவண அடிகளைச் சந்தித்தனர். அவரது துணையுடன் அவர்கள் இராசமாதேவியைச் சந்தித்தனர். அவ்வரசியும் அறவணஅடிகளை வரவேற்று வணங்கிச் சிம்மாசனத்தில் அமர வைத்தார். அறவணஅடிகள் இராசமாதேவிக்குப் புத்தமத உண்மைகளைப் போதித்தார். அதன்பின் மணிமேகலையிடம் நீ மற்ற மத தர்மங்களையெல்லாம் கேட்டறிந்தபின் உனக்குப் புத்த தர்மத்தை உணர்த்துவேன் எனக்கூறி தனது இடத்திற்குப் போகப் புறப்பட்டார்.

மணிமேகலை இராசமாதேவியைப் பார்த்து நான் இங்கிருந்தால், இவள் உதயகுமரனைக் கொன்றவள் என்ற பழி எழும். அதனால் நான் ஆபுத்திரன் நாடு செல்வேன். மணிப்பல்லவத் தீவிலுள்ள புத்த பீடிகையை வணங்குவேன். வஞ்சி மாநகர் புகுந்து பத்தினி தெய்வத்தை வழிபடுவேன். அதன்பின் நாடெங்கும் சென்று நல்லறம் புரிவேன் எனக் கூறிச் சென்றான். அதன்படி அவள் முதலில் சாவகத் தீவை அடைந்தாள். அங்கு ஆபுத்திரன் புண்ணியராசனாகப் பிறந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் ஆட்சிக்குட்பட்ட புறநகர்ச் சோலையில் தங்கிய அவள் அவ்விடத்து வாழ்ந்த தரும சாவகன் முனிவரிடம் இந்நகரின் பெயரென்ன? இந்நகரின் அரசன் யார்? என வினவினள். அதற்கு அம்முனிவர் இது நாகபுரம். இதன் அரசன் பூமிச்சந்திரன் புதல்வன் புண்ணியராசன்என்றான். அத்தருணம் புண்ணியராசன் தன் மனைவியுடன் அவ்விடம் வந்தான். அங்குள்ள தரும சாவகன் முனிவரை வணங்கி இவள் யார்? என்றான். அதற்கு அவனின் பிரதானி ஒருவன் அவளை இன்னவள் எனக் கூறினான். அதன்பின் மணிமேகலை புண்ணியராசனிடம் என் கையிலிருக்கும் அமுதசுரபி உன்னுடையது. நீ மணிப்பல்லவத் தீவிலுள்ள புத்த பீடிகையால் உன் பழம்பிறப்பு உணரலாம். நீ அங்கு வருக எனக் கூறிப் மணிப்பல்லவ தீவிற்குப் புறப்பட்டாள். நகருக்குள் சென்ற புண்ணியராசன் தன் வளர்ப்புத் தாயான அமரசுந்தரியின் மூலம் தன் வரலாற்றை அறிந்தான். அரசாட்சியில் வெறுப்படைந்தான். சனமித்திரன் என்னும் மந்திரியிடம் ஒருமாதம் அரசாளும்படி அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு புண்ணியராசன் கப்பலேறி மணிப்பல்லவத் தீவை அடைந்தான். அவ்விடம் வந்த அவனை மணிமேகலை வரவேற்று அத்தீவைச் சுற்றிக் காட்டினாள். அதன்பின் அவன் புத்தபீடத்தை வணங்கி தான் முற்பிறப்பிலே ஆபுத்திரனாக இருந்ததை அறிந்தான். இவ்விருவரும் இங்கிருப்பதை உணர்ந்த தீவதிலகை என்ற தெய்வம் அத்தீவிற்கு வந்தது. அத்தெய்வம் புண்ணியராசனுக்குப் பழம்பிறப்பு உரைத்து, மணலால் மூடப்பட்டுக் கிடந்த அவனது பழைய உடம்பைக் காட்டியது. மணிமேகலையிடம் இந்திரவிழாச் செய்யாததால் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொண்டதை உரைத்தது. அறவணஅடிகள், மாதவி, சுதமதி மூவரும் வஞ்சி நகரம் புகுந்தது உரைத்தது. தனது எலும்பினைக் கண்டு வருந்திய புண்ணியராசனை மணிமேகலை தேற்றினாள். அவனை அவனது நகருக்கு அனுப்பினாள். பின்னர் வனத்தின் வழியே வஞ்சி நகருக்குப் புறப்பட்டாள்.


வஞ்சி நகருக்கு வந்த மணிமேகலை, கண்ணகி கோயிலுக்குள் நுழைந்து அவளை வணங்கினாள். கண்ணகியிடம் மதுராபுரித் தெய்வம் தனக்குக் கூறிய பழம்பிறப்புக் கதையை கூறியதுடன் அவளிடம் மதுரையை எரித்ததற்குரிய காரணத்தை வினவினாள். அதற்குக் கண்ணகி கோபத்தால் மதுரையை எரித்தோம், நல்வினையால் யானும் கணவனும் தேவரானோம் என்றாள். அதன்பின் மணிமேகலை தன் மந்திர சக்தியால் முனிவர் வடிவம் கொண்டு வஞ்சியின் புறநகரை அடைந்தாள். அங்கு பல சமயவாதிகளிடம் சமய உரைகள் கேட்டாள். பின் அறவண அடிகள், மாதவி, மணிமேகலையைக் காணும்பொருட்டு நகருக்குள் நுழைந்தாள். அங்கு புத்த முனிவர்கள் தவம்புரிந்து கொண்டிருக்கும் இடத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் தவம்புரிந்து கொண்டிருந்தார். அவரை வணங்கிய அவள் அவரிடம் தான் மணிப்பல்லவத் தீவு சென்றது, புண்ணியராசனைக் கண்டது, காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல்கொண்டதைத் தீவதிலகை வாயிலாக அறிந்தது, இங்கு அறவண அடிகளைத் தேடிவந்தது ஆகியவற்றை எடுத்துரைத்தாள். அதுகேட்ட மாசாத்துவான் தான் இங்கு வந்ததற்குரிய காரணத்தை எடுத்துரைத்தான். வஞ்சி நகரில் உன் தந்தைக்கு ஒன்பது தலைமுறைக்கு முன் கோவலன் என்பவன் இருந்தான். அவன் தன் செல்வங்கள் முழுமையும் தருமங்கள் செய்தான். அங்கு புத்த கோயிலைக் கட்டினான். அக்கோயிலுக்கு யான் வந்தேன். தீவினையால் கொலையுண்ட உன் தந்தை புத்தர் அவதரித்த பின் அவர் உபதேசங்கள் கேட்டு வீடுபேறு அடைவார் எனச் சான்றோர் சொல்லக் கேட்டேன். நானும் அவ்வற மொழிகளைக் கேட்டு வீடுபேறு அடைவேன் என்றான். இங்கு அறவணஅடிகள், மாதவி, சுதமதி இல்லை. அவர்கள் அனைவரும் காஞ்சி மாநகர் சென்றனர். அங்கு கடுமையான பஞ்சம் நிலவுகிறது. அங்கு நீ சென்று அவ்விடத்து வாழும் மக்களுக்கு உணவளிப்பாயாக என்றாள். அது கேட்ட அவள் அந்நகர் சென்றாள். அங்கு இளங்கிள்ளியால் கட்டப்பட்ட புத்தர் ஆலயத்தைக் கண்டு வணங்கினாள். அதன் தென்மேற்கில் ஒரு சோலை இருந்தது. அங்கு சென்று தங்கிய அவளைக் கண்டான் ஒருவன். அவள் அமுதசுரபியுடன் நிற்பதைக் கண்ட அவன் அரசனிடம் சென்று அதனை உரைத்தான். அது கேட்ட அரசன் அவ்விடம் வந்து, அவளிடம் முன்பு என்னிடம் ஒரு தெய்வம் உரைத்தது போல உனக்காக இந்நகரில் ஒரு பொய்கையையும் பொழிலையும் அமைத்துள்ளேன். அதனைக் காண்பதற்கு வருவாயாக என்றாள். அங்கு சென்ற மணிமேகலை அவ்விடத்துப் புத்த பீடத்தைக் கட்டினாள். மணிமேகலாத் தெய்வத்திற்கும் கோயில் கட்டுவித்தாள். அங்கே அமர்ந்து அனைவருக்கும் அமுதசுரபியால் உணவளித்தாள். அதன்பின் அங்கு மழைபெய்து வளம் சிறந்தது. அதனை அறிந்த அறவண அடிகள் மாதவி, சுதமதியுடன் அவ்விடம் வந்து மணிமேகலையைக் கண்டனர். அத்தருணத்தில் மணிமேகலை அறவாணஅடிகளிடம் நான் தீவதிலகை மூலம் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோலாள் அழிந்ததை அறிந்தேன். நான் வஞ்சிநகர் வந்தேன். பலசமயவாதிகளிடமும் சமய உரைகள் கேட்டேன். அவற்றில் ஒன்றும் என் உள்ளத்திற்கு ஒத்துவரவில்லை. அதனால் உண்மைப்பொருளை உபதேசிக்க வேண்டும் என்றாள். அதுகேட்ட அறவண அடிகள் உண்மைப்பொருளை உரைத்தார். அதன்பின் மணிமேகலை அவ்விடம் தங்கிப் பிறவிப்பயன் நீங்கத் தவமிருந்தாள்.

 

தொகுப்புரை

 

  • மணிமேகலை கணிகையர் குலத்தில் பிறந்தவள். அவள் அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவநெறியை மேற்கொண்டதை அக்காலச் சமூகம் ஏற்றுக்கொண்டதா?

  • மணிமேகலையை மாதவி தவநெறிப்படுத்தியது சரியா?

  • தன் மனம் உதயகுமரன் பின் சென்றதற்குரிய காரணமென்ன? என மணிமேகலை சுதமதியிடம் வினவியது சரியா?

  • இளமையாக இருப்பவர்களுக்குச் சமயக்குரவர்கள் சமயநெறி உரைக்க மாட்டார்கள் என்ற வழக்கம் அக்காலச் சமூகத்தில் இருந்ததா?

  • காமவயப்பட்டு அலைபவர்கள் கொலைவயப்படுவது உறுதி என்ற கருத்தை இக்காப்பியம் உணர்த்துகிறது.

  • முற்பிறப்பில் செய்த செயல்களால் மறுபிறப்பில் நன்மை தீமை விளையும் என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • அரசன் நடுநிலை தவறாது இருக்கவேண்டும். ஆனால் உதயகுமரனின் தந்தை மகனுக்காக மணிமேகலையைச் சிறைப்படுத்தியது சரியா?அரச நீதி நிலைநாட்டப்பட்டதா?

  • இராசமாதேவி மணிமேகலையைக் கொடுமை செய்தது சரியா?

  • காஞ்சனன் கொடுமை செய்தது கண்ட கந்தில்பாவை அவனிடம் இத்தீவினை உன்னைச் சும்மா விடாது என்றது. ஆனால் அத்தெய்வம் மணிமேகலையைக் கொடுமைப்படுத்திய அரசியிடம் ஏதும் உரைக்காதது ஏன்?

  • பல சமயவாதிகளிடம் கேட்ட உரைகள் மனதிற்கு ஒத்துவரவில்லை என மணிமேகலை உரைப்பது பிறமதத்தை இழிவுபடுத்தவா? இல்லை புத்தமதத்தை உயர்த்தவா?

  • வீடுபேறு பற்றிய நம்பிக்கையை மணிமேகலை வலியுறுத்துகிறது. நல்லது செய்தால் வீடுபேறு கிடைக்குமா? இல்லை புத்த மதக் கருத்துக்களைக் கேட்டால் வீடுபேறு கிடைக்குமா? புத்தர் அவதரொத்தபின் கோவலன் அவருரை கேட்டு வீடுபேறு அடைவான். அதன்பின் நானும் அவ்வுரை கேட்டு வீடுபேறு அடைவேன் எனத் தவமிருக்கும் மாசாத்துவான் மணிமேகலையிடம் உரைப்பது சிந்தனைக்குரியது.

  • உலகில் தலையாய அறமாகப் போற்றப்படுவது எது? உலகில் பசித்து வாழும் உயிர்களுக்கு உணவளித்து அவ்வுயிர்களைக் காப்பதே தலையாய அறமாகும்.

  • பிறவிப்பயன் நீக்கத்தை மணிமேகலை வலியுறுத்துகிறதா?மணிமேகலைப் பிறவிப்பயன் நீங்கத் தவமிருக்கிறாள் எனக் கதை முடிகிறது.

  • இளங்கிள்ளியால் வஞ்சிநகரில் புத்தர் ஆலயம் கட்டப்பட்டுள்ள செய்தியை உணரமுடிகிறது.

  • மக்கள் பணிதான் உயர்ந்த தர்மம் என்பதை இக்காப்பியம் போதிக்கிறது.

  • பழவினை, மறுபிறப்பு, புண்ணிய-பாவம், சொர்க்கம்-நரகம், துறவு, அன்னதானம், மதத் தத்துவங்கள், தெய்வீக நிகழ்ச்சிகள் போன்றவற்றை இக்காப்பியம் எடுத்துரைக்கின்றது.

  • மணிமேகலை எதிரிகளால் சோம்பி வீழவில்லை. துறவு நிலையில் உறுதியுடன் நின்று வெற்றி பெறுகிறாள்.

  • மணிமேகலை பரத்தமைத் தொழிலுக்கு உரியவள் அல்லள் என்பதை மெய்ப்பிக்கிறாள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard