New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 01. மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவும் அதன் மையமும் முனைவர் மு. பாண்டி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
01. மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவும் அதன் மையமும் முனைவர் மு. பாண்டி
Permalink  
 


01. மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவும் அதன் மையமும்  முனைவர் மு. பாண்டி

 

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் கதையமைவாலும், காப்பியத்தலைமையாலும் மற்ற காப்பிய மரபுகளில் இருந்து வேறுபட்டு அமைகின்றது. பௌத்த மதச் சார்புடன் விளங்குவது என்பது இக்காப்பியத்தின் மற்றொரு சிறப்பு. சமண சமயத்தின் ஆளுமை பெற்ற பகுப்பில் பௌத்த சமயம் சார்ந்த இந்நூலும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது இதன் தகுதியால் ஆகும். அரசன் மகன் ஒருவனின் கதையாக மணிமேகலை அமைந்தாலும், அவனின் நிறைவேறாக் காதலுக்கு இடம் தரும் கதையமைவைக் கொண்டது இக்காப்பியம். அரசன் மகனே என்றாலும் பெண்ணின் மனதிற்கு முக்கியத்துவம் தந்து அவளின் விருப்பு வெறுப்பிற்கு வழி வைத்து அதனை வெளிப்படுத்தி நிற்கிறது இம்மணிமேகலைக் காப்பியம். காப்பியத்தலைமை பெரும்பாலும் எல்லாத் தமிழ்க் காப்பியங்களிலும் ஆணாகவே இருக்க, இக்காப்பியத்தில் மட்டும் பெண்ணாக அமைக்கப் பெற்றிருப்பது குறிக்கத்தக்க மாற்றம் ஆகும். அதிலும் துறவி ஒருத்தியைக் கதைத்தலைவியாகப் படைத்திருப்பது என்பதும், சமுதாய விளிம்புநிலையில் உள்ள பரத்தை குலம் சார்ந்தவளை அவளின் கொள்கை வழியாகச் சிறந்தவளாகக் காட்டுவது என்பதும் இக்காப்பியத்தின் முக்கியமான மாற்றங்கள் ஆகும்.சீத்தலைச் சாத்தனார் என்ற படைப்பாளர் இப்பெரும் மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளார்.

மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவு என்பது பல திருப்புமுனைகளை உடையது என்றாலும், அது மணிமேகலை என்ற பெண்ணின் பின்னால் செல்லும் பான்மை உடையது. மணிமேகலை துறவும், அறமும் வழிப்பட்டுத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதால் அதன் வழியிலேயே காப்பியமும் நடைபோடுகின்றது. இக்கட்டுரை மணிமேகலைக் காப்பியத்தின் கதையைச் சுட்டி அதன் வளர்முறையை எடுத்துரைப்பதாக உள்ளது.

 



கதைத்திறம்

 

பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியான சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகப் பெருஞ்செல்வரான மாசாத்துவானின் மகன் கோவலன். அக்கோவலனின் மனைவி கண்ணகி ஆவாள். இவர்களின் இல்லறத்தில் மாதவி என்ற நடனப் பெண் அதாவது பரத்தைப் பெண் இடையீடு படுகிறாள். இதன் காரணமாக மாதவியின் மீது மனம் வைத்து அவள்பால் செல்கிறான் கோவலன். அவ்வாறு சென்றதன் காரணமாக மாதவிக்கும் கோவலனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. இக்குழந்தைக்குத் தன் குலதெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரைக் கோவலன் வைத்து அழைக்கிறான். இருப்பினும், குழந்தை பிறந்த சில நாள்களில் கோவலன் மாதவியை விட்டுப் பிரியவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகக் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்துக் கண்ணகியுடன் வந்துவிடுகின்றான்.

வாழ வழியற்ற நிலையில் கண்ணகியை அழைத்துக் கொண்டு கோவலன் நடந்தே மதுரை மாநகருக்கு வருகிறான். அங்கு கண்ணகியின் சிலம்பினை விற்க முயன்ற போது, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கொலை செய்யப்படுகிறான். இதனைக் காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த மாதவி அறிகிறாள்.

மாதவி மிகவும் துயர் எய்தி தன் வாழ்வைத் துறக்க எண்ணுகிறாள். தன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவினை நாடச் செய்கிறாள். இந்நேரத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தில் இந்திரவிழா தொடங்குகின்றது. இவ்விழாவில் ஆடலை ஆடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் மாதவியின் குடும்பத்தினர். வழிவழியாக இவ்வாடலை அவர்கள் நடத்தி வர இம்முறை மாதவி, மணிமேகலை இருவரும் துறவு பூண்டதால் நடனமாட வரவில்லை. குறிப்பாக மணிமேகலை தற்போதுதான் நடனமாடக் கூடியவளாக முதன் முறையாக இவ்வாய்ப்பினைப் பெற்றவளாக உள்ளாள். இதன் காரணமாக ஊர் தூற்றுகின்றது. இதனை அறிந்த மாதவியின் தாய் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலையிடம் மாதவி செய்வது சரியல்ல. உடன் வந்து நாட்டியம் ஆடுவதற்கு உரியவளாகவேண்டும் என்று சொல்லித் தூதுவிடுகிறாள். 

வயந்தமாலை சித்திராபதியின் விருப்பத்தையும் ஊர் மக்களின் அலர் தூற்றலையும் வந்து மாதவியிடம் சொல்கிறாள். அதற்கு மாதவி மணிமேகலை என்றுடைய மகள் அல்ல. கண்ணகியின் மகள். கோவலனின் மகள். அவள் தீத்தொழில் படமாட்டாள் என்று மறுத்துக் கூறுகிறாள். மேலும் மணிமேகலை துறவு பூணப்போகிறாள் என்ற செய்தியையும் குறிப்பிடுகிறாள். 

இந்நேரத்தில் மணிமேகலையிடம் மாதவி கோவலனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கூறுகிறாள். இதனைக் கேட்ட மணிமேகலை கண்ணீர் சிந்துகிறாள். இதன் காரணமாக அவள் கட்டிய பூமாலையில் கண்ணீர் பட்டுத் தூய்மை கெடுகிறது. இதன் காரணமாக வேறு மாலை புனைய மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் உவவனம் செல்லுகிறாள்.

அவளின் போக்கினைக் கண்ட எட்டிகுமாரன் தன் சுயநினைவிழந்து அழிகிறான். அப்போது அப்பக்கமாக வந்த சோழநாட்டு இளவரசன் உதயகுமாரன் எட்டிகுமாரனின் நிலையைக் கண்டு எதனால் இவ்வாறு ஆனாய் எனக் கேட்க அதற்கு அவன் மாதவியின் மகள் மணிமேகலை, உலக அழகுகளின் இருப்பிடமான அவள் செல்லுவதைக் கண்டு நான் இவ்வாறு மயங்கிக் கிடக்கிறேன் என்றான். இதனைக் கேட்ட உதயகுமாரன் அவ்வளவு சிறந்த அழகியைத் தான் பார்க்கவேண்டும் என எண்ணி மணிமேகலை சென்ற வழியில் அவளைத் தேடிய வண்ணம் வருகிறான். 

மணிமேகலை அவனிடம் இருந்துத் தப்பிக்க பளிக்கறையில் புகுகின்றாள். அவனால் மணிமேகலையை அடைய முடியவில்லை. இதுமுதல் மணிமேகலையைத் தேடி அவனது பயணம் காப்பியத்தில் அமைகின்றது. மணிமேகலையின் மனமும் அவனை நாடுவதாக அவள் உணர்கிறாள். இதற்குக் காணரம் மணிமேகலையும் உதயகுமாரனும் முற்பிறவியில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஆவர். இத்தொடர்பு இப்பிறவியிலும் அவளையும் அவனையும் இணைக்க முயலுகின்றது என்பதே ஆகும்.



இவ்வாறு மனம் கலங்கிய நிலையில் இருந்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் காண்கிறது. அவள் மனம் கலங்கி, மயங்கியபோது அவளை மணிபல்லவத் தீவிற்கு அழைத்துக் கொண்டு போகின்றது. சுதமதி காவிரிப்பூம்பட்டிணத்திலேயே மயங்கிய நிலையில் இருக்க மணிமேகலை மட்டும் மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்லப் பெறுகிறாள்.

மணிபல்லவத் தீவில் மயக்கம் தெளிய, மணிமேகலைக்குத் தான் வேறு இடத்தில் உள்ளோம் என்பது தெரியவருகிறது. அவளை மணிமேகலா தெய்வம் தேற்றிப் புத்த பீடிகை ஒன்றைக் காட்டி வணங்கச் சொல்கின்றது. அப்பீடிகை வணங்கியவர்களுக்கு முற்பிறப்பு நிலையை எடுத்துரைக்கும். அவ்வகையில் மணிமேகலையின் முற்பிறப்புச் செய்தியை அப்பீடிகை உணர்த்தியது. 

மணிமேகலை முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறக்கிறாள். அப்பிறவியில் அவள் இராகுலன் என்பவனை மணக்கிறாள். அவன் அகால மரணம் அடைய இவள் தீப்புகுகிறாள். இப்பிறவியில் இராகுலனே உதயகுமாரன். இலக்குமியே மணிமேகலை என்பதால் தனக்குள் உதயகுமரன் மீது அன்பு உறைந்திருக்கிறது என்பதை மணிமேகலை உணர்கிறாள்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தேற்றி அவளின் தூய உள்ளம், துறவு உள்ளம் மேம்பட மூன்று மந்திரங்களைத் தருகின்றது. வேற்று உருவம் அடையும் மந்திரம், வான்வழி செல்லும் மந்திரம், பசி போக்கும் மந்திரம் ஆகியவற்றை மணிமேகலைக்கு அளிக்கின்றது மணிமேகலா தெய்வம்.

இந்நேரத்த்தில் மணிபல்லவத் தீவைக் காத்துவரும் தீவதிலகை என்ற தெய்வம் மணிமேகலை முன் தோன்றுகிறது. அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் அமுதசுரபி என்ற அட்சயபாத்திரம் தோன்றும் என்று தீவதிலகை குறிப்பிடுகிறாள்.

இப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் இப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று இப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். 

சுதமதி இருந்த இடத்திற்கு வந்த மணிமேகலை அவளுடன் இல்லம் சார்கிறாள். அதன்பின் அறவண அடிகளைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள். மணிமேகலைக்கு அறவண அடிகள், சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார். ஆபுத்திரன் தருமம் செய்தது, இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது, தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார். மேலும் ‘ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு. எனவே நீ அப்பணியை மேற்கொள்’ எனவும் உரைக்கிறார். அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள். ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர் தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். இவ்வாறு ஆதிரையின் வரலாற்றைக் கூறினாள் காயசண்டிகை. 



மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள். ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே! என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறுகிறாள்.‘வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்து விட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர். நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன். இதை நீ சிதைத்தாய். ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான். முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசிதீர்ந்தேன்’ என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை, உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புகிறான் எனத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான். அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு உண்மையை உணர்த்துகிறது. காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள். அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்; புழுக்கறையில் அடைக்கிறாள்; ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள். மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள். காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள். பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள். அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள். அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள். அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான். அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம், கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்த போது, மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது. மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து, அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள். அவள் மனம் அமைதி பெறவில்லை. அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள். அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள். அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’ என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இதுவே மணிமேகலையின் கதைக்களமாகும்.

மணிமேகலைக் காப்பியத்தின் மையப் புள்ளி என்பது அறம் சார்ந்து இயங்குகின்றது. அறம் செய்வதற்கு சாதி, மத வேறுபாடு இல்லை என்பதே இக்காப்பியத்தின் மையப் புள்ளியாகும். அறம் செய்ய தூய்மையான உள்ளம் இருந்தால் போதுமானது என்பதையே இக்காப்பியக் கதை உணர்த்துகின்றது.

இவ்வகையில் மணிமேகலை கதை என்பது பல திருப்புமுனைகளுக்கு உட்பட்டு, மணிமேகலை என்ற ஒரு பாத்திரத்தின் செயல்பாடாக விரிகின்றது. இப்பாத்திரத்திற்கு ஏற்பட்ட பல இக்கட்டுகளை இப்பாத்திரம் அமைதியான முறையில் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard