‘‘திருக்குறளின் மொத்த உள்ளடக்கமுமே வைதீகத்திற்கும், மநு தர்மத்திற்கும் எதிரானது என்பதை எளிமையாக உணர்ந்துவிட முடியும். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களைப் பகுத்து உயர்வு - தாழ்வினை கற்பிக்கும் நோக்கம் திருக்குறளில் எங்குமே இல்லை. எல்லா தமிழாய்வாளர்களும் முன்வைக்கும்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
எனும் திருக்குறளே அது மநு தர்மத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லிவிடும்.
பிராமணீயம் முன்னிறுத்தும் வேள்வியை இன்னொரு குறளில் எதிர்க்கிறார் வள்ளுவர்.
‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.''
‘‘உணவுப் பொருட்களைத் தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஒரு உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது சிறந்தது'' என்று பொருள் தருகிறார் மு. வரதராசனார்.
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை' மிக முக்கியமான நூல். ஒரு நூல் பற்றி பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்கள் தெரிவித்த கருத்துகளைத் தொகுத்து மாலையாக்கப்பட்ட நூல் இது. இதில் திருக்குறள் குறித்து 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் வண்ணக்கஞ் சாத்தனார் எழுதிய பாடல் தமிழுக்கும், வட மொழிக்கும் உரிய வேறுபாட்டினை திருக்குறளைக் கொண்டு கூறுகிறது.
‘‘ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து''
‘மனோன்மணியம்' சுந்தரனார் அவர்களின் திருக்குறள் பற்றிய பாடல் மிக முக்கியமானது.
‘‘வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி''
பேரறிஞர் அண்ணா காலத்திலேயே திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் இருந்ததாலேயே, அண்ணா தன் கட்டுரையில் சுந்தரனாரின் மேற்கண்ட வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.