New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் கடவுள்வாழ்த்து


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருவள்ளுவரின் கடவுள்வாழ்த்து
Permalink  
 


திருவள்ளுவரின் கடவுள்வாழ்த்து

 

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து

குறள் எண்கடவுளின் பெயர் / இலக்கணம்கடவுளைத் தொழும் விதம்கடவுளைத் தொழுவதன் பயன்
1.ஆதிபகவன்- உலக முதல்வன்/ உலகைப் படைத்தவன்மறை நூல்கள் பயிலுதல்-கற்க கற்பவை (கேள்வி அல்லது ஸ்ரவணம்)எல்லா அனுபவங்களும் காரணத்திற்கு உட்பட்டவையே என்ற நம்பிக்கை பெறுதல்
2.வாலறிவன்- யாவும் அறிந்தவன்மறைகள் காட்டும் வாலறிவன் பற்றி கசடற கற்க. ஆண்டவன் மற்றும் மறையின் பொருள் விளக்கும் நல்லாசிரியரின் பாதங்கள் தொழுதல் (விமரிசம் அல்லது மனனம்)அறிவு என்பது உரிமை கோரவியலாத, தனது என்ற சொந்தம் கொள்ள முடியாத உன்னத உணர்வு என்ற தெளிவும், அத்தெளிவினால் பணிவும் பெறுதல்
3.மலர்மிசை ஏகினான்- படைக்கப்பட்ட உயிர்களின் உள்ளத்தாமரையில் வீற்றிருப்பவன்மறைகள் உணர்த்தும் பரமனைக் குறித்து மனதளவில் தியானம் என்னும் அறிவுச்செறிவுப் பயிற்சியில் ஈடுபடுவது, அதாவது நிற்க-அதற்குத் தக- (பாவனை அல்லது நிதித்யாஸனம்)படைத்தவர் உணரப்படும் இடம் மனமே என்ற தெளிவும், முன்னரே குடிகொண்டிருத்தலால் இறவாநிலை சத்தியமே என்ற நிம்மதியும் எய்துதல்
4.வேண்டுதல் வேண்டாமை இலான்- விரும்பத்தக்கது, தகாதது என்ற பிரிவுகள் அற்றவன்அறம் இழுக்கென இயம்பும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் வாழ்வில் நீக்கிப் பழகுதல்விரும்பத்தக்கது, தகாதது என்ற பிரிவுகளால் உண்டாகும் இடும்பைகள் யாவற்றினின்றும் தீர்வு அடைதல்
5.இறைவன்-

 

எங்கும் நிறைந்த இறைவன்

அடியார்கள் இறைவனைக் குறித்துப் பாடியுள்ள பாசுரங்களைப் பாடுதல்நல்வினை, தீவினைகளால் தாக்கப்படாத நிலை எய்துதல்
6.ஐந்தவித்தான்- அவா அறுத்தவன்வாழ்வில் பொய்தீர்ந்த ஒழுக்கநெறி நிற்றல்மறுபிறப்பினின்று வீடு எய்துதல்
7.தனக்குவமை இல்லாதான்- ஒப்புயர்வு அற்றவன்பிறருடன் ஒப்பிட்டு நோக்கலை நீக்குதல்மனக்கவலை நீங்குதல்
8.அறவாழி அந்தணன்- மறைமுடிவு நூல்கள் மையக்கருத்தாக போதிக்கும் அந்தணன் எனும் பரமன்மனதாலும் அறம் வழுவாது இருத்தல்கடக்க அரிதான பொருள், இன்பம் ஆகியன எளிதில் கடந்து செல்லுதல்
9.எண்குணத்தான்- 1.முடிவற்றவன், 2.உருவற்றவன் 3.குறிகளற்றவன், 4.சார்பற்றவன் 5.கட்புலன் ஆகாதவன்,

 

6.மெய்யவன் 7.அறிவினன், 8.பேரின்பவடிவன் என எட்டு குணங்களை உடையவன் –

உடலின் எல்லா பாகங்களையும், உள்ளம்,உரை, செயல் என எல்லாவற்றானும் அறம் பேணுதல்வாழும் வரை நம் உடல் புதுப்பொலிவுடன் திகழ்தல்
10.இறைவன்- முக்காலத்திலும் நிறைந்தவன்கழிந்ததையும், வருவதையும் பற்றிய எண்ணங்கள் தவிர்த்து காலத்திற்கு அப்பாலுள்ள இறைவனைப் பணிதல்அனுபவங்கள் யாவற்றினும் அப்பாற்பட்டதே மெய்யுணர்வு எனும் வீடுபேறு அடைதல்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருவடி பற்றி திருவள்ளுவர்

 

திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்

வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே நமது முன்னோர்கள் இதை உலக பொதுமறை என கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர்

மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் கடவுள் வாழ்த்து பகுதியில்.

10 வது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்

“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார்.இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ஐ பார்ப்போம்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை இந்த வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். ஆம், இறைவன் திருவடியை (அ) மெய்பொருளைஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார். நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்க்காக.

இந்த அடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக காட்டும் அதாவது பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார்.

இப்படி கடவுள் வாழ்த்தில் உள்ள 10 க்கு 7 குறளில் பட்டவர்த்தனமாக அடி என்று தெளிவாக சொல்கிறார் திருவள்ளுவர். ஆம், நற்றாள், அடி, தாள், மாணடி, இலானடி, தாளை, தாள்(2) என்று குறிப்பிடுகிறார். இப்படி 7 விதமாக சொன்னாலும் இந்த 7 வார்த்தைகளும் நிச்சயமாக் ஒரே பொருளைத்தான் குறிக்கும். சரியா?

ஆம், வார்த்தைகள் 7 ஆனால் அர்த்தம் 1

ஆம், இறைவனை அடையும் வழிகளை 7 விதமான வார்த்தைகளால் சொல்லியிருந்தாலும்  வழி 1 தான்.

அதுதான் இறைவன் திருவடி (அ) மெய்பொருள் (அ) சும்மா இரு என்கிற ஞான வழி!

இந்த தலைப்பில் இறைவன் திருவடி என்று எதை சொல்கிறார் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை ஆனால் இறைவன் திருவடி க்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர் என்று பதிந்திருக்கிறோம். இனி வரும் விளக்கங்களில் வள்ளுவர் திருவடி என்று கண்களைத்தான் சொல்கிறார் என்று சொல்லியிருக்குகிறோம். படித்து புரிந்து கொள்க!

திருக்குறளில் (Thirukural)  கடவுள் வாழ்த்து பகுதியில் 10வது குறளில் என்ன சொல்கிறார்.

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” – 10
 

பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட வேண்டுமானால் இறைவன் அடியை சேர வேண்டும் என்கிறார்.

இப்பொழுது இந்த குறளை பார்ப்போம்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும். – 349

பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.

ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் மேலும் திருவள்ளுவரும் (Thiruvalluvar), திருமூலரும் (Thirumoolar), அவ்வையாரும் (Avvaiyar) மற்றும் திருவருட் பிரகாச வள்ளலாரும் (Ramalinga Swamigal) பற்றற்ற என்ற இடத்தில் மிக சரியாக ஒத்து போகிறார்கள் என்பதை வேறு பதிவுகளில் மிக விரைவில் பதிவோம் (Click Here to see  – Soon We will give the link here). ஏன் எனில் அந்த பற்றற்ற இடத்திலே இறைவன் துலங்குகிறான்! அதுவே திருவடி அல்லது மெய்பொருள்

கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” – 214

இந்த குறளும் மறைமுகமாக திருவடி பற்றிதான் சொல்கிறது. மேலும் இப்படி அறிந்து உணர்ந்து இருப்பவர்களே உயிர் வாழ்வார்கள் என்று தெளிவாக சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் இறைவனை உணர உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் 700 கோடி வழிகள் பற்றி எல்லாம் இந்த குறளில் சொல்லவில்லை. இந்த குறளில் உள்ள வழி உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான ஒரே வழியான ஞான வழியை ப்ற்றி மட்டும்தான் சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த “ஒத்தது அறிவான்” என்ற குறளுக்கான விளக்கம் “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்ற குறளுடன் மிக தொடர்புடையது இதுவே ஞான இரகசியம்.

விளக்கம்:

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” – 214

ஒத்தது அறிந்தவன் உயிர் வாழ்வான் அறியாதவன் செத்து போவான்.

ஒத்தது எது? நம் உடம்பில் ஒரு கண்ணைப்போல உள்ள மற்றொரு கண்!?

ஒத்தது எது? உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று போல் உள்ள கண்கள்!

ஏன் ஒன்று போல் உள்ளது? இறைவன் எல்லார் கண்மணி-ஊசிமுனை துவாரத்தின் உள்ளிலும் ஊசிமுனை அளவாக ஒரே அளவாக இருக்கிறான்! இறைவனுக்கு பாகுபாடே இல்லை! எல்லாரும் அவர் பிள்ளைகளே! எல்லாருக்கும் சமமான – ஒரே தன்மையில் தான் இறைவன் – பரமாத்மா – சீவனாக – ஒளியாக கண்களில் மிளிர்கிறான்!

நமது இரு கண்களும் ஒப்பற்றவை! நம் உடம்பில் ஒரேமாதிரி உள்ள இரண்டு பொருள் கண்கள் மட்டும்தான். நமது உடம்பில் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போல் இருப்பது கண்கள்தான்! கண்-மணி தான்! நம் வாழ்வே கண்ணில்தான் இருக்கிறது! நமது கண்களில் – மணியில் – மத்தியில் – ஊசிமுனை துவார்த்தின் உள்தான் ஊசிமுனை அளவு ஒளி உள்ளது!

உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதும் கண் மணியே!

கண்தானம் யார் வேண்டுமானலும் எந்த பாகுபாடுமின்றி யாருக்கும் கொடுக்கலாமல்லவா?

ஏன்?

எல்லார் கண்ணும் ஒன்றாக இருப்பதால்தான்!? யாருக்கும் எந்த வித்தியாசமும் கண்ணில் இல்லை! ஆம், 700 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த கண்கள்தான்.

இதுவே மாபெரும் இரகசியம்!

திருக்குறளில் மேலும் சில குறள்களை கொடுக்க முடியும் எனினும் எல்லா ஞானிகளின் பாடல்களையும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அடுத்தடுத்த ஞானிகளின் திருவடி (அ) மெய்பொருள் பாடல்களை கொடுக்க போகிறோம்.

8—————————————————-2

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

திருவடி பற்றி திருமூலர் – Click Here

திருவடி பற்றி வள்ளலார்  Click Here

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் –  Click Here

சித்தர்கள் திருவடி – Click Here



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு பொருத்தமானதா?

ஆச்சாரி 

 

உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.
பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.
இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது  தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அ. ரவி says:

அய்யா,

மிகவும் சிரமப் பட்டிறிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் திரு வள்ளுவர் சொல்லியிருப்பது இறைவனை மட்டுமே. கடவுள் என்கிற சொல்லை பயன் படுத்தவே இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அதிகாரத்தின் தலைப்பே கடவுள் வாழ்த்துதானே ஐயா? உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக பாவம் வள்ளுவரையுமா உங்கள் பக்கம் இழுப்பது? வானுறையும் தெய்வம் என்று வருவது என்ன அர்த்தத்தில் அய்யா? தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் என்பது என்ன அர்த்தத்தில் வருகிறது? தெய்வத்தினால் ஆகாதெனினும்…என்கிற குரலுக்கு என்ன அர்த்தமோ ?

ரவி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குறள்
(மூலமும் உரையும்)
அறத்துப் பால்
பாயிரவியல்

அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து

அஃதாவது, ஆசிரியன் தான் இயற்றும் நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டும், தன் நூலிற்கு வேண்டிய தெள்ளிய அறிவை அறிவிற்குப் பிறப்பிடமாகிய இறைவனிடத்தினின்று பெறற்பொருட்டும், இறைவனருள் உலக நடப்பிற்கு இன்றியமையாத முதற்கரணமாதலின் அதைத் தேடுதற்கு எல்லா மாந்தரும் எவ்வினையையும் இறைவனைத் தொழுதே தொடங்கல் வேண்டும் என்னும் நெறிமுறையை உலகிற்கு உணர்த்தற் பொருட்டும், இறைவனை வழுத்துதல். வழுத்துதல் - போற்றுதல். துதித்தல் என்பது வடசொல்.

சிறுதெய்வ வணக்கம், பெருந்தேவ வணக்கம், கடவுள் வணக்கம் என முறையே ஒன்றினொன்றுயர்ந்த மூவகை வணக்கங்களுள், இது கடவுள் வணக்கம். கடவுள் என்னும் சொல் இம் முதலதிகாரப் பத்துக் குறள்களுள் ஒன்றிலேனும் வாராமையானும் , முதற்குறளில் ஆதிபகவன் என்னும் பெயரே குறிக்கப் பெற்றிருத்தலானும், கடவுள் வாழ்த்து இங்கு முதற்பகவன் வழுத்து எனப் பெற்றது.

வாழ்த்து என்னும் சொல் மக்களை வாழ்வித்தலும் இறைவனைப் போற்றுதலும் ஆகிய இருபொருள் தந்து மயங்கற்கிடனாக நிற்றலால், வழுத்து என்னும் சொல்லை அதனின்று திரித்தனர் முன்னை யறிஞர்.

அதிகரித்தது அதிகாரம். இது இலக்கண நூல்களிற் பெரும் பகுதியைக் குறிக்குமேனும், இங்கு உட்சிறுபகுதியைக் குறிக்குமாறு ஆளப்பட்டது.

 

l2100tn1.gif
அகர முதல வெழுத்தெல்லா மாதி 
பகவன் முதற்றே யுலகு.

 

எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் 
குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் 
குறுகத் தறித்த குறள்."


என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.

 

அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் -
செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான்
தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம் 
குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1

பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. 



மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பதுபோல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக்கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எழுத்து எல்லாம் அகரம் முதல, உலகு ஆதிபகவன் முதற்றே. 

பதவுரை: 
அகர -‘ அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.


அகர முதல எழுத்து எல்லாம்: 

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன; 
பரிப்பெருமாள்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன; 
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பது என்ன சொன்னவாறோ எனின், சொல்லும் பொருளும் என்னும் இரண்டனுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தைத் தனக்கு முதலாக உடையவாறு போல; 
பரிதி: உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்தாதல் முறைமைபோல; 
காலிங்கர்: அகரமாகிய எழுத்தின்கண் விரிந்தன ஏனையெழுத்துக்களும், அவற்றானாகிய சொற்களும், மற்றைச் சொற்றொடர்புடைய ஏனைத்துக் கலைகளும் மற்றும் யாவையுமாகிய அது மற்றியா தொருபடி அப்படியே; 
பரிமேலழகர்: 'எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல; 
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார்.

மணக்குடவரும் பரிமேலழகரும் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன போல என்றும் பரிப்பெருமாள் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தை முதலாக உடையனபோல என்றும் பரிதி உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்து ஆதல் போல என்றும் காலிங்கர் எழுத்து, சொல், சொல் தொடர்புடைய கலைகள் எல்லாம் அகர எழுத்தின் விரிந்தன போல என்றும் இப்பகுதிக்கு உரை தருகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்', 'எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் ஒலி வடிவை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் அகர ஒலியை முதன்மையாகக் கொண்டவை' என்ற பொருளில் உரை தந்தனர்

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன என்பது இப்பகுதியின் பொருள்.

ஆதி பகவன் முதற்றே உலகு: 

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோன்றுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாகிய உலகமும் நீர் தீ வளி ஆகாயமாகி ஒன்றோடொன்றொவ்வாத பெற்றியதாயிருப்பினும் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடையதாகலால் அவனை வழிபடவேண்டும் என்றவாராயிற்று. அன்றியும் உலகம் என்பதனை உயர்ந்தோர் ஆக்கி எல்லாப் பொருளினும் உயர்வு உடைத்தாகிய உயிர்கள் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடைய என்றும் ஆம். அஃதேல், அவன் முதலாயின வழி யாங்ஙனம் முதலாயினனாகக் கூறினாரென்று பிறிதொன்று தோற்றுதற்கு அடியாய் நிற்பதூஉம் முதலாம். பசு எவையிற்றினும் சிறப்புடைத்தாய் முன்னால் எண்ணப்படுவதூஉம் முதல் ஆண்டு உவமையாகக் கூறிய அகரம் இருபகுதியும் உடைத்தாயினும் ஏனைய எழுத்துக்களுக்கு அடியாய் நிற்றல் எல்லாராலும் அறியப்பட்டமையான் தலைமைபற்றிக் கூறினார் என்று கொள்ளப்படும். 
பரிதியார்: ஆதியான பகவன் முதலாம் உலகத்துக்கு என்றவாறு.
காலிங்கர்: மூலகாரணனாகிய இறைவன்கண்ணே நுண்பூதமும், மற்று அவற்றின்வழி விரிந்த வான் வளி தீ நீர் நிலம் என்கிற ஐம்பெரும் பூதமும், அவற்றின்வழி விரிந்த நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிர்களும், மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்களனைத்தும் என்றவாறு. 
பரிமேலழகர்: உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. 
பரிமேலழகர் குறிப்புரை: ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் உலகம் இறைவனை முதலாக உடையது என்ற கருத்திலேயே உரை பகர்கின்றனர். ஆதிபகவன் என்ற சொற்றொடரை விளக்குவதில் அவர்கள் சிறிது வேறுபடுகின்றனர். ஆதிபகவன் என்றதற்கு ஆதியாகிய பகவன் என்று மணக்குடவரும் பரிதியும், ஆதி பரமேஸ்வரன் என்று பரிப்பெருமாளும், மூலகாரணனாகிய இறைவன் என்று காலிங்கரும் ஆதிபகவன் என்று பரிமேலழகரும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்', 'அதுபோல உலகம் ஆதி பகவனை(இறைவனை) முதலாக உடைத்து', 'அதுபோல உலகம் ஆதியாகிய பகவனை முதலாக உடையது. (ஆதிபகவன் -முற்பட்டுள்ள கடவுள்)', 'உலகம் ஆதி பகவனாகிய இறைவனையே முதன்மையாகக் கொண்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.

உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை: 
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன; உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறவரும் கருத்து என்ன?

கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.

அகர முதல எழுத்தெல்லாம்:
எழுத்துக்கள் 'அகர'த்தை முதலில் வைத்துத் தொடங்குகின்றன. 'அகரம்' நெடுங்கணக்கின் எழுத்துக்களுக்கு அடிப்படையானது, காரணமானது, முதற்பொருளானது, முதன்மையானது என்பர். எழுத்தெல்லாம் என்றது உலக மொழிகள் எல்லாவற்றினது எழுத்துக்களிலும் என்று பொருள்படும். உலக மொழிகளில் பெரும்பான்மை 'அ' என்ற ஒலியுடன் தொடங்குவதாக உள்ளன என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுவர். மாறுபட்ட பண்பாடுடைய பல்வேறு நாட்டு மக்கள் பேசும் வெவ்வேறு மொழிகள் அகர ஒலியை முதலாகக் கொண்டுள்ளன என்பது வியக்கத்தக்க உண்மை. இதை வள்ளுவர் உவமப் பொருளாக்கினார். எழுத்துக்கள் எல்லாம் எனக் கொள்ளாது எழுத்துக்களுக்கு எல்லாம் அகர முதல எனின், அகர ஒலி பலவாகாமையான், அகரம் என்ற ஒருமை எழுவாய், 'முதல' என்ற பன்மைப் பயனிலை கொண்ட வழு ஆகும். பலவேறு மொழிகளிலுள்ள பல எழுத்துக்களுக்கு எல்லாம் எனக்கொள்ளினும் ஒலிஅகரம் ஒன்றே ஆதலால் அதுவும் முற்கூறிய வழுவாகும். அதனாலேயே பரிமேலழகர் 'எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாம் என்பது கருத்தாகக் கொள்க.' என்றார்.

ஆதிபகவன்:

இப்பாவில் கூறப்பட்டுள்ள ஆதிபகவன் யார்? 
இக்குறளில் உள்ள 'ஆதிபகவன்' என்றது தத்தம் சமயம் சார்ந்த கடவுளைக் குறிப்பது என்று அனைத்துச் சமயத்தாரும் உரிமை கொண்டாடுகின்றனர். வள்ளுவர் எந்தச் சமயத்தையும் மனதில் கொண்டு குறளைப் படைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே ஆதிபகவன் என்று சொல்லப்பட்டது இப்பூமியில் பிறந்து வாழ்ந்த எந்த ஒரு சமயத்தைச் சார்ந்த மனிதரையோ அல்லது அச்சமயத்தார் நம்பும் கடவுளரையோ குறித்தது அல்ல. ஆதிபகவன் என்றது 'மூலகாரணன்' என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது; 
வள்ளுவர் தம் அன்னை ஆதியையும் தந்தை பகவனையும் மனத்தில் கருதியே ஆதிபகவன் முதற்றே உலகெனக் கூறினார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆதி, பகவன் என்பது வள்ளுவரது பெற்றோரின் பெயர்கள் என நிறுவுவதற்கு எந்தவகையான ஆதாரங்களும் இல்லை. உலகப் பொதுமறை கூறவந்த வள்ளுவர் அவருடைய தாய்தந்தையரை உலகுக்கு முதல் என்று தன் நூலில் கூறியிருப்பாரா என்று சொல்லி அறிஞர்களும் ஆய்வாளர்களும் அக்கருத்தை ஒதுக்கித் தள்ளினர்.
தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

முதற்று:

'முதற்று' என்பதும் முதல் என்பதை அடியாகக் கொண்டுவந்த சொல்லாகும். இதற்கு 'அடிப்படையானது', 'முதலானது' எனப் பொருள் கொள்வர். இங்கு முதல் என்பதன் பொருள் என்ன? நாட்டிற்கு மன்னன் தலைவன் போல தலைமையா? அல்லது குடத்துக்கு மண்போல மூலகாரணமா? அன்றி குயவன் குடம் செய்தல் போலப் படைத்தலா? 
இங்கு முதன்மை தனித்து நிற்கும் ஆற்றலையும் எல்லாமாகி நிற்பதனையும் யாவற்றையும் இயக்குவதையும் குறிக்கும். குடத்தை ஆக்கும் குயவனைப் போலக் கடவுள் உலகத்து வேறாக நிற்பவரல்லர் என்பதும் பெறப்படும். முதற்று என்ற சொல் தலைமை, மூலகாரணம், படைப்பின் தொடக்கம் என அனைத்தையும் குறிக்கும்.

உலகு:

உலகு என்னும் சொல்லுக்கு இடப்பொருளும் உயிர்கள் என்னும் பொருளும் உண்டு. சிலர் இப்பாடலில் கூறப்பட்டது உயிர்ப்பொருளே; அதுவே கடவுளை உணர்ந்து அறியத்தக்கது எனக் கூறுவர். இவ்விருவகை உலகும் கடவுள் உண்டாக்கியவை. எனவே இக்குறள் குறிப்பது உயிருள்ளதும், உயிரில்லாததுமான இருவகைப்பட்ட உலகையேயாகும். 
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் 'இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் உயிர் எழுத்தான அகரத்தைப் போன்றவன். அகரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து இயக்கியும் தானும் தனித்து இயங்குகிறது. ஆதிபகவனும் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து இயக்கியும் தனித்தும் இயங்குகிறான். அகரம் இயங்கவில்லையானால் அனைத்து எழுத்துக்களும் இயங்கமுடியாது. அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. அகரத்தோடு பொருந்தியே மெய்கள் இயங்கும். 'அ'கரம் எழுத்துக்களிலெல்லாம் கலந்து இருப்பது போல் இறைவன் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்' என்று முதற்குறளில் சொல்லப்பட்ட கடவுளுக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
"திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது" என்பார் திரு வி க. வள்ளுவர் உலகுக்கென்றே குறள் படைத்தார். உலகு என்ற சொல்லை வள்ளுவர் முதற் குறளில் பெய்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது.

இக்குறள் கூறவரும் கருத்து என்ன?

எடுத்துக்காட்டு உவமையணியில் அமைந்த பாடல் இது என்பர் இலக்கண ஆசிரியர்கள். எடுத்துக்காட்டு உவமையாவது உவமானத்தையும் உவமேயத்தையும் தனிவாக்கியங்களாக நிறுத்தி இது பொருள் இது உவமை என்பது தோன்ற இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடாமல் கூறுவது. அகர முதல எழுத்து எல்லாம் என்ற வாக்கியமும் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வாக்கியமும் இக்குறளில் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றை இணைக்கும்படியான 'போன்ற', என்பது போன்ற உவம உருபு எதுவும் இல்லையாதலால் எடுத்துக்காட்டு உவமை ஆயிற்று..

‘அ’ என்று சொல்லக்கூடிய எழுத்து ஆரம்ப முதல் எழுத்து. ‘ஆதி பகவன்’ என்பது கடவுள். அகர என்பது எழுத்துக்களுக்கு முதல். ஆதி பகவன் என்பது உலகுக்கும் உயிர்களுக்கும் முதல். இதுதான் இங்கு கூறப்பட்டுள்ள உவமை. அகரம் தனித்தும் அகர ஒலியா யெழுந்தும் மெய் எழுத்துக்களை இயக்கி வருவது போல ஆதிபகவனும் தனித்தும் உலகெலாமாகியும் அவைகளை இயக்கியும் வருகிறான். இது இக்குறள் உவமைக்கான பொதுவான விளக்கவுரை.
இப்பாடலிலுள்ள உவமை பொருத்தமாக அமைந்துள்ளதா? மொழி-அகரம், உலகம்-கடவுள் என உவமை விளக்கப்பட்டாலும் அதன் பொருத்தம் துலங்கவில்லை என்று கூறி அது குறித்து சில ஐயவினாக்கள் எழுப்பப்படுகின்றன:
உவமை சொல்லப்பட்டதே முதலில் கேள்விக்கு உரியதாகிறது. இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக 'கடவுள் தனக்குவமை இல்லாதவன்' என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்? 
'அ' என்பது 'இ', 'உ' போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? 'இ'யைவிட 'அ' முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில. 
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.

இச்செய்யுள்ளில் கூறப்பட்டுள்ள உவமைக்கு என்ன அமைதி?
காலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய நூலைப் படைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் குறள் எழுதத் தொடங்கிய காலை வள்ளுவர் நினவிற்கு வந்தவர்கள் அவரது பெற்றோரும் தொல்காப்பியரும் ஆவர் என்பதாகத் தெரிகிறது. அடுத்து, உலகு என்ற நினவும் இயல்பாக அவர்க்குத் தோன்றியது. பெற்றோர், ஆசிரியர், உலகு- மூன்றையும் முதற் குறளில் ஒருசேரக் கூற முனைந்திருக்கலாம். ஆனாலும் வள்ளுவர் நேரடியாக பெற்றோர்- தொல்காப்பியர் பெயரை தம் நூலில் குறிப்பிட விரும்பமாட்டார். வித்தகக் கவிஞரான அவர் தன் கவிதை ஆற்றலைக் காட்டி மூன்றும் குறிப்பால் தோன்றும்படி முதற்குறளைப் படைக்கிறார். 
தொல்காப்பிய இலக்கண வரையறைகளைக் கொண்டே குறள் யாக்கப்பட்டது என்பர். தொல்காப்பியத்தின் நேரடியான தாக்கம் குறளில் இருப்பதை எளிதில் உணரலாம். தொல்காப்பியர் தமிழ் மொழிக்குச் செய்த வரலாற்றுச் சாதனை வள்ளுவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். இவரையே வள்ளுவர் வழிகாட்டியாகக் கொண்டார் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. தொல்காப்பியரது முதல் வரியையே தன் நூலின் முதல்வரியாக அமைத்து 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தன் நூலைத் தொடங்குகிறார்; 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கடவுள் வாழ்த்து என்னும் சொற்றொடர் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்குத் தலைப்பாகவும் அமைந்தது. எனவே நூல் தொடக்கத்தில் தொல்காப்பியர் நினைவு வந்திருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதே.
அடுத்துத் தாய்தந்தையர் பெயரையும் முதற்குறளில் இணைக்கிறார். இப்படிச் செய்ததால் வள்ளுவர் தன் வரலாறு கூறினார் என்றோ அவருடைய தாய் தந்தையரை உலகிற்கெல்லாம் முதன்மையானவரெனக் கூற வருகிறார் என்றோ பொருளில்லை. பெற்றொர்களின் நினைவின் எதிரொலியாக ஆதிபகவன் என்ற சொற்றொடர் அமையப் பெற்றது என்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஆதிபகவன் என்ற வடமொழித் தொகைச் சொல், சங்க கால இலக்கியங்களில் காணப்படாத, புது வழக்காகும். தீந்தமிழ் நூல் செய்த வள்ளுவர் முதற்பாவிலேயே வலிந்து ஆதிபகவன் என்ற ஒரு வட சொல்லை ஏன் திணித்தார்? இதற்கு விளக்கமாகச் சொல்லப்படும் 'ஆதி, பகவன் என்று அவரது தாய்-தந்தையரையே மறைபொருளாகக் குறிப்பிட்டார்' என்ற கருத்தை நம்பமுடியாத கற்பனை என்று தள்ளிவிட முடியாது. பெற்றோர் பெயர்களையும் சொல்லியாகிவிட்டது; அதே நேரத்தில் மூலகாரணன் ஆகிய இறைவன் என்று பொருள்பட உரைத்ததும் ஆயிற்று. ஆதிபகவன் என்ற சொற்றொடர் முதற்குறளில் இடம் பெற்றதற்கு இது அமைதி ஆகலாம். 
தொல்காப்பியம், தாய்தந்தையர், உலகமக்களுக்கான நூல் என்ற நினைவில் நூலைத் தொடங்குகிறார். அதன் பாதிப்பே அளவைக் குறைவுபட்ட முதற்குறளின் உவமை.

கடவுள் இந்த உலகத்தையும் உலக உயிர்களையும் இயக்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது என்றாலும் அக்கடவுள் விளக்கப்பட இயலாதவர். கடவுள் உண்மையை உணர்த்துதற்குப் பல உவமைகள் காணப்பட்டாலும் அவை எவையுமே கடவுளை முழுமையாக அளக்க முடியாது.
காலிங்கர் உரையில் கண்டபடி 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் இறைவன் கண்ணே விரிந்தன' என்பதே முதற்குறளில் வள்ளுவர் சொல்ல வந்த செய்தியாகும். இறைவனை முதலாகக் கொண்டே இவ்வுலகம் இயங்குகிறது என்றும் கூறுவதால், இப்பாடல் இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெளிவாக்கும்; அந்த எல்லையில்லா மெய்ப்பொருளின் முதன்மையும் இச்செய்யுள்ளால் உணர்த்தப்படுகிறது. இவை முதற்குறள் கூறும் கருத்துக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 அகர முதல எழுத்தேல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு – திருக்குறள் (1)

விளக்கம்: 
உலகம், அகரம் முதலான எழுத்துக்களை எல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது.

விரிவுரை:

அகர முதல - அகரத்தை முதலாகத் தொடங்கி வரும், எழுத்துக்கள் என்று பொதுப்பட சொல்லினும், எண்களையும் அவை குறிக்குமாதலின் எழுத்தேல்லாம் என்றார், ஆதிபகவன்  - ஆதியங் கடவுள், முதல் கடவுள் , முதற்றே உலகு - உலகின் கண் ஆதி பகவனிடம் இருந்து தோன்றிற்று.
அஃதாவது, ஆதிபகவனாலேயே எண்ணும், எழுத்தும் இவ்வுலகின் கண் தோன்றியது எனபது கருத்து. 

ஆதிபகவன் யார்?

ஆதி என்பதற்கு முதல் என்றும் தொன்மை என்றும் பொருள் படும். முதல் பகவன் என்றும் ஆதியில் தோன்றிய பகவன் என்று பொருள் கொள்ளலாம். ஆயினும், இங்கு ஆதி என்பது முதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அ (ரகம்) எழுத்து மற்ற எழுத்துகளுக்கு எல்லாம் முதலாக வரும். ஆதிபகவன் மற்ற பகவர்களுக்கெல்லாம் முதலாக இருக்கிறார். மற்ற பகவர்கள் யாவர்? எனின், சமண சமயத்தில் காலந்தோறும் (இறந்த, நிகழ், வருங்காலம்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள் என்றும், அவர்கள் மக்களை நல்வழிப் படுத்தி அறம் புகட்டுவார்கள் என்பதும் சமணர்கள் நம்பிக்கை. அவ்வாறே நிகழ்க் காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அவர்களில் முதலாமவர் இரிஷபதேவர் என்று போற்றப்படும் ஆதி தீர்த்தங்கரர் ஆவார். சமண இலக்கியங்கள் (வடமொழி, தென்மொழி) இவர் திருநாமங்களை இவ்வாறுப் போற்றும்,

ஆதி, ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவன், ஆதிமுதல்வன், ஆதிமூர்த்தி, ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிமுதற் கடவுள், ஆதிநாள் அரசர், ஆதீஸ்வரன், ஆதிசக்கரவர்த்தி, ஆதிபட்டாரகர், ஆதிநாயகன், ஆதிஜினன், ஆதிராஜா, ஆதிபரமேஸ்வரன், ஆதித்தீர்த்தன், ஆதியங் கடவுள்


ஆதிபகவன் என்றுப் போற்றப்படும் ரிஷபநாதர், எண்ணையும், எழுத்தையும் முதன்முதல் உலகின் கண் உருவாக்கினார். அவரே கல்விக்கு மூல ஆதாரம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க ஆதிநாதர் தன் பெண் பிள்ளைகளுக்கு எண்ணையும், எழுத்தையும் முதல் முதலில் கற்பித்தார். நிகண்டு நூல்களில் தலைச் சிறந்ததாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டு, 

விருப்புறு பொன்னே யிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும் 
பரப்பிய வாதிமூர்த்தி பங்கயப்பாதம் போற்றி
! – (நாலாவது தொகுதி – கடவுள் வணக்கம்)

என்றும்,

ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

“சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசர ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயுநீ” 



என்றும் போற்றப்படுவதை நோக்குக. இதனால் அகரம் முதலிய எண்ணும், எழுத்தும் ஆதிபகவனிடம் இருந்துத் தோன்றியது என்பதைக் காணலாம்.

ஆதிபகவன் என்னும் சொற்றொடர்

ஆதி என்பதற்கு இங்கு முதல் என்பதுதான் பொருந்தும் என்று முன்னமே பார்த்தோம். ஆதிபகவன் என்பது முதல் பகவன் என்று ஆகும். இதனை தமிழ்ச் சமண இலக்கியத்தில் இருந்து சான்றுக் காட்டுவோம்.

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே”
 – திருக்கலம்பகம்

ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்”
 – திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” 
– தோத்திரத் திரட்டு 

பகவன்” என்பதற்கு அடியாருக்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் கேவல ஞானி என்றே பொருள் உரைத்திருக்கிறார். ”பகவன்” என்ற சொல் பல தமிழ்ச் சமண இலக்கியத்தில் காணலாம். அம்மேற்கோள்களைச் சுட்டினால் விரிவடையும் என்று இங்குக் கொடுக்கப்படவில்லை.

இன்னுமொரு காட்டு. தமிழின் முதல் உரைநடை நூலான சிறீபுராணம் (ஸ்ரீபுராணம்) என்ற நூலில் இருந்துத் தரப்படுகிறது.

ஸ்ரீபுராணம் - ஆதிபர்வம்
“அன்னைமீர்! நீங்கள் பாலைகளாகவிருக்கின்றீர்களெனினும். சீலவிநயங்களால் பரிணதைகளாக விருக்கின்றீர்கள்; ஈத்ரஸமாகிய ரூபயெளவனாவஸ்தா சீலாசாரங்கள் வித்தையால் அலங்கிருதமாகில் அன்றோ ஸ்ரேஷ்டமாகும்; ஜன்மபலமாவது வித்தையே; எஸஸ்ஸினையும், ஸ்ரேயஸ்ஸினையும் தருவது வித்தையே; கருதியவற்றைத்தரும் சிந்தாமணியாவதும் வித்தையே; தர்மார்த்தகாமங்களுள் சம்பத்பரம்பரையைத் தருவதும் வித்தையே; பந்துவாவதும். மித்திரராவதும், சர்வார்த்தங்களையும் சாதிக்கும் தேவதையாவதும் வித்தையே; ஆகையால், நீங்கள் வித்தையினைக் கைக் கொள்வீர்களாக” என்பனவே.
 
பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாதவசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதயகமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனுலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
 
அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடசபரிகர்மங்களையு முபதேசித்தருளினார். இங்ஙன ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகலசாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை, உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்திவிசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.”
 



முடிபு: 

தேவர் பெருமான் (குறளாசிரியர்)  “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதரை” என்பது தெள்ளிதில் விளங்கும். அடுத்த குறளான “கற்றதனால் ஆயப் பயன்னென் கொல்” என்ற குறளும் இந்தக் கருத்துக்கு அரண் செய்யும்.

இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சமண முனிவரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி என்னும் சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக, 

“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி” 



என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.

“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.

அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதல் எழுத்தாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு (தீர்த்தங்கரர்களுக்கு) ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.

இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ஆதிபகவன் விளக்கம் !!!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு

pashupati.jpgஆதங்கம் - ஆபத்து, உபத்திரவம், கலம், காய்ச்சல், தீங்கு, நோய், பறையொலி, புயம்
ஆதபம் - ஒளி, குடை, வெயில்
ஆதண் - நோய், வருத்தம்
ஆதவன் - சூரியன்
ஆதம் - ஆதரவு, விருப்பு, கூந்தற்பனை
ஆதரம் - அன்பு, ஆசை, ஊர், கேள்வு, சிலம்பு, துவக்கம்
ஆதரவு - அன்பு, ஆதாரம், உதவி, விருப்பம்
ஆதரிசம் - உரை, மூலம்
ஆதரிசனம் - கண்ணாடி
ஆதரித்தல் - அன்பு வைத்தல், உதவி செய்தல், சங்கித்தல், தாபரித்தல்
ஆதலை - உதவி, தாபரிப்பு
ஆதல் - ஆகுதல், தெரிதல், நுணுக்கம், கல்விநூல், கூத்து
ஆதவம்- ஆதபம்
ஆதளை - ஆமணக்கு, ஆயாசம், மாதளை
ஆதளைமாதளை - வருத்தம்
ஆதனமூர்த்தி - சிவலிங்கம்
ஆதனம் - ஆசனம், சீலை, நிலைமை, நீளுதல், பார்வை, விலாசம்
ஆதன் - அருகன், அறிவிலான், உயிர், குரு, குருடன் (இதிலிருந்து ஏதன் வந்தது எனலாம்!)
ஆதாயம் - இலாபம், நன்மை, இலக்கினத்துக்கு பதினோராமிடம்
ஆதாரம் - அடி, ஈடு, அத்திவாரம், தானம், நிலை, பாத்தி, மழை, வாய்க்கால்
ஆதானம் - ஈடு, ஏற்றுக்கொள்ளுதல், சங்கற்பித்தல், நிறுவனம், பெறுதல்
ஆதி - அதிசயம், அருகன், இடம், இறைவன், ஈடு, எழுவாய், ஒரு தாளம், கடவுள், காய்ச்சற் பாஷாணம், சூத்திரம், சூரியன், நேரோடல், தொன்மை, பழமை, பிரதானம், பரமசிவம், பிரமன், புத்தன், மண்டலமாயோடல், மனவிருப்பம், முதல், மூலம், வனப்பு, பழங்கதை கூறுதல், விட்டுணு, வேர்
ஆதிகரன் - பிரமன்
ஆதிகாரணம் - முதற்காரணம்
ஆதிக்குரு - முப்பூ, அது பஞ்சலோகங்களையும் பேதிக்கச் செய்வது, பூவழலை, பூநீறு, முதன்மை பெற்ற குரு
ஆதிசக்தி - பராசக்தியில் ஆயிரத்தொரு கூறு கொண்டது, ஆன்மாக்களுக்கு விடய சுகத்தைப் பொருந்தும் ஆணவமலத்தைப் பக்குவப் படுத்தும் தன்மையது
 
எனவே ஆதி என்பது மூலம், முதல், பழைய என்ற பொருளில் கொள்ளுதல் வேண்டும். அது தமிழ் சொல்லே.
 
பகம் - அவாவின்மை, ஈச்சுரத் தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியமென்மறுகுணம், அழகு, காந்தி, பெண்குறி, மகத்துவம், முத்தி, மந்தாரை
பகரம் - அலங்காரம், மினுக்கம், ஓரெழுத்து
பகர்வு, பகர்தல் - கூறல், சொல்லல், விற்றல்
பகலவன் - சூரியன், பரணிநாள்
பகலோன் - சூரியன்
பகல் - ஒளி, சூரியன், தினம், நடு, பகற்காலம், பகுதல், பிரிதல், பிளத்தல், மதியாணி, மத்தியானம், மூர்த்தம், நுகத்தின் மத்தியாணி
பகவதி - தருமதேவதை, துர்கை, பார்வதி
பகவன் - அரன், அரி, அருகன், கடவுள், குரு, பிரமன், புத்தன்
பகவான் - கடவுள், சூரியன், துவாதசாதித்தரில் ஒருவன்.
பகன் - பகாசுரன்
பகாரி - கண்ணன், வீமன்
பகாலி - சிவன்
பகீரதி - கங்கை
பகீரதன் - ஓர் அரசன்
பவந்தி - கற்புடையோள்
பவன் - கடவுள், தானயுண்டானவன்
 
எனவே பகவன் என்பது பரமசிவன், பழையவன், படைத்தவன், பகுத்தவன், பகலவன் எனப் பொருளாகும். இதுவும் தமிழின் சொந்தச் சொல்லே
 
இப்போது இரண்டையும் சேர்த்தால் ஆதி பகவன் என்பதற்கு:
 
மூலமுதல்வன் என்றும் பழைய பரமசிவம் என்றும் பொருந்தும்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்

பகவன் முதற்றே உலகு
திருச்சிற்றம்பலம்
http://kalairajan26.blogspot.in/2012/01/blog-post_31.html
அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
 
pillayar.jpg
 
 
ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்
(அழகப்பா பல்கலைக் கழகக் கருத்தரங்கில் 18/09/2005 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை. இணையத்தில் 15-07-2010 அன்று வெளியிடப்பட்டது.)
 
அகில உலகிலும் வாழும் மனிதர் அனைவரும் பிறப்பால் ஒன்றே ஆவர். ஆயினும் மனிதர்கள், தாம் பிறந்த நாட்டின் பெயராலும், பேசும் மொழியின் பெயராலும், வழிபடும் கடவுளின் பெயராலும் தமக்குள் பேதம் கண்டுள்ளனர். இவற்றினால் மாறுபட்ட சமூகங்களாக வாழ்கின்றனர். அவற்றுள் மிகவும் தொன்மை மிக்க சமூகத்தினராக இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் வாழும் மற்றபிற சமூகத்தினர் (மதத்தினர்) இறைவனின் தூதுவர்களையோ அல்லது இவ்வுலகில் தோன்றி மறைந்த மகான்களின் வடிவங்களையோ வணங்கி வருகின்றனர். ஆனால் தொன்மை மிகுந்த இந்தியச் சமூகத்தார்கள்(இந்துக்கள்) மட்டும் கடவுள்களின் திருவுருவங்களை நேரடியாக வணங்கி வழிபடுகின்றனர்.
 
தெ(தொ)ன் தமிழர்
உலகில் லெமூரியாக் கண்டம் அழிவதற்கு முன்னரே இவர்கள் அங்கு சமூக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர் என்பது அறிவியல் உண்மை. இன்று, இந்தியச் சமுதாயத்தினருள் மிகத் தொல்பழம் சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் விளங்குகிறது. தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நூல்களாகத் தொல்காப்பியமும், திருக்குறளும் மதிக்கப்படுகின்றன. தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது. திருக்குறள் மட்டுமே அனைவராலும் படிக்கப்படுகின்றது.
 
கற்றதனாலாய பயன்
மனிதனுக்குத் தேவையான அறம்,பொருள், காமம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள். இந்நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வணங்கிய கடவுள் யார்?
இதைக் கண்டறிந்து. நாமும் அக்கடவுளை வணங்கி வழிபட வேண்டும் அல்லவா? அப்பொழுதுதானே திருக்குறளைக் கற்றதனாலாய பயனைப் பெற முடியும்?
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
 
என்பது திருக்குறளின் முதற்குறள். இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால் வணங்கப்பட்ட கடவுள் யார்?
ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும் ஒருவாறாகக் கூறுகின்றனர்.
சிலர், திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும், அவரவர் சமயத்தின் மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.
ஆதி என்பது தாயாகும், பகவன் என்பது தந்தையாகும். ஆதிபகவன் என்பது தாயையும் தந்தை​யையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
பகவன், பகலன், பகலவன் என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன. இது உலகம் தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும், சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள் என்றும் கூறுகின்றனர்.
ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும். அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்.
திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான், திருமகள் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக் குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
சிலர் முதற் குறள் உட்பட்ட பலகுறள்களில் வடமொழிச் சொல்லும் பொருளும் உள்ளன எனக் கூறுகின்றனர். இதனால் இக்குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்படவில்லை என்றும். பின்னாளில் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்.
திருவள்ளுவர் வாழ்த்திய கடவுளும், வணங்கிய தெய்வங்களும், வசித்த இடமும், வாழ்ந்த காலமும் அறுதியிட்டுக் கூறமுடியாதபடி மிகவும் தொன்மையாக உள்ளன.
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆனவை. மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும், சொல்லும் பொருட் செறிவு மிக்கனவாக உள்ளன. இதனால் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நோக்கும் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் புதிய புதிய கருத்துக்களைத் திருக்குறள் வழங்கி வருகின்றது. இதனால் திருக்குறளுக்கு இன்றும் புதிய உரைவளங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
இருப்பினும் இன்றைய நாளில் மக்களால் வணங்கப்படும் கடவுள்களில் ஏதேனும் ஒரு கடவுள் முதற் குறளுக்குப் பொருத்தமானவராய் இருக்கின்றாரா? என்று காண்போம்.
திருக்குறளோ யானை போன்றது! அதனைக் கற்கும் நாமோ மெய்யறிவுக் குருடர்கள் ஆவோம்! யானை தடவிய குருடர் கதையாக முதற்குறளின் ஒவ்வொரு எழுத்தையும், எழுத்துக்களாலான சொல்லையும், சொற்களாலான பொருளையும் காண்போம். அவ்வாறு கண்டால் நமது அறிவிற்கு ஆனைமுகத்தானே ஆதிபகவனாகத் ​தெரிகின்றார்.
 
மூல முதல்வன்
ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார். இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே நமது வேலைகளைத் துவக்குகிறோம்.
ஆகையால், முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும் ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்.
 
வித்தகன் விநாயகன்
இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம், ஆதி பகவன் முதற்றே" என்று திருவள்ளுவர் கூறுகின்றார். முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார். அப்படியானால், எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுள் யார்?
இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர். இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால் வணங்கப்படுகிறார். வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக் குறிப்பிடுகின்றனர். அன்னை கலைவாணி (ச​ரசுவதி), கலைகளின் நாயகியாக விளங்குகின்றாள். ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப் போற்றப்பட வில்லை.
வேதவியாசர் கூறிட, விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர் விளங்குகின்றார்.
யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர். ஒலி வடிவில் மட்டுமின்றி எழுத்து வடிவிலும் யானைத் தலையும், வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன. பிற கடவுளருக்கு இப்பொருத்தம் பெரும்பாலும் இல்லை. இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்.
 
ஆதியானவன்
மூன்றாவதாக திருவள்ளுவர், முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி பகவன்" என்று கூறிப்பிடுகின்றார். தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும். இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்.
தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார் என்பது திண்ணம். அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும் திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்.
 
"ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.
 
அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)
 
என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு, படைத்தலுக்குக் காரணமாயும், படைத்ததைக் காத்தலும், படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று பொருளாகிறது. ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் Authority என்ற சொல் உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு ஆதாரமானவனாகவும், எழுத்துக்களைக் காப்பவனாகவும், எழுத்துக்களில் குற்றம் குறை ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள். இவ்வாறான பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்.
 
பகுக்கப்பட்டவனே பகவன்
பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) என்ற குறளிலும்.
 
எள் பக அளவு சிறுமை (889) என்ற குறளிலும்
 
பக என்ற சொல் உள்ளது. பக என்றால் பகுத்தல், பிரித்தல், பிளவுபடுத்துதல், துண்டாக்குதல் என்பன பொருளாகும். "அன்" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது. இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட. பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்.
நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும். ஆனால் ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர். இறைவன் சிவன் தனது உடலின் சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார். ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை. விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது. பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது. இதனால், விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார். அவரது கதையைப் படிப்போம்.
 
அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப் பெருமானை உருவாக்கினார். சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார். பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார். இதனால்,விநாயகாரின் உடலானது அன்னை பார்வதி தேவியால் வழங்கப்பட்டது. அவரது தலையானது சிவபெருமானால் வழங்கப்பட்டது. இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக, தாயும் தந்தையுமாக,மூலமுதல்வனாக, வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகின்றார்.
 
 
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும், எழுத்துக்களில் உள்ள குற்றம் குறைகளை நீக்குபவனும், பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்.
ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்.
 
பிடித்து வைத்தால் பிள்ளையார்
களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச் சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந் தமிழரிடத்தில் இருந்துள்ளது.
இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில், பிள்ளையார்பட்டியில், கி.பி. 4ம் நூற்றாண்டில், கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ வழிபாடு இருந்துள்ளது ​தெளிவாகிறது. மேலும் போரின் போது, எதிரி வழிபடும் தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு. தமிழர்கள், இவ்வாறு செய்வதை வெற்றியின் அடையாளமாகத் கருதினர். இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
 
ஆனை முகத்தனே ஆதிபகவன்
இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால் வாழ்த்தப்பட்ட கடவுளின் பண்புநலன்கள் அனைத்தும், இன்றைய நாளில் நாம் வணங்கும் ஆனைமுகத்தானுக்கே பொருந்தியமைகின்றன. எனவே, தெய்வப்புலவராம் திருவள்ளுவர் வழி நின்று ஆனைமுகத்தானை நாமும் வாழ்த்தி நம் எழுத்துப்பணியையும், மற்றபிற பணிகளையும் செவ்வனே துவக்குவோம். நலன்கள் அனைத்தும் பெறுவோம்.
 
அன்பன்
கி.காளைராசன்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

அகர முதல – குறள்#1

thiruvalluvar drawing

அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் #1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றேஉலகு.

பொருள்:

எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதல்

அதே போல உலகத்துக்கு ஆதிபகவன் முதல்

உங்களுக்குத் தெரிந்த திருக்குறள் ஏதேனும் சொல்லுங்கள்  என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லக்கூடிய பதில் மேலே இருக்கும் குறளாகத் தான் இருக்கும்.

பலபேர் பலமுறை  பல இடங்களில் இக்குறளைச் சொன்னாலும், சொல்லிக்கொண்டிருந்தாலும் கூட இக்குறளின் பெருமை பல பேருக்குத் தெரிவதில்லை.

இக்குறள் சாதாரணமானதல்ல. எல்லா குறட்பாக்களுக்கும் அகரம் இந்தக் குறள். எல்லா குறட்பாக்களுக்கும் சிகரம் இந்தக் குறள்.

அகரம் என்பதற்குத் தொடக்கம் என்றொரு பொருளும் உண்டு. திருக்குறளைத் தொடங்கும் போது அகரத்தில் தொடங்குகிறார் வள்ளுவர். வள்ளுவரின் வானளாவிய மேதைமைக்கு இதுவே ஒரு சிறந்த சான்று.

அப்படி என்ன இருக்கிறது இந்தக் குறளில் ?

ஒவ்வொரு சொல்லாகப் பார்த்தால் தான் அதன் மாட்சி புரியும். அதைச் சொன்ன வள்ளுவரின் உள்ளம் புரியும்.

வாருங்கள் பயணிக்கலாம்.

அகரம் –  “அ” என்ற எழுத்து/ஒலி

முதல – முதல்

எழுத்தெல்லாம் – எல்லா மொழிகளின் எழுத்துகளும்

தமிழ் மொழியில் “அ” என்பது முதலெழுத்து. ஆனால் வள்ளுவர் எழுத்தெல்லாம் என்று எழுதியிருக்கிறாரே. ஆங்கிலத்தின் முதல் எழுத்து “அ” அல்லவே. “A” ஆயிற்றே. அப்படியென்றால் வள்ளுவர் இங்கு எதைக் குறிப்பிடுகிறார்?

“அ” என்ற ஒலியை. “அ” என்ற வரி வடிவத்தை அல்ல.

உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகளில் முதல் எழுத்தின் ஒலி “அ” தானே?!.

இப்போது ஏன் எழுத்தெல்லாம் என்று போட்டார் என்று புரிகிறதா ?

அடுத்து முதல் என்ற சொல். இந்தச் சொல்லுக்கு என்னென்ன பொருளெல்லாம் உண்டு ?

தொடக்கம், முதன்மையான, காரணம், கடவுள், முதலானவன், சிறந்த, விசேடியம், மூலதனம், வேர்.

இந்தக் குறட்பாவில் ஆதிபகவன் எத்தகையவன் என்பதை ஓர் உவமை மூலம் விளக்குகிறார் வள்ளுவர்.

சுருங்கச் சொன்னால்,

“அ” என்ற ஒலி = ஆதிபகவன் , எழுத்துகள் = உலகம்

உலகம் என்பது இங்கே உலகத்திலுள்ள உயிர்களைக் குறிக்கிறது.

“அ” என்ற ஒலி = ஆதிபகவன் என்றால் இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருக்க வேண்டும்.

அப்படி என்ன ஒற்றுமை ? அதை எப்படிக் கண்டறிவது?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆதிபகவன் என்பதில் உள்ள  “ஆதி” என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். அதற்கு என்னென்ன பொருள் ?

 
தொடக்கம், தொடக்கமுள்ளது, காரணம், பழைமை, கடவுள்.எப்பொருட்குமிறை, சூரியன்.
 
இப்போது அகரத்திற்குள்ள பொருட்களோடு இவற்றை ஒப்பிடும் போது சில உண்மைகள் தெரிகின்றன.
 
அகரத்திலிருந்தே எழுத்துகள் தொடங்குகின்றன. ஆதிபகவனிலிருந்தே இந்த உலகம் தொடங்குகிறது.
 
பகவனுக்கு முன் ஏன் ஆதி என்ற சொல்லைப் போட்டார் என்று விளங்குகிறதா ? அவனுக்கு முன் யாரும் இல்லை என்பதே இதன் உட்பொருள்.
 
அகரமே எல்லா எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது. எல்லா உயிர்களுக்கும் ஆண்டவனே முதன்மையானவன்.
 
பிற எழுத்துகள் பிறக்க அகரமே காரணம்.
 
எடுத்துக்காட்டுக்கு –> அ + இ = எ ,அ+ இ = ஐ, அ+ உ = ஒ
 
பல உயிர்கள் பிறக்க ஆண்டவனே காரணம்.
 
அறிஞர்கள் இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்கிறார்கள்.
 
வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுவது அகர ஒலியை என்று பார்த்தோம்.
 
ஒலி வடிவமாய் இருப்பதற்கு  நாம் வரி வடிவம் கொடுக்கிறோம். அதே போல நாத வடிவான ஆண்டவனுக்கு நாம் உருவம் கொடுக்கிறோம்.
 
ஏன் இறைவன், கடவுள் என்று போடாமல் பகவன் என்ற சொல்லைப் போட்டார் வள்ளுவர் ?
 
பகவன் என்பதற்கு என்ன பொருள் ?
தேவன், அருகன், புத்தன், பிரமன், திருமால், சிவன், சூரியன்.

இறைவன், கடவுள் ஆகிய சொற்களுக்கு இத்தனை பொருட்கள் இல்லை. இப்போது புரிகிறதா வள்ளுவர் எவ்வளவு பெரிய மத நல்லிணக்கவாதி என்று!!

இறுதியாக முதற்றே என்று ஏகாரம் போடுகிறார் வள்ளுவர். ஏன் ?

இதனைத் தேற்ற ஏகாரம் என்கிறார் பரிமேலழகர். தேற்றம் என்றால் தெளிவு,உறுதி என்று பொருள்.

கடவுள் என்ற ஒருவர் உண்டு என்பதைத்  தான் திண்ணமாக  நம்புகிறேன் என்பதை வலியுறுத்தவே இங்கு தேற்ற ஏகாரம் போடுகிறார் வள்ளுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard