குறள் வழியில் ஒரு குரு
சான்றோர்களின் அறிவுரைகளை நாம் ஆழ்ந்த ஈடு பாட்டுடன் கடைப்பிடிக்கும்போது அந்த அறிவுரையின் சாதாரண பொருள் மறைந்து மேலான பொருள் விரிகிறது. கீழ்க்கண்ட குறளை எடுத்துக் கொள்வோம்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி ஆற்றுவார் என்பதை ஆராய்ந்து, அதன் பின் அக்காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இதன் பொதுவான பொருள்.
ஒரு தலைவன் தன் தொண்டர்களிடமும் ஊழியர்களிடமும் எப்படி வேலை வாங்க வேண்டும் என நிர்வாகத் திறமையைக் கூறுவதாய் இக்குறளின் பொருள் விரிகிறது.
இந்தக் குறளின் அறிவுரைப்படி வாழ்பவர்களுக்கு ஒரு சிறப்புப் பொருள் புரியும். குறளைச் சிறிது ஆழ்ந்து நோக்கினால், ஒரு பெரிய, பிரபஞ்சம் தழுவிய ஒரு நிர்வாகத் திறன் இங்கு கூறப்பட்டிருப்பது விளங்கும்.
இந்தக் குறளில் உள்ள ‘இவன்’ என்பவன் யார்? ‘அவன்’ என்பவன் யார்? இரண்டு பேரும் ஒரே நபரா? சிந்திக்க வேண்டிய விஷயம்.
இயற்கையே எல்லாக் காரியங்களையும் நடத்துகிறது. அதோடு நடைபெறும் ஒவ்வொரு காரியத்திலும் மனிதனைக் கருவியாக இருக்குமாறு கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். மனிதன் இதனை உணர்ந்து செயல்பட்டால் அவன் செய்வதெல்லாம் இனிதாகவே இருக்கும்.
ஒரு செயலில் வெற்றி பெறத் தங்களது திறமையை மட்டும் நம்பி மயங்கித் திரிபவர் கோடி. அதிகமான அவர்களது உழைப்பு முடிவில் அவசியமில்லாமல் போகிறது.
‘காற்றடிக்கும் திசையில் படகைச் செலுத்தி உன் பாய் மரத்தை விரித்துக் கட்டு. துடுப்பு போட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
‘சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்குச் சஞ்சலமென்?’ என்பார் பாரதியார்.
இயற்கை அல்லது இறைவனே எல்லாச் செயல்களையும் செய்யும்போது நாம் சோம்பி இருக்கலாம் என்றா இதற்குப் பொருள்? இல்லை, நிச்சயமாக இல்லை.
ஓர் உதாரணம் உண்மையை உணர வைக்கும். அறியாமையை உறைய வைக்கும்.
இறைவனை மக்களிடம் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய்து வந்தது ஓர் ஆசிரமம். அங்கே ஒரு மூத்த துறவி. அவருடன் ஐந்து இளம் துறவிகள். எல்லோரும் அந்தப் பகுதி ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தனர்.
ஆறு சுவாமிகளும் மாதம் ஒரு முறை கூடிப் பேசுவார்கள். அப்போது தலைவர் சுவாமிஜி அவர்களுள் ஒருவரிடம், நேற்றுவரை நீ பூஜை செய்தாய். இன்று முதல் மடத்துத் தோட்டத்தைக் கவனித்துக் கொள்” என்பார்.
அடுத்தவரிடம், இன்று முதல் சமயப் பிரச்சாரம் செய்” என்பார்.
மற்றொருவரிடம், நீ நேற்றுவரை தோட்டத்தைக் கவனித்து வந்தாய். இன்று மருத்துவமனையில் சேவை செய்” என்று ஒவ்வொருவருக்கும் பணிகளைப் பிரித்துக் கொடுப்பார்.
ஒவ்வொரு பணியை வழங்கும் போதும் அக்காரியத்தைச் செய்பவர்கள் அதற்கான தகுதி பெற்றிருக்கிறார்களா என்று தலைமைத் துறவி ஆராய்ந்தே செய்வார்.
ஆசிரமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் ஆசிரமப் பணிகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். பிறரது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
பணிகளை எல்லோருக்கும் பிரித்துத் தந்துவிட்டு தலைமைத் துறவி நேராகப் பூஜை அறைக்குச் செல்வார். அங்கு தெய் வத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின்வருமாறு பிரார்த்திப்பார்:
இறைவா, நீ எல்லோரின் இதயங்களிலும் இருக்கிறாய். அவர்களுக்குச் செய்யும் சேவை உனக்குச் செய்யும் சேவையே. மடத்துத் துறவிகள் மக்களுக்கு நன்கு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில், எனக்குத் தெரிந்தவரை பணிகளைப் பிரித்துத் தந்துள்ளேன்.
ஆண்டவா, நீதான் உண்மையில் எல்லாப் பணிகளையும் நடத்தி வைக்கிறாய். நாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே. நீ எங் களை எப்படி இயக்குகிறாயோ, அப்படியே நாங்கள் செயல்படுவோம்” என்று அவர் அடிக்கடி பிரார்த்திப்பார்.
அந்த ஆசிரமம் இறைசேவையிலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணம் கேட்டதற்கு சுவாமிகள், எல்லாப் பொறுப்புகளையும் துறவிகளிடம் தந்துவிடுவேன். அவைகளை நிறைவேற்றும் பொறுப்பைத் தெய்வத்திடம் விட்டுவிடுவேன்” என்று கூறி மேற்கூறிய குறளை மேற்கோள் காட்டினார்.
எந்தவொரு செயலையும் செய்து முடிக்க மனிதனுக்கு முயற்சியும் இறையருளும் அவசியம். இந்தக் குறளில் ‘இவன்’ என்பது மனிதனையும் ‘அவன்’ என்பது ஆண்டவனையும் குறிக்கும்.
இது இக்குறள் காட்டும் மேலான பொருள்.
– சுவாமி விமூர்த்தானந்தர்