நாக. இளங்கோவன்
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு” என்பது வள்ளுவ மரபு. “கடிது ஓச்சி, மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் ” என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை. “சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா”, என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கைச் சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. “நீயே முக்கண் முதல்வனும் ஆகுக” – ஆனால் உன்பாட்டுக்குப் பரிசு கிடையாது என்றது நக்கீரமரபு.
இந்தத் தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாகக் காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில்தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பித்திருக்கிறேன்.
1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு (fiction), வருணனை (commentary), மிகையான புகழ்ச்சி ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பதுபோன்றே மிகுந்துகிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.
2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்றெண்ணி, ஆண்டாளைப் புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.
3) “சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிகமதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது… மக்களைநோக்கி இறங்கிவந்தது.” —வைரமுத்து.
இது அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பு.
சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளைச் செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றைத் திரிக்கிறது. இது சைவ, வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையைக் காட்டுகிறதா? அல்லது காழ்ப்பைக் காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)
4) ஆண்டாளைக் கண்டெடுக்கப்பட்ட கனகம் என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதைப் பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்துநின்றன என்றுதான் சொல்ல வேண்டும். “அறியாக்குலம்” என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
5) “பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? ” —— வைரமுத்து.
வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில், மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளைச் செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையாரும் தாயுமான மாதினியாரே, அப்பரடிகளைச் சமணத்திலிருந்து மீட்டு, சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார்.
மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள்முந்தி பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மையர், மாதினியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. நானூறு ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது. ஆயிரத்துமுன்னூறு ஆண்டுகளில் இருவரைமட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில்விழாவில் தேவையில்லாதவற்றைப் பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.
6) “பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” — வைரமுத்து
சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, “அம்மையே!” என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால், அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார்.
அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய்த் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர்.
அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள்.
“தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்” என்று சத்தியைப் பாடி, அடுத்த வரியிலேயே, “அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்…” என்பார் அபிராமி பட்டர்.
சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கிக் கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான். இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையைத் தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளைத் தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.
இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.
ஓர் உயர்ந்த உறவைப் பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. “பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது “என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்” என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டைக்கூட காற்றில் பறக்கவிட்டார், கவிப்பேரரசு வைரமுத்து!
7) “திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?” — வைரமுத்து
இதுதான் கட்டுரையில் மிகமட்டமான இடம் என்றால் மிகையல்ல.
பாலியல் என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில்வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.
8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:
ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், “ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத (அல்லது பக்குவம் பெறவேண்டிய) ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து, ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்.” (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணையச் சத்தியை அழைப்பதாகச் சிவநெறி சொல்லும்.
இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள், இறையை நோக்கிப் பிறரை அழைக்கின்றார்.
இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை — சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர்.