New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் உவமையும் நடையழகும்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
திருக்குறளில் உவமையும் நடையழகும்
Permalink  
 


திருக்குறளில் உவமையும் நடையழகும்



உலக இலக்கியங்களில் ஒப்பற்ற ஒன்றாய்த் திகழ்வது திருக்குறள். உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்ப்பு பெற்றிருக்கின்ற சிறப்பு, மூன்று நூல்களுக்கு உண்டு.  அவை முறையே பைபிள், குரான்,திருக்குறள் என்பன.  இவற்றுள் முன்னைய இரண்டும் சமயச் சார்புடையவை.  சமயம் கடந்த நூலாகத் திகழும் சால்பு திருக்குறளுக்கு  உண்டு. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற இந்தத்  திருக்குறளில் இருக்கும் உவமைக் கூறுகளை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும



இலக்கியம் சிறப்பது உள்ளடக்கம், உருவம் ஆகிய இரண்டினால் மடடுமன்று.  உணர்த்தும் முறைதான் மிக முக்கியம்.  இலக்கியத்திற்கு உயிர்நாடி உணர்ச்சி: அழகு சேர்ப்பது கற்பனை, இனிமை சேர்ப்பது ஓசை நயம்,கவர்ச்சி சேர்ப்பது அணிநயம்,  சலிப்பைத் தவிர்ப்பது நடை அழகு. புலவர் தம்முடைய அனுபவத்தை-பட்டறிவைக் கற்பனை வாயிலாக எண்ணிப்பார்த்து உணர்ச்சி, கற்பனைத் திறன், ஓசையழகு, அணிநயம்.நடையழகு ஆகியவற்றுடன் படிப்பவருடைய உள்ளத்திலும் அத்தகைய அனுபவம் ஏற்படும்படி செய்யுள் நடையிலாவது உரைநடையிலாவது சுவைபடச் சொல்வதுதான் இலக்கியம்.  எனவே, உணர்ச்சி , கற்பனை,ஓசை, அணி, நடை ஆகிய உணர்த்து முறைக் கூறுகளாலும் திருக்குறள் உயர்ந்து விளக்குகிறது



     உவமை என்பது ஒருவகை அணி.  ஒரு பொருளையும் இன்னொரு பொருளையும் ஒப்பிட்டுக்காட:டுவது உவமை அணியாகும். இந்த அணியே ஏனைய அணிகளுக்கெல்லாம் தாயணியாகும்.  திருக்குறளில் உவமை அணியையும் அதனடிப்படையில் பிறந்த உருவகம், பிறிதுமொழிதல் முதலிய அணிகளையும திருவள்ளுவர் தம் நூலுக்கு அழகூட்டும் பொருட்டுக் கையாண்டுள்ளார்.



‘‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்



நிலையின் இழிந்தக் கடை’’-(964)



என்னும் குறளில் மக்கள் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தபோது அவர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிர்போல இழிவாகக் கருதப்பெறுவர் எனக் கூறுகிறார்.



‘‘உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி



விழிப்பது போலும் பிறப்பு’’-339

என்று இறப்புக்கும் பிறப்புக்கும் ஏற்ற உவமைகளை நமக்குத் தெரிந்த உவமைகளைக் கூறுகிறார். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் சிறு பிணக்கினை , உப்புக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

‘‘உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்ககற்றால் நீள விடல்-(1302)

உப்புக் கூடாமலும் குறையாமலும் இருந்தால்தான் சுவை. அதுபோல ஊடல் அமைய வேண்டும் என்கிறார்.  ஒரு குறளில் பல உவமைகளை அடுக்குகிறார்.

‘‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’’(1113)



மூங்கில் போன்ற தோள், தளிர் போன்ற மேனி, முத்துப்போன்ற பல், இயற்கை மணமே மணம், வேல் போன்ற கண் என் காதலிக்கு என்று கூறுகிறான் காதலன். பிறவியைப் பெருங்கடல் ஆக உருவகிக்கிறார்.



‘‘பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீத்தார்



இறைவ னடிசேரா தார்’’-(10)



அய்ம்பொறிகளை அய்ந்து யானைகளாக உருவகம் செய்கிறார்.



‘‘உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்



வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’’ -24



அருளைஅன்புத்தாய் பெற்ற குழந்தை என உருவகிக்கிறார்



‘‘அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்



செல்வச் செவிலியால் உண்டு’’ (757)



மயிலிறகே ஆனாலும் அளவுக்கு அதிகம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்னும் கருத்தைக் கூறி அதன் வாயிலாக எளிய பகைவர்களானாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும்போது வலிய அரசனும் தோல்வி அடையலாம் என்னும் கருத்தைப் புரிய வைக்கிறார்.



‘‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்



சால மிகுத்துப் பெயின்’’-475



இதற்குப் பிறிதுமொழிதல் அணி என்று பெயர். இவ்வாறு பல அணிகள் திருக்குறளில் அமைந்து அதற்கு இலக்கிய எழிலைக் கூட்டுகின்றன.  திருவள்ளுவர் அறக்கருத்துக்களை உவமையாகக் கூறும் பண்புடையவர்.



‘‘அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை



ஒழுக்க மிலான்கண் உயர்வு’’ (135)



என்னும் குறளைக் காண்க . பொறாமையுடைய யவன் செல்வம் செல்வம் பெறுவதில்லை. அதுபோல ஒழுக்கமிலாதவன் உயர்வு பெற முடியாதுஎன்பது இக்குறளின கருத்து.  ஓர் அறக்கருத்துக்கு இன்னோர் அறக்கருத்து இங்கே உவமையாக வருவதைக் காணலாம்.



 



இலக்கியத்தைப் படிப்பவர்களிடையே சலிப்படவதைத் தவிர்ப்பதற்கு இலக்கிய ஆசிரியர்கள் பலப்பல நடைகளை கையாள்வர்.  அவ்வாறே திருவள்ளுவரும் பலப்பல புதுப்புது உத்திகளைக் கையாள்கிறார்.



 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்



       இல்லவள் மாணாக் கடை இது கேள்வியாக அமைந்த குறள்.



‘‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்



தீமை இலாத சொலல்’’(291)



இது கேள்வியும் பதிலும் ஆக அமைந்த குறள்



‘‘கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்



நோக்கம்இம் மூன்றும் உடைத்து’’-(1085)



கேள்விகளே பதிலாக அமைந்த குறள் இது.



ஒன்றனுள் ஒன்று என்பது இன்னொரு வகை உத்தி



‘‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்



கற்ற செலச்சொல்லுவார்’’722



‘‘இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்



துன்பம் உறுதல் இலன்’’ (629)



இப்படிச் சில குறள்.



பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்



மக்கட் பதடி யெனல்’’(196)



என்னும் இக்குறளில் முதலாவது ‘எனல்’ என்பது ‘என்று கூறாதே ‘ என்று பொருள் தரும்.



‘‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்



நன்கலம் நன்மக்கட் வேறு’’ (60)



‘‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்



தம்தம் வினையான் வரும்’’ (63)



‘‘பொருள் நீங்கிப்  பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி



அல்லவை செய்தொழுகு வார்’’-246



என்னும குறள்கள் மேற்கோள் நடையில் அமைந்தவை



 



‘‘உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்



அமைவரண் என்றுரைக்கும் நூல்’’743



பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்



தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’(322)



இவை நூல் மேற்கோள் நடையில் அமைந்தவை . இப்படிப் பலப்பல நடை வேறுபாடுகளை மேற்கொண்டு வள்ளுவர் தம் இலக்கியம் படிப்பார்க்குக் களைப்பின்றி இருக்குமாறு செய்கிறார்.



 அறத்துப்பாலிலும பொருட்பாலிலும் இடம்பெற்ற குறள்கள் ஒன்றிரண்டு தவிர மற்றவை வள்ளுவர் கூற்றாகவே கொள்ளப்படும்.  ஆனால் காமத்துப்பாலில் இடம்பெறும் குறள் அனைத்தும் தலைவன் , தலைவி,தோழி முதலியோர் கூற்றாகக் கருதப்படும்.  இந்த வகையில் காமத்துப்பாலில் இடம்பெற்ற குறள் ஒவ்வொன்றும ஒவ்வோர் ஓரங்க நாடகமாகும்.



இலக்கியம் காலக்கண்ணாடி என்பர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுந்த நூலாயினும் திருக்குறள் இன்றும் வாழும் வள்ளுவமாக இலங்குகிறது.  காரணம் என்ன? மெய்யறிவுச் சார்புடைமை, பொது நோக்கு,அறிவியல்  அணுகுமுறை, மனிதமுயற்சியின் மாண்பு போற்றல், இலக்கியம் இணைந்த இயல்பியல் என்று அய்வகைக் காரணம் உரைப்பர் அறிஞர் வி.சி குழந்தைசாமி, மேலும் திருக்குறள் தமிழ் மண்ணில் தோன்றியதாக இருப்பினும் அனைத்துலகையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது.  எனவே காலம் கடந்த , ஞாலம் கடந்த இலக்கியமாத் திருக்குறள் இன்று திகழ்கிறது. இன்றுமட்டுமா! இல்லை என்றும் இவ்வுலகில் அது நின்று நிலவும் என்பதில் அய்யமில்லை.



 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வள்ளுவர் நோக்கில் அறிவுசார்ந்த பொருளியல்

 

திருவள்ளுவர் தேர்ந்த தொலைநோக்குச் சிந்தனை பெற்ற பேரறிஞர் ஆவார். இச்சிந்தனையின் சிறப்பை-ஆழத்தை அவர்தம் திருக்குறளில் தொட்ட இடங்களில் எல்லாம் தட்டுப்படக் காணலாம். அவற்றில் ஒன்று அறிவு சார்ந்த பொருளியல் (Knowledge based economy)பற்றிய அவர் சிந்தனை ஆகும்.  அதனை இக்கட்டுரையில் ஒரு சிறிது காண்போம்.



பொருளியல் என்பது செல்வத்தை மையமாகக் கொண்டது. செல்வம் உடைமை, பொருளியலில் செழிப்பையும் செல்வம் இல்லாத வறுமை, பொருளியலின் குறைவையும் குறிக்கும் எல்லைக்கோடுகளாகும்.பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’’(247) என்றே திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் பொருளைத்தேட வேண்டியதன் தேவையையும் நன்கு விளக்குகிறார். ‘‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வார் சிறப்பு’’ (752)  என்று கூறிச் ‘‘செய்க பொருளை, அதுதான் பகைவரின் செருக்கை அடக்கும் ஆயுதம்’’(739) என்ற பொருள் தேட மனிதனைத்(திருவள்ளுவர்) தூண்டுகிறார்.



நாடாளும் வேந்தனுக்குப் பொருளியல் உணர்வு தேவை என்பதை பொருட்பாலின் முதற்குறலிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் ‘‘படை  குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’’(389) என்னும் குறளில் அரசாங்கத்தின் ஆறு உறுப்புகளில் ஒன்றாக வரும் கூழ் என்பது கூழாகிய உணவுக்குக் காரணமாக இருக்கும் பொருளினையே உணர்த்துகிறது. பொருள்கள் வரும் வருவாய்த்துறையை பெருக்குவதும், அதன்வழி வந்த செல்வத்தைத் தொகுத்து வைத்தலும்; . அதனைப் பிறர் கொள்ளதாவாறு காத்தலும், காத்த பொருளைப் பல நல்வழிகளில் நாட்டுமக்களுக்கு நன்மை தரும் வழிகளில் பகிர்ந்து செலவிடுதலும் அரசரின் பொருளியல் கடமைகள் எனத் திருவள்ளுவர் வலியுறுத்தவும் தவறவில்லை( 385) . இத்தகைய பொருளியலுடன் அறிவினை இணைத்துப் பேசும் சிந்தனையைத் திருவள்ளுவர் தொடங்கி வைத்துள்ள தன்மையைக் கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை.



திருக்குறளில் அறிவுடைமை என்னும் ஓர் அதிகாரம் உள்ளது.  கல்வி, கேள்விகளால் வரும் தெள்ளிய அறிவை அறிவுடைமை அதிகாரம் பேசுகிறது. அறிதல், அறிந்தசெய்தி, ஓதி(அதாவது ஞானம்), மதி என்னும் நான்கு பொருளையும் உணர்த்துவதுதான் திருவள்ளுவர் கூறும் அறிவு என்பார் தேவநேயப்பாவணர். இந்த அதிகாரத்தில் முடிமணியாகத் திகழும் இறுதிக்குறள்’’ அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும் இலர்’’(430)  என்பதாகும்.  உடைமைக்கும் வறுமைக்கும் அடிப்படை அறிவுதான் என்பதை இக்குறள் உணர்த்துகிறது.  அறிவுடையவர்கள் வேறொன்றும் இல்லாத போதிலும் எல்லாம் பெற்றவர்களாகவே கருதப்படுவார்கள் அறிவில்லாதவர்கள் மற்ற மற்ற செல்வங்கள் பொருள் செல்வம்- பெற்றிருப்பினும் பெறாதவர்களாவே நினைக்கப்படுவார்கள்.  காரணம் என்ன? எல்லாச் செல்வங்களையும் படைக்கும் -உருவாக்கும்-ஆற்றலும், அதனைக்காக்கும் ஆற்றலும் அறிவுடையார்க்கு அமையும். பிற செல்வங்கள் எல்லாம் ஏற்கெனவே அமைந்திருந்தாலும் அவற்றை அழியாமல் காக்கவும், பிறகு படைக்கவும், அறிவு இல்லாதார்க்கு இயலாது.  எனவே அறிவே பொருளியலுக்கு அடிப்படை என்பது திருவள்ளுவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவள்ளுவர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றை வலியுறுத்தும்போது உடன்பாட்டு முறையிலும்.எதிர்மறை முறையிலும் கூறுவது அவரது வழக்கமாகும். கல்வி, கல்லாமை அதிகாரங்கள் இதற்குச் சான்றாகும்.  அவ்வாறே   பொருளியலுக்கு அறிவு அடிப்படை என்பதைப் புல்லறிவாண்மை(85) என்னும் அதிகாரத்தின் முதற்குறளிலும் வலியுறுத்துகிறார்.  புல்லறிவாண்மை என்பது சிற்றறிவுடையனாக இருத்தல் என்பதாகும்.  ஒருவன் தனக்குள்ள அறிவை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளாதிருப்பதாகும். இங்கு வரும் குறள் அறிவின்மை இன்மையுள் இன்மை, பிறிதின்மை இன்மையா வையாது உலகு (814) என்பதாகும். ஒருவனுக்கு இல்லாமை (வறுமை) என்பது அறிவு இல்லாமையே அதாவது வறுமைகள் எல்லாம் சிறந்த வறுமை அறிவு இல்லாமையே ஆகும்.  ஏனைய இல்லாமையை வறுமைகளை –அதாவது பொருட்செல்வம் இன்மையை ஒரு வறுமையாக உலகம் கருதாது என்பதாகும். அதாவது பொருளைப் படைக்கவும் , அதன் பயனைத் துய்க்கவும் அறிவுதான் தேவைப்படுகிறது என்கிறார் வள்ளுவர். இக்குறளிலும் அறிவுக்கும் பொருளியலுக்குமுள்ள தொடர்பு எதிர்மறை நோக்கில் பேசப்படுகிறது.



திருக்குறளில் பேதைமை என்று ஓர் அதிகாரம் உள்ளது.   யாதும் அறியாமை என்பது இதன் பொருளாகும். இதனை வரையறுக்கும்போதும் வள்ளுவர் ‘‘பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல் (831)என்று கூறுகிறார்.  இலாபத்தை ஆக்கத்தை மேற்கொள்ளலாம் நஷ்டத்தை -இழப்பினை –அழிவினை –ஏற்பதுதான் அறியாமை. பேதைமை என்பது இக்குறளின் பொருள். இங்கும் அறிவுக்கும் பொருளியலுக்கு முள்ள தொடர்பு வலியுறுத்தப்படுகிறது. இலாபம் நட்டம், செலவு - இழப்பு ஊதியம் என்பன பொருளியலின் அடிப்படையான வணிகத்தின் இருதுருவங்கள் அல்லவா?



மேலேகாட்டிய மூன்று குறள்களும் அறிவு சார்ந்த பொருளியல் என்னும் இக்காலச்சிந்தனைக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் இட்டவர் திருவள்ளுவர் என்பதற்கு போதிய சான்றுகள் அல்லவா? அவரது மேதைத் தன்மையைப்போற்றுவோம். அவரது புகழை உலகெங்கும் பரப்புவோம்.



 



Thinnappan,SP, Valluvar nookkil aRivu caarntha poruLiyal 
                  Thiruvlluvar’s concept of Knowledge-based Economy)
            In Family Carnival 2001 Tampines West Community Club
            2001 ( 2 pages) (Tamil)

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வள்ளுவம் காட்டிய பெரியார்



திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஆர்வம் இருந்தது.  ஒரு நாள் அவனுக்கு ஓர் அய்யம் ஏற்பட்டது.  உலகில் மிகப்பெரிய அரிய செயல் எது என்று அறிய அவன் விரும்பினான்.  அவன் திருவள்ளுவரைப்பார்த்து அந்த வினாவை  அவரிடம் எழுப்பினான்.  உடனே அவர் நம்மை விடப் பெரியவர்களை நண்பர்களாக- வாழ்க்கை வழிகாட்டிகளாகக் கொள்வதே அரிய செயல்களுக்குள் மிக அரிய செயல் என்றம் அதுவே வலிமைகள் எல்லாவற்றிலும் வலிமையானது என்றும் விடை கூறினார்.



அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்



பேணித் தமராக் கொளல் (குறள் 453)



      தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்



வன்மையுள் எல்லாம் தலை (குறள் 454)



அந்த இளைஞன் திருவள்ளுவரை அத்துடன் விடவில்லை. அப்படி என்றால் ‘அத்தகைய பெரியார் யார்?’’என்று அடுத்த கேள்வியை அவரிடம் கேட்டான் .  அவரோ ‘நீயே சொல் பார்க்கலாம். என்று அவன் சிந்தனைக்குச் சிறிது இடம் கொடுத்தார்.  உடனே அவன் ‘ ‘வயதில் மூத்தவரைப் பெரியார் என அழைக்கலாமா?’’ என்றான். ‘இல்லை’ என்றார் வள்ளுவர்.  ‘‘உடல் வலிமை மிக்கவரைப் பெரியார் என்று உரைக்கலாமா’’ என்று கேட்டான் அதற்கும் ‘இல்லை’ என்பதே வள்ளுவர் பதில் ‘மிகுதியான பொருட்செல்வம் கொண்டவரை (பணக்காரர் ஒருவரைப்) பெரியார் எனக் கூறலாமா?’ என்ற அடுத்து அவன் கேட்க அதற்கு அவர் ‘பொருட்செல்வம் கீழானவர்களிடம் (பூரியார் கண்ணும் உள.  குறள்241) இருக்கிறதே என்று கூறி மறுத்துவிட்டார். ‘‘கல்வியில் பெரிய அறிஞர்களைப் பெரியார் என அழைக்கலாமா’’ என்று இளைஞன் கேட்க, அதற்கு வள்ளவர் ’’பிறர் துன்பம் துடைக்காத அறிவினால் பயன் என்ன? ‘‘ என்றும் (அறிவினால் ஆவதுண்டோ பிறிதின்நோய் தன்நோய் போல் போற்றாக் கடை-குறள்315 ), மக்கட்  பண்பு இல்லாதவர்கள் அரம் போன்ற கூர்மையான  அறிவுடையாராயினும் மரம் போல்வர் மக்கட் பண்பிலாதவர் (குறள்997) என்றும் விடை கூறி அதனையும் மறுக்கிறார்.



      இளைஞனோ ‘‘அய்யா! உண்மையான பெரியார் யார்?’’ என நீங்களே உரையுங்கள்’’ என்றான்.  உடனே வள்ளுவர் அறனறிந்து மூத்த அறிவுடையவராக (குறள் 441) இருப்பவரே பெரியார் என்றும், அந்நிலையிலும் பணிவு என்னும் பண்புடையவரே பெரியார் (பணியுமாம் என்றும் பெருமை-குறள்978) என்றும் கூறினார் . மேலும் வாழ்க்கையில் செயற்கரிய செயல்களைக் செய்கின்றவரே உண்மையாக நான் போற்றும் பெரியார் (குறள்26)என்ற கூறினார். அய்ய வினா எழுப்பிய இளைஞன் தெளிவு பெற்றான்.  இத்தகைய பெரியாரைத் துணைக்கோடல், வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளத் தேடத் தலைப்பட்டான்.



 



சுருங்கச் சொல்லும் வள்ளுவர் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்துடன் பெரியாரைப் பிழையாமை என்னும் அதிகாரத்தினையும் கூறியுள்ளார்.  இவ்வாறு உடன்பாட்டு முகத்தானும் எதிர்மறை முகத்தானும் வலியுறுத்துகிறாரே வள்ளுவர். பெரியாரை வழிகாட்டியாகக் கொள்வது அவ்வளவு முக்கியமானது போலும் என்று அவன் தன்னுள் எண்ணிக்கொண்டான்.  ‘பெரியாரைப் பேணாது ஒழுகின்’’ தீமை வரும்(குறள்89) என்னும் குறளும் ‘‘எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்’’ (குறள் 896) என்னும் குறளும் இளைஞனை அச்சுறுத்திப் பெரியாரைத் தேடும் முயற்சியில் அவனை விரைவுபடுத்தின.



இளைஞன் தேடினான். . . . தேடினான் . . . தேடினான் !இருபது நூற்றாண்டுகள்-இரண்டாயிரம் ஆண்டுகள் தேடிக் கண்டுகொண்டான் வள்ளுவர் காட்டிய பெரியார், ஈ.வெ.ரா பெரியார் தான் என்று! வள்ளுவர் காட்டிய பெரியார், வாழ்க்கைக்கு வழிகாடடும் ஒளிவிளக்கு பெரியார், ஈ. வெ. ரா என்றுணர்ந்து கொண்டான், பிறர்ககு உணர்த்தவும் தலைப்பட்டான்.



75      Thinnappan SP, Valluvam kaattiya Periyaar in   Periyar Pani , Periyaar  samuaka cevai     Annual Souvenir, Singapore 2011                   Pp10-11
தமிழர் கண்ட  குடியியலும் அறநெறியும்



தமிழர் கண்ட குடியியல், அறநெறிக் கோட்பாடுகளைச் சுருக்கமாக விளக்குவதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்



குடியியல் என்னும் சொற்றொடர் குடியைப் பற்றி விளக்கும் பகுதி அல்லது பாடம் என்னும் பொருள் தரும்.இதனை விளங்கிக் கொள்ளக் குடி என்பதன் பொருளாழத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.



குடி என்பது முதலில் குடும்பத்தைக் குறிக்கும் ஒரு சொல். ‘‘ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’’ என்னும் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய கல்வி பற்றிய புறநானூற்றுப்பாடல்(183) இதனை வலியுறுத்தும். எனவே, குடியியல் என்பது குடும்பம் பற்றிய இயல் எனப்பொருள்படும் . சிங்கப்பூர் அரசு உணர்த்தும் நமது பொதுப்பண்புகளில் குடும்பமே சமுதாய அடிப்படை என்பது ஒன்றல்லவா!  ஒரு சமுதாயத்தில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம்  ஆண்டுகட்கு முன்னரே வலியுறுத்திய தமிழ்ச் சமுதாயத்தின சிறப்பினை என் என்பது?



குடி என்பது ஓர் அரசுக்குட்டபட்ட குடிமக்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் உள்ளது இதனை,



      வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்



கோல்நோக்கி வாழும் குடி(542)



என்னும் குறள் உணர்த்துவதைக் காணலாம். குடிக்குரிய பண்பு குடிமை எனப்படும்.  எனவே குடியியல் என்பது குடிமக்களின் இயல்பை உணர்த்தும் பாடம் எனவும் குறிப்பிடலாம்.



திருக்குறளில் பொருட்பாலின் முழுமணியாகத் திகழ்வது குடியியல் .  படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு(381) என்பது பொருட்பாலின் தொடக்கக் குறள். இக்குறளுக்குப் பொருள் எழுதும் பரிமேலழகர்’’குடி என்றது அதனை உடைய நாட்டினை’’ என்று பொருள் கூறுகிறார்.  எனவே குடி என்பது நாட்டினையும் குறிக்கிறது.  குடியியல் என்பது நாட்டியல். அதாவது நாட்டின் இயல்பு-தன்மை வரலாறு ஆகியவற்றையும் விளக்குவது எனக் வுறுலாம்.  இதைத்தான் இன்று நம் அரசு தேசியக் கல்வி வாயிலாக மாணவர்களுக்கு வலியுறுத்துகிறது.



இனி அறநெறி என்பதன் பொருளைப் பார்ப்போம் . ஓர் அரசு யானை , குதிரை தேர், காலாள் ஆகிய நான்கு படைகளால் சிறப்புடையதாக இருந்தாலும் அந்த அரசின் வெற்றி அறநெறியைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது புறநானுற்றுத் தமிழர்  கொண்ட கோட்பாடு ஆகும். அழுக்காறு (பொறாமை), அவா(ஆசை) வெகுளி (கோபம்) , இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய அழுக்குகளை அகற்றிய மனத்தூய்மையே அறம் என்பது திருவள்ளுவர் (35) தீட்டிய அறநெறிக்கோட்பாடு.  ‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் ‘‘என்னும் சிலப்பதிகாரக் குறிக்கோள் அறத்திற்குள்ள பேராற்றலை-நீதி, தேவன் ஆகும் தன்மையைச் சுட்டுகிறது. ‘‘அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இது கேள்: மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் கண்டது இல்’’ என்று மணிமேகலை உணவு, உடை உறைவிடம் உயிர்களுக்குத் தருவதே அறம் என விவரிக்கிறது.  எனவே, அறம் எனப்படுவது நீதி. நேர்மை, உண்மை, ஒழுக்கம் ஈகை முதலிய நற்பண்புகள் பலவற்றைக் கொண்டது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் நாட்டுக் குடிமக்களுக்கு அறநெறி என்பது சிறப்பையும் தரும்: செல்வத்தையும் கொடுக்கும். அதனைவிட அவர்களுக்கு ஆக்கம் தருவது எது?



நம் மாணவர்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகவும் நாட்டுப் பற்றுடைய நற்குடிமக்களாகவும் திகழ்வதுடன் நற்பண்புள்ளவர்களாகவும் வளரவேண்டும் என்பதற்காகவே குடியியல் மற்றும் அறநெறிக்கல்விப்பாடம் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.  மேலும் அறநெறிக்கருத்துக்களையும் பண்புகளையும் கற்பிப்பதன் வழி முழுமையான  நடுநிலை நோக்குடைய குடிமக்களைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது குடியியலும் அறநெறிக் கல்வியும் பாடநூல் வரிசையின் நோக்கமாகும்.



விரைந்த மாற்றங்களுடன் கூடிய 21 ஆம் நூற்றாண்டில் தமிழர் கண்ட குடியியல் மற்றும் அறநெறிக் கோட்பாடுகளை மனத்தில் நிறுத்தி நற்குடிமக்களை நாம் உருவாக்குவோமாக!



  1. Thinnappan, SP,  Tamil  Concept of Civics & Moral Education,
                Civics & Moral Education(Tamil ) News Letter, MOE,
                Issue 1 pp 1-2    
     
    திருக்குறளில் ‘‘இன் யாங்’’
    (வாழ்க்கையின் இரு கைகள்)
     
          நம் சிங்கைக் குடியரசின் பெருமதிப்பிற்குரிய பிரதமர் கோசோக்டோங் அவர்கள் அண்மையில் மரின்பேபெரட் தேசியநாள் விழாவில் பேசியபோது ‘‘இன்- யாங்’’ என்னும் சீனத் தத்துவம் ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.  ‘இன்’ என்பது வாழ்க்கையின் மென்மைத் தன்மையையும், ‘யாங்’ என்பது வாழ்க்கையின் வன்மைத் தன்மையையும் உணர்த்துவன என்றும் அவர் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ‘யாங்’ என்பது வாழ்க்கையில் போட்டி மிக்க நிலையில் பொருளியல் வளத்தினைப் பெருக்குவதும்,இடையறாத முயற்சி மேற்கொண்டு செல்வத்தைத் தேடி வெற்றி பெற உழைப்பதும், நாட்டைப் பற்றிப் பேரளவில் சிந்திப்பதும், செயலாற்றுவதும் ஆகும்.  ‘இன்’ என்பதோ மனித உறவுகளைமதித்து நடப்பது,ஒருவர்க்கு ஒருவர் பரிவு காட்டி உதவும் பண்பு, மனித நேயம், சமூகப் பிணைப்பு, கடப்பாடு,பொறுப்புணர்ச்சி, கனிவு, கருணை, இரக்கம் முதலிய நன்னெறிப் பண்புகளை - மக்கட் பண்புகளை உள்ளடக்கியதாகும்.  சுருக்கமாகச் சொல்லப் போனால் முன்னது பொருளாதார நிலை, பின்னது அருளாதார நிலை.  இந்த இரண்டு நிலைகளையம் ஆதாரமாகக் கொண்டு சமன்பட வாழ்வதே இனிய நல்வாழ்வு. ஏற்றமிக்க வாழ்வு. என்று நம் பிரதமர் எடுத்துக் காட்டியுள்ளார்.  இக்கருத்துக்களைத் திருக்குறள்வழிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
     
          திருக்குறள் அறம், பொருள்,இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை - பால்களை - உள்ளடக்கியது. இவற்றுள் அறம் என்பது ‘இன்’உணர்த்தும்  கருத்துக்களை எடுத்துக் கூறுவது.  ‘‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’’ என்று வலியுறுத்தும் திருவள்ளுவர், ‘‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’’ (45) என்றும் கூறுகிறார்.  இவற்றுள் அன்பு என்பது கணவன் மனைவியிடத்தும்,மனைவி கணவனிடத்தும், இருவரும் இணைந்து குழந்தைகள், உற்றார், உறவினர்,விருந்தினர்,சமூகத்தினர்,  நாட்டினர், உலகத்தார், எனும் பலரிடத்தும் காட்டும் பரிவு - பந்தம் - பாசம் - பற்று ஆகும்.  இந்த அன்பதான் வாழ்க்கையின் அடிப்படைப் பண்பு என்று  இந்தக் குறளில் வலியுறுத்தப் படுகின்றது.  இதனை அயலாரிடத்தில் காட்டும் அக்கறை - பரிவு - (caring) என்று கூறலாம். இல்வாழ்க்கையின் பயன் அறம்.  இது அன்புடைமையை முதலாகக் கொண்டு விருந்தோம்பதல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, ஒழுக்கமுடைமை, அடக்கமுடைமை, பொறைyuடைமை,அழுக்காறாமை (பொறாமை இன்மை) ,வெஃகாமை, (பிறர் பொருளை விரும்பாமை) , புறங் கூறாமை,பயனில ்சொல்லாமை, தீவினையெச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ், அருள் முதலிய நல்லியல்புகளை - மக்கட் பண்புகளை வலியுறுத்தும் மாண்புடன் குறளில் விளங்குகிறது.  மேலும் பகுத்துண்டு பல உயிர்களைப் பேணிப் பாதுகாத்து ஓம்பதலே தலையாய அறம் என்றும் குறள் வலியுறுத்துகிறது. (322) தம்மிடம் உள்ள செல்வத்தைத் தம் குழந்தைகள், உற்றார், உறவினர், சமூகம், நாடு, உலகம் சார்ந்தார் ஆகியோருக்குப் பகிர்நது கொடுத்து வாழ்தலே தலையாய அறம்.  இதனைப் பகிர்வு (sharing) என்று  கூறலாம். எனவே பரிவும் பகிர்வும் (caring and sharing) மனித வாழ்க்கைக்கு இருகண்கள் எனத் திருக்குறள் கூறுகிறது.
     
          திருக்குறளிலுள்ள இரண்டாவது பிரிவு பொருட்பால்.  ‘படை, குடி, கூழ்(நிதி), அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறும் கொண்ட அரசு அமைப்பபைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் பேரளவில் பேசுவது. பொருட்பால் .‘‘முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் ’’(616)என்னும் குறளில் இடையறாது  உழைத்து முயல்வதுதான் பொருளாதாரத்தைப் பெருக்கும் வழி என்று திருவள்ளுவர் கூறுகிறார்.  மேலும் பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் , ‘‘பொருள்  அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள்’’(752)  என்றும், ‘‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு’’(753) என்றும் செல்வத்தின் தேவையைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். பகைவரின் செருக்கினை அறுக்கும் ஆயுதம் செல்வமே் என்று கூறிச் ‘‘செய்க பொருளை ’’(759) என்று பொருள் ஈட்டுமாறு நம்மைத் தூண்டுகிறார்.  அறம், இன்பம் அனைத்திற்கும் அடிப்படை பொருளே. என்றும் கூறுகிறார். (754). எனவே பொருட்பால் ‘யாங்’ தத்துவம் உணர்த்தும் கருத்துகளைத் தருவதாகும். 
     
          பொருளும் மக்கட் பண்பும் ஒருவர்க்கு இன்றியமையாதன.  இரண்டும் சமன்பட இருக்குமாறு ஒருவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொருட்பாலின் முடிமணியாக விளங்கும் குடியியலில் உள்ள 13 அதிகாரங்களும் (96-108)  அமைந்துள்ளன.  திருக்குறளில் நூறாவது அதிகாரம் பண்புடைமை.  அதன் பத்தாவது குறள் இதோ.  ‘‘பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் கலந் தீமையால் திரிந்தற்று’’(1000) மக்கட் பண்பு இல்லாதவனிடத்தில் இருக்கும் செல்வம் எப்படிப் பட்டது?என்பதற்கு விடைகூறும் குறள் இது.  நல்ல பாலானது வைக்கப் பட்ட பாத்திரத்தின் தூ’ய்மைக் குறைவால் - தீமையால் - கெட்டுப் போவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.  இந்தப் பாலினால் என்ன பயன்?  இதனை அருந்தினால் உடற்கேடு அல்லவா ஏற்படும்? அப்படித்தான் பண்பற்றவனிடத்தில் இருக்கும் செல்வமும் பயனற்றுப் போய்விடும்.  மேலும் கேட்டை விளைவிக்கும். 
     
          செல்வத்தினை ஆக்கும் கருவி அறிவும் அயரா உழைப்பும் தான்.  எனவேதான் திருக்குறள்‘‘அறிவுடையார் எல்லாம் உடையார் ’’ என்றும், ‘‘அறிவிலார் என்னுடையரேனும் இலர்’’ (430) என்றும் கூறுகிறது.‘‘இத்தகைய அறிவுக் கூர்மை கொண்ட மனிதர்கள் கூட மரம் போன்றவர்கள் தான். எப்போது?மக்கட் பண்பு இல்லாது போனால் ’’ என்கிறது குறள் (997). மற்றவர்களின் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதும் இயல்பு இல்லாது போனால் அறிவு இருந்தும் என்ன பயன் ’’(315)என்று அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவர். பண்புடையவனிடத்தில் இருக்கும் செல்வததின் சிறப்பையும் பயனையும் ஒப்புரவறிதல் என்னும் அதிகாரமும், பண்பற்றவனிடத்தில் இருக்கும் செல்வத்தின் தீமையையும்,கேட்டையும் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரமும் நன்கு பேசுகின்றன.
     
          ‘‘பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை. அதுபோல அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை’’(247) என்று கூறும் வள்ளுவர் அதே சமயத்தில் ‘‘அருட் செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணுமுள’’(241) என்று (பூரியார் - இழிந்தோர்)  என்று கூறி, அன்புத் தாய் பெற்ற அரிய மக்கட் பண்பாகிய - பரிவு பற்றிய -அதாவது அருள் பற்றிய - சிறப்பையும் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.  மேலும் ‘‘அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு’’ என்னும் குறளில் (757) அருள் என்னும் குழந்தை வளரப் பொருள் என்னும் செவிலித் தாயின் அரவணைப்புத் தேவை என்றும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.  அருளாதாரமும் பொருளாதாரமும் அதாவது ‘இன்’ ‘யாங்’ இரண்டுமே வாழ்க்கையின் இரண்டு ஆதாரங்களாக - இருபெருந் தூண்களாக - இரண்டு கைகளாக இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளும் நன்கு எடுத்துரைக்கிறது அல்லவா?
                            (தமிழ்முரசு, சிங்கப்பூர் 26-8-96)
    தமிழில்  சான்றோர்........?
          சான்றோர் என்னும் சொல் தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்புடைய ஒன்றாகும்.  இச் சொல்லுக்கு ஏற்ற ஓர் வேற்றுமொழிச் சொல்லைக் கண்டறிய இயலாதவாறு பொருளும் வரையறையும் இலக்கணமும் தந்து இச்சொல்லைப் போற்றியுள்ள தமிழர்களின் பேரறிவுத் திறன் வியக்கத் தக்க ஒன்றாகும்.
     
          சான்றோர் என்னும் சொல் சால் என்னும் அடிச்சொல்லிலிருந்து தோன்றிய ஒன்றாகும். சாலுதல் என்றால் நிறைதல்  என்று பொருள்.  எனவே சான்றோர் என்றால் நிறைந்தவர்கள் எனப்  பொருள் கொள்ள வேண்டும்.  சால்பு என்னும் சொல்லும் சால் என்பதிலிருந்து தோன்றிய ஒன்றே. இதற்கு நிறைவுடைமை, முழுமை என்று பொருள். சால்புடையவர்களே சான்றோர்.  இது ஆன்றோர் எனத் திரிந்து வருதலும் உண்டு.  இங்கு சான்றோர் என்னும் சொல் முதலில் உள்ள ச் என்னும் எழுத்து கெட்டு விடுகிறது.  இவ்வழக்கு மூலத் திராவிட மொழியிலிருந்து தமிழ் கிளைத்ததெழுந்த போது  இருந்த ஒரு வழக்கு என மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.  எனவே சான்றோர் என்னும் சொல் தமிழின் மூல மொழியாகிய மூலத் திராவிட மொழிக்கே உரிய ஒன்று எனலாம். இதன்வழி இச்சொல்லின் பழமையை உணரலாம்.
     
          தமிழில் இன்று கிடைத்துள்ள பழைய நூலாகிய  தொல்காப்பியத்தில் சான்றோர்  என்னும் சொல் கையாளப் பட்டுள்ளது. (பொருள் - 76) சங்க இலக்கியங்களிலும்  இச் சொல் இடம் பெற்றுள்ளது.  பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூலில் ‘‘சான்றோர் மெய்ம்மறை’’ என்னும் தொடர் வருகின்றது.  (16) புறநானூற்றில் ‘‘ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே, சான்றோன்  ஆக்குதல் தந்தைக்குக் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,நன்னடை (பரிசு) நல்குதல் வேந்தற்குக் கடனே, களிறு( யானை) எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ என்று பொன்முடியார் பாடிய பாட்டில் (312) சான்றோர் என்னும் சொல் இடம்பெறுகின்றது.  இங்கு சான்றோர் என்பதற்கு வீரர் என்னும் பொருளே உள்ளது என விளக்கம் தருவார் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்.  எனவே சான்றோர் என்னும் சொல் தொடக்கத்தில் வீரம் நிறைந்தவர்களையே குறித்தது எனலாம்.  வீரம் என்பது மன உறுதியால் விளைவது. உடலுரத்தால், ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு.  உள்ளத்தில் உறுதியும் உடலுரமும்  மிக்கவர்களே சான்றோர்கள் என ஒரு காலத்தில் அழைக்கப் பட்டனர்.
    கட்டுரை நிறைவு பெறவில்லை
     


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 
  1. திருக்குறளில் ‘ இன் யாங்’
    (வாழ்க்கையின் இரு கைகள்)
    பேராசிரியர் டாக்டர் சுப .திண்ணப்பன்,
    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
    சிம் பல்கலைக் கழகம் சிங்கப்பூர்
      ‘இன் – யங்’ என்பது ஒரு சீனத்தத்துவம். ‘இன்’என்பது வாழ்க்கையின் மென்மைத்தன்மையையும், ’யாங்’,என்பது வாழ்க்கையின் வன்மைத் தன்மையையும் உணர்த்துவன . ‘யாங்’ என்பது வாழ்க்கையில் போட்டிமிக்க நிலையில் பொருளியல் வளத்தினைப் பெருக்குவதும், இடையறாத முயற்சி மேற்கொண்டு செல்வத்தைத் தேடி வெற்றி பெற உழைப்பதும், நாட்டைப் பற்றிப் பேரளவில் சிந்திப்பதும் செயலாற்றுவதும் ஆகும். ’இன்’ என்பதோ மனித உறவுகளை மதித்து நடப்பது, ஒருவர்க்கு ஒருவர் பரிவு காட்டி உதவும் பண்பு,மனிதநேயம், சமூகப் பிணைப்பு, கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி, கனிவு, கருணை, இரக்கம் முதலிய நன்னெறிப் பண்புகளை -மக்கட்பண்புகளை உள்ளடக்கியதாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் முன்னது பொருளாதார நிலை,பின்னது அருளாதார நிலை  இந்த இரண்டு நிலைகளையும் ஆதாரமாகக் கொண்டு -வாழ்க்கையின் இருகைகளாகக் கொண்டு-சமன்பட வாழ்வதே இனிய நல்வாழ்வு-ஏற்றமிக்கவாழ்வு என்பதே இன் – யங்’ உணர்த்தும் சீனத்தத்துவக் கருத்தாகும். இக்கருத்தினைத் திருக்குறள் வழிக்காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
     
          திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை-பால்களை-உள்ளடக்கியது.இவற்றுள் ஆறம் என்பது ‘இன்’ உணர்த்தும் கருத்துகளை எடுத்துக்கூறுவது. ‘அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை’என்று வலியுறுத்தும் திருவள்ளுவர்” அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது”(45) என்றும் கூறுகிறார்.இவற்றுள் அன்பு என்பது கணவன் மனைவியிடத்தும்,மனைவி கணவனிடத்தும், இருவரும் இணைந்து குழந்தைகள் ,உற்றார், உறவினர், விருந்தினர் ,சமூகத்தினர்,நாட்டினர், உலகத்தார் எனப் பலரிடத்தும் காட்டும் பரிவு – பாசம் – பற்று ஆகும். இந்த அன்புதான் வாழ்க்கையின் அடிப்படைப் பண்பு என்று இந்தக் குறளில் வலியுறுத்தப்படுகின்றது.இதனை அயலாரிடத்தில் காட்டும் அக்கறை –பரிவு(caring) என்று கூறலாம். இல்வாழ்க்கையின் பயன் அறம்.இது அன்புடைமையை முதலாகக் கொண்டு விருந்தோம்புதல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, ஒழுக்கமுடைமை, அடக்கமுடைமை, பொறையுடைமை, அழுக்காறாமை (பொறாமை இன்மை)  வெஃகாமை( பிறர் பொருளை விரும்பாமை), புறங்கூறாமை,பயனில சொல்லாமை,தீவினையச்சம்,ஒப்புரவறிதல், ஈகை, புகழ், அருள் முதலிய நல்லியல்புகளை – மக்கட்பண்புகளை வலியுறுத்தும் மாண்புடன் குறளில் விளங்குகிறது. மேலும் பகுத்துண்டு பல உயிர்களைப் பேணிப் பாதுகாத்து ஓம்புதலே தலையாய அறம் என்றும் குறள் வற்புறுத்துகிறது.  தம்மிடம் உள்ள செல்வத்தைத் தம்குழந்தைகள், உற்றார், உறவினர், சமூகம் நாடு உலகம் சார்ந்தார் ஆகியோர்க்குப் பகிர்ந்து கொடுத்து வாழ்தலே தலையாய அறம். இதனைப் பகிர்வு
    (Sharing )என்று கூறலாம்.எனவே பரிவும் பகிர்வும்,[Care and Share] மனித வா,ழ்க்கைக்கு இரு கண்கள் எனத் திருக்குறள் கூறுகிறது.
          திருக்குறளிலுள்ள இரண்டாவது பிரிவு பொருட்பால் படை,குடி,கூழ்(நிதி) ,அமைச்சு,நட்பு,அரண், ஆகிய ஆறும் கொண்ட அரசு அமைப்பை பற்றியும் பேரளவில் பேசுவது பொருட்பால். “முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்”(616) என்னும் குறளில் இடையறாது உழைத்து முயல்வதுதான் பொருளாதாரத்தைப் பெருக்கும் வழி என்று திருவள்ளுவர் கூறுகிறார். மேலும் பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் “ பொருள் அல்லவரைப் பொருளாகக் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் “(752) என்றும் “இல்லாரை எல்லோரும் எள்ளுவர்; செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு”(753) என்றும் செல்வத்தின்  தேவையைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். பகைவரின் செருக்கினை அறுக்கும் ஆயுதம் செல்வமே என்று கூறிச் “ செய்க பொருளை” என்று(759) பொருள் ஈட்டுமாறு நம்மைத் தூண்டுகிறார் அறம் ,இன்பம் அனைத்திற்கும் அடிப்படைப் பொருளே என்றும் கூறுகிறார்(754). எனவே பொருட்பால் ‘யாங் ‘ தத்துவம் உணர்த்தும் கருத்துகளைத் தருவதாகும்.
                பொருளும் மக்கட்பண்பும் ஒருவருக்கு இன்றியமையாதன.இரண்டும் சமன்பட இருக்குமாறு ஒருவன் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொருட்பாலின் முடிமணியாக விளங்கும் குடியியலில் உள்ள 13 அதிகாரங்களும்(96 -108) அமைந்துள்ளன. திருக்குறளில் நூறாவது அதிகாரம் பண்புடைமை அதன் பத்தாவது குறள் இதோ: “ பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று (1000)”  மக்கட் பண்பு இல்லாதவனிடத்தில் இருக்கும் செல்வம் எப்படிப்பட்டது?என்பதற்கு விடைகூறும் குறள் இது. நல்ல பாலானது வைக்கப்பட்ட  பாத்திரத்தின் தூய்மைக் குறைவால் – தீமையால் – கெட்டுப் போவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர். இந்தப் பாலினால் என்ன பயன்? இதனை அருந்தினால் உடற்கேடு அல்லவா ஏற்படும்?. அப்படித்தான் பண்பற்றவனிடத்தில் இருக்கும் செல்வமும் பயனற்றுப் போய்விடும்.மேலும் கேட்டை விளைவிக்கும்
          செல்வத்தினை  ஆக்கும் கருவி அறிவும் அயரா உழைப்பும் தான். எனவேதான் திருக்குறள் “ அறிவுடையார்  எல்லாம் உடையார் “ என்றும்” அறிவிலார் என்னுடையரேனும் இலர்”(430)என்றும் கூறுகிறது. “ இத்தகைய அறிவுக்கூர்மை கொண்ட மனிதர்கள் கூட மரம்போன்றவர்கள் தான். எப்போது?மக்கட் பண்பு இல்லாது போனால்.” என்கிறது குறள்(997). மற்றவர்களின் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதும் இயல்பு இல்லாது போனால் அறிவு இருந்தும் என்ன பயன்?(315)  என்று அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவர்.பண்புடையவனிடத்திருக்கும் செல்வத்தின் சிறப்பையும் பயனையும் ஒப்புரவறிதல் அதிகாரமும், பண்பற்றவனிடத்தில் இருக்கும் செல்வத்தின் தீமையையும் கேட்டையும் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரம் நன்கு பேசுகின்றன.
    “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அதுபோல அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை (247)”
    என்று கூறும் வள்ளுவர் அதேசமயத்தில் ,
          “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம்
    பூரியார் கண்ணு முள” (241)
    என்று (பூரியார், இழிந்தோர்) கூறி அன்புத் தாய் பெற்ற அரிய மக்கட் பண்பாகிய பரிவு பற்றிய – அதாவது அருள் பற்றிய சிறப்பையும் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார். மேலும் அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு “ என்னும்  குறளில்(757) அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாயின் அரவணைப்புத் தேவை என்றும் வலியுறுத்துகிறார் வள்ளுவர். அருளாதாரமும், பொருளாதாரமும் அதாவது ‘இன் – யாங்’ இரண்டுமே வாழ்க்கையின் இரண்டு ஆதாரங்களாக – இரு பெருந்தூண்களாக – இரண்டு கைகளாக இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளும் நன்கு எடுத்துரைக்கிறது அல்லவா?
    ஆஸ்திரேலியா திருக்குறள் மாநாட்டுக் கட்டுரை 2013
     
    வள்ளுவர் நோக்கில் பெற்றோர் கடன்
     
    ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் திருமணமான நிலையில் முறையே கணவனும் மனைவியுமாக மாறித் தத்தம் கடமைகளைச் செய்கின்றனர். கணவனுக்குரிய கடமைகளை ‘இல்வாழ்க்கை’ என்னும் அதிகாரத்திலும் மனைவிக்குரிய மாண்புகளை ‘ வாழ்க்கைத் துணை நலம் ‘ என்னும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆண் , பெண் இருவரும் இணைந்து நல்ல குழந்தைகளைப் பெறுவதன் தேவையை “ மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு”(60) என்னும் குறளில் தோற்றுவாய் செய்கின்றார் திருவள்ளுவர். குழந்தையை பெற்ற நிலையில் கணவன் தந்தையாகிறான் மனைவி தாயாகிறாள்; இருவரும் பெற்றோர் ஆகிறார்கள் அவர்கள் குழந்தைச்செல்வத்தைத் தவிர வேறு எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும் உண்மையான பெற்றோர் பெற்றவர்களாக ஆக முடியாது.
     
    “ படைப்பு பல படைத்துப் பலரோடு உண்ணும்
     உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் , இடைப்படக்
     குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி ,
     இட்டும், தொட்டும் ,கவ்வியும்,துழந்தும்,
     நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே” என்னும்
     பாண்டியன் அறிவுடைநம்பி இயற்றிய புறநானூற்றுப் பாடல் இக் கருத்துக்கு சான்று பகரும். வாழ்க்கை பயன்பட்ட வாழ்க்கையாக – முழுமையான வாழ்க்கையாகத் திகழச் குழந்தைச் செல்வம் இன்றியமையாத ஒன்று. என்பது தமிழ்ச் சமுதாயத்தின் ஆழ்ந்த நம்பிக்கை என்பதை இப் பாடல் பேசுகின்றது. இத்தகைய அரிய செல்வத்தைப் பெற்றவர்கள் ஆகிய பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகளைத்  திருக்குறள் எவ்வாறு விளக்குகின்றது என்பதைப் பற்றிச் சுருக்கமாக இங்கே காண்போம்.
          திருவள்ளுவர் ‘ யாம்’ என்று தம்மை உள்ளடக்கிப் பேசும் குறள்கள் மூன்று. அவற்றுள் ஒன்றாகத் திகழ்வது” பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற” (61) என்பது. மக்களைப் பெற்றால் மட்டும் போதாது? அவர்களை அறிவு மிக்கவர்களாக  - உலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவினை நன்கு பெற்று திகழ்பவர்களாகச்  செய்த நிலையில் தான் மக்கட்பேறு உண்மையில் ஒருவன் பெறுகின்ற பேறுகளில் உயர்ந்த பேறாக – மாண்புடைய செல்வமாக அமையும். மக்களை அறிவுடையவர்களாக ஆக்குவது பெற்றோரின் முதற்கடமை என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது. அறிவுடையார் எல்லாம் உடையார் அன்றோ?(430)
    ‘.தொட்டனைத்து ஊறும் மணற் கேணி; மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு’ எனவே பிள்ளைகளைக் கல்வியில் மேம்படச் செய்வது அவர்கள் அறிவைப் பெருக்குவது ஆகும்
          அறிவு மட்டும் வாழ்க்கைக்குப் போதுமா? அரிய பண்புகளும் வாய்க்கப் பெறவேண்டும் “ அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை”(315)” ‘அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் வெஃகி வெறிய செயின்” (175) என்னும் குறள்கள் அறிவு மட்டுமின்றி நற்பண்புகளும் வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை வலியுறுத்துகின்றன. எனவே பிள்ளைகளைப் பிறரால் பழிக்கப்படாத நற்குணமிக்கவர்களாகப் பேணி வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய  கடமை என்பதை “ எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் “ (62) என்னும் குறள்வழியாக வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
          அறிவு , பணிவு ஆகியவற்றுடன் பிள்ளைகள் நற்செயல் ஆற்றுபவர்களாக அமைய வேண்டும். அப்பொழுது தான் அவர்களைப் பெற்றோர்கள்  தாங்கள் பெற்ற உண்மையான பெருஞ்செல்வமாக இவ்வுலகில் பெற்ற ஏற்றமிக்க உடைமையாக எண்ண முடியும் என்பதை “ தம்பொருள் என்பதம் மக்கள்;அவர்பொருள் தம்தம் வினையான் வரும்”(63) என்ற குறள் வழி திருவள்ளுவர் பேசுகிறார். அறிவு , பண்பு,நன்நடத்தை உடையவர்களாகப் பிள்ளைகளை வளர்க்க வேண்டுவது பெற்றோரின் கடமையாகும். இத்தகைய பிள்ளைகள் வாய்க்கப் பெற்றால் அவர்களே தம் வாழ்வுக்குத் தேவையான அரும்பொருள் என்னும் கருத்தினைப் பெற்றோர்கள் தம் உள்ளத்தில் கொள்ள முடியும்.
          அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் “(64) என்னும் குறள்வழி , பிள்ளைகள் இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் கையாற் பிசைந்த கூழ் கூட அமிழ்தத்தை விட இனியதாகப் பெற்றோர்களுக்கு இருக்கும் என்னும் கருத்தைத் திருவள்ளுவர் கூறுகிறார். இதன் வழி பிள்ளைகளால் பெற்றோர் பெறும் வாய்ச் சுவை இன்பம் புலப்படுகிறது. . இவ்வாறே “மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பத்தைக் கொடுக்கும்” (63) என்றும் அவர்களின் சொற்களைக் கேட்பது குழலினும் யாழினும் (66) இனியதாய்ச் செவிக்கு இன்பம் தரும்(65) என்றும் வள்ளுவர் கூறுகிறார். குழந்தைகளைத் தொடக்கநிலையிலேயே மொழிபேசத் தூண்டும் முயற்சியிலும் செயல்புரியத் தூண்டும் நடவடிக்கையிலும் பெற்றோர் ஈடுபட வேண்டும் என்பதையும் இக்குறள்கள்  மறைபொருளாகக் நமக்குணர்த்துகின்றன.
          “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல் “ (67) என்னும் திருக்குறள் ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிப் பேசுகிறது. தந்தை தன் மக்களைக் கற்றவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் அவர்களினும் சிறந்த கல்வியுடையவர்களாகத் திகழுமாறு செய்ய வேண்டும் “அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்பதற்குத் “ தம் பிள்ளைகள் புகுந்த கல்வித்துறையில் முதன்மைபெற்று விளங்குமாறு செய்வதுதான் தலையாய கடமை என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். அந்தத் துறை அறிஞர்கள் பாராட்டுமாறு அறிவுத்திறமுடையவர்களாக - ஆராய்ச்சி வல்லுநர்களாக உன்னத நிலையுடையவர்களாகத் தம் பிள்ளைகளை ஆக்குவதுதான் தந்தையின் முக்கிய கடமை என்பதை இக்குறள் விளக்குகிறது. இவ்வாறு பிள்ளைகள் அறிவு பெற்று முதன்மைச் சிறப்புடன் விளங்குவது பெற்றோர்க்கு மட்டுமின்றி உலகத்துக்கே பெரும் பயன் தருவதாகும். “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது “ (68) என்னும் குறள் வழிப் பெற்றோர்கள் தம் பிள்ளைகளைத் தங்களை விட அறிவுச் செல்வம் மிக்குடையவர்களாகச் செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் தங்களுக்குப் பயன்படுவதைவிட உலகத்துக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் கூறுகிறார். என்று கருத இடமுண்டு  சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று புறநானூற்றுப் பாடல்  பேசும்.
    தாயின் கடமையையும்  திருவள்ளுவர் தனித்துச் சுட்டுகிறார்.  “ ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் “(69) என்னும் குறள்  தம் மக்கள் சான்றோன் எனப் புகழப்பெரும் நிலையில் அடையும் பூரிப்பினை மகிழ்ச்சியினைப் பற்றிப் பேசுகிறது. எனவே பிள்ளைகளைச் சான்றோர்களாக ஆக்குவது பெற்றோர்கள் கடமை என்றும் அதற்கேற்ற சூழலைப் பெற்றோர்கள் தம் பணியாலும் , செயலாலும் அமைத்துக் கொடுக்கவேண்டும் என்றும் உணரமுடிகிறது. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை அன்பின் எல்லையே தாய் தான். பால் நினைந்தூட்டும் தாய் எனப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இத்தகைய அன்பிற் சிறந்த தாயும் வெறுக்கக் கூடிய செயல் ஒன்று உண்டு? அது என்ன தெரியுமா? தம் பிள்ளைகள் கள்ளுண்டு களித்தல் - போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருத்தல். இந்தச் செயல்களைக் கண்டால் ஈன்ற தாயும் பிள்ளைகளை வெறுப்பாள் என்கிறார் திருவள்ளுவர். ‘ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் அளி’’ என்பது குறள் . பெற்ற தாய் தம் பிள்ளைகளை அயலாராகக் கருதும் சூழ்நிலையும் ஒன்றுண்டு. தம் பிள்ளைகள் அற நெறிக்கு மாறான நிலையில் சென்று வறுமையுடன் இருக்கும் போது தாயாரும் தம் பிளைகளை அயலாராகவே கருதுவர் என்பதை ‘ அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும்” (1047) என்னும் குறள் காட்டுகிறது.
          இவ்வாறு பிள்ளைக்குப் பல்லாற்றானும் உதவிய  பெற்றோர்களுக்குப்  பிள்ளைகள் செய்யவேண்டிய கடமையையும் திருவள்ளுவர் கூறாது விடவில்லை. தந்தைக்கு மகன் செய்யவேண்டிய உதவி என்ன?இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு எத்தகைய தவம் செய்தான் எனக் கண்டோர் வியக்குமாறு கல்விக் கேள்வி அறிவு ஒழுக்கத்தால் உயர்ந்து நிற்க வேண்டும் பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய பெருங்கடன் இதனினும் வேறு என்னவாக இருக்க முடியும் “ ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் “ (656) என்னும் குறள் தொடர் வழி பெற்றோர்களின் பசித்துயரை ஆற்ற வேண்டிய பிள்ளைகளின் கடமை என்றும் அதனை அறநெறி வழியில் செயற்படுத்துதலே தக்கது என்றும் உணர முடிகின்றது.
           இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னர்த் திருவள்ளுவர் மே பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பேசிய கருத்துக்கள் என்றும் பொருந்தும் இயல்புடையன அல்லவா? என்றும் பொருந்தும் இயல்புதானே இலக்கியத்தை வாழவைக்கிறது. அவர் கூறிய கருத்துக்களைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் தம் வாழ்வில் பின் பற்றுவார்களாக! . இந்த இரண்டினையும் விளங்கிக்கொண்டு  பெற்றோர்களும் , பிள்ளைகளும் செயற்பட்டால் இந்த வையகம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
     
    திருவள்ளுவரும் திருமணவாழ்வும்
    டாக்டர் சுப. திண்ணப்பன்
    சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்
    சிம் பல்கலைக் கழகம்சிங்கப்பூர்
     
    தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கிய நன்கொடைகளில் தலையாயது திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஆகும். “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” என்னும் பாரதியின் பாட்டுத் தொடர் இதனைத் தான் வலியுறுத்துகிறது. இத்தகைய திருக்குறளில் வரும் திருமண வாழ்வு பற்றிய சிந்தனைகள் சிலவற்றைத் தொகுத்துரைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
     
    திருக்குறளில் திருமண வாழ்வு என்னும் சொல் இல்லை எனினும் அப்பொருள் படும் இல்வாழ்க்கை (இல்லாளாகிய மனைவியுடன் கூடி வாழும் வாழ்க்கை) என்னும் சொற்றொடர் இடம்பெறுகிறது. இந்தத் தலைப்பில் ஓர் அதிகாரமே உள்ளது. அறத்தை வலியுறுத்தும் வள்ளுவர் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றும், துறவிகள், வறியோர், ஏனையோர் ஆகிய உலகத்துள்ளார் அனைவருக்கும் இல்வாழ்வில் ஈடுபட்டோர்களே உற்றதுணையாக இருப்பதால் அவர்களே உயர்ந்தோர் என்றும் கூறுகிறார்.
     
    இல்வாழ்க்கைக்கு அடுத்த அதிகாரம் வாழ்க்கைத்துணை நலம். இதில் கொழுநன், தற்கொண்டான் என்னும் தொடர்கள் கணவனையும், மனை, இல் என்னும் சொற்கள் மனைவியையும் குறிக்க வருகின்றன. மாண்புடைய நல்ல மனைவி அமைந்து விட்டால் இல்லாதது என ஒன்றில்லை; அவ்வாறு மனைவி அமையாவிட்டால் மற்றது எது இருந்தும் பயனில்லை. இது திருவள்ளுவர் கண்ட இறுதி முடிவாகும். கணவன் காளைபோல்
    பீடு நடை போட்டுத் திகழ நல்ல மனைவி வேண்டும் என்றும் குறள் கூறுகிறது. தற்கொண்டானாகிய கணவனைப் பேணுதல் பெண்ணின் இயல்புகளில் ஒன்று எனவும் குறள் பேசுகிறது. இல்வாழ்க்கை,வாழ்க்கைத்துணை நலம் ஆகிய இரண்டு அதிகாரங்களும் ஆண் பெண் கூடி வாழும் திருமண வாழ்க்கையின் பெருமையை வலியுறுத்துகின்றன.
     
    இல்லற வாழ்க்கையின் பண்பு அன்பு எனத் திருக்குறள் கூறுகிறது. தனித்து வாழும் ஆணோ பெண்ணோ திருமணத்தின் வாயிலாகக் குடும்பத் தலைவன் அல்லது தலைவி ஆகின்றனர். தனித்துத் தன்மீது இருந்த அன்பு கணவன் மனைவி என்னும் நிலையில் சிறிது விரிவு பெறுகிறது. பிறகு குழந்தைகள் பிறந்தபின்னர் அவர்கள் இருவரின் அன்பும் குழந்தைகளிடம் செல்கிறது. இவ்வாறு அன்பின் பரிணாமம் உறவினர்,உற்றார்,ஊரார், விருந்தினர், சமுகத்தினர், நாட்டினர், உலக மக்கள் எனப் படிப்படியாக வளர்ந்து விரிந்து மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதும் அருளாக மாறுகின்றது.இதனைத் தான் அருள் என்னும் அன்புத்தாய் பெற்ற குழந்தை  என அழைக்கிறது குறள். அன்பு அருளாக மாறத் திருமண வாழ்வு பெருந்துணை ஆகிறது.
     
    இல்வாழ்க்கையின் பயன் அறம் ஆகும். இங்கு அறம் என்பது பகுத்துண்ணலும், பல்லுயிர் ஓம்புதலும்,அறவோர்க்கு அளித்தலும், விருந்தோம்பலும், உலகத்தார்க்கு ஊருணி போலப் பயன்பட வாழ்தலும் ஆகும்.” தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு” என்னும் காமத்துப் பால் குறளும் இதனை வலியுறுத்தும். எனவே திருமணத்தை வெறும் வணிக நிலை ஒப்பந்தம் எனக் கருதாமல் வாழ்வியலின் தேவை என வள்ளுவர் கருதுகிறார் எனலாம். “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்று திருமண வாழ்வின் நோக்கத்தைக் திருக்குறள் கூறும்.
     
     
     
    திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடலும் உயிரும் போல இணைந்திருக்க வேண்டும் எனக் குறள் அறிவுரை கூறும். உடலின்றி உயிர் உலவினால் பேய். உயிரின்றி உடல் மட்டும் இருந்தால் பிணம். இரண்டும் இணைந்தால்தான் இயக்கம். எனவே குடும்ப வாழ்வின் இயக்கத்தை இந்த உவமை நன்கு எடுத்துக் காட்டும்.மனித நிலையில் உடலும் உயிரும் தனித்து இருக்கும்போது அ: றிணையாக அமையும். இணைந்த நிலையில் உயதிணையாகக் கருதப்படுவதையும் உற்று நோக்குக.
     
    ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாதிருப்பது பயனற்றது என்பதைத் திருவள்ளுவர் ஓர் உவமை வாயிலாக விளக்குகிறார். “அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று”அழகிய பெண் ஒருத்தி திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்து முதுமை அடைவதை வறுமையால் துன்புறுவோர்க்கு வாரி வழங்காத செல்வம் பயனற்றுப் போவதற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் வள்ளுவர். இதன்வாயிலாகத் திருவள்ளுவருக்கு ஓர் ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் தனித்து வாழ்வது உடன்பாடில்லை என உணரலாம்.
     
    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என வரும் குறளும் மக்கட்பேறு என்னும் அதிகாரமும் குடும்ப வாழ்வின் நோக்கம் நன்மக்களைப் பெற்று வளர்ப்பதே என்பதை உணர்த்தும்.
     
    திருக்குறளின் இறுதிப் பகுதியாகிய காமத்துப் பால் மக்களுக்குக் காதலின்பம் துய்ப்பதன் தேவையை நன்கு எடுத்தியம்பும். இது பிறன் மனை நோக்காத பேராண்மையாலும், பிறள் துணை நோக்காத பெரும் பெண்மையாலும். பரத்தையரை நாடாத தன்மையாலும் தான் வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவர் திருவள்ளுவர்.
     
    திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமயச் சான்றோர்கள் பலரும் உலக வாழ்வு மறுப்புக் கொள்கையையே- துறவின் சிறப்பையே வலியுறுத்தியுள்ளனர். அதுதான் மறுமைப் பயனையும் வீட்டின்பத்தையும் (முத்திப்பேற்றினையும்) தரும் எனக் கருதினர். ஆனால் திருவள்ளுவரோ உலக வாழ்க்கையை உடன்பாட்டு நிலையில் பேசி இல்லறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார். மேலும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வ நிலை எய்த முடியும் என்றும் கூறுகிறார்.
     
     திருமணத்தின் தேவைகள் யாவை?  1 அன்பு விரிந்து அருளாக மாறுவதற்கு 2 பலருக்கும் பயன்படுமாறு அறம்செய்வதற்கு 3 மக்கட்பேற்றிற்கு 4 காதலின்பம் துய்த்தற்கு 5 வானுறையும் தெய்வ நிலை எய்தற்கு எனத் திருவள்ளுவர் கருதியதாகக் கொள்ளலாம்.
     
    வாழ்க வள்ளுவம். சிங்கப்பூர், குவின்ஸ்வே முனீஸ்வரன் கோயில், 12 ஏப்ரல் 2008 பக 28-29
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard