New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்


Guru

Status: Online
Posts: 24709
Date:
பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்
Permalink  
 


பாஞ்சாலியின் புலம்பல்

 

draupadi-birthநான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி;  துருபத மன்னனின் மகளான திரௌபதி;  கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.

பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே!

நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை? 

ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை?  ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?

பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம் கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவி எறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!

ஆனால், சிலபோது மட்டும் — புலி பசுவைத் தின்னும், ஆனால் பசு ஒருபோது புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே!

பெண்ணடிமை செய்தான் இராமன் என்று அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன் மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்?  பிறன் மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா?  சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடு நலம் பெறுவது எப்படி?

ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?

ஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எரிந்து விடுகிறீர்கள்?

ஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப் பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல் போனது ஏனோ?

மகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?

எவருக்கும் தன் பக்கத்து வாதத்தை எடுத்துச் சொல்ல அனுமதி உண்டு.  என்னைப் பொருத்தமட்டில் என் வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ?

என் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன்.!  என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…

…எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு.  தான் அவமதித்தனால் தன்னை அவமதித்த  துரோணாச்சாரியாரை வஞ்சம் தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு!

வஞ்சம் தீர்க்கும் வனிதையாகத்தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன்!  வளர்க்கப்பட்டேன்! ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மனமுடிக்கவேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே!  தீக் கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான்!  இதில் பாசமேது?  அன்பேது? என் தந்தை தன் பழியைத் தீர்க்க தீக் கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவா நான்!

“அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள் நீ!”  என்று சொல்லிச் சொல்லி வளர்த்து விட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன் பொறியின் (மச்ச யந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்கு அவர் நல்கிய பெண்ணுரிமையா?  இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு!

என்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்து விட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்று என்று நினைத்தாரா என் தந்தை? இல்லையே!

“அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன் பொறியை அடிக்க இயலாது.  எனவே, நீ கவலை கொள்ளவேண்டாம், என் கண்ணே!” என்று என்னிடம் பகர்ந்தார்.  அந்தப் பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

“தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்க மாட்டேன்!  நீ இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று என் உரிமையைத்தானே நான் நிலைநாட்ட முயன்றேன்!  வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும்?  இதைக் காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்?

கடைசியில் நான் மணக்க விரும்பிய அருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றி கொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன்.  அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளான அருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.

The_Swayamvara_of_Panchala's_princess,_Draupadi

“அந்தணா!  உன் வீரத்திற்கு நான் தலை சாய்க்கிறேன்!” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக் கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான்.  இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.

அவன், “அன்னையே, பிச்சை பெற்று வந்திருக்கிறோம்!” என்று பூடகமாகப் பேசியது என் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது.

“பகிர்த்து கொள்ளுங்கள், பாலகர்களே!” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி – பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.

பகீரென்றது என் நெஞ்சம். ஒரு உறையில் ஐந்து வாள்களா, இது என்ன நீதி என்று துடித்தேன்.  தவறை உணர்ந்த தாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.

தாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே!  அருச்சுனனே வென்றான், இக்கன்னியை!  அவனே மணக்கட்டும்!”  என்றார்

அதைக்கேட்ட நான் கொண்ட என் மன நிம்மதி, மறுகணமே கலைந்தது.

“தாய் சொல்லைத் தட்டலாமா? பாவம் வந்து சேராதா?”. என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன்.  பாவம் வந்து சேர்த்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம் என்று இயம்பிய தருமரும் தலை அசைக்க நேர்ந்தது.

தாயா, தாரமா என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய் சொல்லைத் தட்டாதேஎன்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது.!

துடித்தேன் நான்! அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.

“வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காத ஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன்.  பாண்டவர்களே!  உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என் மகளை மணந்து கொள்ளுங்கள்! ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மணவாழ்க்கைப் படலாம்.  ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா?” என்று பொங்கி எழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவு செய்யட்டும்!” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.

அப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.

அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டான் என் அண்ணன்.

“மாமுனிவரே!  நீங்களே சொல்லுங்கள்!  அண்ணனின் மனைவி அன்னையாவாள்!  தம்பியின் மனைவி தனது மகளுக்கு இணையாவாள்.  அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா?  நெறிமுறைகளுக்கு உகந்ததா?  வேதங்களைத் தொகுத்தவரே! நீரே இதற்கு விடை அறிவீர்!” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.

முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.

“இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒரு கணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறி அறிந்த கணவன் வேண்டும், காற்றைப் போலப் வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித் தனியாக வேண்டினாள்.

draupadi-with-pandavas“வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாக அளிக்கும் முக்கண்ணனும், ‘பெண்ணே, நீ வேண்டியபடி ஐந்து கணவர்களை அளித்தேன்!’ என்று அருளினான்.

“இறைவா!  இது என்ன சோதனை?  நான் ஒரு கணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே!  இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா?’ என்று கதறி அழுதாள்.

“இறைவனும், ‘பெண்ணே!  உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர்!  உனது பிறப்பும் பூவுலக மாதர் மூலம் நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும்.  ஐந்து தேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய்!  பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய்!  உலகப் பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப் படுத்தாது!’ என்று வரமளித்து அருளினான்.

“எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதி விலக்கேயாகும்! வருந்தற்க!  நியதிக்கு அப்பாற்பட்ட இத் திருமணம் நடக்கட்டும்.   ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலக நெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையை அடைவாள்!” என்று அறிவுரை நல்கினார்.

இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.  ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான் செய்தது புதுமை அல்ல. எனக்குமுன் இப்படி பல கணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது.  இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன.  வேதமுதல்வனே விதித்தது எப்படி முறை அற்றது ஆகும்?

இது மட்டும்தானா நான் அனுபவித்த இக்கட்டான நிலை?  எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்து சேர்ந்தது!

வஞ்சக சகுனியிடம் – சூதாட்டத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என் முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம் வைத்து இழந்தார் – தன்னை இழந்தபின்னர் தாரத்தை பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான் அறியாது போனது ஏனோ?

இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்!

“எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்கு வரச்சொல்லு!” என்று தனது தேரோட்டியை அனுப்பினான் அந்தச் சண்டாளன்.

மாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள் பாஞ்சாலி.  இந்நிலையில் இருக்கும் அவளை பலர் வீற்றிருக்கும் இக்கொலு மனடபத்திற்குக் கொணர்வது முறையில்லை!” என்று என்னவர் எடுத்துச் சொன்னதும் எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.

எனக்குச் சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை!” என்று மறுமொழி அனுப்பினேன்.

“உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது!” என்று சொல்லி அனுப்பினான்.

“தான் தோற்றபிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை!” என்ட்று மறுத்தேன் நான்.

“இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள்.  அவளைப் பற்றி இழுத்து வா!” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.

அவன் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப் பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப் பாவி துச்சாதனன்.  அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள்? இந்த முறையற்ற செயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்?!

“மாதவிடாய் காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே!  சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா?  உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை,  இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!! “[1]என்று அழுதேன், அரற்றினேன்.

அந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என் பக்கம் பேசவில்லையே, வாய் மூடி அமைதிதானே காத்தார்கள்!

“ஓ, துரோணரும்பீஷ்மரும்விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?”[2] என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டுவிரலைக்கூட அசைத்தார்களா?

“நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது?” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்!  கடைசிவரை ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே![3]

நீங்களும் அந்த அவையினரைப்போலத்தானே அமைதி காக்கிறீர்கள்!  கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர் முன்னர் அவமானப் படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்!

தடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பல் என்ற பழ்மொழிப்படித்தானே நான் நண்டந்து கொண்டேன்!

என்னைத் “தாசியே!” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒரு சொல்கூட சொல்லத் தயங்குகிறீர்கள்?

ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப் படுத்த முடியுமோ, அப்படி அவமானப் படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா? இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?

அச்சபையில் எனக்குப் பரிந்து பேசிய இருவர்கள் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான. சத்திரிய மனைவி அல்லது வேறோருத்திக்கும், திருதராட்டிரனுக்கும் பிறந்த விகர்ணனும்தானே!

“சகாதேவா, நன்நெறியற்ற இச் செயலைச் செய்த அண்ணனின் கரத்தை எரிக்கிறேன்!” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்! உங்களால் போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே!

‘சூதர் மனைகளிலே — அண்ண!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே — அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.     69
‘ஏது கருதிவைத்தாய்? — அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை — அன்பே
வாய்ந்த வடிவழகை.     70

‘அவன் சுடர்மகளை, — அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; — அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.     72

‘துருபதன் மகளைத் — திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, —
இருபகடை யென்றாய், — ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!     76
‘இதுபொறுப்ப தில்லை, — தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் — அண்ணன்
கையை எரித்திடுவோம்.’     77

அதுமட்டுமா?  துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்!

“மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள்.  நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம்.. பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு?

“எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும்,கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை? இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப் பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்.”[4] என்று எடுத்துரைத்தானே விகர்ணன்!

அப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லிய போதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறு அவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது, பெருந்தகையாளர்களான நீங்கள் அறியாததா!

“பாஞ்சாலி ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா!  ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர்  இருந்தபோதிலும், ,இந்தப் பாஞ்சாலி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால்,  ், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல் அல்ல.[5]“ என்றல்லவா இழிந்துரைத்தான்!  அவன் கூறிய சொற்களைக்கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

draupadi

பொன்னைப் புடம் போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான்!  தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்!

அந்த நெருப்பில் பிறந்தவள் நான்!  நான் நெருப்பானவள்!  என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா?  எந்த மாசையும் எரிப்பது தீ!  அத்தீயின் வடிவானவள் நான்!  என்னிடம் மாசு இருக்கமுடியுமா?  கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒரு பகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என் கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ?

அந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழி தீர்க்க அவ்வாறு கூறாதிருந்தால், என் துகில் அவையோர் முன் உறியப் பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்க மாட்டேன்.  துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்க மாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்க மாட்டான்.

பாரதப் போரே நிகழ்ந்திருக்காது!

ஒரு பெண்ணின் — மாதவிடாய்க்காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒரு பெண்ணின்  — ஆடையைக் களைந்து, அவளது அவலநிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ளாட வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்கவேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை –- பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்?

என்மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம்.  ஒரு பெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரைக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில் அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடி பிடிப்பீர்களா, அல்லது   அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்!

தீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலை தீயவன் துச்சாதனன் உறிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன் போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்!

தனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்டற அவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

“அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும்.  மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவர் ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவரைச் சாரும்.”

எக்காலத்திற்கும் ஒரே நெறி, ஒரே நியாயம், ஒரே அளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள்!  இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்த பட்சம், என்னைக் கொடுமைப் படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…

இதுவரை பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி!

பாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமாட்டீர்களா?

 

சான்றுகள்: 


           [1]  மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[2]  மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[3]  பாஞ்சாலியின் இக்கேள்விக்குக் கடைசிவரை தருமர் விடை அளிக்கவில்லை.  குனிந்த தலை நிமிராமலேதான் இருந்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.

[4]  மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[5]  மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard