பகுதி ஒன்று
சிலப்பதிகாரம் எனும் பிரதி ஒற்றைப் பொருண்மை கொண்டதன்று. அது கண்ணகி தொன்மம் – இளங்கோவடிகளின் அரசியல் நிலைப்பாடு – காப்பியநிலை – எனப் பன்முகப்பட்டது. இம்மூன்றையும் ஒற்றைப் பொருண்மை உடையனவாகக் கருதும்போது பல முட்டுப்பாடுகள் தோன்றக் கூடும். புராதன தாய்ச்சமூக மரபிலிருந்து தோன்றி வழங்கி வந்த கண்ணகி தொன்மத்தை அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் (கவனித்தல் வேண்டும் அவர் சமயத் துறவி அல்லர்) பேரரசு உருவாக்கம் என்னும் கருத்தியலின் அடிப்படையில் சிலப்பதிகாரம் எனும் காப்பியமாக உருவாக்குகின்றார். பேரரசு உருவாக்கத்தின் இலக்கிய ஆக்கமாகவும் சிலப்பதிகாரத்தைக் கருதுதல் வேண்டும். எனவேதான் கண்ணகி தெய்வமாகிய பின்னரும் சிலப்பதிகாரத்தின் கதை நீட்சி பெறுகின்றது. (விரிவிற்குப் பார்க்க: சிலம்பு நா. செல்வராசு.2006) பன்முகமாக நிலைகொண்ட இனக்குழு அரச மரபுகளை ஒற்றை நிலையிலான பேரரசு அமைப்பிற்குள் கொண்டுவரும் சமூக வளர்நிலையில் சிலப்பதிகாரம் அவ்வளர்நிலையை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. இளங்கோவின் அரசியல் துறவறமும் இந்த நியாயப்படுத்துவதன் கூறாகக் காணுதல் வேண்டும். இவ்வளர்நிலை தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுபாவாக இழையோடுவதை உணர முடியும். குடும்பம், அரசு, சமயம் எனும் இச்சமூக நிறுவனங்களும் பன்மை நிலையிலிருந்து ஒற்றைப்பொருண்மை நிலை நோக்கி நகரத் தொடங்கின. ஒருகணவ மணமுறைக் குடும்பம் அல்லது பெருங்குடும்பம், பேரரசு, பெருஞ்சமயம் என்னும் சொல்லாடல்களாக அவை வடிவெடுத்தன. இவற்றை உள்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் தம் அரசியலை நிகழ்த்தத் தொடங்கியது. இந்த அரசியல் எனும் நாணயத்தின் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் எனும் கருத்தியலாக வடிவெடுத்தது. இதுபற்றிச் சிறிது விளக்கமாக அறியமுடியும்.
கண்ணகி தொன்மம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு உரைத்தல் இயலாது. ஆயின் அது சிலப்பதிகாரமாக ஆக்கம் பெற்றபோது இளங்கோவடிகள், சாத்தனார், செங்குட்டுவன் எனும் வரலாற்றுப் பாத்திரங்களின் சமகாலத்துத் தன்மையை அடைந்தது. சாத்தனார், கண்ணகி கதை நடந்த காலத்தில் அதாவது மதுரை பற்றி எரிந்தபோது அவ்விடத்தில் இருந்தமையையும் கண்ணகி வரலாற்றையும் இளங்கோ வடிகளிடம் கூற அவர் சிலப்பதிகாரத்தை எழுதினார் எனப் பதிகம் உரைக்கின்றது.
இன்னுமொரு கருத்துச் சங்க காலத்திலேயே கண்ணகி தொன்மம் அறியப்பட்டிருந்தது என்பதாகும். நற்றிணை கூறும் திருமாவுண்ணி கதையும் பேகன் கண்ணகி கதையும் இதற்குச் சான்றுகளாகும். திருமாவுண்ணி, கண்ணகி அல்லள் என்பதும் ஒருமுலை அறுத்த செயல் ஒன்றே ஒற்றுமையுடன் காணப்படுகின்றது என்பதும் இருவரும் வேறுவேறானவர் என்பதும் அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன. அதேபோல் பேகன் கோவலன் அல்லன் என்பதும் கண்ணகி எனும் பெயர் மட்டுமே பேகன் மனைவிக்கும் சிலப்பதிகார நாயகிக்கும் ஒன்றாக உள்ளது என்பதும் இருவரும் வேறுவேறானவர் என்பதும் அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன (கூடுதல் விவரங்களுக்கு: சிலம்பு நா. செல்வராசு.2013). முன்பே சொன்னது போலக் கண்ணகி தொன்மம் தமிழ்நாட்டின் புராதன தாய்ச் சமூக அமைப்பில் உருவான ஒன்றாகும். இதனைப் பின்வருமாறு உணரமுடியும்.
புராதன தாய்ச் சமூக மரபுகள் பற்றி அறிவதற்குத் தமிழில் சான்றுகள் நிரம்ப இல்லை. ஒன்றிரண்டு கூறுகளை அடிப்படையாக வைத்து மீட்டுருவாக்கம் செய்யும் நிலையே தொடர்கின்றது. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் ஆற்றல் நிலையை மூன்றாகப் பிரிக்க முடியும். அவை, கன்னி ஆற்றல், அன்னை ஆற்றல், அவ்வை ஆற்றல் அல்லது முதுபெண்டிர் ஆற்றல் என்று அது வகையினைப் பெறும். இவற்றின் ஒட்டுமொத்தக் குறியீடாக விளங்குவது ‘கொற்றவை மரபு’ ஆகும். கொற்றவை மரபு அல்லது வழிபாடு சங்க காலத்தில் முற்றும் அழிந்து விட்ட நிலையை அறிய முடிகின்றது. பெயர் அளவில் ஓரிரண்டு சான்றுகள் உண்டு. சிலப்பதிகார வேட்டுவவரியில் கொற்றவை வழிபாடு புராதன வழிபாடாகவும் மேனிலையாக்கம் பெற்ற வழிபாடாகவும் வெளிப்படக் காணலாம். பொதுநிலையில் தாய்த்தெய்வ ஆற்றல்களாகப் பின்வருவனவற்றைச் சுட்ட முடியும்.
- இயற்கையை ஏவல் கொள்ளுதல்: நெருப்பு, மழை, நீர், காற்று முதலியவற்றை ஏவல் கொள்ளும் ஆற்றல். மழையைப் பெய்வித்தல், நிறுத்துதல், தீயை ஏவி அழித்தல்.
- அணங்காற்றல்: அணங்கு எனும் சக்தி உடைய தெய்வமாக இருத்தல். அணங்கு உறையும் உடலைக் கொண்டு இயங்குதல். இந்த அணங்கு மீவியல் சக்தி உடையதாக நம்பப்பெறுதல்.
- காத்தல், அழித்தல்: இனத்தைக் காத்தல், பகைவர், இயற்கை ஆகியவற்றிலிருந்து தம் குடியினரைக் காத்தல், பகைவரை அழித்தல்.
- வருவது உரைத்தல்: எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் சக்தி உடையவராகத் திகழ்தல்.
- குருதி பலி, மனிதப் பலி, பிணம் தின்னுதல் மூலம் தம் ஆற்றலை உயிர்ப்புப் பெறச் செய்தல், மிகுதிப்படுத்திக்கொள்ளுதல்.
- வளமை, செழுமை: தம் இனத்தின் வற்றாத வளமைக்கும் செழுமைக்கும், இளமைக்கும் குறியீடாகத் திகழ்தல், வறட்சியைப் போக்குதல்.
இவ்வாறான தாய்த்தெய்வ மரபிலிருந்தே கண்ணகி தொன்மம் உருப் பெற்றிருக்க வேண்டும். இயற்கையை ஏவல் கொள்ளுதல், முதலிய பண்புகள் யாவும் கண்ணகியிடம் அமைந்து கிடந்தன. இவற்றுள் மழையாற்றல் என்பது சமூக மாற்றத்திற்கு ஏற்பக் கணவனோடு இணைக்கப் பெற்றது. அணங்கு உறைந்த முலை எதிரியை அழித்துள்ளது. முலையாற்றல் எதிரியை அழிக்கும் என்பது தாய்ச் சமூக மரபுசார் நம்பிக்கை ஆகும். குஜராத்தில் உள்ள பாட், சாரன் பழங்குடிப்பெண்கள் இவ்வாறு எதிரியை அழிக்க முலையை அறுத்துப் பின்னர்ப் ‘பகுச்சாரா’ எனும் பெண் தெய்வமாகி உள்ளனர் (விரிவிற்குப் பார்க்க: பக்தவத்சல பாரதி. 2013 & சிலம்பு நா. செல்வராசு. 2013). இவ்வாறு புராதன தமிழ்ச்சமூகத்தின் பெண் தெய்வமாகக் கண்ணகி தொன்மம் வழக்குப் பெற்றிருத்தல் வேண்டும். இத்தொன்மத்தையே இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாகப் படைத்தளித்துள்ளார். இளங்கோவடிகள் கண்ணகி தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு காப்பியத்தைப் படைத்தமைக்குரிய காரணங்களும் ஆராயத்தக்கவை.
பெருங்குடும்பம், பெருஞ்சமயம், பேரரசு உருவாக்கத்தின் அடிப்படையைக் கொண்டு சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதாக முன்னர்க் கோடிட்டுக் காட்டப்பட்டது. பேரரசு உருவாக்கம் என்பது வெறும் அரசுகளின் குடிகளின் குலங்களின் இணைப்பாக மட்டுமே நிகழ்ந்து விடாது. ஒட்டுமொத்த பண்பாட்டு, சமய, பொருளாதார ஒன்றிணைப்பாகவும் அது நிகழ்தல் வேண்டும், அவ்வாறே அது நிகழ்ந்தது. பேரரசு அமைப்பில் அனைவருக்குமான அரசன் அல்லது பேரரசன், அனைவருக்குமான கடவுள் அல்லது ஏக கடவுள், அனைவருக்குமான பொதுப் பண்பாடு, பொது மொழி, பொது எல்லைக் கட்டமைந்த நில அமைப்பு ஆகியனவும் உடன் நிகழ்வாக நடந்தேறின. இவற்றின் ஒட்டுமொத்த இலக்கிய வடிவமாகச் சிலப்பதிகாரமும் உருவாக்கப்பட்டது.
மூவேந்தருள் தலைசான்றவனாக இமயம் வென்றவனாகச் சேரன் முன்னிறுத்தப்பட்டான். இவன் தமிழ் மன்னர்களையும் வடமன்னர்களையும் வென்று பேரரசனாகக் காட்சி தருகின்றான். இம்மன்னன் முன்னிறுத்தும் சமயமாகக் கண்ணகி சமயம் காட்சி தருகின்றது. கண்ணகி வழிபாடு உச்சம் பெற்ற காலத்தில் பல்வேறு தெய்வங்கள் பெருஞ்சமய/ஏகசமய நிலையை நோக்கித் தமிழகத்தில் நகரத் தொடங்கி விட்டன. சிவன், மாயோன் வழிபாடு வலுப்பெறத் தொடங்கியது. கொற்றவை மரபு மேனிலையாக்கம் பெற்று நகர்ச்சியைப் பெற்றது. முருக வழிபாடும் ஸ்கந்த, சுப்பிரமணிய, காலீத்;திகேய மரபுகளை உள்வாங்கிப் பெருஞ்சமய நிலையை நோக்கி நகரத் தொடங்கியது. இவற்றோடு கண்ணகி வழிபாடும் பத்தினி வழிபாடாக அல்லது தாய்த்தெய்வ வழிபாடாக நகரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவ்வழிபாடு பரவத் தொடங்கியது.
கண்ணகி தொன்மம் சிலப்பதிகாரமாக மலர்ச்சியுற்றபோது வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட நிலப் பகுதியைத் தமிழ்நாடாக மொழி வழியாகக் கட்டமைத்தது. (இதற்குப் பின்னரே தொல்காப்பியப் பாயிரம் உருவாயிருக்க வேண்டும் என்பதும் பாயிரம் பதிகம் இவற்றின் தோற்றம் பல்லவர் கால இறுதிப் பகுதிக்கு உரியது என்றும் கூறப்பெற்ற கருத்தியலை இங்கே நினைவு கூர்க- விரிவிற்குப் பார்க்கவும்: க.ப. அறவாணன். 1972; சிதம்பர ரகுநாதன் 1984). சிலப்பதிகாரம் கட்டமைத்த மொழிவழித் தேசியக் கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
- நான்கு எல்லைக் கட்டமைப்பு.
- மொழி வழி மாநிலம்.
- பன்முக இனங்களை ஒன்றிணைத்தது.
- பன்முகப் பண்பாட்டு மரபுகளை, கலைகள் முதலியவற்றைத் தமிழ்த் தேசிய மரபுகளாகக் கட்டமைத்தது.
- பன்முகச் சமய மரபுகள் கண்ணகி வழிபாட்டை ஏற்றது.
- தமிழ்த் தேசிய மரபின் தொன்மங்களைப் பதிவு செய்தது. குறிப்பாகத் தமிழ் மன்னர் குடிக்குரிய தொன்மங்களைப் பதிவு செய்தமை.
ஆகத் தமிழ்த் தேசியத்திற்குரிய மொழி, அரசு, சமயம், பண்பாடு, கலைகள், வணிகம், வரலாறு முதலியவற்றைக் கட்டமைக்கும் காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவானது. இந்த வகையில் தமிழினத்தின் தலைசிறந்த அடையாளங்களுள் ஒன்றாகவும் அது திகழ்ந்தது. தமிழ்த்தேசியத்தின் முதல் இலக்கிய வடிவமாகச் சிலப்பதிகாரத்தைக் கொள்ளுதல் வேண்டும்.
தமிழினத்தைத் தமிழகம் எனும் பெயரில் தமிழ் மரபுசார் கூறுகள் விளங்கச் சிலப்பதிகாரம் உருவானபிறகு அது தமிழரின் அடையாளமாக மாறத் தொடங்கியது. அல்லது தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக மாறத் தொடங்கியது.
இந்நிலையில் இந்த அடையாளத்தை வீழ்த்தும் அழிக்கும் நுண் அரசியல்சார் நிகழ்வுகளும் தமிழகத்தில் நிகழ்ந்தேறின. சிலப்பதிகாரக் காலத்திலேயே பல்வேறு சமயங்கள் பெருஞ்சமய நிலையை நோக்கி நகரத் தொடங்கின என்பது முன்னரே கோடிட்டுக் காட்டப்பட்டது. சிவன், மாயோன், கொற்றவை, முருகன் எனும் வழிபாட்டு நிலைகளோடு அன்று வலுவூன்றி நின்ற சமண பௌத்தமும் கணக்கில் கொள்ளப்பெறுதல் வேண்டும். பெருஞ்சமய நகர்தல் உச்சநிலையை அடைந்த போது அனைத்துச் சமயங்களையும் வீழ்த்திச் சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக மாறின. இது பல்லவர் காலத்து நிகழ்வாகும். இவ்வாறான பெருஞ்சமய உருவாக்கத்தில் கொற்றவை மரபும் முருக மரபும் சைவத்தில் இணைந்தன. கண்ணகி வழிபாடு மறையத் தொடங்கியது. பத்தினி வழிபாடு எனும் நிலையைத் திரௌபதியம்மன் வழிபாடு உச்சம் பெற்று வீழ்த்தியது. திரௌபதியம்மன் வழிபாடு கால்கொண்ட பின்பு தமிழகத்தில் கண்ணகி வழிபாடு வழக்கு ஒழிந்தது அல்லது மாரி வழிபாடாக மாற்றமுறத் தொடங்கியது. இதனால் கண்ணகி வழிபாடு உருவமற்றுப் போனது. இந்நிலைக்குக் கண்ணகி ஒரு மானுடப் பெண்ணாக விளங்கியமையும் ஒரு காரணம் ஆகும்.
கண்ணகி தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட சிலப்பதிகாரம் எனும் பிரதியும் இந்நிலைக்கு ஆளானது. சிலப்பதிகாரம் காப்பிய மரபிற்கு உட்பட்டு ஆக்கம் பெறவில்லை எனவும் அது காப்பியம் ஆகாது எனவும் எடுத்துரைக்கப்பட்டது. தண்டியலங்காரம் கூறும் வடமொழி காவிய மரபிற்கு மாறுபட்டுச் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டுள்ளது என எடுத்துக் கூறப்பட்டது. மாறாகச் சிலப்பதிகாரத்திலிருந்து தமிழ்க் கவிதை மரபை எடுத்து மொழியும் நிலை இல்லாமல் போனது. இது வடமொழியானது பெரும்மொழியாக வழக்குப் பெற்ற சோழர் காலத்தில் உச்சம் பெற்றது. ஏனைய இலக்கண இலக்கியங்கள் போல அல்லாமல் அடியார்க்கு நல்லார், பழைய உரைக்காரர் என இரு உரைகளே சிலப்பதிகாரத்திற்கு எழுதப்பெற்றதையும் இத்தகு ஒதுக்கத்தின் பின்புலத்தில் பார்த்தல் வேண்டும்.
சிலப்பதிகாரத்தின் இன்னுமொரு வீழ்ச்சி சமயப் பார்வையில் ஏற்பட்டது. சமணபௌத்த சமயங்களுக்கும் வைதீக சமயங்களுக்குமான போட்டியும் மோதல்களும் கலவரங்களும் காலங் காலமாகத் தமிழ் மண்ணில் நிகழ்ந்துள்ளன. சைவ, வைணவ சமயங்கள் சமணத்தையும் பௌத்தத்தையும் வீழ்த்துவதில் வெற்றிகண்டன. சமயக் காழ்ப்பும் சமய அழிப்பும் அது சார்ந்த அனைத்தையும் அழித்தன. சமணர்களும் பௌத்தர்களும் தமிழுக்குச் செய்த கொடைகள் பலவாகும். ஏராளமான சமண பௌத்த இலக்கியங்கள் அழிக்கப் பெற்றதற்கு இத்தகு சமயக் காழ்ப்பு பெரும் காரணமாகும். இந்தச் சமயக் காழ்ப்பு சிலப்பதிகாரத்தையும் விட்டுவைக்க வில்லை. சமண முனிவர் ஒருவர் இயற்றிய காப்பியத்தை வைதீக சமயத்தார் படித்தல் ஆகாது என்ற கருத்து 16 -ஆம் நூற்றாண்டு முதல் 19- ஆம் நூற்றாண்டு வரை உரத்துப் பேசப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார் முதலான நூல்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேவாரம் முதலான பக்திப்பனுவல்கள் உச்சம் தொட்டன. இருபதாம் நூற்றாண்டிலும் இந்நிலையே நீடித்தது. இருபதாம் நூற்றாண்டு ஆய்வாளர் சிலரும் சிலப்பதிகாரத்தை வைதீக நூலாக மாற்றம் செய்த பிறகே ஏற்றம் தர முற்பட்டனர். இது பற்றிப் பேராசிரியர் ஏ. சக்கரவர்த்தி குறிப்பிடும் கருத்து வருமாறு:
செல்வாக்கு நிறைந்த சிலர் தமிழ்பண்பாட்டைப் புதுப்பிக்கின்றோம் என்ற பெயரில் சமணர்கள் இயற்றிய நூலைச் சமணர் அல்லாதார் இயற்றியதாகக் காட்டுகின்றனர்; பழந்தமிழ்ப் பண்பாட்டை இவர்கள் புதுப்பிக்க நினைத்தால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பண்பாட்டு வளர்ச்சி என்பது ஆராய்ச்சியில் நேர்மை இல்லாத போது வெறுங்கதையாகப் போய்விடும்.
என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் இருபதாம் நூற்றாண்டு வரையும் சமயக் காழ்ப்பின் காரணமாகச் சிலப்பதிகாரம் ஒதுக்கப் பெறுவதற்கான சூழல் நிலவி உள்ளதை உணர முடிகின்றது.
இக்கட்டுரை முதற்பகுதியின் நிறைவில் பெறப்படும் கருத்தைப் பின்வருமாறு சுட்டமுடியும். கண்ணகி வழிபாடு தமிழ் மண்ணிற்குரியது; மற்றுப் புராதன தாய்த் தெய்வ மரபிலிருந்து அது தோற்றம் பெற்றது. அவ்வழிபாட்டை மையமிட்டுச் சிலப்பதிகாரக் காப்பியத்தை இளங்கோவடிகள் புனைந்தார். பேரரசு, பெருங்குடும்பம், பெருஞ்சமய உருவாக்கக் காலத்தில் அவற்றை நியாயப்படுத்தி உருவான சிலப்பதிகாரம் தமிழ்த் தேசியக் கருத்தியலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதன் வழித் தமிழின அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறியது. இதற்குப் பின்னர்த் தோன்றிய சமூக மாற்றங்கள் அடையாளத்தை வீழ்த்துவனவாகவே அமைந்தன. சைவ வைணவ எழுச்சி கண்ணகி வழிபாட்டை வீழ்த்தியது. சமணக் காழ்ப்பும் வடமொழிசார் கவிதை அரசியலும் சிலப்பதிகாரக் காப்பியத்தை வீழ்த்தியது இந்த வீழ்ச்சியிலிருந்து சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் விடுபட்டு எழுச்சி பெற்றது. இது பற்றிய விவரங்கள் இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் இடம் பெறும்.
பகுதி இரண்டு
சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழின அடையாள உருவாக்கத்தின் இரண்டாம் நிலை இருபதாம் நூற்றாண்டில் தோற்றம் பெறுகின்றது. சமயக் காழ்ப்பால் ஒதுக்கம் பெற்று ஒடுங்கிக்கிடந்த சிலப்பதிகாரம் 1872இல் தி.ஈ.சீனிவாசராகவாச்சாரியாரால் பதிப்புரு பெறுகின்றது. இவரது பதிப்பில் ஒரு சில காதைகளே இடம் பெற்றன. சிலப்பதிகாரம் முழுவதும் அடங்கிய பதிப்பை உ.வே.சாமிநாதையர் 1892இல் வெளியிட்டார். இப்பதிப்பு வெளிவந்த பின்னரே சிலப்பதிகாரம் பற்றிய முழுச்செய்திகளும் தமிழுலகத்தைச் சென்றடைந்தன. இது பற்றிக் கைலாசபதி (1996).
இருளில் முழ்கிக்கிடந்த முதல் தமிழ்க் காப்பியத்தைச் சாமிநாதையர் வெளியிட்டவுடனே அது அக்காலத்துத் தமிழ் ஆராய்ச்சியாளரைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக வி.கனகசபைப் பிள்ளை (1855-1906) பெ.சுந்தரம் பிள்ளை ஆகியோர் தம் ஆய்வுகளுக்குச் சிலப்பதிகாரத்தையேபெருமளவிற்குப் பயன்படுத்தினர்.
என்று கருத்துரைத்தனர். சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கக் கால ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்ததற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. இது பற்றிச் சிறிது விளக்கலாம். ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரும் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் கல்வி பரவலாக்கம் பெற்ற பின்னரும் தமிழ் ஆராய்ச்சி உலகில் பெரும் மறுமலர்ச்சியும் எழுச்சியும் தோன்றின. கூடவே ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டமும் சூடு பிடித்தது. இந்தியத் தேசிய விடுதலை என்பது சுதேசியம் சார்ந்த கருத்தியலை முன் வைத்தது. இனம் சார்ந்த வரலாறு, பண்பாடு, சமயம் முதலான பல்வேறு கூறுகள் வெளிவரத் தொடங்கின. இவ்விதமாகவே 1850 களுக்குப் பிறகு தமிழ்மொழி, இனம், வரலாறு, பண்பாடு சார்ந்த ஆய்வுகள் உருவாக்கப்பெற்றன. ஆனால் இந்த ஆய்வுகள் யாவும் ஏதோ ஒருவகையில் வடமொழிக்குக் கடன் பட்டவையாக விளங்கின. தனித்த தமிழ் அடையாளங்களோடு கூடிய ஆய்வுகளை நிகழ்த்த முடியாமல் போயிற்று. தொல்காப்பியம் தொடங்கி எல்லா நிலைகளிலும் இது வெளிப்பட்டது. தொல்காபியமே ஆரிய மரபினரான அகத்தியரின் மாணவரால் உருவாக்கப்பட்டது என்றும் அவரும் திரணதூமாக்கினி எனும் ஆரியர் எனவும் தொன்மங்கள் பலவாக நிலைபெற்று இருந்தன. தமிழர் வரலாற்றைக் கட்டுவதிலும் இவ்வாறான நிலையே இருந்தது. இவ்வாறான சூழலில்தான் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பெற்றுப் பரவலான அறிமுகத்தைப் பெறும் சூழல் உருவானது. சிலப்பதிகாரம் தமிழின தமிழர் வரலாற்றைக் கட்டமைக்கப் பெரிதும் துணைநின்றது. தமிழர் வரலாற்றை உருவாக்கியதில் வி. கனகசபைப்பிள்ளைக்குப் பெரும் பங்குண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில்; கனகசபைப்பிள்ளை ‘மெட்ராஸ் ரிவியூ’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் தொடர்ந்து தமிழரின் வரலாறு பற்றியும் பண்பாடு பற்றியும் கட்டுரைகள் எழுதி வந்தார். ‘இந்தியப் பழமை ஆராய்ச்சி’ (India Antiquary) எனும் ஏட்டிலும் இது தொடர்ந்தது. எனினும் சிலப்பதிகாரம் முழுவதும் உரையுடன் வெளிவந்த பிறகே “ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்” எனும் புகழ் பெற்ற நூலை அவர் எழுதினார். ‘கனகசபைப் பிள்ளையின் நூல் தமிழியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்றும் பழந்தமிழ் நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தை ஒட்டி எழுந்த ஆராய்ச்சிக் காலப் பகுதியில் அவருடைய நூல்தான் முதன்மையானது என்பது யாவரும் ஏற்றுக் கொண்ட உண்மை’ என்றும் கைலாசபதி (1996) எழுதினார். ‘கனகசபைப்பிள்ளை சிலப்பதிகாரத்தை அடியாகக் கொண்டு கட்டிய முடிவுகளில் பல இன்று ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை’ என்று எண்ணும் ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் (1959) பின்வருமாறு அதன் முதன்மையை விதந்து கூறுவர்.