தொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014
ஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.
32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என
–சிலப்பதிகாரப் பதிகம்
33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)
34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)
35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)
36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)
37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)
38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)
39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)
40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)
41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை
42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை
43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை
44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை
45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை
46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை
47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை
48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை
49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை
50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை
52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை
53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை
54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை
55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை
56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை
57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை
58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை
59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை
60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை
61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை
62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை
63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை
64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி
65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி
66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை
67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)
68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை
70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை
71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி
72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி
73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!
74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை
75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை
76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை
77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை
78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை
79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை
80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை
81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை
82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை
83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி
84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை
85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை
86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை
87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை
88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை
89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை
90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை
91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்
92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்
93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)
வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!
–சுபம்–