New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரத்தில் காணலாகும் ‘ஆரிய சமயத்தின்’ தாக்கங்கள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சிலப்பதிகாரத்தில் காணலாகும் ‘ஆரிய சமயத்தின்’ தாக்கங்கள்
Permalink  
 


சிலப்பதிகாரத்தில் காணலாகும் ‘ஆரிய சமயத்தின்’ தாக்கங்கள்

த. தினேஷ்.                                 முனைவர் பட்ட(தமிழ்) ஆய்வாளர்

நவீன இந்திய மொழிகள் துறை அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் அலிகார்,

உத்திர பிரதேசம், 202002 செல்; 09634635657,8144160801 dhineshd1987@gmail.com


முன்னுரை

தமிழ் மொழியில் ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாய இடத்தினைப் பெறுவது சிலப்பதிகாரம் ஆகும். இது தோன்றிய காலக்கட்டத்தில் தமிழ் தமிழ்ச்சமூக உருவக்கத்திற்கு எத்தகு அரசியல் மூலமும் சமய சார்பு மூலமும் உருவாக்கி தந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. இதனை ‘ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ எனக் குறிப்பிட்ட பாரதியாரின் வரிகளில் இருந்தே இக்காவியத்தின் சிறப்பினை அறியலாம். இத்தகைய அருந்தமிழ்க் காவியத்தில் காணலாகும் ஆரிய சமயத்தின் தாக்கத்தினைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

சமயம் - பொருள் விளக்கம்

சமுதாயத்திற்குள் காணப்பெறும் எல்லா நிறுவனங்களையும் போன்றே சமயம் என்ற நிறுவனமும் மாறிக்கொண்டிருக்கும் இயல்பினை உடையதாகக் காணப்படினும் உலகின் பெரும் பகுதியிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்வில் ஒரு உன்னத சக்தியாகக் காணப்படுகின்றது. ‘’ஒவ்வொரு சமயமும் மக்களின் தினசரி வாழ்க்கைக் கூறுகளையும் புனித எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப் பெறும் மாற்றத்தைக் குறிப்பிடுகின்றது எனவும் இயற்கையிறந்த பொருள் அல்லது பொருளைச் சுற்றியும், மனித உறவுகளைச் சுற்றியும் உருவாக்கப்பெறுவதே சமயம் எனவும் ‘சமூகவியல் அகராதி’ விளக்கம் தருகின்றது. 1

இவ்வாறு ஒரு பரந்த கட்டமைப்பாகக் காணப்படும் சமயம் தோன்றியதன் காரணங்களைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ‘’சமயம் என்பது மனிதன் தன்னுடைய ஆழ்ந்த அனுபவங்களால் அடைந்த மிக உயர்ந்த நிலை ; பல்வேறுப்பட்ட நிலைகளை எதிரொலிக்கும் மிக ஆழமான ஒரு பிரிவு ; கோடிக்கணக்கான் மனங்களின் எண்ணங்களும் கனவுகளும் மிளிரும் ஒரு இடம்’’ 2 என்பது மட்டும் உண்மை. இனி சிலப்பதிகார காலத்தில் ஆரிய சமயம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றி காண்போம்

பழந்தமிழர்களும் ஆரியர்களும்

சங்க காலத்தின் இறுதியிலேயே வட இந்திய அந்தணர்கள் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டனர். இந்நிகழ்வு நான்காம் நூற்றாண்டிலிருந்தே படிப்படியாக நடக்கத்தொடங்கியது. இவ்வாறு ‘’ காலங்காலமாகத் தமிழகம் நோக்கி வந்த ஆரியர்கள் திராவிடப் பார்ப்பனருடன் கலந்து சங்க காலத்திற்குப் பின்னர்த் தமிழைத் தாய்மொழியாக உடையவராக மாறிவிட்டனர்’’ 3 இதனாலேயே சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் ஆரிய வடவேதியரை மொழிவழியில் வேறுபடுத்திக் காட்டும் குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை.

’’வடபுல வேதியர்கள் தமிழ் அந்தணர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடன் ஒன்றாகக் கலந்து தங்கள் ஆரிய சமயத்தின் பழக்கவழக்கங்களையும் நாகரிகத்தினையும் சிறிதுசிறிதாகத் தமிழினூடே கலக்க ஆரம்பித்தனர்’’ 4. ‘’ புதுமையை விரும்புதல் மக்களின் இயல்பானதால் அவ்வயற்கொள்கையினைச் சங்க மக்கள் ஏற்றுக்கொண்டதில் வியப்பேதும் இல்லை’’5. ஆகவே அக்காலத்தில் ஆரியார்களின் செல்வாக்குச் சிறிதுசிறிதாக உயர்ச்சியை எட்டியது. ஆரியர்கள் தமது பழக்கவழக்கங்களைக் கலந்ததோடு மட்டுமல்லாது ‘’ பிற்காலத்தில் அவர்கள் தமிழ்ப் புலவர்களையும் அந்தணர்களையும் பின்னுக்குத்தள்ளித் தங்களது மரபினை மொழி மற்றும் இலக்கியங்கள் வாயிலாக உட்புகுத்தினர்.’’6 . இதனால் பண்டைத் தமிழகத்தில் சில கலாச்சாரமானது ஆரியார்களின் தாக்கத்தால் மறைந்தும் ( மறைக்கப்பெற்றும்) புகுந்தும் (புகுத்தப்பெற்றும்) மாற்றங்கள் ஏற்பட்ட காலம் சிலம்பு தோன்றிய காலம் ஆகும். கள்ளங்கபடமற்ற பழந்தமிழ் மக்கள் ஆரியர்களின் கற்பனைக்கதைகளை உண்மையென நம்பினர். உதாரணமாக நம் பழந்தமிழ்ச் சமூகத்தைப் பதிவு செய்த தொல்காப்பியர்

’’இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையல் கலம் இன்மை யான ‘’ (தொல்; பொருள்-54)

மண்ணுலகம்  போலவே வானுலகம் என்ற ஒன்று உண்டு என்றும், அங்கும் அறம், பொருள், இன்பம் உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இதனை அறியலாம்.

சிலம்புக் காலமும் ஆரியத்தாக்கமும்

சமுதாயத்தில் காணப்பெறும் பல்வேறு நிறுவனங்ளில் ஒன்றாகச் சமயத்தைக் குறிப்பிடுகின்றனர் சமூகவியலளர்கள். பண்டைத் தமிழகத்தில் சமய உணர்வானது தமிழர் மரபாகப் போற்றப்பட்டு வந்தநிலையில் ஆரிய சமயம் ஏற்படுத்திய தக்கத்தின் விளைவாகப் பிற சமயங்களின் தாக்கமும் சங்க இறுதி காலத்தில் காணப்பட்டது. இத்தகைய காலகட்டத்தில் ஆரியம், பெளத்தம், சமணம் முதலான சமயங்களுக்குள் பெரும் பூசல்களும், செல்வாக்குகளும் ஏற்பட்டன. இத்தகைய காலக்கட்டத்தில் தோன்றிய மாபெரும் சமணக்காவியமே சிலப்பதிகாரம் ஆகும். இது சமணக்கொள்கைக்கு உட்பட்டு புனையப்பட்டாலும் அதனுள் ஆரியத்தாக்கமும் செறிந்து கிடக்கின்றது. சங்க இறுதிக்காலமானது பல்வேறு சமயத்தாக்கங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் முதலானவற்றை கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக காணப்பட்டது. இருப்பினும் அவற்றில் பெரும்பாலான மாறுதல்களை ஏற்படுத்தியது ஆரிய சமயமே என்பதை அறியமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம், சமணம்,முதலான சமயக் கருத்துக்கள் அங்காங்கே பரவலாகக் காணப்படுகிண்றன.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்களின் நிலைகள்

சிலம்பில் ’’மதுரைக்கருகில் ஒரு பார்ப்பனக் குடிசையில் பூணூலையணிந்து வேதங்களை ஓதுதலைத் துறந்து இசைபாடுதலை மேற்கொண்ட பிராமணர் வாழும் இடத்தினை இளங்கோ குறிப்பிடுகிறார்’’ 7. மேலும் பார்ப்பார், நான்மறையளர், இருபிறப்பாளர், உயர்பிறப்பாளர் முதலிய பல பெயர்களிலும் அந்தணனான மாடல் மறையோன், ’’மாமுது மறையோன், மாமறை முதல்வன் , அருமறை முதல்வன், எனப் பல பெயர்களில்’’ 8 சிலம்பில் அழைக்கப்படுகின்றனர். மேலும் இவர்களது புறத்தோற்றத்தைப் பற்றிக் கூறுங்கால் சடைமுடியும், ஈரம் புலராத ஆடையும், முப்புரி நூலினையும் உடையவர்கள் என்பதை

’’ புன்மயிர்ச் சடைமுடி புலரா உடுக்கை

      முந்நூல் மர்பின் முந்தீச் செல்வத்து
 இருபிறப் பாளர்’’                                   (சிலப் ; 25)

எனக் குறிப்பிடுகின்றது. ‘அந்தணர்கள் நான்மறை கற்பதையும் ஓதுவதையும் தங்களுடைய இன்றியமையாத பணிகளாகக் கொண்டனர். மேலும் வேள்வி செய்தல் இவர்களது இன்றியமையாக் கடமையாகும் (சிலம்பு 22) இவர்களின் இல்லங்கள் ‘மறையோர் இருக்கை’ என அழைக்கப்பட்டன. சிலம்பில் வரும் அந்தணர்களான ‘’ பராசரன், லார்த்திகன், கீரந்தை, கோசிகமாணி, மாடலமறையோன், மாங்காட்டு மறையோன் முதலானவர்கள் இல்லத்தில் இருந்து கடமையாற்றியாதாகக் காணப்படவில்லை. இவர்கள் வறுமை நிலையில் காணப்படும் அந்தணர்கள் ஆவர்’’ 9 அந்தணர்கள் மன்னனுக்கு உறுதுணையாக இருந்து நீதி வழங்கிவந்துள்ளனர். இதனால் இவர்கள் ‘அறங்களத்தணர்’ என அழைக்கப்படுகின்றனர்.

வருணாசிரம முறை

பழந்தமிழகத்தில் தமிழர்களுக்குப் பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பிக்கப்படவில்லை. ஒருவன் தன் பிழைப்புக்காக செய்துவந்த தொழிலையே தன் மகனும் பின்பற்ற வேண்டும் என விரும்புவது ஒவ்வொரு தந்தையின் இயல்பு. இவ்விருப்பமே தொடக்கக் காலத்தில் தனித்தனி சாதிகள் தோன்றுவதற்குக் காரணமயிருந்தது. இப்பிரிவினருக்குள் மட்டுமே மணமுறை நடைபெற்றது. எனவே அவரவர் தொழிலுக்கு ஏற்ப சாதிகள் பிரியநேர்ந்தது.(குலப்பிரிவு)

இதனால்தான் எத்தனையோ பிரிவுகள் இருந்தும் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் நால்வகை பிரிவுகளை மட்டும் தொல்காப்பியர் பதிவு செய்தார். ஆரியரின் வருகையால் வருணாசிரம முறை (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) தமிழகத்தில் காணப்பட்டாலும் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறான தன்மையன. ஆரியமானது பிறவியடிப்படையிலானது, தமிழருடையது தொழில் அடிப்படையில் ஆனது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: சிலப்பதிகாரத்தில் காணலாகும் ‘ஆரிய சமயத்தின்’ தாக்கங்கள்
Permalink  
 


ஆரியருக்கும் தமிழருக்கும் தொடர்பு ஏற்படும் முன்பே தமிழகத்தில் அரசுமுறை தோன்றிவிட்டது. வடநாட்டிலோ சத்திரியருக்கும் சேர, சோழ, பாண்டியருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆனால் வேளாளருக்கும் தமிழ் மன்னருக்கும் மணமுறைத் தொடர்பு உண்டு.10 என்று குறிப்பிடுகிறார் தட்சிணாமூர்த்தி அவர்கள். இருப்பினும் வருணாசிரம முறை தமிழகத்தில் நுழைந்ததால் பெறும் புரட்சி ஒன்றும் ஏற்படவில்லை என்பது தெளிவு. இருப்பினும் சங்கம் மருவிய காலத்திற்குப் பின்பு இம்மரபு குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

இளம்பூரணர், நச்சர், பேராசிரியர் முதலானோர் இம்முறையைத் தழுவியே நூல்களுக்கு உரைவகுத்தனர். ஒரு பொருளுக்குப் பல பெயர்களைத்தேடிக் கூட்டிக் கூறுதலையே நோக்கமாகக் கொண்ட நிகண்டாசிரியர்கள், தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்களின் கருத்துக்களைத் தவறாகப் புரிந்துக்கொண்டு வேளாளர்களுக்குச் சூத்திரர் என்னும் பெயரினைக் கூட்டிக் கூறிவிட்டனர். இருப்பினும் இவை முற்றாக வெற்றிபெறவில்லை என்றே கூறவேண்டும். இவை மிகச் சிலவே தமிழ்ப் பண்பாட்டிலும் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

வேள்வி என்னும் புதுமுறை

ஆரியர்தம் சமயச் சடங்குகளும், சமய வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் சங்க இலக்கியங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சங்க காலத்தின் இறுதியிலும் அதற்கு அடுத்த காலக்கட்டத்திலும் சமண பெளத்தச் செல்வக்கைக் காட்டிலும் ஆரியரின் செல்வாக்கு மிகுதியாக உள்ளாதை அறிய முடிகின்றது. அந்தணர்கள் வேள்வி செய்தலைத் தங்களுடைய இன்றியமையாதக் கடமையாக கொண்டிருந்தனர். வேள்வி அந்தணர்களை இலக்கியங்கள் செந்தீ முதல்வன் (திரி 98) வேள்விப் பார்ப்பான் (சிலம்பு 28) என்பன பேன்ற பெயர்களில் அழைக்கின்றன. உலக நன்மைக்காக வேள்வி செய்யும் அந்தணர்கள் 48 ஆண்டுகள் மெய் நூல்களைப் படித்து பிரமசரியம் காத்து 3 வகை வேள்வியினைக் கடைபிடிப்பர்.

’’அறுநான்கு இரட்டி இளமை நல்யண்டு அறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை

           மூன்று வகைக் குறித்த மூத்தீச் செல்வத்து ‘’      (முருகு  179-181)

தொல்காப்பியம் இவர்களை அறுதொழில் அந்தணர் எனக் குறிப்பிடுகின்றது. சிலம்பில் வேள்வியால் அரசனுக்கு வெற்றியும், நாட்டுக்கு மழையும் கிட்டும் என்று குறிப்பு உண்டு.

மழைக்கரு வுயிர்க்கும் அழற்றிக ழட்டின்

மறையோ ராக்கிய ஆவுதி நறும்புகை ‘’ (சிலம்பு 85; 142-143)

சிலம்பில் ‘’வேள்வி செய்தல் முத்தீ என்றும், ஆவுதி என்றும் ஐம்பெரும் வேள்வி என்றும் வழங்கப்பட்டது’’11.

முத்தீ; அந்தணர் வளர்க்கும் செந்தழல் என்னும் முத்தீ மூவகைப்படும். அவை நாற்சதுர வடிவான ஆகவனீயம்; முச்சதுர வடிவமான தக்கிணாக்கிளி; வில்வடிவான காருகபத்தி முதலானவை ஆகும். இவை வேதத்தை வழங்குதலையும், தேவர்கட்குத் தட்சிணையளித்தலும், பூவுலகைக் காத்தலும் ஆகும் என அரும்பத உரையாசிரியர் (சிலம்பு 26;68) குறிப்பிடுவதாக’’ 12 தட்சிணாமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகின்றார். புகார் நகரத்திலிருந்து வந்த மாடலன் என்னும் மறையவன் செங்குட்டுவனை நோக்கி, தங்கள் அரசர் இயற்றவேண்டிய மிகப் பெரியவும் சிறந்தனவுமான வேள்விகளை இயற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது என அறிவுறித்தினான். (சிலம்பு xxvii ;177-179)

’’ஆடகப் பெருநிறை பையைந் திரட்டித் தோடர் போந்தை வேலோன் றன்னிறை மாடல் மறையோன் கொள்கொண் றளித்தாங்கு‘’ (சிலம்பு 27; 174-176)

என்ற பாடல் மூலம் மாடல மறையோனுக்குச் செங்குட்டுவன் எடைக்கு எடை பொன் கொடுத்துச் சிறப்பித்தான் என அறியமுடிகின்றது. பார்ப்பன நங்கையின் கணவனான வார்த்திகனுக்குப் பாண்டிய மன்னன் திருத்தங்கால், வயலூர் என்ற இரு ஊர்களைப் பரிசாக கொடுத்ததை அறியமுடிகிறது.(சிலம்பு 23; 118-122)

சிலம்பும் மணமுறையும்.

பழந்தமிழரிடையே பயின்ற மணமுறை மிக எளிதாகவும் இயல்பாகவும் நடைபெற்றது. சடங்கு இல்லாத மணமுறை களவு எனப்பட்டது. தலைவன் தலைவியரின் ஒப்புதலின் பேரில் இது நடைபெற்றது. இந்நிலை மெல்ல மெல்ல மாறும்போதுதான் அதாவது காதலில் ஈடுபட்டவர்கள் பின்னர் அதனை இல்லையென்று மறுதலித்த நிலை ஏற்பட்டபோதுதான் சான்றோர்கள் ’கரணம்’ என்னும் நிகழ்வை ஏற்படுத்தினர்.

’’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப‘’ ( தொல், கற்பு 145 )

இதில் ஐயர் என்பது மூத்தோரினைக் குறிக்கும் சொல்லாகும். சங்க கால மணமுறை தமிழ் மரபுடையது, சிலப்பதிகார காலக் மணமுறை ஆரியர் பண்பாடு நிறைந்ததாகும். சிலம்பில் கூறப்பட்டுள்ள கண்ணாகியின் திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட நடந்தது. மணமக்கள் இருவரும் தீவலம் செய்வதனைக் காணக்கொடுத்து வைத்தவர்களை அடிகள் பாராட்டுகிறார். இவ்வாறு மறைவழி காட்டல், தீவலம் வருதல் தமிழர் திருமணமுறையில் நுழைந்த (சிலம்பு 1; 40-64) ஆரிய பழக்க வழக்கமாகும். ஆனால் தாலி பூட்டியதாகச் செய்திகள் இடம் பெறவில்லை. ‘’மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்’’ என்றவிடத்தில் அடியார்க்கு நல்லார் இயற்கை அழகு எனப் பொருள் கொண்டார்.

சிலப்பதிகாரக் காலச் சமயத்தில் ஆரியத்தின் ஆதிக்கங்களும், தாக்கங்களும்

‘’சமயம் மக்களின் வாழ்க்கைக்குப் பொருளையும் (meaning) விளக்கத்தையும் அளிப்பதன் மூலம் சமூக நியதிகளையும் சமூகமதிப்புகளையும் புனிதமாக்குகிறது ‘’13 என்ற கோட்பாடானது ஆரியர்களுக்குப் பொருந்தும்; புனிதம் என்ற பெயரில் தங்களை உயர்த்திக்காட்ட பல பல ஆகம வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி நாடு முழுக்க நிலையான தங்களது கோட்பாட்டினைப் பறைசாற்றினர். அதில் தமிழகத்தில் மட்டும் அவர்களுக்குத் தங்களது கோட்பாட்டினை நிலைநிறுத்த கடுமையாகப் போராட வேண்டி வந்தது. சங்க கால வாழ்வியலானது ஐவகை நிலங்களாகப் பகுத்து முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை, சிவன் முதலான கடவுள்களை மட்டுமே வணங்கப்பட்டு வந்த காலமாகும். இதனை

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் …………………………………..,,,

என்ற சங்கப்பா மூலம் அறியலாம். சங்க காலச் சமுதாயத்தில் சமயத் துறையில் ஆரியப் பண்பாடு கலந்தமைக்குச் சன்றாக திருமுறுகாற்றுப்படையில் இடம்பெறும் குறிப்புகளைக் குறிப்பிடலாம். ‘’ முருகன் தமிழர்களின் வாழ்வோடும் மூச்சோடும் ஒன்றி காணப்பட்டான்’’ 14 ஆனால் திருமுருகாற்றுப்படையின் இறுதிக்காலத்தில் ஆரிய கடவுளான சுப்ரமணியனுடன் முருகன் இணைக்கப்பட்டான். ஆரியர்களின் கற்பனையில் எழுந்த கார்த்திகேயனின் உருவம் முருகன் மீது ஏற்றிக் கூறப்பட்டது இதற்கு தக்கச் சான்றாகும்.

’’ வட இந்தியாவில் சிவன் அல்லது உருத்திரன் குறிஞ்சி நிலக்கடவுளாகக் கருதப்பட்டான்; ஆனால் தமிழகத்தில் முருகன் கருதப்பட்டான். வடவர் முருகனை சுப்ரமணியராக்கினர். (வேதத்தில் சுப்ரமணிய வணக்கம் இல்லை ; இதிகாச காலத்தில்தான் இது வழக்கில் வந்தது ) அங்கு அவன் உருத்திரன் அல்லது அக்னியின் மகனெனக் கூறப்பட்டான். எனவே முருகன் இந்திரனுக்கும் வருணனுக்கும் ஒப்பாகத் தென்னவரால் கருதப்பட்டான்’’15. சிலப்பதிகாரத்தில் முருகனைப் பற்றி வரும் குறிப்புகள் (சிலம்பு 24) சூரபத்மன் புராணம் மற்றும் குமார சம்பவ புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மேலும் வேலனின் வெறியாடலை விளக்குவதோடு முருகனைச் சிவனின் மகனாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது;

’வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப்பறவை மேல் நேரிழை தன்னொடு ஆலமர் செல்வன் புதல்வன் வரும்’’ (சிலம்பு 24 ;15)

    திருமாலினை மகாவிஷ்ணு எனும் வடபுல தெய்வத்துடன் இணைத்து இந்திரனின் நண்பனாகத் திரித்து எழுதப்பட்டது. ’கோபா’ என்றால் பசு மேய்ப்பவன் என்று பொருள். இது இருக்கு வேதத்தில் விஷ்ணுவுக்கு உரியதாகும்.  பின்னர் தமிழரின் மாயோன் என்னும் முல்லைக் கடவுள் மகாவிஷ்ணு என்றும் சதாரண மாடுமேய்ப்பவனான கோபலன் என்ற பெயருடனும் இணைத்துக் கூறப்பட்டது. சிலம்பில் கண்ணனின் திருக்கோலம் கோபாலனாக மற்றப்பட்டு விஷ்ணு எனும் ஆரியக் கடவுள் ஆக்கப்பட்டது. திருமாலின் உருவ அமைப்பானது (சிலப் 5,11,14,16) மகாவிஷ்ணுவுடன் ஒற்றுமைப்படுத்தப்பெற்றுள்ளது.  பழந்தமிழரின் பாரம்பரிய தெய்வமான கொற்றவையினைச் சிவனோடு தொடர்புபடுத்தி ஒரு உறவு நிலை (சிலப் 12; 54-74) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கங்கை முடிக்கு அணிந்த கந்துதலோன் பாகத்து மங்கை உருவாய் மறை ஏத்தவே நின்றாய்’’ (சிலப் 12;10)

என்ற பாடலில் உள்ள புனைவுகள் யாவும் புராதன கொற்றவை வழிபாடானது வடவரின் சக்த மாதேவியாக மாறிய தொடக்கக் காலம் என்பதை அறியமுடிகின்றது. இதனைப் போலவே பிரமன், தேவர்கள், பூதகனங்கள் எனப் புதுப்புது கடவுட்கொள்கையைப் பிற்காலத்தில் வந்த இலக்கியங்களில் காணமுடிகின்றது. ஆக இது மிகப்பரந்த எண்ணத்துடன் ஆராயப்பட வேண்டிய ஒரு களமாகும் என்பதை அறியமுடிகின்றது.

முடிவுரை

    சிலப்பதிகாரத்தில் வடநாட்டு வருணமுறையின் தாக்கம் எவ்வாறெல்லம் இருந்தது என்பதை அறியமுடிகின்றது. இவர்களின் கலப்பால் தமிழ்ப் பண்பாடு மற்றும் பழக்கவழக்கத்தில் சிறுசிறு மறுபாடுகள் தோன்றலாயின.  ஆரியர்கள் தமிழ் இனத்தில் ஒன்று கலந்த தருணத்தைப் பன்படுத்தி இனக்கலப்பு, பண்பாட்டுக் கலப்பு, சமுதாயக் கலப்பு முதலானவற்றை ஏற்படுத்தியதை அறிய முடிகின்றது.

அந்தணர், ஐயர், பார்ப்பார் எனும் சொற்கள் ஆரியர்களுக்கு உரியனவாயின. ஆனால் அவை பழந்தமிழ்ச் சொற்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும். ’வடமொழி’ பார்ப்பனர்களின் மொழி என்ற ஒரு கருத்துருவை நாடு முழுவதும் ஏற்படுத்தியதாலும் பல இனமக்களைத் தங்கள் பழக்கவழக்கம் என்ற நிறுவனத்துக்குள் உட்புகுத்தியதாலும் அனைவரும் அனைத்துக் கடவுள்களும் வடபுல மரபுக்குக் கீழ் என்ற ஆதிக்கம் இந்தியாவில் பல மாநிலங்களில் காணப்படுகின்றன.

ஆனால் இவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் நிலைக்கவில்லை என்பது தெளிவு. ஆக ஒட்டுமொத்தத் தமிழ் இன மக்களின் மீது ஆரியர்களின் தாக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் ஒருசில பழக்க வழக்கங்கள் மட்டும் தமிழர் பண்பாட்டில் நிலையான ஒரு இடத்தினைப் பிடித்திவிட்டன.

இவ்வாறு தமிழகத்தில் ஆரியர்கள் கால்பதிக்க தொடங்கிய தொடக்க காலத்தில் சிலப்பதிகாரம் தோன்றியதால் இதில் ஆங்காங்கு ஆரிய சமயத்தின் தாக்கங்கள் காணப்படுகிறன என்பதை அறியமுடிகின்றது.

 

குறிப்புக்கள் 1. இராம கிருஷ்ணன், எஸ். ‘இந்தியப் பண்பாடும் தமிழரும்’ 1982. ப.209 2. ‘’The Hindu theory that mankind is divided into four Varna’s, of groups of castes-Brahmana, Kshatriya, Vaisya and Sudra was wholly foreign to Southerner’’, ‘’Dravidian Culture”- The bhahamanical ideas and institute although universally diffused in every province have not been wholly victorious prehistoric forms of worship and many utterly un-Aryan social practices service specially in the peninsula among that people speaking practices Dravidian language. We see strange spectacle of any exag geraterd regards for caste coexisting with sorts of weird notion and customs allied to Brahman traditions. Where it is probable that the Dravidian civilization in even older than the Indo Aryan Brahmaical culture of the north which was long regarded in than south as an unwelcome intruder to be resisted strenuously’’ “The amount of Aryan blood in the people to the out hos Narbada is extremely small in fact negligible’’

           (Oxford History of India - Vincent Smith. C.I.E)

3. புலவர் குழந்தை. ‘தொல்கப்பியர் காலத்தமிழ்’ 1959. ப. 24 4. தினேஷ், த. ‘பழந்தமிழகத்தில் பார்ப்பனீய மரபு’ (காவ்யா தமிழ் காலாண்டிதழ்) 2014 சூன், ப.147 5. சிலப். xiii , அடியார்க்கு நல்லார் உரையும் பழைய உரையும், 1955. பக்.38,39 6. சிலப். 21;53; 28;176; 9;7; 23;61; 72;88, 102;27;54; 11;152; 28;137; 13;141; 25;128; 25;67; 15;48; 11;58; 15;13; 113; 11,31,34,; 27;172,163 7. சிலப் . 23;61, 23;61, 23;90;100, 23;42, 13;53-99, 27;48-176, 11;35-150

8. Henrey Pratt Fairchild, (Edit), ‘A Dictionary of Sociology’, p 355 9. Radhakrishnan, S, Eastern Religions and Western Thought, Oxford, London, 1969, p.116 10. தட்சிணாமூர்த்தி. அ ‘ தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ 2008. பக் 63,64 11. சிலப் ; முத்தீ; 25;127, 22;34, 23;68

         ஆவுதி; 10;144. 26;58; 13;125
         ஐம்பெரும் வேள்வி; 23;69

12. தட்சிணாமூர்த்தி. அ. மு.கு,நூ. ப 207 13. ஈசுவரப்பிள்ளை. தா. ‘பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, 200, ப. 13 14. Kandasamy. K.A. “The Philosophical Aspects of Paripatal” Philosophical Heritage of the Tamils. P. 138 15. Narayan Iyer. C.V. Origin and Early History of Saivism in South India. P. 102



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard