New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு முனைவர் சி.சேதுராமன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு முனைவர் சி.சேதுராமன்
Permalink  
 


சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு

முனைவர் சி.சேதுராமன்

 

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதனை, “இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும்” என்கிறது வாழ்வியற் களஞ்சியம். அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது. இங்ஙனம் மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம். இவ்வகையில் சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்களையும் தொட்டுச் செல்கிறது.

சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்பட்டாலும், காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட கதைமாந்தர்கள் ஒவ்வொரும் ஒரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். அதிலும் சைவசமயக் கடவுளாக விளங்கும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் பல சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சமயங்கள்

சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவுந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக்கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன்

இந்திரவிழவூர் எடுத்தகாதையில்,

”பிறவா யாக்கைப் பெரியோன்” (170-வது வரி)

என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. இதற்கு அரும்பதவுரையாசிரியர்,

‘‘பிறவா யாக்கை – ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,

‘‘குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே’’

எனவரும் சிவஞானசித்தியார் (பக்கம்-65)ச் செய்யுளால் உணர்க.

மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாகும்.

சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனை,

‘‘செஞ்சடை வானவன் அருளின் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவன்’’ (கால்கோள்காதை: 98-99)

 

என்ற வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு என்பது சிவநெறி ஆகும். இதனைச் சைவநெறி என்றும் கூறலாம். சைவம் என்ற தொடர் சிவனோடு தொடர்புடையது என்னும் பொருளைத் தரும். ”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார். எனவேதான் சிவநெறியை சைவநெறி என்றும் சைவ சமயம் என்றும் சுருக்கமாகச் சைவம் என்றும் குறிப்பிடுகிறோம்.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டு புறப்படுகிறான். எல்லாப் பணிகளையும் முடித்தபிறகு வஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று யாருக்கும் வணங்காத தன் முடியைத் தாழ்த்தி வணங்கிவிட்டு யானைமேல் ஏறுகிறான். அந்த நிலையில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

யானைமேல் ஏறிவிட்ட பிறகு திருமால் கோயில் பிரசாதத்தைச் சிலர் ஏந்தி வருகின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட அவன் சிவபெருமானுடைய திருவடிகளின் அடையாளமான வில்வத்தைத் தன் உச்சந்தலையில் தரித்திருப்பதால் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் தோளில் தரித்துக் கொண்டான் என்பதை,

‘‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு’’

(கால்கோள்காதை: 54-57 )

—————————————————————————

—————————————————————————

கடக்களிறு யானைப் பிடர்த்தலை யேறினன்

குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென

ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன்

சேடங்கொண்டு சிலர்நின் றேத்தத்

தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்

தாங்கினனாகி—–’’ (கால்கோள்காதை, 60-67)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இதில் சேரன் செங்குட்டுவன் சிறந்த சிவபக்தனாக விளங்குவதையும் அவனது சிவவழிபாடு குறித்தும் ஆசிரியர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சேரன் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, யானைமேல் ஏறினான் என்றும் மட்டும் இளங்கோ பாடியிருப்பின் அது பொருத்தமுடையதாக இருந்திருக்கும். திருமால் கோயிலுக்கு அரசன் செல்லவில்லை என்பதே அவன் திருமால் வழிபாட்டில் நாட்டம் செலுத்தவில்லை என்பதை அறிவிக்கின்றது. அவ்வாறு இருந்தும் திருமால் பிரசாதத்தை ஒரு சிலர் கொண்டு சென்று யானை மேல் இருப்பவனுக்குக் கொடுத்தார்கள் என்று கூறாது  நீட்டினார்கள் வாங்கிக் கொண்டான் என்று கூறுவது ஏன் என்பது சிந்தித்தற்குரியதாகும்.

அதோடு மட்டுமல்லாது சிவபெருமான் திருவடி தலைமேல் இருப்பதால் இப்பிரசாதத்தை வாங்கிக் தோளில் தரித்துக் கொண்டான் என்று ஆசிரியர் பாடுவது சிவபெருமானின் சிறப்பை மிகுத்துக் கூறவேண்டும் என்பதற்காகவும், ஆசிரியருடைய ஆழ்மனத்தில் சிவபெருமான் மீதிருந்த உள்ளார்ந்த சிறப்பை எடுத்துக் கூறுவதற்கும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.

 

பெரியோன் தந்த திருநுதல்

சிலப்பதிகாரம் சிவபெருமானை பிறவா யாக்கைப் பெரியோன் என்றும், செஞ்சடை வானவன் என்று குறிப்பிடுகின்றது. மனையறம் படுத்த காதையில் கண்ணகியை வருணிக்கும் கோவலன் கண்ணகிக்கு,

‘‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்

பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,’’ (39-41வரிகள்)

 

எனச் சிவபெருமான் திங்களை நுதலாகக் கொடுத்ததாகப் பாராட்டுகின்றான். இக்காதையில் பெரியோன் என்று சிவபெருமான் குறிக்கப்படுவது நோக்கத்தக்கது.

 

திரிபுரம் எரித்ததும் கொடுகொட்டிக் கூத்து ஆடியதும்

தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டினர்.  சிவபெருமான் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பில் வைத்து ஏவி அசுரரை அழித்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்தனர். இதனைக் கண்டு பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடல் ஆகும். இதனை,

‘‘சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும், (கடலாடு காதை, 38-43)

என்ற கடலாடுகாதையில் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுவது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.

சிவன் கொடுகொட்டிக் கூத்தினை ஆடிய முறையினை,

‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்’’ (நடுகற்காதை,67-75வரிகள்)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே கூத்தச் சாக்கையன் அரசனிடம் பரிசில் பெற்று மகிழ்வுடன் சென்றான் என்று கொடிகொட்டிக் கூத்து ஆடிய முறை பற்றிய செய்தியானது நடுகற்காதையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

சிவனின் மகன் முருகன்

 

சிவனின் மகன் முருகன். இதனை,

‘‘கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே’’

(வஞ்சிக்காண்டம், குன்றக்குரவை, 12 – 15 வரிகள்)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதில் கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம். ஆனால் “செங்குட்டுவன் சைவன்” என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.

கொற்றவையும் உமையம்மையும்

வேட்டுவ வரியில் கொற்றவையை தனிப்பட்ட சொற்களால் இளங்கோ புகழ்வதும், உமையம்மையைப் புகழ்வது போன்று உள்ளது. காடுகாண் காதையில் வசந்தமாலை வடிவில் வந்த சிறுதெய்வத்தை வெருட்டக் கோவலன் பாய்கலைப் பாவை மந்திரத்தைப் பயன்படுத்துகின்றான். இங்கு இளங்கோ குறிப்பிடும் பாய்கலைப்பாலை கொற்றவையாகும். சங்க இலக்கியங்களில் வரும் காடுகிழாள் என்றும் கொற்றவை என்றும் வரும் தெய்வம் போரில் ஈடுபடுபவர்க்கு வெற்றி வாய்ப்புத் தரும் தெய்வமாகவே பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்கோவடிகள் குறிக்கும் கொற்றவை சிவபெருமானின் இடப்பக்கம் உறைபவளாகவும், உமையம்மையின் இலக்கணங்களைப் பெற்றவளாகவும் பேசப்படுவது நோக்கத்தக்கது. அடிகள் கூறும் மதுராபதித்தெய்வமும் உமையொரு பாக வடிவத்தையே வருணிப்பதாக உள்ளது.  இவை அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயுதம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன், மிகச் சிறந்த சைவ பக்தனாக விளங்கியது சிறப்பிற்குரிய ஒன்றாகும். சைவ சமயத்தின் வினைக் கோட்பாடும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
RE: சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு முனைவர் சி.சேதுராமன்
Permalink  
 


சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சமயம் சைவசமயமே

Thursday, 13 March 2014 00:00Written by  பேராசிரியர் சாமி தியாகராஜன்font size  decrease font size  increase font size
 

Silappathikara-Asiriyar-1Silappathikara-Asiriyar-2

 

சிலப்பதிகாரத்தை எழுதிய வித்தகப் புலமையாளர் இளங்கோவடிகள் என்றும் சிலர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் சமண சமயத்தவர் எனக் கூறுவதற்கு நூலில் எந்த ஆதாரமும இல்லை. பிறகு ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால், அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் சொல்லிச் சென்ற கருத்தை ஏற்று அவ்வாறு சொல்லிவருகின்றனர்.

 

 

அடியார்க்கு நல்லார் என்ன சொல்லியிருக்கிறார்?

 

 

 

“குணவாயிற் கோட்டத்து அரசுதுறந் திருந்த குடக்கோச் சேரன் இளங்கோவடிகட்கு” என்று தொடங்குகின்ற பதிகத்தின் இவ்விரண்டு அடிகட்குப் பொருள் சொல்ல வந்த அடியார்க்கு நல்லார்,

 

 

“திருக்குணவாயில் என்னும் ஊரில் இருந்த அருகன் கோயிலில் இராசபோகத்தைத் துறந்து இருந்த இளங்கோவடிகட்கு” எனப் பொருள் எழுதுகிறார். குணவாயில் கோட்டம் திருக்குணவாயிலில் இருந்த அருகன் கோயில்.

 

 

அருகன் - சமண மதத்தவர் வணங்கும் தேவன்.
கோட்டம் - கோயில்
அடிகள் - துறவிகட்கான அடையாளப் பெயர்.

 

 

 

அரச போகத்தைத் துறந்து, துறவியாகி அருகன் கோயிலில் வந்து தங்கியிருந்தார் இளங்கோ என்கிறார் அடியார்க்கு நல்லார். இந்த உரைகொண்டு இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், இளங்கோ சமண சமயத்தவர் எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவர் சமணம் சார்ந்தவர் என்ற எண்ணத்திலேயே அடியார்க்கு நல்லார் அவ்வாறு எழுதியுள்ளார் எனக் கொள்வதில் தவறில்லை.

 

 

கோட்டம் என்ற சொல்லுக்கு கோயில் என்பது பொருள். இது பொதுப்பெயர் எந்தத் தெய்வம் குடிகொண்டிருந்தாலும் அந்த இடத்தைக் கோட்டம் எனச் சொல்வது அக்கால வழக்கு.

 

 

இது போன்றதுதான் அடிகள் என்னும் சொல்லும். அதுவும் பொதுப்பெயரே. எந்த சமயத்துத் துறவியாயினும் அவரை அடிகள் என்று சொல்லுவது சமய மரபு.

 

 

மணிமேகலையில் வரும் புத்த மதத் துறவி ஒருவரை அறவணடிகள் என அந்த நூல் சொல்லும். நமது சைவத்தில் நால்வரில் ஒருவராகிய “மாணிக்கவாசகரை “அடிகள்” எனச் சொல்வது வழக்கம். சிவபெருமானையே சைவம் அடிகள் என அழைக்கும். ஆதலால் அடிகள் என்னும் பொதுப்யெரைச் சமணசமயத்துத் துறவிக்கு மட்டும் சிறப்பாக உரியது போல எழுதிய அடியார்க்கு நல்லார் உரை பொருத்தம் அன்று.

 

 

கனாத்திறம் உரைத்த கதையுள் “அமரர்தருக் கோட்டம்” (கற்பகமரம் இருக்கும் கோயில்) “வெள்ளானைக் கோட்டம்” (ஐராவதம் இருக்கும் கோயில்)” "புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்” (பலதேவன் கோயில்) ”உச்சிக்கிழான் கோட்டம்” (சூரியனார் கோயில்) “வேல் கோட்டம” (முருகன் கோயில்) எனப் பல்வேறு தெய்வங்கள் எழுந்தருளிய கோயில்களைக் கோட்டம் என்ற சொல்லாலேயே சுட்டிக் செல்கின்றார் இளங்கோவடிகள்.

 

 

இதிலிருந்து கோட்டம் என்பது அருகதேவன் எழுந்தருளியுள்ள கோயிலை மட்டும் குறிக்கும் சொல் அன்று என்பது தெளிவாகிறது. ஆதலால் கோட்டம் என்னும் சொல்லையும், அடிகள் என்னும் சொல்லையும் இளங்கோவிற்குரியது போலப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லார் உரை ஏற்கத்தக்கதாக இல்லை எனத் துணிந்து கூறலாம்.

 

 

சரி! அப்படியாயின் இளங்கோவின் சமயம் எதுவாக இருக்கும். என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அது பற்றிப் பார்ப்போம்.

 

 

 

சிவனடியார்க்கு சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் - இளங்கோ.

 

செஞ்சடை வானவன் அருளினில் விளங்க 
வஞ்சித் தோன்றிய வானவன்” எனக் கால் கோட்காதையிலும்

 

 

 

ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி 
மாநிலம் விளக்கிய மன்னவன்

 

என வரந்தரு காதையிலும், சிவபெருமான் அருளால் செங்குட்டுவன் பிறந்தான் எனத் தெளிவாகச் சொல்கிறார் இளங்கோ. 
(செஞ்சடைவானன் - சிவன்: ஆனேறு ஊர்ந்தோன் - சிவன்)

 

 

 

சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் சிறந்த சிவபக்தன் என்பதையும், சிவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்காதவன் என்பதையும் கால் கோட் கதையில் தெளிவாகக் கூறுகிறார்.

 

 

உலகுபொதி உகுவத்து உயர்ந்தோன் சேவடி 
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி” என்னும் 
அடிகளின் அர்த்தம் பார்ப்போமா!

 

 

 

ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுலகத்தைத் தன்னுள் கொண்டவனாகிய சிவபெருமானின் சிவந்த அடிகளை வேறு தெய்வங்களை வணங்காத தலையால் வணங்கி” என்பது அர்த்தம்.

 

 

வடதிசையின் மேல் போர் எடுத்துப் புறப்பட்ட செங்குட்டுவனிடம் திருமாலின் பிரசாதம் தரப்படுகிறது. திருமால் கோயில் பட்டர்கள் கொண்டுவந்து தந்த சேடத்தை அவன் தலைமீது வைத்துக் கொள்ளவில்லையாம். ஏன்? சிவபெருமானின் திருவடி அவனது தலையில் இருப்பதால் அவ்வாறு செய்யவில்லை. பிறகு என்ன செய்தான்? திருமால் கோயில் சேடத்தை வாங்கித் தன் தோள் மீது வைத்துக் கொண்டானாம். இதுதான் உண்மை.

 

 

மேற்காணும் செய்திகளிலிருந்து செங்குட்டுவனின் சிவபக்தியை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!

 

 

 

மேலும் ஓர் இடம்.

 

 

 

கனகவிசயரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட அரசன் செங்குட்டுவன், தன் அமைச்சன் வில்லவன் கோதையை அழைத்து, இமயமலையில் வேள்வி செய்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அந்தணர்கட்கு எந்தத் துன்பமும் வாராதவாறு நீ சென்று காக்கவேண்டும் எனக் கட்டளை இடுகிறான் என்றால் சமய உணர்வில் அவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தான் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பது வரலாறு. இவர்கள் பெற்றோரின் வேண்டுதலால் சிவனருளால் செங்குட்டுவன் பிறந்தான் என இளங்கோ கூறுகிறார். சிவனருளால் செங்குட்டுவன் தோன்றியது போலவே நமது இளங்கோவும் சிவனருளால் தோன்றியவரே எனக் கொள்வதில் தவறுகாண முடியாது. எனெனில் இவர்கள் பெற்றோர் சிவசமயத்தைச் சேர்ந்து சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள் என்பதால் அவ்வாறுதான் நிகழ்ச்சி நடந்திருக்க முடியும்.

 

 

சிவனடியார்கட்குப் பிறந்த பிள்ளையாகிய இளங்கோ சிவபக்தனாகிய செங்குட்டுவனுக்குத் தம்பி. இப்பேர்ப்பட்ட குடும்பத்துப் பிள்ளை வேறு சமயத்திற்குச் செல்லவேமாட்டார். இளங்கோ துறவியானதும் உண்மை. அவர் சைவ சமயத் துறவியாக, சைவ சமய அடிகளாக இருந்திருக்கிறார் என்பதும் உண்மை



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 சிலப்பதிகாரம் - கருத்துக் களஞ்சியம்

சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.

1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும் 
2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர் 
3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்

என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.

2.3.1 அரசியல்

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் - பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல், முடிவும் அரசியல் என்ற நிலையில் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது சிலப்பதிகாரம். புகார், மதுரை, வஞ்சி எனக் காண்டப் பெயர்களை அமைத்து, மூவேந்தர்களையும், மூன்று நாடுகளையும், அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கு இணைக்கிறார் இளங்கோ. மேலும் பத்தினி வழிபாட்டில் தமிழ் மன்னர்களை மட்டுமன்றிப் பிறநாட்டு மன்னர்களையும் இணைத்து ஒற்றுமைப்படுத்துகிறார்.

அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.

வல்வினை வளைத்த கோலை மன்னவன் 
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது 

                             (சிலப்பதிகாரம்: 25: 98-99)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’ என்றும், ‘தேரா மன்னா’ என்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக் ‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’ என்று கூறுவது அவனது நேர்மைக்கு - செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.

அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது. அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.

பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது. போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம். இப்படிப் பல சிறப்புக்களைச் சொன்னாலும், தமிழகத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இல்லை என்ற உண்மையைப் பதிவு செய்யவும் இளங்கோ தவறவில்லை; அதற்காகவே ஒற்றுமை உணர்வை வளர்க்கவே அவர் சிலம்பைப் படைத்தார் எனலாம்.

2.3.2 சமயம்

சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவைஎன்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரிகொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது. இவை பல்வேறு சமயக் கடவுளருக்குரிய கோயில்கள் ஆகும். இப்படிப் பல சமயங்களை, சமயக் கருத்துகளை விருப்பு வெறுப்பு இன்றி எடுத்துரைக்கும் இளங்கோவடிகள், பத்தினி வழிபாடு என்ற ஒன்றில் அனைத்துச் சமயங்களையும், சமயக் குரவர்களையும் ஒருங்கிணைக்கிறார். இது இளங்கோவின் தனிச் சிறப்பாகும்.

2.3.3 சமூக வாழ்வு

இந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சாதியச் சமூகம் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற முறையிலும் இனக்குழுக்களான குறவர், ஆயர், வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெருவணிக குல மக்கள்; இவர்தம் வாழ்வியல் வளத்தோடு கணிகையர் குலம் இணைகிறது. பெருவணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறுவணிகர்களான அப்பம் விற்போர், பிட்டு விற்போர், பூவிலையாளர், இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன்கடை வீதி, இரத்தினக்கடை வீதி, தானியம் விற்கும் கூலவீதி, துணி விற்கும் அறுவை வீதி, நாளங்காடி (பகல் நேரச் சந்தை), அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதி தனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை, உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். இவ்வகையில் குறிப்பிடத்தக்கது பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பு ஆகும். வணிகரில் பெருவணிகர் இருக்கிற இடம் பட்டினப்பாக்கம்; சிறு வணிகர் வாழிடம் மருவூர்ப்பாக்கம்; உயர் படைத்தளபதிகள் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரணப் படைவீரர்கள் இருப்பிடம் மருவூர்ப்பாக்கம்; கணிகையரில் தலைக்கோல் பட்டம் பெறும் கணிகையர் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரண கணிகை வாழிடம் மருவூர்ப்பாக்கம்.

கோவலன்-கண்ணகி திருமணம் கூட நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படையில் சடங்குகள் கொண்டதாக அமைகின்றது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் (சிலப்பதிகாரம்: 1: 52-53) வந்துதிருமணம் நடக்கிறது. மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழாவில் ஆயிரம் கணிகையர் வாழ்த்துகின்றனர்; மிகப் பெரிய அளவில் தானம் செய்கிறான் கோவலன். இறந்தோர்க்காகக் கங்கை நீராடி நீர்க்கடன் செய்கிறான் அரசன். இந்திரவிழா புகார் நகரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு கடவுளர்களுக்கு வழிபாடு நடக்கிறது. தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி விழாவில் ஆடுகிறாள். இவை அனைத்துமே நகர்ப்புற நாகரிக வாழ்வின் வெளிப்பாடாக அமைகின்றன.

இவையன்றி நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறையும் சிலம்பில் சிறப்பிடம் பெறுகின்றது. வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் வேலன்-வள்ளி வழிபாடு, அம்மக்களின் ஆடல் பாடல்கள் முதலானவை நாட்டார் வாழ்வியலைச் சித்திரிப்பன. கோவலர் வாழ்க்கை குறையற்றது எனக் கவுந்தியடிகளால் சிறப்பிக்கப்படுகின்றது. வேட்டுவ மகள் சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, அம்மக்களால் தெய்வமாகவே வழிபடப்படுகின்றாள். வேட்டுவ மக்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தம்மையே பலிதருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன.

கோவல-கண்ணகியரைத் தனிமனைப்படுத்தும் நிகழ்ச்சி அக்காலத்தே தனிக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

அரசனும் அரசமாதேவியரும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். பாண்டிமாதேவி தான் கண்ட கனவினை அரசனுக்குத் தெரியப்படுத்தப் புறப்பட்டுவரும் காட்சி அவர்தம் ஆடம்பர வாழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இங்குப் பல்வேறு மகளிரும் பணியாட்களும் எண்ணற்ற அணிகலன்களையும், மணப்பொருட்களையும், ஒளி விளக்குகளையும் ஏந்திச் செல்கின்றனர். ஆடி (கண்ணாடி) ஏந்தினர்; கலன் ஏந்தினர்; அவிர்ந்து விளங்கு அணியிழையினர்; கோடி எந்தினர்; பட்டு ஏந்தினர்; கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் (சிலப்பதிகாரம்: 20: 13) என்று இவ்வாறு இளங்கோ காட்டும் காட்சி அரசியரின் பெருவாழ்வின் விளக்கமாக அமைகின்றது.

அரண்மனைப் பொற்கொல்லனை அறிமுகம் செய்கிறபோதும் கூட, அவன் நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஆடம்பரமாக வருவதாக இளங்கோ காட்டுகிறார். அதே நேரத்தில் துறவியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததும் இங்குக் குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்குச் சாபமிடும் ஆற்றலும், வருவதுணரும் ஆற்றலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனம் அரசன் முதல் ஆண்டிவரை பல்வேறு தளத்திலுள்ள மக்களின் வாழ்வியல் களஞ்சியமாகச் சிலம்பு திகழ்கிறது.

2.3.4 கலை

நாகரிகத்தின் வெளிப்பாடே கலை; இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள்கலைஞர்கள் கலைவாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் வழி அறிகிறோம். கோயில்கள் கோட்டம், நியமம், விகாரம், சிலாதலம் எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டன. கண்ணகிக்குச் சிலை வடித்தமை, கருங்கல்லில் சிலை செய்த செய்தியைப் புலப்படுத்துகிறது. சிலம்பின் அரங்கேற்று காதைதமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலைக்குச் சிறந்த சான்றாகும். நாட்டியக் கலையில் வேத்தியல்பொதுவியல் என இருவகை இருந்தமை தெரிகிறது. இங்குப் பாடல் ஆசான் இயல்பு, யாழாசிரியன் இயல்பு, குழல் வாசிப்பவன் இயல்பு, தண்ணுமை முழங்குவோன் இயல்பு என இசைக் கலைஞர்களின் இயல்பு தெளிவாக விளக்கப்படுகிறது. மாதவியின் நாட்டியத்திறன்அவளது ஒற்றைக்கைமற்றும் இரட்டைக்கை அவிநயம் பற்றிய விவரிப்புஅதனால் அவள்தலைக்கோல் அரிவை என்ற பட்டம் பெற்றது, நாட்டிய அரங்கம் (மேடை, விளக்குகள், திரைகள்) பற்றிய விளக்கம் ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இக் கலைகள் பெற்றிருந்த செல்வாக்கினை அறியத் துணைபுரிகின்றன. இவையன்றி மாதவி கடவுளர் வடிவுகொண்டு ஆடிய பாண்டரங்கம், குடை, துடி முதலான 11 வகைக் கூத்துகளும், கோவலன் முன்னின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புன்புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துகளும் தமிழர்தம் கூத்துக்கலைக்குச் சிறந்த சான்றாகும். அதோடு இன்றைய சாமியாட்டம் போன்று சாலினி தெய்வமுற்று ஆடிய கூத்தும், ஆய்ச்சியர் எண்மர் வட்டமாக நின்று ஆடிய குரவைக் கூத்தும் நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கூத்து வகைகளைப் புலப்படுத்துவன. கண்ணகி-பாண்டிமாதேவி சிலம்பு மற்றும் மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய விவரிப்பும் அக்கால நுண்கலைகளின் திறத்திற்குச் சான்றாகின்றன. இவ்வாறு, சிலம்பு ஒரு கலையின் களஞ்சியமாகத் திகழ்வதை அறிகிறோமன்றோ!

2.3.5 நம்பிக்கைகள்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (சிலப்பதிகாரம்: 5: 237,239) என்பதில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையும், வலக்கண் துடித்தால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது புலப்படுகிறது. கோவலன் கொல்லப்பட்ட அன்று குடத்துப்பால் உறையாது இருத்தல் முதலானவற்றை ஆய்ச்சியர்கள் தீய சகுனங்களாகக் கொள்கின்றனர். கோவல-கண்ணகியர் தாயரின் மறுபிறப்புப் பற்றிய செய்திபிறவிகள் தொடரும் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு விழா எடுக்கவில்லையானால் தீமை நிகழும் என்ற நம்பிக்கை வேட்டுவ வரி மூலம் சுட்டப்பெறுகிறது. வேட்டுவ வரி வேடர்களின் பலி கொடுக்கும் வழக்கத்தை எடுத்துரைப்பதோடு, தன்மூலம் கொற்றவை வெற்றி தருவாள் என்ற நம்பிக்கை இருந்ததையும் காட்டுகிறது. பத்தினிக் கடவுளுக்காகப் பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுச் சாந்தி செய்தான் என்ற செய்தியும் இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததைக் கோவலன், கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் கண்ட கனவுகள் புலப்படுத்துகின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard