வழங்கியவர்கள்: ஜெய கிருஷ்ண தாஸ் & ஸ்ரீ கிரிதாரி தாஸ்
ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.
பகவத் கீதை ஜாதி வேற்றுமையினைப் பரப்புகின்றது என்று கூறி, கீதையைப் படிக்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கூறுபவர்களும் உள்ளனர். ஜாதி அமைப்பின் நுணுக்கங்களை சிறு கட்டுரையில் எழுதிவிட முடியாது என்றபோதிலும், பகவத் கீதைக்கும் ஜாதிக்கும் இடையிலுள்ள விஷயங்களை அறிய முற்படுவோம்.
வர்ணாஷ்ரமம்–ஓர் அடிப்படை விளக்கம்
வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில் மட்டுமின்றி இதர வேத சாஸ்திரங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிக்கும்.
வர்ணத்தின் (அல்லது சமுதாயத்தின்) நான்கு பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் ஜாதி என்ற பெயரிலும் அறியப்படுகின்றன. இருப்பினும், ஜாதி என்ற வார்த்தைக்கு இன்றைய மக்கள் எடுத்துக்கொள்ளும் பொருளும் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளும் வேறுபட்டவை.
ஜாதி என்பதை இன்றைய சமுதாயம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வேத சமுதாயம் குணத்தின் அடிப்படையிலும் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் அதனை ஏற்றுக்கொள்கிறது. இன்றைய சமுதாயத்தில் பிராமணரின் மகனாகப் பிறந்தவன் பிராமண ஜாதியைச் சேர்ந்தவனாக ஏற்கப்படுகிறான்; ஆனால் முறையான சாஸ்திரங்களின்படி, ஒருவன் பிராமணரின் மகனாகப் பிறந்தாலும் அவனிடம் பிராமணத் தன்மைகள் இல்லாவிடில், அவன் பிராமணனாக ஏற்கப்படுவதில்லை.
சமுதாயப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, தகுதிகளின் அடிப்படையிலேயே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு மருத்துவரின் மகன், மருத்துவக் குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் மருத்துவனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா? நிச்சயம் இல்லை. அவனும் மருத்துவக் கல்வி பெற்று போதிய தகுதியை அடையும்போது, அவன் மருத்துவனாக ஏற்றுக்கொள்ளப்படுவான். அதுபோலவே, வேத சாஸ்திரங்களில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு பிரிவினருக்கும் சில தகுதிகள் விளக்கப்பட்டுள்ளன. அத்தகைய தகுதியுடையவர்கள் மட்டுமே அப்பிரிவுகளினுள் அடங்குவர். தகுதியற்ற நபர்கள் வர்ணத்திற்கு அப்பாற்பட்டவராக புறக்கணிக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணரால் படைக்கப்பட்ட பிரிவுகள்
இந்த நான்கு வர்ணங்களும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்டவை. கிருஷ்ணரே இதனை பகவத் கீதையில் (4.13) உறுதி செய்கிறார்: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம். இவை குணத்தின் அடிப்படையிலும் செய்யும் செயலின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார். குண-கர்ம-விபாகஷ:. பிறப்பின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிப்பதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் எங்கும் கூறவில்லை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட இன்றைய ஜாதி அமைப்பு கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.
பிரிவுகள் அவசியமா?
பிறப்பின் அடிப்படையிலா, தகுதிகளின் அடிப்படையிலா என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்–இந்த நான்கு பிரிவுகள் அவசியம்தானா என்ற கேள்வி எழலாம். அனைத்து மனிதர்களின் உடலிலும் சிகப்பு இரத்தம்தானே ஓடுகிறது, எதற்காக இந்தப் பிரிவுகள் என்று நினைக்கலாம். காரணத்தைக் காண்போம்.
உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும் பல்வேறு ஆசைகளைக் கொண்டுள்ளான். அவற்றை நிறை வேற்றுவதற்காக பல தரப்பட்ட உடல்கள் ஜீவன்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, நீர்வாழ்வன, தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் என மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன. ஜீவன்கள் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப, பல்வேறு உயிரினங்களில் மாறி மாறி பிறவியெடுத்து இவ்வுலகில் சுற்றிக் கொண்டுள்ளன.
ஜீவன்களின் உண்மையான நன்மையை என்றும் விரும்பும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கு மேலோட்டமான அனுமதியைக் கொடுத்தாலும், அவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற வேண்டும் என்று பேராவல் கொண்டுள்ளார். பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதர்களுக்கு மத்தியிலும் பலதரப்பட்ட ஆசைகளும் தன்மைகளும் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு சமுதாயத்தினை நான்கு வர்ணங்களாக அவர் பிரித்துள்ளார். இப்பிரிவுகளின் மூலம் புலனின்பத்தில் மூழ்கியுள்ள மக்களைப் படிப்படியாக அவற்றிலிருந்து விடுவித்து முக்தியடையச் செய்யும் வகையில் மொத்த வழிமுறையையும் அவர் வடிவமைத்துள்ளார்.
உண்மையில், உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிரிவுகள் உள்ளன. பிரிவுகளுக்கு ஏற்றாற்போல சமுதாயத்தில் மதிப்பும் உள்ளது. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் அங்கும் நான்கு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களை தரமுள்ளதாக வடிவமைப்பதற்கென்று இருக்கும் புத்திசாலிகள் ஒரு பிரிவினர்; தொழிற்சாலையை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர்; பொருட்களை மக்களிடையே கொண்டு சென்று வர்த்தகம் புரிவோர் மூன்றாம் பிரிவினர்; பணி புரிந்து பொருட்களை தயாரிப்பவர்கள் நான்காம் பிரிவினர். இத்தகைய பிரிவுகள் (துறைகள்) ஒரு தொழிற்சாலையில் இல்லாவிடில் அத்தொழிற்சாலை திறம்பட செயல்பட இயலாது.
அதுபோல, சமுதாயம் என்னும் தொழிற்சாலையிலும் நான்கு பிரிவினர் அவசியம். மக்களை தரமுள்ளவர்களாக வடிவமைப்பதற்காக ஆன்மீக விஷயங்களை எடுத்துக்கூறுபவர்கள் பிராமணர்கள் என்றும், சமுதாயத்தை நிர்வகித்து மக்களைப் பாதுகாப்பவர்கள் சத்திரியர்கள் என்றும், விவசாயம் செய்து வாணிபம் செய்பவர்கள் வைசியர்கள் என்றும், உடலால் உழைத்து வாழ்பவர்கள் சூத்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தொழிற்சாலையின் ஒவ்வொரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவருக்கும் குறிப்பிட்ட தகுதிகள் இருப்பதுபோல, சமுதாயத் துறைகளிலும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தகுதிகளும் கடமைகளும் உள்ளன.
பிராமணரின் கடமைகள்
மனித சமுதாயத்தினை ஓர் உடலுடன் ஒப்பிட்டால், பிராமணர்கள் அதன் தலையைப் போன்றவர்கள். அவர்கள் வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், மற்றும் பஞ்சராத்ரங் களைக் கொண்டு, கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தினை அறிந்து, சமூகத்தின் மற்ற பிரிவினர்களுக்கு உபதேசித்து வழிநடத்துவர். இவர்கள் சம்பளம் எதுவும் பெறாமல், தானம் பெற்று தங்களது வாழ்வை நடத்த வேண்டும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் உள்ள ஒரு கடமையாகும். இவர்கள் ஸத்வ குணத்தில் இருத்தல் அவசியம்.
“அமைதி, சுயக் கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவை பிராமணரின் தன்மைகள்.” (பகவத் கீதை 18.42)
சத்திரியரின் கடமைகள்
சமுதாய உடலின் கைகளாகக் கருதப்படும் சத்திரியர்களின் முக்கிய கடமை மக்களைப் பாதுகாப்பதாகும். காட்டு விலங்குகள், எதிரிகள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றிலிருந்து இவர்கள் மக்களைக் காப்பர். மேலும், மக்கள் அனைவரும் தர்மத்தின்படி வாழ்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டியதும் இவர்களின் கடமை. இவர்கள் அரசாங்கப் பணிக்காக மக்களிடம் வரி வசூலித்துக் கொள்ளலாம். நாட்டில் மக்கள் செய்கின்ற பாவங்களில் அரசர்களுக்கும் பங்கு உண்டு என்பதால், பிராமணர்களின் உதவியுடன் சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்குவதற்கு இவர்கள் பாடுபடுவர். சத்திரியர்கள் ரஜோ குணத்தைச் சார்ந்தவர்கள்.
“சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியர்களின் தன்மைகள்.” (பகவத் கீதை 18.43)
வைசியர்களின் கடமைகள்
வைசியர்கள் சமுதாய உடலின் வயிற்றைப் போன்றவர்கள். விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை இவர்களது முக்கியப் பணிகள் (பகவத் கீதை 18.44). சமுதாயத்திலுள்ள மற்ற மூன்று பிரிவினர்களுக்கும் இவர்களே பொருளாதார ஆதாரம். அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்வதும் தர்ம செயல்களைச் செய்வதும் இவர்களின் பணியாகும். வைசியர்கள் ரஜோ குணமும் தமோ குணமும் இணைந்த தன்மையுடையவர்கள்.
சூத்திரர்களின் கடமைகள்
சமுதாயத்தின் கால்களாக வருபவர்கள் சூத்திரர்கள். இதர வர்ணத்தினருக்கு உடலால் உழைத்து உதவி செய்தல் இவர்களின் கடமையாகும். (பகவத் கீதை 18.44) சூத்திரர்கள் தமோ குணத்தைச் சார்ந்தவர்கள்.
ஒருவரைக் காட்டிலும் மற்றவர் சிறந்தவரா?
ஓர் உடலுக்கு அனைத்து உறுப்புகளும் இன்றியமையாதவை. மூளை, கைகள், வயிறு, கால்கள் என அனைத்தும் வேண்டியவை. இதில் எந்தவொரு உறுப்பை இழப்பதற்கும் நாம் விரும்புவதில்லை. இருப்பினும், நடைமுறையில் பார்த்தால், மூளை சரியாக இருந்தால் மட்டுமே மற்ற உறுப்புகள் சரியாக இயங்க முடியும் என்பதால், “எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம்” என்று கூறிடுவர். அதன்படி, முறையான பிராமணர்கள் சமுதாயத்தின் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்குத் தகுந்த மரியாதையைப் பெறுகின்றனர். பிராமணர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்யும் சத்திரியர்கள், அதற்கு அடுத்த நிலையில் மதிக்கப் படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து, வைசியர்கள், சூத்திரர்கள் என அனை வரும் மதிக்கப்படுகின்றனர். தலை மட்டும் இருந்தால் போதும், மற்ற பாகங்கள் தேவையற்றவை என்று யாரும் கூறமாட்டார்கள்.
அனைவரும் சமம் என்று பெயரளவில் வாதிடக்கூடிய இன்றைய சமுதாயத்தில்கூட, ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றாற்போல மதிப்பும் மரியாதையும் வேறுபடுகின்றன என்பதை நாம் காணலாம். நாட்டின் முக்கியஸ்தர்களான ஆட்சியாளர் களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அதிகமான மதிப்பு கொடுக்கப்படுவதை மறுக்க இயலாது. அனைவரும் சமம் என்றால், விஐபி என்று ஒரு பிரிவினர் எதற்காக? அவர்களுக்கு மட்டும் உயர்ந்த பாதுகாப்பு வசதிகள் எதற்காக? அனைவரும் சமம் என்ற பேச்சுகள், வெறும் மேடைப் பேச்சுகளே. தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் அறியப்படுவது இயற்கையே.
பொதுவுடைமை பேசும் மக்களிடையேயும் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏற்றத்தாழ்வு நிலைகள் உண்டு. அறிவுள்ளவர்களே தலைவர்களாக வேண்டும். இல்லை என்றால் இயக்கம் காணாமல் போய்விடும். அதுபோன்று கடவுளை உணர்ந்த அறிவுடைய நபர்களே சமூகத்தினை வழிநடத்த வேண்டும்.