New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகாசுரன் தமிழனா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நரகாசுரன் தமிழனா?
Permalink  
 


 

நரகாசுரன் தமிழனா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்ற நன்னாளை நாம் அனைவரும் தீபாவளியாகக் கொண்டாடுகிறாம். நரகாசுரன் நாட்டின் எந்தப் பகுதியைச் சார்ந்தவன்? அவன் ஒரு தமிழனா? சுருக்கமாகக் காண்போம்.

வருணனின் குடையையும் அதிதியின் குண்டலங்களையும் திருடிய நரகாசுரன் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்தான். மேலும், பல்வேறு நாடுகளைச் சார்ந்த 16,100 இளவரசிகளைக் கடத்தி வைத்து துன்புறுத்தினான். எனவே, கிருஷ்ணர் ஸத்யபாமாவுடன் சென்று போர் புரிந்து, இறுதியில் தமது சுதர்ஸன சக்கரத்தின் மூலமாக அவனைக் கொன்றார்.

நரகாசுரனின் தலைநகரம் பிராக்ஜோதிஸபுரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஸ்ரீமத் பாகவதம் 10.59.2, 12.12.39). இவ்விடம் இன்றைய அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஒரு பகுதியாகும்.

நரகாசுரனின் வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில், குறிப்பாக பிரபலமான காமாக்யா கோயிலை உள்ளடக்கிய காமரூபம் என்ற பகுதியில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காமாக்யா தேவியை திருமணம் செய்துகொள்ள விரும்பி நரகாசுரன் செய்த விசித்திர செயல்கள் யாவும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய வரலாற்றில் நன்கு அறியப்படும் கதைகளாகும். கௌஹாத்திக்குத் தெற்கிலுள்ள ஒரு மலை நரகாசுரனின் பெயரில் அங்கே அமைந்துள்ளது.

நரகாசுரனின் மகனான பகதத்தனை பிராக் ஜோதிஸ புரத்தின் மன்னனாக மஹாபாரதத்தில் பல இடங்களில் காண்கிறோம். பிற்காலத்தில் கௌரவர்களின் சார்பாக அவன் குருக்ஷேத்திர யுத்தத்தில் கலந்து கொண்டான் என்பதையும் போரின் பன்னிரண்டாவது நாளில் அர்ஜுனனால் கொல்லப் பட்டான் என்பதையும் மஹாபாரதம் அறிந்தவர்கள் அறிவர். பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்த மூன்று வம்ச மன்னர்களும் நரகாசுரனின் வழிவந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

 
 

உண்மை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் ஸநாதன தர்மத்தின் கொள்கைகளை மறுத்துப் பேச வேண்டும் என்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கொஞ்சம்கூட அறிவின்றி செயல்படும் சில முட்டாள்கள், நரகாசுரன் தமிழ்நாட்டைச் சார்ந்தவன் என்றும், தீபாவளிப் பண்டிகை தமிழர்களின் (அல்லது திராவிடர்களின்) மீதான ஆரியரின் படையெடுப்பு என்றும் பிதற்றுகின்றனர். உண்மையை அறியாத சில மக்களும் நரகாசுரனை நல்லவன் என்றும், தமிழன் என்றும் நம்புகின்றனர். என்னே விந்தை! பல முறை ஒரு பொய்யைத் திருப்பிச் சொல்லி அதனை மக்கள் மனதில் பதித்து விடுகின்றனர்.

நரகாசுரன் தமிழன் என்றால், அவன் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? சாஸ்திரங்கள் அவனது இடம் பிராக்ஜோதிஸ புரம் என்று கூறுகின்றன. அஸ்ஸாம் பகுதியில் அந்த இடம் தொன்றுதொட்டு நரகாசுரனின் இடமாக அறியப்பட்டு வருகிறது. அதுபோன்ற இடம் தமிழகத்தில் உண்டா என்றால், நிச்சயம் இல்லை. சாஸ்திர ஆதாரமும் கிடையாது, வரலாற்று ஆதாரமும் கிடையாது. ஆனால் ஒன்றுமறியா அப்பாவி மக்களை ஏமாற்ற வாய்க்கு வந்ததை உளறுகின்றனர். இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், நரகாசுரனைத் தமிழனாகக் கூறும் கேடு கெட்ட முட்டாள்கள் கிருஷ்ணர் என்று ஒருவர் வாழ்ந்ததையே ஏற்க மறுப்பவர்களாக (அதாவது, நாஸ்திகர்களாக) இருக்கின்றனர். கிருஷ்ணர் என்று ஒருவர் வாழவே இல்லை; ஆனால் அவர் நரகாசுரனைக் கொன்றார்.”ஶீஇந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது.

இஃது ஒருபுறம் இருந்தாலும், கன்னிப் பெண்களைக் கடத்திச் சென்று அடைத்து வைத்து துன்புறுத்துபவன் யாராக இருந்தாலும், அவனை யாம் எதிர்க்க வேண்டியது அவசியம். அவன் தமிழன் என்பதால், அவனை எதிர்ப்பதைக் கைவிட்டு ஆதரிக்கத் தொடங்கினால், அஃது எந்த விதத்தில் நியாயம்? நரகாசுரனை ஆதரிப்பவர்கள் தங்களது மகள் அல்லது தங்கைமார்களை யாரேனும் ஒரு தமிழன் (வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்) கடத்திச் சென்று துன்புறுத்தினால், அவ்வாறு துன்புறுத்தியவனை நல்லவனாக நினைத்துக் கொண்டாடுவார்களா? சிந்திப்பீர்!

யார் எதைக் கூறினாலும் அதை நம்புவதற்கு ஓர் அப்பாவிக் கூட்டம் உள்ளது. அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, போலி தகவல்களைப் பரப்பி மக்களிடையே வெறுப்பையும் பிரிவுணர்ச்சியையும் வளர்க்கக்கூடிய நாஸ்திக அயோக்கியர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதுபோன்று எதையும் செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கே ஸநாதன தர்மத்தின் உண்மைகள் தெரியாது. எனவே, குறைந்தபட்சம் பகவத் தரிசன வாசகர்களாவது உண்மையை அறிந்து, நரகாசுரனுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அனைவருக்கும் எடுத்துரைப்போமாக.

16,100 பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நரகாசுரனைக் கொன்று மக்களுக்கு மகிழ்ச்சியூட்டிய கிருஷ்ணரை எண்ணி தீபாவளியைக் கொண்டாடுவோமாக.

குறிப்பு: இதே போன்ற மற்றொரு கற்பனையான தகவல், இராவணன் ஒரு தமிழன் என்னும் கருத்து. இதுகுறித்த உண்மையினை யாம் 2018 இராம நவமியின் தருணத்தில் விரிவாக வெளியிட உள்ளோம்.

 

 
 

அதிதியின் குண்டலத்தினை பூமி தேவி கிருஷ்ணரிடம் ஒப்படைத்தல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

 
 
 

மனித உடலை அடைவது மிகமிக கடினம்

 

பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29)

பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)

எனவேதான், தமிழ் கூறும் நல்லுலகமும், அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறது.

மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் பாகவதத்தில் (11.7.22) கூறுகிறார், பல்வேறு வகையான உடல்களில் மனித ரூபமே உண்மையில் எனக்கு பிரியமானதாகும்.” ஆனால் இன்றைய மக்களோ இவ்வாறு அரிதாக பெறப்பட்ட, பகவானுக்கு பிரியமான மனித வாழ்வைச் சீரழிக்கின்றனர்; அவர்கள் முறைதவறிய பாலுறவு, மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல், சூதாட்டங்களில் ஈடுபடுதல் முதலிய புலனின்ப வாழ்வில் மனிதப் பிறவியை ஈடுபடுத்தி விபரீதத்தை உணராமல் சீரழிகின்றனர்.

 

மனித உடலிலிருந்து வீழ்ச்சியடையும் அபாயம்

 

இன்றைய கல்விக்கூடங்களிலோ குடும்ப, சமூக அமைப்புகளிலோ, மக்களுக்குத் தேவையான ஆத்ம ஞான விஷயங்களைக் குறித்து போதிக்காமல், புலனின்பத்தின் அடிப்படையிலேயே அவர்களை ஊக்குவித்து ஏமாற்றுகின்றனர். எனவே, பெரும்பாலான மக்கள் மனித வாழ்விற்குக் கீழே உள்ள 80 இலட்சம் உயிரினங்களில் வீழ்ந்து விடுகின்ற ஆபத்தை அறியாதவர்களாகவே உள்ளனர்.

பற்பல பிறவிகளுக்குப் பிறகே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை ஒருவன் அடைகிறான். அது நிலையற்றது என்றாலும், மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, நிதான புத்தியுள்ள ஒருவன் வாழ்வின் முடிவான பூரணத்துவத்தை அடைய உடனே முயற்சி செய்து, முடிவற்ற பிறவி சக்கரத்தில் வீழ்வதிலிருந்து காத்துகொள்ள வேண்டும். மிகவும் வெறுக்கத்தக்க உயிரினங்களுக்குக் கூட (கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை எந்த சிரமமும் இன்றி) புலனின்பம் கிடைக்கின்றது. ஆனால் கிருஷ்ண உணர்வு என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியம் என்று ஸ்ரீமத் பாகவதம் (11.9.29) கூறுகிறது.

 

மறுபிறவியின் மீது நம்பிக்கை

 

ஆன்மீக நம்பிக்கையுடைய சிலரும்கூட, மறுபிறவியின் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர். அப்படி மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்களாக சிலர் இருந்தாலும், மனித ரூபத்திலுள்ள ஜீவராசிகள் மிருகம், பறவை, தாவரம் என தாழ்ந்த இனங்களுக்கு இழிவடைவதில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் இப்படியெல்லாம் நாம் நினைத்தாலும், நமது தற்போதைய செயலுக்கேற்ப கடவுளின் சட்டங்களினால் நாம் உயர்த்தப்படுவோம் அல்லது தாழ்த்தப்படுவோம் என்று பகவத் கீதை (8.6ஶி7) கூறுகிறது. அதாவது, நமது மறுபிறவி எந்தவோர் உயிரினத்திலும் நிகழலாம். நாம் மனிதராக, மிருகமாக, மரமாக, பறவையாக என்று எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம்.

 
 

அடுத்த உடலை முடிவு செய்பவை

 

பரத மன்னர், மிகச்சிறந்த நபராக விளங்கியபோதிலும் தமது வாழ்வின் இறுதியில் ஒரு மானை எண்ணியதால், அவர் தமது மறுபிறவியில் ஒரு மானின் உடலை ஏற்க நேர்ந்தது. இருப்பினும், அவரது உயர்ந்த பக்தி நிலையினால், அவர் மானாக இருந்தும்கூட, தமது முந்தைய பக்தி செயல்களை நினைவிற்கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ நம்மில் பலர் வீடுகளில் நாய், கோழி, மீன் போன்ற இழிவடைந்த உயிரினங்களை வளர்ப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறோம். ஆன்மீக அறிவு சிறிதும் இல்லாத நிலையில் மரண நேரத்தில் நாம் வளர்க்கும் அந்த உயிரினங்களை நினைவிற்கொள்வதால் நாம் அடையும் நிலையை எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா என்றால், நிச்சயமாக இல்லை.

 

மனித உடலில் செய்ய ஒண்ணாதவை

 

பந்தப்பட்ட ஆத்மாவின் முக்திக்கு உதவும் பொருட்டே கடவுள் குறிப்பாக மானிட ரூபத்தை நமக்கு அளித்துள்ளார். எனவே, மனித வாழ்வை துஷ்பிரயோகம் செய்பவன், நரகத்தின் பாதையை அமைத்துக்கொள்கிறான் என்கிறது சாஸ்திரங்கள். ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில் பகவான் ரிஷபதேவர், தமது மைந்தர்களிடம் கூறுகிறார், அரிதான மனித உடலைப் பெற்றவன் கேவலமான புலனுகர்ச்சிக்காக இரவும் பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இந்தப் புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கூட கிடைப்பதாகும். பக்தித் தொண்டின் தெய்வீக நிலையினை அடைவதற்காக ஒருவன் தவத்திலும் துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும். இச்செயல்களால் ஒருவனது உள்ளம் தூய்மையடைகிறது. மேலும், ஒருவன் இந்நிலையினை அடையும்போது, அவன் பௌதிக இன்பத்திற்கு மேலானதும் நிரந்தரமானதுமான ஆனந்த வாழ்வினை எய்துகிறான்.”

இதையே தொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலையில் கூறுகிறார்:

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்

பெரியதோ ரிடும்பை பூண்டு

உண்டிராக் கிடக்கும்போதும்

உடலுக்கே கரைந்து நைந்து

தண்டுழாய் மாலை மார்பன்

தமர்களாய்ப் பாடியாடி

தொண்டுபூண் டமுத முண்ணாத்

தொழும்பர்சோ றுகக்குமாறே!

ஒருவன் பெரும் சிரமத்துடன் செல்வத்தைச் சேகரித்து, பெண்களிடமிருந்து (உடலுறவு) சுகங்களை ஏற்று, உண்பது, உறங்குவது மற்றும் தனது உடலே தான் என எண்ணி அதற்காகவே தன்னை வருத்திக் கொண்டு வாழ்கிறான். அவன் தமது மார்பில் திருத்துழாயை (துளசி) மாலையாக அணிந்தவரின் (பெருமாளின்) அடியவர்களாய் அவரது நாமத்தைப் பாடி-ஆடி தொண்டு செய்து பகவானின் பிரசாதமாகிய அமுதத்தை விரும்பாவிடில், அவன் உகப்பது எத்தகைய சோறு!”

 
 

ஆத்ம ஞானம் பெற தகுதி வாய்ந்த மனித உடல்

 

மனித உருவிலுள்ள வாழ்வில், ஆத்ம ஞானத்தை புரிந்துகொள்வதற்குரிய அறிவை ஆத்மா முழுமையாக பெற்றுள்ளான். எனவே, மனித வாழ்வில் ஆத்மாவால் உயர்ந்த ஞானத்தைப் பேச முடியும், உண்மையைக் காண முடியும், எதிர்காலத்தை அறிய முடியும்; மேலும், இவ்வுலகம், மறுவுலகம் ஆகிய உண்மை நிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்துள்ள மனித உடலிலுள்ள ஆத்மா மரணமற்ற வாழ்வை அடைய முயற்சிக்கக் கூடும். இந்த நிலையை அடைய மனித உடல் முழு தகுதி உடையதாக இருக்கிறது. ஆனால் இத்தகைய மேலான ஒரு நிலையில் உள்ள ஆத்மாவோ, உண்ணுதல், உறங்குதல் முதலான சாதாரண மிருகச் செயல்களில் ஆர்வம் கொண்டு வாழ்வை வீணடிக்கிறது.

ஸ்ருதி மந்திரங்கள் தாழ்ந்த உயிரினங்கள் சிருஷ்டியின் நோக்கத்தை நிறைவேற்ற பொருத்த மானவை அல்ல என்றும், மனித வாழ்வே கடவுளுடனான நித்திய உறவைப் புரிந்துகொள் வதற்கானது என்றும் கூறுகின்றன. எனவே, ஒருவன் பௌதிகப் புலன்களை அடக்கி மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், பரம புருஷர் மிகவும் மகிழ்ந்து அந்த பக்தனுக்குப் படிப்படியாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

எனவேதான் பகவத் கீதை (2.64) எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழு கருணையை அடைய முடியும் என்கிறது.

 

மானிட ஜென்மத்தின் கடமை

 

ஜீவாத்மா சில சமயங்களில் ஒரு மிருகத் தாயிடமும் தந்தையிடமும் தஞ்சமடைகிறான், சில சமயங்களில் பறவைகளைத் தனது தாய்தந்தையாகவும், சில சமயங்களில் தேவர்களை தனது தாய்தந்தையராகவும் ஏற்றுக்கொள்கிறான். எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், எல்லா உயிர்வாழிகளும் தத்தமது கர்மத்தின் அடிப்படையில், பிரபஞ்சம் முழுவதும் திரிந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலர், மேலுலகங்களுக்கு உயர்த்தப்படுகின்றனர், சிலர் கீழுலகங்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு திரியக்கூடிய கோடிக்கணக்கான உயிர்வாழிகளில், மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பவன், கிருஷ்ணரின் கருணையினால் உண்மையான ஆன்மீக குருவுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுகிறான். கிருஷ்ணர், ஆன்மீக குரு ஆகிய இருவரின் கருணையினால் அத்தகு நபர் பக்தி கொடிக்கான விதையினைப் பெறுகிறான். (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.151)

ஆத்மா வெவ்வேறு உடல்களுக்கு மாறிமாறிச் செல்லும்பொழுது, மனிதன், மிருகம், மரம், தேவர் முதலிய தாய்தந்தையரைப் பெறுகின்றனர். ஆனால், உண்மையான ஆன்மீக குருவையும் கிருஷ்ணரையும் அடைவதுதான் கடினம். ஆகவே, கிருஷ்ணரின் பிரதிநிதியாக உள்ள உண்மையான ஓர் ஆன்மீக குருவை அடையும் வாய்ப்பைப் பற்றிக்கொள்வதே அரிதாகப் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் கடமையாகும்.

 
 

பக்தர்களின் வழிகாட்டலில் ஆன்மீக உலகை அடைதல்

 

ஸ்ரீமத் பாகவதத்தில் (11.20.17) பகவான் கூறுகிறார், வாழ்வின் எல்லா நன்மைகளையும் அளிக்கக்கூடிய மானிட உடல் அடைவதற்கு அரியது, இதை ஒரு படகுக்கு ஒப்பிடலாம். குரு இந்தப் படகின் திறமையான படகோட்டியாவார். மேலும், நான் (பகவான்) அனுகூலமான காற்றுகளை (வேதங்களை) அனுப்பியுள்ளேன். இவ்வாறு பௌதிக வாழ்வின் பெருங்கடலைக் கடப்பதற்குரிய எல்லா வசதிகளையும் அளித்துள்ளேன். மனித வாழ்விற்குரிய இச்சிறந்த வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும், பௌதிகப் பெருங்கடலை கடக்காதவன் தன்னையே (ஆத்மாவையே) கொன்றவனாகக் கருதப்படுகிறான்.” எனவே, தொடர்ச்சியான பிறப்பும் இறப்பும் கொண்ட இந்த பௌதிக வாழ்வைத் துறந்து, பகவானையும் அவரது உலகையும் வாழ்வின் இறுதி இலட்சியமாக ஏற்க கற்றறிந்த ஆன்மீக நபர்களின் சகவாசத்தையும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குருவையும் ஏற்போமாக.

ஆன்மீக தந்தையான ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் ஒருவனால் ஆன்மீக உலகிற்குத் திரும்பிச் செல்ல முடியும். இந்த அரிதான மானிட வாழ்வானது அனுபவமுள்ள, தன்னுணர்வு பெற்ற பகவத் பக்தர்களின் வழிகாட்டலின் கீழ் கிருஷ்ண உணர்வை விருத்தி செய்வதற்காகவே உள்ளது என்பதை அறிந்து, குரு, சாது, சாஸ்திரங்களின் அடிப்படையிலான வாழ்வை ஏற்று மனித வாழ்வின் குறிக்கோளை அடைவோமாக.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard