வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டாளின் சிறப்புமிக்க மார்கழி மாதத்தில், இச்செயல் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. கடுமையாகக் கண்டிக்கின்றோம், பேசியவனின் சொற்களில் உள்ள அடிப்படைப் பிழைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆண்டாளின் உணர்ச்சிகள்
ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் சில உணர்ச்சிமிக்க வாக்கியங்களைக் கொண்டு அவளது உணர்வினை இவ்வுலகின் பாலுணர்வோடு கவிஞன் ஒப்பிட்டுள்ளான். மடமையிலும் மடமை. ஆண்டாளின் உணர்ச்சிகளை மாபெரும் பக்தர்கள், ஆச்சாரியர்கள் முதலிய புலனடக்கம் கொண்ட பல்வேறு மகான்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவளது உணர்ச்சிகளில் துளியளவும் காமம் கிடையாது, அவ்வாறு இருந்திருந்தால், மகான்கள் அவளை மனமார போற்றி அவளது கடைக்கண் பார்வைக்காக ஏங்கியிருக்க மாட்டார்கள். அந்த ஆச்சாரியர்களைக் காட்டிலும் இந்த கவிஞன் புத்திசாலியோ? அப்படித்தான் நினைத்துக் கொண்டுள்ளான் தன்னை. இல்லையெனில், இவ்வாறு உரைத்திருப்பானா?
ஆண்டவனையே அடக்கியாளும் ஆளுமை ஆண்டாளின் அன்பிற்கு இருந்தது. இதெல்லாம் புலனடக்கம் கொண்ட பெரியோர்களால்கூட எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள். இவ்வாறிருக்க, மதுவிலும் மாதுவிலும் மதியை இழந்த மக்கு மாந்தர்களால் அவளது தெய்வீக உணர்ச்சிகளை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?
கல்லினுள் ஐக்கியமாகுதல்
ஆண்டாள் எவ்வாறு கல்லினுள் ஐக்கியமானாள் என்பதில் கவிஞன் ஐயம் எழுப்புகிறான். முட்டாளின் கண்களுக்கு எங்கள் அரங்கன் வெறும் கல்லாகத் தோன்றலாம், ஆனால் ஆண்டாளின் அகன்ற விழிகளுக்கு அரங்கன் அப்படியே அரங்கனாகவே தோன்றினான். பக்திப் பக்குவத்தில் கணிந்திருந்த கோதையினால் அரங்கனை அப்படியே காண முடிந்தது. கவிஞனின் காமக் கண்களுக்கு காட்சியளிப்பதில்லை எங்கள் அரங்கன். அதனால் அந்தக் கவிஞன் அவரை வெறும் கல்லாகக் காண்கிறான் என்பதில் ஆச்சரியமில்லை.
ஆண்டாளுக்குப் பிந்தைய காலத்தில் தோன்றிய இராமானுஜாசாரியர், மத்வாசாரியர் முதலியோரின் மறைவும்கூட விசித்திரமானவையே; ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ஆண்டாளைப் போலவே கிருஷ்ண விக்ரஹத்தினுள் பிரவேசித்து தமது லீலைகளை நிறைவு செய்தார். மாபெரும் பக்தரான துக்காரமர் விண்ணில் மறைந்தார். இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துரைக்கலாம். ஆனால் அவை எதையுமே ஆண்டாளின் ஆண்டவனான அந்த அரங்கனின் அருளற்ற அற்பர்களால் அறியவியலாது.
ஆண்டாளின் பிறப்பு
ஆண்டாளின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் தெளிவில்லை என்றும் அதனால் அவளை பிராமண குலம் அங்கீகரிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் தனது கற்பனைத் திறனை கவிஞன் அவிழ்த்துவிட்டுள்ளான். ஆண்டாள் பூதேவியின் அவதாரம் என்பதை அனைத்து சான்றோர்களும் அறிவர். உலகிலுள்ள அனைவருக்கும் பிறப்பளிக்கும் பூதேவி மற்றொருவரின் வயிற்றில் பிறக்காமல் இவ்வுலகில் தோன்றினாள். இதில் தொன்றுதொட்டு வரும் அறிஞர்கள் எவருக்கும் எந்த ஐயமும் இருக்கவில்லை. ஆனால் ஆன்மீகப் பெருமைகள் மிக்க திராவிட மண்ணில் திராவிடம் என்ற பெயரில் நாத்திகத்தை விதைத்துவிட்ட தீயோர்களால் நிச்சயம் இதனைப் புரிந்துகொள்ள முடியாது.
வயலில் கிடைத்த சீதையை அனைவரும் ஜனகரின் மகளாக ஏற்றனர், தோட்டத்தில் கிடைத்த ராதையும் விருஷபானுவின் மகளாக ஏற்கப்பட்டாள். அதுபோலவே, துளசித் தோட்டத்தில் கிடைத்த ஆண்டாளும் பெரியாழ்வாரின் மகளாக ஏற்கப்பட்டாள். இதில் எவருக்கும் எந்த ஐயமும் இருப்பதில்லை. ஆனால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாயளவில் கூறிக் கொண்டு ஜாதியை வளர்ப்பதில் அதிலும் குறிப்பாக உயர் ஜாதியினரை இகழ்வதில் ஈடுபட்டுள்ளவர்களால், நிச்சயம் பூதேவியின் அவதாரமான ஆண்டாள் நேரடியாக பூமியில் தோன்றினாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.
ஏன் கண்டனம்?
ஆண்டாளின் மகத்துவங்களை இந்த அறிவற்ற பெயரளவு கவிஞனால் உணர முடியாது என்னும் பட்சத்தில், ஏன் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வினவலாம். ஆம், தெரியாத விஷயத்தைப் பற்றி தெரிந்தவனைப் போல பேசியதற்காகக் கண்டிக்கிறோம். அறியாத விஷயத்தை அறிந்தவனைப் போல வார்த்தை ஜாலங்களுடன் பேசியதற்காகக் கண்டிக்கிறோம். மக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டும்கூட மன்னிப்பு தெரிவிக்காமல் வெறும் வருத்தம் தெரிவிக்கும் அந்த பண்பற்ற புத்தியைப் பழிக்கின்றோம்.
வைணவர்கள் வம்பு தும்பிற்கு வர மாட்டார்கள் என்ற துணிவில் வரம்பு மீறிய துஷ்டனைத் தூற்றுகிறோம். அகிலத்தின் அன்னையான ஆண்டாளின் அருமை பெருமைகளை அகிலம் அறியட்டும் என்று அன்பைக் காட்டுகிறோம், அந்த அன்பினாலேயே ஆர்ப்பரிக்கின்றோம், அரசே, ஆணையிடு என்று ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்கிறோம். நெஞ்சில் பாய்ச்சப்பட்ட ஈட்டியின் வலி தாங்காமல் கதறுகிறோம்.
அன்னையே, அந்த அற்பனின் அற்ப மொழிகளை எனது இதயம் தாங்கிவிட்டதே என்பதை எண்ணி உம்மிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்.