New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகளில் முருகியல் முனைவர் அ. ஜான் பீட்டர்,


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகளில் முருகியல் முனைவர் அ. ஜான் பீட்டர்,
Permalink  
 


அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகளில் முருகியல்
முனைவர் அ. ஜான் பீட்டர்,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி,
திருவாரூர் – 610 003
 
17dec-kol-03_-T_19_1304594e.jpg
 
 
 இலக்கியங்கள் அறிவூட்டவும் உணர்வூட்டவும் படைக்கப்படுகின்றன. இலக்கியங்கள் கற்பனைப் படைப்பாகவோ படைப்பாளியின் சமூக அனுபவங்களாகவோ இருக்கலாம். அதனால் ஒரு படைப்பாளியின் படைப்பில் காணும் நிகழ்வுகள், செய்திகள் யாவும் எத்தளவிற்கு உண்மையின் பாற் பட்டன என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இலக்கியப் படைப்புகள் தரும் செய்திகள் ஒரு சமுகத்தின் அரசியல் சமுக பண்பாட்டு வரலாற்றையோ அறிவு முதிர்ச்சியையோ பிரதிபலிக்கின்றன என்று கருதுவதா அன்றி வெறும் கற்பனைப் புனைவுகள் என்று அவற்றை ஒதுக்கி விடுதலே நன்றெனக் கருதுவதா என்று இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படும் தமிழ்ச்சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. நூற்றுக்கணக்கான சங்க கால மன்னர்கள், குறுநில மன்னர்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் புறத்திணை இலக்கியங்களில் மட்டுமில்லாமல் அகத்திணை இலக்கியங்களிலும் இடம் பெறுகின்றன. பொது நிலையில் சில வரலாற்று ஆசிரியர்களும் விமர்சகர்களும் கவிதை இலக்கியங்களை வரலாற்று ஆதாரங்களாகக் கொள்வதற்கில்லை என்று உறுதிபடக் கூறி, இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சங்க வரலாற்றினையும் அடிப்படையற்றவை என்று புறந்தள்ளுகின்றனர்.
புரவலர்களைப் புகழ்ந்தும்  போற்றியும் பொருள்களைப் பரிசில்களாகப் பெறுவதற்காகப் புலவர்கள் எழுதிய மிகைப்படுத்துதலுடன் கூடிய வெற்றுப் புகழ்ச்சிப் பாடல்கள்தானே சங்க இலக்கியப் பாடல்கள் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் கொள்ளப்பட்ட முடிவு அது என்பது வருந்துதற்குரியது. ஆனால் வரலாற்றைப் பதிவு செய்யும் பணியைச் சங்க இலக்கியங்கள் எவ்வளவு நுட்பமாகச் செய்கின்றன என்று இலக்கியங்களைப் படித்துப் பார்த்து நடுநிலை நோக்குடன் அவர்கள் இம்முடிவிற்கு வருவதில்லை என்பது வரலாற்று அறிஞர்களின் முடிபு.
சேர அரசர்களைப் பற்றிய பதிற்றுப் பத்து தொகுப்பும் வீரயுகப்பாடல் தொகுப்பெனக் கருதப்படும் புறநானுறும் சங்க கால மன்னர்களது போர் வீரம் கொடை இவற்றைக் கூறும் நூல்கள் ஆகும். பத்துப்பாட்டுள்ளும் ஆற்றுப்படை நூல்களும் பட்டினப்பாலை போன்ற நூல்களும் வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இவையன்றி , அகநானூறு போன்ற அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான நூல்களும் சங்க கால வரலாற்றுக் குறிப்பினை ஏராளமாகக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பானதாகும். வரலாற்று நிகழ்வுகளை உவமையாகக் கூறுதல், பிண்ணனியாகக் கூறுதல் போன்ற உத்தி முறைகள் இப்பாடல்களில் கையாளப்பட்டுள்ளன.
அகநானூற்று நூல் தொகுப்பில் 400  அகப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 13 அடி முதல் 31 அடி வரையிலான நெடிய பாடல்களாக அவை அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் நெடிய பாடல்களாக இருப்பதாலேயே வரலாற்றுக்குக்குறிப்புகளை விரிவாக குறிப்பிடவும் வாய்ப்பாய் அமைந்துவிடுகிறது. களிற்றுயானைநிறை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பகுப்புகளாக அமைந்த இந்நூலில் மணிமிடை பவளம் நூலின் கண் அமைந்த 120 முதல் 300 வரையிலான பாடல்களில் காணும் வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் அகப்பாடல்களில் அமைந்துள்ள தன்மை பற்றியும் அவை அகச்செய்திகளை விளக்குவதற்கு எவ்வகையில் பயன்படுகின்றன  என்பதைப் பற்றியும் வரலாற்றுச் செய்திகள் முருகியல் இன்பத்தைத் தரும் பாங்கு பற்றியும் இவண் இனிக்காணலாம்.
அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்
பட்டினப்பாலை எனும் நூல் கரிகாற்சோழனைப் புகழ்ந்து பாடுதல் எனும் நோக்கத்திற்காகக்  கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதியதாகும். ஆனால் தலைவன் ஒருவன் முட்டாச் சிறப்பின் காவிரிப்பூம் பட்டினத்தை எனக்குக் கொடுத்தாலும் நான் எனது காதலியை விட்டு வாரேன். ஏனெனில் கரிகாற்சோழனின்ஆட்சிச் சிறப்பை விடத் தண்ணிய தோள்கள் அவள் தோள்கள் என்று கரிகாற்சோழனின் காவிரிபூம்பட்டினத்தை முதற்பகுதியும் அவனின் ஆட்சிச்சிறப்பை இரண்டாம் பகுதியும் விவரித்துச் செல்கின்றன.
முட்டாச்சிறப்பின் பட்டினம் பெறினும் வாரேன் வாழிய நெஞ்சே
வேலினும் வெய்ய தடமென்தோளே இவைதாம் பட்டினப்பாலையின் சாரம்.
கங்கையில் மறைத்து வைத்த பெருஞ்செல்வம்
அகநானூற்றின் 265 ஆம் பாடலில்,
                        ‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
                        சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
                        நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ’ (மாமூலனார் - 265)
என்று பாடலிபுரம் என்னும் தற்பொழுதைய பாட்னாவில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுகிறது. தலைவியைப் பிரிந்து தலைவன் சேர்க்க எண்ணிய பெரும்பொருள், முன்பு கங்கையில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் காணாது போய்விட்ட பாடலிபுரத்தின் நந்தர்களின் பெரும்பொருளுக்கு நிகராகுமோ என்று தலைவி கேட்பதாக அமைந்தது அப்பாடல். பொருளின் நிலையாமையை உணர்த்துவது போன்றும் நிலையில்லாததும் அழியக் கூடியதுமான பொருளை விரும்பி நம்மைப் பிரிந்து சென்ற தலைவனின் செயலை நியாமற்றது என்று தலைவி கூறுதல் இன்புறத் தக்கது. நந்தர்களின் பெரு நிதியம் பற்றிய குறிப்புகள் பல சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ‘நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் தங்கலர்’  என்பது அகநானூற்றின் 251 ஆம் பாடல்.
கோசர்களின் இழிசெயலும் அன்னிமிஞிலியின் வஞ்சினமும்
பரணர் பாடிய ஒரு பாடல் அன்னி மிஞிலியின் வஞ்சினத்தைக் குறிப்பிடுகிறது.
முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்
பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும்உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல  ( பரணர், 262)
என 18 அடி அமைந்த பாடலில் 13 அடிகளில் அமைந்த வரலாற்றுச்செய்தி உவமையாக கூறப்பட்டுள்ளது. தம் வயலில் விளைந்திருந்த பயிற்றஞ் செடிகளைப் பசு மேய்ந்தது என்ற காரணத்திற்காகக் கோசர்கள் என்பவர்களால் அன்னி மிஞிலி என்பவளின் தந்தை கண்ணைப் பறித்து கொலை செய்யப்படுகிறார். இதனால் பெரிதும் வெகுண்ட அன்னிமிஞிலி கலத்தில் உண்ணாமை புத்தாடை உடுத்தாமை உள்ளிட்ட வஞ்சின விரதத்துடன் சினம் மாறாமல், திதியன் என்பவனிடம் முறையிட அவன் வஞ்ச எண்ணம் கொண்ட அந்த கோசர்களைக் கொல்கிறான். அதனால் உள்ளம் பூரிப்படைந்தாள் அன்னி மிஞிலி . அதுபோன்று இரவுக் குறிக்கண் வந்து தம்மோடு கூடி இன்பம் துய்த்தமையால் நம் உள்ளமும் பூரிக்கின்றது என்று தம் நெஞ்சிற்குக் கூறுகின்றான் தலைவன்.
இந்தக் கோசர்கள் யார் என்பது பற்றி வரலாற்று நூல்கள் எடுத்துரைக்கின்றன. இவர்கள் பாபிலோனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தமக்கென்று தனியாக இங்கே ஒரு ஆட்சிப் பகுதியை உருவாக்கிக் கொள்ளாமல் நாடோடிகளைப் போல் பல தேயத்தும் சென்றவர்கள் என்றும் விற்போரில் வல்லவர்களாகிய இவர்கள் பலநாட்டுப் படைகளிலும் போர்வீரர்களாக இருந்தவர்கள் என்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து நாட்டு மக்களுக்குப் பெரும் துன்பம் இழைத்தவர்கள் என்றும் உரைக்கின்றனர்.    (    ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, சேர மன்னர் வரலாறு ப128-30 ) அன்னி மிஞிலியினுடைய தந்தையின் கண்களைப் பறித்த செயலும் இதுபோன்ற ஒரு நிகழ்வே என்று அறியலாம்.
ஒரு பாடலில் மூன்று வரலாற்றுக் குறிப்புகள்
கல்லாடனார் எழுதிய 209 ஆம் பாடல் 17 அடிகளால் அமைந்தது. அப்பாடலில் மூன்று வராலாற்றுச் செய்திகள் காதலர்களின் மனவுணர்வுகளை விளக்குவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பது வியப்பிற்குரிய ஒன்றாக விளங்குகிறது.  தலைமகனின் பிரிவினால் வாடியிருக்கிறாள் தலைவி. அவளை அமைதி படுத்தி ஆற்றுப் படுத்துகிறாள் தோழி.  ‘ஊரில் உம் இருவர் உறவால் எழுந்த அலர் செழியன் தலையானங்கானத்துப் போரில் வெற்றிபெற்ற போது ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தினும் பெரிது. தலைவர் மறப்போரில் சிறந்த புல்லி என்பானுடைய வேங்கட மலையைக் கடந்து பொருள் தேடச் சென்றிருக்கிறார். வல்வில் ஓரியைக் கொன்று அவனது கொல்லி மலையைக் கைப்பற்றி முள்ளூர் மன்னன் காரி சேரனுக்கு அளித்தான் அல்லவா, அந்த கொல்லிமலையின் பாவை போன்ற உன் அழகு நலத்தைத் தலைவன் எண்ணிப் பாரமல் இரான்; அதனால் வருவான் கவலைப்படாதே’ என்பது அப்பாடலின் கருத்து. இப்பாடலை எழுதிய கல்லாடனார் மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறும் நோக்கில் தான் பாடினார் என்றால் எந்த மன்னரைப் புகழ்ந்திருக்கிறார். அதனால் இம்மூவரில் யார் அவருக்குப் பரிசுகளை வழங்கினார்கள்?. பரிசில்களுக்கெல்லாம் அப்பால் வரலாற்றைப் பதிவு செய்யும் அவர்களின் நோக்கமும் மனப்பாங்கினையும் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா?
                                                                                    ……அலரே
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழுஉறழ் திண்தோள் இயல்தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானந்தது ஆர்ப்பினும் பெரிது …
 
……அவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் …
….….செவ்வேள்
முள்ளூர் மன்னர் கழல் தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக்கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர்புகழ்ப் பாவை அன்ன நின் நலனே 
காவல் மரமும் மறமும்
அன்னி என்னும் குறுநில மன்னன் தித்தன் என்பவனின் காவல் மரத்தை வெட்டி வீழ்த்தும் எண்ணம் கொண்டு சென்றவன்.  எவ்வி என்பவன் இவனுக்கு நல்வார்த்தைகளைக் கூறித் தடுக்க முயன்றான்.  ஆயினும்அவன் சொல் கேளாமல் காவல் மரமாகிய புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். இதனால் வெகுண்டெழுந்த திதியன் அன்னியைப் போரில் அழிக்கிறான். நக்கீரர், கயமனார் ஆகியோர் இந்த வரலாற்றுச் செய்தியைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர்.
                                                 ‘……பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழிஅடக்கவும் அடங்கான்,
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனோடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே …நெஞ்சே’  126,நக்கீரர்
தலைவியின் அருள்நலமின்றி, அன்னி போல, இறந்துபோகவும் வல்லையோ நெஞ்சே எனத் தலைவன் நெஞ்சிற்குச்  சொல்லியதாக அமைந்தது இப்பாடல்.
இதே வரலாற்றுச் செய்தி கயமனாரின் பாடலில் எவ்வாறான இன்பத்தை நமக்குக் கூட்டுவிக்கின்றது பாருங்கள்.
தாம் அருமையாக வளர்த்த மகள் , வளர்ந்த பருவப் பெண்ணாக ஆனதும் இற்செறிப்பையும் கடந்து தம் காதலனோடு உடன்போக்கில் சென்றுவிடுகிறாள். பின்னர் அவளது நினைவில் ஆழ்ந்து நெஞ்சழிந்த தாய் அவளை இற்செறிப்பின் போது கையால் முதுகில் நையப் புடைத்ததை எண்ணி  பெரிதும் வருந்துகிறாள். அவளை அடித்த இந்த கை காவல் மரமாகிய புன்னையை வெட்டி அதனால் அழிந்த அன்னி போல் அழிவதாக தம் கையையே சபிக்கிறாள்.
‘…..பெருஞ்சீர்
அன்னி குறுங்கைப் பறந்தலைத் திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்
கடுநவைப் படீஇயர் மாதோ’  (145,கயமனார்)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard