உலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன்? அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன்.
திருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தார்க்கு உச்சி முதல் உள்ளம்கால்வரை சிலிர்ப்பை எற்படுத்தும். தமிழகனாகப்பிறந்துவிட்டு இன்னும் திருக்குறள் பாடி வாய்மணக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?
'தமிழனாக அதிலும் தமிழ் மொழி படிக்கத்தெரிந்தும், திருக்குறளை படித்து இரசிக்காதவன் ஒவ்வொருவனும் இனிமேல் இவள்போல் பிறப்பதற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட உலக அழகியைசொந்தமாக அடைந்துவிட்டும், இன்னும் அவளை தொட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கும் பேடியர். என்று ஒரு இளங்கவிஞன் சொன்னபோது அந்த உவமானம் என்னை சிலிர்க்க வைத்தது உண்மையும் அதுதானே?
திருவள்ளுவர் இன்றைய எம்.பி.ஏ கற்றவரா? என்று கேட்கும் அளவுக்கு தொழில் நிபுணத்துவம் பற்றிய அத்தனை குறிப்புக்களையும் தந்திருக்கின்றமை ஆச்சரியப்பட மட்டும் அல்ல அதிசயிக்கவும் வைக்கின்றது. தலைமைத்துவம், முடிவெடுக்கும் தன்மை, ஆளுமை விருத்தி, கூட்டுச்செயற்பாடு, பங்கு, நிதி முகாமைத்துவம், நிதியியல், நிர்வாகம், அபிவிருத்தி, வியாபாராம், சுயமரியாதை, சுய கௌரவம் என எத்தனை குறள்கள் அன்றே ஒவ்வொன்றாக தித்திப்பாக தந்திருப்பது அபரிதமானதே.
திருக்குறளில் பொதுவுடமை கருத்துக்கள் 60, 70களில் எடுத்து மேடைகளில் முழங்கப்பட்டன, அதை விட்டுவிடவோம். முன்னேறத்துடிக்கும் பக்கா முதலாளித்துவ வாதிகள் மட்டும் இந்தக்கோணத்தில் திருக்குறளைப்பார்ப்போமா?
பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் - திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு (காலம் அறிதல் -02)
ஒருவரின் சாதுரியத்தால் இவர் சாதுரியர் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளோம், இவர் ஒரு 'சதுரா'; என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமா? தமிழில் சதுரர் என்ற பதம் உண்டு.
ஒரு பிரச்சினை தோன்றிய இறந்தகாலம், இப்போதைய அதன் பரிணாமம், அதை நிவர்த்தி செய்வதால் எதிர்காலத்தில் வரும் நன்மைகள், ஒன்றும் செய்யாதுவிடின் ஏற்படும் நட்டங்கள் என நான்கு கோணங்களிலும், காலங்களை போட்டு சிந்தித்து தெளிவான முடிவெடுப்பவர்களே சதுரர்கள்.
பொருள் - காலத்துடன் பொருந்துமாறு முழுமையாக ஆராய்ந்து நடத்தல், ஓரிடத்தில் நில்லாத இயல்புகொண்ட செல்வத்தை, ஓரிடத்தில் இருந்து நீங்காமல் கட்டும் கயிறாகும்.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் எனும் செருக்கு (ஊக்கம் உடமை -08)
ஊக்கத்தால் ஒருவர் அபரிதமான முன்னேற்றத்தை அடைந்தாலும், அதே ஊக்கத்தால் முன்னேறும் முயற்சியில் அவர் தோல்விகண்டாலும், அவர்கள் அந்த வெற்றியையோ தோல்வியையோ பெரிதாக எண்ணி அதில் தம்மை இழந்துவிடக்கூடாது.
அதேபோல எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இடையூறுகள் வந்தாலும் தம் இலட்சியங்களை அடைந்து உலகத்தை திரும்பிப்பாhக்க வைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றியின் இரகசியமாக பின்னால் நிற்பது அவர்களது ஊக்கமே. ஒருவேளை தோல்விகளை கண்டு அவர்கள் தங்கள் ஊக்கத்தை கைவிட்டு, விரக்தியில் நின்றிருந்தால் உலகம் இவர்களை பார்த்து பெருமைப்படும் சந்தாப்பம் இல்லாமற்போயிருக்கும்.
பொருள் - ஊக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் நாம் வல்லவர்கள் ஆகிவிட்டோம் என்று தனக்கு தான் திருப்தியுடன் பெருமைப்பட்டு மகிழ்வுறும் உச்ச மகிழ்ச்சிகளை அடைய மாட்டார்கள்.
சீரினும் சீரல்ல செய்யாரே சிரோடு
பேராண்மை வேண்டு பவர் (குறள் -மானம் -02)
வெற்றி வெற்றி வெற்றி... இந்த வெற்றி மட்மே குறிக்கோள், அந்த வெற்றியை எந்தவழிகளில் வேண்டமானாலும் அடைவோம் என்று நினைப்பவர்கள் சிலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா? இவர்களுக்கு குறுக்கு வழியில் வெற்றி கிடைத்துவிடலாம், அனால் அந்த வெற்றி ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது. மற்றவர்கள் உளமார அதை பாராட்டவும் போவதில்லை. இந்த வெற்றிக்குப்பின்னால் அது கொடுக்கப்போகும் அவமானங்கள் கண்டிப்பாக இருக்கும். அதேவேளை வெற்றி நேரன வழியில், போராடிக்கிடைத்த வெற்றி, பல தோல்விகள், கஸ்டங்கள், நேர்மைகளின்மேல் கட்டப்பட்ட வெற்றி என்றால் அந்த வெற்றி அவர்களை விட்டு எப்போதும் போகாது. உண்மையான வெற்றியை தேடுபவர்கள் குறுக்கு வழிகளை நாடமாட்டார்கள்.
பொருள் - புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள்.
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு -02)
ஒரு பெரிய இலட்சியத்திற்காக நேரியபாதையில், பல அர்பணிப்புகளுடனும், முறையான திட்டம், நேர்மையுடனும் உழைத்தும் அல்லது போராடியும் அந்த உழைப்பு வெற்றிபெறாதுவிட்டாலோ, அல்லது போராட்டம் தோற்றுவிட்டாலோ ஏளனமாக சிரிப்பவர்கள்தான் ஏளனமானவர்கள்.
ஏனெனில் இலட்சியவாதிகள் ஒருபோதும் அற்ப விடயங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர்களின் உன்னதமான உழைப்பு, தியாகம், போராட்டம் என்பன தோற்றாலும் அவர்கள் மேன்மையுற்றவர்களே. அற்பர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்வை கொடுக்கலாம்.
பொருள் - காட்டில் ஓடும் முயலின்மீது பாய்ந்து அதை கொன்ற அம்பைவிட, வெட்ட வெளியில் நேருக்கு நேர்நின்று நேராக குறிவைத்து தவறிய ஈட்டி மிக மேலானது.
'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (ஆய்வினை உடைமை -10)
சில தோல்விகள் எம்மை சலிப்படையச்செய்யும் என்பது உண்மைதான். ஏனென்றால் பல தியாகங்களை புரிந்து, பல்வேறுபட்ட நேர்த்தியான திட்டங்களை வகுத்து, பலநேரத்தை செலவு செய்து, ஒன்றிப்புடன், அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள்கூட சிலவேளைகளில் தோற்றுப்போகும்.
என்ன செய்வது தலைவதி அப்படி என்று பலர் சலித்திருப்பதை நாம் அனுபவங்களுடாக கண்டிருக்கின்றோம்.
அதிலும் தோல்விகளில் விழிம்புத்தோல்வி அதாவது ஆங்கிலத்தில் “slip between cup and lip” வகை தோல்விகள் ஒருவனை அப்படியே சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும்.
இருந்தபோதிலும் அந்த தோல்வியிலும் சோர்வுறாது சிலித்துக்கொண்டு மீண்டும் முயற்சியில் இறங்கிவிட்டவன், அப்படி ஒரு விதி இருந்தால் அதையும் மாற்றுபவன் ஆகிவிடுவான்.
பொருள் - சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கம் அறிவுடை யார் - (தெரிந்து செயல்வகை -03)
சிந்தனை முன்னோக்கியும், அறிவு பின்னோக்கியும் எப்போதும் செல்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். நம்மில் சிலருக்கு பின் முதுகு மட்டும்தான் கவலையினைத்தரும் ஏனெனில் நம்மால் அதைப்பார்க்கமுடியாது. இவர்கள் மின்மினிப்பூச்சிகளைப்போன்றவர்கள். மின் மினப்பூச்சிகளின் விளக்குகள் எப்போதும் அவற்றின் பின் பக்கமே இருக்கும்.
ஒருவன் தன் தினசரிக்கடமைகளை ஆற்றும்போது அவனுக்கு நினைவாற்றல் மட்டும் இருந்தால்ப்போதும், ஆனால் முக்கிமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என்னும்போது அனுபவங்கள் கை கொடுக்கலாம் ஆனால் அறிவு மட்டுமே பயன்கொடுக்கும்.
உதாரணமாக ஒன்றைப்பார்ப்போம் சிறு வியாபாரி ஒருவன் அன்றாடம் காச்சியாக இருந்து ஒரு தொகை பணத்தை சேர்த்து, பணத்தை வங்கியில் தன் குடும்ப அவசர, விசேசங்களுக்காக போட்டு வைத்திருந்தான். ஆனால் பத்திரிகையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக அவனது நண்பனின், இப்ப வாங்கினால், இன்னும் நாலுவருடத்தில் பங்கு பெரும் இலாபமென்னும் அரைகுறை கதையை நம்பி அந்தப்பணத்தில் நிறுவன பங்குகளை வாங்கினான். அவனது சேமிப்பு அத்தனையும் போனது, பங்குகள் வாங்கியதைவிட சரிந்தன.
பொருள் - பின் விளையும் ஒரு ஊதியத்தை கருத்தில்க்கொண்டு இப்போது கையில் இருக்கும் முதலை இழக்க காரணமான செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.