New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் தா. டைட்டஸ் ஸ்மித்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் தா. டைட்டஸ் ஸ்மித்
Permalink  
 


இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்

Indrya ilaignarkalukku Thiruvalluvarin vazhviyal nerigal - Tamil Literature Ilakkiyam Papers
 
 
 
 
இன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
 
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை

1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள். 72)

என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
 
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - - - (குறள். 80)

என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
 
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 423)

என்றும்,
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 355)

என்றும்,
 
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு - - - (குறள். 422)

எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல் - - - (குறள். 291)

 
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் - - - (குறள். 292)

என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
 
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்

என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
 
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
கொள்வர் பழிநாணு வார் - - - (குறள். 433)

5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
 
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - - - (குறள். 656)

என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
 
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.

மேலும் அவர்,
 
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி - - - (குறள். 923)

என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
 
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? - - - (குறள். 301)

 
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற - - - (குறள். 302)

சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
திரு. தா. டைட்டஸ் ஸ்மித்
அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி
சிவகாசி.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard