New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம் சூலம் சுப்பராயன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம் சூலம் சுப்பராயன்
Permalink  
 


இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம்

Ikkala ulagirkku Thirukuralin thevai mathanallinakkam - Tamil Literature Ilakkiyam Papers
இன்றைக்கு இந்தியாவில் காஷ்மீரம், இலங்கையில் ஈழம், அமெரிக்கா, ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் நடக்கும் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் மதக்கலவரத்தின் உச்சக் கட்டங்கள் ஆகும். எனவே "இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம்" ஆகும்.
மனிதர்களின் வாழ்வுக்காக உருவாகிய மதங்கள் ஏன்? இத்தகைய போர்க்குணங்களைப் பெற்றன என்று மதங்களின் மையக் கருவை ஆராய்ந்த போது, அதன் மூலக்கரு கடவுள்தான் என்று தெரிந்தது. கடவுள் இருக்கிறார் என ஒரு வாதமும், இல்லவே இல்லை என ஒரு வாதமும் இன்றும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
நூல் இயற்றும்போது கடவுள் வாழ்த்தை முதலில் தொடங்கிவிட்டுப் பின்னர்தான் நூற்பொருளைப் பற்றிக் கூற வேண்டும் என்ற மரபோ விதிமுறையோ தொல்காப்பியத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தொல்காப்பிய இலக்கணப் பெருநூலின் தொடக்கத்திலே கூடக் கடவுள் வாழ்த்துக் காணப்படவில்லை. சங்ககால நூல்கள் எவையும், கடவுள் வாழ்த்தொடு தொடங்கப்பட்டதாய்க் குறிப்புகள் எவையும் உறுதியாக இல்லை. வள்ளுவர் இயற்றிய குறட்பாக்ளைத் திருக்குறள் என்ற நூல்வடிவில் பிற்காலத்தில் தொகுத்தவர் தான் கடவுள் வாழ்த்து எழுதினார் என்று எண்ணுவதில் தவறில்லை.
ஆனால் வள்ளுவர் குறள் எழுதிய காலத்தில் கடவுள் நம்பிக்கையுள்ள மக்களும், பல மதத்தினர்களும், தமிழ் நிலத்தில் வாழ்ந்தார்கள் என்பதையும் மதத்தினர்களிடையே குழப்பங்களும், கலவரங்களும் இருந்தன என்பதையும் குறள் வாயிலாய் உணர்ந்துகொள்ள முடிகிறது.
அகமும், புறமும் என்று இருந்த சங்க காலத்தின் கொள்கைகள் இரண்டும் இல்லாமல், ஆரிய வழியிலான அறம், பொருள், இன்பம், வீடு எனும் கடவுள் கொள்கையுடன் கூடிய சமயக் கொள்கைகள் நான்கும் இல்லாமல், உலகியலுக்கு உடன்பாடில்லாத வீடு பேற்றினை மட்டும் தவிர்த்து அறம், பொருள், இன்பம் எனும் மூன்று கொள்கைகளை மட்டும் வள்ளுவர் வகுத்துக் கூறியுள்ளார். ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் கடவுள் கொள்கைகள் இல்லவே இல்லை. ஆரியர்கள் இந்தியாவிற்குக் குடியேறியதற்குப் பிறகுதான் மதங்களும், கடவுள் கொள்கைகளும் தோன்றின என்பது தெளிவாகிறது.
ஆரம்பத்தில் ஆரியர்களின் உணவு ஆடு, மாடு, கோழி போன்றவை. அவற்றை வளர்ப்பதற்காக ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தனர். ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிட நாகரிகம் சிறந்து விளங்கியுள்ளது. திராவிடர்கள் சூரியனை வணங்கி வழிபட்டுள்ளார்கள். இவர்கள் சூரியனை வணங்கக் காரணம் வெப்பமிகு கோள்களில் ஒன்றான சூரியனிலிருந்து சிதறிய ஒரு துண்டுதான் பூமி என்பதால் தான். எவ்வளவோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நெருப்புப் பந்தாக இருந்த இந்தப் புவி குளிர்ச்சியடைந்து நீர்வளம், நிலவளம், மலைவளம், மரம், செடி, கொடிவளம் என்றெல்லாம் வளங்களைப் பெற்றுப் புழு, பூச்சி, கிருமிகள் போன்ற உயிரினங்கள் தோன்றக்கூடிய பக்குவத்தையும் அடைந்தது. உயிரினங்களிடையே ஏற்பட்ட உடலுறவில் விலங்கினம், பறவையினம், மனிதவினம் முதலிய இனங்கள் தோன்றின. எனவே உலகமும், உயிரினங்களும் சூரியனிலிருந்து தோன்றின என்ற உலகியல் தத்துவத்தின் அடிப்படையில் தான் திராவிடர்கள் சூரியனை வணங்கியுள்ளனர்.
அறிவுப்பூர்வமான இவ்வுண்மை உணர்ந்தும் ஆரியர்கள் சூரியனை வணங்கவில்லை. அவர்களுக்குள் மிகுந்து இருந்த ஆதிக்க மனப்பான்மையே இதற்குக் காரணமாகும். ஆரியர்கள் சிவனைக் கடவுளாக அறிமுகப்படுத்தினர். சிவன்தான், சூரியனையும், இந்த உலகத்தையும் இயக்குகிறார் என்றும், அதற்குச் சைவ மதம் என்றும் கூறினர். ஆரியருள் ஒருபிரிவினர் சூரியனையும், உலகையும் இயக்குவது சிவனில்லை. உலகைக் காப்பவர் திருமால்தான் என்று வைணவர்களாய்க் கூறினர். இதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லாததால், இல்லை இல்லை பிரம்மா தான் உலகைப் படைத்தார் என்றும் கூறலாயினர்.
மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மூலமாகத் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள். திராவிடர்களும் அவற்றை நம்பினர். இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைத் தெருக் கூத்து, நாடகங்களாகத் தயாரித்தும் நடித்தும் திராவிடர்கள் புகழ் பெற விரும்பினார்கள். இதற்கிடையில், திராவிடர்கள் மத்தியில் ஆரியத்தின் வருணாசிரமக் கொள்கைகள் வரத் தொடங்கின. சாதிப்பிரிவுகள், சாஸ்திரம் சம்பிரதாயங்கள் உருவாகின. பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் நாலாந்தர மாக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாகத் தள்ளப்பட்டனர். இத்தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துச் சமணமதம், புத்தமதம் போன்ற பல மதங்கள் தோன்றின. இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட பல மதங்கள் தோன்றினாலும், மக்களில் சமத்துவமும், மதங்களில் சமதர்மமும் தோன்றவில்லை. மாறாக மதக்கலவரமும், மதச் சண்டைகளுமே தோன்றின. இதற்குக் காரணம், முரண்பாடான மதக் கொள்கைகளே.
மதங்களிலுள்ள முரண்பாடான கொள்கைகளை நீக்கிவிடவும், மதச்சண்டைகள், மதக்கலவரங்களைப் போக்கிடவும் எல்லா மதமும் ஒரு மதம்தான், எல்லா கடவுளும் ஒரே கடவுள்தான் என்ற உயரிய உலகியல் தத்துவத்தை வள்ளுவர் தனது முதல் அதிகாரத்துக் குறள்களில் தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு

இதில் ஆதி என்னும் சொல் காலத்தைக் குறிக்கும். ஆதி என்பதற்கு முதற்காலம் என்று பொருள். முதற்காலம் எது என்று வரலாற்றில் பார்க்கும்பொழுது எழுத்துகள் தோன்றாத கற்காலம் என்ற ஒன்று உள்ளது. இது எழுத்துகள் தோன்றிய காலத்தின் முதற்காலத்தைக் குறிப்பிடுகிறது. பகவன் என்பது பகலவனைக் குறிக்கும். பகலவன் என்றால் சூரியன். சூரியனுக்குப் பகலவன் என்ற பெயரைக் காரணம். எப்பொழுதும் எரிந்துகொண்டு பகலாகவே இருப்பதால் சூரியனுக்குப் பகலவன் என்று பெயரானது. சூரியனையே வள்ளுவர் பகவன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

வால் என்றால் நட்சத்திரம். வானத்தில் உள்ள நட்சத்திரங்களில் சூரியனும் அடக்கம். சூரியன் தனது ஆதிக்கத்தின் கீழே எட்டுக் கிரகங்களையும் இயக்குகிறது. அதில் இவ்வுலகமும் அடங்கும். இத்தகைய இயக்கத்தைத் துல்லியமாக இயக்குவதற்கு அறிவு சூரியனிடம் மட்டுமே இருப்பதால் சூரியனையே வள்ளுவர் வாலறிவன் என்றார்.
 
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கின்றன. அவற்றுள் சில காலையில் கருகுவது இயற்கை. இதில், தாமரைப் பூ மட்டும் காலையில் சூரிய ஒளி தன் மீது பட்டவுடன் மலர்ந்துவிடும்., மாலையில் சூரிய ஒளி மறைந்தவுடன் தனது இதழ்களை மூடிக்கொள்ளும் தன்மையை உடையது. இது தாமரைப் பூவுக்குரிய தனிச் சிறப்பாகும். கதிரவனைக் கண்ட கமலம் போல என்றும் கூறலாம். இதிலிருந்து சூரியனின் இயக்கத்தை நாம் அறியலாம்.
 
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

சூரியனின் உதயத்திற்குப் பிறகு பகல் என்றும், மறைவிற்குப் பிறகு இரவு என்றும், இதை ஒரு நாள் என்றும், ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்றும் கணக்கிட்டுள்ளோம். இவற்றில் கூடவோ குறையவோ இல்லாத அளவுக்கு உலகம் இயங்குகிறது. இதில் ஓர் இரவு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. பூமி சரியாய் சுற்றவில்லை. பூமி எங்கே சுற்றாமல் நின்றுவிட்டது. அதனால்தான் இரவுக்குத் தாமதம் ஏற்பட்டு விட்டது என்றோ, அல்லது, அதே இரவுநேரம், குறைந்த நேரத்தில் புலர்ந்துவிட்டது என்றும் பூமி அளவுக்கு அதிகமாகச் சுழற்றிவிட்டது என்றோ கூற முடியாது. அதே போன்று பகலுக்கும் நேரத்தைக் கூட்டவும், குறைக்கவும் முடியாத அளவுக்கு இயக்கம் நடைபெறுகிறது. இதில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடும், சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடும் சூரியன் பார்க்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.
 
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

உலகுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இரவு வருகிறது. அதாவது நம் நாட்டில் இரவு நேரம் இருக்கும்பொழுது, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குப் பகலாக இருக்கும், ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், இரண்டு இரவும், இரண்டு பகலும் உலகுக்கு மட்டுமே வருகிறது. இத்தகைய இரவுபகல் ஆகிய இரண்டு வேலைகளும் சூரியனுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பொறிகள் சூரியனிலிருந்து தோன்றியவை. சூரியனாலேயே இயங்குகின்றன என்பதாகும்.
 
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

உலகிலுள்ள கடல் நீர் உட்பட எல்லாத் தண்ணீரையும் ஒன்று சேர்த்துச் சூரியன் மீது கொட்டினாலும், சூரியனை அணைக்கமுடியாது. சூரியனின் அருகில் நெருங்கவும் முடியாது. சூரியன் மட்டுமே தனக்கு நிகரில்லாத பொருளாக உள்ளது. சூரியனுக்கு நிகராக எதையும் உலகில் உவமை கூட கூறமுடியாது.
 
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அந்தரம் - அணன் - அந்தணன். அந்தரம் என்பது ஆகாயம். அணன் என்பது நெருப்பு. அந்தணன் என்பது அந்தரத்தில் நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கும் சூரியன் ஆகும்.
 
கோள்இல் பொறிஇல் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

சூரியன் இல்லை என்றால் எட்டுக் கோள்களும், ஐம்பொறிகளும் இயங்கா. உலகம் உட்பட எட்டுக் கோள்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பதும், ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பொறிகளும் சூரியனாலேயே செயல்படுகின்றன என்பது அறிவியல் உண்மையாகும். ஆதிபகவானாகிய சூரியன் தியாகம், அறிவு, நேர்மை, திறமை, ஒழுக்கம், உண்மை, வலிமை, தருமம் ஆகிய உயர்ந்த எட்டுக் குணங்களை உடையது ஆகும்.
வள்ளுவர் இறைவன் என்று சூரியனையே குறிப்பிடுகின்றார். அதிலும் திராவிடர்கள் சூரியனை வணங்கினார்கள் என்பதிலிருந்து, திராவிடர்கள் தான் உலகில் அறிவில் சிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பது திருக்குறள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆரியர்கள் ஆரிய மதங்களை இந்தியாவில் புகுத்தியும், பரப்பியும் திராவிடர்களின் புகழையும், சிறப்பையும் அழித்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.
எங்கள் மதம் தான் உயர்ந்த மதம், எங்கள் கடவுள் தான் உயர்ந்த கடவுள். எனவே உலகிலுள்ள எல்லோரும் எங்கள் மதத்தையும் எங்கள் கடவுளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மனிதரை மனிதர் அழித்துக் கொள்கின்றனர். அழிவுக்குக் காரணமான உலகியல் கொள்கைகளுக்கு ஒவ்வாத மதங்களின் உருவ வழிபாடு வீடுபேறு, சாதி, மொழி, நாடு ஆகிய வேறுபாடுகளைப் போக்க வேண்டும் எனக் கருதிய வள்ளுவர், சூரியனைக் கடவுளாகக் கூறியது மட்டும் இல்லாமல், சூரியனின் பாதங்களை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். அதாவது மாணடி, இலானடி, தாள், இறைவனடி என்று இறைவன் திருவடிகளை மட்டுமே கூறியுள்ளார். காரணம், நாம், சூரியனுக்கு மேலே போகும்போது இரவு வந்து விடுகிறது. இதனால் சூரியனின் தலையையோ, முகத்தையோ, நம்மால் காணமுடியாது என்பதால் வள்ளுவர், சூரியனுடைய திருவடிகளை மட்டுமே வணங்க வேண்டும், வணங்க முடியும் என்பது உலகியல் உண்மையை உணர்த்துவதாகும்.
உலகிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்களது மதங்களில் உள்ள மதக்கொள்கைகள் எல்லாம் வள்ளுவரின் கொள்கைகளை ஒத்திருப்பது கண்டு, அனைத்து மதத்தினரும் வள்ளுவர் எங்கள் மதக் கொள்கையைத்தான் குறளில் குறிப்பிட்டுள்ளார். எனவே வள்ளுவர் எங்கள் மதத்தைச் சார்ந்தவர்தான் என்றும் சில மதத்தினரும், இல்லையில்லை, வள்ளுவர் எங்கள் கடவுளின் கொள்கையைத்தான் விவரமாகக் கூறியுள்ளார், அதனால் வள்ளுவர் எங்கள் மதத்தைத்தான் சேர்ந்தவர் என்று சில மதத்தினரும் போட்டிப் போட்டுக் கொண்டு வள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். எனவே உலக மதநல்லிணக்கத்திற்குத் திருக்குறள் ஏற்ற நூலாகத் திகழ்கிறது என்பதற்கு இதுவே நற்சான்று. போர்க்களமான இக்கால உலகிற்கு மதநல்லிணக்கமே சிறந்ததாகும். அதிலும் திருக்குறளின் மதநல்லிணக்கமே சாலச் சிறந்ததாகும்.
உலகின் கடவுள் சூரியன்
உலகின் குரு திருவள்ளுவர்
உலகின் மதநல்லிணக்க நூல் திருக்குறள்
இதுவே "இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை"யாகும்.
 
எஸ்மா கவிஞர். சூலம் சுப்பராயன்
6/263, முத்தமிழ் நகர்
சென்னை - 118.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard