New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத நல்லிணக்கத்தில் திருக்குறளின் பங்கு ச. அனிதா


Guru

Status: Offline
Posts: 24811
Date:
மத நல்லிணக்கத்தில் திருக்குறளின் பங்கு ச. அனிதா
Permalink  
 


மத நல்லிணக்கத்தில் திருக்குறளின் பங்கு

Matha Nallinakkathil Thirukuralin pangu - Tamil Literature Ilakkiyam Papers
உலக இலக்கியங்கள் ஏராளம். கதை சொல்பவை, கருத்துரைப்பவை, பாக்கள் உள்ளவை, பராபரமே பொருளென்று கொண்டவை, இன்னும் பல. இவை அனைத்துமே சிற்சில காலக் கட்டங்களில் சிறப்பெய்தி இருந்தாலும், காலச்சக்கரத்தின் மிகுதியான வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல், சுவடின்றி அழிந்து போனவை சில. இன்னும் சில படைப்புகளோ, அழகுப் பதுமைகளாக மட்டும், தமிழ் அன்னையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் சமூக மாற்றங்களில் சிறைப்பட்டு விடாமலும், காலங்கடந்து காலாவதியாகிப் போகாமலும் இருக்கும் ஒரே வாடாமலர், திருவள்ளுவர் அருளிய திருக்குறளே.
ஆறறிவு கொண்ட மனிதனுக்கு, நற்பண்பு என்றும் ஏழாம் அறிவையும் புகட்டி, என்றென்றும் வளம்மிக்க, வல்லமை பொருந்திய சமூகமாய் மாற்றவே எழுசீர்க் குறளை வள்ளுவருள்ளம் இயற்றியிருக்கும் என்றே தோன்றுகிறது.
செந்தமிழில் தேன் குழைத்தது போல மிளிரும் ஒவ்வொரு இரண்டடியும் தேவாரம் போல், திருவாசம் போல், பைபிள் போல், திருக்குரான் போல் / அமுதசுரபிகள் உள்ள இந்த மதுரம் தோன்றிய மண் தமிழகமாயினும், தமிழ், தமிழ்நாடு என்ற சொற்களே வாராது முதற்குறளிலேயே உலகு என்ற ஈற்றடியோடு, அகில தத்துவ நோக்கத்தால் அமைக்கப்பட்டிருப்பதே இது பொதுமுறை என்பதற்கு ஒரு சிறந்த சான்று.
இந்தப் பொதுமறை, மத நல்லிணக்கம் எய்த என்னென்ன சொல்கிறது? இதோ கருத்துகள்: மத நல்லிணக்கம் கொணர முதல் தேவை, மனத்தினால் கூட எவர்பொருட்டும் யார்க்கும் இன்னா நினையாமை; இதைத்தான் வள்ளுவப் பெருமான்,
 
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை

என்றியம்பினார்.
அறத்துப்பாலில் உள்ள பல அதிகாரங்களில், மதநல்லிணக்கம் எய்த மகத்தான சிந்தனைகள் காணக் கிடக்கின்றன.
எல்லாரிடத்தும் அன்பு செய்தல் ஒன்றே, நல்லிணக்கம் உருவாக நயன்மிக்க வழி என்பதை,
 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு - - - (குறள் 74)

என்று புலப்படுத்துகிறார். அஃதாவது, அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும். அதுவே எல்லோரிடமும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள் 72)

அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். ஆனால் தூய்மையான அன்புடையவரோ தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்று எளிமையாக எடுத்தியம்புகிறார்.
பின், அன்பு மட்டும் போதுமா?
இல்லை, பொறுமை வேண்டும். எவ்விதத் துன்பம் யாரால் வரினும் பொறுமை காத்தல் முழுமையாய் வேண்டும். உலகத்து நாடுகள் நாகரிக வளர்ச்சியின் சிகரங்களை இன்று எட்டிவிட்டன. ஆயினும், மனிதநேயம், மறந்து ஒரு சிறு பூசல் தோன்றினும் கூட, ஆயுத ஆதிக்கமும், அறிவியர் புரட்சிகளும் இணைந்து, போர் எனும் பேரழிவைத்தான் நாம் காண்கிறோம்.
இதனை உணர்த்தவே, நல்லிணக்கம் நாட்டவே,
 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - - - (குறள் 151)

என்று வள்ளுவர் வடித்துள்ளார். மேலும் செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும் என்பதை,
 
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் - - - (குறள் 158)

என்றார் பொய்யாமொழிப் புலவர். பொதுவாகவே, மதங்கள் என்று சொல்லப்படும் ஒவ்வொரு வழிமுறையுமே, மனிதன், இறைதனை அடைந்து உய்வுற வேண்டி வகுக்கப்பட்ட அறங்களாகும். ஒவ்வொரு மதமும், எல்லையில்லாப் பரம் பொருளை அடைய, நம்மை இட்டுச் செல்லும் வெவ்வேறு பாதைகளேயன்றிச் சாக்காடு விளைவிக்கும் சாபக்கேடுகள் அல்ல.
பின் ஏன் இந்தக் காரிருள்? கருத்தொருமித்துக் கண் திறந்து, வள்ளுவனின் இந்த வாய்ச்சொல்லை நாம் ஆராய்வோமேயானால்
 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு - - - (குறள் 423)

நாம், எம்மதம் எது சொல்லினும், அவை அனைத்திலும், உள்ள மெய்யாகிய இறையுணர்தலையே தலையாகக் கொள்ளவேண்டும் என்பது தெற்றென விளங்கும்.
இன்று உலகறிந்த உண்மையாக, வளைகுடா நாடுகளிலும், மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் போர் எச்சரிக்கைகள் ஒலித்த வண்ணம் உள்ளன. காரணம், நட்பென்னும் பண்பு மரித்துப் போனது தான். அப்படியே சமரசங்கள் செய்தாலும் அவை பேச்சளவிற்கே! நேசக்கரம் நீட்ட யாரும் தயாரில்லை. இதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்ந்துவிட்ட தெய்வப்புலவோன்,
 
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு

என்று ஏட்டில் வைத்தார். இக்குறளானது பொருட்பாலின் நட்பியலில், 786-ஆவது குறளாக அமைந்துள்ளது. குறளின் எண்ணை இன்னுமொரு முறை கூர்ந்து நோக்குங்கால், சிந்தனைச்சுடர் ஒன்று தெரிகிறது. இவ்வெண் 786. இஸ்லாமியரின் புனித எண். தீர்க்கதரிசி வள்ளுவர், அன்றே, இந்த எண்ணில் இக்குறள் வருமாறு அமைந்திருப்பது, வியக்கத்தக்கது. இன்னாளில் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் பல வளைகுடா நாடுகளுக்கு இந்த ஒற்றைக் குறளே உற்ற மருந்தாய் விளங்கவல்லது என்பது திண்ணம்.
தீங்கு செய்யாமை - அனைத்து மதமும் உணர்த்தும், உன்னத அறம், அப்படியாரேனும் தீமை செய்திடினும் கூட, அதை மன்னித்து, மறந்து அவர்கள் நல்வழி செல்ல, எடுத்தியம்புதலே நம் கடமையாகக் கொள்ளவேண்டும்.
இதைத் தான், இயேசுபிரான்,
 
உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு
உன்மறு கன்னத்தைக் காட்டு

என்று உபதேசித்தார். இக்கருத்தினையே வள்ளுவருள்ளம்,
 
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் - - - (குறள் 314)

என்று படம்பிடித்துக் காட்டிற்று. இக்குறளுள்ளும், விடல் என்னும் ஈற்றுச் சொல் சிறப்பு வாய்ந்தது. ஆது, இன்னா செய்தோன் நாணுமளவில் நல்லனவற்றைச் செய்ததோடல்லாமல், அவன் செய்த தீமையை முழுமையாக மறந்து விடுத்து விட வேண்டும் என்பதாம். மேலும், "இன்னா செய்தார்க்கு இனியவே செய்யாக்கால் என்னபயத்ததோ சால்பு" என்றும் வள்ளுவம் வினா எழுப்புகிறது.
தீயவனையும் திருத்தும் தெய்வமொழியாக, பகைவனையும் பக்குவப்படுத்தும் பரமனின் வாய்ச்சொல்லாக இன்னுமொரு குறள் இதோ.
 
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை - - - (குறள் 985)

ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாம் என்பதே இவ்விரண்டடியின் சாரமாகும்.
அன்போடு பொறுமை மதங்கள் இடையே அருள் வளர்க்கும், அருள் மலர்ந்தால் அகிலம் தழைக்கும். மதத்தின் பேரால் புனிதப்போர் என்று களியாட்டம் போடும் சில வல்லரசு நாடுகளிடம் பொருளிருப்பினும் அது இழிந்த பொருளே. உண்மையில் உயர்ந்த பொருளான அருளுள்ளோரே, வல்லோர் என்பதை,
 
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள - - - (குறள் 241)

என்ற அழகாகச் செப்பியுள்ளார் பெருமான்.
ஆதிக்க வெறியும் அடக்குமுறையும் மனிதனை மரம் போலும் மக்கட் பண்பில்லாதவராக்கும். இதனால் தான் பொய்யாமொழியார்.
 
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம், அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் - - - (குறள் 999)

என்றும் உரைத்துள்ளார்.
மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் நேசித்து வாழ்தல் வேண்டும். இத்தகைய பண்பானது தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் இனிய நல்லிணக்கத்தை உருவாக்கும்.
இவ்வாறில்லாமல், பண்பு பாராட்டாமல், பகை வளர்ந்து, தீயவையே செய்தால், என்ன நேரும் என்பதனை,
 
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும் - - - (குறள் 658)

என்று இயற்றியுள்ளார். அஃதாவது, ஆகாதவை என்று விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்குமாம். ஆகையால், பிறர் துயரைத் தன் துயராய் எண்ணிப் போக்க முயல வேண்டும், இல்லையென்றால் அறிவின் பயன்தான் என்ன? என்ற வினாவினை வள்ளுவர்
 
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை - - - (குறள் 315)

என்றும் நயம்பட நினைவுபடுத்துகிறார். எனவே, மதநல்லிணக்கம் உருவாக முறையே
* அன்பு வேண்டும்
* எல்லையில்லாப் பொறுமை வேண்டும்
* அருள் வேண்டும்
* எல்லா உயிரும் சமம் என்று எண்ணல் வேண்டும்
* சினம் தவிர்த்தல் வேண்டும்
* இனியவை செய்தல் வேண்டும்
* ஒருபோதும் கனியிருப்பக் காய் கவராதிருத்தல் வேண்டும்
சினத்தைத் தவிர், சீர்தூக்கிப் பார், அருள் வளர், அன்பு போற்று, இவையே நீயும் உன் சமூகமும் கடைத்தேற வழி என்று கூறும் வள்ளுவர்,
 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - - -(குறள் 50)

என்பார். இவையனைத்திற்கும் மேலாய், சாதி சமயம் விடுத்துத் தனித்தனி மனிதரின் வஞ்சனை போக்கி, அகத்தூய்மை வளர்த்தாலே நல்லிணக்கம் நிலைக்கும் என்பதனை,
 
மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்து அறன்
ஆகுல நீர பிற - - - (குறள் 34)

என்றும், நல்வாழ்வெய்த மனிதகுல மாண்புயர
 
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு - - - (குறள் 953)

என்பார் வள்ளுவப் பெருமான். அதாவது நகைமுகம் காட்டு, ஈகை நல்லது, இன்சொல் இனியது, இகழாமை உயர்ந்தது என்று நல்லிணக்கத் தோடியியைந்த, இனிய வாழ்வெய்த வள்ளுவர் இனிய வழியினைச் சுட்டுகிறார்.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல், ஆகிய நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடாமல் அவற்றைக் கடித்தொழுகுதே அறம் என்பதை
 
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - - - (குறள் 35)

என்ற வெண்பா மூலம் செவ்வனே நிலைநிறுத்துகிறார்.
மதநல்லிணக்கம் நமக்குள் வளர, மனிதநேயம் மலர்ந்து மணம் பரப்ப எல்லாரும் ஒரு தாய் மக்களாய் இன்புற்றிருக்க, உலகமே அமைதியின் தாலாட்டில் துயிலுறங்க, இதுகாறும் திருக்குறளிலுள்ள பல குறள்கள் சுட்டப்பட்டுள்ளன.
இந்தக் குறள் களஞ்சியம், குன்றிள் மேலிட்ட தீபம். இருள் அகற்றி, ஒளி பரப்பி, உலகம் உய்ய வழிகளை ஒலிக்கும் வெண்சங்கு.
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" விரவிக்கிடக்கும் சாதி சமயப் பிணக்குகளை வேரறுத்து வேற்றுமைகளைத் தீயிலிட்டு மனித வாழ்வின் மகத்துவத்தை உணரவும், மண்ணுலக சொர்க்கம் எய்தவும் மகா மந்திரமாய் ஒரு மந்திர எந்திரமாய்த் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
துணை நூல்
டாக்டர் மு. வரதராசனார், திருக்குறள் தெளிவுரை, முதற்பதிப்பு, மே 1959.
 
திருமதி ச. அனிதா
விரிவுரையாளர்
தகவல் தொழில்நுட்பப்பிரிவு
ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி
கவரைப்பேட்டை
கும்மிடிப்பூண்டி தாலுகா
திருவள்ளூர் மாவட்டம்.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard