வள்ளுவர் பெண்கட்கு மதிப்பளித்தார். மகளிர் பிறரால் கட்டுப்படுத்தப்படுதலின்றி உரிமையுடன் வாழவேண்டுமென விரும்பினார். ஆயினும் இல்லத்தில் தலைமை ஆடவனுக்கே உரியது என அவர்எண்ணினார் என்பது பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தினின்றும் புலனாகும்.
மனையும், மனைவியும்
தகுதி வாய்ந்த இல்லத் தலைவியையுடைய இல்லமே நல்லில்லமாக அமைதல் கூடும் என வள்ளுவர்கருதினார். ஒருவனின் மனைவியிடத்து மனைகேற்ற மாட்சி, இல்லறத்தை நன்கு நடத்தும் இயல்புஇல்லாவிடின் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய பிற பல நலன்களைப் பெற்றிருப்பினும் பயனற்றது.மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிடினும் யாதும் உள்ளதுபோலாகுமென்றும் அவள் சிறந்தவளாக வாய்க்காவிடில் பிற வளங்களனைத்தும் இருப்பினும்யாதுமில்லாதது போலாம் என்றும் கூறுகிறார்.
மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் - - - (குறள் 52)
இல்லவள் நல்லவளானால் எல்லா நன்மைகளும் அவ்வில்லம் பெறும், இல்லையேல் உள்ளது ஏன்?என்று வள்ளுவர் வினாத் தொடுக்கின்றார்.
கற்பின் ஆற்றல்
வள்ளுவர் கருத்துப்படி இல்லத்தலைவியிடம் சிறப்பாக வேண்டப்படும் பண்புநலரம் கற்பே. கற்பெனும்திண்மையுண்டாகப் பெறின் பெண்ணிற் சிறந்தது பிறிதில்லை என்கிறார். திண்மை மனவுறுதியாகும்.கற்பு அவளுக்குக் கணவன் நலத்தையும் குடும்ப நலத்தையும் பேணுவதில் உறுதி நல்குகிறது.கற்புடைய பெண்ணின் சிறப்பைக் கூறங்கால் வள்ளுவர்,
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் - - - (குறள் 54) என்கிறார்.
மேலும் சிறந்த பெண் பிற தெய்வத்தைத் தொழாளாய்த் தன் கணவனையே வணங்கியெழுவாள் எனஅவர் கருதினர். அன்பின் மிகுதியாய் எப்பொழுதும் தன் கணவன் நினைவாகவேயிருக்கும் பெண்துயிலெழும் போதும் அவன் நினைவாகவே எழுவாள் என்று கூறுகின்றார்.
மக்கட்பேறு
இல்வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல. அவை அனைத்துள்ளும் சிறந்தது. அறிவறிந்த மக்களைப்பெறுதல் நன்மக்களாலேயே ஊரும் உலகமும் சிறக்கின்றன. வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வுத்துணையால் மக்கட்பேறு மாண்புறுகின்றன. வெறும் இன்பத்திற்காக மட்டுமே மழைவாழ்க்கைஅமையவில்லை. அறிவறிந்த மக்கள் பழிப்பிறங்காப் பண்புடை மக்கள், சான்றோன் என்றெல்லாம்வான்மறை விதந்து கூறுவது வாழ்வின் இலக்கைக் காட்டும். "வெறும் மக்களால்" மனையறம் சிறக்காது.ஓர் இல்லத் தலைவியின் நல்ல இல்லறத்திற்கேற்ற பண்புகளே அவ்வில்லத்திற்கு மங்கலமாகும்.ஆனால் அவ்வில்லற மாண்பிற்கும் அணிகலமாவது நன்மக்கட்பேறே என்கிறார்.
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு - - - (குறள். 60)
என்ற குறள் மூலம் குழந்தை பிறந்தபோது அது குறித்து மகிழ்ந்ததை விட அவன் பெரியவனாகிச்சான்றோன் என்ற பெயர் பெறும் போது தாய் அதிக மகிழ்ச்சியடைகிறாள். நற்பண்புகள் நிறைந்தசான்றோன் என்று பிறர் பாராட்டும் போது பெற்றோரின் உள்ளம் குளிர்கின்றது. மகனுடையதிறமையையும், அறிவையும், செயலையும் கண்டு வியந்தவர்கள் "இவனைப் பெற என்ன நோன்புநோற்றார்களோ?" என்று கூறும் சொற்களிலேயே மைந்தனின் கடமை பொலிவும் நிறைவும்பெறுகின்றது.
மகன்தந்தைக்கு ஆற்றும்உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் - - - (குறள். 70)
என்னும் வான்மறையின் படி, பெற்றோர் உள்ளம் மகிழ நல்லவராகவும் சான்றோராகவும் வாழ்வதுமக்களின் கடமையாகும்.
குடும்ப முன்னேற்றம்
தன் குடும்பத்தை உயரச் செய்வதற்காகக் கடும் உழைப்பை மேற்கொள்ளும் ஒருவன் அப்பணியில்நான் கைகோரோன் அல்லது ஒருபோதும் விட்டொழியேன் எனக் கூறுவதே அவனுக்குப்பெருமையாகும். தன் குடும்பத்தில் பிறர் இன்புற்றிருக்க நான் மட்டும் துன்புற்று உழைத்தல்வேண்டுமா? என்று எண்ணுபவன் தன் குடும்பத்தை உயரச் செய்யான். இதை வள்ளுவர்,
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு - - - (குறள். 1029)
என்கிறார்.
தன் குடும்பத்தில் பிறருக்குத் துன்பம் வராமல் காக்க அல்லது பிறர் செய்யும் குற்றத்தை மறைக்க முன்வரும் ஒருவன் எவ்வளவு துன்பமாயினும் தாங்க இசைவான். அவன் உடம்பு இடும்பைக்கேகொள்கலமாயினும் அவன் தளரான் என்கிறார்.
அன்பும் அறனும்
அன்புடன் வாழ்வதே பண்பு; அறத்துடன் வாழ்வதே பயன். இல்வாழ்க்கையில் அன்பையும்,அறத்தையும் இரு கண்களாகக் கொண்டு ஒழுகுவது தான் வாழ்வு நெறி என்பது வள்ளுவரின்தெளிந்த கருத்து. இல்வாழ்வைப் பின்னிப் பிணைத்துச் செல்வது அன்பறவேயாகும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - - - (குறள். 45)
என்பது வான்மறை.
இல்வாழ்க்கையின் பயனால் துணைவியின் மேல் படர்ந்த அன்பு பிற உயிர்கள் மேலும் படர்ந்துஅன்பறமாய் மாறுமானால் வாழ்வின் நோக்கம் வெற்றி பெறும். துணைவியை நேசித்து மனையிலிருந்துவாழ்ந்தால் மட்டும் இல்வாழ்வு சிறந்து விடாது தானும் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்தையும் வாழவைக்கும் அறமே இல்வாழ்வு; நல்வாழ்வு, அவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது யாதுமில்லை.
மங்கலமும், நன்கலமும்
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்தால் பெண்டிர் பெருஞ்சிறப்புப் பெறுவர். நல்ல நெறியுடன்புகழமைந்த துணைவி உடையோர்க்கே ஏறு போல் பீடு நடை அமையும் என்று கூறிய வள்ளுவர்,இறுதியில் மனைவியின் நற்பண்பே மங்கலம் என்றும், மக்கட்பேறே அணிகலன் என்றும் கூறுவர்.
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை - - - (குறள். 59)
பகுத்துண்ணும் பண்பு
பழியஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் போது தான் பண்பாடு வளம்பெறுகின்றது.உண்பித்து, உண்டு வாழ்வதே வாழ்வின் பயன். வாழ்வியற் கடமைகளில் சிறப்பானதும்,போற்றத்தக்கதும், "பகுத்துண்ணும் பண்பாடே" ஆகும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் - - - (குறள். 44)
இல்வாழ்வோர் பல அறங்களையும் செய்தற்கு உரியவர். அதற்குப் பொருள் வேண்டும்.பொருளீட்டுதலும் இல்வாழ்வோர் கடனே. பொருளீட்டும் வழியும் அறத்தொடு பொருந்தியதாகஇருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. இல்வாழ்வான் ஒவ்வொருவனும் தான் நன்னெறியில்நிற்பதொடு நிறைவடைய வேண்டியவன் அல்லன். பிறரையும் அறத்தாற்றில் ஒழுகும்படி தூண்டவும்,உதவவும் உரியவன் ஆவான். அவ்வாறு செய்பவன் நோற்பாரின் நோன்மை யுடையவன் அதாவதுதவம் செய்பவரை விடச் சிறந்தவன் ஆவான் என்கிறார் வள்ளுவர்.
இல்லத்தில் அன்பும் அறனும் நிலவுதல் வேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையேயும்பெற்றோர்க்கும், புதல்வர்களுக்குமிடையேயும் ஆழ்ந்த அன்பு நிலவும் இல்லமே சிறந்த இல்லமாகும்என்று உணர்த்துவது புலனாகிறது.
துணை நூல்கள்
1. ஆனந்தன், வளரும் வள்ளுவம், ஆய்வுக்கோவை, கதிரவன் பதிப்பகம், சேலம், 1992.
2. சரளா இராஜகோபாலன், வள்ளுவர் வழிச் சிந்தனைகள், அன்புப் பதிப்பகம், சென்னை, 1998.
3. வரதராஜன், மு., வள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாரி நிலையம், சென்னை, 1998.
திரு. வே. இராஜா
ஆய்வாளர், தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 46
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்துநடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.