உலகமே வியந்து பாராட்டும் தமிழ் மறையின் சிறப்பியல்புகளை இன்றைய சூழ்நிலைக்கு ஆராய முற்படுவது, முழு நிலா நாள் அன்று இரவு, முழு நிலாவின் வனப்பினை ஆய்தற்கு ஒப்பாகும்.
தமிழ்மறை
"கடுகைத் துளைத்து", "அணுவைத் துளைத்து" என்றெல்லாம் இரண்டே அடிகளில் வாழ்க்கை நெறிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்த திருக்குறளைக் கரும்பு சுவைப்பது போல் சுவைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழர். கொற்கைத் துறைமுகத்தில் முத்துகளை அள்ள அள்ள மகிழ்ச்சிக்குக் குறைவுண்டோ? 1330 குறட்பாக்களும், 1330 முத்துகளே. இவற்றை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என 4 சரங்களாகக் கோர்த்து சேர்த்து புடம் போட்ட சங்கிலியே எங்கள் குறள். இதை மனதில் கொண்டே "யாமறிந்த புலவரிலே, கம்பரைப் போல், வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல், புவிதனிலே, யாங்கணுமே கண்டதில்லை" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும் கூறி வள்ளுவர் புகழ் வானோங்கி நிற்கிறது. குமரிமுனையில் 133 அடி உயரமாக உலகிற்கே சாதி சமய இனமொழி வேறுபாட்டைக் களைந்து நிற்கும் ஒரே தலைவராய் பறை சாற்றுகிறார் தெய்வப்புலவர்.
இன்றைய சூழல்
வள்ளுவர் கண்ட சமுதாயத்தையும் இன்றைய சூழலையும், ஒப்பிடவே மனம் கூசும் அவல நிலையே இன்றைய நிலை.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்- - - (குறள். 13)
என்ற வள்ளுவர் வாய்மொழி எங்கோ ஒளிந்துகொண்டு விட்டது. பள்ளிச்சிறார்கள் முதல் அறிஞர்கள், அரசு அலுவலகர்கள் உயர் அதிகாரிகள் வரை தத்தம் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் ஒழுக்கத்தைத் தெரிந்தே புறக்கணிக்கின்றனர்.
புறந்தூய்மை நீரான்அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்- - - (குறள். 298)
என்கிறது வள்ளுவம். "வாய்மையே வெல்லும்" என்னும் பழமொழி, பழைய மொழியாகிவிட்டது. மனத்தூய்மையை அறவே குலைக்கும் திரைப்படங்கள், வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்புக் காட்சிகளையே முறைப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்கள் மக்களைத் துயர்க்குழியில் ஆழ்த்துகின்றன. ஆபாச வார இதழ்களும், செய்தித் தாள்களும் இவற்றிற்குத் துணைபுரிகின்றன. அரசியல் நாகரீகம் பற்றி எழுதவே கூறுகிறது. வள்ளுவர் கண்ட அரசு, மக்களுக்காக மக்களால், மக்களிடையே கண்ட அரசு.
சுருங்கக்கூறின், நாடு தூய்மை பெற இனி எத்தனை காந்தியடிகள் பிறந்தாலும், சென்ற காலங்கள் இனி வருமோ?
வள்ளுவத்தில் இல்லறம்
அறம், பொருள், இன்பம் என்ற 3 தலைப்புகளில் வள்ளுவர் காட்டிய நெறிகளில், மொத்தம் 113 அதிகாரங்களிலும், 20 அதிகாரங்களில் கூறப்பட்ட இல்லற அறமே மிக மாண்புடையதாய்க் காணப்படுகிறது. அதை ஈண்டு நோக்குவோம்.
வள்ளுவரின் இல்வாழ்க்கைத் துணைவியார் வாசுகி அம்மையார் வள்ளுவரின் இல்வாழ்க்கையில் இருந்து இரு நிகழ்ச்சிகளை அறிஞர்கள் உதாரணம் காட்டுவர். ஒரு சமயம் வாசுகி அம்மையாரை வள்ளுவர் அழைத்துச் சிறு இரும்புக் கோளங்களைக் கொடுத்துச் சோறாகச் சமைத்து வரச் சொன்னாராம். அம்மையார் தன் கணவனே தன் கற்பை சோதிப்பது கண்டு வருந்தி இறைவனை வேண்டி, இரும்புக் கோளங்களை உலையில் இட, அவை சோறாய்க் கொதித்தன என்பர்.
மற்றொரு நிகழ்ச்சி, கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார் அம்மையார். அதுபோது கணவர் அழைக்கவே, கயிற்றை நீர்க்குடத்துடன் விட்டு விரைந்து ஓடினார். திரும்பி வந்து பார்த்தபோது நீர்க்குடம், கீழே இறங்காமல், அம்மையார் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்ததாம். என்னே கற்பின் உயர்வு!
இருபது அதிகாரங்களில், இருநூறு பாக்களில் இல்லற வாழ்க்கையின் உயர்வை வள்ளுவர் படம்பிடித்துச் சித்திரிக்கிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல் எனத் தொடங்கித் தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் என ஒவ்வொன்றிலும் தனிமனிதன் இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், அடக்கம், பிறன்மனை நோக்காப் போராண்மை, விருந்தோம்பல் என வள்ளுவர் அடுக்கிய அதிகாரங்கள், குறட்பாக்களின் பெருமைகள் சொல்லில் அடங்கா.
தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்- - - (குறள். 67)
என்ற குறளில் தந்தையின் கடமையையும், அடுத்தே
மகன்தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்- - - (குறள். 70)
என்ற குறளில் தந்தை - மகன் கடமையையும் உலகில் எந்தமொழி, எந்த இலக்கியம் வழங்கியுள்ளன?
தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று- - - (குறள் 236)
எனச் சிறப்பாக முடிக்கிறார்.
தற்கால இல்லறம்
மேலை நாட்டு நாகரிகம் தமிழர் பண்பாட்டை வேகமாக மூடி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நிறை, பேதமை, என ஆறு அணிகலன்களையே அணிந்த தமிழ்ப் பெண்கள் இன்று அழகிப் போட்டிகளின் அணிவகுப்பில் பங்கேற்பது தலைகுனிய வேண்டிய ஒன்று. மணம் முடிந்தபின்பே கணவனுடன் கூடி இல்லறம் நடத்துதல் என்பது கனவாகி விடுமோ? விவாகரத்து, மகளிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகள் விதவைத் திருமணங்கள் மலிந்து வருகின்றன.
பெண் கற்பு இவ்வாறு இருக்க ஆண் கற்பும் இழி நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தியே என்ற நெறி மாறி வருகிறது. இந்நிலை தொடருமே ஆகில், அமெரிக்காவிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன வேறுபாடு என்ற ஐயமே எழும்.
இறுதியாக
பாட்டுக்கொரு புலவன் பாரதி கண்ட புதுமைப் பெண் இன்றைய தமிழ்மகள் இல்லை. பாரதியோ, பாரதிதாசனோ, புதுமைக் கவிஞர்கள் தாம். இவர்கள் தமிழ்ப் பெண்டிரை அழகிப் போட்டிகளில் மேடை ஏறச் சொல்லவில்லையே.
மேலை நாடுகளில் இருந்து விஞ்ஞான வளர்ச்சி, நாகரீகம் தொழில், பொருளாதார முன்னேற்றத்துடன் நாம் நிறுத்திக் கொள்ளலாம். தமிழர் பண்பாட்டின் முத்திரை மங்கவே விடக் கூடாது. தமிழ்நாட்டில் அருந்ததிகள், வாசுகி அம்மையார்கள், கண்ணகிகள் பெருகித் தமிழ்ப் பெண்டிர் சிறப்பு உலகம் எங்கும் தெரியட்டுமே.
துணை நூல்கள்
1. திருக்குறள், மூலம்.
2. திருக்குறள் உரை, முனைவர் மு.வ.
திரு கே.எஸ். இராமநாதன்
உதவிப் பேராசிரியர்
இயந்திரவியல் துறை
எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரி
சிறுகனூர், திருச்சி - 621 105
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.