"இல்லறமல்லது நல்லறமன்று" என்று ஒளவையார் கூறுகின்றார். "அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று அவர் கூறிய கூற்றிற்கிணங்க இவ்வரிய பிறவி பெற்ற மனிதப் பிறவியில் திருவள்ளுவரின் இல்லறம் என்ற நல்லறம் பற்றிக் கூறும் கருத்துகளைத் தித்திக்கும் சொல்லெடுத்துத் தீந்தமிழின் முத்தெடுத்துத் திருக்குறளின் வித்தெடுத்துப் பார்க்கலாம்.
நல்ல குடும்பம்
"நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்" என்று பாரதிதாசனார் கூறுகின்றார். மனித சமுதாயத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் திகழ்கின்றது. குடும்பம் என்பது முதலில் கணவன், மனைவி இணையும் ஒரு அன்புப் பிணைப்பு; பாசவலை எனத் திகழும் இல்லறமாகும். குடும்பத்தில் கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், சகோதர, சகோதரிகள், நாத்தனார், மைத்துனர் எனப் பலரும் இருப்பர்.
வாழ்க்கை
வாழ்க்கை என்ற போர்க்களத்தில் சோதனைகளை வென்று, அரிய சாதனைகளைப் படைத்து வாழ்ந்து வெற்றி காண வேண்டும். இல்லறம் என்ற படகினை, வாழ்க்கையெனும் கடலில் செலுத்தி நீந்திக் கரையேறி நல்லறமாகத் திகழச் செய்ய வேண்டும்.
எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்
யாதினும் அரிதரிது காண்
எனத் தாயுமானவர் பாடி உள்ளார்.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்- - - (குறள் 1026)
என்று திருக்குறளில் கூறியுள்ளது போல இல்லறத்தைச் சிறந்த முறையில் நடத்தும் (ஆளும்) இல்லாண்மையே நல்லாண்மை ஆகும்.
இல்வாழ்க்கை
கணவன், மனைவி இருவரும் இணைந்து அறச் செயல்களைச் செய்து வாழ்வது பயனுடையதாகும் என்பதனை,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது- - - (குறள் 45)
என்று கூறி உள்ளார்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை- - - (குறள் 41)
என்ற குறளில் தன் மனைவி, பெற்றோர், மக்கள் ஆகியோருக்குத் தகுந்த, சிறந்த துணையாக விளங்குபவனே குடும்பத் தலைவன் ஆவான் என்று கூறியுள்ளார். ஏன் இவ்வாறும் பொருள் கொள்ளலாமல்லவா? ஆள்வோர் மூத்த அறிவுடைய சான்றோர், பெரு மக்கள், நீதி வழங்குவோர் ஆகிய மூவருக்கும் குடும்பத் தலைவன் துணையாய் இருக்க வேண்டும் என்றும் கொள்ளலாம்.
என்ற குறளில் முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐந்து வகையினரையும் அறநெறி தவறாமல் காப்பாற்றும் திறம் படைத்தவனாக விளங்குவதே குடும்பத் தலைவனின் கடமையாகும்.
ஒற்றைக் குடும்பம் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை
என்று பாவேந்தர் கூறுகின்றார். நல்ல முறையில் பொருள் ஈட்ட வேண்டும் என்று கூறுகின்றார்.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று- - - (குறள் 49)
என்ற குறளில் தான் வாழும் குடும்ப வாழ்க்கை பிறரால் பழிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
குடும்பத்தின் வேந்தன்
பாரதிதாசன் மனைவியை ஒரு குடும்ப விளக்கு என்று கூறினார். பெரியோர்கள் மணப்பெண்ணை மருமகளைக் கொண்டு வரும் பொழுது வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்பார்கள்.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை- - - (குறள் 53)
என்ற குறள் மனைவி சிறந்த குணங்களை உடையவள் ஆக இருந்தால் குடும்பத்தில் இல்லாத செல்வங்கள், மகிழ்ச்சி என இல்லாதது எதுவுமில்லை என்று கூறுகின்றது.
குடும்ப விளக்கு என்ற நூலில் மனைவியின் பெருமை, பெண்ணின் பெருமை, சிறப்பு, கடமைகள், செயலாற்றும் விதம் பற்றித் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார்.
கணவனைப் பெற்ற மாமன், மாமி, தான் பெற்ற மக்கள், குடும்பத்தில் உள்ள மற்றோர், கணவன் புகழ் பாதுகாக்க வேண்டும் என்பதனைப் பாரதிதாசன் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறார். அப்பொழுதுதான் தற்கொண்டான் பேணுலும், தகைசான்ற சொற்காத்தலும் முழுமை அடைகின்றது என்று திருக்குறளின் கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்- - - (குறள் 56)
என்று திருக்குறள் கூறுகின்றது. தன்னையும் கற்பு நெறியில் காத்து, தன் கணவனையும் தகுந்த நேரத்தில் குருவாகவும், அமைச்சனாகவும் காப்பாற்றித் தகுதி நிறைந்த புகழையும் காத்துத் தருபவளே சிறந்த மனைவி ஆவாள். பேண்-என்பது பெண் என ஆயிற்று, பேணுதலில் சிறந்தவள் பெண். ஆகையால் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் (அவளது மனைவி) துணையாய் இருப்பாள் என்கின்றனர்.
பெண்கட்கு கல்வி வேண்டும், குடித்தனம் பேணுதற்கே
என்ற பாவேந்தர் பாடலுக்கிணங்கப் பேணுதல் சிறக்க பெண்களுக்கு கல்வி தேவை.
வள்ளுவருக்கு வாசுகி போல, கோவலனுக்குக் கண்ணகி போல, கூன்பாண்டியனுக்கு மங்கையர்க்கரசியார் போல, பல பெண்மணிகளை உதாரணமாய்க் கொள்ளலாம்.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை- - - (குறள் 59)
என்ற குறளில் தன் புகழை விரும்பிக் காப்பாற்றும் மனைவியை அடைந்தவன் வீரத்தில் சிறந்த சிங்கம் போல் நடை நடப்பான். தன் நலத்தை விரும்பிக் காப்பாற்றும் கணவனை அடைந்த மனைவி சிங்கம் போல் வீறு கொண்டு பெருமை அடைவாள் என்று கூறுகிறார்.
பெற்றோர் கடமை
கணவன் மனைவி இருவரும் மனம் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கையின் பயனாக ஆசைக் கடலில் தோண்டிய முத்தாக மக்களைப் பெறுகின்றனர்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
எனப் புறநானூற்றுப் பாடல் கூறுவதற்கேற்ப அறிவு அறிந்த மக்கள் தமக்கும், சமுதாயத்திற்கும் வளம் சேர்க்க அளவான, நல்ல குழந்தைகளைப் பெற்று வளர்ப்பர்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கள்பேறு அல்ல பிற- - - (61)
என்று குறள் கூறுகின்றது. ஒருவன் தான் பெறக்கூடிய செல்வங்களுள் சிறந்த செல்வம் நன்கு அறிய வேண்டியவைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலுள்ள குழந்தைகள் பெறல் ஆகும். பெற்ற மக்களைப் பேணிக் காத்துச் சிறக்க வளர்க்க வேண்டும்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்- - - (67)
என்ற குறளில் படித்த சான்றோர்கள் நிறைந்த சபையில் தன் மகனை அல்லது மகளைக் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக ஆக்குவதே முதற் கடமையாகும் என்று கூறியுள்ளார்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- - - (குறள் 68)
என்ற குறளில் குழந்தைகள், தம்மைவிடச் சிறந்தவர்களாக விளங்குவது, செயலாற்றுவது, சேவை செய்வது முதலியவை அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தருவதாகும் என்று கூறுகின்றார்.
பெற்றோர் அடையும் இன்பம்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுமை அளாவிய கூழ்- - - (குறள் 64)
என்பதனின்று தம்முடைய சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் பிசைந்த உணவு பெற்றோருக்கு அமுதத்தைவிட இனிமையைத் தரும் என உணரலாம்.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு- - - (குறள் 65)
என்ற குறளில் தம் குழந்தைகளில் உடலினைத் தொடும் பொழுது பெற்றோர்க்கு இன்பம் உண்டாகும். அவர்களின் மழலைச் சொல் கொஞ்சும் மொழி கேட்டால் செவிக்கு இன்பம் உண்டாகும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்- - - (குறள் 66)
என்ற குறளில் தனது குழந்தைகளில் மழலைச் சொல் கேளாதவர்களே, யாழ் ஓசையும் குழலோசையும் இனிது என்பர் என்கிறார்.
மக்கள் கடமை
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே அவன்
நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்ற உடுமலை நாராயண கவியின் பாடலுக்கிணங்க அன்னை தன் குழந்தையைப் பேணி வளர்க்கிறாள். மூழ்கி முத்தெடுக்க வேண்டும்.
மகன் தந்தைக்குஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்- - - (குறள் 70)
என்ற குறள்வழி செயலாற்ற வேண்டும்.
உதாரணமாய்ச் சிரவணன் பிதிர் பக்தி நாடகத்தை எடுத்துக் கொள்ளலாம். சிரவணன் தன்தாய் தந்தைக்குச் செய்யும் பணிவிடைகளைப் பார்த்து நம் தேசப்பிதா காந்தி வியப்பெய்தினார்.
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்- - - (குறள் 69)
என்ற குறளில் தன் மக்களை, குழந்தையைப் பிறர் பாராட்டக் கேட்கும்பொழுது ஈரைந்து திங்கள் அங்கமெல்லாம் நொந்து, கருவறையாம் கர்ப்பக்கிரகத்தில் காத்து தன் குழந்தையைப் பெற்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு தாய் மகிழ்ச்சி அடைவாள் என்று கூறுகிறார்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு- - - (குறள் 60)
என்ற குறளில் நல்ல மனைவியைப் பெறுவதே மங்கலம். நல்ல மக்களைப் பெறுவது அதற்கு அணிகலன்களாகும். மகுடத்திற்கு மணிமுடி சூட்டுவது போன்றதாகும் என்கிறார்.
நிறைவான வாழ்க்கை
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு- - - (குறள் 231)
என்ற குறள்வழி வறியவர்க்கு உதவ வேண்டும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு- - - (குறள் 72)
என்ற குறள்வழி எல்லோரிடத்தும் அன்புடன் பழகவேண்டும். தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி அன்புடன் வாழ வேண்டும் என்றார்.
தெய்வமே உதவும்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்- - - (குறள் 1027)
என்ற குறளில் முயற்சியைக் கைவிடாமல் முயல்வோர்க்கு தெய்வம் தானே உதவி செய்யும் என்கிறார்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு- - - (குறள் 1025)
என்ற குறள் பிறர் பழி கூறாமல், குற்றம் இல்லாமல், குடிப்பெருமை குன்றாமல், வாழ்பவரை உலகத்தார் தன் சுற்றமாக்கிக் கொள்வார்கள் என்று கூறுகின்றது. இது போன்ற நல்லாண்மை இல்லறத்தை நடத்த வேண்டும்.
நல்லறமாகத் திகழுதல்
கற்புடுத்து அன்புமுடித்து நாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்டு - மக்கள் பேறு
என்பதோர் ஆக்கமும் உண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு- - - (பா. 81)
என்ற நீதிநெறி விளக்கப் பாடலில் கற்புடைய மனைவி, நல்ல குணங்கள் அமையப் பெற்ற மனைவி, மக்களைப் பெற்ற ஒப்பற்ற செல்வம், அவளை மனைவியாய் அடைந்த கணவனுக்கு அந்த இல்லறமே சிறந்த நல்லறமாகும்.
நொறுங்குபெய்து ஆக்கிய கூழ்ஆர உண்டு
பிறங்குஇரு கோட்டோடு பன்றியும் வாழும்!
அறம்செய்து வாழ்வதே வாழ்க்கை! மற்றுஎல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று- - - (பா.168)
என்ற அறநெறிச்சாரப் பாடலில் அறம் செய்து மக்கள் வாழவேண்டியது இல்வாழ்க்கை ஆகும். அவ்வாறு வாழாதவர் வாழ்க்கை யாதும் இல்லாத பெட்டியைப் பூட்டி வைப்பது போன்றதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்- - - (குறள் 50)
என்ற குறளில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவனைத் தெய்வமாய் மதிப்பர் என்று கூறுகிறார் வள்ளுவர். இதிலிருந்து நாம் உணரும் உண்மை யாதெனின் மனிதரே தெய்வங்களைப் படைக்கின்றான் என்பதாகும். இதை வள்ளுவர் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.
நிறைவுரை
வினை, உயிர், கட்டு, வீடு இன்ன விளக்கித்
தினைஅனைத்தும் தீமைஇன் றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டும் இடத்து- - - (பா. 8)
என்ற அறநெறிச்சாரப்பாடலில் நல்லறத்தை நிலைநாட்ட விரும்பினால் அந்த நல்லறம், வினை, உயிர், பாசம், வீடுபேறு ஆகிய நான்கினையும் உணர்த்தி, சிறிதளவும் தீமை இல்லாததால் தீய செயல்களை அழித்து உயர்ந்தோர் ஒழுக்கத்தோடு பொருந்த வாழ்த்து, இல்லறத்தை நல்லறமாக, நல்லாண்மையாக ஆக்குவதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
குறள் 1026இல் கூறியுள்ளது போல் தான் பிறந்த குடும்பத்தின் பொறுப்பு, சுமை, தானே ஏற்றுக் கொள்வது சிக்கல்களைத் தீர்ப்பது, இனிய வாழ்க்கை நடைபெறத் தொடர்ந்து முயற்சிப்பது, அறிவியல் பணிகளில் கருத்தைச் செலுத்தி இல்லாண்மையை நல்லாண்மை ஆக்க முடியும் என்பது கருத்து.
துணை நூல்கள்
1. டாக்டர் சேயோன், திருக்குறள் அமுதமொழி, 2002, ப. 320
2. இலலிதா சுந்தரம், திருக்குறளில் கலைகள், 2001, ப. 160.
3. இலலிதா சுந்தரம், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள், 2001, ப. 298