New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் கூறும் அரசியல் பொதுநெறி கோ. இராதிகா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருவள்ளுவர் கூறும் அரசியல் பொதுநெறி கோ. இராதிகா
Permalink  
 


 

திருவள்ளுவர் கூறும் அரசியல் பொதுநெறி

Thiruvalluvar koorum arasiyal pothuneri - Tamil Literature Ilakkiyam Papers
அறந்திறம்பா நெறியால் பொருளீட்டு மாறும், தன்னைப் போற்றித் தானுந் துய்த்துப் பிறர்க்கும் கொடுக்குமாறும் என்று பொருட்பாலுக்குரிய விளக்கம் கூறும் வள்ளுவர் அரசநீதியையும் கூறியுள்ளார். ஏனெனில் நாட்டில் உள்ள மெலியார் பொருட்களை வலியார் கவராமல் நாடுவளம் பெற்று, வாணிகம் பெருகிட, நல்லார்ககுத் தீது புரியுங் கொடியாரைக் கண்டித்து முறை செய்யும் மன்னன் இல்லையாயின் பொருளீட்டுதல் நிகழாதாகையால் இங்கு அரசநீதியைக் கூறியுள்ளார்.
பகுப்பு முறை
அரசியலில், அங்கவியல், குடியியல் என்பன அடங்குகின்றன. அரசன் செங்கோல் நடத்தும் முறையும், அவனுக்குத் துணைக்காரணமாகிய அங்கங்களின் இயல்பும், அவ்வரசனால் பாதுகாக்கப்படும் குடிமக்கட்குரிய ஒழுகலாறும் சொல்லல் என்ற அடிப்படையில் பகுக்கப்பட்டதால் இறுதி இயல் குடியியல் எனப்பட்டது. அப்பெயரை ஒழிபியல் என மாற்றியோர் பரிமேலழகரோ, அவர்க்கு முற்பட்ட உரையாசிரியரோ என்பது தெளியப்படவில்லை.
குறிக்கோள்
"திருவள்ளுவர் குறள் முப்பாலால் ஆகியது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன. "உலகம் ஒரு குலம்" என்பதற்குக் கால்கொள்ளும் இடம் காமத்துப்பால், அப்பாலுக்கு உரம் அளிப்பது பொருட்பால் இரண்டையும் ஒழுங்கில் இயக்கிக்காப்பது அறத்துப்பால். மூன்றன் குறிக்கோளும் "உலகம் ஒருகுலமாதல் வேண்டும்" என்பதைத் திரு.வி. கலியாணசுந்தரனார் விளக்குகிறார்.
அரசியல்
அரசியல், அங்கவியல், ஒழிபியல் இம்மூன்றியலுள்ளுங் கூறும் பொது நெறிக்கருத்துகளை இங்குக் கூறுவதென்பது இயலாத செயல். ஆகையால், அரசியல் 25 அதிகாரத்தினுள் கூறப்பட்டுள்ள 250 குறட்பாக்களின் பொது நெறிக் கருத்துக்களைக் காண்போம். அவற்றுள் 61 குறள்கள் மட்டுமே அரசுக்கு (அ) அரசனுக்குக் கூறப்பட்டுள்ளன. 189 குறள்கள் ஆட்சித் தலைமை உட்பட "எல்லாருக்கும்" பொருந்தும் பொதுக் கொள்கைகளைப் பேசுகின்றன.
பொது நெறிக் கருத்துகள்
பண்டைத் தமிழகத்தில் "அறங்கூறும் அவையங்கள்" பல இருந்துள்ளன. அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. அறம் என்பது மனித வாழ்வில் தீமைகளை அகற்றித் துன்பங்களை விலக்கி இன்பத்தைத் தருவது. இந்த அறநெறி மனித வாழ்வில் படிப்பினைகளிலிருந்தே தோன்றி வரலாற்றுக்கு வளமூட்டுகிறது. இந்த அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது; தொண்டு செய்கிறது.
அரசியல் தத்துவங்கள் மனித வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. வள்ளுவர் காட்டும் அரசு குடியாட்சி தழுவிய முடியாட்சியாகும்.
அரசர்க்குரிய தகுதிப்பேறுகள்
வடமொழிச் சாத்திரங்கள் கூறுவதைப்போல் ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வேந்தன் பிறப்பாலோ வழிவழியாகவோ மரபு வழியிலோ அன்றிக் கடவுள்தன்மை பெற்றோ ஆட்சிக்குவர வேண்டும் என்ற எவ்வகை நியதியையும் வள்ளுவர் கூறவில்லை. ஆனால், மக்கள் ஆட்சியை மாண்புற நடத்துவதற்கான தகுதிகளையும், பண்புச் சிறப்புகளையும் ஆட்சித்தலைவருக்குரிய இலக்கணமாக,
 
படைகுடிகூழ் அமைச்சு நட்பு அரண்ஆறும்
உடையான் அரசருள் ஏறு - - - (குறள் 381)

ஆகிய 6 உடைமைகளையும் பெற்று அரசையும், குடிமக்களையும் நடுமாய்க் கொண்டதாகும்.
 
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும் - - - (குறள் 388)

எனவும்,
 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - - - (குறள் 385)

பொருள் வருவாய்களை மேன்மேலும் உண்டாக்குதலும், வந்த பொருள்களை ஓரிடத்துச் சேர்த்தலும், சேர்த்தவற்றைப் பிறர்கவராமல் காத்தலும், காத்தவற்றை அறம் பொருள் இன்ப வழிகளில் செலவிடப் பகுத்தலும் வல்லவனே சிறந்த அரசன் என்றும் (386, 387, 390) அறத்தின் வழிநின்று அரசர்க்குரிய தகுதிப்பேற்றுடன் வாழவேண்டும் என்றும் கூறுகின்றார்.
தலைமை முறைகாத்தல்
அரசனுக்குரிய குற்றங்களையும் (432) அக்குற்றத்தைக் கண்டு அவற்றை நீக்கிவிட்டுப்பின்பு பிறர் குற்றத்தைக் காண வல்லவனாயின், அரசனுக்கு வரக்கூடிய குற்றம் ஒன்றுமில்லை (436) என்றும்,
 
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் - - - (குறள் 547)

என்றும் வையகம் முழுவதையும் அரசன் காப்பான், முட்டுப்பாடு நேர்ந்தபோதும் முட்டில்லாது முறை செய்வானானால் அரசனை அச்செங்கோல் காக்கும் என்றும் கூறுகிறார். செங்கோன்மை (544, 546, 547, 549, 550, 551, 555), மன்னர்க்குச் சிற்றினம் சேராமை (452), குடி தழுவிய கோல், அடிதழுவி நிற்கும் குடி (542, 544), அருளற்ற ஆட்சி (557, 570, 558, 552), மழை விளைவு (545), மழை தவறும் நிலை (559), ஆட்சித் தலைமை கெடல் (548, 563, 564, 567, 569, 448) ஆகிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சங்ககால மக்களிடம் பரவியிருந்த புராணக் கதையை எடுத்துக்காட்டிச் சோம்பலின்மையின் திறத்தை,
 
மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு - - - (குறள் 610)

என்ற குறளில் ஓர் அரசன் சோம்பலில்லாத தன் முயற்சியால் திருமால் கடந்த (தாவிய) மாநிலம் முழுவதையும் அடைவான் என்கிறார். மேலும் தன்வலியும், துணை வலியும் அறிதல் பற்றிய கருத்துகளை 471-476 வரையிலான குறள்கள் புலப்படுத்துகின்றன.
ஊக்கமுடைமை
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச்சிறந்த அழகு பண்புடையவரிடம் இருப்பதனாலேயே இவ்வுலகம் அழியாமல் இருந்து வருகிறது (571, 592, 593, 594, 595, 600, 605, 607). ஊக்கம் உடைமையே நிலையான உடைமை. ஏனென்றால் அது மனத்தில் உள்ள செல்வமாகும். பொருள் உடைமை நிலைத்தது அன்று; அது உடம்பைவிட்டு வேறாக இருப்பது ஆகையால் அழியக்கூடியது. நிலைத்த செல்வமான ஊக்கத்தைத் தம்மிடம் கொண்டவர்கள் பெற்ற நன்மை போய்விட்டதே என்று எப்போதும் வருந்த மாட்டார்கள்; ஊக்கம் கொண்டு உழைத்து மீண்டும் அதை அடையப் பாடுபடுவார்கள். சோர்வற்ற ஊக்கம் உடையவனிடத்தில் நன்மை தானே வழிகேட்டுப் போய்ச் சேரும். (611, 612, 613, 615).
 
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றுஇன்மை
இன்மை புகுத்தி விடும் - - - (குறள் 616)

முயற்சி பொருள் வளத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாவிட்டால், வளம் எல்லாம் வறண்டு வறுமை அடையச் செய்யும். (616, 619, 620) என்கிறார் வள்ளுவர்.
பெரியாரைத்துணைக்கோடல்
அறத்தின் பெருமையை உணர்ந்தவர்களாகவும் தன்னை விட அனுபவம் முதிர்ந்தவர்களாகவும் உள்ள பெரியவர்களின் துணை வேண்டும். அவர்களுடைய துணையை முறை அறிந்து கொள்ள வேண்டும். வந்த துன்பத்தை நீக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு; இனித்துன்பம் வராமல் காக்கும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. ஆகையால் அவர்களுடைய துணையைப் போற்ற வேண்டும்.
 
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல் - - - (குறள் 441)

அத்தகைய பெரியவர்களின் துணை இருந்தால் அந்தத் தலைவனைக் கெடுக்கவல்ல பகைவர் ஒருவரும் இல்லை. அவ்வாறு இடித்துக் கூறித்திருத்தும் பெரியவர்களின் துணை இல்லாத தலைவன் கெடுவான். அவனுக்குத் தீமை செய்யப் பகைவர் இல்லாவிட்டாலும் அவன் எளிதில் கெடுவான் (447, 448).
தெரிந்து செயல்வகை
 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு - - - (குறள் 467)

செய்யத்தகுத்த செயலையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளையும் ஆராய்ந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணுவோம் என்பது குற்றமாகும். எனவே தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி, பின்பு பலரும் துணையாக நின்று காப்பினும் கெட்டுப் போகும் (468).
இடுக்கண் அழியாமை
துன்பம் வரும்போது சோர்ந்து அழியாமல் உள்ளத்தில் மகிழ வேண்டும். வந்த துன்பத்தை வெல்வதற்கு அதைப்போல் சிறந்த வழி இல்லை.
 
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல் - - - (குறள் 621)

 
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் - - - (குறள் 622)

இன்பம் வந்தபோது கடமையைச் செய்வதொடு நின்று இன்பத்தை விரும்பாமல் வாழ்ந்தால், துன்பம் வந்தபோது கடமையைச் செய்து கொண்டு துன்புறாமல் இருக்க முடியும் (622, 629).
பிறிதுமொழிதல்
திருவள்ளுவர் வேறு எப்பகுதியிலும் இல்லாத அளவிற்கு இப்பகுதியில் பிறிது மொழிதலாய்க் கருத்துகளை அமைத்துள்ளார். அந்த அமைப்பை எண்ணஎண்ணத் திருவள்ளுவரின் அற நெஞ்சம் புலனாகின்றது. வலியறிதலில் இருமுறையும் (475, 476) இடனறிதலில் மும்முறையும் (495, 496) கூறுகின்றார்.
 
கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு - - - (குறள் 500)

பாகரின் சினந்த பார்வைக்கும் அஞ்சாமல், போர்க்களத்தில் வேல் வீரரைக் கோட்டால் குத்திக் கோத்த மத யானைகளையும், அவை கால் புதையும் சேற்று நிலத்தில் சிக்கிய போது மிகச் சிறிய நரிகளும் கொன்று விடும் என்ற பிறிதுமொழிதல் அமைத்துள்ளார்.
அவை அல்லாமல் உவமைகளும், உருவகங்களும் பல உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் போர் அறநெறியிழந்து கெட்டு வருதலையும், பொது நன்மைக்குப் பயன்படாமல் பொது அழிவுக்குப் பயன்பட்டுவருதலையும் திருவள்ளுவரே உணர்ந்து உணர்ந்து போரை வெளிப்படையாய்க் கூறாமல் விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் அறிஞர்களாலும், பொதுமக்களாலும் போர் வெறுக்கப்படும் என்று உணர்ந்து போரற்ற காலத்திற்கும் பயன்படுமாறு எழுதினார் என்று கருத இடந்தருகின்றது.
உலகம் முன்னேற ஒழுக்கம் வேண்டும். அவ்வொழுக்கத்தை தானும் மன்னன் செங்கோலால் எய்தப் பெறுவதாகும். மன்னன் கோல் கோடின் மக்களின் ஒழுக்கங் குன்றும். குன்றின் அரசனுமில்லை, குடிகளுமில்லை. மன்னரும், அமைச்சரும், பிற உறுப்பினரும் தத்தம் பொறுப்புகளையும், கடமைகளையும் உணரப் பொருட்பாலிற் பல அதிகாரங்களை வள்ளுவப் பெருந்தகை வகுத்துள்ளார். திருக்குறள், ஒழுக்கம் கூற வந்த அறநூல் என்பது தெளிவு.
துணை நூல்கள்
1. திருவள்ளுவர், சொர்ணாம்பாள் நினைவுச் சொற் பொழிவுகள், முதல் பதிப்பு 1981, பக். 62, 63, 65, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
2. மறைமலையடிகள், திருக்குறள் ஆராய்ச்சி, இரண்டாம் பதிப்பு, ஏப்ரல், 1960, பக். 51, 52, பாரி நிலையம், சென்னை - 1.
3. கு.ச. ஆனந்தம், திருக்குறளின் உண்மைப் பொருள், முதற் பதிப்பு, திசம்பர் 1986, பக். 283, 281, 305, 313, 315, 317, தங்கம் பதிப்பகம், கோபி செட்டிபாளையம் - 638 451.
4. டாக்டர் மு. வரதராசன், திருவள்ளுவர் (அ) வாழ்க்கை விளக்கம், ஏழாம் பதிப்பு - 1967, பக். 107-108, 112, 152, 116-117, 119-120, 122, 148, தாயக வெளியீடு, சென்னை - 1.
5. வ.சு.ப. மாணிக்கம், வள்ளுவம், இரண்டாம் பதிப்பு - 25, திசம்பர், 1993, ப. 214, மணிவாசர் பதிப்பகம், சென்னை - 1.
6. டாக்டர் தி. முருகரத்தினம், வள்ளுவர் வகுத்த பொருளியல் (கருத்தரங்கக் கட்டுரைகள்), முதற் பதிப்பு - 1975, பக். 16, 17, திருக்குறள் ஆய்வக வெளியீடு & மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை - 1.
7. இலஞ்சி, வெள்ளிவிழா மலர், ஈஸ்வரன் பிள்ளை, முதல் வெளியீடு - 1953, ப. 274, திருவள்ளுவர் கழகம், தென்காசி.
 
திருமதி கோ.இராதிகா
த/பெ.கி. கோதண்டபாணி
7/பி/41 சஞ்சீவிராயர் கோவில்தெரு
பரங்கிப்பேட்டை - 608 502.
சிதம்பரம் தாலுகா,
கடலூர் மாவட்டம்.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard