New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல் முனைவர் அ.மோகனா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல் முனைவர் அ.மோகனா
Permalink  
 


புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல்

 
 
சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்புப் பிரதிகளான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங் காரின் வீரத்தாய்மார் தொடங்கிக.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட புறஇலக்கியங்களே மனித வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துத் தமிழண்ணல் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.
புறம் பாடிய புலவர்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் எடுத்துரைக்கின்றனர். எனவே புறப்பாடல்கள் புலவர்களின் உள்ளத்திலிருந்து  இயல்பாகப் பீறிட்டெழுந்த வலிமைமிக்க உணர்ச்சிகளாகும். அவை புலவர்கள் தம் சொந்த வாழ்வில் அனுபவித்த இன்பதுன்பங்களின் வலிமைமிக்க வெளிப்பாடுகளாகும். இத்தகைய வெளிப் பாட்டில் அகப்பாடல்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வீரியமும் உணர்ச்சியும் மிக்க வகையில் புறப்பாடல்களைப் பாடியுள்ளனர். (சங்கமரபு: 2009: 263)
இவ்வாறு பாடினோரின் தன்னுணர்ச்சிப் பாடல்களின் தொகுப்பாக அமைந்த புறநானூற்றின் அழகியல், அமைப்பு, தொகுப்பு குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து சற்று மாறுபட்டு புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்களைக் குறித்த சில விவாதங்களை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
1894இல் உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றின் முகப்புப் பக்கங்களில் ‘இந்நூலிலும் உரையிலுங்கண்ட அரியசொற்கள்’ என்ற தலைப்பில் சில சொற்கள் உ.வே.சா.வால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சிலபுறநானூற்றுப் பிரதிக்குள் மட்டுமே பயின்றுவந்துள்ளன; பிற சங்க இலக்கியங்களில் அவற்றைக் காண முடியவில்லைஇதனைத் தொடர்ந்துபெ.மாதையனின் சங்க இலக்கியச் சொல்லடைவு என்னும் கருவிநூலின் துணை கொண்டு ஆராயும் போது பிற சங்க இலக்கியப் பிரதிகளில் பயின்று வராத1500க்கும்  மேற்பட்ட சொற்கள் புறநானூற்றில் பயின்று வந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.
கால மாற்றமும் கவிதையின் பொருண்மையும் புதிய புதிய சொற்களுக்கான தேவையை இலக்கியப் பரப்பில் சாத்தியப்படுத்தியிருப்பதைப் புறநானூறும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு இலக்கியங்களுள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற சொற்களைக் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் பா.ரா.சுப்பிரமணியம். திருக்குறளில் அத்தகைய ஆய்வொன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சில சங்க இலக்கியச் சொற்களையும் அதற்குச் சான்றுகாட்டி விளக்கியுள்ளார். ‘வீரர்’ என்ற சொல் அகநானூற்றில் நக்கீரராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இத்தகு ஆய்வின் பயன் குறித்து அவர் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது.
சங்க காலத்தை ஒட்டி எழுந்த, ஓர் ஆசிரியரால் இயற்றப்பட்ட, ஒரு நூலில் இடம்பெற்றிருக்கும் சொற்களில், புதிய சொற்களின் வரவை எளிதாகக் கண்டு கொள்ளலாம். சங்க இலக்கியச் சொற்களஞ்சியத்தின் தொடர்ச்சியையும் தம் கருத்தாக்கங்களுக்கு வேண்டிய புது வரவுகளையும் அந்நூலில் காண இயலும். தமிழ்மொழியின் சொற்கோவை எவ்வாறு விரிவடைகிறது என்பதையும் காணமுடியும்(சொல்வலை வேட்டுவன்:2009:287)
இப்பின்புலத்தில் புறநானூற்றில் மட்டும் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில சொற்களை ஆராய்வதன் மூலம் தொகுப்புப் பிரதியான புறநானூற்றின் தனித்த பண்புகளை விளங்கிக் கொள்ள முடியும்.
‘சொல்’ குறித்த ஆய்வு எனும் போது ஸோஸ்யுரின் மொழிக்கோட்பாடு கவனத்திற்குரியதாக உள்ளது. வடிவத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள உறவு மரபை (பழக்கத்தை) சார்ந்துதான் உள்ளது (ஜானதன்கல்லர் இலக்கியக்கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம்:2005:91). எந்த ஒரு மொழியிலும் ஒருசொல் திடீரென்று தோன்றிவிடுவது கிடையாது. தொடர்ச்சியான புழக்கத்தினாலும், தொடர்ந்து வருகின்ற மரபினாலும் ஒரு பொருண்மை குறிப்பிட்ட, வரையறுத்த ஒரு சொல் வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு மொழிபேசும் மக்கள் கூட்டத்திடமும் ஒரேபொருண்மைக்கு வெவ்வேறு வகையான சொற்கள் வழங்கப்படுவதற்குக் காரணம் இதுதான். அது அவரவர் மரபைச் சார்ந்த வடிவத்தைப் பெற்றுவிடுகின்றது. ஒரே மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்திடமும் வட்டாரத் தன்மை சார்ந்து ஒரே பொருண்மைக்கு வெவ்வேறு சொல்வடிவங்கள் வழங்கப்பெறுவதையும் காணமுடியும். எவ்வாறிருப்பினும் ஒரு மொழியில் வழங்கும் சொல்குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அது அச்சமூகத்தின் பண்பாட்டினூடாகவே பயணப்படும். பண்பாடு என்பது நம்பிக்கைகளையும், சடங்குகளையும், வளமையையும் கொண்டு கட்டமைக்கப் படுவது.
இந்த ஆய்வுப்பின்புலத்தில் புறநானூற்றுப் புலவர்களால் புதிதாகஅறிமுகப் படுத்தப்பட்டுள்ள சொற்களைச் சில தர்க்கங்களின் அடிப்படையில் அணுக முடியும். அச்சொற்களை வசதி கருதி கீழ்க்கண்டவாறு வகைபடுத்தலாம்.
-       புழங்குபொருள்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       கலைஞர்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       இனக்குழுவினரைக் குறிக்கின்ற சொற்கள்
-       பெண்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       இலக்கியம், கலைகள், தொல்லியல் தொடர்பான சொற்கள்
-       நம்பிக்கைகள் சார்ந்த சொற்கள்
இவ்வாறு வகைபடுத்தப்பட்ட இச்சொற்களின் மீதான ஆய்வைக் கீழ்க்கண்ட நிலைகளில் பகுத்துக்கொள்ளலாம்.
-       புதிய சொற்களைப் பயன்படுத்திய புலவர்களின் சமூகம் மற்றும் அவர்கள் அச்சொற்களைக் கையாள வேண்டியதன் தேவை குறித்த தேடல்
-       அச்சொற்களின் வடிவம் பிற சங்கப் பிரதிகளில் இல்லாதிருந்தாலும் அதற்கான பொருண்மை வேறுவடிவத்தில் வழங்கப்பட்டிருப்பின் பாடிய புலவரின் வட்டாரத்தில் வழங்கப்பட்ட சொல்லாக அச்சொல் அமைய வாய்ப்புண்டு. இதன்மூலம் அக்குறிப்பிட்ட சொல்லின் வட்டாரத் தன்மையை அறுதியிடுதல்.
-       குறிப்பிட்ட அச்சொல் மக்களின் சடங்குகளிலிருந்து, கலைகளிலிருந்து, நம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்டதா என்பது குறித்த புரிதல்
-       இன்று தொல்லியல் சான்றுகளின்வழி நிறுவப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளையும் கவனத்தில் கொண்டு புறநானூற்றின் அகச்சான்றின்வழி அவை குறித்த சில கவனத்தை ஏற்படுத்துதல். அவ்வாறே வரலாறு, மானுடவியல் முடிவுகளையும் கவனத்தில் கொள்ளுதல்.
மேற்குறித்த நிலைகளில் அப்புதிய சொற்களை அணுகுவது புறநானூறு போன்ற தொல்பிரதியின் பன்முகத்தன்மையை உணர்த்த மிகவும் அவசியமானதொன்று.உதாரணத்திற்கு முன்னர் குறிப்பிட்ட வகைமையில் வகைமாதிரியாகச் சில சொற்களை மட்டும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.
புழங்குபொருளைக் குறிக்கின்ற சொல் எனும்போது, வெள்ளைக்குடி நாகனார் ‘உழுபடை’ என்ற சொல்லை முதன் முதல் புறநானூற்றில்அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப் பழஞ்செய்க்கடன் வீடுகொண்டதாகக் குறிப்பும்உள்ளது.  ‘பொருபடை தரூஉங்  கொற்றமு முழுபடை’ (புறம்:35:25என்கிற அடியில் கலப்பையைக் குறிப்பதாக இச்சொல் பயின்றுவந்துள்ளது. அக்கருவியைக் குறிக்க ‘கலப்பை’ என்ற சொல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி’(பெரும்பாணாற்றுப்படை:188) உருத்திரங்கண்ணனார் இன்று திருநெல்வேலி என்று கூறப்படுகின்ற நிலப்பகுதியைச் சார்ந்தவர்; அவர் வழங்கிய கலப்பை என்ற சொல்லே இன்றும் புழக்கத்தில் உள்ளது. வெள்ளைக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த நாகனாரால் உழுபடை’ என்ற புதிய சொல் கலப்பைக்குரியதாகக் கையாளப்பட்டிருப்பதைப் புறநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. உழுபடை என்பது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கொள்ளமுடியும். இச்சொல்லை இவர் பயன்படுத்த செய்யுளின் ஓசைநலனும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருபடை என்பது முதற்சீராக அமைய உழுபடை என்பது இறுதிச்சீராக இவ்வடியில் அமைந்து ஓசைநலத்தைத் தருகின்றன. இவ்வாறு புழங்கு பொருள்கள் குறித்த சொற்களின் அறிமுகத்தைத் வேறு சில சொற்களைக் கொண்டும் தொடர்ச்சியாகக் கவனப்படுத்த இயலும்.
 அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால்கூத்தராற்றுப் படை என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),]  கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு ஒப்ப என்கிற நிலையில் உவமிக்கும் இடத்தில் இச்சொல் பயின்றுவந்துள்ளது. கூத்தர் என்கிற இச்சொல்லின் இத்தகுநிலை குறித்துகா.சிவத்தம்பி கூறியுள்ள கருத்தும் இங்கு கருதுதற்குரியது.
வையாபுரிப்பிள்ளையாற் குறிப்பிடப்பட்டது போல சங்க நூல்களில் கூத்து, கூத்தர் என்ற சொற்கள் மிக அருமையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான சான்று புற.நா.28:13-14 இல் உள்ளது. அதில் அளிக்கை நடைபெறும் இடம் கூத்தர் ஆடுகளம் எனப்படுகிறது. கோடியர், கண்ணுளர், வயிரியர் என்ற சொற்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது அவர்கள் கூத்தர் என தொழிலாற் குறிப்பிடப்பட வேண்டிய அளவுக்கு தொழில் முதன்மை கொண்டவர்களாக விளங்கவில்லை. (பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்:233)
தொன்மை இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்து, புறநானூற்றிலேயே இச்சொல்லின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மானுடவியல் அடிப்படையில் இச்சொல்லின் வரலாற்றை அணுகும்போது சிவத்தம்பி கூறுகிறபடி கோடியர், கண்ணுளர், வயிரியர் ஆகியோர் அல்லது கலைக்குழாத்தைச் சேர்ந்த சிலர் கூத்தர் என்று தனித்துக் குறிப்பிடும் அளவிற்குத் தொழில்முதன்மை பெற்றிருக்கவில்லை. பொதுவாக ஆற்றுப்படையின் எழுதப்படா விதியாக அமைவது அதன் விளிச்சொல். புலவனையோ, விறலியையோ, பாணனையோ விளிப்பது. புறநானூற்றின் சில ஆற்றுப்படைத்துறைப் பாடல்களில் ‘இரவல’ என்பதும் விளிச்சொல்லாகப் பயின்றுவந்துள்ளது. பாடல்களின் பிற சூழல்களைக் கவனத்தில் கொண்டு அவற்றைப் பாணாற்றுப்படை பாடல்களாக உரையாசிரியர்கள் கருதியுள்ளனர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல் முனைவர் அ.மோகன
Permalink  
 


மலைப்படுகடாம் இலக்கியத்தைக் காணும்போது அதன் 50வது அடியில்  ‘தலைவ’ என்பதே விளிச்சொல்லாக அமைந்துள்ளது. சூழலையும் உடன் இருந்த கலைக்குழாத்தையும்  கருத்தில் கொண்டே நச்சினார்க்கினியரும் பத்துப்பாட்டின் உரையில் அதனைக் கூத்தராற்றுப்படை என்று அனுமானித்துள்ளார். சங்கப் பாடல்களில் சில தொல்காப்பியத்திற்கு முந்தையதாகவும் சில அதன் காலத்திற்குப் பிந்தையதாகவும் இருப்பதாக அறிஞர்கள் கூறுவர். தொல்காப்பியத்தில் ‘கூத்தர்’ தனித்த நிலையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்கு முன்னரே அவர்கள் தங்களுக்குரிய தொழில் அந்தஸ்தைப் பெற்றுவிட்டனர் என்பது புலனாகின்றது. அதற்கான இலக்கியச் சான்றாக புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இனக்குழுமரபைக் குறிக்கும் ‘குறத்தி’ என்ற சொல்லின் பயில்நிலை கவனப்படுத்தப்படுகிறது.  இச்சொல் கபிலரால் புறநானூற்றில்அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிக்குக் கபிலர் என்று சிறப்பிக்கப்படுகின்ற கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் கூட அந்நிலத்திற்கு உரிய மக்களைக் குறிக்கின்றஇச்சொல் பயிலவில்லை. குறமகளிர், குறமகள், அகவன் மகள் ஆகிய சொற்களே அவ்வினக்குழுப் பெண்களைக் குறிக்கப் பிற சங்கப் பிரதிகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் புறநானூற்றில்  வேள்பாரியைப் பாடிய கபிலர் ‘குறத்தி மாட்டிய வற்ற்கடைக் கொள்ளி’(புறநானூறு:108:1) என்கிற அடியில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இன்றுவரை குறவன் என்ற சொல்லுக்கு ஈடாக அவ்வினத்தின் பெண்பாலுக்கு வழங்கப்படுகின்ற குறத்தி என்ற இச்சொல் முதன் முதலில் புறநானூற்றில் கபிலராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சில தொழில்களில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கத்தினரின் பெயர்களையும் புறநானூற்றில்தான் காணமுடிகின்றது. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரின்125 ஆவது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன:1], தங்கால்பொற்கொல்லனாரின் 326 வது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து: 5] பருத்திப் பெண்டு என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. பருத்தியில் நூல்நூற்கின்ற நெசவுப் பெண் குறித்த பதிவுகள் அவை. இவ்விரு புலவர்களும் இவ்வர்க்கத்தில் உள்ள பெண்களைக் குறிக்கப் ‘பருத்திப் பெண்டு’ என்ற சொல்லாட்சியை அறிமுகப் படுத்தியுள்ளனர்.  முதல் பாடலில் இரவில் பருத்திப் பெண்டு வீட்டிலுள்ள சிறிய தீ விளக்கின் ஒளி பேடையின் அச்சத்தைத் தீர்ப்பதாக இருந்தது என்று குறிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் இரவிலும் நூல்நூற்கின்ற பணி தொடர்ந்ததை உணர முடிகின்றது. இரண்டாவது பாடலில் நிணத்தின் தன்மையைக் குறிக்கப் பருத்திப் பெண்டின் பஞ்சு உவமையாக்கப்பட்டுள்ளது.  இவ்விரு புலவர்கள் வாழ்ந்த சமூகத்திலும் நெசவாளர்கள் மிக்கிருந்தனர்; உவமிக்கும் அளவிற்குப் பெண்கள் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இச்சொல்லின் உருவாக்கம் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.
அவ்வாறே இழிசினன் என்ற பெயரையும் [கட்டில் நிணக்கும் இழிசினன் கையது:82:3] அப்பெயரையே விளியாகவும் [எறி சோல் கொள்ளும் இழிசின:287:2] புறநானூற்றில்  சாத்தந்தையார் என்னும் புலவர் அறிமுகப்படுத்துகின்றார். முதல் பாடலில் அப்பெயர் கட்டில் பின்னுபவனைக் குறித்து வந்துள்ளது. இரண்டாவது பாடலில் பறை முழக்குபவனைக்குறித்து வந்துள்ளது. இவ்விரு உழைக்கும் வர்க்கத்தினரும் சமூகத்தில் மிகத்தாழ்ந்த பிறப்பைக் கொண்டவர்கள் என்கிற எண்ணத்தில் இப்புலவரால் இழிசினன் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இதைத்  தொடர்ந்து கழாத்தலையார் என்னும் புலவராலும் [மடி வாய்த் தண்ணுமை இழிசின்ன் குரலே:289:10] இழிசினன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தண்ணுமை முழக்கத்துடன் அப்பெயர் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு புலவர்களின் சமூகத்திலும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்க இச்சொல் பயன் பட்டிருப்பதை இப்பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்க காலச் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த புரிதலையும் பெற முடிகின்றது.
சமூகத்தில் பெண்களுக்கான இருப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களைக் குறிக்கச் சில தனித்த சொற்கள் புறநானூற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரியூர் நக்கனாரின் 332வது புறப்பாடலிலும் [மங்கல மகளிரொடு மாலைசூட்டி:332:5], யாழ்ப்பாணரின் 270 ஆவது புறப்பாடலிலும் [சிறுவர் தாயே பேரில் பெண்டே:6], ஒக்கூர் மாசாத்தியாரின் 279ஆவது புறப்பாடலிலும் [கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே/ மூதில் மகளிராதல் தகுமே;1,2] குடபுலவியனாரின் 19ஆவது புறப்பாடலிலும் [மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் :15] முறையே மங்கல மகளிர், பேரில்பெண்டு,மூதில் மகளிர், மூதில் பெண்டிர் ஆகிய சொற்கள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் அனைத்தும் அவர்களது சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு  அப்புலவர்களின் சமூகத்தில் உருவாக்கப்பட்ட சொற்களே. இல்லத்தில் திருமணமாகி கணவரோடு இருக்கும் பெண்களைக் குறிக்க மங்கல மகளிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகனைப் போருக்கு அனுப்பிய பெண்ணைக் குறிக்கப் பேரில்பெண்டு என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் மக்களைப் பெற்ற  பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளமுடியும். மூதின் மகளிர், மூதில் பெண்டிர் என்ற இரண்டு சொற்களும் மறவர் குலத்தைச் சார்ந்த பெண்களைக் குறிக்கப் பயின்றுவந்துள்ளன. மேற்குறித்த புலவர்கள் அனைவரும் பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டே இத்தகு சொற்களைக் கையாண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தங்களது இருப்பு கேள்விக்குள்ளான பெண்களைக் குறிக்கும் சொற்களையும் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.   யாழ்ப்பாணரின் 261வது புறப்பாட்டு [கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய/ கழிகல மகடூஉப் போல] மற்றும் மாறோக்கத்து நப்பசலையாரின் 280வது புறப்பாட்டிலும்[சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்/ கழிகல மகளிர் போல] கழிகல மகடூஉ,கழிகல மகளிர் ஆகிய இரண்டு சொற்களும் கணவனை இழந்த பெண்களைக் குறிக்கும் சொற்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கைம்மைநோன்பின் கொடுமைகளை மேலும் சில புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியும். இருப்பினும், அக்கைம்பெண்களைக் குறிக்கின்ற சொற்களை அறிமுகப்படுத்தியவர்கள் இவ்விரு புலவர்களே. பரத்தை என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட பெண்களை மார்க்கண்டேயனார் தனது 365வது புறப்பாட்டில் [விலைநலப் பெண்டிரின் பல்மீக் கூற,] விலைநலப்பெண்டிர் என்ற சொல்லால் அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சொற்கள் அப்புலவர்களின் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த கவனத்தை ஏற்படுத்துகின்றன.
புறநானூறு தமிழர்களின் வீர வரலாற்றை மட்டுமன்றி கலைகள் குறித்த பதிவுகளையும் கொண்டுள்ளது. பிற சங்க இலக்கியங்களில் கூறப்படாத ‘அல்லிப் பாவை’ என்ற கூத்துவடிவத்தை அறிமுகப்படுத்தும் பாடலொன்றை கோவூர்கிழார் பாடியுள்ளார். [வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற/ அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப (புறநானூறு:33;16,17)] இந்த அல்லிப்பாவை என்பது ஆண், பெண் என இருவகைக் கோலம் புனைந்து ஆடும் ஒருவகைக் கூத்து; சிலப்பதிகாரம் இதனை அல்லியத்தொகுதி(சிலப்பதிகாரம்:6:48) என்று குறித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. வெறியாட்டு, குரவை, துணங்கை குறித்துப் பேசும் பிற சங்கப் பிரதிகளில் இக்கூத்து குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பதும் கருதத்தக்கது.
இவை அனைத்திற்கும் மேலாக இலக்கியத்தைக் குறிக்கும் செய்யுள் என்ற சொல்லைப் புறநானூற்றுப் புலவர்களே அறிமுகம் செய்துள்ளனர். தமிழின் முதல் திறனாய்வுப் பாடல் என்று அறிஞர்களால் மதிப்பிடப்பட்ட இளங்கீரனாரின்53வது புறப்பாடலிலும் [தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின்], அவரால் புகழப்பட்ட கபிலரின்  202வது புறப்பாடலிலும் [புகழ்ந்த செய்யுட் கழாத் தலையை] இச்சொல் பயின்றுள்ளது. இரண்டிலும் செய்யுள் என்பது இலக்கியத்தைக் குறிக்கின்ற சொல்லாகவே பயின்றுள்ளது.
தமிழகத்தில் பெருங்கற்படைக் காலத்திற்குரிய சின்னங்களாக இன்று தொல்லியல் ஆய்வாளர்களால் தாழிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. இறந்தவர் களைத் தாழியில் இட்டுப் புதைக்கின்ற வழக்கத்தைப் பண்டைய தமிழர்கள் கொண்டிருந்தனர் என்ற கண்டுபிடிப்பு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சங்க இலக்கியப் பிரதிகளிலும் இத்தாழி குறித்த குறிப்புகள் பலஇடங்களில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து கா.ராஜன் ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற தன்னுடைய ஆய்வில் பல கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். தாழி என்ற சொல் நற்றிணையிலும் [மா இருந் தாழி கவிப்ப,/தா இன்று கழிக, ஏற் கொள்ளாக் கூற்றே (நற்றிணை:271:11-12)புறநானூற்றிலும் [அன்னோற் கவிக்கும் கண்அகழ் தாழி  (புறநானூறு:228:12)/ கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த (புறநானூறு:238:1)] பதிற்றுப்பத்திலும் [துளங்குநீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த / மன்னர் மறைத்த தாழி(பதிற்றுப்பத்து:44:22,23)] இடம்பெற்றிருப்பதையும் குறித்துள்ளார். ஆனால் இச்சொல் அகநானூற்றில் [கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்/ தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்திப் (அகநானூறு:129:6,7)/தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇ/ தாழிக் குவளை வாடுமலர் சூட்டி :165:11)/ ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி:275:1)] நான்கு இடங்களில் பயின்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்பதிவுகளைப் பார்க்கும்போது நற்றிணை மற்றும் அகநானூற்றின் 165வது பாடலைப் பாடியவர்களின் பெயர் தெரியவில்லை. ஏனைய பாடல்களைப் பாடிய பரணர், குடவாயிற் கீரத்தனார், கயமனார், நக்கீரர், ஐயூர்முடவனார், பெருஞ்சித்திரனார் ஆகிய புலவர்கள் அனைவரும் ‘தாழி’ என்கிற சொல் மற்றும் அதன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் பண்டைக்காலத் தமிழர்களின் இறப்புச் சடங்கிற்கான சான்றாக இன்று அடையாளங்காணப்பட்டுள்ளன.
புறநானூற்றின் பெயர்தெரியாத இன்னொரு புலவர் மேற்குறித்த பதிவுகளில் இருந்து சற்று மாறுபடுகிறார். அவர் தன்னுடைய பாடலில் மட்டும்  ‘தாழி’ என்கிற சொல்லை ‘ஈமத்தாழி’ என்று அடையுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்.[‘வியல்மலர் அகன்பொழில் ஈமத் தாழி’ (புறநானூறு:256:5)] இறப்புச் சடங்கோடு தொடர்புடைய ‘ஈமம்’ என்ற சொல் புறநானூற்றிலேயே முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஔவையார் [கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்:231:2], தாயங்கண்ணனார் [ஈமவிளக்கின் பேஎய் மகளிரொடு :356:3], காவட்டனார் [ஈம விளக்கின் வெருவரப் பேரும்:359:7], சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை [வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து:245:4], பூதப்பாண்டியன் தேவி [பெருங் காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்: 246:11] ஆகியோர் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களது பதிவுகளில் ஈமம் என்பது எரிகின்ற பொருட்களுடனேயே இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெயர் குறிப்பிடப்படாத அப்புலவர் முதன் முதலில் தாழியுடன் ஈமத்தை இணைத்து ஈமத்தாழி என்று இன்றுவரை பயன்பாட்டில் உள்ள ஒரு தொல்லியல் கலைச்சொல்லை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐயூர் முடவனாரால் சூளை என்ற சொல்லும் புறநானூற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. [அகல் இருவிசும்பின் ஊன்றும் சூளை:228:3]. ஈமத்தாழிகள் செய்ய சூளைகள் பண்டைத் தமிழகத்தில் இருந்துள்ளதை அறிய இக்குறிப்பு உதவுகின்றது.
உண்மையில் மேற்குறித்த சொற்களனைத்தும் புலவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்த மக்களின் பயன்பாட்டில் இருந்தே பெறப்பட்டிருக்கமுடியும். எனவேதான் சொல் குறித்த ஆய்வானது மக்களின் பண்பாட்டினூடாகப் பயணிக்கின்றது. இவை அனைத்தையும் வெறும் இலக்கியச் சொற்கள் என்ற ஒற்றைப் புரிதலோடு  அணுக முடியாது. புறநானூற்றுப் புலவர்கள் வாழ்ந்த சமூகத்தில் மீவியல்பு குறித்த நம்பிக்கைகளும் அதிக அளவில் இருந்துள்ளதைச் சில பாடல்களில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் சொற்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, கழாத்தலையாரின் 62ஆவது புறப்பாடலிலும் [நிறம் கிளர் உருவின் பேய்ப்பெண்டிர்:4] தாயங்கண்ணனாரின் 356வது புறப்பாடலிலும் [ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு:3] காவட்டனாரின் 359வது புறப்பாடலிலும் [பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி:4] முறையே பேய்ப்பெண்டிர், பேய்மகளிர் ஆகிய சொற்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இருகளத்துப் பொருது வீழ்ந்த போர்க்களத்தில் பேய்கள் செய்கின்ற செயல்களைப் பேசுவதாகவும், காடு வாழ்த்துப் பாடலாகவும், பெருங்காஞ்சித் துறையில் பாடப்பட்ட பாடல்களாகவும் இவை உள்ளன. பிற்காலத்தில் எழுந்த பரணி இலக்கியங்களில் பேய்பாடியது, காடுபாடியது ஆகிய பகுதிகள் இடம்பெற முன்னோடிகளாக அமைந்த் பாடல்கள் இவை. இப்பாடல்கள் மூலம் இப்புலவர்கள் காலச் சமூகத்தில் பேய் போன்ற மீவியல்புகளின் மீது மக்கள் நம்பிக்கைகொண்டிருந்தமை புலனாகின்றது.
பொதுவாகப் பாடுகின்ற புலவர்களின் சொல்லாடல்களை வைத்து அப்பாடல்களின் காலத்தை நிர்ணயிக்க இயலும். அந்த அடிப்படையில் புறநானூறு வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை உறுதி செய்யும் விதமாகத் தமிழகத்தில் வைதிகம் நிலையாகக் கால்கொண்டபிறகு பாடப்பட்ட பாடல்களாகச் சிலவற்றை அதில் பயின்றுள்ள புதிய சொற்களின் அறிமுகத்தால் அறுதியிடமுடிகிறது. ஆலமர் கடவுள் என்று திருமாலையும்[ஆலமர்கடவுள் அன்னநின் செல்வம்:198:9], கறைமிடற்று அண்ணல் என்று சிவபெருமானையும்[கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்:55:4] குறிக்கின்ற சொற்களையும் புறநானூற்றின் முறையே வடம வண்ணக்கன் பேரிசாத்தன், மருதன் இளநாகனார் ஆகியோரின் பாடல்களில் மட்டுமே காணமுடிகின்றது. மேலும் சொர்க்கம் என்கிற கருத்தாக்கம் மக்களிடம் பரவியிருந்ததையும் பிற சங்க இலக்கியங்களில் பயின்று வராமல் புறநானூற்றில் மட்டும் வந்துள்ள மேலோர் உலகம்[229:22, 240:6], வாரா உலகம்[341:15], ஆகிய சொற்களால் அறிந்து கொள்ளமுடிகிறது. ஒரு புறப்பாடலில்  வானவூர்தி [27:8]குறித்த குறிப்பும் உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக யாகத்தில் பயன்படுத்த வேண்டியதொரு தூண் குறித்த குறிப்பும் அதைக்குறிக்கின்ற சொல்லும் புறநானூற்றின் பாடலில் மட்டுமே காணமுடிகின்றது. கருங்குழலாதனாரின் 224ஆவது புறப்பாடல் [எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்:8] சோழன் கரிகாற் பெருவளத்தான் வட்டவடிவமாக அமைந்த மதில்சூழ்ந்த வேள்விச் சாலையில் பருந்து விழுங்கும் வடிவில் செய்யப்பட்ட நெடிய வேள்வித் தூண் சமைத்து வேத வேள்விகளைச் செய்து முடித்தான் என்பதைக் குறித்துப் பதிவுசெய்கின்ற இடத்தில் இச்சொல் பயின்றுவந்துள்ளது.
இவைமட்டுமன்றி பல குடிப்பெயர்களும் [71:14,69:11,269:6,285:2,335:7], பறவையின் ஆண் இனத்தைக் குறிக்கின்ற பெயர்களும் (அன்னச்சேவல்:67:1) புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் புறநா னூற்றுக்கு ஒரு பண்பாட்டுக் கலைச்சொல்லகராதி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகின்றன. அவ்வாறு உருவாகின்ற போது புறநானூற்றுப் புலவர்களின் சமூகம் குறித்த புரிதலையும் இன்றைய தமிழ்ச்சமூகம் பெறும்.
உசாத்துணை நூல்கள்
1894, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர் உ.வே., (ப.ஆ.) வெ.நா.ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை.
2005 சிவத்தம்பி, கார்த்திகேசு., பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், சென்னை.
2005 ஜானதன் கல்லர் இலக்கியக்கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம், தமிழில் சிவகுமார், ஆர்.,அடையாளம், சென்னை.
2007 மாதையன், பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2009, சுப்பிரமணியன், பா.ரா., சொல்வலைவேட்டுவன், கயல்கவின்பதிப்பகம், சென்னை
2009 தமிழண்ணல், சங்கமரபு, மீனாட்சி புத்தகநிலையம், சென்னை.
 
முனைவர் அ.மோகனா


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard