திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் திருவள்ளுவர்.
உலகில் தமிழ்மொழியை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து வைத்து இருக்கிறார்கள். காரணம் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட ஒப்பற்ற நூல் திருக்குறள். காந்தியடிகளின் குரு டால்சுடாய் ; டால்சுடாயின் குரு நமது திருவள்ளுவர் ; திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். அகிம்சை தத்துவத்தின் அடிப்படையை உணர்த்தியது திருக்குறள். அதனால் தான் காந்தியடிகள் மற்றொரு பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழராகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். காரணம் : திருக்குறளை, எழுதப்பட்ட மூல மொழியான தமிழில் படித்து உணர வேண்டும் என்று விரும்பினார். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் யாவரும் தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்.
உலகம் போற்றும் உன்னத இலக்கியத்தை வழங்கியது நமது தமிழ்மொழி. செக்கோசுலேவியாவிலிருந்து தமிழ் படிக்க ஓர் அறிஞர் தமிழகம் வந்தார். அவரிடம் உலகில் எத்தனையோ மொழிகள் இருந்த போதும், தமிழ் படிக்க வந்ததற்கு காரணம் என்ன? என்று கேட்ட போது, அவர் சொன்னார் மொழி பெயர்ப்பில்.
இந்தத் திருக்குறளைப் படித்தேன். இப்படிப்பட்ட அருமையான திருக்குறள் நூலை முழுமையாகப் படித்து உணர்வதற்காக தமிழ்மொழி பயில வந்தேன் என்றார்.
முத்தமிழ், முக்கனி, முக்கடல் என்பது போல, மூன்று பால்கள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பால் வடித்து, பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு மனிதன் தொலைநோக்கு சிந்தனையுடன் சகல பொருளிலும், வாழ்வியல் கருத்துக்களை பாடி உள்ளார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. கேரளாவில் திருவள்ளுவரை கடவுளாகவே வணங்கி வருகிறார்கள்.
மேல்நாட்டு அறிஞர்களான சேக்சுபியர், பெர்னாட்சா, ரூசோ என பல்வேறு அறிஞர்கள் கூறிய ஒட்டுமொத்தக் கருத்துக்கள் அனைத்தையும், இவர்களுக்கு முன்பே, திருவள்ளுவர் என்ற தமிழறிஞர் எழுதி உள்ளார் என்று எண்ணிப் பார்க்கும் போது திருவள்ளுவரின் திறமை, எத்துணை அளப்பரியது, இமயத்தை விட உயர்ந்தது என்பதை நாம் உணர் முடியும். திருக்குறளுக்கு உரை -எழுதினார்கள் ; எழுதுகிறார்கள் ; எழுதுவார்கள். முக்காலமும், முப்பாலின் உரை வந்துகொண்டே இருக்குமென்று உறுதி கூறலாம்.
மாணவராக இருக்கும் போது, திருக்குறளை, மதிப்பெண்ணிற்காக மனப்பாடப் பகுதியில் படித்த்ததோடு முடிந்து விட்டது என்று சிலர், திருக்குறளையே மறந்து விடுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் அன்பான வேண்டுகோள் : தயவுசெய்து திருக்குறளை முழுவதும் படித்துப் பாருங்கள் ; அதன்வழி நடந்து வாழுங்கள் ; வாழ்க்கை இனிக்கும் ; வசந்தம் வசப்படும். வாழ்வில் துன்பம் வந்தால் அதனை நீக்கும் தீர்வு திருக்குறளில் உள்ளது. கவலை வந்தால் அதனை அகற்றும் ஆற்றல் திருக்குறளுக்கு உள்ளது. வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு திருக்குறள் படித்து, அதன்வழி நடந்து, உயர்ந்து வாழ்ந்திடுங்கள் ...
“திருக்குறளில் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பில் திருக்குறளை ஆராய்ந்த போது, இன்றைய ஆளுமைத்திறன் கருத்துக்கள் அனைத்திற்குமே முன்னோடி, நமது திருவள்ளுவர் என்பதை உணர முடிந்தது. ஆளுமைத்திறன் குறித்து, பல்வேறு ஆங்கில நூல்கள் வந்துள்ளன. ஆளுமைத்திறன் பற்றி தனிக்கல்வி முறையே வந்து விட்டன. ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இவை அனைத்திற்கும் மூலம், எதுவென்று பார்த்தால் நமது திருக்குறள் தான். ஆளுமைத்திறன் பற்றி மிக அற்புதமாக சிந்தித்து, திருவள்ளுவர் அன்றே அருமையாக திருக்குறளை வடித்துள்ளார்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (619)
தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சி செய்தால் முடியும் என்று தன்னம்பிக்கை விதைக்கிறார். ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் இடுவது இந்தத் திருக்குறள். வாழ்க்கையில், தொழிலில், இலக்கியத்தில் என எந்தத் துறையாக இருந்தாலும், “முயற்சி என்பதை மூச்சாகக் கொண்டால் வெற்றி வசமாகும்” என்பதை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார். மேலாண்மைப்பணியில் மேலாளராக, நிர்வாகியாக இருப்பவர்கள், இந்தத் திருக்குறளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு முயன்றால் சாதனைகளை நிகழ்த்த முடியும்.
“ஆள்வினை உடைமை” (62) என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களும் ஆளுமைத்திறன் பற்றியே இயம்புகின்றன. பத்துத் திருக்குறளில் தலையாய திருக்குறள், மிகவும் அடிப்படையான திருக்குறள், மேற்சொன்ன திருக்குறளே ஆகும்.
ஒவ்வொரு திருக்குறளிலும், ஒவ்வொரு முக்கியமான கருத்தை விதைத்து உள்ளார் திருவள்ளுவர்.
அதிகாரம் : 62 : ஆள்வினை உடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (611)
எந்தஒரு செயலையும் விரும்பி செய்தால் வெற்றி காண முடியும். அதுபோல, மேற்கொண்ட செயலில் மனம் தளராமல் முயற்சி செய்தால் அதற்குரிய பெருமை, அருமை அனைத்தும் முன்வந்து சேரும் என்பதை மிக அழகாக உணர்த்தி உள்ளார்.
ஆளுமைத்திறன் என்பது “என்னால் முடியும்” என்றே முயல்வது. தனக்குக்கீழ் பணிபுரிபவர்களையும் ஊக்குவித்து முயற்சி செய்திட தூண்டி விட்டு நிர்வாகம் செய்வது. மேலாண்மைக் கல்வியில், பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் சொல்லும் கருத்துக்களை எல்லாம் இரண்டே வரிகளில் அல்ல, ஒன்றே முக்கால் வரிகளில், மிக இயல்பாகவும், இனிமையாகவும் உணர்த்தி விடுகிறார்.
ஆளுமைத்திறன் பற்றிய பயிற்சிக்கு மூலப்பொருளாக விளங்குவது நமது திருக்குறள். ஆள்வினை உடைமை அதிகாரத்தில் உள்ள பத்து திருக்க்குறளையும் படித்து, அறிந்து, ஆராய்ந்து அதன்படி நடந்தால், குடத்து விளக்காக உள்ள திறமை, குன்றத்து விளக்காக ஒளிர்ந்திடும்.
எந்த ஒரு செயலையும், அரைகுறையாக விட்டுவிடுதல் முறையன்று; எடுத்த செயலை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதை மிக நுட்பமாக உணர்த்துகின்றார் திருவள்ளுவர். இக்கருத்து அனைவருக்கும் பொருந்தும். நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் பொருந்தும், தொழிற்சாலையில் தொழில் புரியும் தொழிலாளிக்கும் பொருந்தும், அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலருக்கும் பொருந்தும், ஆட்சி செய்யும் ஆள்வோருக்கும் பொருந்தும். மேலாண்மைக் கோட்பாடு இது தான். எடுத்துக் கொண்ட பணியினை இனிதே முடிப்பது.
உதாரணத்திற்கு :
விவசாயிக்கு, விவசாயத்தில் பல நிலைகள் உள்ளன. உழுதல், நாற்று நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுதல், களை எடுத்தல், கண்காணித்தல், அறுவடை செய்தல், அடித்தல், தூற்றுதல், குவித்தல், நெல் மூடையாக்குதல் – இப்படி பலவேறு தொடர்பணிகள் இருக்கின்றன. விவசாயி நாற்று நட்டதோடு அந்த செயலை பாதியிலேயே நிறுத்தி விட்டால் நெல்மணிகளைக் காண இயலாது. எனவே எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பாதி செயல் செய்து விட்டுவிடுவது என்பது முறையற்ற செயல் என்பதை முறையாக, முழுமையாக உணர்த்தி உள்ளார் திருவள்ளுவர்.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. (613)
முயன்று பொருள் ஈட்டி, பிறருக்கு உதவுவது பெருமை. அது விடுத்து, கடைத் தேங்காயை எடுத்து, விழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்று, பிறரிடம் எடுத்து, பிறருக்கு உதவுவது பெருமையன்று. உன்னுடைய முயற்சியால் முயன்று, பிறருக்கு உதவுவதே சிறப்பு. அப்படி உதவும் போது, உதவி பெற்றவர்கள் உன்னை மதிப்பார்கள், பெருமைகள் வந்து சேரும். ஆளுமைத்திறன் என்பது இது தான். உன்னுடைய திறமையால், உழைப்பால் முயற்சியால், பொருள் ஈட்டி பிறருக்கு உதவி, வாழ்வாங்கு வாழ சொல்கிறார் திருவள்ளுவர். ஒரு திருக்குறளில் பல பொருள்கள் இருக்கும், கூர்ந்து படித்தால் நன்கு விளங்கும்.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் (614)
முயற்சி செய்யாதவன் பிறருக்கு உதவி செய்ய நினைப்பது என்பது, வாள் பயிற்சி இல்லாதவன், வாள் சுழற்றுவது போல என்கிறார். எந்த ஒரு செயலுக்கும் முயற்சி என்பது மோனையைப் போல முன்நிற்க வேண்டும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியது போல,
அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ட்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்.
முயற்சி எதுவுமே செய்யாமல் எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று கவலை கொள்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் எல்லாம் திருக்குறளை ஆழ்ந்து படித்தால் உடன் முயற்சியில் இறங்கி சாதனைகள் நிகழ்த்த முடியும்.
இன்பம் வேண்டும் என்ற தன்னல ஆசையின்றி செய்யும் செயலையே விரும்பி, செயல் செய்து, பொருள் ஈட்டி தன் குடும்பத்தின் துன்பத்தை நீக்கி தூணாக விளங்குவான். தனது குடும்பம் மகிழ்வாக வாழ வேண்டும் என்பதற்காக குடும்பத்தோடு இருக்க வேண்டிய இன்பத்தை தள்ளி வைத்து விட்டு அயல்நாடுகளில் பலர் வாழ்கின்றனர். தன்னலம் மறந்து, பொதுநலம் பேணி, முயன்று உழைத்து வாழும் எத்தனையோ மனிதர்கள் பூமியில் உளர். அவர்களின் தன்னலமற்ற தியாகத்தை, உழைப்பை, முயற்சியை திருவள்ளுவர் நன்கு உணர்த்தி, அவர்களை “தூண்” என்று பாராட்டி உள்ளார்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (616)
முயற்சி என்பது மகிழ்வைத் தரும், முயற்சியின்மை என்பது துன்பத்தைத் தரும். முயல், ஆமை கதை நாம் அறிந்த கதை. முயல், ஆமையிடம் ஏன் தோற்றது என்றால், முயலாமையால் தோற்றது என்பது விடையாகும். முயலாமை என்பது தோல்வியையே தரும்.
முயற்சிகள் தோற்கலாம், ஆனால் முயற்சிக்கத் தோற்கக் கூடாது. இயலாமையால் தோற்றவர்களை விட, முயலாமையால் தோற்றவர்களே அதிகம். உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல, எடுத்துக் கொண்ட செயல் முடியும் வரை முயற்சி செய் என்பார் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள். அவர் எங்கு பேசினாலும், உலகத்தின் எந்த மூலையில் பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டித் தான் பேசுவார். காரணம், அவர் மிகவும் நேசிப்பது திருக்குறள். அவருடைய வெற்றிக்கு, சாதனைக்கு, மனித நேயத்திற்கு வித்திட்டது ஒப்பற்ற திருக்குறள் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
அப்துல் கலாம் மட்டுமல்ல, வெற்றி பெற்ற மாமனிதர்கள் அனைவருக்கும் அடிப்படையாக, அறிவுரையாக, அறவுரையாக விளங்கியது, விளங்குகின்றது, விளங்கும், முக்காலமும் பொருந்தும் ஒப்பற்ற திருக்குறள். அதனால் தான் ரசியாவில் டல்சன் இழைகளால் ஆன, உலகம் அழிந்தாலும் அழியாத அறையில் இடம் பெற்றுள்ள அரிய நூல்களில் ஒன்று நமது திருக்குறள் என்பது நமக்கு பெருமை.
முயற்சி எதுவும் செய்யாமல் சோம்பி இருப்பவன் வாழ்வில் முன்னேற முடியாது. ஏழ்மை, வறுமை, சோகமே மிஞ்சும் என்பதை மிக நுட்பமாகவும் தெளிவாகவும் உணர்த்தி உள்ளார் திருவள்ளுவர்.
மூச்சு விடுபவர் எல்லாம் மனிதர் அல்ல, முயற்சி செய்பவரே மனிதர். முயற்சி எதுவும் செய்யாமல் முடங்கிக் கிடப்பது மூடத்தனம் என்பதை மூளையில் உரைக்குமாறு உரைத்துள்ளார் திருவள்ளுவர்.
தாமசு ஆல்வாய் எடிசன் அவர்கள் மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்துள்ளார். அவருடைய விடாமுயற்சி தான் அவருக்கு காலத்தால் அழியாத புகழை ஈட்டித் தந்துள்ளது. முயற்சி என்றால் எடிசன், எடிசன் என்றால் முயற்சி என்று உலகம் அறிந்து கொண்டது. அவரது பிறந்த நாள் அன்று, சில நிமிடங்கள் மின்சாரத்தை தடை செய்து, எடிசன் முயற்சி செய்யாவிடில், இப்போது சில நிமிடங்கள் நடந்த சிரமங்கள் தொடர்கதையாகி இருக்கும் என்று உணர்த்தினார்களாம். அதுபோல எடிசன் மட்டுமல்ல, பலருக்கும் முயற்சியின் விளைவை ஆளுமைத்திறனை உணர்த்தியது நமது திருக்குறள். எடிசனும் ஆங்கிலத்தில் திருக்குறளை, தனது தாயின் அறிமுகத்தால் படித்து இருக்க வாய்ப்பு உண்டு என்றே எனக்குத் தோன்றுகின்றது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ; “உழுகும் போது ஊர்வழியே போய் விட்டு, அறுக்கும் போது அரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்தானாம்”. இன்று பலர் உழைக்காமல், முயற்சி செய்யாமல், எல்லாமே இலவசமாகவே வந்து சேர வேண்டுமென்றே நினைக்கின்றனர்.
“ஐம்புலன்களில் குறையிருந்தால் குறையன்று” என்று அன்றே மட்டற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பெருமை தரும் விதமாக குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பது குறை. ஐம்புலன்கள் நன்றாக இருந்தும், முயற்சி செய்யாமல், உழைக்காமல் இருப்பது கேவலம் என்கிறார் திருவள்ளுவர்.
எந்த ஒரு பணிக்கும் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து உண்ணுபவர்கள் உண்டு. அவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் திருவள்ளுவர் நன்கு விளக்கி உள்ளார். உழைக்காதவன், முயற்சி செய்யாதவன் கேவலமானவன் என்கிறார். மனிதனுக்கு அழகு முயற்சி செய்வதே. முயற்சி செய்ததன் காரணமாக இந்த உலகில் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சிகளும், விந்தைகளும் முயற்சியின் காரணமாகவே விளைந்தன.
திருவள்ளுவர் வலியுறுத்துவது முயற்சி! முயற்சி! முயற்சி! ஒரு மனிதன் முயற்சி என்பதை கொள்கையாகக் கொண்டு எந்த ஒரு செயலில் இறங்கினாலும் வெற்றி உறுதியாகும். புகழ்மாலை தோளில் விழும். உலகம் பாராட்டும். உலகம் போற்றும். சாதனை, சாகசம், வெற்றி அனைத்திற்கும் அடிப்படை என்பது முயற்சி.
உலகத்தில் வேறு எந்தஒரு இலக்கியத்திலும், முயற்சி பற்றி இவ்வளவு ஆழமாக, நுட்பமாக, தெளிவாக உணர்த்தி இருக்கவில்லை. திருக்குறள் ஒன்று தான் முயற்சி என்பதை மனித வாழ்வின் அடிப்படை என்று உறுதிபடத் தெளிவாகக் கூறி உள்ளது.
திருவள்ளுவர் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இரண்டு வரிகளில் விளக்கி உள்ளார். வீண் கதைகள் சொல்லாத, வாழ்வியல் இலக்கியம். ரத்தினச் சுருக்கமான சொற்களின் மூலம் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்திடும் அற்புதம் திருக்குறள். கதையளப்பது, காதில் பூ சுற்றுவது, நடைமுறைக்கு உதவாத கற்பனைகள் பற்றி கூறுவது திருவள்ளுவருக்கு பிடிக்காத ஒன்று. சொல்ல வந்த கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நுட்பம் கற்றவர் திருவள்ளுவர். ஹைக்கூ கவிதைகளுக்கும் முன்னோடி திருவள்ளுவர் தான். மூன்று வரிகளில் ஹைக்கூ உணர்த்துவது போல இரண்டே வரிகளில் அன்றே உணர்த்தியவர் திருவள்ளுவர்.
619-ஆவது திருக்குறள் தெய்வத்தால் ... பற்றி கட்டுரையின் தொடக்கத்திலேயே எழுதி விட்டேன்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620)
தலைவிதி என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை தான். திருவள்ளுவர் காலத்தில் பலர் தலைவிதியை நம்பினார்கள். இன்றும் பலர் நம்புகிறார்கள். ஆனால் திருவள்ளுவர் அவர்களுக்கு புரியும் விதமாக விதி விதி என்று வெந்து சாகாதே , நீ துன்பப்பட வேண்டும் என்று விதி என்ற ஒன்று ஒருவேளை இருந்தால் கூட கொண்ட செயலில் நீ கடுமையாக நம்பிக்கையோடு உழைத்தால் முயன்றால் அந்த விதி கூட புறமுதுகு காட்டி ஓடி விடும். உழைப்பால், முயற்சியால் இன்பம் வந்து சேரும் என்கிறார் திருவள்ளுவர்.
ஓர் உழவன் விவசாயத்திற்காக கிணறு தோண்டுகின்றான். 99 அடிகள் தோண்டி விடுகிறான். தண்ணீர் வரவில்லை. விரக்தி அடைந்து தோண்டுவதை நிறுத்தி விடுகிறான். அடுத்து வந்தவன் அதில் ஓர் அடி தோண்டுகிறான், தண்ணீர் வந்து விடுகிறது. இதைத் தான் திருவள்ளுவர், எடுத்துக் கொண்ட செயல் முடியும் வரை, நோக்கம் நிறைவேறும் வரை, இலக்கினை எட்டும் வரை முயற்சி செய் என்கிறார்.
குரங்கு ஒன்று விதை விதைத்து தண்ணீர் ஊற்றியதாம். மறுநாள் வந்து பார்த்ததாம், விளையவில்லையே என்று தோண்டியதை எடுத்துப் பார்த்து திரும்பவும் விதையை விதைத்ததாம். இந்த மனநிலையிலேயே இன்றைக்கு பல இளைஞர்கள் இருக்கின்றனர். ஒரே ஒரு முறை முயற்சி செய்துவிட்டு வெற்றி கிடைக்கவில்லை என்று விரக்தி அடைகின்றனர். சிலர் தவறாக, தற்கொலை முடிவு வரை எடுத்து விடுகின்றனர். விதை விதைத்தால் அது வளர சில நாட்கள் காத்திருக்க வேண்டும், பொறுமை வேண்டும், அது போல பலமுறை முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி. இன்னும் சில இளைஞர்கள் எனக்கு வசதி இல்லை, அப்பாவிடம் சொத்து இல்லை, நான் ஏழை, இப்படி எதிர்மறையாகவே சிந்தித்து, கவலையில் வாடி வருகின்றனர்.
வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே.
பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளை நினைவில் கொள்ள வேண்டும். ஏழையாகப் பிறந்தது தவறல்ல. ஏழையாகவே வாழ்வதே தவறு. முயற்சியால், உழைப்பால், ஏழ்மையை நீக்க வேண்டும். நேர்மையான வழியில், முயற்சியில், தன் உழைப்பில் பொருள் ஈட்டு என்கிறார்.
அயற்சி அடையாமல் முயற்சி செய்வதே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். என்னால் முடியும் என்றே முயன்றால் எதுவும் சாத்தியமாகும். முடியாது, நடக்காது, கிடைக்காது, தெரியாது என்று எதிர்மறை சிந்தனைகளை விடுத்து, முடியும், நமக்கும் கிடைக்கும், தெரியும் என்று உடன்பாட்டு சிந்தனைக்கு வந்தால் வெற்றி நம்முடன் உடன்படிக்கை செய்து கொள்ளும்.
முயற்சி செய்யும் போது சிலர் கேலி பேசலாம், கிண்டல் செய்யலாம், அதனைப் பொருட்படுத்தக் கூடாது.
என் வாழ்வில் நடந்த உண்மையை இங்கு எடுத்து இயம்புவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான், பள்ளியில் படிக்கும் போதே, கவிதை எழுதுவேன். சக மாணவர்களில் சிலர் கிண்டல் அடித்தார்கள், கேலி பேசினார்கள், நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, கவிதை எழுதும் முயற்சியை மட்டும் நான் கைவிடவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். தொடக்கக் காலத்தில் பிரபல இதழ்கள் எனது கவிதையை பிரசுரம் செய்ய-வில்லை. அதற்காக நான் மனம் சோர்ந்து விடவில்லை. மதுரையில் மதுரைமணி என்ற மாலை நாளிதழ் சனிக்கிழமை தோறும் மணிமலர் என்று இணைப்பிதழ் வெளியிட்டனர். அதில் தான் எனது முதல் கவிதை பிரசுரமானது. எனது கவிதையை அச்சில் பார்த்த உற்சாகத்தின் காரணமாக தொடர்ந்து எழுதினேன்.
எழுதியவற்றை நூலாக்கினேன். நூல்கள் 1000 பேரை சென்றடைய ஆண்டுகள் ஆகின. நம் கவிதைகள் பலருக்கும் சென்றடைய என்ன வழி என்று யோசித்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பே www.kavimalar.com என்ற இணையம் தொடங்கினேன். பல இலட்சம் பேர் படித்தனர். உலகின் அனைத்து மூலையிலும் சென்றடைந்தது.www.kavimalar.com இணையத்தின் வெற்றியினைத் தொடர்ந்து www.eraeravi.com என்ற இணையம் தொடங்கி நூல் விமர்சன்ங்கள், கட்டுரைகள் பதிவு செய்தேன். www.eraeravi.blogspot.in என்ற வலைப்பூ தொடங்கினேன்.தினமும் எழுதி வருகிறேன். உலகம் முழுவதும் பல இலட்சம் பேர் படித்து வருகின்றனர்.https://www.facebook.com/rravi.ravi என்ற முக நூல் தொடங்கினேன். 5000 நண்பர்கள் உள்ளனர்.
பிரபலமான பின், பல பிரபல இதழ்கள் எனது கவிதைகள் வெளியிட்டன, எனது நேர்முகம் வெளியானது, பல்வேறு தொலைக்காட்சிகளிலும் எனது நேர்முகம் வெளியானது. இதுவரை 14 நூல்கள் எழுதி விட்டேன். இன்னும் எழுதுவேன். என்னுடைய இலக்கியப்பயணத்திற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப., கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், புதுகை தருமராசன், பேராசிரியர் எ.எம். ஜேம்ஸ் இப்படி பலர் துணை நிற்கின்றனர்.
சொந்தக்கதை எழுதி விட்டேன் என்று தவறாக எண்ண வேண்டாம். இதற்கு எல்லாம் அடிப்படை ஒப்பற்ற திருக்குறளே. தோல்விக்குத் துவண்டு விடாமல் கேலி, கிண்டலுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாகவே என்னால் பிரபலமாக முடிந்த்து. எனது படைப்புகளில் பகுத்தறிவை, மனித நேயத்தை, அறத்தை, பெண்ணுரிமையை வலியுறுத்த என அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது திருக்குறளே.
ஆளுமைத்திறன் வளர்க்க உதவுவது அற்புதமான திருக்குறள். தூண்டி விடும் விளக்கு பிரகாசமாக எரிவது போல பாராட்டப் பாராட்ட வளர்வோம். ஒளிர்வோம், பிறரின் பாராட்டு என்பது வீட்டில் நாம் சோம்பி இருந்தால் கிடைக்காது, உழைக்க வேண்டும், முயற்சி செய்ய வேண்டும், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும், சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். மனிதன் உழைப்பின்றி சும்மா இருப்பது உலகிற்கு சுமை. எனவே சோம்பல் விடுத்து சுறுசுறுப்பைப் பெற்று உழைக்க முன்வர வேண்டும்.
முடிவுரை :
திருக்குறள் போல ஓர் ஒப்பற்ற இலக்கியம் உலகில் வேறு இல்லை. அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல, படிக்கப் படிக்க கருத்துக்கள் வரும் கருத்துச் சுரங்கம், கருத்துக் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளில் என்ன உள்ளது என்று எளிதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி பெற்ற மனிதர்கள் யாவரும் திருக்குறள் படித்து, அதன்வழி நடந்ததன் காரணமாகவே சிறப்பை அடைந்தார்கள்.
பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. பிறந்தோம், சாதித்தோம் என்பதே வாழ்க்கை. உலகில் வாழ்வாங்கு வாழ நம்மை நாமே செதுக்கிக் கொள்ள, நம்மை நாமே நெறிப்படுத்திக் கொள்ள திருக்குறளை ஆழ்ந்து படிப்போம். அதன் வழி நடப்போம். 1330 திருக்குறள்கள் எனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பது பெருமை அல்ல. பத்து திருக்குறள் வழி நான் நடக்கின்றேன் என்பதே பெருமை.
வள்ளுவம் வழி நடப்போம், வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோம், உலகிற்கே ஒளிவிளக்காய்த் திகழும் திருக்குறள் நமக்கும் வழிகாட்டும். வள்ளுவம் உலகம் முழுவதும் பரவிட வழி சமைப்போம். உலகப்பொதுமறையால் உலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றுபடுவோம்.
அலைபேசி 98421 93103 மின் அஞ்சல் eraeravik@gmail.com