முகாமைத்துவம் (Management), என்ற படிப்பு இன்றைய தலைமுறையினரிடம் பிரபலமானது. MBA பட்டம் பெற்றவர்களைச் சமூகம் மிகுந்த மரியாதையுடன் நோக்குகிறது. இது ஏதோ, 20ம் நூற்றாண்டில், மேனாட்டரிஞர்கள் கண்டறிந்த கல்வி முறை என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவன்று. திருக்குறளிலும், இன்னும் பல சங்க இலக்கியங்களிலும், கம்ப ராமாயணத்திலும் ஏராளமான முகாமைத்துவம் குறித்த தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இக்கட்டுரையில், இன்றைய முகாமைத்துவம் குறித்த கருத்துகள் திருவள்ளுவரால் எவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன என்று கண்டு இன்புறுவோம்.
முகாமைத்துவத்துவத்தின் கூறுகள் யாவை?
பொதுவாக ஐந்து பணிகளை முகாமைத்துவத்துவத்தின் முக்கியக்கூறுகள் (Important functions) என்பர். அவையாவன.
1. திட்டமிடுதல் (Planning)
என்ன பணியை, எப்பொழுது, யார், எங்கு , எதற்காகச் செய்ய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து, முடிவு செய்தல் மேலாளரின் கடமைகளின் முதன்மையானது.
2. ஒழுங்குபடுத்துதல் (Organising)
திட்டமிட்ட பணிகள் சரிவர நடக்கத்தேவையான வழிகளையும், அதற்குத் தேவையான ஆதாரங்கள் / சாதனங்களை(resources) ஆய்ந்து, பணியைச் செவ்வனே தொடங்க வகை செய்தல்.
3. பணியாளர்களை நியமித்தல் (Staffing)
திட்டமிட்ட பணிகள் நன்கு நடைபெறத் தேவையான அளவு திறனுள்ள பணியாளர்களிடம், செயல்களை ஒப்புவித்தல்
4. ஒருங்கிணைத்தல் (Co-ordinating)
ஒரு நிறுவனம், ஒரு பெரிய குறிக்கோளை (Objective) நோக்கி, முன்னேற முயலும்பொழுது, பணிபுரியும் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அதே வேளை, பலர் வேலை செய்யும் பெரிய ஒரு நிறுவனத்தில் முரண்பாடுகள் நேருவதும் இயல்பானதுதான். பல்வேறு பணியாளர்களையும், அவர்கள் பணிபுரிவதற்குத் தேவையான கருவிகள்/வளங்கள் முதலியவற்றை ஒருங்கிணைப்பது ஒரு மேலாளரின் தலையாய கடமையாகும்
5. கட்டுப்படுத்துதல் (Controlling)
தம் கீழ் பணி புரிபவர்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு, அவர்கள் தம் பணியைச் சரிவரச் செய்யாத பொழுதோ, அவர்களின் பணி நடவடிக்கை நிறுவனத்தின் குறிக்கோளில் இருந்து விலகிச்செல்லும்பொழுதோ, தவறான நோக்கங்களுடன், ஏமாற்ற/மோசடி செய்ய முயலும்பொழுதோ கண்டிப்பாக நடந்து கொள்வதும், அத்தகைய நிகழ்வுகள் நடவாவண்ணம் கண்காணிப்பதும் இன்றியமையாதது.
இத்தகைய கருத்துக்கள் எல்லாம் திருக்குறளில் எவ்வளவு பாங்காக விரவி நிற்கின்றன் என்பதைக் கீழே காணலாம்.
திட்டமிடுதல் என்பது எந்தச் செயலை, எங்கு, எப்பொழுது, யாரைக்கொண்டு , எப்படிச் செய்வது என்னும் கேள்விகளுக்கு விடை கூறுவதே ஆகும்.
இதையே வள்ளுவர்,
"பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்."
( ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன், அச்செயலுக்குத் தேவையான பொருள் (பணம்), தேவைப்படும் சாதனங்கள், செய்ய உகந்த சமயம் (அல்லது, செயலைச் செய்யத் தேவைப்படும் நேரம்) செயலைச் செய்வதற்கான வழிமுறைகள், செயலைச் செய்வதற்கான சரியான இடம் ஆகியவற்றை, தீர ஆய்ந்து செயலைத் தொடங்க வேண்டும் - வினை செயல்வகை - குறள் எண் 675) என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல,
"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்" - எனவும்
(ஒரு செயலின் முடிவினையும், அச்செயலைச் செய்யும்பொழுது ஏற்படக்கூடிய தடங்கல்களையும், அச்செயலை முடிப்பதனால் ஏற்படும் பயன்களையும் நன்கு அலசிப் பார்த்து அச்செயலினைச் செய்யவேண்டும்- வினை செயல்வகை - குறள் எண் 676)
திட்டமிடுதல் குறித்து அழகுற விளக்குகிறார்.
தற்காலத்தில் ஒரு செயலைத் தொடங்குமுன் நிபுணர்களின் கருத்தை அறிய முற்படுகிறோமல்லவா? அதைப்பற்றியும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?
"செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்"
அதாவது ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன், முன்பே அச்செயலைச் செய்த அனுபவம் உள்ளவன் அல்லது அக்செயலைப் பற்றி நன்கு அறிந்தவனுடைய கருத்தினை முதலில் அறிந்துகொண்டு செயலைத் தொடங்குதல் வேண்டும் - வினை செயல்வகை - குறள் எண் 677.
இத்துடன் நிறுத்தவில்லை திருவள்ளுவர். இடனறிதல், வலியறிதல், காலமறிதல், தெரிந்து வினையாடல் என்று ஏகப்பட்ட அதிகாரங்களில், செயல்களைச் செய்யும் வகைகளைக்குறித்துத் தெளிவுற விளக்கியுள்ளார். இன்றைய 'மானேஜ்மெண்ட் குரு' வாக விளங்கும் பலர் பற்பல நூல்களில் எழுதியுள்ள கருத்துக்களை இரண்டே வரிகளில் அடக்கிய விந்தையை என்னென்பது?
'Staffing' அதாவது பணியாளர்களை நியமித்தல் "Human Resource Management' எனப்படும் 'மனித வள முகாமைத்துவம்' குறித்தும் பல குறள்கள் உள்ளன.ஒருவருடைய தகுதியும் திறமையுமறிந்து அவர்களுக்கு ஏற்ற பணியைத் தருவது HRD யின் ஒரு முக்கியக் கடமையாகும்.
அதனையே வள்ளுவர்
" அறந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று."
(செய்யும் முறையறிந்து, செயலாற்ற வல்லவனிடமே ஒரு செயலை ஒப்படைக்க வேண்டுமேயன்றி, வேண்டியவனென்பதால் ஒருவனிடம் பணியை ஒப்படைக்கக் கூடாது - தெரிந்து வினையாடல் - குறள் எண் -515)
" வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்"
(ஒருவன் ஒரு செயலுக்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்து பிறகே அவனை அப்பணியில் அமர்த்த வேண்டும் - தெரிந்து வினையாடல் - குறள் எண் -518)
என்றெல்லாம் வலியுறுத்துகிறார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணிப்பதும் முக்கியம், தவறு செய்தபொழுது கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட மிகவும் அவசியம் என்பதையும், கீழ்க்கண்ட குறள்கள் மூலம் விளக்குகிறார்.
" நாடொறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கொடாமை கோடா துலகு."
( செயலாற்றுபவன் நேர்மை தவறாமல் இருந்தால் உலகம் தன் நிலையில் மாற்றமடையாது. எனவே,** மன்னன் அவனைக் கண்காணித்தல் வேண்டும்.- தெரிந்து வினையாடல் - குறள் எண் -520)
" தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து"
(ஒருவன் குற்றம் செய்தால், அக்குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றத்தைப் புரியாதவாறு தண்டனை தருதல், **அரசன் கடமை வெருவந்த செய்யாமை - குறள் எண் - 561)
**வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், பணி என்பது, அரசனிடம் பணிபுரிவதே என்பதால் அநேகமாக முகாமைத்துவம் குறித்த குறள்கள் மன்னனையே சுட்டுகின்றன. ஆனால்,இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தக்கவாறு தலைமை அதிகாரிகளென்று பொருள் கொள்வோமாக.