திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2
திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர்.திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின்சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில்இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கியதிருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
திருக்குறள் – சட்டநூல்
சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற சொல் அறநெறிகளைக் குறிப்பதற்குப் பயன்பட்டது; அத்துடன் இன்று ‘சட்டம்’ என்ற சொல் உணர்த்தும் கருத்தமைவுகளையும் குறிப்பதற்குப் பயன்பட்டு வந்தது. புறநானூற்றில் குற்றங்களைத் தொகுத்துக் கூறும் தமிழரின் அறநூல் ஒன்றைக் குறிக்கும் பாடலில்,
அறம் பாடிற்றே ஆயிழை கணவ
என வரும் அடியில் காணப்படும் ‘அறம்’ என்ற சொல் திருக்குறளைத்தான் குறித்தது என்று கருதுவர். எனவே வள்ளுவர் ‘அறம்’ என்று குறிப்பதைச் சட்டநெறிகளாகவும், ‘தீது’ என்று குறிப்பிடுவதைக் குற்றங்களாகவும் கொள்ளலாம்.
இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டம் – ஓர் அறிமுகம்
இந்தியா, ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து 1858-இல் ஆங்கிலப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்தபின்பு, இந்தியாவிற்கென்று பொதுவான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அச் சட்டங்களை உருவாக்குவதில் பெரும்பணியாற்றியவர் மெக்காலே பிரபு ஆவார். அவர் வகுத்தளித்த சட்டங்களில் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டம் (இக்கட்டுரையில் இது இ.த.தொ.சட்டம் என்று குறிப்பிடப்பெறும்) குறிப்பிடத்தக்கதாகும். இச்சட்டம் இருபத்து மூன்று அத்தியாயங்களையும்(Chapters) 511 பிரிவுகளையும்(Sections) கொண்டுள்ளது. இச்சட்டத்தில் குற்றங்களின் வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன. அக்குற்றங்களுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1860-இல் இயற்றப்பட்ட இது குற்றமிழைக்கும் இந்தியர்களைத் தண்டிப்பதற்கான சட்டமாகப் பயன்பட்டு வருகின்றது.
பொருந்துறுகை
ஆங்கில அரசினால் இயற்றப்படும் சட்டம் ஒவ்வொன்றும் அது யார் யாருக்குப் பொருந்தும் என்பதைத் தெளிவாகச் சுட்டிவிடும். இ.த.தொ.சட்டமும், அச்சட்டம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் இந்தியாவில் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவது தொடர்பாகப் பொருந்தும் என்பதை,
Every person shall be liable to punishment under this code
என்று குறிப்பிடுகின்றது. எனவே இந்தியர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத் தொகுப்பின் கீழ்வரும் குற்றங்களைப் புரியுமிடத்து ஒத்தத் தண்டனைகளைப் பெறுவர் என்பது தெளிவாகின்றது. சட்ட நூலாக இருந்து தண்டனைக்குரியவர்களைக் குறிப்பிடும்போது, வள்ளுவர் இந்தியாவைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் ஒரே தண்டனையை உறுதி செய்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் – – – (குறள் 972)
என்னும் குறள், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதை உணர்த்துகின்றது. வடமொழியிலுள்ள மனுசாத்திரத்தைப் போல “ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்னும் அறிவுக்குப் பொருந்தாத சட்டத்தை வள்ளுவர் வகுக்கவில்லை. இன்றைய சட்டவியலார் போற்றும் இயற்கை நீதி(Natural Justice) என்னும் உயர்ந்த நீதியை வள்ளுவர் வகுத்துள்ளார் என்று பெறப்படுகின்றது.
சட்டங்களின் வகைகள்
இன்றைய சட்டவியலார் சட்டங்களை இருபெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவை முறையே,
- நிலைமுறைச் சட்டங்கள் (Substantive Laws)
- நெறிமுறைச் சட்டங்கள் (Procedural Laws) எனப்படுவன.
நிலைமுறைச் சட்டங்கள் குற்றங்களை வரையறுத்து அவற்றிற்கான தண்டனைகளை எடுத்துக் கூறுவன. இதற்கு இ.த.தொ.சட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நெறிமுறைச் சட்டங்கள் எனப்படுபவை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கிட நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் நடைமுறை நெறிகளைத் தொகுத்துரைப்பவை. இதற்குக் குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தையும் எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
திருக்குறள் நிலைமுறைச் சட்டமாக நின்று குற்றங்களை வரையறுக்கின்றது; நெறிமுறைச் சட்டமாகவும் அமைந்து அக்குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நீதிமன்ற நெறிமுறைகளையும் வழங்குகின்றது. எனவே இ.த.தொ. சட்டம் நிலைமுறைச் சட்டமாக மட்டுமே இருக்கத் திருக்குறள் நிலைமுறைச் சட்டமாகவும் அமைந்து அக்குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நீதிமன்ற நெறிமுறைகளையும் வழங்குகின்றது.
குற்றங்களின் வகைகள்
தண்டனைக்குரிய குற்றங்களின் தன்மைக்கேற்ப குற்றங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- உரிமையியல் சார் குற்றங்கள்(Civil offense)
- குற்றவியல் சார் குற்றங்கள்(Criminal offense) என்பன.
தனிமனிதனின் உரிமைக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் உரிமையியல் சார் குற்றங்கள் எனப்படுவன; ஒருவரின் உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் “குற்றவியல் சார் குற்றங்கள்” என அழைக்கப்படுகின்றன. இ.த.தொ. சட்டத்தில் குற்றவியல் சார் குற்றங்கள் (Criminal offense) மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. திருக்குறளில் குற்றவியல் சார் குற்றங்களுடன் உரிமையியல் சார் குற்றங்களும் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்விரு குற்றங்களின் பகுப்புமுறை பண்டைய நாளில் உலக வழக்கில் இல்லை என்றும், சட்டங்களின் முன்னோடிகளாக உரோமானியர்களின் சட்டநெறிகளிலும் இவ்விருவகைக் குற்றங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருப்பதும் ஈண்டு கருத்தில் கொள்ளத்தக்கவை ஆகும்.
முனைவர் மு.முத்துவேலு
மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.