பாரதம் பழம் பெருமை மிக்க நாடு. ரிஷி முனிவர்களையும், மகான்களையும், அறிஞர்களையும், அருளாளர்களையும் ஈன்ற நாடு. வேதங்கள், உப நிடதங்கள், புராணங்கள், இதிகாச இலக்கியங்கள், சாஸ்திரங்கள், காவியங்கள் என்று வாரி வழங்கிய நாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என்ற பல்வேறு மதங்கள் தோன்றி மக்கள் மனதிலே நன்னெறிகளை உபதேசித்தன. எனவேதான் பாரதி சொல்வான்.

‘எங்கள் நாட்டிற்கெந்த நாடு ஈடு

பேரின்ப ஞானவீடு’

என்று புகழ்ந்துரைத்தான்.

இப்பிரபஞ்சத்தில் அறம் குன்றி மறம் வளர்ந்த மக்கள் அல்லல்படும் காலங்களிலெல்லாம் பலப் பல சமயக்குரவர்களும், மகான்களும் தோன்றி மக்கள் மனங்களில் அறவழியைப்புகட்டி நல்வழிப் படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதைப் பல்வேறு இலக்கியங்களின் மூலம் அறிகிறோம்.

நமது நாட்டின் பெருமையைப் பறைசாற்றி உலகளாவிய புகழ் கொண்டு திகழும் இரண்டு நூல்கள் திருக்குறளும், தம்மபதமும். இரண்டுமே இந்திய நாட்டின் இரண்டு கண்கள் என்றே கூறலாம். இரண்டு நூல்களுமே அறவாழ்வையே விளக்குகின்றன.

‘மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற’

என்று அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில்

34-ஆம் குறள் மூலமாக - மனத்தில் குற்றமற்று தூய் மையான நோக்கத்தில் செய்கின்ற காரியந்தான் அறம் என்றும், சுயநலநோக்குடன் எந்தத் தர்மம் செய்தாலும் அது வெறும் ஆடம்பரம் தான்; அறமாகாது என்கிறார். இதே கருத்தை சற்றே வித்தியாசமான சொற்களால் கௌதமபுத்தர் தம்ம பதத்தில் யமகவர்க்கம் 10-ஆம் பாடல் மூலமாக விளக்குகிறார்.

யோ ச வந்தகஸாவஸ்ஸ

ஸுலேஸு ஸுஸமாஹிதோ

உபேதோ தமஸச்சேன

ஸவே காஸாவ மரஹதி

என்று பாலிமொழியில் உள்ளது. மன மாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்ன டக்கமும், மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பா ரானால் அவரே அறம் செய்யத்தக்கவர். அவரே (சீவர) மஞ்சள் ஆடையுடுக்கத் தகுதியுடையவர் என்பதை எடுத்தியம்புகிறது.

2. குறளும் வள்ளுவரும்

திருக்குறள் சாதி, மத, இன, நிற வேறு பாடின்றி உலகெல்லாம் ஓதியுணரும் பொது மறையாம் ஒப்புயர்வற்ற இலக்கிய முத்து. கல்விக் களஞ்சியம், நீதிச்சுரங்கம், வெள்ளிப்பேழையிலிட்ட தங்கக்கனி! வள்ளுவனோ புலவர்க்கெல்லாம் புலவன். உலகாசான், பொய்யா மொழிப்புலவன், தேவன், ஈரடியால் மாந்தர் உள்ளத்தை அளந்தவன் - உலகிற்கெல்லாம் பொது மறை வகுத்தவன் என்று மேனாட்டாரும் வியந்து போற்றப்படும் பெருந் தகையாளன்.

குறள் தமிழரின் நாரீகக் கண்ணாடி. தமிழரின் அகம், புறம் என்ற வாழ்க்கையின் விளக்கம், தமிழின் முதுமைக்கும் இளமைக்கும் சான்று. சொல்லின் உறுதி.

நக்கீரர், கபிலர், பரணர், கல்லாடர், சாத்தனார், ஆசிரியர் நலந்துவனார், கீரந்தையார், மாங்குடி மருதனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், இடைக் காட்டுச்சித்தர், ஒளவை பிராட்டியார் முதலிய அரிய பெரிய புலவர்களெல்லாம் திருக்குறளை பாமலரால் போற்றி மகிழ்ந்தனர் என்று புகழ் பாடினார் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

வள்ளுவர் எல்லாக் கலைகளையும் கற்று உணர்ந்தவர். பாண்டியன் - பெருவழுதியிடம் உள் நாட்டு மந்திரியாய் செயல்பட்டவர். அரசன் வேண்டு கோளுக்கிணங்கியே திருக்குறளாகிய பொது மறையை இயற்றி சங்கத்தில் அரங்கேற்றினார் என்ற தகவல் திருக்குறள் இன்பத்தில் தரப்பட்டு உள்ளது.

பொருட்பாலை ஆராய்ந்து பார்த்தால் வள்ளுவரின் அரசியல் நுட்பம் புலப்படும். எனவே குறள்தான் வள்ளுவர் வாழ்வும் உள்ளமும் என்று கொள்க என்பது அறிஞர் கருத்து.

வள்ளுவர்ஆதி, பகவன் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர். கபிலர், ஒளவை போன்றோருடன் உடன் பிறந்தவர். வாசுகி அம்மையாருடன் மண வாழ்க்கை நடத்தியவர், சென்னை மயிலாப்பூரில் ஒலேலஞ்சிங்கர் என்பவரிடம் நெசவுத்தொழில் செய்தார் என்றெல்லாம் செவிவழியாகக் கூறப் படும் செய்திகள். இருப்பினும் வள்ளுவர் நெசவுத் தொழிலுக்குரியவர் என்பதை - ‘இழை நக்கி நூல் நெருடும்’ என்ற தனிப்பாடல் திரட்டிலுள்ள வரியே சான்று.

வாசுகியின் மரணத்திற்குப்பிறகு வள்ளுவர் துறவு பூண்டு குறட்பாக்களை உபதேசித்து வந்தார். தன்னுடைய இறுதி நாளில் “உயிர் பிரிந்தாலும் இவ்வுடலை காக்கை கழுகுண்ணும்படி புதரிற் போட்டு விடுக” என்று விருப்பம் தெரிவிக்க அதன் படியே அவர் இறந்தபின் “யாக்கை காக்கைக்கே இரையாயிற்று” என்பர். வள்ளுவரின் பெருந் தன்மையும், இரக்ககுணமும், கொடைப்பண்பும் சிறப்புடன் எடுத்தியம்பியுள்ளார் சுத்தானந்த பாரதி.

3. வள்ளுவர் பைபிள், சமணம், பௌத்தம், வேதாந்தம், சித்தாந்தம், தத்துவங்கள், கௌடில் யரின் அர்த்தசாஸ்திரம், மனுதர்மம் போன்ற வற்றையெல்லாம் நன்கு அறிந்தவர். ஆகையினால் தான் தன் மாணாக்கரின் வேண்டுகோளுக்கு இணங்கி வையகத்தில் வாழ்வாங்கு வாழும் நெறிகளை திருக்குறள் என்ற வெண்பாக்களால் இயற்றி யருளினார் என்பது அறிஞர் கருத்து.

கௌதமபுத்தரும் தம்மபதமும்

சாக்கிய குலத்தைச்சேர்ந்த சுத்தோதனர் என்ற அரசர் இமயமலையின் அடிவாரத்தில் அமைந் திருந்த கபிலவஸ்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். இன்றைய நேபாளத்தில் இருந்தது கபில வஸ்து. சுத்தோதன அரசருக்கும் மாயாதேவி என்ற அரசிக்கும் மகனாக அவதரித்தவர் சித்தார்த்தர்.

சித்தார்த்தர் பெரியவனானதும் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக்கேட்ட அரசன் மனம் வருந்தி அக்குழந்தையை உலக வாழ்க்கையில் வெறுப்புறாவண்ணம் செல்வச் செழிப்பிலும், சுகபோகங்களிலும் திளைப்புறச் செய்து பதினாறு வயது வந்ததும் விருப்பமுள்ள ஒரு அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்தருக்கு இராகுலன் என்ற ஆண்குழந்தை பிறந்த அன்றே துறவு கொள்ளக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

மிகவும் வயதுமுதிர்ந்து தள்ளாடிய நிலையில் ஒரு கிழவரையும், நோயின் துன்பத்தைத் தாங்க முடியாது வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக்கிடந்த ஒரு மனித உடலையும் பார்க்க நேரிட்டது. அதன் பிறகு துறவி ஒருவரையும் காணநேரிட்டது. இக்காட்சிகளெல்லாம்- மனித வாழ்க்கை துன்பத்தினால் சூழப்பட்டது என்பதை உணர்த்தியதால் சித்தார்த்தர், துன்பத்திலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டுபிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்று நினைத்து மனைவியையும், மகனையும், பெற்றோரையும் அனைத்து சுகபோகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து அரசமரத் தடியில் மெய்ஞ்ஞான ஒளியை காணப்பெற்று புத்தர் ஆனார். தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் போதியாகிய ஞானத்தை கைவரப்பெற்று பிறவித்துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்பநெறியைக் கண்டார்.

புத்தரின் உபதேசங்களைக் கேட்டு பலர் சீடரானார்கள். தாம் கண்டறிந்த உண்மைகளை பல இடங்களுக்குச் சென்று போதித்ததோடு தம் சீடர்களையும் பல இடங்களுக்கு அனுப்பிவைத்து பரவச்செய்தார். நாற்பத்தைந்து ஆண்டுகள் சுற்றி யலைந்து தனது எண்பதாவது வயதில் (கி.மு. 483ல்) ‘குசி’ என்ற நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார்.

புத்தர் பெருமானின் உடலுக்கு எரியூட்டப் பட்டு மிஞ்சிய சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதி யாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப் பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.

புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந் தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரி புத்திரர், மொக்கல்லனார், காத்யாயனர், மகா காசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர் முதலான வர்கள். மகதநாட்டரசன் பிம்பிசாரரும், கோசல நாட்டரசர் பிரசேனஜித் என்பவரும் இவருடைய சீடராக இருந்து பௌத்தமதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் ஜைனம், ஆசீவகம், வைதீகம் என்ற மூன்று மதங்களும் பௌத்த மதத்தோடு போரிட்டுக்கொண்டிருந்தன. புத்தரின் கொள்கைகள் அவர் வாழ்ந்த காலத்தில் தொகுக்கப் படவில்லை. புத்தர் நிர்வாண மோட்சம் அடைந்த பிறகு முக்கியசீடரான மகாகாசிபர் ஐந்நூறு தேரர்களை (வயதுமுதிர்ந்த பிக்குகள்) ஒருங்கு கூட்டி முதல் மாநாடு நடத்தினார். புத்தர் பெரு மானின் விநய போதனைகளை மற்றொரு சீடரான உபாலி ஓதினார். புத்தர் அருளிய தம்ம போதனை களை முக்கிய சீடரான ஆநந்தர் ஓதினார். இந்த இரண்டும் விநயபிடகம் தம்மபிடகம் என்று தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் மூன்றாகத் தொகுக்கப்பட்டு திரிபிடகம் என்றும் பெயர் பெற்றது. பௌத்த வேதம் பாலிமொழியில் இயற்றப்பட்டன.

திருக்குறளையும் தம்மபதத்தையும்

ஒப்பிட்டு நோக்குதல்

திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற 36ஆவது அதிகாரத்தில் 355ஆவது பாடலில்

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’

என்று கூறுகிறார். பொருள்களின் உண்மையான இயல்பை அறிவதே நற்காட்சி.

அதுவே அறிவு பெற்றிருப்பதன் பயன். நற் காட்சி என்பது உண்மையான பார்வை. சந்தேக மயக்கங்களுடன் பார்த்தல் பொய்க்காட்சி அல்லது தீக்காட்சியாகும். ஒருவன் ஒன்றின்மேல் நம்பிக்கை கொள்கிறானென்றால், அவன் முதலில் அதை நன்கு அறிந்திருக்கவேண்டும். அந்த அறிவை அடித்தலமாகக்கொண்டே அவனுடைய பேச்சும் செயலும் இருக்கவேண்டும் என்று குறள் கூறு கிறது.

தம்மபதம் கூறும் அஷ்டாங்க மார்க்கம் நற் காட்சியை எவ்வாறு விளக்குகிறதென்றால்- மனி தனுடைய தனிப்பெருமை பகுத்தறிவு. மனிதனைத் தவிர எந்தப்பிராணியும் தனது அனுபவத்தை சிந்தித்துப்பார்ப்பதில்லை. ஒப்பற்ற பகுத்தறிவை உபயோகித்துக்கொண்டு பார்ப்பதே மனிதனுடைய காட்சி அல்லது பார்வை. இந்தப் பார்வையில் கோளாறுயிருந்தால் பார்க்கப்படும் பொருளின் தன்மையும் மாறுபாடாகவே தோன்றும்.

தவறான காட்சியே எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது என்று கூறுகிறது.

திருக்குறளில் 87ஆவது அதிகாரம் பகைமாட்சி.

‘அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு’

என்ற குறள் மூலமாக அன்பில்லாதவன் துணை யில்லாதவனாகவும் தானே வெல்லக்கூடிய திறமை யற்றவனாகவும் மாறிவிடுவதால் பலமுள்ள பகைவர் களை எப்படி எதிர்த்து நின்று வெல்லமுடியும்?

எப்போதும் கோபமுள்ளவனாகவும் சொல்லிலும் செயலிலும் பதற்றமுள்ளவனாகவும் இருப்பவன் எப்போதும் எந்த இடத்திலும் யாருக்கும் தோற்றுப்போகக்கூடிய பலவீனமுள்ளவன் என்றும் கூறி பகைமையை அன்பினால்தான் தணிக்க முடியும் என்று விளக்குகிறது.

இதே பகைமையைப்பற்றி (தம்மபதம் - யமக வர்க்கம் - 5ஆவது)

‘ந ஹி வேரேன வேரானீ

ஸம்மந்தீத குதாசனங்

கவேரேன ச ஸம்மந்தி

ரஸ தம்மோ ஸனந்தனோ’

என்ற புத்தரின் அருளுரை - அவன் என்னை

அடித்தான். இகழ்ந்து பேசினான், என் பொருளைக் கவர்ந்துகொண்டான் என்பது போன்ற எண்ணங்கள் எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தால் அவ னுடைய பகைமை ஒருபோதும் தணியாது. ஏனெனில் பகைமையைப் பகைமையினால் தணிக்கமுடியாது. பகைமையை அன்பினாலேயே தணிக்க முடியும். இதுவே தொன்றுதொட்டு வருகின்ற தர்மம் என்று சொல்கிறது.

கொல்லாமையைப் பற்றிச் சொல்ல வருங்கால் வள்ளுவர்

‘அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்’

என்ற குறளின் மூலமாக புண்ணியச்செயல் எது வென்றால், உயிர்க்கொலை செய்யாதிருப்பது கொலை செய்வது மற்ற எல்லாப் பாவங்களையும் உண்டாக்கும். எனவே எதற்காகவானாலும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்று நன்னெறி புகட்டுகிறார்.

இதேபோல புத்தர் பெருமானும் பலமுறை கூறிவந்துள்ளார். உயிரைப் பலிகொடுத்துச் செய்யும் யாகங்களை அவர் தடுத்து வந்தார். ஆயினும் எந்தக் காரணத்தாலோ பிற்காலத்தில் பௌத்தர்கள் நிறைந்துள்ள நாடுகளில், கொலை மறுத்தல் நிலைத்திருந்த போதிலும் உயிர்க்கொலையால் கிடைக்கும் ஊனை உண்பது மட்டும் இதுவரை நிற்கவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு வெளியே திரியும் உயிர்ப் பிராணிகளை வயிற்றுள் அடக்குதல் எந்த முறையில் நியாயமாகுமோ தெரியவில்லை. இத்தகைய நிலைமையை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகை புலால் மறுத்தலையும் வற்புறுத்தி யுள்ளார்-

தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்’

என்ற குறளின் மூலமாக எடுத்துக் காட்டியுள்ளார். பலகோடி மக்கள் புலால் உண்பதாலேயே பிராணி களை வதைத்தலும், ஊனினை விற்றலும் நடை பெறுகின்றன.

பௌத்தர்கள் புலால் உண்பதை காந்தியடி களும் கடிந்துள்ளார்.

அடக்கமுடைமையைப் பற்றி அதிகாரம் 13இல் 126ஆவது பாடல்

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து’

என்ற குறள் மூலமாக வள்ளுவர்- ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள், தலை ஆகிய ஐந்தையும் தன் ஓட்டுக்குள் அடக்கிக்கொள்வதைப் போல மனிதன் தன் ஐந்து ஆசைகளையும் ஒரு பிறவியில் அடக்கியாள முடியுமானால் அது பின் வரும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாய் நிற்கும் என்கிறார்.

இதையே தம்மபதம் - பிக்கு வர்க்கம் - 1ஆவது பாடல்,

சக்குநா ஸங் ரோ ஸாது

ஸாது ஸோதேன ஸங்வரோ

காணேந ஸங்வரோ ஸாது

ஸாது ஜிவ்ஹாய ஸஸ்வரோ-

கண்ணை அடக்குவது நல்லது. காதை அடக்குவது நல்லது. மூக்கை அடக்குவது நல்லது. நாவை அடக்குவது நல்லது என்றும் உடம்பை அடக்குவது நல்லது. வாக்கை அடக்குவது நல்லது, எல்லாவற்றிலும் அடக்கமாக இருக்கிற பிக்கு வானவர், எல்லாத் துன்பங்களிலிருந்தும் நீங்கு கிறார் என்பதை உணர்த்துகிறது.

உவமையைக் கையாள்வதில் திருவள்ளுவர் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை- (அதிகாரம் 21- தீவினையச்சம்)

‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உறைந்தற்று’

என்ற குறளின் மூலமாக விளக்குகிறார். தீமை செய் பவன் தீமையே அடைவான். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் எங்கே சென்றாலும் விட்டு விலகாமல் அவனுடைய பாதங்களோடு சேர்ந்தே வருவது போல பின் தொடர்கின்றன. இதே கருத்தை

(புத்தர் தம்மபதத்தில் யமகவர்க்கம்-2இல் வலியுறுத்துவதைக் காணலாம்.

மனோ புப்பங்கமா தம்மா

மனோஸெட்டா மனோமயா

மனஸா சே பஸந்நேன

பாஸதி வா கரோதி வா

ததோ நங் ஸுகமந்வேதி

சாயா வ அநபாயினீ

என்ற பாலிமொழியின் பொருள் எண்ணங்கள் மனத்திலிருந்தே தோன்றுகின்றன. எண்ணங்களே முக்கியமானவை. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயல்பட்டாலும், அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல்போன்று அவனைப் பின் தொடரும் என்கிறது.

திருவள்ளுவர் கருத்தும் புத்தரின் கருத்தும் இணைகின்ற இடங்களும் பல உண்டு.

உலகத்தாரால் தீயவை என்று விலக்கப்பட்ட பழியான காரியங்களைச் செய்யாதிருந்தாலே போது மானது. அதன்பிறகு தலையை மொட்டையடித்துக் கொள்வதும், தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளரவிடுவது போன்ற சின்னங்கள் வேண்டிய தில்லை. என்ற கருத்தை வள்ளுவர்.

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்’

என்ற குறள் மூலமாக விளக்குகிறார். இதே கருத்தை (தம்மபதம்- பிராமண வர்க்கம் 11இல்)

ந ஜடாஹி ந கொத்தேன

ந ஜச்சா ஹோதி ப்ராஹ்மணோ

யம்ஹி ஹச்சஞ்ச தம்மோச

ஸோஸு சீ ஸோ ச ப்ராஸ்மணோ

பொருள்:- மயிரைச் சடையாக வளர்த்திருப்ப தினாலோ, பிறப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர் பிராமணர் ஆக மாட்டார். யாரிடத்தில் உண்மையும், தர்மமும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர். அவரே பிராமணர் என்று கூறுகிறது. இக்கருத்து.

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

 செந்தண்மை பூண்டுஒழுக லான்

என்ற குறளுக்கும் ஒக்கும்.

எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளவர்கள் ஆரியர் எனப்படுவர் என்று (பிராமணவர்க்கம் 16இல்) தம்மபதம் கூறுகிறது. ஆரியர் என்பது அந்தணர் என்ற பொருளை உணர்த்துகிறது தம்மபதம்.

நல்வாய்மை என்று சொல்ல வருங்கால் ‘சத்தியவசனமே நல்வாய்மை! பொய்யுரையி லிருந்தும், புறங் கூறுவதிலிருந்தும் நிந்தைப் பேச்சி லிருந்தும், பயனற்ற சோம்பேறி சொற்களி லிருந்தும் ஒதுங்கியிருத்தலே பிக்குகளே! நல் வாய்மை என்பது’. என்பது புத்தர் திருவாக்கு.

எவர்க்கும் எத்தகைய தீமையும் இல்லாத சொற்களே வாய்மை என்று வள்ளுவரும் விளக்கி யுள்ளார்.

புத்தர் பெருமான் ஒருசமயம் பிச்சைக்குச் சென்றிருக்கையில் இல்வாழ்வோன் ஒருவன் அவரைப் பார்த்து பிட்சையளிக்காமல் நிந்தனையையே தானமாக அளித்தானாம். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து - “அப்பா! உனது நிந்தனையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, அது உன்னிடத் திலேயே இக்கட்டும் என்றார். கிருஹஸ்தன் திகைத்தான். ‘நீ பிச்சையளித்து அதை நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டால் அது யாரைச் சார்ந்தது? உன் நிந்தனையை நான் அங்கீகரிக்க வில்லை. அது உன்னிடமே இருக்கட்டும்!’ என்று விளக்கிக் கூறினாராம். நிந்தைக்கு நிந்தை, ஏச்சுக்கு ஏச்சு என்ற முறையை மேற்கெள்ள நல்வாய் மையைக் கடைப்பிடிப்பவனுக்கு உரிமையில்லை.

திருவள்ளுவர் சொல்லின் சிறப்பைப் பற்றியும், முறையைப் பற்றியும், ‘இனியவைகூறல்’, ‘சொல் வன்மை’, ‘பயனில சொல்லாமை’, ‘புறங்கூறாமை’, ‘வாய்மை’ போன்ற ஐந்து அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.

மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச் சொற்களில் வஞ்சனையின் வாசனை இராது. அவை அன்பிலே தோய்ந்துவரும் இனிய சொற் களாகும். பணிவும் இச்சொல்லுமே ஒருவனுக்கு அழகு தரும் அணிகளாகும். எதைக் காக்கா விடினும் நாவைக் காத்து வரவேண்டும். பயனற்ற பேச்சைப் பேசுகிறவன் மனிதனல்ல - மக்களிலே பதர் என்று வள்ளுவர் வாய்மையைப்பற்றி - ‘பொய்யா விளக்கே விளக்கு’ என்றும், ‘பொய்யாமை அன்ன புகழில்லை’ என்றும் போற்றிப்பாடியுள்ளார். நல்லவற்றை நாடி இனிய சொற்களைப் பேசி வந்தால் பாவங்கள் தேய்ந்து அறம் பெருகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

புத்தர் தருமவாதி - சத்யவாதி. எனவே அவர் எவரையும் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவில்லை. தாம் தம் வாழ்க்கையில் அறிந்து அனுபவித்ததை மக்களுக்கு எடுத்துரைத்து அவர் களும் அந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே ஊர் ஊராகச் சென்று எடுத்துரைத்தார். பிரார்த்தனை செய்து பயன் களைப் பெறலாம் என்ற நம்பிக்கையை வளர்க் காமல் தியானத்தின் மூலமாக தம்மை பண் படுத்திக் கொள்ளமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். எல்லையற்ற பரம்பொருள் என்று புகழாமல் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் துக்க நிவாரணம் என்பது நிர்வாணநிலை என்று கூறி ஓரளவு விளக்கியும் காட்டினார்.

துக்கமே நிறைந்துள்ள இப்பிரபஞ்ச வாழ்வுக்கு மேம்பட்ட ஒரு நிலை, நிலையற்ற வாழ்வுக்கு மேலான நிலையான ஒரு நிலை உள்ளதா இல்லையா? என்பதை புத்தருடைய உரைகளை ஆராய்ந்தால் புலப்படும்.

உலக வரலாற்றிலேயே அனைத்துலக மனி தனையும் பாடிய முதற்பெரும்புலவர் வள்ளுவ ஆசான். அவருடைய கருத்துக்கள் காலத்தாலோ சமய நெறிகளின் தாக்கத்தாலோ அழித்தொழிக்க இயலாதவை. மக்களை இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறியையும், பல்வேறு இயல்புகளையும், நிலைகளையும், செயல் களையும் எடுத்தியம்பிய பேரறிவாளன்.

திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து பழந் தமிழ் சிறப்பை, செம்மையை 1330 குறள்களின் மூலமாக 133 அதிகாரங்களையும் வகுத்து - அறம், பொருள், இன்பம் என்ற முப்பிரிவுகளில் - வெண் பாக்களால் பாடி மக்களுக்குப் பயன்படும்வகையில் நிலைபெறச் செய்த ஒப்பில்லா பெருந்தகை யாளன். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருக்குறள் பலமொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு பல்வேறு நாட்டினருக்கும் உலகப் பொது மறையாகத் திகழ்கின்ற தன்னேரில்லா சிறப்பைப் பெற்ற தமிழ்வேதம். சொற்சுவையும், பொருட் சுவையும் ததும்பிவழியும் இனிய ஊற்று. தங்கச் சுரங்கம்.

‘திரு’ என்பது பல பொருள்படும். இங்கு எல்லோராலும் விரும்பப்படுவது என்றே கொள் வோம். குறள்- என்பதற்கு வெண்பாவால் இயற்றப் பட்டது. திரு + குறள் = திருக்குறள் என்ற பெயர் சாலப் பொருந்தும் ‘தம்மபதா’ என்பது பாலி மொழிச் சொல்லுக்கு - தம்ம என்றால் அறம், சட்டம், புத்தசமயம் என்று பலபொருள்கள் உண்டு.

‘பதா’ என்பதற்குக் காரணம், நிர்வாணம், பகுதி, பதம், பொருள், வழி எனப் பலபொருள் கூறலாம். தம்ம + பதா = அறவழி - புத்தர் கூறிய அறவழி என்றே ஈண்டு கொள்வோம்.

தம்மபதமும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளில் பல்வேறு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதென்பது நடைமுறை உண்மை. தம்மபதத்தில் 423 பாடல்கள் - 26 அதிகாரங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு ‘திரிபிடகம்’ என்று வழங்கப்படுகிறது. புத்தர் காலம் கி.மு 573- 493. திருவள்ளுவருக்கும் முற்பட்டவர்.

20-ஆம் நூற்றாண்டில் கவிராஜ பண்டிதர் ஜெக வீரபாண்டியனார் ‘திருக்குறள் குமரேசவெண்பா’ என்ற நூலை இயற்றி ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான கதைகளையும் எழுதியிருக்கிறார். கி.பி. 500இல் ‘தம்மபதாகதா’ என்ற நூலை புத்த கோசர் எழுதியிருப்பதாக லின்-யூ- டாங்க் தெரி வித்துள்ளார். 1950இல் பிக்கு சோமானந்தா என்பவர் இந்நூலை பாலிமொழியிலிருந்து தமிழில் தந்தார்.

1954இல் ப. ராமசாமி என்பவரும் இந்நூலை வெளி யிட்டுள்ளார். தமிழில் சாத்தனாரால் இயற்றப் பட்ட மணிமேகலை ஒரு பௌத்தநூல். வட நாட்டில் தோன்றி இலங்கை, சீனா, திபெத், இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளிலும் வேகமாகப் பரவிய பௌத்தம் தமிழ்நாட்டிலும் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டதற்குச் சான்று மணிமேகலை என்ற இலக்கியமும், பௌத்த மதத்தைப் பரப்புவதில் தலித் மக்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்று போற்றப்படுபவருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவார்.

இந்திய நாட்டின் வடகோடியில் புத்தரும், தென்கோடியில் திருவள்ளுவரும் அவதரித்து தாய்த் திருநாட்டின் நாகரீகத்தையும், பண்பாட்டையும், சிறப்பையும், உலக நாடுகளுக்கெல்லாம் உணர்த்திய மாபெரும் சிற்பிகள். மக்கள் வாழ்வாங்கு வாழ் வதற்குரிய வழிகளை, தர்மநெறிகளை, உண்மையை எடுத்தியம்பிய மகான்கள். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் நம் மனங்களில் இந்த இரு பெரு மகனாரும், இவர்களுடைய நன்னெறிகளும் நிழலாய் நடைபயில்வதே வள்ளுவமும், தம்ம பதமும் பெற்ற வெற்றி என்பதை மனம், மெய், மொழியால் சொல்ல விழைகிறேன்.