ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது.
தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை வழங்கினார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நத்தம் விசுவநாதன், இராசேந்திர பாலாசி, முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளுவரும் சீன அறிஞர் கன்ஃபூசியசும் :
ஏற்புரை வழங்கிய தைவான் நாட்டுக் கவிஞர் யூசி, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் சீன அறிஞர் கன்ஃபூசியஸýம் ஒத்த கருத்துகளைக் கொண்டிருந்ததாகப் பெருமிதத்துடன் பேசினார். திருக்குறளை முழுமையாகப் படித்து அதை மொழிபெயர்க்கும் போது, தான் இதை அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
திருக்குறளில் இல்லாதது இல்லை:
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வாழ்க்கை நெறிகள் பல பொதுவாக உள்ளன. அந்த நெறிகளில் மன்னனையும், குடிமகனையும் ஒரே நிலையில் வைத்துள்ளனர். யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. திருக்குறளில் அனைத்துக் கருத்துகளும் உள்ளன. இல்லாதது எதுவும் இல்லை. குமுகாயத்தில் ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தையாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளைத் திருவள்ளுவர் தனது குறள்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மன்னர், அமைச்சர், தூதர், ஒற்றர் போன்றவர்களின் தகுதி பற்றியும் திருவள்ளுவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்புக்குரியது.
பசியைப் போக்கும் முதல்வர்:
திருவள்ளுவர் எழுதிய குறள்களில் எனக்குப் பிடித்தவை, “அற்றார் அழி பசி தீர்த்தல்…’ “வறியார்க்குஒன்று ஈவதே…’ எனத் தொடங்கும் இரண்டும் ஆகும். இந்த இரண்டு குறள்களுக்கு ஏற்ப எளியோரின் பசியைப் போக்கும் வகையில் தமிழகத்தில் நல்ல திட்டங்களை முதல்வர் செயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
மிகவும் பெருமையான விருது:
உலகளவில் எனக்குப் பல விருதுகள் கிடைத்தாலும், தமிழக அரசு அளித்த திருவள்ளுவர் விருதினைப் பெருமையாகக் கருதுகிறேன். திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, ஆட்சியையோ, இனத்தையோ, சமயத்தையோ பற்றிக் குறிப்பிடவில்லை. அதனாலேயே அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஏற்புரையில் யூசி தெரிவித்தார்.
தைவான் கவிஞர் அறிந்ததைத் தமிழக மக்கள் உணரும் நாள் எந்நாளோ?
யூசியின் தமிழ்த்தொண்டு:
திருக்குறள் மொழிபெயர்ப்புக்காக தைவான் நாட்டு கவிஞர் யூசிக்கு, தமிழக அரசு ஏற்கெனவே உரூ.5.40இலட்சம் அளித்தது. அந்தத் தொகையை “திருக்குறளும் உலக அமைதியும்’ என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவ வழங்கினார் யூசி.
தைவான் நாட்டில் கடந்த 1951 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பிறந்தார் யூசி. அவர். 60-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளைச் சீனமொழியில் மொழிபெயர்த்துள்ளார். தைவான் மாணவர்களுக்குச் சீன வரி வடிவில் திருக்குறளை முற்றோதல் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். தைவான் நாட்டில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் புரவலராகவும் தலைவராகவும் உள்ளார். இவருடைய படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானிசு, செக்கோசுலோவாகியா, மங்கோலியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.