தொல்காப்பியமும் மொழியியலும்
— முனைவர். வீ. ரேணுகாதேவி
இலக்கணம் என்பது மொழியை மொழியால் விளகுகின்ற ஒரு கலை. நடனம், நாடகம், பொறியியல், விலங்கியல் போன்ற படைப்புக்களை மொழியால் விளக்குகின்றோம். இங்கு மொழிவேறு, அந்த படைப்புக்கள் வேறு. மொழியால் மொழிக்குப் புறத்து இருப்பவற்றை விளக்கலாம். மொழியை விளக்க வேண்டுமானால் என்ன செய்வது, மொழியை மொழியால் தான் விளக்க வேண்டும். அதுவே இலக்கணம் எனப்படும். இந்தப் பணியை ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் மிகச் செம்மையாகச் செய்திருக்கிறார்.
மொழியை அறிவியல் நோக்கோடு ஆராய முற்படுவது ஆகும். மொழியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதையே தன் நோக்கமாகக் கொண்டுள்ள மொழியியலாளன் தன் ஆய்வின், எல்லையை இலக்கண இலக்கியங்களோடு சுருக்கிக் கொள்வதில்லை. எங்கெங்கு மொழி பயன்படுகின்றதோ அங்கெல்லாம் இவன் ஆய்வு நோக்கம் மொழியைப் பின்பற்றி ஊடுருவிப் பாய்கிறது என்கிறார் பொற்கோ (1973:128).
நாம் பெற்ற அறிவையெல்லாம் வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி மொழி. அந்த மொழியைப் பற்றிய எல்லா உண்மைகளையும் கண்டறிந்து வாங்கிப் பல்வேறு பயன்களைத் தருவதாக அமைவது மொழியியல்.
மொழியியலாளர்கள் எல்லோரும் இலக்கண இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த இடமளித்து, அதற்கு மேலும் குழந்தை மொழி, பேச்சு மொழி, கிளை மொழி ஆகியவற்றிற்கும் இடமளிக்கின்றார்கள்.
மொழியியலாளன் ஆய்வு இலக்கண இலக்கியங்களோடு நின்று விடுவதில்லை. மொழி எங்கெல்லாம் பயன் படுகின்றதோ அங்கெல்லாம் மொழியியலாளளின் ஆய்வு நோக்கம் மொழியைப் பின்பற்றி அமையும்.
ஒளியும், சொல்லும், தொடரும் இவற்றால் உண்டாகும் பொருண்மையும் உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவானவை. மொழியியலில் இவைதான் இன்றியமையாத இடம் பெறுகின்றன. இவற்றின் துனைகொண்டுதான் மொழியியல் பல்வேறு படிப்பியல்களோடு (Disciplines) தொடர்பு கொண்டு செழித்து வளருகின்றது.
ஒலி, ஒலியமைப்பு, சொல், சொல்லமைப்பு, தொடர், தொடரமைப்பு, பொருண்மை ஆகிய இவையெல்லாம் ஒவ்வொரு மொழியிலும் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறிக் கொண்டிருக்கின்றன. இடத்திற்கு இடம் ஒரு மொழியிலேயே ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் மொழியியல் விளக்கம் அளிக்கின்றது.
திராவிட மொழிகளில் காணப்படும் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூல் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றியது என அறிஞர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர் அம்மொழியின் இலக்கணத்தை எழுத்து, சொல், என்னும் இரண்டு அதிகாரங்களில் விளக்கிச் சொல்லிப் பின்னர் பொருள் அதிகாரம் என்னும் ஒன்றைப் பற்றி விளக்கிக் கூறுகிறார்.
மொழியியல் மொழியின் அமைப்பை அக அமைப்பு புற அமைப்பு என்னும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஒலியியலும், பொருண்மையியலும் புற அமைப்பிலும், ஒலியன்யியல், இலக்கணம் (உருபனியல், தொடரியல்), உருபொலியனியல் அக அமைப்பிலும் அமையும். ஒலியியலையும் பொருண்மையையும் விளங்கிக்கொள்ள புற உலகின் அறிவும் தேவைப்படும். எனவே அவை புற அமைப்பில் அமைந்துள்ளன. ஒலியனியல், இலக்கணம், உருபொலியனியியல் இவை பற்றி அறிந்து கொள்ள மொழிபற்றிய அறிவு மட்டுமே போதுமானது. எனவே அவை அக அமைப்பில் அமைந்துள்ளன.
ஒரு மொழியின் அமைப்பினை அறிய ஒலியியல் அறிவு மிகத் தேவை. இதை பண்டை இலக்கண ஆசிரியர்களும் நன்கு உணர்ந்திருந்தனர். எழுத்துக்களைப் பற்றிக் கூறப் புகுந்த தொல்க்காப்பியர் பிறப்பியல் என்ற இயல் ஒன்றை வைத்து அவ்வியலில் பல்வேறு எழுத்துக்களின் பிறப்பைப் பல்வேறு நூற்பாக்களின் வழி விளக்கிச் செல்கிறார்.
ஒரு மொழியில் காணப்படும் பல்வேறு ஒலிகளை எழுப்பப் பல்வேறு மனித உறுப்புகள் உதவுகின்றன என்று இலக்கண ஆசிரியர்களும் மொழியியலாளரும் கூறுகின்றனர். ஒலியுறுப்புகளில் (Speech Organs) வயிற்றுப்பகுதியும், தொண்டைப்பகுதியும், தலைப்பகுதியும், சிறந்த பங்கினை வகுக்கின்றன. இதனை தொல்காப்பியரும்
உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை இ
(தொல். )
என்று கூறுகின்றார். இன்றைய ஒலியியலாளர்கள் கூறுகின்ற அளவிற்குத் தொல்காப்பியத்தில் தெளிவு இல்லாமல் இருந்த போதிலும் கூடப் பல்வேறு ஒலிகளின் பிறப்பைச் சிறந்த முறையில் கூறிச் சென்ற பெருமை தொல்காப்பியரைச் சாரும்.
ஒலிகள் பிறப்பதற்குக் காரணமான உறுப்புக்களாக நெஞ்சு (Lungs), மிடறு (Larynx), தலை (Buccal Cavity), மூக்கு (Nasal Cavity), என்ற நான்கையும் பல், இதழ் போன்றவற்றையும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
பொதுவாக ஒலிகளை (Sounds) இரண்டு வகையாகப் பிரிக்கல்லாம். அதன் அடிப்படையில் ஒரு மொழியில் காணப்படும் ஒலியன்களையும் உயிர், மெய் என இருவகையாகப் பிரிக்கலாம். இப்பிரிவினை தொல்காப்பியத்திலும் காணமுடிகின்றது. மொழியியலாளர்கள் உள்ளேயிருந்து வரும் காற்று எவ்விதமான தங்கு தடையின்றி வாயின் வழியாக வெளிப்படும் பொழுது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன என்பர். எனவே காற்று எவ்வாறு புறப்பட்டதோ அவ்வாறே தங்கு தடையின்றி வருவதால் உருவானவை உயிரொலிகள் என்பது மொழியியல் கொள்கை. இதனை தொல்காப்பியர்;
பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
( தொல். எழுத்து. 84)
எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்துக்கள் முப்பது எனக் கூறிய தொல்காப்பியர் அவற்றை
ஒளகார இறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப
(தொல். எழுத்து. 8)
எனவும்
னகர விறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப
(தொல். எழுத்து. 9)
எனவும் கூறித் தமிழ் எழுத்துக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.
பன்னீருயிரும் தந்நிலை திரியா எனக் கூறுவதிலிருந்து உயிர் எழுத்துக்கள் எவ்வித தடையுமின்றி, குறுக்கீடுமின்றி எனப் பொருள் கொள்ளலாம். இக்கருத்து உயிர்களின் பண்பு பற்றி இன்றைய மொழியியலாளர் கொண்டுள்ள கருத்துடன் பொருந்தி நிற்கிறது என்கிறார் அகத்தியலிங்கம் (1977:18).
அவற்றுள்;
அ ஆ ஆயிரண்டங்காந் தியலும்
இ, ஈ, எ, ஏ ஐ யென விசைக்கு
மப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதா
மண்பன் முதனா விழிம்பு லுடைய
உ, ஊ, ஒ, ஓ, ஒளவென விசைக்கு
மப்பா லைந்து மிதழ் குவிந் தியலும்
உயிர் எழுத்துக்களை தொல்காப்பியர் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார். அவை ‘அ’ ‘ஆ’ என்பவை ஒரு வகையாகவும், ‘இ’, ‘ஈ’, ‘எ’, ‘ஏ’, ‘ஐ’ என்பனவற்றை வேறு ஒரு வகையாகவும், ‘உ’, ‘ஊ’, ‘ஒ’, ‘ஓ’, ‘ஒள’ என்பனவற்றை மூன்றாவது வகையாகவும் பிரிக்கின்றார். இவற்றை முறையே Open unrounded, Front unrounded, Back rounded எனக்கூறலாம். இவற்றுள் உ, ஊ, என்பவை பின்னுயிர் (Back Vowels) என்றும், இ, எ போன்றவை முன்னுயிர் (Front Vowels) என்றும், அ, ஆ போன்றவை நடுவுயிர் (Central Vowels) என்றும் இன்றைய மொழியியலில் அழைக்கப் பெறுகின்றன.

மெய்யெழுத்துக்களை வல்லெழுத்து, மெல்லெழுத்து இடையெழுத்து எனத் தொல்காப்பியர் மூன்று வகையாகப் பிரிப்பார். வல்லெழுத்துக்கும், மெல்லெழுத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை குறைவு. இரண்டும் பிறக்கும் இடங்கள் (Point of articulation) ஒன்றே. இவற்றை ஓரிட மெல்லினம் (Homorganic nasal) என்று அழைப்பர் க, ச, ட கரங்களின் பிறப்பினைக் கூறும் சூத்திரத்திலேயே ங, ஞ, ண காரங்களின் பிறப்பினையும் கூறுகிறார் தொல்காப்பியர்.
மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
மூக்கினம் வளியிசை யாப்புறத் தோன்றும்
(தொல். எழுத்து. 100)
தொல்காப்பியர் தம்முடைய நூலில் தமிழ் எழுத்துக்கள் எனக்குறிப்பிடுவது தமிழ் ஒலியன்களை (Phonemes) என்கிறார் அகத்தியலிங்கம் (1977:19). பல்வேறு மாற்றொலிகளை உள்ளத்தில் கொண்டு அவை தனி ஒலியன்களாகாத தன்மையை முன்னிறுத்தியே எழுத்துக்கள் முப்பது என்றார்.
மொழியியல் கருத்துக்கள் வளராத நிலையில் போன்ற ஒலிகள் எல்லாம் தமிழில் இருக்கின்றது. ஆனால் க, ங, த போன்றவற்றை மட்டுமே தமிழ் இலக்கண ஆசிரியர்கள் குறித்துள்ளனர் என்ற வினாவிற்கு விடையிறுக்க முடியாத நிலையினையும் இதனை உள்ளத்தே நிறுத்தி அவை ஒலியன்கள் ஆகா என்ற எண்ணத்தில் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொல்காப்பியர் கூறிச் சென்ற நிலயினையும் நோக்கின் தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தின் பெருமை நன்கு விளங்கும். கடல், தங்கம், அகம், போன்ற சொற்களின் ‘ககரம்’ வருவதும் அவற்றுள் முதல் சொல்லில் ஆங்கில எழுத்தாகிய ‘k’ என்பதைப் போன்று மொழிக்கு முதலில் ககரம் மிக வல்லொலியாகவும் ‘தங்கம்’ என்பதில் ஙகரத்திற்குப் பின்னால் வருகிற நிலையில் ‘g’ என்ற ஆங்கில ஒலியைப் போன்று இசைஒலியாகவும் (Voiced) அகம் என்ற சொல்லில் ஆங்கில ஒலியான ‘h’ போன்று இரண்டு உயிர் எழுத்துக்களிடையே உரசொலியாக (Fricative) வும் உச்சரிக்கப்படுகின்றது. இவ்வாறு இவ்வொலிகள் தம்முள் ஒன்றி வருகின்ற இடத்தில் மற்றொன்று வராத நிலையைத் துணை நிலை வழக்கு (Complementary Distribution) என்பர் மொழியியலாளர். இவ்வாறு வரும் ஒலிகள் அனைத்தையும் ஒரே ஒலியனாகக் கொண்டே இல்க்கணம் அமைப்பர் (அகத்தியலிங்கம் 1977:20).
தொல்காப்பியர் ஒலியன், மற்றொலி, துணைநிலை வழக்கு என்றெல்லாம் விளக்கிப் பொதுவான ஒரு மொழிக் கொள்கையை உருவாக்கவில்லை எனினும், இக்கொள்கைகளை உள்ளத்தே கொண்டு தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறுவதில் அவருடைய ஒலியியல் (Phonetics) ஒலியனியல் (Phonemics) அறிவு நன்கு விளங்குகின்றது.
எழுதப் படுதலின் எழுத்து என மரபிலக்கணத்திலிருந்து அறிய முடிகின்றது. இது மட்டும் தான் எழுத்தின் இலக்கணமா? பல், கல் என்பவை வேறுபட்ட பொருள் உடையவை எப்படி அறிந்து கொள்ள முடிகின்றது. இரண்டு சொற்களிலும் அல் என்பது ஒன்றாகவே இருக்கின்றது.
பல் ப் அ ல்
கல் க் அ ல்
இங்கு பொருள் வேறுபாட்டை உணர்த்த ப், க் என்னும் இரு ஒலிகளே காரணமாக இருக்கின்றன. இலக்கணத்தில் இக்கோட்பாடு இருந்த போதிலும் மொழியியலே இதனைத் தெளிவாக விளக்குகின்றது. மொழியியல் கோட்பாட்டின் படி எவை பொருள் வேறுபாட்டிற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றனவோ அவை ஒலியன்கள் எனப்படுகின்றன. இலக்கணத்தில் அவை எழுத்துக்கள் எனப்படுகின்றன.
ஒரு மொழியில் பல ஒலிகள் இருக்கலாம். அவை அனைத்தும் பொருள் வேறுபாட்டைத் தருவதில்லை. குறிப்பிட்ட சூழலில் வரும் போது பொருள் வேறுபாட்டிற்கு அடிப்படையான ஒலியன் மாற்றொலியாக மாறுகின்றது.
மொழியில் ஒட்டு மொத்தமாகக் காணப்படுபவை ஒலிகள் (Phones)
பொருள் வேறுபாட்டைத் தருபவை ஒலியன்கள் (Phonemes)
சூழலால் கட்டுண்டு திரிபவை மாற்றொலிகள் (Allophones)
மரபிலக்கணத்தில் ஒலிகள், ஒலியன்கள், மாற்றொலிகளுக்குச் சான்றுகள் காணப்பெறுகின்றன. குறில் இகரம், குற்றியலிகரம், குறில் உகரம், குற்றியலுகரம் என நான்கு ஒலிகள் காணப்படுகின்றன.
இவற்றில் ஒரு மாத்திரை அளவுடைய குறில் இகரமும், உகரமும் பொருள் வேறுபாட்டைத் தந்து தனித்தனி எழுத்து (ஒலியன்) ஆகின்றன. குற்றெழுத்து அல்லாத நெட்டெழுத்து மற்றும் பிறவகை எழுத்துத் தொடர்ச்சியோடு மொழியீற்றில் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் குறில் உகரம் குற்றியலுகரம் என்ற சார்பெழுத்து (மாற்றொலி) ஆகத்திரிகின்றது.
இதே போன்று அசைச் சொல் மியாவில் மகரத்தை ஊர்ந்து வரும் (ம்+இ) இ குறுகி ஒலிக்கின்றது. இவ்வாறு குறுகும் குற்றியலிகரம் என்ற சார்பெழுத்து (மாற்றொலி) ஆகின்றது.
மரபிலக்கணங்களில் குறிப்பாகச் சொல்லப்பட்டவை எல்லாம் மொழியியல் விளக்கிக் கூறுகின்றது. சொல் இலக்கணத்திலும் மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் சில விளக்கங்களைப் பெறலாம்.
சொல்லதிகாரம், 1. கிளவியாக்கம் 2. வேற்றுமையியல் 3. வேற்றுமை மயங்கியல் 4. விளிமரபு 5. பெயரியல் 6. வினையியல் 7. இடையியல் 8. உரியியல் 9. எச்சவியல் என ஒன்பது இயல்களைக் கொண்டது. அவற்றுள் முதல் நான்கு இயல்கள் தொடரியல் பற்றியும், எஞ்சிய ஐந்து இயல்கள் உருபனியல் பற்றியும் விளக்குகின்றது. சொற்களின் வருகை (External distribution of words) பற்றி முதல் நான்கு இயல்களிலும், சொற்களின் கட்டமைப்பு (Internal structure of the word) பற்றி கடைசி ஐந்து இயல்களிலும் விளக்கப்பட்டுள்ளன.
தமிழில் சொல், கிளவி என்றால் ஒரே ஒரு பொருளை உணர்த்தக் கூடியதையும் (வா, போ) ஒன்றிற்கு மேற்பட்ட பொருண்மைகளைக் குறிக்கும் உருபுகளைக் கொண்ட சொல்லையும், (வா+ந்+ஆன்>வந்தான்) குறிக்கும். இங்கு ‘வா’ என்பது ஒரு பொருள் தரக்கூடிய ஒர் உருபு, வந்தான் என்பது பொருள்த் தரக்கூடிய மூன்று உருபுகளைக் கொண்டது.
வா - அடிச்சொல்
ந் - இறந்தகால இடை நிலை
ஆன் - எண், பால், இடம் காட்டும் விகுதி
தொல்காப்பியர் குறிப்பிடும் பல வினைமுற்று விகுதிகள் ஒன்றிற்கு மேற்பட்ட பொருண்மைகளைச் சுட்டுவனவாக உள்ளன. ஒலி, ஒலியனியலில் ஒலி, ஒலியன், மாற்றொலி என காணப்படுவதைப் போன்றே உருபனியலில் உருபு, உருபன், மாற்றுருபன் என்னும் பாகுபாடுகள் காணப்படுகின்றன.
மரபிலக்கணங்கள் இறந்த காலத்தை உணர்துவதற்கு நான்கு இடைநிலைகளை தொகுத்துக் கூறுகின்றன.
தடற வொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலந் தருந் தொழில் இடைநிலை
(நன். 142)
த், ட், ற், இன் என்பன இறந்த காலத்தை உணர்த்தும் என்பது விளக்க மொழியியல் ஆகும்.
-த்- செய்தான் செய் + த் + ஆன்
கொய்தான் கொய் + த் + ஆன்
-ட்- உண்டான் உண் + ட் + ஆன்
கண்டான் காண் + ட் + ஆன்
-ற்- சென்றான் செல் + ற் + ஆன்
தின்றான் தின் + ற் + ஆன்
-இன்- பேசினான் பேசு + இன்+ ஆன்
வருந்தினான் வருந்து +இன்+ஆன்
இந்நான்கு இறந்தகால இடைநிலைகளில் அடிப்படையானவை த், இன் என்ற இரண்டே. த் என்னும் இறந்த கால இடைநிலையின் வேறுபட்ட வடிவங்களே -ட்-, -ற்- என்பன. மரபிலக்கணங்கள் இறந்த கால வினைமுற்றுகளில் இருப்பவற்றைப் பகுத்து விளக்குகின்றார்கள். மொழியியலாளர்கள் இவற்றிற்கு மேலும் சில விளக்கங்களைக் கூறுகின்றார்கள்.
-த்-, -ட்-, -ற்- என்பன ஒர் அமைப்பிலும் -இன்- என்பது வேறோர் அமைப்பிலும் இடம் பெற்றாலும் அவை உணர்த்தும் பொருள் ஒன்றே, அஃது இறந்த காலம் என்பதாகும். இங்கு அடிப்படை வடிவமான (தீணீsமீ யீஷீக்ஷீனீ) -த்- குறிபிட்ட வினை அடிச்சொற்களோடு இணையும் பொழுது சூழலுக்கு ஏற்ப வடிவ மாற்றம் பெறுகின்றன.
த் > ட் / {ண், ள்}
உண் +த்+ ஆன் > உண்டான்
ஆள் + த்+ ஆன் > ஆண்டான்
த் > ற் / { ள், ல்}
தின் + த் + ஆன் > தின்றான்
கொல் + த் +ஆன் > கொன்றான்
அடிப்படை வடிவமான -த்- அடுத்து வரக்கூடிய ஒலியன் காரணமாக வடிவமாற்றம் பெறுவதை ஒலியன்னால் கட்டுண்ட மாற்றுருபு (Phonologically conditioned allomorph) என மொழியியலார் குறிப்பிடுவர்.
-இன்- என்னும் உருபும் இறந்த காலத்தைக் காட்டக் கூடிய ஒர் இடைநிலையே. இது பெரும்பாலும் குற்றியலுகர ஈற்று வினையடியோடு வருவதால் இதை உருபனால் கட்டுண்ட மாற்றுருபு (Morphologically conditioned allomorph) எனக் குறிப்பிடுவர். மரபிலக்கணத்தில் விளக்க நிலையில் குறிப்பிடப்பட்டுள்ள த், ட், ற், இன் என்னும் இறந்த கால இடைநிலைகளை மொழியியல் அடிப்படையில் அவற்றின் வடிவ மாற்றத்திற்கானக் காரணங்களை விளக்கிக் கூறலாம்.
தொல்காப்பியத்தில் உருபு, உருபன், மாற்றுருபு என்பனவற்றிற்கான விளக்கங்களும், கலைச் சொல் பயன்பாடும் காணப்பட வில்லையெனினும் அவை பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் சொல்லியலை மட்டுமல்லாது தொடரியல் பற்றிய பல கருத்துக்களையும் விளக்குவதாகவே அமைந்துள்ளது.
கிளவியாக்கத்தில் உள்ள 61 நூற்பாக்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவை தொடரியல் விளக்கங்களை அளிக்கின்றது என்பது அகத்தியலிங்கனார் (1977 : 29) கருத்து.
கிளவியாக்கம் என்ற தொடர் பல கிளவிகளால் அதாவது சொற்களால் ஆக்கப்படும் தொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பேசுவது எனப் பொருள் தரும். கிளவியது ஆக்கம் என விரிந்து சொல்லினது தொடர்ச்சி எனப் பொருள் உணர்த்தும்.
எழுவாய்- பயனிலையை ஏற்கும் போது பயனிலை என்னென்னெ விகுதிகளை ஏற்கும் என்பனவற்றைத் தொல்காப்பியர் ,
“ னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” (488)
“ ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” (489)
“அ ஆ வ என வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவறி சொல்லே” (492)
போன்ற நூற்பாக்களால் விளக்குகின்றார். இதனை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று கூறாமல் ‘விகுதி’ என்றே சுட்டியிருக்கிறார். எழுவாய்- பயனிலைக்குமிடையே காணப்படும் தொடர்பினை ‘இயைபு’ என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.
முடிவுரை:
ஒரு துறை பற்றி துல்லியமாக அறிந்து கொள்ள இன்னொரு துறை பற்றிய அறிவும் தேவைப்படுகின்றது. சார்ந்து ஆய்வு செய்யும் போது பல செய்திகளை மிக நுட்பமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடிகின்றது. பல விளக்கங்களைப் பெற முடிகின்றது. அந்த வகையிலே மொழி ஆய்விற்கும் இரு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று மரபு இலக்கணம் மற்றொன்று அறிவியல் பூர்வமாக மொழியை ஆராயும் மொழியியல். ஒரு மொழியின் அமைப்பினை மட்டுமே விளக்குவது மரபிலக்கணம். ஒட்டுமொத்த மொழிகளின் அமைப்பை விளக்குவது மொழியியல். மொழியியல் நோக்கோடு மரபிலக்கணங்களையும் உரைகளையும் நோக்கும் போது பல அரிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றாது. பல விளக்கங்களைப் பெற முடிகின்றது. இலக்கணம் முழு பழம். மொழியியல் தோல் உரித்துக் கொடுக்கின்றது. இலக்கணத்தால் உணர்த்த முடியாத சில கருத்துக்களை முழுமையாக விளக்க மொழியியல் துணை நிற்கின்றது.
துணைநூற்பட்டியல்:
1. ச. அகத்தியலிங்கம்,1977
மொழியியல் - வாழ்வும் வரலாறும்
க. புஷ்பவல்லி, அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலை நகர்
2. ச. சுபாஷ் சந்திரபோஸ், 2000
சொல்லியல் ஆய்வுகள்
மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை
3. வீ. ரேணுகா தேவி, 2010
சாஸ்திரியாரின் சொல்லதிகார அணுகுமுறையும்
உருபனியல் கோட்பாடும்
செந்தமிழ், (தொகுதி :52, பகுதி : 2, & தொகுதி : 53, பகுதி : 3) பக். 7-12.
4. கோதண்டராமன் பொன், 1973
இலக்கண உலகில் புதிய பார்வை
முனைவர். வீ. ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைகழகம்
மதுரை-21.
<prof.renuga@gmail.com>