சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ - வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய
ஈடுபாடுகள் போன்றவற்றைத் தமது பக்திநிலைப் பரப்புகளில் படியச் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடமளித்தன. அதனால்தான், சங்ககாலத் திணை இலக்கிய மரபுகளுள் ஒன்றான ‘அகப்பொருள் மரபு’ பக்திநிலை இலக்கியத்திலும் படிய நேர்ந்திருக்கிறது.
சங்க கால அகப்பொருள் இலக்கிய மரபு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலை மய்யமிட்டிருப்பது. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்ற மரபைப் பின்பற்றித்தான் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தம்மைப் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பாவித்துக்கொண்ட காதல் அனுபவ வெளிப்பாடுகள் மானுடம் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. கடவுள் பற்றிய காதல் அனுபவ வெளிப்பாடுகளும் அகப்பொருள் மரபைச் சார்ந்ததுதான் எனும் வகையில்
காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்(தொல்.பொரு.81)
என்கிறது தொல்காப்பியம். இத்தகைய அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பக்திநிலைக் கவிதைகளிலும் காணலாம்.
சமணத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் போனதற்குக் காரணம், வீடு பேறு என்ற நிலையை அடைவதற்குப் பெண்களால் முடியாது என வாதிட்டதுதான். இன்னொரு பிறவியில் ஆணாகப் பிறந்து வீடுபேறு அடைய வழி சொன்னதோடு, பெண்ணோடு இணைந்திருக்கும் இல்லறம் சிறப்பல்ல எனச் சமணமும் பவுத்தமும் கருதியிருந்தன. இதனால், தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறை நிராகரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. இதே சூழலில் சைவமும் வைணவமும் தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறையைத் தமதாக்கிக் கொண்டன. பழைய அகப்பொருள் மரபை வைத்துக்கொண்டு இறைக் காதலையும் மனிதக் காதலையும் பாடும் வகையில் பக்திநிலைக் கவிதைகள் பாடப்பட்டன.
சைவத் திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் காணலாகும் அகபொருள் மரபானது, அக்காலத்தியப் பக்திநிலைச் சூழலுக்கேற்றவாறு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, கடவுளைக் காதலராகப் பாவனை செய்துகொண்டு பாடுதலை பக்திநிலைக் கவிதைகளில் காணலாம். இத்தகைய அகப்பொருள் சார்ந்த பக்திநிலை மரபு சைவ-வைணவ இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கின்றது. அவற்றுள் வைணவ சமயம் சார்ந்து பாடியவர்களான நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் நாயகி - நாயகன் பாவனையில் பெண் மனவுணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆயினும், அப்பாவனைகள் ஞானத்தில் தன்பேச்சையும், பிரேமத்தில் பெண் பேச்சையும் கொண்ட ஆணின் குரலாகவே அமைந்திருந்தன. ஆனால், ஆண்டாளோ ஞானத்திலும் பிரேமத்திலும் தனது இயல்பான பெண் பேச்சையே வெளிப்படுத்தியுள்ளார்.
வைணவ இலக்கியக் கர்த்தாக்களான ஆழ்வார்களுள் ஆண்டாள் ஒருவரே பெண். மற்றவர்கள் அனைவரும் ஆண்கள். ஓர் ஆண் என்னதான் மெனக்கெடுத்துக் கொண்டு பெண் போலப் பாடினாலும், அது ‘பெண் பாடியது போல’ என்றுதான் அமையுமே தவிர, பெண் பாடியதாக இருக்க முடியாது. ஆண்களாக இருந்து கொண்டு பெண்போல பாவித்துக் கொண்டு பாடுவது செயற்கைத் தனம் கொண்டது. பெண்ணாகவே இருந்து பெண்ணாகவே பாடுவதில்தான் உண்மையும் உயிர்ப்பும் இருக்க முடியும். அவ்வகையில், ஆண்டாளின் கவிதைகள் இயற்கை ஓட்டத்தைக் கொண்;டிருப்பன. இவ்வியற்கை ஓட்டத்தைத்தான் ‘பள்ளமடை’ என்கிறார் திருப்பாவை உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை. அவர் எழுதிய திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகையில் “புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேகிப்பதிலுங் காட்டில் ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலே”1 எனக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் ஆண்டாளின் பக்திநிலை சார்ந்த கவிதைகளில் நாயகி நாயகர் காதல் வெளிப்பாடுகள் இயற்கைத்தன்மை கொண்டது என அறியலாம்.
ஆண்டாளின் இயற்கையான பெண்பேச்சு தமிழ் இலக்கிய மரபிலிருந்து விலகிய மாற்று மரபை முன்னிறுத்துகிறது. பெண்நிலை சார்ந்து ஆண்டாளின் கவிதைகளை நோக்கும்போது இவ்வுண்மை புலப்படுகின்றது. ஒரு பெண்ணின் நனவிலித் தளத்தில் உருவாகும் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குப் பல்வேறு சமூகத் தடைகள் மரபுகளின் பேரில் உருவாக்கப்பட்டிருந்தன. பெண்ணின் இயற்கைக் குணாம்சத்தை, இயற்கைக் காதலை, இயற்கைக் காமத்தை, இயற்கை களிப்பையெல்லாம் எக்காரணம் கொண்டும் ஒரு பெண் வெளிப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் பெண்ணை இறுக்க நிலையிலே வைத்திருந்தன. இந்நிலையில்தான், பக்திநிலை என்ற வெளிப்பாட்டுத்தளம் மூலமாக மடைமாற்றம் செய்து கொள்ளுதலைப் பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கினர் எனலாம்.
“எந்த ஓர் உணர்வுத் தளத்தின் தீவிரத் தன்மையும் ‘பக்தி’ என்பதால் மடைமாற்றி விடலாம். தீராத காமமும், காமம் பற்றிய அச்சமும்; தீராத காதலும், காதல் மீதான அருவருப்பும்; பெரும் திளைப்பும், திளைப்பை மறுக்கும் துறப்பும் என எதிர் எதிர்த் தீவிரத் தன்மைகளைக் கையாளும் இடம் இந்த பக்தி.”2 அவ்வகையில் நோக்கும்போது ஆண்டாளின் காதல் துயரமும் காம வேட்கையும் பக்தியின் வழியாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் கருத இடமுண்டு.
ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் பக்திநிலை சார்ந்து வெளிப்பட்டிருப்பினும், அவற்றுள் பெண்நிலை சார்ந்த கூறுகளைக் கொண்ட இயல்பான பெண்மொழியைக் காணமுடியும். “மரபான ஆணாதிக்கச் சமூக அமைப்பில், ஆண்களை மேன்மைப்படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கிய மரபுகளையும் மொழியமைப்பையும் உடைத்துக் கொண்டு மாற்று மரபாகத் தன்னுடைய காதல் உணர்வுகளை எந்தவிதப் பூச்சுமின்றி இயல்பான பெண்மொழியில் வெளிப்படுத்தியவர் ஆண்டாள்”3ஆவார்.
மரபுகளாலும் வரம்புகளாலும் தடுக்கப்பட்ட பெண்ணின் இயல்பான காதல் உணர்வுகள் இலக்கியத்தளத்தில் பதிகின்றபோது, இதுவரையிலான மரபார்ந்த பார்வையைக் கொண்டிராமல் மாற்று மரபைக் கொண்டிருக்கிறது புலனாகின்றது. நிலவுகிற மரபுகளின் மீது எதிர்வினையாற்றக் கூடிய தன்மையை மாற்று மரபுகள் பெற்றிருக்கும். எதிர்ப்பும் மறுப்பும் புதிதும் கொண்ட மரபாகவே ஆண்டாளின் மாற்று மரபு அமைந்திருக்கிறது. இத்தகைய மாற்று மரபு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது எனலாம்.
ஆண்டாளின் கவிதைகள் திருமால் மீது கொண்ட காதலையும், திருமாலுடன் சேரத்துடிக்கின்ற வேட்கையையும் வெளிப்படுத்தியமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆண்டாள் குறித்து வழங்கப்பெறும் கதைகள்வழி நோக்கும்போது அவர் பாடியதன் பின்னணியை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.
ஆண்டாள் பற்றிய திட்டவட்டமான வரலாறு கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், அவர் குறித்த சில தரவுகளின் அடிப்படையில், ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாகக் கருதப்படுகிறார். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள் என்று புராணக் கதைகள் கூறும் நுhல்கள் குறிப்பிடுகின்றன. கடவுளால் அருளப்பெற்ற குழந்தையே ஆண்டாள் எனும் புனைவை விலக்கி வைத்துப் பார்க்கும் போது, ஆண்டாளைப் பெற்ற தாய் தந்தையர் இன்னாரென்று அறிய இயலவில்லை.அநாதரவான நிலையில் இருந்த ஆண்டாள், பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
ஆண்டாள் பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்திருக்கலாம்.
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே (நா.திரு.13:7)
என்ற குறிப்பின்வழி தமது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஆண்டாள். பெற்ற தாய் வெறுத்து ஒதுக்கியதனால் அனாதையாகிப் போனதும், அனாதையான பிறப்பைக் கொண்டதால் மணவாழ்வு கிட்டாமல் மறுபடி அனாதையாக்கப்படுவதும் ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழும் கசப்பான அனுபவங்கள்.
மானுட உலகின் மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் அவமானங்கள், மானுட உலகின் ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்க்கை போன்றவையால் மானுட உலகின் ஆண்களையே நிராகரிக்கும் முடிவுக்கு ஆண்டாளைத் தள்ளியிருக்க வேண்டும். அதனால்தான்,
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் (நா.திரு.1:5)
என்று மானுட உலக ஆணினத்தின் மீதான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார். “மரபு வழியாக ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் அழகு, தோற்றப் பொலிவு, அவற்றுக்கெல்லாம் மேலாகக் கல்வி, அதனால் விளைந்த தனித்த ஆளுமையான கவித்திறன் ஆகிய அனைத்தும் தன்னிடம் கைகூடியிருந்தபோதும், பிறப்பின் மர்மத்தில் திருமணச் சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழ்மன ஆவேசம், பக்திப் பின்னணியோடு ஒருங்கிணைந்து இயக்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அவர் பாடல்களில் எதிர் வினையாற்றியிருக்கிறது”4 எனலாம்.
ஆண்டாள் வாழ்ந்த காலத்தியச் சமூக அமைப்பு, பெண்களைக் குடும்ப அமைப்பிற்குள் இருத்தி வைப்பதற்காக மணவாழ்க்கைமுறை குறித்தான மிகை மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருந்தது. பெண் ஆண் உறவைக் கொண்ட மணவாழ்க்கை முறைக்கு முதன்மை அளிக்கப்பட்ட சமூக அமைப்பின் தாக்கம் ஆண்டாளுக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களால் ஏற்படுத்தித் தரக்கூடிய மணவாழ்க்கை முறையே அன்றைய காலகட்டத்தில் உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆண்டாளும் அத்தகைய மணவாழ்க்கை முறையைத்தான் விரும்பியிருக்கிறார்.
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழியே போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழிகாப்பு அரிது (நா.திரு.12:3)
என, உடன்போக்கின் மூலமாக அமையும் மணவாழ்க்கை முறையை ஆண்டாள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆண்டாள் எதிர்பார்த்த மணவாழ்க்கை முறையைப் பெரியோர்களே ஏற்படுத்தித் தரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், அத்தகைய மணவாழ்க்கை ஆண்டாளுக்கு வாய்க்கப்பெறவில்லை. அதனாலேயே மானுட மணவாழ்க்கை மீதான வெறுப்பையும், மானுட ஆண்கள் மீதான எதிர்ப்பையும் ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். இவ்வெதிர்ப்பை நேரிடையாக வெளிக்காட்ட முடியாத சூழலில்தான் அவ்வெதிர்ப்பைப் பக்திநிலை வடிவில் - திருமாலைக் காதலிப்பதாகவும் - அத்திருமாலையே மணமுடிக்க வேண்டுமென்று துடிப்பதாகவும் மடைமாற்ற முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கருதலாம்.
மானுட உலகின் ஆண்களின் மீதான எதிர்ப்பை, தன்னில் எழும் காதல் உணர்ச்சியும் - காம வேட்கையும் திருமாலுக்குரியது எனப் பாடுவதின் மூலம் காட்டுகிறார். மானுட உலகின் ஆண்கள் எதை நிராகரித்தார்களோ, எதை வெளியிடக்கூடாது என்றார்களோ அவற்றையே பாடுவதின் மூலமான எதிர்ப்பு மனநிலை ஆண்டாளிடம் காணப்படுகின்றது. ஆனால், “பெண்ணின் இயல்பான இந்த எழுச்சியை ஏற்க முடியாதவர்கள் அவளை இறைவியாக ஆக்கினர். இராமாநுசர் காலத்தில் நிறுவன சமயமாக வைணவம் உருப்பெற்றது. அவரது சீடர்களாலும்;, பின்வந்தவர்களாலும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட திவ்ய ஆசரிதம் (ஆழ்வார்கள் வரலாறு கூறும் வடமொழியிலான நூல்) குருபரம்பறை (மணிபவள நடையில் அமைந்துள்ள ஆழ்வார்கள் ஆசாரியர்கள் வாழ்க்கை வரலாறு கூறும் நூல்), திருப்பாவை, நாச்சியார் திருமொழி உரைகள் அனைத்திலும் ஆண்டாள் பெரிய பிராட்டியாகவும், அவர் பாடிய பாடல்கள் வேதம், உபநிடதம் எனவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன.”5 அதாவது, பக்திநிலை மடைமாற்றத்தின் மூலமாக வெளிக்கொணரப்பட்ட எதிர்ப்புணர்வு தீவிரத்தன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஆண்டாளை இறைவியாக்கியிருக்கிறார்கள்.
மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட அம்மை, மானுட வாழ்வை மறுத்ததும், மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட ஆண்டாள் மானுட மணவாழ்வை மறுத்ததும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆயினும், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் இறையடியாராக, இறைவியாக ஆக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்பது எதிர்ப்புகளைக் காயடிக்கும் ஆண்வழிச் சமூக முறைமைகள்தான் என்பது தெளிவான ஒன்றாகும்.
மானுட மணவாழ்வை ஆண்டாள் நிராகரித்ததற்கான காரணங்களுள் ஒன்றாக, அவருடைய வளர்ப்புச் சூழலையும் கருத இடமுண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், குழந்தைப் பருவத்திலிருந்தே பக்திச் சூழலோடு வளர்க்கப்படுகிறார். தாயற்ற ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தாயும் தந்தையுமாகக் காணப்படுகிறார்.
திருமாலுக்குப் பெரியாழ்வார் மேற்கொள்ளும் பக்திக் கடமைகளுக்கு ஆண்டாள் உதவியாய் இருப்பதோடு, பக்திநிலை உணர்வில் தானும் இரண்டறக் கலந்துவிடுகிறார். திருமால் குறித்தான அவதாராக் கதைகளும், நம்பிக்கை சார்ந்த புனைவுகளும் பெரியாழ்வாரால் உணர்வுப் பூர்வமாகச் சொல்லப்பட்டதை ஆண்டாளும் உள்வாங்கியிருக்க வேண்டும். உள்ளம் உருகச் சொல்லப்பட்ட பக்திநிலைக் கதைகள் ஆண்டாளின் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் “தந்தையால் வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணனின் பல பெண்களை நேசிக்கும் போக்கை, அவன் கோபியரோடு வைத்திருந்த உறவும், அவனை மணம் முடிக்க அவர்கள் விரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் தான் மணம் முடிப்பதாக அவன் வாக்களித்து விளையாடியதெல்லாம் ஆண்டாள் மனதிலும் வேரூன்றி தன்னையும் ஒரு கோபியராகப் பார்க்க வைத்தது.”6 அதனால்தான், திருமாலுக்காகக் கட்டப்பட்ட மாலையைத் தான் சூடிப்பார்க்கும் ஆசையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
திருமாலுக்குச் சூட வேண்டிய மாலையைத் தான் அணிந்து பார்க்க வேண்டும் என்ற காதல் உணர்வு இயல்பாகவே ஆண்டாளின் உள்ளத்தில் தோன்றுகிறது.
ஏனெனில், மலர்களோடும் மாலைகளோடும்தான் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். இந்த மாலைகளும் மலர்களும் மணவாழ்வையும் மங்கலத்தையும் குறித்து நிற்கக் கூடியவை. ஆகவே, ஆண்டாள் கட்டிக் கொடுக்கின்ற மலர் மாலைகள் ஆண்டாளின் மணவாழ்க்கை விருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே திருமால் மீது கொண்ட விருப்பங்களும் ஒன்றுகூடி திருமால் மீதான காதலாக ஆண்டாளிடம் உருவெடுக்கின்றது.
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என ஆண்டாள் குறிப்பிடுவதின் மூலம், குழந்தைப்பருவம் முதலே திருமாலின் மீது ஈடுபாடும் காதலும் கொண்டு ஆண்டாள் வளர்ந்து வந்திருக்கிறார் என அறிய முடிகின்றது. இவ்வாறு மானுட ஆண்களின் மீதான எதிர்ப்புணர்வு ஆண்டாளிடம் தோன்றுவதற்கு, மானுட ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்வுத் தடைகள், வளர்ந்து வந்த பக்திச் சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதலாம்.