ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!
வள்ளுவம் பெருஞ்சொத்து!
அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)
திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))
திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)
அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!
* திருவள்ளுவர் சமணர்!
* இல்லவே இல்லை அவர் சைவ சித்தாந்தியே!,
* அவர் பெளத்தராய்க் கூட இருக்கலாம்!
* அவர் வைணவக் கருத்துகளை ஆங்காங்கே உதிர்க்கிறார்!
வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!
அவ்வளவு ஏன்... வள்ளுவருக்கு விபூதிப் பட்டை போட்டு, வள்ளுவ தேவ நாயனார் என்றெல்லாம் கூடச் சொல்பவர்கள் உண்டு!
இன்றும் விபூதி போட்ட வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலே, சிலையாக நடு ரோட்டில் காட்சி அளிக்கிறார்! :)
மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு வடக்கே, வள்ளுவர் கோயில் வேற ஒன்னு இருக்கு! கோயிலின் மூலவர் ஏகாம்பரேஸ்வரர்! :)
யாரு கட்டினாங்களோ? கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தான் இருக்கும்! வள்ளுவரின் அம்மா-அப்பா = ஆதி பகவன்??? அவங்களுக்கும் கோயிலில் சிலை உண்டு! :)
"ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதை வைத்துக் கொண்டு, அவர் தாய் தந்தையர் பேரு = ஆதி பகவன்-ன்னு சொன்னா எப்படி? :)
தன்னுடைய அம்மா-அப்பா தான், உலகம் முழுமைக்கும் முதல், முதற்றே உலகு-ன்னு சொல்லக் கூடியவரா என்ன வள்ளுவப் பெருந்தகை? :)
அடக் கடவுளே! இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லியா? சிறந்த ஒன்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள வேணும்-ன்னா, அதுக்காக இப்படியெல்லாமா செய்வது? ஒரு நல்ல தலைவரின் கொள்கைகளை ஒன்னுமில்லாப் போகச் செய்யணும்-ன்னா, அவருக்குச் சிலை வைச்சி, அபிஷேகம் பண்ணாப் போதும் போல இருக்கே? :)
இப்படித் தான், சிறந்த சங்கத் தமிழ்க் கவிஞர்களான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் - பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி....
அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் "நாயனார் இரட்டை மணிமாலை"-யை, பன்னிரு திருமுறைகளில் வேறு வைக்கப்பட்டு விட்டது!
நல்ல வேளை, வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், "திருவடிகள்" பற்றி நிறைய பேசுவதால், அவருக்கு "நாமம்" போடாமல் இருந்தார்களே! அது வரைக்கும் ரொம்ப சந்தோசம்! :)
இப்படி, தனிப்பட்ட ஒருவரை/ஒன்றை, இத்தனை பேர் "உரிமை" கொண்டாடுவது வேறு எந்த தமிழ் நூலுக்காவது உள்ளதா?
இப்படித் தமிழர் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அற்புத சக்தி = வள்ளுவம்!
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவது ஒரு வழியில் மகிழ்ச்சியே என்றாலும்...
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவோர் கட்டாயம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்!
* வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* நக்கீரர் செய்ய வந்தது = சமய நூல்!
* நக்கீரர் - கடைச் சங்க காலம் - அவர் செய்தது திருமுருகாற்றுப்படை என்னும் சமய நூல்! அதை அவரே வெளிப்படையாகச் சொல்கிறார்!
* வள்ளுவர் - நக்கீரருக்கும் பின்னால் - சங்கம் மருவிய காலம் - வள்ளுவர் ஒரு சமயநூலைச் செய்ய வந்திருந்தால், அந்தச் சமயக் கோட்பாடு, அதன் கதைகள் என்றெல்லாம் நக்கீரர் போலவே அவரும் விளக்கி இருப்பாரே! ஆனால் வள்ளுவத்தில் அப்படி ஒன்னும் இல்லையே!
நினைவில் வையுங்கள்: வள்ளுவரின் நோக்கம்: ஒரு சமய நூலைச் செய்வது அல்ல!
அவரே அப்படிச் செய்யாத போது...
அவர் பயன்படுத்திய சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு...
வள்ளுவர்=சமணம்,சைவம்,பெளத்தம் என்று மல்லுக்கு நிற்பது ஏனோ? :(
ஒரு படைப்பாளியின் மேல், அவரவர் தனிப்பட்ட முத்திரைகளைக் குத்தல் என்பது சான்றாண்மை ஆகாது!
அப்படிப் பார்த்தால் என் பதிவுகளில், அன்னை மரியாள் பற்றிச் சிலாகித்துப் பலமுறை எழுதி உள்ளேன் - நான் கிறித்தவனா?
கூகுளில் "பக்ரீத் - சரணாகதிப் பார்வை"-ன்னு தேடுங்கள்! என் பதிவு தான் வந்து நிற்கும்! "பக்ரீத்/ஈமான்" என்ற "சொல்லை"ப் பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக, நான் முஸ்லீம் என்று முடிவு கட்டி விடுவீர்களா? :)
* வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது = எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
* வள்ளுவத்தில், "எண்குணத்தான்" என்ற சொல் வருகிறது = எனவே அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது = எனவே அது இந்து மதம்! => இப்படியெல்லாம் கிளம்புவது நமக்கே லூசுத்தனமா இல்லை?:)
ஆறு குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாகத் தான் முடியும்!
வள்ளுவரின் கால கட்டத்தில், அவர் கண்ட சமூகத் தாக்கங்களை, தன் நூலில் பதிந்து வைத்திருப்பார் - ஒரு சமூகக் கண்ணாடி போல!
இந்திரன் ஒழுக்கம் தவறி, சாபம் பெற்ற கதை, மக்களிடையே அன்று பேசப்படுமானால்...
அதைத் தன் கவிதையில் குறித்துக் காட்டி...தான் சொல்ல வந்த நெறியை விளக்குவது...
- இது எந்தவொரு கவிஞரும் செய்யக் கூடியது தான்! அதற்காக "இந்திரன் கதையை" சொன்னதால் அவர் "தமிழ்-ஹிந்து" என்று கிளம்புதல் தகுமா?
* இந்திரன் கதை வள்ளுவருக்குத் தெரியும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* பொறி வாயில் ஐந்து அவித்தல் - ஆசை அறுத்தல் என்னும் சமணக் கோட்பாடு வள்ளுவருக்குத் தெரிந்திருக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* திருவடிகளே தஞ்சம் என்று வள்ளுவம் பேசுவதும், வைணவத் தத்துவமும் ஒத்துப் போகின்றது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
ஆனால் அதற்காக வள்ளுவருக்கு, சைவர்/சமணர்/வைணவர்/நாத்திகர் என்றெல்லாம் முத்திரை குத்துவது என்பது கூடவே கூடாது!
அவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல! அவர் செய்ய வந்தது அறம்-பொருள்-இன்பம்!
* வள்ளுவத்தின் கருத்துக்கள் போல எங்கள் சமயத்திலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்!
* ஆனால் வள்ளுவம் = சைவமே, சமணமே, வைணவமே என்பதெல்லாம் சான்றாண்மையே இல்லாத ஒன்று!
ஆத்திக -நாத்திக ஒற்றுமை:
சரி ஆத்திகர்கள் தான் இப்படி-ன்னா, இதே தவறைத் தான் நாத்திகர்களும் செய்கிறார்கள்! அடக் கொடுமையே! என்னமா ஆத்திக-நாத்திக ஒற்றுமை! :)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இந்தக் குறளில், "இறைவன்" என்பதை அழுத்தமாகவே குறிக்கிறார் வள்ளுவர்! "பிறவிக் கடல்" என்று வேறு சொல்கிறார்!
ஆனால் இதற்கு உரை எழுதும் தமிழ்ப் பற்றுள்ள நாத்திகர்கள் (அ) அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள், இறைவன் = தலைவன் என்று எழுதுகின்றனர்! :)
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில்...நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
ஓபாமா கட்சிக் காரவுக, ஓபாமா அடி சேரலீன்னா, அட்லாண்டிக் கடல் நீந்த முடியாது-ன்னு வேணும்-ன்னா சொல்லலாம்! ஆனா, பிறவிக் கடல் நீந்த முடியாது-ன்னு சொன்னா எப்படிப்பா? :)
தங்கள் நாத்திகக் கருத்தை, வள்ளுவத்தில் வலியத் திணிப்பது என்பதும் கூடாது!
வள்ளுவத்தில் நாத்திகம் பேசப்பட்டு இருக்கு! அறம் பேசப்பட்டு இருக்கு! மறம் பேசப்பட்டு இருக்கு! = எல்லாப் பொருளும் இதன் பால் உள!
"இறைவன் அடி" என்று வள்ளுவர் சொன்னால்.... அதை ஏதோ "தலைவன் அடி" என்று வலிந்து மாற்றிப் பொருள் கொள்வது...போலியான விளக்கம் என்று தானே பல் இளித்து விடும்! :) ஓபாமா வழியில் போவாதவங்க எல்லாம் பிறவிக் கடலில் மாட்டிப்பாங்க-ன்னு படிங்க! ஒங்களுக்கே சிரிப்பு வருது-ல்ல? :)))
இன்னொரு சான்றையும் எடுத்துக் கொள்வோம்!
திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்!
எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படிப் பழக்கத்திலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை!
ஆனால்...அதற்காக...வள்ளுவர் முதல் பத்து குறட்பாக்களிலும், திருவடிகளைப் போற்றுகிறார்! எனவே வள்ளுவம் = வைணவ நூல்! வள்ளுவர் = வைணவர் என்று சொன்னால், அதை விட முட்டாள்தனம் வேறில்லை! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை-ன்னே நினைக்கிறேன்!
வேண்டுமானால், குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளை, வைணவத் தத்துவங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்!
அவ்வளவு தான்! அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!
வள்ளுவர் காலத்துக்கு முன்னமேயே, தொல்காப்பியர் காலம் தொட்டே, மாயோன் வழிபாடு இருந்திருக்கு! = மாயோன் மேய காடுறை உலகமும்! மாயோன் அன்ன மன் பெரும் சிறப்பின்....தாவா விழுப் புகழ்!
அப்படி, சமூக வாழ்வியலில் காணலாகும் திருவடி வணக்கம் வள்ளுவர் கருத்தையும் கவர்ந்திருக்கு! என்று வேண்டுமானால் "ஊகிக்கலாமே" தவிர...
"திருவடி" என்ற சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு, வள்ளுவர் = வைணவர் என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனம்!
இன்னொரு முறையும் சொல்கிறேன், வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* அவர் திருமுருகாற்றுப்படை போல் ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு!
* ஆனால், நோக்கமே = அறம், பொருள், இன்பம் என்னும் போது...
* அந்த நூலில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் சொற்களை வைத்து...
* வள்ளுவர் இந்த சமயம் தான், அந்த சமயம் தான் என்ற விவாதம் - யானையை அளந்த ஆறு குருடர்கள் கதையாகத் தான் முடியும்!
சமயம் வளர்க்க எத்தனையோ நல்ல சமய-நூல்கள் உள்ளன!
அதை விடுத்து,
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
இப்படி ஒரு பிக்கல்-பிடுங்கல் மெய்யாலுமே தேவையில்லை!
திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!
அது மொத்த உலகுக்கும் தமிழ் மொழி வழங்கிய தமிழ்க் கொடையாகவே இருக்கட்டும்!
திருக்குறள் = உலகப் பொது மறை!
அது உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!
ச