சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் குறைந்தபட்சத் தரவுகளை முன்வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வாய்வழி வரலாறுகளாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் சுட்டப்படுவது இன்றியமையாதது.
அடுத்து, தேவதாசிகள் போன்ற குறிப்பிட்ட வகைமையினரைப் பற்றிப் பேசும்போது, வரலாற்றின் நெடிய பக்கங்களில் இந்த வகைமை ஒவ்வோர் இடத்திலும் காலகட்டத்திலும் எவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது என்ற பரந்த புரிதல் வேண்டும். இந்தியாவின் எல்லா இடங்களிலும் தேவதாசிகள் சம்பந்தப்பட்ட உள்ளூர் மரபுகளோ அல்லது இவர்கள் பெற்றிருந்த சமூக, பண்பாட்டு இடமோ ஒன்றே போன்றதாக இல்லை. கோயில் நடனக்காரர்கள் என்று சமயத்தோடு மாத்திரமே இவர்களின் சமூக, பண்பாட்டு இருப்பைத் தொடர்புறுத்தி எழுதுவது என்பது குறைந்துபட்ட புரிதலாகும்.
சங்க கால விறலியர், பரவையார் போன்ற பக்திக் காலகட்டப் பெண்டிர், சோழர்கள் காலத் தளிச்சேரி பெண்டுகள், இவர்களும் இவர்களொத்தவர்களும் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையிலான கோயில், அரண்மனை உட்பட்ட பொதுவெளி இயக்கங்களும் பங்களிப்புகளும், பின்னர் தேவதாசி – நடனப் பெண்டிர் அடையாளத்தில் நாயக்கர் காலகட்டத்தில் ஒருங்கிணைந்தது என்ற கருத்து தற்போது வரலாறு, மானுடவியல் ஆய்வுகளில் வலுப்பெற்றிருக்கிறது. தவிர காலனிய நவீனத்தில் முன்மொழியப்பட்ட ‘நாகரிகம்’ குறித்த சொல்லாடல், ‘ஒழுக்கம்’ பற்றிய பார்வை, சமூகச் சீர்திருத்த விவாதங்கள் போன்றவையும், இன்று நாம் புரிந்துகொண்டிருக்கிற தேவதாசி என்ற அடையாளத்தை உருவாக்கியிருக்கின்றன, பாதித்திருக்கின்றன. தேவதாசிகளைப் பற்றிப் பேசும்போது இவற்றையெல்லாம் மனதில்கொள்வது முக்கியம்.
போகிற போக்கில் சொல்லிவிடலாமா?
கவிஞர் வைரமுத்துவுக்கு அவர் ஆண்டாள் பற்றிப் பகிர்ந்த கருத்துகளை முன்வைக்க எல்லா உரிமையும் உண்டு, அவரை அச்சுறுத்தும் முகமாக விடுக்கப்படும் பாஜக ஆதரவாளர்களின் வன்முறைப் பேச்சுகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இதை உரக்கக் கூறிவிட்டே மேலே தொடர்கிறேன். வைரமுத்து தன் உரையில் ஆய்வாளர் ஒருவரைச் சுட்டி ஆண்டாளை தேவதாசி என்பதுபோல அறிவிக்கிறார். இந்த ஆய்வாளர் அமெரிக்கரா, இந்தியரா என்ற தேசிய அடையாளம் எனக்கு முக்கியமல்ல. வைரமுத்துவின் அந்தச் சுட்டுதல் தகவல் பிழையோடு செய்யப்பட்டது என்பதோடு, இப்படி ஒரு சில வரிகளில், மகாகவி ஒருத்தியின் அடையாளத்தைப் போகிற போக்கில் அறிவிப்பது கற்றார் செயலாக எனக்குத் தோன்றவில்லை. ஆண்டாள் தன் பாடலில் தன்னைப் ‘பட்டர்பிரான் கோதை’ என்றே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள் பிரதி வழியில் வருகிற அந்தச் சுய அறிமுகக் குறிப்பை விளிக்காமல் எந்த ஆய்வாளர் / பாடலாசிரியரும் வேறு யூகத்தை முன்வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்த யூகத்துக்கு ஆன்மிக உரைகளிலோ ஆன்மிகம் நீங்கிய உரைகளிலோ என்ன பெறுமதி இருக்க முடியும்?
மேலும் இசை, ஓவியம், நடனம் உள்ளிட்டத் தமிழ்க் கலைகளை வளர்த்ததிலும் அதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றியதிலும் தேவதாசிகளுக்கு இணை கிடையாது. அப்படியிருக்க, தேவதாசி மரபில் ஆண்டாள் தன்னை வைத்துப் பாடல் எழுதியிருந்தால் ஆண்டாளுக்கு அது பெருமை சேர்ப்பதே.
ஆனால், அத்தகைய அடையாளத்தைப் பிறர் யூகித்துச் சொல்வதில் பிரச்னையிருக்கிறது.
‘குலமகள்’ என்பவர் யார்?
வைரமுத்து இவ்வாறு கூறியிருக்கிறார்: “அவள் பிறப்பு குறித்து ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாக அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.”
இதில். ‘அந்தணரே’யில் உள்ள ஏகாரத்தைக் கவனியுங்கள். அந்த ஏகாரம் சாதி உள்ளிட்ட சமூகக் கட்டுமானங்களில் மயங்கியிருக்கிற ஏகாரம். அடுத்து அந்த ‘குலமகள்’ பதம். ‘குலமகள்’ என்கிற பயன்பாட்டுக்கு உள்ளார்ந்த பண்பாட்டுப் பொருள் மற்றும் மதிப்பு உள்ளது. சிலப்பதிகாரம், வெற்றிவேற்கையிலிருந்து தொடங்கி இன்றுவரை குலமகள் என்கிற கருத்தாக்கத்துக்கு எதிராக வைக்கப்படுவது யார் என்று தமிழறிந்தவர்களுக்குத் தெரியும். வெளிப்படையாக வைக்கப்படுகிற வார்த்தைகள் மட்டுமல்ல, சுட்டி விடப்படுகிற மௌனங்களும் இலக்கிய, பண்பாட்டு வரலாறுகளுக்குள் பொதிந்தவையே. என்னைப் பொறுத்தவரை வைரமுத்துவின் யூகம் இதனாலேயே ஆண் மையம் சார்ந்தது; ஆகவே, விமர்சிக்கப்பட வேண்டியது.
பொருள் மயக்கத்துக்கு இடம் தரலாகாது
ஆண்டாள் விலைமகள் என்றால் மதிக்க மாட்டீர்களா என்றால் என் பதில், நிச்சயமாக எந்தக் குறையுமில்லாமல் மதிப்பேன். ஆனால், இந்த ஆண்மையச் சமூகத்தில் ஒரு பெண் தன்னை தேவதாசி என்றோ, அதிலிருந்து மாறுபட்ட அர்த்தத்தில் விலைமகள் என்றோ அழைத்துக்கொள்வது வேறு, ஓர் ஆண் இருபொருள் மயங்க அவளை அப்படி விளிப்பது வேறு. ஆண்மையச் சமூகத்திலிருந்தபடி அதை எல்லாவிதத்திலும் போற்றிப் பாதுகாக்கிற, அதிலிருந்து மேலாண்மையை, சுகபோகங்களைப் பெறுகிற ஆண், ஒரு பெண்ணை, அவள் கவிஞராக இல்லாவிட்டாலும் தெய்வமாக இல்லாவிட்டாலும்கூட இவ்வகையில் பொருள்மயங்க அழைப்பது சரியல்ல.
கடுமையாக மறுக்கப்பட வேண்டிய, தொடர்புடைய இன்னொரு பால்பாகுபாட்டுக் கருத்தாக்கமும் இதில் உள்ளது. பாலியல் சொல் விடுதலையைப் பேசுபவள் என்பதாலேயே ஆண்டாளைக் ‘குலமகள்’ அல்லாத அடையாளத்தோடு வைத்து உரைப்பது. இதன் வெளிப்படையான அர்த்தம், காமத்தை எழுதுபவர்கள் குலமகளாக இருக்க முடியாது என்பதுதான். எழுத்திலிருந்து குல அடையாளத்தைத் தேடிப் பார்க்கும் மரபார்ந்த சொல்லாடல் இது. தன் பாலியலையும் பாலியல் விடுதலையையும் ஒரு பெண் கொண்டாடிப் பேசுவது வேறு, ஒரு பெண்ணின் எழுத்து வெளிப்பாட்டிலிருந்து அவள் பிறப்பை இவ்விதமாக அனுமானிப்பது வேறு. பழைமைவாத மதிப்பீட்டு மனோநிலையிலிருந்து வைரமுத்து செய்தது இதைத்தான். இவ்வகையான அனுமானம் திண்ணை வம்பளப்பாக, வெற்றுப் பரவசமாக மிஞ்சுமே அன்றிப் பெண்களின் பாலியல் விடுதலைக்கு எவ்வகையிலும் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாது.
முடிவு செய்ய வேண்டியது பெண்தான்
வெகுகாலம் முன்னர் என் நெருங்கிய நண்பர் என்னிடம் ஒருமுறை கேட்டார். பாலியல் வன்புணர்வைச் சில்லுமூக்கு உடைவு போல ஒரு பெண் பார்க்க வேண்டும். ஆனால், ஏன் அப்படிப் பார்ப்பதில்லை என்று. அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது அவளே. அதை அவள் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆண் தன்னிலை நிலையிலிருந்து ஆலோசனையாகச் சொல்வதுகூடத் தவறு என்று நான் அவரிடம் சொன்னேன்.
மேலே குறிப்பிட்டிருக்கிற பெண் அடையாளச் சொல்லாடலும் இதைப் போலத்தான். பொறுப்போடும் கவனத்தோடும் அணுக வேண்டிய ‘தேவதாசி’ போன்ற பண்பாட்டு இடையீடுகள் மிகுந்த பாலின வகைமையை, ஒரு சில வாக்கியங்களில் ஏனோதானோவென்று பொருள்மயங்கச் சொல்லிவிட்டு, அது பெருமைக்குரிய அடையாளம்தானே என்று கூறுவதில் நியாயமில்லை. பெண் பாலினம் சார்ந்த விவகாரங்களில் போதிய பொறுப்பும் கவனமும் இன்றி இப்படியாக ஓர் ஆண் கூற்று வெளிவரும்போது, பாலின ஒடுக்குமுறைக்கு அது ஆதரவாக இருக்கக்கூடிய அபாயமுண்டு.
இந்தப் பதிவை நான் எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஆண்டாள் ஒரு பெண் கவிஞர் என்பதால். நான் பெண் கவிஞர் என்று அறியப்பட விரும்பாவிட்டாலும் சகோதரித்துவ ஒன்றிப்பை பெண் கவிஞர்களோடு உணரும் சில தருணங்களும் எனக்கு உண்டு என்பதால்.
வன்மத்தைக் கையிலெடுக்க சாக்கை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பாஜக தரப்புக்கு வைரமுத்து தேவையில்லாமல் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்கிற மனவருத்தத்தையும் இங்கே நான் பதிவு செய்யத்தான் வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கவிஞர், எழுத்தாளர். ஆறு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.)