வைரமுத்துவின் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய கட்டுரையின் கடைசி வரி தான் சர்ச்சைக்குரியது என்றும் மற்ற இடங்களில் ஸ்ரீ ஆண்டாளை ஏற்றத்துடன் சொல்லியிருப்பதாகவும் வைரமுத்து ஆதரவாளர்கள் மீடியாவில் பேசுகிறார்கள்.
அவரது கட்டுரை ஆதாரமில்லாத கருத்துக்கள் கொண்ட சேதாரமாக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதே உண்மை.
குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் (திருப்பாவை 19) என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்துமீறலா? கன்னிகழியாத ஒரு பெண்ணின் பாலியல் விடுதலைக்கு எது அடிகோலியது என்று கேள்வி கேட்கிறார் வைரமுத்து.
உரைக்காரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டி தம் தீராப் புலமையின் திமிர் காட்டுவார்கள் என்கிறார் வைரமுத்து.
அதாவது தமிழரிஞர்களை அவர்களது தமிழ் புலமையை கொச்சைப்படுத்துகிறார்.
குத்துவிளக்கு என்பது குருஉபதேசம் கோட்டுக்கால் என்பது நான்கு புருஷார்த்தங்கள் மெத்தென்ற பஞ்சசயனமாவது தேவதிர்யக் மனுஷ்ய தாவர அப்ராண ரூபமான ஜீவர்கள்.
மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன் என்று பிரபந்த ரட்சையில் “வைணவாசாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும்” அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர, நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. இதற்கு நேர்பொருளே ஏற்புடையது என்கிறார் திரை இசை பாடலாசிரியர் வைரமுத்து.
வைணவ உரையாசிரியர்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஆழ்ந்த புலமை உள்ளவர்கள், அதனால்தான் அவர்களுக்கு உபய வேதாந்திகள் என்று பெயர். வடமொழி வேதத்தினையும் / தமிழ் வேதத்தினையும் தெளிவாகக் கற்றவர்கள்.
இன்னும் ஒருபடி மேலே சென்று வடமொழி வேதங்களில் தெளிவு ஏற்படாத இடங்களில் ஆழ்வார்களின் அருளிச்செயலைக் கொண்டே தெளிவு பெறவேண்டும் என்கிறார் வைணவ ஆச்சாரியர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
“பொய்கைமுனி பூத்தார் பேயாழ்வார் .... மங்கையர் கோவென்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்யத்தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித் தெளியாதமறை நிலங்கள் தெளிக்கின்றோமே” என்கிறது அதிகாரசங்கிரகம் (1)
இன்றைக்கு 750 வருடங்கள் முன் காஞ்சிக்கு அருகில் தூப்புல் ஸ்தலத்தில் அவதரித்த, ஸ்வாமிதேசிகன் தன்னை “தமிழ் வேதியன்” என்று தமது இலக்கியங்களில் பதிவு செய்துகொண்டவர்.
சரி வைஷ்ணவ உரையாசிரியர்கள் வியாக்கியானக்காரர்கள் பற்றி உண்மையான தமிழரிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா……
வித்துவான் தியாகராஜ செட்டியாரை தெரியுமா?
தமிழ் தாத்தா உவேசாவின் ஆசிரியர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களது தலைமாணாக்கர், நல்மாணாக்கர், குடந்தை கல்லூரியில் பணியாற்றிய நல்லாசிரியர்.
தமிழ் தாத்தா இவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். அதனால்தான் இவரது வரலாறு, தமிழ்தாத்தா உவேசாவால் கலைமகள் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, பின் உவேசா நூலகத்தின் மூலம் நூலாகியுள்ளது.
திரு. பட்டாபிராமபிள்ளை - சிரஸ்தாராகவும், டெப்டி கலக்டராகவும் இருந்தவர். தேவார திருவாசகங்களுக்கு உரை இல்லையே என்ற கவலைகொண்டவர். நாலாயிர திவ்யப்ரபந்தத்துக்கு பலவகையான உரைகள் இருப்பதை உணர்ந்தவர்.
சைவத்திருமுறைகளுக்கு தக்க பண்டிதர்களினைக் கொண்டு உரையெழுதி உலகுக்கு உபகாரம் செய்ய நினைத்தார்.
வித்வான் தியாகராஜ செட்டியார் திருவானைக்காவில் இருந்த காலத்தில் சைவத்திருமுறைகளுக்கு உரை செய்ய வேண்டி செட்டியாரிடம் பலமுறை வற்புறுத்தியவர்.
ஒரு முறை என்ன திருவாசகத்துக்கு உரை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? என்று பிள்ளை அவர்கள் செட்டியாரிடம் கேட்க ....
“இதோ பாருங்கள் இவ்வளவு நாளாக உங்களிடம் ஒன்றும் சொல்லவேண்டாம் என்று இருந்தேன். உங்களுக்கு திருவாசகத்தின் பெருமை கொஞ்சமாவது தோன்றவில்லை.
அதற்கு நானா உரை எழுதுவது? திருவாசகமெங்கே? நானெங்கே?அதற்கு உரை எழுதுவதற்கு என் படிப்பு எம்மாத்திரம்? வேதம்,ஆகமம், உபநிஷத், புராணங்கள், சாஸ்திரங்களெல்லாம் தெரிந்தாலல்லவா அதற்கு உரை எழுத முடியும்? மிகவும் சுலபமாக சொல்லிவிட்டீர்களே ?
பட்டாபிராமப்பிள்ளை: என்ன அப்படி சொல்லுகிறீர்கள் திவ்யப் பிரபந்தங்களுக்கு வியாக்கியான்கள் எழுதவில்லையா?
செட்டியார் : திவ்யப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்கள் பெருமை உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறதே. அவர்கள் வடமொழி தென்மொழி இரண்டிலும் தேர்ந்த புலமை உடையவர்கள். அவர்கள் வியாக்கியானத்தால் எவ்வளவு உயர்ந்த இரகசியங்கள் வெளிப்படுகின்றன!
திவ்யப்ரபந்தத்தால் வியாக்கியானங்களுக்கு பெருமையா?வியாக்கியானங்களால் அப்ப்ரபந்தங்களுக்கு பெருமையா? என்று எண்ணும் படியல்லவா அவை இருக்கின்றன?
உங்களுக்கு அப்படியே திவ்யப்ப்ரபந்த வியாக்கியான்களின் பெருமையும் தெரியவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இப்படி திவ்யப்ரபந்தம், அதன் வியாக்கியானங்களின் பெருமையை தேவார, திருவாசக பெருமையையும், உள்ளபடி சொன்னவர் செட்டியார். பல நூல்களை இயற்றியவர், பதிப்பும் செய்தவர்.
தமிழ் பாட நூலுக்கு தேர்வாகும் நூல்கள் இவரது அனுமதி பெற்றால்தான் தமிழக பள்ளிகள் ஏற்கும் என்கிற நிலை.
நூல் இயற்றுபவர்கள் செட்டியாரிடம் சிறப்புப் பாயிரம் கேட்டு தவம் கிடப்பார்கள். அந்த அளவு தமிழகம் மதிக்கும் தமிழ் அறிஞர்கள் மதிக்கும் புலமை பெற்றவர். குறையுள்ள நூல்களுக்கு எந்த தயவு தாட்சண்யம் இன்றி பிழையுள்ள நூல் என்று திருப்பி அனுப்பிய துணிவுடன் இருந்தவர்.
அதனையும் மீறி உங்கள் சிறப்புப் பாயிரம் வேண்டும் அதுவரை உங்கள் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருப்பேன் என்று பிடிவாதம் செய்ய, புலவர் வம்பு செய்ததற்காக “வெறுப்புப் பாயிரம்” பாடி அவரை சமாளித்தவர்.
இன்று செட்டியார் இருந்திருந்தால் வைரமுத்துவுக்கு வெறுப்புப் பாயிரம் பாடியிருப்பார்.
இதோ தமிழ் தாத்தா திவ்யப்பிரபந்த உரைகளைப்பற்றி சொல்வதைக் கேளுங்கள்..
காஞ்சி ஸ்வாமி உபன்யாசங்களுக்கு வருவது வாடிக்கையாக கொண்டிருந்த தமிழ் தாத்தா. கண்ணீர் மல்க கேட்பார். உபன்யாச முடிவில் பத்து நிமிடம் பேசுவார் தமிழ் தாத்தா.
ஒருமுறை “வைஷ்ணவர்கள் பெயருக்கு முன் உள்ள “உ.வே” என்பதற்கு பொருள் தெரியாமல் இருந்தது. “உபய வேதாந்த ப்ரவர்தகாச்சார்யர்” என்று பொருள் சொன்னார்கள்.
தமிழ் பிரபந்தத்தினை வேதாந்த நூலாக பொருள் கொள்கிறவர்கள் இருக்கிறார்களே என்று உள்ளம் பூரித்தேன்.
திவ்யப்ரபந்தங்களுக்கு வியாக்கியானம் அருளிச்செய்த ஆசாரியர்கள் போன்ற ஸர்வஜ்ஞர்கள் வேறு இல்லை என்று சபதம் செய்து சொல்லுவேன்.
இந்த தகவல் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார் ஸ்வாமி (காஞ்சி ஸ்வாமி) தனது சுயசரிதையான “தானே எழுதிய தன்சரிதை” மூன்றாம் பாகம் 222, 223 பக்கங்களில் உள்ளது. (ஆதாரம் இல்லாமல் கட்டுரை எழுத நாம் என்ன வைரமுத்துவா?).
இப்படி தமிழ் உலகம் போற்றி கொண்டாடிய தமிழறிஞர்கள் தமிழ் வேதமான திவ்யப்ரபந்தத்துக்கு உரை செய்தவர்களின் மொழிப் புலமையை மேதமையை, ஞானத்தினை சிறப்பிக்கிறார்கள்.
இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு சொல்லி மாளாது ஆனால் இந்த அறிஞர்கள் யாரும் வைரமுத்து போன்று “தமிழுக்கு நான் சோறு போடுகிறேன் என்று சொல்லிக்கொண்டதில்லை” . ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் என்னும் மொழி மீது அன்பு, காதல், பக்தி உண்டு. தமிழை தெய்வமாக நினைத்தவர்கள். வைரமுத்துவோ தெய்வம் இல்லை என்பவர்.
தமிழ் வேதத்துக்கு ஏற்றம் அளிக்கவேண்டித்தான் பெருமாள் திருவீதி புறப்பாட்டின் போது வடமொழி வேதம் ஒதுபவர்கள் பெருமாளுக்கு பின்னே வர, தமிழ் வேதமான ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தம் ஒதுபவர்கள் பெருமாளுக்கு முன்னே செல்கிறார்கள்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
என்று ஆண்டாளுக்கு வாழித்திருநாமம் பாடுவது தமிழ் மரபு.
அதாவது வேதத்துக்கே வித்து அதாவது விதை கோதையின் திருப்பாவையை போற்றுகிறார்கள்.
இப்படி உயர்வுகள் உள்ள ஸ்ரீ ஆண்டாளின் பெருமைகளை ஸ்ரீ ஆண்டாளின் தமிழை தவறாக அர்த்தம் செய்து காட்டி பேசுகிறார் வைரமுத்து.
தமிழ் தாத்தா, வித்துவான் தியாகராச செட்டியார் போன்றவர்களை விட வைரமுத்து சிறந்த தமிழ் அறிஞர் என்று எண்ணினால் அது தமிழுக்கு செய்யும் அவமானம் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.\
கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
வைரமுத்து தமிழின் பெருமையையோ தமிழரிஞர்கள் பெருமையையோ அறியாத மானிடர். தமிழில் இத்தனை அறிஞர்கள் எழுதி வைத்ததை மதிக்காது போவாரா? தமிழ் வேதத்தின் பொருளை அறியாதவர் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் பற்று பற்றி பேசுவது கேலிக்குறியது.