http://jayasreesaranathan.blogspot.in/2018/02/blog-post.html
தமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம்.
மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18 சறுக்கல்கள் என்று தலைப்பிட்டு விவரித்திருந்தோம்.
இவற்றின் தொடர்ச்சியாக ஆண்டாள் குறித்து வைரமுத்து, மற்றும் அவரது கட்டுரைக்குத் தோள் கொடுத்த நாலு பேர் சொன்ன அவதூறுகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் கொடுப்போம்.
நாலு பேரில் ஒருவர் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மேலும் அவர் தனது ஞானத்தைக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தெய்வம் நினைத்து விட்டது போலும். அவருக்கே நாலு பேர் வந்து விட்டார்கள்!
அவர் சொன்ன ஒரு கருத்து ராஜாஜியைப் பற்றியது. ராஜாஜி மஹாபாரதம் போன்றவற்றையெல்லாம் அறிந்தவர் என்ற பீடிகை கொடுத்து விட்டு, அவர் ஆண்டாளை பற்றி எழுதியதைச் சொல்கிறார். ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றும், அந்தப் பாடல்களை சிறு பெண்ணான ஆண்டாள் எழுதியிருக்க முடியாது என்றும், அதனால் அவற்றை அவள் பெயரில் பெரியாழ்வாரே எழுதியிருக்க வேண்டும் என்றும் ராஜாஜி 1946- இல் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார் என்கிறார். இந்த விவரத்தை, ஆண்டாளின் பாடல்களில் காம ரசம் சொட்டுகிறது என்று பலவிதமாக விவரித்த பிறகுஇவர் சொல்கிறார். இதனால் கேட்பவர்களுக்கு, இதன் காரணமாகவே அந்தப் பாடல்களை ஆண்டாள் எழுதியிருக்க முடியாது என்று ராஜாஜி கருதியிருக்கிறார் என்ற தோற்றம் எழுகிறது.
இதே கருத்தை, நாலு பேரில் மற்றொருவர் தொலைக்காட்சி நேர்க்காணலில், பாண்டே அவர்களிடம் அழுத்திச் சொன்னார். ராஜாஜி அவர்கள் அன்றைக்கே ஆண்டாளை பற்றி அப்படிச் சொன்னாரே, அவர் மீது கோபப்பட்டீர்களா, இன்று வைரமுத்துவின் மீது கோபப்படுகிறீர்களே என்று கேட்டார்.
ராஜாஜியை மேற்கோளிடும் இந்த இருவருமே ராஜாஜி அந்தக் கட்டுரையை எழுதியதாகச் சொல்லப்பட்ட வருடமான 1946- இல் பிறந்திருந்தவர்கள்தானா என்பது சந்தேகமே. நேரே பார்த்தது போலச் சொல்கிறார்களே, ராஜாஜி எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை வந்தது என்பதையும், அதை ராஜாஜி ஏற்றுக் கொண்டார் என்பதையும் ஏன் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்? தனக்கு ஆண்டாளை பற்றி அவ்வளவாகத் தெரியாது என்று ராஜாஜி ஒத்துக் கொண்டார் என்பதை ஏன் மறைத்தார்கள்?
மேலும் ராஜாஜி சொல்லியிருந்தால் அந்தக் கருத்து உண்மை என்றாகி விடுமா? பெரியாழ்வார் எழுதியிருப்பார் என்று சொல்வதன் மூலம், காம ரசம் சொட்டும் பாடல்களை பெரியாழ்வார் எப்படி எழுதியிருப்பார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? அவர் விட்டுசித்தர் (விஷ்ணு சித்தர்). விட்டுசித்தர் வாயில் காமப் பாடல்களா? இதையெல்லாம் யோசிக்காமல் அவரும் சொல்லியிருக்கிறார், இவர்களும் நியாயப்படுத்துகிறார்கள்.
ராஜாஜியின் ஆண்டாள் கட்டுரைக்கு மறுப்பு.
ராஜாஜியின் கட்டுரைக்கு 'பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்' (PBA ஸ்வாமி) என்னும் வாத, உபன்யாச சிரோன்மணி பதில் கொடுத்தார். அதைப் பற்றி “ஸ்ரீராமானுஜன்” என்னும் தனது மாதப் பத்திரிக்கையில் ஒரு அறிவிப்பும் செய்துள்ளார். 1956-ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அவரது மறுப்புக் கட்டுரையும் கிடைத்தால் நலம். இனியும் யாரும் ராஜாஜியின் பெயரைச் சொல்லிக் கொண்டு அன்றே அவர் ஆண்டாளை பற்றிச் சொல்லவில்லையா என்று கேட்க முடியாது.
PBA ஸ்வாமி அவர்கள் ராஜாஜிக்குக் கொடுத்த மறுப்புரை நமக்குக் கிட்டவில்லையென்றாலும், அவர் வேறொரு கட்டுரையில் கூறியுள்ளது வைரமுத்துவின் கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்கிறது. அதனைக் கீழே காண்க:
வைரமுத்து எழுதியது யார் யாரையெல்லாம் மயக்கியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விவேகிகளுக்குக் கண்டிப்பாக உகப்பாக இருக்கவில்லை.
PBA ஸ்வாமி வேறொரு கட்டுரையை விமரிசித்தபோது எழுதியது, வைரமுத்துவின் கட்டுரைக்கும் பொருத்தமாக இருக்கிறது. அவரது விமரிசனத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
PBA ஸ்வாமி அவர்கள் நையாண்டியாக எழுதிய இந்த விமரிசனத்தில் உள்ளது போலவே, ஆண்டாள் கதையை வைரமுத்து எங்கோ ஆரம்பித்து, எங்கேயோ கொண்டு போய் விட்டார்.
'ஆண்டாள் என்றொருத்தி இருந்தாள். அவள் பாவை நோன்பு செய்தாள். நோன்பு என்பது இறைவனுக்குச் செய்வது. அந்த இறைவனே கணவனாக வேண்டும் என்று நினைத்தாள். அந்தக் காலக்கட்டத்தில் இவன்தான் கணவன் என்று ஒருத்தி தானாகவே எப்படி முடிவு செய்வாள்? ஏனெனில் அவள் தகப்பனுக்குப் பிறந்தவள் இல்லை’ என்று பின்னிக் கொண்டுபோய்'கலாசார அதிர்ச்சி' ஏற்படுத்தக்கூடிய முடிவுக்கு வந்து விட்டார்.
அவருடைய கட்டுரையைத் தூக்க வந்த தூக்குத் தூக்கியோ ஒரு படி மேலே போய், ஆண்டாள் ஒரு தொட்டில் குழந்தைக்குச் சமம் என்று ஆரம்பித்து, வைரமுத்துவின் 'கலாசார அதிர்ச்சி' முடிவுக்குப் பக்க வாத்தியம் ஊதினார். அவள் பாடலில் அடிக்கடி வருவது முலைகள் என்னும் சொல் என்னும் கண்டுபிடிப்பைக் கொடுத்து, காமவேட்கையும், புணர்ச்சியுமே அவள் பாடல்களில் அதிகம் இருக்கின்றன என்றும் தூற்றினார்.
மேலும், மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு, திருப்பாவை பற்றி அதிகம் பேசும் மக்கள் கூட, நாச்சியார் திருமொழி பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஏனென்றால் நாச்சியார் திருமொழி முழுக்க முழுக்க காம ரசம் ததும்பும் படைப்பாக இருக்கிறது என்கிறார்.
இப்படிச் சொல்லும் இந்த ஞானவானுக்குத் தெரியவில்லை - நாச்சியார் திருமொழியின் பல பாடல்களைத் தினந்தோறும் காலையில் சென்னை வானொலி நிலையம் ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. பிரபல பாடகியான திருமதி மணி கிருஷ்ணஸ்வாமி உட்பட பலரும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை 25 வருடங்களுக்கு முன்னால், வானொலியில் கேட்டு கற்றுக் கொண்ட பலரில் நானும் ஒருத்தி. அவற்றுள் 'கருப்பூரம் நாறுமோ'பாடல் உட்பட நாச்சியார் திருமொழியின் பல பாசுரங்களும் அடக்கம்.
நாச்சியார் திருமொழியின் கனவு நிலைப் பாடலான 'வாரணமாயிரம்' இன்றும் திருமணங்களில் பாடப்படுகிறது. பெருமாள் கல்யாண உத்சவத்திலும், தேங்காய் உருட்டும் போது பாடப்படுகிறது. சமீபத்தில் அயோத்தியில் நடந்த சீதா கல்யாண உத்சவத்தில் தென் திருப்பேரை அரவிந்த லோசன ஸ்வாமி அவர்கள் அதைப் பாடக் கேட்ட நான், ஆணாகப் பிறக்கவில்லையே என்று முதன் முறையாக என் வாழ்க்கையில் நினைத்தேன். ஆண் குரலின் கம்பீரத்தில், பிரபந்த வேதத்துக்கான சந்த ஓசையுடன் அந்தப் பாடல் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடப்படுவதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அந்தக் கொடுப்பினை இல்லாத ஞான சூன்யங்கள் காமத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும், மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு, திருப்பாவை பற்றி அதிகம் பேசும் மக்கள் கூட, நாச்சியார் திருமொழி பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஏனென்றால் நாச்சியார் திருமொழி முழுக்க முழுக்க காம ரசம் ததும்பும் படைப்பாக இருக்கிறது என்கிறார்.
இப்படிச் சொல்லும் இந்த ஞானவானுக்குத் தெரியவில்லை - நாச்சியார் திருமொழியின் பல பாடல்களைத் தினந்தோறும் காலையில் சென்னை வானொலி நிலையம் ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. பிரபல பாடகியான திருமதி மணி கிருஷ்ணஸ்வாமி உட்பட பலரும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை 25 வருடங்களுக்கு முன்னால், வானொலியில் கேட்டு கற்றுக் கொண்ட பலரில் நானும் ஒருத்தி. அவற்றுள் 'கருப்பூரம் நாறுமோ'பாடல் உட்பட நாச்சியார் திருமொழியின் பல பாசுரங்களும் அடக்கம்.
நாச்சியார் திருமொழியின் கனவு நிலைப் பாடலான 'வாரணமாயிரம்' இன்றும் திருமணங்களில் பாடப்படுகிறது. பெருமாள் கல்யாண உத்சவத்திலும், தேங்காய் உருட்டும் போது பாடப்படுகிறது. சமீபத்தில் அயோத்தியில் நடந்த சீதா கல்யாண உத்சவத்தில் தென் திருப்பேரை அரவிந்த லோசன ஸ்வாமி அவர்கள் அதைப் பாடக் கேட்ட நான், ஆணாகப் பிறக்கவில்லையே என்று முதன் முறையாக என் வாழ்க்கையில் நினைத்தேன். ஆண் குரலின் கம்பீரத்தில், பிரபந்த வேதத்துக்கான சந்த ஓசையுடன் அந்தப் பாடல் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடப்படுவதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அந்தக் கொடுப்பினை இல்லாத ஞான சூன்யங்கள் காமத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள்.
நாச்சியார் திருமொழி காம ரசம் ததும்பும் படைப்பாக இருக்கிறது என்றும் ஒரு பெண் எப்படியெல்லாம் தன் காம வேட்கையைச் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் ஆண்டாள் சொல்லியிருக்கிறாள் என்றும் அந்தத் தூக்குத் தூக்கி சொல்லியுள்ளார். மேலும் அவர்தான் வரவில்லை. அவர் உடையையாவது எனக்கு அனுப்பக்கூடாதா என்று சொல்லும்போது - மேலாடை வேண்டாம், கீழாடை தான் வேண்டும் அதுதான் அவருடைய உடல் வாசனையை எனக்கு கொடுக்கும் என்று ஆண்டாள் கூறுகிறாள் என்றும் சொல்கிறார்.
ஆண்டாள் அப்படித்தான் கூறினாளா? அந்தப் பாடலில் 'புண்ணில் புளிப் பெய்தாற் போல' என்று ஆண்டாள் சொல்கிறாள். இவர்கள் சொல்லும் தூஷணையும் புண்ணில் புளிப் பெய்தாற் போல இருக்கிறது.
மேலும் அவள் யாரைப் பற்றிப் பாடியிருக்கிறாள்?
யார் அந்த ‘அவர்’?
அந்த ‘அவர்’ என்பது தெய்வம். கண்ணனென்னும் கருந்தெய்வம். அதன் மேலுள்ள தன் காதலை ஆண்டாள் வெளிப்படுத்தியமைக்கு இவர்கள் பேசும் பேச்சு இது.
ஆண்டாள் என்ன எழுதியிருக்கிறாள்?
ஆண்டாள் சொன்னதை எதற்காக இந்தத் தூக்குத் தூக்கி திரித்துச் சொல்லுகிறார்?
உண்மையில் ஆண்டாள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்வோம்.கண்ணனென்னும் கருந்தெய்வம் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டி ஆண்டாள் வேண்டி நிற்கிறாள். அவள் வேண்டுதலுக்கு இன்னும் அந்தத் தெய்வம் செவி சாய்க்கவில்லை. அவ்வாறிருக்க அவளை சுற்றியுள்ளோர் அவனது புற அழகைப் பேசுகையில், அவளது வருத்தமும், வாட்டமும், அவலமும் அதிகரிக்கிறது. அச்சுதன் அணியும் பொருட்களைக் கொண்டு தன் அவலத்தைத் தணியுங்கள் என்று கூறுவதே அந்தப் பத்துப் பாடல்கள்.
அவளது "வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு, என்னை வாட்டம் தணிய வீசீரே' என்று கூறுகிறாள் (நாச். திரு. 13-1). அவன் அரையாடையைக் கொண்டு தனக்கு விசிறி வீசச் சொல்கிறாளே தவிர, மேலாடை வேண்டாம், கீழாடைதான் வேண்டும், அதுதான் அவரது உடல் வாசனையைக் கொடுக்கும் என்று இந்த ஞானவான் சொல்வது போல ஆண்டாள் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்ன வாய்க்கு வாய்க்கரிசி வந்து விட்டது.
அது என்ன அரையாடை?
இதே அரையாடையைத் திருப்பாணாழ்வாரும் உகந்து பாடியிருக்கிறார். ஆண்டாளின் மணாளனான அரங்கன் அழகை, திருப்பாதம் முதல் கேசம் வரை விவரிக்கையில், 'அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே' என்கிறாரே, பெருமாளின் கீழாடையின் மேல் என் சிந்தனை செல்கிறது என்றா இதனைப் பொருள் கொள்ள வேண்டும்?
அதே பதிகத்தில், அந்தத் தெய்வம் தன்னைத் 'தன் வாரமாக்கி வைத்தான், வைத்ததன்றி என்னுள் புகுந்தான்' என்றும் திருப்பாணாழவார் சொல்கிறாரே, அதை இந்தத் தூக்குத் தூக்கிகள், புணர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார் என்று கூட வியாக்கியானம் செய்வார்கள். நல்ல வேளை, அவர் ஆணாகப் பிறந்து விட்டார். இப்படிப்பட்ட அபவாதப் பேச்சுகளிலிருந்து தப்பி விட்டார்.
இதெல்லாம் என்ன பேச்சு?