New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
Permalink  
 


சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

முனைவர் மு. பழனியப்பன்

 

முனைவர் மு.பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத் தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை

 

சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பு, அறிவு போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளங்கள் பொதிந்து கிடக்கின்றன. தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர் நாகரீகமும் கலந்துப் படைக்கப் பெற்ற இலக்கியங்களாகக் கடைச்சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’  என்ற தொல்காப்பிய நூற்பா ஆரிய, திராவிட கலப்பிற்கான சூழல் தொல்காப்பிய காலத்திலேயே நிலவியிருந்தது என்பதை மெய்ப்பிக்கும்.

‘தமிழ்மொழி ஆரியர் வருகைக்கு முன்னரே நல்ல வளம் பெற்றிருந்தது… வடபுல ஆரியர், சங்ககால  இறுதியினின்று ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தமிழகம் வந்தனர்போல் தெரிகிறது’  என்ற கருத்தும் ஆரிய திராவிடக் கலப்பின் காலச்சூழலை உணர்த்துவதாக உள்ளது.  சங்க இலக்கியங்களில் ஆரியர் தாக்கம் காரணமாக வேத சார்பும், தமிழர் தாக்கம் காரணமாக தமிழ் மரபு சார்ந்த செய்திகளும் இடம்பெற்றிருந்தன.

வேதம், புராணம் சார்பான அறிவுக்கு ஒவ்வாத செய்திகளை விலக்கிய சங்க இலக்கியப் பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காணமுடிகின்றது. குறிப்பாக சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு கடவுள் வாழ்த்து பாடிய முறைமை ஆரியச்சார்பு உடைய செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பிற்காலத்தில் பாடப்பெற்றன, தொகுக்கப்படும் காலத்தில் பாடப்பெற்றன என்பதை எண்ணுகையில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்படும் காலத்தினில் ஆரியச்சார்பு தலைதூக்கி நின்றது என்பதை உணரஇயலும்.

பகுத்தறிவுச் சிந்தனைகள் என்பது தமிழகத்தில் தந்தைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி காலத்தில் இருந்துத் தொடங்கியது என்றாலும் சங்ககால அளவிலேயே உலகாய்தம் என்ற கொள்கையாக அது நிலவிவந்தது. அவ்வுலகாய்தக் கொள்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வடிவமே பெரியாரின் பகுத்தறிவுவாதம் ஆகும். பகுத்தறிவுவாதத்துடன் பொருள்முதல்வாத சிந்தனைகளும் ஒன்றுகூட அது மிகப்பெரிய ஆளுமையாக பகுத்தறிவு வாத இயக்கமாக உருப்பெற்றது.

பகுத்தறிவுவாதம் –அறிமுகம்

தந்தைப் பெரியார் தோற்றுவித்தது பகுத்தறிவுவாதம் ஆகும். பகுத்தறிவு என்பதற்குப்  ‘பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான்பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்’ என்று பகுத்தறிவிற்கு விளக்கம் தருகின்றார் பெரியார்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அவற்றோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

 

என்ற தொல்காப்பிய மரபியல் நூற்பா பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படை உணர்த்துவதாகும். தொடு உணர்வு, நாக்கு, மூக்கு, கண், செவி, மனம்  என்ற ஆறினால் அறியப்படும் அறிவே பகுத்தறிவு என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இவ்வறிவுகளைச் சரியாகப் பயன்படுத்த பகுத்தறிவுவாதம் தூண்டுகோலாக அமைகின்றது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும்  பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கான காரணத்தைப் பின்வருமாறு பெரியார் குடியரசு இதழில் எழுதியுள்ளார். ‘சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின்பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலில்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன்மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடிய இயக்கமாகும். இதன் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைபட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம் ‘  இவ்வாறு தமிழருக்கு தன்மானத்தை உண்டாக்கும் இயக்கமாக பெரியாரால் தோற்றுவிக்கப் பெற்ற இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும். இதன்பின் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பெரியார் 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். எவ்வமைப்பு ஏற்படுத்தினாலும் தமிழர் அறிவை முன்னிறுத்தும் போக்கிற்குப் பெரியார் முன்னுரிமை அளித்தார். இத்திராவிடர் கழக அமைப்பே திராவிடச் சிந்தனைகள், திராவிடக் கட்சிகள் வேரூன்றக் காணரமாகியது.

சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தபோது அங்குப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இவையே மூடநம்பிக்கையில் கட்டுண்டு கிடந்த தமிழ்ச்சமுதாயத்தைப் புரட்டிப்போடும் நோக்கத்தை நிறைவேற்றின.

.1. மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.

2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.

3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.

4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெருவு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.

5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது,

6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது,

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும், மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின் றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ள லாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.

12.“தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதவர்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது; தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந் தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்

இப்பதினைந்து முன்மொழிவுகள் தமிழ்ச்சமுதாயத்தின் போக்கை, இலக்கியச் செல்நெறியை அறிவு நெறிக்குக் கொண்டு சென்றன என்பது தற்காலத்தில் நிகழ்ந்த மிகச் சிறந்த மாற்றம் ஆகும்.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
Permalink  
 


பகுத்தறிவும், உலகாய்தமும், புத்தரின் சமூகக்கோட்பாடும், மெட்டீரியலிசமும்

“உலகாய்தர்களின் அய்ம்பூதக் கோட்பாடும் புத்தரின் சமுகக் கோட்பாடும் இணைந்து பெற்ற புதுவடிவமே பெரியாரின் மெய்யியல்”   என்கிறார் க. நெடுஞ்செழியன் ‘புத்தர், வள்ளுவர் ஆகிய இருவருக்கும் பிறகு திராவிடர் கழகத்தாராகிய நாங்கள்தாம்  சாதி, கடவுள், மூடநம்பிக்கைகள் இவற்றை எதிர்த்து வருகிறோம்’  என்பது பெரியாரின் செயற்பாடு ஆகும்.  “பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம்“ என்ற நூலைப் பெரியார் பகுத்தறிவுவாதத்தின் அடிப்படையிலே எழுதுகின்றார்.மேற்காட்டிய முக்கொள்கையின் செயல்வடிவம் பகுத்தறிவுவாதம் ஆகும்.

பகுத்தறிவு வாதம் என்பது சுயஅறிவு சார்ந்து இயங்குவது.  மக்கள் அனைவரும் ஒரே நிலையினர், அவர்களுக்குள் ஏற்ற இறக்கம் இல்லை, சாதி, தொழில் போன்றவற்றால் மக்களுக்குள் ஏற்படும் வேறுபாடுகளைக் களையவேண்டும் என்ற நோக்கில் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படு;த்திய கொள்;கை முழக்கம் மற்றும் செயல்தத்துவம் பகுத்தறிவுவாதம் ஆகும். இவ்வாதத்தின் அடிப்படையில் சங்க இலக்கியப்பகுதிகளை ஆராய்கின்றபோது தமிழரின் தன்மான உணர்வு அவனின் இயற்கைப் பண்பு என்பது தெரியவருகின்றது. மேலும் தனிமனித மாண்புகளும், பகுத்தறிவுவாதச் சிந்தனைகளும் தௌ;ளத் தெளிவாக உணரத்தக்கனவாக உள்ளன.

சங்க இலக்கியங்களில் கடவுள் சாராத, அந்தணர் இயல்பு சாராத பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளை இனம் காண முடிகின்றது. கபிலர் போன்ற அந்தண மரபினர் படைத்த கவிதைகளை இந்நோக்கில் காணுகையில் தள்ளிவிட வேண்டியுள்ளது. மேலும் பரிபாடலில் வரும் திருமால், செவ்வேள் சார்ந்த பாடல்கள், பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம்பெறும் திருமுருகாற்றுப்படை முதலியன பகுத்தறிவு நோக்கில் தள்ளிவைக்கப்பட வேண்டியனவாகும்.

தன்மதிப்பு மிக்க சங்கக் கவிதைகள்

சங்கஇலக்கியங்களில் தன்மதிப்பை நிறுவும் பற்பல கவிதைகள் படைக்கப் பெற்றுள்ளன. சங்கத் தமிழ்ப்புலவர்கள் தன்மானம் மிக்கவர்களாக விளங்கியுள்ளனர்.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் புலவர்க்கு உரிய பரிசுகளைத் தராமல் காலத்தை நீட்டியபோது ஒளவையார் பின்வரும் செய்யுளைப் பாடுகின்றார்.

‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்

காவினம் கலனே; சுருக்கினெம் கலப்பை

மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’  (புறநானூறு பாடல்எண். 206)

மரவேலைப்பாடு தெரிந்த தச்சன் ஒருவன் எந்தக் காட்டுக்குச் சென்றாலும் தன் தொழிலை அவனால் வெற்றியாகச் செய்ய இயலும். அதுபோல மன்னனே! நீ பரிசு தர மறுத்தாலும் காலம் நீட்டினாலும் அறிவும் புகழும் உடைய புலவர்களாகிய நாங்கள் எத்திசை சென்றாலும் அத்திசையில் எமக்கு உணவு கிடைக்கும் என்று தன்மான உணர்வுடன் கவிதை படைத்துள்ளார் ஒளவையார்.

இதேபோன்று ‘காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிசிலேன் அல்லேன்’ (புறநானூறு. பாடல்எண்- 208) என்றுப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் தன்மானத்துடன் மன்னன் புலவர்களைக் காணாது வழங்கும் தன்மையைக் குற்றமாகக் சுட்டிப்பாடுகின்றார். மூவன் என்னும் அ;ரசன் பரிசு தரமால் நின்றபோது ‘நின் நசை தரவந்து நின் இசை நுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லன், நோய்இலை ஆகுமதி ‘ (புறநானூறு பாடல் எண்.209) என்றுப் பாடுகின்றார். அரசனே நீ பரிசு தராவிட்டாலும் பரவாயில்லை நீ நோயில்லாமல் வாழ்க என்று வாழ்த்தும் நெஞ்சம் தமிழ் நெஞ்சமாகும். பெருங்குன்றூர்க் கிழார் என்ற புலவரும் சேரமன்னன் பரிசு கொடுக்காது காலம்கடத்தியபோது ‘நாணாய் ஆயினும் நாணக் கூறி என் நுணங்கு செந்நா அணங்க ஏத்தி பாடப் பாடப் பாடு புகழ் கொண்ட நின் ஆடுகொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வல்’ (புறநானூறு, பாடல்எண். 211) என்று அவனைப் புகழ்ந்தே பாடுகின்றார்.

மேற்காட்டிய அத்தனைப் பாடல்களும் ஒரே வரிசையில் புறுநானூற்றில் தொகுக்கப் பெற்றுள்ளன. இத்தொகுப்புமுறையின் அடிப்படையில் தமிழ்ப்புலவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பது சங்ககாலப் பாடல்களைத தொகுக்கப் பெற்ற காலத்திலேயே  உணரப் பெற்றுள்ளமை தெரியவருகிறது. அதனை இக்காலத்தில் மீட்டெடுப்பது என்பது பகுத்தறிவுவாதத்தினால் வந்த எழுச்சியாகும்.

சங்ககால ஆட்சியாளர்களான மன்னர்களும் தன்மானத்தின் அடையாளங்களாகத் திகழ்ந்துள்ளனர். சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னன் பாடிய பாடல் ஒன்று தன்மானத்தின் சிறப்பைப் பதிவு செய்துள்ளது.

‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள்அன்று என்று வாளின் தப்பார்

தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள்அல் கேளீர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் உலகத் தானே (புறநானூறு பாடல்எண். 74)

சங்கிலியால் பிணக்கப்பட்ட  நாய்போல் சிறையில் கட்டுண்டு கிடக்கின்றபோது வயிற்றுப்பசி தணிவதற்காகப் பிச்சையெடுத்து உண்ணும் நிலையை அரசக்குடியினர் பெறமாட்டார்கள்   என்ற கருத்து மேற்பாடலின் வழியாக விளங்குகின்றது.

இவ்வகையில் தன்மானம் மிக்க சமுதாயமாக சங்ககாலச்சமுதாயம் திகழ்ந்திருக்கிறது என்பதை உணரமுடிகின்றது. இத்தன்மானம் மிக்கத் தமிழ்ச்சமுதாயத்தின் சிறப்பை இன்று மீட்டெடுக்கப் பகுத்தறிவு வாதம் முன்னிற்கிறது.

சாதி வேறுபாடற்ற சமுதாயம்

மக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரே சமநிலையினர். சாதியால், செல்வத்தால், அதிகாரத்தால் மேம்பட்டவர்கள் எவரும் இல்லை என்ற அடிப்படைக் கருத்து பெரியார் உணர்த்திய பகுத்தறிவு கருத்தாகும். இக்கருத்தின் முன்னோடி இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது.

“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடை சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குறவர், குறத்தியர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகன், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், கடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவணர், யாழ்ப் புலவர், யானைப்பாகர், யானை வேட்டுவர், வட வடுகர், வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்” போன்ற பல தொழில் பிரிவினர் சங்க காலத்தில் இருந்ததாக உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார். இருப்பினும் இத்தொழில்பிரிவினர்களையும் சமத்தன்மை உடையவராகக் கருதும் எண்ணமும்  சங்கப்பாடல்களில் இருந்துள்ளன.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே மின்னொடு

வானம் தன்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆர்உயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இ;லமே (புறநானூறு பாடல்எண். 192)

என்ற பாடலில் பெரியவர் சிறியவர் என்று எவரையும் ஏற்றுதலும், தாழ்த்துதலும் இல்லை என்ற சமத்தன்மை குறிக்கப் பெற்றுள்ளது.

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்

உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே

பிறவு மெல்லா மோரொக் கும்மே

செல்வத்துப் பயனே யீதல்

துய்ப்பே மெனினே தப்புந பலவே.    (புறநானூறு பாடல் எண்189)

அரசன் என்றாலும் வேடன் என்றாலும் இருவருக்கும் உண்பது -நாழி அளவு உணவு, உடுப்பவை – இரண்டு பகுதி ஆடைகள். மற்றவை எல்லாம் ஒன்றே – என்று சமத்துவ கீதத்தை இப்பாடல் பாடுகின்றது. சங்ககால இலக்கியத்தில் சுட்டப் பெற்ற உண்பதும், உடுப்பதும் என்ற இரண்டின் அளவும், இரண்டின் தன்மையும் இக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.

சங்க அகப்பாடல்களில் தலைவனும் தலைவியும் காதல் கொள்ளுகையில் எவ்வித சாதிப் பாகுப்பாடும் இடையீடு செய்யவில்லை. தலைவனோ, தலைவியோ, தோழியோ மற்ற எப்பாத்திரமோ சாதி அடிப்படையில் காதல் கொள்ளவேண்டும் என்பதை எடு;த்துரைக்கவில்லை. களவு வழி வாராக் கற்பிலும் இது பார்க்கப்படவில்லை என்பதை எண்ணுகையில் சங்கச் சமுதாயம் சாதி வேறுபாடற்ற சமுதாயமாக இருந்தது என்பதை அறியமுடிகின்றது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந்தொகை பாடல் எண் 40)

இவ்வகையில் சமத்துவ சமுதாயத்தின் அடிப்படைக் கூறுகள் பல சங்கச்சமுதாயத்தில் இருந்துள்ளன என்பது பகுத்தறிவின் அடிப்படையில் எண்ணத்தக்கதாகும்.

வேதமரபு என்பது அறிவிற்கு இடம் கொடாது புராணக் கற்பனைக் கட்டுக்கதைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. பகுத்தறிவுவாதி என்பவன் எதனையும் அறிவின் வயப்பட்டுச் சிந்திப்பவன் ஆவான். ‘பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.’ என்று பகுத்தறிவு, பகுத்தறிவாளன் பற்றிய கருத்துகளைப் பெரியார் எடுத்துரைக்கின்றார்.

வேதமரபுகளை மறுக்கும் சங்கப்பாடல்கள் உள்ளன. பின்வரும் பாடல் அதற்கு ஒரு சான்று

‘ நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,

ஆறு உணர்ந்த ஒரு முது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக! (புறம் 166)

இப்பாடலைப் பொருள் உணர்ந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. இப்பாடல் வேத மரபை ஏற்றி உரைப்பதுபோன்று தோன்றிலும் அதன் பொய்த்தன்மையை வெளிப்படுத்தி நிற்கும் பாடலாகும்.

சிவபெருமானின் வாய்விட்டு நீங்காத ஆறு அங்கங்களை உடைய வேதங்களின் பொய்யை உணர்ந்து மெய் சொன்னவன கௌணியன் விண்ணந்தாயன் என்னும் பார்ப்பான் ஆவான். இவன் வேதநெறியின் பொய்ம்மையை எடுத்துரைத்து மெய்யான தமிழ்நெறியை ஏற்றவன் என்று இப்பாடல் பொருள் தருகிறது. வேதமரபிற்கு எதிர் நிலையில் அமைந்த பாடல் இது என்பது கருதத்தக்கது.

பரிபாடலில் உள்ள செவ்வேள் பற்றிய பாடல் ஒன்றில் வேத மரபு மறுக்கப் பெற்றுள்ளது.

‘ நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;

காதற் காமம், காமத்துச் சிறந்தது;

விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:

புலத்தலின் சிறந்தது, கற்பே அது தான்

இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்

பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,

தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற

நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; 20

 

கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;

சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.

அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்

இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்

தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்

(பரிபாடல் பாடல்எண்.9 (12-26)

என்று தமிழின் சிறப்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

நான்குமறை வல்லவர்களே! களவு, கற்பு போன்ற அகம் சார்ந்த இலக்கண, இலக்கிய, வாழ்வியல் கூறுகளைப் பெற்றது தமிழ் என்று அதன் பெருமையை எடுத்துரைக்கின்றார் குன்றம்ப+தனார் என்ற புலவர்.

வேதநெறி சார்ந்து இயங்கும் பார்ப்பனர்களை விமர்சிக்கும் சில பாடல்களும் சங்க இலக்கியங்களில்உண்டு.

‘அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகன் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலைநாடன் ஊர்ந்த மாவே (ஐங்குறுநூறு பாடல் எண். 202)

என்ற பாடல் அந்தணச்சிறுவனின் குடுமியைப்போல குதிரையின் முடியும் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பது அந்தணர்களுக்கு சங்கச் சமுதாயத்தில் தரப் பெற்றிருந்த இடத்தை உணர்த்தும்.

சங்க காலத்தில வேத மரபு கலந்திருந்தாலும் பல்யாகங்களைச் செய்யச் சொல்லிப் புலவர்களே அரசர்களை வற்புறுத்தி இருந்தாலும் இவற்றுக்கு ஈடாக தமிழர் கொள்கையும் நடைபெற்றுவந்துள்ளது.

‘’உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும் இனிது

எனத் தமியர் உண்டலும் இலரே

முனிவு இலர் துஞ்சலும் இலர்

பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகொடு பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே’ (புறநானூறு பாடல் எண். 182)

என்ற இப்பாடலில் இந்திரர் என்ற ஆரியர் கருதும் புராணச் செய்தி இடம் பெற்றிருந்தாலும் தனியாக உண்ணாத தமிழ் மரபு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இந்த உலகம் தனக்கென வாழாத தகைமையாளர்களால் இன்னும் இருப்பதாக உள்ளது என்ற கொள்கை தமிழரின் கொள்கை எனக் கொள்வது இங்குப் பொருந்துவதாகும்.

இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்த பாடலாகும். பொதுவியல் திணை சார்ந்த பாடல்கள் பகுத்தறிவு வாதத்திற்கு உரமூட்டுகின்ற பாடல்கள் ஆகும். இவற்றில் வேதக்கலப்பு இல்லை. எனவே இவற்றை ஆய்வுலகம் தனியாக ஆய்வதன் வழியாக தனித்த தமிழர் இயல்பை அறிந்து கொள்ள இயலும்.

கடவுள் மறுப்பு

கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவுவாதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். கருத்து முதல் வாதமாக விளங்கும் கடவுள் கொள்கையை மறுப்பது என்பதன் வழியாக சமுதாய முரண்கள் அழிந்துபோகும்; பேய், மந்திரம், மூடப் பழக்க வழக்கங்கள் முதலானவை தமிழ்ச்சமுதாயத்தை விட்டு நீங்கவேண்டும் என்று பகுத்தறிவுவாதம் விழைகின்றது. அகப்பாடல்களில் தெய்வம் என்பது ஒரு கருப்பொருளாகக் கொள்ளப் படுகின்றது. மேலும் பரிபாடல் போன்றவற்றில் இறைவாழ்த்துப் பாடல்கள் உள்ளன. இவை ஆரியர் வருகையால் ஏற்பட்ட தெய்வச் சிந்தனைகள் என்று பகுத்தறிவு வாத அடிப்படையில் ஒதுக்கித்தள்ள வேண்டியிருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் காட்டும் செலவில்லா திருமண நடைமுறை, பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி போன்றன சங்கச் சமுதாயத்தில் இருந்துள்ளன. சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் ஆடம்பரங்கள் அற்றதாக இருந்துள்ளன. இதற்கு அகநானூற்றில் இடம்பெறும் திருமணம் சார்ந்த பாடல்கள் சான்றுகளாக உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் சங்க காலத்தில் பாடல்கள் புனைந்துள்ளனர். இதன் காரணமாக பெண்கல்வியில் முன்னேற்றமிக்க காலமாக சங்க காலம் இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

இவ்வகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் பல அடங்கிய தொகுப்பாக சங்க இலக்கியப் பாடல்கள் விளங்குகி;ன்றன. சங்க காலத்தில் தொடங்கிய வேதக்கலப்பு இன்றைக்கும் தொடர்ந்து செல்லும் வல்லமையைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் எழுந்துள்ள வேறுபாடுகள் நீங்கவேண்டுமானல் தனித்தமிழ் மரபு போற்றப்படவேண்டும். அதனை வளர்த்து எடுப்பது பகுத்தறிவாதிகளின் கடமையாகின்றது.

 

 

முடிவுகள்

பகுத்தறிவு வாதம் என்பது அறிவின் வயப்பட்டு அமைவதாகும். கருத்துகளைப் பிறர் சொல்லியது என்பதற்காகவோ, நூலுள் சொல்லப்பட்டது என்பதற்காகவோ எவற்றையும் ஏற்றுக் கொள்ளாமல் தானே தன் அறிவு, மற்றும் புலன்கள் வழியாக அறிந்து ஏற்கும் நடைமுறை பகுத்தறிவு சார்ந்த நடைமுறையாகும்.

தந்தைப் பெரியார் பகுத்தறிவுவாதத்தின் தோற்றுநராக அமைந்தாலும் உலகாய்தம், பொருள்முதல்வாதம் போன்றன அவரின் கருத்துகளுக்கு வழிகோலின.

சாதி, சமய பாகுபாடற்ற சமநிலை சமுதாயத்தை உருவாக்க பகுத்தறிவுவாதம் பாடுபடுகின்றது. இந்த நிலையை எட்ட சங்க இலக்கியங்களும் முயன்றுள்ளன.

தன்மானம் என்ற தனித்த குணம் தமிழரின் குணம் ஆகும். இக்குணத்தை நிலைநிறுத்த சங்கப் புலவர்களும், புரவலர்களும் முன்வந்துள்ளனர்.

சமத்துவ சமுதாயத்தைப் படைக்கச் சங்க இலக்கியச் செய்யுள்கள் அடிகோலியுள்ளன.

வரணாசிரமக் கொள்கை கலந்து சங்க இலக்கியம் காணப்பெற்றாலும் சாதியால் உயர்வு பெற்ற சமுதாயத்தாரை அவ்வுயர்வில் வைத்துச் சங்கத்தமிழ் மக்கள் பாராட்டவில்லை.

ஆரியக் கலப்பு இருப்பினும் அதனைத் தாண்டி அவ்வப்போது தமிழ்ப்பண்பாடு தலைகாட்டியுள்ளது.

தமிழ் மொழியின் முந்தை இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் பகுத்தறிவு வாதத்திற்குக் களம் தருவனவாக அமைகின்றன.

அடிக்குறிப்புகள்

 

1.  தொல்காப்பியம், பொருளதிகாரம், நூற்பா. எண.;147

2. மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், ப. 15

3.பெரியார், குடியரசு இதழ், ஆகஸ்டு, 1929

4. க. நெடுஞ்செழியன், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், ப.422

5. ஆனைமுத்து, (தொ.ஆ)பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், தொகுதி.1. ப. 321



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard