New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளங்கோவடிகள்: தமிழைத் துறக்காத துறவி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இளங்கோவடிகள்: தமிழைத் துறக்காத துறவி
Permalink  
 


இளங்கோவடிகள்: தமிழைத் துறக்காத துறவி 

By கவிஞர் வைரமுத்து  |   Published on : 10th July 2017 10:54 

சிலப்பதிகாரம் என்ற கலைக்காப்பியம் மெய்யா? புனைவா? மெய்யுறு புனைவா? எவ்வாறாயினும் ஆகுக.

சிலப்பதிகாரத்தின் காலம் எது?

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய குட்டுவனே, சேரன் செங்குட்டுவன் என்று கொண்டு புலவர் பலர் ஆய்ந்து அறுதியிடுவதுபோல, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியா? அல்லது சமய ஊட்டம் - விழுமிய மாற்றம் - மொழியின் நெகிழ்ச்சி - நாகரிக நீட்சி முதலியவைகளை முன்வைத்து சாமிக்கண்ணுப் பிள்ளையும், வையாபுரிப் பிள்ளையும் ஓங்கி உறுதியிடுவதுபோல் கி.பி. 8ஆம் நூற்றாண்டா? எக்காலமாயினும் ஆகுக.
மூன்று காண்டங்களில் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகள் இயற்றியதா? அல்லது காலநீரோட்டத்தின் கடைச் செருகலா? எம்முடிவாயினும் ஆகுக.

கதைப்போக்கில் கலந்தோடிவரும் இயற்கை இறந்த நிகழ்வுகள் ஆரியக்கலப்பின் நீட்சியா? அல்லது காப்பியக் கலையின் மாட்சியா? எவ்வண்ணமாயினும் ஆகுக.


ஒன்று மட்டும் உறுதி: சிலப்பதிகாரம் இல்லையாயின் திராவிடப் பெருஞ்சமுதாயத்தின் பெருமைகூறும் தொல்லெச்சங்கள் இல்லை. ரோமானிய -  கிரேக்க - எகிப்திய - சீன நாகரிகங்களோடு ஒப்பிட்டுத் தமிழர் நாகரிகத்தைத் தூக்கி நிறுத்தும் தொன்மங்களில்லை. வாழ்வியல் - நிலவியல் -  கலைமரபு - காலத் தொடர்பு -  பண்பாட்டு அசைவுகள் - நீதியாடல் - மனையியல் - மனவியல் போன்ற விழுமியங்களுக்குச் சான்றுகளில்லை.

தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை இளங்கோவடிகளே இலக்கியத்தில் முன்மொழிகிறார்.

வஞ்சிக் காண்டத்தில் 'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய' என்றும், அரங்கேற்று காதையில் 'இமிழ் கடல் வரைப்பின் தமிழகம்' என்றும் இந்த நிலப்பரப்புக்கு இளங்கோவடிகள் பெயர்சூட்டியிராவிடில் இன்றுவரை தமிழ்நாட்டில் நிலவிவரும் மண்ணரசியல் என்ற நுண்ணரசியல் இல்லை. மூவேந்தர் காலம்முதல் மொழிவாரி மாகாணங்களின் காலம்வரை இளங்கோவடிகளின் தமிழ்நாடு என்ற சொல்லாட்சிதான் இன்றும் நின்று நிலைத்திருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் என்னை வியக்க வைப்பது கண்ணகியோ, கோவலனோ, மாதவியோ அல்லர். இளங்கோவடிகள் என்ற படைப்பாளியின் பேரறிவே என்னை மலைக்க வைக்கிறது. தமிழ்க்கவி ஒருவனின் ஞாலமளந்த ஞானம் என்னைத் திகைக்க வைக்கிறது.

காப்பியக் கருப்பொருள் சிறியதுதான். ஒரு கற்புக்கரசியோடு இணைந்து வாழ்ந்தவன் ஒரு கலையரசியோடு கலந்து வாழ்ந்து, பின்னர் பிரிந்து, பதிபெயர்ந்து, பழிசுமந்து, கொலைக்களப்பட -  மாபத்தினியாள் நீதிகேட்டு மாநகர் எரிக்க, சேர மன்னன் அவட்குச் சிலையெடுத்த கதைதான் சிலப்பதிகாரம். ஆனால், இந்த ஒற்றை வரிக்குள் தன் உயிரை - உணர்வை - அறிவை - கலையை - மொழியை ஊற்றி ஊற்றிச் சேமித்து வைத்துள்ளார் சேரமுனி.

பூவனத்துக்குள் புகும்போது மெலிந்திருக்கும் காற்று, மகரந்தப் பொடிகளையும் தேனையும் சுமந்து எடைகூடி வெளியேறுவதுபோல, இளங்கோவடிகளின் ஞானப் பெருவெளிக்குள் புகுந்து புறப்படும் ஒரு சிறிய கதை காப்பியப் பேரழகு பெற்றுக் கலையாகிறது.

சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் ஏன் சிரசாடவேண்டுமெனில் - அழிந்த தமிழ் நாகரிகத்தின் ஆதாரம் அது என்பதனால்தான். ஏற்கெனவே தமிழினம் இழந்தது கொஞ்சமன்று. எல்லைகள் - இலக்கணங்கள் -  இலக்கியங்கள் - ஆயுதங்கள் - ஆலயங்கள் என்று அது எவ்வளவோ இழந்திருக்கிறது. அத்தனைக்கும் மொத்தமாய் அது கட்டிக்காக்க வேண்டிய கலை ஆவணம் சிலப்பதிகாரம்தான்.
சிலப்பதிகாரத்தின் இசைக் குறிப்புகள் இல்லாதுபோயின் ஆதி இசை தமிழிசையே என்று சத்தியப்படுத்தும் சான்றுகள் இல்லாது போயிருக்கும். பழம்பண்கள் தமிழில் இருந்தன. அவை தமிழ்ப் பெயர்களையே சூடியிருந்தன.

இந்திர விழவூரெடுத்த காதையில் -

''குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபு''

-  என்ற குறிப்பு கோலோச்சுகிறது.

அந்தக் 'குரல் முதல் ஏழும்' என்பன யாவை? அவை பிறந்த வழியாவது யாது?

சுற்றுச்சூழலோடு ஒட்டி வாழ்ந்த கூட்டம் -  இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் -  விலங்குகளையும் பறவைகளையும் தங்கள் வாழ்வின் அங்கங்கள் என்று உணர்ந்திருந்த தமிழச்சாதி, இயற்கையிலிருந்தே இசையை இழை பிரித்திருக்கிறது. குரல் -  துத்தம் -  கைக்கிளை -  உழை -  இளி -  விளரி -  தாரம் என்ற எழுவகைத் தமிழ்ப் பண்களையும் தமிழர் எங்கிருந்து எடுத்தார் என்பதே நம் இனத்தின் தொன்மைக்குச் சான்று காட்டும் தொல்லடையாளமாகும்.

வண்டின் ரீங்காரத்திலிருந்து பிறந்தது குரல்; அதுவே சட்ஜமமாயிற்று. கிளியின் மிழற்றலில் பிறந்தது துத்தம்; அதுவே ரிஷபமாயிற்று. குதிரையின் கனைத்தலை ஒத்தது கைக்கிளை; அதுவே காந்தாரமாயிற்று. யானையின் பிளிறல் போன்றது உழை; அதுவே மத்திமமாயிற்று. மயிலின் அகவல் போன்றது இளி; அதுவே பஞ்சமமாயிற்று. பசுவின் கதறலில் பிறந்தது விளரி; அதுவே தெய்வதமாயிற்று. ஆட்டின் கத்தலில் பிறந்தது தாரம்; அதுவே நிஷாதமாயிற்று.

''வேண்டிய வண்டும் மாண்டகு கிளியும்
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை''

- என்ற பிங்கல நிகண்டு இதையே உறுதி செய்கிறது.

'சரிகமபதநி' என்ற ஏழும் வெறும் குறியீடுகள் என்றே வடநூலாசான்கள் சிலரும் ஒப்புவர். ஆனால், உயிரெழுத்துக்களின் ஏழு நெட்டெழுத்துக்களைக்கொண்டே ஆதித் தமிழிசை இயங்கியிருக்கிறது.

''ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய''

- என்ற சேந்தன் திவாகரம் இந்த உண்மைக்கு உறுதியூட்டும்.

'பண்ணமை முழவு' என்பதும் 'யாழும் குழலும் ஏங்கிய மிடறும்' என்பதும் இளங்கோவடிகளால் அரங்கேற்று காதையில் ஆளப்பெறுகின்றன. தோற்கருவி - முழவு; துளைக்கருவி -  குழல்; நரம்புக்கருவி -  யாழ். இந்த முக்கருவிகளும் தமிழ்க் கருவிகளே. இந்த மூன்று கருவிகளின் பெயர்களிலும் தமிழுக்கே உரித்தான சிறப்பு 'ழ'கரம் பயின்று வருவதொன்றே அதற்குச் சான்று.

சொற்கள் திரிபுறும்போது சான்றுகள் அழிபடுகின்றன. கர்நாடக இசை என்று சொல்வதே ஒரு திரிபு. சேர நாட்டையும் உள்ளடக்கிய பழந்தமிழ்நாடு மூன்று பக்கமும் கடல்சூழ் நிலவியல் கொண்டது. அதனால் தமிழ்நாட்டுக்குக் 'கரைநாடு' என்ற பெயரும் உண்டு. ஆதித் தமிழிசை கரைநாட்டிசை என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். 'சிராப்பள்ளி' என்னும் ஊர் 'திரு'வென்ற அடைகூடித் திருச்சிராப்பள்ளியாகி, இந்திய ரயில்களில் திருஸ்னாப்பள்ளியாகி, பின்பு சுருங்கித் திருச்சியாகி, இறுதியில் வெள்ளையர்களால் 'ட்ரிச்சி' என்று சுட்டப்பட்டதைப்போல, கரைநாட்டிசை மருவிக் 'கர்நாடிக்' இசை என்று ஆகியிருத்தல் கூடும். இதை நிறுவும் பெரும் பொறுப்பு இசைவாணர்களுக்கே உரியது. இப்படித் தமிழ்க் கலையின் மூலங்கள் தேடி நகரவேண்டுமாயின் சிலப்பதிகாரத்தை விட்டால் சேதியில்லை; இளங்கோவடிகளை விட்டால் நாதியில்லை.

கலைக்கூறுகள் மட்டுமல்ல; காப்பியப் பரப்பெங்கும் பண்பாட்டு ரேகைகளும் படிந்து கிடக்கின்றன. ஒரு சமுதாயத்தின் கல்வி வளம்தான் அதன் மனிதவளம்; துய்ப்புத்திறன் தான் அதன் செல்வவளம். கோவலன் கண்ணகியை விடுத்து மாதவி இல்லம் புகுந்ததற்குக் காமமும் ஒரு காரணமாயினும் கலையே முதற்காரணம். துய்க்க முடிந்த ஒரு செல்வக் கலைஞன் துய்க்கத் தெரிந்தவளையே நாடுவான். மாதவியின் கலைப்பாங்கு அவளது துய்க்கும் அறிவின் தூய சாட்சியாய் விரிகிறது. எகிப்தியப் பேரரசி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பாளாம். கலையரசி மாதவியோ வாசனைப்பாலில் குளித்திருக்கிறாள். ஒரு கலையரசியின் குளியலைத் துறவியார் பதிவு செய்கிறார். குளிக்கப் புகுமுன் அவள் நீராடும் நீரில் 32 வகை வாசனைத் திரவியங்கள் ஊறிக் கிடக்குமாம். அந்த மணம் படுபொருள்களோடுதான் கோவலனின் மனம்படுமங்கை நீராடுவாளாம்.

''பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறிய நன்னீர், உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி''

- என்று கடலாடு காதையில் காட்டுகிறார் காப்பியத்துறவி.

அந்த முப்பத்திருவகை ஓமாலிகை யாவை என்பதை ஒன்று விடாமல் வரிசைப்படுத்துகிறார்கள் உரைகாரர்கள்.

''இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணங்கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், ஒத்தகடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பெருங்குளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை''

இந்த ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒரு நறுமணம் எழுந்து வந்து உள்மூச்சை நிறைக்கும்போதே இவற்றுள் தமிழர்கள் இழந்த திரவியங்கள் எத்துணை என்று ஒரு பெருமூச்சும் எழுகிறது.

தங்கத்தை 'மஞ்சள் பிசாசு' என்று கண்டது மேற்குலகப் பண்பாடு. செல்வத்தின் - அழகின் குறியீடு என்று கொண்டது நமது பண்பாடு. பொன் - வைரம் -  மணி - முத்து ஆபரணங்களை மாதவியின் ஒவ்வோர் உறுப்பும் எப்படித் தரித்திருந்தது என்பதை இளங்கோவடிகள் என்ற கலைமேதை காட்சிப்படுத்துகிறார்.

மாதவியாளின் கால்விரல்களில் மகரவாய்மோதிரம், பீலி, காலாழி துலங்க -  அவள் கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை சிணுங்க -  அவள் தொடையில் குறங்குசெறி ஒடுங்க -  ஆடைமீது முத்தரை விளங்க -  தோள்களில் கண்டிகையும், முத்துவளையும் மினுங்க -  முன்கைகளிரண்டில் சூடகம், செம்பொன்வளை, வால்வளை, பவழப்பல்வளை குலுங்க, கைவிரல்களில் முடக்கு மோதிரம், கிளர்மணி, மரகதத் தாள்செறி விளங்க -  கழுத்தில் சங்கிலி, நுண்தொடர், பூண்ஞாண், புனைவினை தளுங்க -  பிடரில் முத்துக்கோவை முழங்க -  காதுகளில் நீலக்குதம்பை, வைரக்குதம்பை அடங்க -  தலையில் வலம்புரி, தொய்யகம், புல்லகம், வணங்க அவளை ஆபரணஞ் சூடிவந்த தேராய் அலங்கரிக்கிறார் இளங்கோவடிகள்.

உளவியல் அறிஞர்கள் இந்த அலங்காரப் பெரும் பொருள்களைப் பாலியல் முதலீடு (Sex Capital) என்பர். ஒருத்தியின் கலையறிவுமீது கொள்ளும் மையலை அறிவுக்காமம் (Sapo Sexual) என்றும் அழைப்பர். ஆனால், மாதவியின் மீது கோவலன் கொண்ட மையலுக்குப் புறக்காரணம் கலை; அகக்காரணம் கற்பு என்றே அறிய முடிகிறது. ஏனென்றால் மாதவியின் முதலீடு பாலியலுக்கானதன்று; பைங்கலைக்கானது.

*

கலைக் கருவூலமென்பதைக் கடந்துபார்த்தால் சிலப்பதிகாரம் ஒரு பண்பாட்டுப் பெட்டகம். தமிழ்ச் சமுதாயம் சட்டங்களால் ஆளப்படுவது சிறிது; விழுமியங்களால் ஆளப்படுவதே பெரிது. கணவனைப் பிரிந்து கடுந்துயர் எய்தி, புகைபடிந்த பூவாய்... மழையூறிய சித்திரமாய்... மங்கல அணியன்றிப் பிறிதணி அணியாதவளாய் -  கண்ணகி கோலங்குலைந்து காலங்கழித்த வேளை அவளின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பாள் அவள் வாட்டம் தீர ஒரு வழி சொல்கிறாள். சோமகுண்டம் சூரியகுண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமனை வழிபட்டால் கணவனோடு சேரலாம் என்கிறாள்.

''சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர்''

- என்று கனாத்திறமுரைத்த காதையில் கண்ணகியைக் கோருகிறாள்.

அப்படி வழிபடுவது பெருமை தராது என்னும் பொருளில் 'பீடன்று' என்கிறாள் கண்ணகியாள்.

இந்தப் 'பீடன்று' என்னும் திருமொழிக்கு உரை தர வந்தோரெல்லாம் தெய்வந்தொழாமல் கணவனைத் தொழுதெழும் மரபிலே வந்தவள் மறுத்தலில் வியப்பில்லை என்னும் பொருளிலேயே எழுதுகிறார்கள். நாம் இதனை இன்னும் ஒரு படிதாண்டிச் சிந்திக்கலாம். 'கண்ணகி தெய்வமே தொழாதவள்' என்னும் குறிப்பொன்றும் காவியத்திலில்லை. ஆனால் இவ்விடத்தில் காமனைத் தொழவே அவள் மறுக்கிறாள். தனக்கு உரிமையுள்ள கணவனை அடைவதற்குக் கடவுளே ஆயினும் இன்னோர் ஆணின் துணை எதற்கு என்று கண்ணகி கருதியிருக்கலாம்.

மற்றுமொன்று: காமன் என்பவன் சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. குற்றமேதும் புரியாத தான் ஒரு குற்றவாளியை வணங்குவதா என்றும் அவள் தவிர்த்திருக்கலாம். அவள் அன்று ஒரு குற்றவாளியை வணங்கியிருந்தால் நிரபராதிக்கு நீதி கேட்கச் சென்றிருக்கவியலாது. இந்த நுட்பமான பண்பாட்டுக் குறிப்புதான் 'பீடன்று' என்ற சொல்லடைவில் தொனிப்பொருளாய் நிற்கிறது என்றும் கருதலாம்.

*

காதல் கடிதத்திலும் ஒரு கலாசாரம் காத்திருக்கிறார் இளங்கோவடிகள். கோவலனைப் பிரிந்து உயிர்வாடிப் போன மாதவிக் கொடியாள் இரு கடிதங்கள் எழுதுகிறாள்.

முதல் மடலை வசந்த மாலையிடம் தந்தனுப்புகிறாள். கோவலன் அம்மடலை வாங்க மறுத்துத் திருப்பியனுப்புகிறான். இரண்டாம் மடலைக் கோசிகாமணி என்ற மறையோன் வசம் தந்தனுப்புகிறாள். கோவலன் அம்மடலைப் பெற்றுக்கொள்கிறான். ஒன்றை மறுத்தமைக்கும் ஒன்றைப் பெற்றமைக்கும் உள்ள வேறுபாட்டில் இளங்கோவடிகள் ஓர் உளவியல் ஆசானாய் உயர்ந்து நிற்கிறார். இருமடல்களையும் எழுதியவள் ஒருத்தியாயினும் உள்ளடக்கங்கள் வெவ்வேறு.

முதல் கடிதம் காமம் பேசுகிறது.

''புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூ தன்று இஃ தறிந்தீ மின்''

என்று பிரிந்திருப்போரைக் காமன் அம்பு துன்புறுத்தும் என்னும் பொருளில் முதல் கடிதம் விரகம் பேசுகிறது.

இரண்டாம் கடிதம் கடமை பேசுகிறது. ''முதியவராகிய பெற்றோரைப் பேணும் கடமையை விட்டுக் குலமகளோடு இரவோடு ஏன் பெயர்ந்தீர்? இதில் யான் செய்த பிழை யாது?'' என்று இதயம் அவிழ்க்கிறது இரண்டாம் மடல். இரண்டாம் மடலை வாசித்து நெக்குருகிய கோவலன் கோசிகாமணியிடமே அதனைத் திருப்பிக்கொடுத்து ''இம்மடலை எம் பெற்றோரிடம் காட்டுக'' என்று பேணிவிடுக்கிறான். எத்துணை பெரிய பண்பாட்டுக் குறிப்பு இது? ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயங்கும் காதல் கடிதம்கூட பெற்றோர்கள் வாசிக்கும் பண்பாட்டு மொழியில் படைக்கப்படுதல் வேண்டும் என்ற செழுமிய விழுமியம் செதுக்கித் தருகிறார் சேரமுனி.

*

சிலம்பு ஒரு 'தேசியக் காப்பியம்' என்று ம.பொ.சி.யும், 'குடிமக்கள் காப்பியம்' என்று தெ.பொ.மீ.யும் ஆய்ந்து சொன்னதில் அரும் பொருள் உண்டு.

சிலப்பதிகாரத்தின் உள்மையமாக முப்பெரும் பொருள்கள் பேசப்படுகின்றன. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் -  ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் -  உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், என்பவையே அம் முப்பொருட்கள். உரைசால் பத்தினி கண்ணகி எனில் அவளை ஏத்திய உயர்ந்தோர் யார்? கல்லால் ஏத்திய செங்குட்டுவனா? சொல்லால் ஏத்திய இளங்கோவடிகளா? அல்லது பாட்டுடைச் செய்யுள் நாட்டுதலுக்குக் காரணமான சீத்தலைச் சாத்தனா? இம்மூவரையும் முந்திக் கொள்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்.

வேங்கை மரத்தடியில் ஒரு முலை இழந்த திருமா பத்தினியை முதலில் கண்டவர்கள் யார்? அவளைக் கொண்டாடியவர்கள் யார்?

''இவள் போலும் நம் குலக்கோர்
இருந் தெய்வம் இல்லையாகலின்
சிறுகுடியீரே சிறுகுடியீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே''

என்று சோழநாட்டுத் திருமகளைச் சேரநாட்டில் கொண்டாடியவர்கள் குன்றத்துக் குறவர்களே. தெய்வமென்று அவளை முதலில் ஏத்தியவர்களும் அவர்களே. ஆகவே அவர்களே உயர்ந்தோர் ஆகிறார்கள். இந்நாட்டின் ஆதிப்பழங்குடிகளை -  குறிஞ்சி மண்ணின் குழந்தைகளை உயர்ந்தோர் என்று சுட்டிப்போன இளங்கோவடிகளுக்கு சமூக நீதியாளர்கள் தலைவணங்க வேண்டும்.

*

காலந்தோறும் சிலப்பதிகாரத்தைச் சுற்றிவரும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க இக்கட்டுரை கருதுகிறது. கண்ணகி மதுரையை எரித்தது நியாயமா? இடது முலை திருகி எரித்தாள் என்பதில் நம்பகத் தன்மை உள்ளதா? கண்ணகி மதுரையை எரித்தது காப்பிய நியாயம் என்று இக்கட்டுரை கடந்தோடிவிடக் கருதாது.

அநீதியை அழிக்க வேண்டுமென்று காப்பியத்தலைவிகள் கருதுவதொன்றும் புதுவதன்று. ''எல்லை நீத்த இவ்வுலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்'' என்ற அசோகவனச் சீதை கூட உலகங்களை எரிக்க இயலும் என்று நம்பினாள்.

கணவன் உயிரோடிருந்ததால் தன் நெருப்பின் மீது நீரூற்றிக் கொண்டாள். கண்ணகிக்கோ கணவனில்லை. நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர் துறந்ததோடு கண்ணகி ஒடுங்கியிருந்தால், அவள் நீதி கேட்டது சுயநலத்துக்கு என்று சுருங்கிவிடும். ஒட்டுமொத்தத் தீமையை அழித்தால்தான் அவள் போராடியது பொதுநலத்திற்கென்ற பெருமை பெறும். ஒட்டுமொத்த மதுரையையும் அழிக்க எண்ணாமல் ''ஏ! தீச்செல்வனே! நீ தீத்திறத்தார் பக்கமே சேர்க'' என்று அவள் ஆணையிட்டதில் எதிர்காலத்தில் தம் போன்ற பத்தினியாள் யாருக்கும் தனக்கு நேர்ந்த தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் ஒட்டுமொத்தத் தீமைக்குத் தீயிட்டாள் என்று கருதுவது காப்பியநீதி மட்டுமன்று; சமூக நீதியுமாகும்.

முலை திருகி எறிந்தால் மூதூர் எரியுமா? இது இன்னொரு வினா?

முலை திருகி எறிவதென்பதைச் சதை திருகி எறிவதென்று கொள்வது இலக்கிய மூடம். அது வஞ்சினத்தின் உச்சம் சொல்லும் உணர்ச்சிசார் குறியீடு (Symbolized Emotion) என்று கொள்வதே கவிதை அறம்.

தமிழில் இதுவொன்றும் காணாத கருத்தாக்கமன்று. 'போர்க்களத்தில் என் மகன் புறங்காட்டி மாண்டிருந்தால் அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன்' என்று சங்ககாலத்தில் வஞ்சினம் உரைத்த ஒரு தமிழச்சியின் பழங்குரல்தான் அது.

''முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவன் யான்''

-  இது நச்செள்ளை பாடியது; 278ஆம் புறப்பாட்டு.

''துய்க்கப்படாமல் காய்கிறது என் இளமைநலம். பிரிந்துபோன கண்ணனை நான் காண்கில் அவனுக்குப் பயன்படாத என் முலைகளைக் கிழங்கோடு பெயர்த்து அவன் மார்பில் எறிவேன்'' என்பது ஆண்டாளின் நரக விரகம்.

''கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே''

-  என்பது நாச்சியார் திருமொழி.

இந்த இரண்டுமே சொல்லுக்குச் சொல் என்று நேர்பொருள் கொள்ளத்தக்கவை அல்ல. வஞ்சினத்தின் சிகரம்; உணர்ச்சியின் உச்சம்; சினத்தின் திரட்சி; மொழி தன் இருப்பை இழந்துவிட்ட நிலையில் காட்சியால் உரக்கச் சொல்லும் உத்தி என்றே கொள்ள வேண்டும்.

''இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அமைந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்''

-  என்பது காப்பியக்கூற்று.

முலை என்பது வேறொன்றுமில்லை. பாலூட்டியான தாய்க்குலத்திற்கு இயற்கை கொடுத்த கொடை. மெல்லிய தசைநார்களால் போர்த்தப்பட்ட பால்சுரப்பிகளையும், நுரைத் திசுக்கள் சூழ்ந்த ரத்த நாளங்களையும் தன் நுனியில் 10 முதல் 12 வரையிலான பாற்குழாய்களையும் கொண்ட கொழுங் கொழுப்புக் கோளம் அது. அதைத் திருகி எறிவதோ அது எரிவதோ சாத்தியமில்லை என்பது படைத்தவனுக்குத் தெரியாதா என்ன?

ஆனாலும் காப்பியப்படைப்பாளன் அவள் நெஞ்சில் மூண்டு வந்த பெருங்கனலுக்கு உருவம் கொடுக்கிறான். வட்டித்தெறிந்த மார்புக்கே இத்தனை வெப்பம் உண்டென்றால் அவள் நெஞ்சில் மூண்டெழுந்த மூலக் கனலின் நிறை என்ன என்பதைத் தன் உத்திகொண்டு உய்த்துணர வைக்கிறான்.

எனவே சொல்லின் பொருள் சொல்லில் மட்டுமன்று, கவிதையில் அதுசொல்லுக்குப் பின்னும் சொல்கடந்தும் இருக்கிறது என்ற இலக்கியப் புரிதலே இங்கு வேண்டற்பாலது.

கொண்டவன் கொலைக்களப்பட்டான்; இனி அவன் துய்க்காத முலை எதற்கு என்று முலை துறந்தாள் கண்ணகியாள்; கோவலன் இறந்த செய்தி கேட்டுத் தன் காதலன் துய்க்காத கலை எதற்கு என்று கலை துறந்தாள் மாதவியாள் என்று கருதிப் பார்ப்பதும் ஒருவாறு ஒக்கும்.

தமிழர்களின் ஒருமைப்பாட்டுக் காப்பியம் என்று உயர்த்திப் பிடிக்கலாம் சேரன் தம்பி இசைத்த சிலம்பை. கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்க வடதிசைப் போருக்கு முனையும்போது அந்தப் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் தன் ஒரு குலத்துக்கு மட்டும் உரித்தாக்கினானில்லை. மூவேந்தரின் முச்சின்னமும் பொறித்து வடபுலத்தரசருக்கு விடுக என்கிறான் சேரன் படைத்தலைவன் வில்லவன் கோதை.

''வடதிசை மருங்கன் மன்னர்க் கெல்லாம்
தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை யேற்ற வரைக''

-  என்பது வஞ்சிக் காண்டத்தின் வாக்குமூலம்.

வடவரை எதிர்கொள்ளப் புகுமுன் சேர சோழ பாண்டியர் என்ற வேறுபாடு கடந்து தமிழரசர் என்ற ஒற்றை அடையாளத்தை முன்நிறுத்தியதால் அன்றைய செருவில் செங்குட்டுவன் வென்றான்.

இந்நூற்றாண்டுத் தமிழர்க்கும் இதில் ஒரு பாடமுளது.

இந்நாள் தமிழர்களும் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வருணாசிரமம் கடந்து, மதங்கள் - கட்சிகள் என்ற மாச்சரியம் மடிந்து, முதலியார் - கவுண்டர் - நாடார் - தேவர் - பிள்ளை - நாயக்கர் என்ற சாதி பேதம் அழிந்து தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை உயர்த்திப் பிடித்தால் உலகமயமாதல் என்ற பெரும்போரிலும் நாமே வெல்வோம்; வெல்ல வேண்டும்.

ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும்; மாமழை போற்றுதும்;

தமிழ் போற்றுதும்; தமிழர் போற்றுதும்; தமிழகம் போற்றுதும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard