New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியார் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரையும் பிராமணத் துவேஷமும்


Guru

Status: Offline
Posts: 19616
Date:
பெரியார் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரையும் பிராமணத் துவேஷமும்
Permalink  
 


 பெரியார் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரையும் பிராமணத் துவேஷமும்

 
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஈ.வெ.ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் உக்கிரமான கட்டுரை ஒன்றை எழுதப் போக இணையத்தில், வேறெங்கே, கொதித்தனர் பலர். பலரின் கொந்தளிப்புகளுக்கு ஒரு ஸாம்பிள் பூ.கொ. சரவணன் என்கிற பிரபலமான பத்திரிக்கைகளில் அவ்வப்போது எழுதுபவருமானவரின் பேஸ்புக் பதிவு. எல்லா ஈ.வெ.ரா பக்தர்களையும் போல் சரவணன் கருத்தை எதிர்கொள்ள எழுதியவரின் ஜாதியை வைத்துக் கீழ் தரமாக எழுதியுள்ளார்.

rylvxD6ohTj58O_RIPDDl_5oeymFYako0NbMxw9s


என் போன்றவர்களும் கிருஷ்ணன் போன்றவர்களும் பெரியார் வெறுப்பரசியலில் ஈடுபட்டதாக மீண்டும் மீண்டும் சொல்வது பெரியாரின் எழுத்துக்களை வைத்து மட்டுமல்ல அவரைத் தங்கள் ஆதர்சமாகக் கொண்டவர்கள் பொது வெளியில் எழுதுவதை வைத்து தான். சரவணனின் பதிவில் பிண்ணூட்டமிட ஒருவர் என்னையும் குறிப்பிட அதற்கு மறுமொழியிட்ட ஒருவர் “இங்கே அம்பிகளை ஏன் கூப்பிடுகிறீர்கள். அவர்களுக்கு மூளை உள்ளதா” என வினவினார்.

பி.ஏ.கிருஷ்ணன் எனக்கு முதலில் பரிச்சயமானது சில வருடங்கள் முன் நேரு பற்றி அவர் எழுதிய கட்டுரைக்கு இந்துத்துவரான நீலகண்டனின் மறுப்புரைக்கு நான், நேருவின் மீதுள்ள பற்றாலும் உண்மைக்குப் புறம்பானதை மறுக்க வேண்டும் என்பதற்காகவும், விரிவான எதிர் வினையாற்றிய போது. அன்று முதல் அவர் நண்பரானார். எங்களுக்குள் நேரு, காந்தி, இந்திய விடுதலைப் போராட்டம், வரலாறு என்று பல விஷயங்களில் ஒத்தக் கருத்துகள் உண்டு. ஆனால் பொருளாதாரம், மார்க்ஸியம், ஸ்டாலின் (ஜோசப்) என்று சில விஷயங்களில் எதிர் துருவங்களும். எல்லா விஷயங்களிலும் ஒத்தக் கருத்துடையவர்கள் கிடைப்பதரிது. அது சுவாரசியமாகவும் இராது. முழுவதும் எதிர் கருத்துடையவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதும் சிக்கலே. வயதில் அவர் என் தந்தையின் வயதொத்தவர் ஆயினும் இளையவர்களோடு மிக நட்போடு பழகும் பண்பாளர். நான் மூர்க்கமாக எதிர்ப்பவரிடமும் நான் ஏதாவது கற்றிருக்கிறேன் பி.ஏ.கே சுட்டும் நூல்களைத் தேடிப் படித்திருக்கிறேன், சில சமயம் அவரை மறுப்பதற்காகவும்.

தமிழ் நாட்டில் இன்று மிக மனச் சோர்வைத் தரும் விஷயம் உரையாடல் என்பதே, அதுவும் எதிர் தரப்போடு, மிகவும் அருகிவிட்ட ஒன்று. வரலாற்றைப் பேசுவது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. கோயபல்ஸே வெட்கப்படும் அளவுக்குப் பிரச்சாரம், ஓங்கி ஒலிக்கின்ற பிரச்சாரமே, ஓங்கியிருக்கிறது. ஜெயமோகன் எழுதினால் படிக்காமலே, ‘இந்துத்துவா’, ‘மலையாளி’ என்று வசைகளே பதில்கள். கிருஷ்ணன் போன்றவர்கள் எழுதினாலோ ‘பாப்பான்’ என்பதே பதில். ‘பார்ப்பன அடிவருடி’, ‘கிறிஸ்தவன்’ என்பவை என்னை நோக்கி பதில்களாக வரும். இந்துத்துவத்தையும் பிராமணத் துவேஷத்தையும் எதிர்க்கும் கிருஷ்ணனும் என் போன்றவர்களும் மாறி மாறி வசைகளை ஒவ்வொரு தரப்பிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளோம். எதைக் குறித்தும் ஒரு விலகலோடு அகடெமிக்காகப் பேசுவது தமிழ்ச் சூழலில் மிக மிகக் கடினமாகிவிட்டது. மோசமான கருத்தையும் அகடெமிக்காக எதிர் கொள்ளும் பண்பும் அறவேயில்லை பெரும்பாலோரிடம்.

சரி எத்தனையோ பேர் கிருஷ்ணனை திட்டியிருக்கிறார்களே பூ.கொ.வின் பதிவைத் தேர்ந்தெடுத்துப் பதில் சொல்வானேன்? பூ.கொ,  இளைஞர், மிகச் சாதாரணக் கிராமத்தில் இருந்து முன்னேறி சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தவர், அதிகம் படிப்பவர், நிறைய எழுதுகிறார், பல மாணவர்களோடு உரையாடுகிறார் அவருக்குள் இத்தகைய துவேஷம் இருப்பது மிகத் துரதிர்ஷ்டமானது மட்டுமல்ல பெரியாரின் நிழல் எத்தகைய தாக்கத்தை அப்படிப்பட்டவருள்ளும் ஏற்படுத்துகிறது என்பதாலேயே.

பூ.கொ.வும் நானும் சில காலம் பேஸ்புக்கில் நட்பாக இருந்திருக்கிறோம் பரஸ்பரம் நேருவின் மீதுள்ள பற்றால் இணைய முடிந்தது. ஓரிரு முறை அவரை அழைத்தும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் அனிதாவின் மரணத்தின் போது நான் இட ஒதுக்கீடு, கல்வியின் தரம், நான் கல்லூரிக்கு விண்ணப்பித்த வருடம் நடந்த 5 மார்க் கூத்து ஆகியவற்றைத் தொகுத்து என் பார்வையாக எழுதிய குறிப்பினால் எரிச்சலுற்று பூ.கொ பேஸ்புக்கில் என்னை நட்பு விலக்கம் செய்து விட்டாரென்று நண்பர்கள் தெரிவித்தார்கள். நேரு பற்றிய ஒற்றுமையைத் தவிரத் திராவிட இயக்கம், இட ஒதுக்கீடு, பொருளாதாரம் என்று பல விஷயங்களில் வேறுபாடு. ஓரிரு முறை பிராமண வெறுப்பு, இடை நிலை சாதியினரை மென்மையாகக் கையாளுவது குறித்துக் கேள்விக் கேட்டபோது கிடைத்த பதில்கள் இந்த நட்பு ரொம்ப நாள் நீடிக்காது என்பதை உணர்த்தியது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நஷ்டமில்லை.

ஈ.வெ.ரா யூதர்களை மற்றவர்களின் உயிரை உரிந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிட்டுவிட்டு பிராமணர்களும் அப்படியே என்று மார்ச் 20 1938-இல் எழுதியதைக் குறிப்பிட்ட பி.ஏ.கே அக்காலக் கட்டம் ஹிட்லரின் கொடி உயரப் பறந்த காலம் என்றும் இந்த மேற்கோளைச் சொன்னவர் ஈ.வெ.ரா என்று தெரியாமல் நாஜிக்களின் வரலாறுத் தெரிந்த யாரும் படித்தால் அந்த மேற்கோள் ஏதோ ஒரு நாஜி செய்தித்தாளில் வெளிவந்திருக்கும் என்று நினைக்கக் கூடும் என்கிறார். ஈ.வெ.ராவை ஹிட்லர் என்று சொல்லுமளவுக்குப் பி.ஏ.கே வரலாறுத் தெரியாத முட்டாளோ வன்மமம் மட்டுமே அறிவில் குடிக் கொண்டவரோ அல்லர். அந்த மேற்கோள் அப்பட்டமான நாஜித்தனம் என்பது வரலாற்றைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.“ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார்.” என்று பூ.கொ கொதிக்கிறார். 

கட்டுரையின் நோக்கம் திராவிட இயக்கத்தின் வரலாறுப் பற்றியதல்ல. ஒரே வரியில் மிகச் சிக்கலான ஒரு காலக் கட்டத்தையும் அது உருவாக்கிய சிக்கலான மனிதர்களையும், மிகுந்த முரன்களைத் தன்னகத்தே கொண்டு எழுந்த திராவிட இயக்கத்தையும் பொதுப் புரிதலில் இருக்கும் ஒற்றைப் படையான சித்திரத்தை ஒட்டிய வாக்கியத்தைப் பிஏகே ஒற்றைப்படையான பார்வையைக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டிவிட்டுச் செய்கிறார் பூ.கொ. பிஏகே செய்தது ஒற்றைப்படையென்றே வைத்துக் கொண்டாலும் அதற்குப் பதில் இன்னொரு ஒற்றைப்படையா?

“நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்குக் கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும்.” என்கிறார் பூ.கொ. 

நாத்திகம் என்பதை இந்திய ஞான மரபுக்கு சொல்லிக் கொடுக்க ரஸ்ஸல் தேவையா? பூ.கொ கொஞ்சம் ஜெயமோகனைப் படிக்கலாமே. ஆத்திகத்தில் பல படி நிலைகள் உண்டு. சாதாரணப் பூசைகள், எளிய நம்பிக்கைகள் என்று தொடங்கி உயரியத் தத்துவங்கள் நோக்கிச் செல்ல முடியும். அது போல் நாத்திகமும் பல படி நிலைகள் கொண்டது. ‘பரிசுத்த ஆவியிலே இட்லி வேகுமா’, ‘பிள்ளையார் போன்ற பிறப்புச் சாத்தியமா?’ என்பதெல்லாம் ஆரம்பப் படி நிலை. அங்கிருந்து எத்தனையோ தத்துவார்த்தமான மேல் படி நிலைகள் நோக்கிச் செல்ல முடியும் ஆனால் தமிழ் நாட்டில் பெரியாரின் கருணையால் உண்டான நாத்திகம் பாமரத்தனமான நாத்திகத்திலேயே நின்றுவிட்டது. அதனால் தான் இன்று பெரியாரும் மடாதிபதியாகிவிட்டார். ‘தி.க.காரர்கள் நாத்திகர்களல்ல அவர்கள் கடவுள் பெரியார்’ என்றார் ஜெயகாந்தன். பெர்டிரண்ட் ரஸ்ஸல் பெரும் அறிவு வீச்சுக் கொண்டவர் அவரை ஏதோ தெரு முனை நாத்திகவாதியாகச் சுருக்கிப் புரிந்துக் கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்று எந்த மேலை நாட்டுத் தத்துவ மேதையும் ரஸ்ஸலின் அந்நூலை இடது கையால் கூடப் பொருட்படுத்த மாட்டார். இந்துத்துவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகமும் அப்படியே.

பூ.கொ பொங்குகிறார் “ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும்.” 

பிஏகே என்ன பிராமணர் என்பதாலா ஈவெராவின் ராமாயணம் பற்றிய கருத்தை மறுக்கிறார். ஜெயகாந்தன் கூடத்தான் ஈவெரா இலக்கியம் பற்றிப் பேசியதையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறார். இலக்கியம் மற்றும் தத்துவங்களின் புலமைக் கூட அல்ல அறிமுகம் கொண்டவர்கள் கூட ஈவெராவின் நாத்திகம் பற்றிய கருத்துகளைச் சின்னப் புண்ணகையோடு கடந்துவிடுவார்கள்.“சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் 'சவார்க்கர் தேசபக்தர்' என்கிற பதிவில் கேட்டதற்கு 'அது தனிக்கதை' என்ற நடுநிலையாளர் அவர்”.
 பிஏகே கட்டுரை எழுதியது பெரியார் போன்று வெறுப்பரசியல் செய்தவர் எப்படி ஏற்புடையவர் ஆனார் என்பது பற்றி. எதிர்வினையோ எங்கெங்கோ அலைகிறது பூ.கொவின் சினத்தில். எதையெல்லாம் சொல்லி அடிக்க முடியுமோ அதையெல்லாம் சொல்லி அடிக்கச் சினத்தில் தாறுமாறாக எழுதியிருக்கிறார் பூ.கொ.


பெரியாரின் பங்களிப்பை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் பிஏகே, “Periyar was a selfless and incorruptible man of considerable personal charm. He spent his long life tirelessly working in support of what he believed in and against what he detested. What he believed in were self-respect, rationalism, gender equality and his own version of social justice. What he detested were caste discrimination, Gandhi, god, religion, Brahmins and the then-prevailing idea of India.”

சவர்க்கருக்கு ஒரு நீதி பெரியாருக்கு ஒரு நீதியல்ல. பிஏகே அன்றாடம் இந்துத்துவர்களை ‘braying brigade’ என்று விளித்து அதி தீவிரமாகச் சண்டியிட்டுக் கொண்டிருப்பார் இணையத்தில். அது சரி சேறு வாரியிறைப்பது என்று முடிவானப் பின் எதற்கு உண்மைகளைச் சட்டைச் செய்ய வேண்டும்.

சவர்க்கரின் நினைவு நாளில் இந்துத்துவர்கள் களிக் கொண்டு எழுதுவார்கள் இன்னொரு பக்கம், “என்ன பெரிய வீர சவர்க்கர், மன்னிப்புக் கடிதம் எழுதி மண்டியிட்டவர்’ என்பார்கள் பெரியார் பக்தர்கள். சவர்க்கரின் தியாகம் மகத்தானது. எனக்கு அவரின் பிந்நாள் அரசியல் ஒவ்வாதது அதற்காக அவர் தேசத்துக்காகச் செய்த தியாகத்தை மறுக்க முடியாது.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுச் சிறைக் கொட்டட்டியில் தனிமைச் சிறை, கடும் வேலைச் செய்ய விதிக்கப்பட்டவர். அவர் சகோதரரும் அப்படியே. அக்காலத்தில் ராஜாங்க எதிரி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டால் சொத்துக்களை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும். சவர்க்கர் சகோதரர்கள் குடும்பங்கள் சகலத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றனர். சவர்க்கரின் சகோதரர் கை கால்களில் விலங்கிடப்பட்டு, தலையில் துணியைச் சுமந்தவாறு நாயைப் போல் தெருக்களில் அழைத்துச் செல்லப்பட்டார். திராவிட இயக்கதின் எந்தத் தலைவரும் இத்தகைய தியாகத்தை என்றில்லை அதன் அருகில் வைக்கத் தகுந்த எந்தத் தியாகத்தையும் தேசத்துக்காகச் செய்ததில்லை என்பதே உண்மை. சவர்க்கர் 10 வருடம் மிகக் கொடுமையான சிறைவாசத்தை அனுபவித்து விட்டே அந்த மன்னிப்புக் கடிதத்தை எழுதினார். பாரதியும் மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். பெரியாரின் தனிப்பட்ட நேர்மையையும், கொள்கைக்காகப் போராடும் குணத்தையும் ஏற்க முடிந்த பிஏகே சவர்க்கரின் தியாகத்தை எப்படி மறுப்பாற். கவனிக்கவும், அரசாங்க அச்சுறுத்தலுக்குப் பயந்து ஈவெரா கம்யூனிஸம் பற்றிப் பேசுவதை நிறுத்துக் கொண்டதற்காக அவரை என்னவென்று அழைப்பது? சவர்க்கர் பற்றியும் இந்த மன்னிப்புக் கடிதம் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன் (காண்க: http://contrarianworld.blogspot.com/2017/06/veer-savarkar-question-his-politics-not.html )


“அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு 'இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்' என முத்தை உதிர்த்தார்”. 

அம்பேத்கரின் ‘Thoughts on Pakistan’ அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகள் கொண்டது தான். அம்பேத்கர் இந்து மதத்தைத் தூற்றியதை களிப்போடு பகிர்ந்துக் கொள்வோர் அவர் இஸ்லாமியர், கிறித்தவர்கள் பற்றி எழுதியதை மௌனமாகக் கடந்து செல்வதைச் சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு? “பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, 'பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்' எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார்.” 
__________________


Guru

Status: Offline
Posts: 19616
Date:
RE: பெரியார் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரையும் பிராமணத் துவேஷமும்
Permalink  
 


பெரியார் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார் என்பது மிகைப்படுத்தலே. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஜாதிவாரியான பிரதிநித்துவம் என்பதில் தொடங்கி மிக நீண்ட வரலாறுண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பகம் துரைராஜன் என்பவர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், எல்லோரும் சட்டத்தின் முன் ஒன்றே எனும் ஷரத்தின் படி தனக்கிருக்கும் சம உரிமையை அது பாதிக்கிறது என்று சொன்னார், அவர் சார்பில் தீர்ப்பு வந்தது. தமிழக அரசு, கவனிக்கும் இது குமாரசாஇ ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்தது. கிரான்வில் ஆஸ்டின் தன் புத்தகத்தில் எழுதுகிறார், உச்ச நீதி மன்றம் அப்போதிருந்த மன நிலையை யூகித்த சட்ட அமைச்சகம் நேருவின் மந்திரி சபைக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கான ஷரத்தை மாற்றி அமைக்குமாறு ஒரு குறிப்பை அனுப்பியது. குறிப்புச் சென்ற ஒரு மாதத்திற்குள் உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்தது.

நிச்சயமாகத் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் ஒரு காரணமே. ஆனால் இந்த ஒரு பிரச்சிணையைத் தவிரக் கணன்று கொண்டிருந்தது வேறொன்று. ஜமீந்தாரி ஒழிப்புத் திட்டம். இதற்கும் நீதிமன்றங்கள் தனி மனித பொருளுடைமையின் அடிப்படையில் அத்திட்டத்தை ஒழித்துவிடுமோ என்று நேருவும், அம்பேத்கரும் மற்றவர்களும் அச்சப்பட்டனர். அப்புறம் கட்டுபாடற்ற பேச்சுரிமைப் பற்றியும் கவலை எழுந்தது பிரிவினையின் வரலாறுக் காணாத வன்முறையின் இடையே சிக்கித் தவித்த தேசத்தில். இதெல்லாம் ஒரு புயலாக உருவெடுக்க நேருவும் அம்பேத்கரும் முயல இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் வந்தது. காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது. பூ.கொ. விக்ரம் ராகவன் கிரான்வில் ஆஸ்டினின் ஆராய்ச்சியில் இடைவெளிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்கிறார். நான் தேடிய வரையில் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இணையத்தில் ராகவனின் தளம் ஒன்று கிடைத்தது அதில் ஆஸ்டின் இறந்த போது ராகவனும் மற்றவர்களும் எழுதிய அஞ்சலிகள் மற்றும் வேறொரு கட்டுரையில் ஆஸ்டினின் ஆராய்ச்சியில் குறைகள் இருப்பதாகவோ, இடைவெளிகள் இருப்பதாகவோ எழுதவில்லை. ஆஸ்டினின் சித்திரத்தை சற்றே விமர்சித்திருக்கிறார்கள் ஆனால் எல்லோரும் அவர் மிகப் பெரும் உழைப்பைச் செலுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார் அடிப்படை ஆராய்ச்சியில் தவறுகள் ஏதும் சொல்லவில்லை.

சுனில் கில்நானியும், ராமச்சந்திர குஹாவும் பெரியாரை ஒரு சிந்தனையாளராகவே முன்னிறுத்துகிறார்கள். ஆராய்ச்சியில் இடைவெளி என்கிறாரே பூ.கொ. அது இவர்களுக்குப் பொருந்தும். பாரதி முதலானோர் ஒரு நீண்ட சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு வித்திட்டவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லை. கில்நானி பெரியார் குறித்து, “ ‘பாம்பையும் பார்ப்பானையும் ஒன்றாகப் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடிக்க வேண்டும்’ என்றார். இதை 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தலித் இதைப் பேசியிருந்தால் கொல்லப்பட்டிருப்பான்”. பாவம் கில்நானி அவருக்கு ஜஸ்டிஸ் கட்சியின் வரலாறும் தெரியவில்லை, பெரியார் பணக்கார நாயக்கர் என்பதும் தெரியவில்லை. ‘பிராமணரல்லாதோர் சபை’ என்று ஒன்றை ஆரம்பித்து ‘பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்’ என்று பிரகடனம் செய்தார்கள் பெரியார் அந்த விஷத்தை கக்கும் முன்பே.

பெரியார் இடைநிலைச் சாதிகளைக் கண்டித்தார் என்கிறார் பூ.கொ. இது ஜோக்.

கீழ் வெண்மனியில் 44 தலித்துகள், பெண்களும் குழந்தைகளும், கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது ஈவெரா விஷம் கக்கினார், எரித்த நாயுடுகள் மேல் அல்ல, பிராமணர்கள் மீது (காண்க http://mugamoodireader.blogspot.com/2014/12/blog-post.html )

பூ.கொ.வும் இன்னும் பலரும் உடனே சுட்டுவது முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் ஈவெரா முத்துராமலிங்கத் தேவர் குறித்து வெளியிட்ட அறிக்கைகளை. இதற்கு முக்கிய ஆவணம் தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்’ (அப்புத்தகமும் டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய ‘முதுகுளத்தூர் பயங்கரம்’ புத்தகமும் ஒன்றாக மயிலைநாதன் தொகுப்பில் ‘சிந்தனனை வெளியீடு’ வந்திருக்கிறது)
இம்மானுவேல் சேகரன் படுகொலைக்குப் பின் கைது செய்யப்பட்ட தேவர் பற்றி ஈவெரா சொல்கிறார், “தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.”

வார்த்தைகளைக் கவனிக்கவும். “தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை”. மேலும் அந்த அறிக்கை முழுதும் (தினகரனின் புத்தகத்தில் இருந்து இந்தப் பகுதிகளைக் கீற்றூத் தளம் தொகுத்திருக்கிறது http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48 ) தேவரை மட்டும் தனி மனிதராக விமர்சிக்கிறார் ஈவெரா. கீழ் வெண்மணியில் சம்பந்தமேயில்லாத பிராமணர்களை ஒரு தொகுப்பாகவும், இனமாகவும் கரித்துக் கொட்டியவர் இப்போது கவனமாகத் தேவரை விமர்சித்தாரே தவிரத் தேவர்கள் என்ற ஜாதியை ஒன்றுமே சொல்லவில்லை. கீற்றுத் தளத்தில் இல்லாதது புத்தகத்தில் இருக்கும் முக்கியமான ஒரு குறிப்பு ஈவெராவின் மேற்கோள், “முதுகுளத்தூரில் நடக்கும் ஜாதிச் சண்டையை நிறுத்த நான் என் கருப்புச் சட்டைப் படையை அனுப்ப மாட்டேன். அங்கே போய்ச் சும்மா சாகவா? அல்லது தமிழனைத் தமிழன் சாகடிக்கவா? ஜாதிகள் ஒழிந்தாளொழிய சண்டைகள் தீராது”.

இந்து-முஸ்லிம் கலவரங்களை அடக்கத் தன் உயிரை பணையம் வைத்த மகாத்மா என் மனக்கண்ணில் ஒரு நிமிடம் வந்து மறைந்தார். தினகரனின் புத்தகத்தில் பெரியார் தேவர்களைக் கண்டித்தார் என்பதை நிறுவ பழைய விடுதலை இதழ்களில் இருந்து சில பக்கங்கள் புகைப்படமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை வெறும் செய்திக் குறிப்புகள் பெரியாரின் தனிப்பட்ட கண்டனங்கள் அல்ல. ஆனால் அப்புகைப்படங்களில் இரண்டு என் கவனத்தை ஈர்த்தன.

“குறும்புக்கேள்விக்குப் பெரியார் சாட்டைப் பதில்” என்ற தலைப்பில் 16(10).10.57 அன்று வெளியான பத்தி. கத்தி வைத்துக் கொள்ளச் சொன்ன பெரியார் கைதுச் செய்யப்படவில்லை ஆனால் சமாதான விரும்பியான தேவர் கைதாகிவிட்டாரே என்ற கேள்விக்குத் தேவர் கைதுக்குப் பின் கலவரம் அடங்கியதை சுட்டிவிட்டு மிக விஷம் தோய்ந்த வார்த்தைகளைக் கொட்டுகிறார்.

“நான் கத்தி வைத்துக் கொள் என்று பேசுவதால் இது வரை எந்தப் பார்ப்பானுக்கும் ஒரு சிறு காயம் கூட ஒரு அடி கூட விழவில்லையே! ஏன்?

நான் குத்தச்சொல்லி உத்தரவு கொடுத்தால் தானே நடக்கும். சும்மாவா கொல்வோம் என்கிறோம். ஒரு நிபந்தனையின் மீது தானே சொல்கிறோம். இன்னது செய்யாவிட்டால் இன்னது நடக்கும் என்கிறோம். நீ பிராமணன் என்று சொல்லாமல் பூணூலைக் கழற்றி விடேன். அப்படிக் குத்துபம்படியாகச் சொல்வதாக இருந்தாலும் ரகசியமாகவா செய்வேன்? சர்க்காருக்கு இன்னின்னார் இன்னின்னாரை குத்துவார்கள் என்று பெயர் கொடுத்து அவர்களுக்கும் பாதுக்காப்பளிக்க ஒரு வாய்ப்பளித்துவிட்டுத் தானே செய்வோம்!”

“தூக்கிலிடப்படவும் தயாராகுங்கள்” என்ற அறிக்கையில் சொல்கிறார், “சாதி ஒழிபடவேண்டுமா வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்ததில் கையெழுத்துப்போட்டு அனுங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன் என்று! ஒன்றுமில்லாத குப்பை சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30-40 பேர் செத்திருக்கிறார்கள்”

“முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா?” என்று கேட்டீர்களே பூ.கொ மேற்கண்டவைகளுக்கு என்ன பதில்?

பிஏகே கட்டுரை முழுதும் பெரியாரின் பிராமண எதிர்ப்புப் பற்றியே இருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள். யாரொ வைத்த நெறுப்பில் யாரோ கொல்லப்பட்டு ஊரே ரணகளமாகும் போதும் “பார்ப்பானைக் ஒழிக்க வேண்டும்” என்று அறிக்கை எழுதும் மனோ வியாதிக் கொண்டவரைப் பற்றி வேறென்ன எழுத முடியும். காந்தியைப் பற்றி எழுதினால் தேச விடுதலை, சத்தியாகிரஹம் என்று எழுதலாம் அவர் எத்தனையோ விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும், தீண்டாமை ஒழிப்பு உட்பட. நாம் என்ன செய்ய முடியும் ஈவெராவின் மூச்சும் பேச்சும் பிராமணர்களை ஒழிப்பதைப் பற்றியே இருந்தால் பிஏகே என்ன செய்ய முடியும்.

‘நாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறோம்” என்று பெரியாரிஸ்டுகள் பம்மாத்துக் காட்டுவார்கள் ஆனால் பெரியார் பட்டவர்த்தனமாகச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் பிஏகே- “நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக் கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.”

பெரியார் தலித்துகளின் அறிவுத்திறன் மற்றும் அம்பேத்கர் குறித்தும் மிக அருவருப்பாகச் சொன்னதைப் பிஏகே ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறாறர், “அவர் (அம்பேத்கர்) 10% இட ஒதுக்கீடு கேட்டார், அவர்கள் (பிராமணர்கள்) 15% கொடுத்தனர் ஏனென்றால் 25% கொடுத்தால் கூட 3 அல்லது 4 சதவீதம் தான் தகுதியானவர்கள் கிடைப்பார்கள் (தலித்துகளிடம்). அவர் பிராமணர்கள் எழுதிய அரசியல் சாஸனத்தில் கைக்காட்டிய இடத்தில் கையெழுத்திட்டார்”. சத்தியமாக இதை மட்டும் அன்றோ இன்றோ எந்தப் பிராமணராவது இப்படிப் பேசினால் கழுவில் ஏற்றியிருப்பார்கள். ஏற்றியிருக்க வேண்டும். தவறில்லை.

ஓரு இனமே அழிய வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதிய ஒருவர் சமூகத்தின் ஆசானாகக் கொண்டாப்படும் இடத்தில் அச்சமூகத்தினர் அதைச் சுட்டிக் காட்டிக் கூடப் பேசக் கூடாது என்கிறார்கள் இந்த நாஜிக்கள். அவரின் இந்த நாஜித்தனம் ஒரு சமூகத்தின் நாஜித்தனமாக உருவெடுத்திருக்கிறது என்பதைச் சமூகத்தைப் பற்றிக் கவலைக் கொள்ளும் எந்த மனிதனும் கண்டும் காணாமல் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

ஒரு இனத்தில் பிறந்தவன் இப்படித்தான் இருப்பான் என்றோ, பேசும் கருத்துகளுக்குப் பிறந்த இனத்தைத் தவிர வேறெதுவும் காரணமேயிருக்காது என்றும் பேசுவதும் அப்பட்டமான நாஜித்தனம் தான்.

ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் பிராமண எதிர்ப்பு பற்றிக் கேட்ட போது ஜெயகாந்தன் சினந்துச் சொன்னார், “நீங்க தான் பகைமையை மட்டும் மாத்திக்காம இருக்கீங்க, ‘தள்ளிப் போடா’ அப்படீன்னு சொல்ற பாப்பான் எங்க இருக்கான் இன்னைக்கு? இந்த வெற்றியைக் கொண்டாடுவீங்களா (அதை விட்டு விட்டு) அன்னைக்கு அவன் தாத்தா என் தாத்தாவைச் சொன்னான்னு சண்டைப் போட்டுகிட்டு இருக்கீங்க…சும்மா பகைமைக்குத் தூபம் போட கூடாது. தமிழன் அதைச் செய்யக் கூடாது. பகைமையை வெச்சுக்கிட்டாப் பேச முடியாதுல்ல. எதன் பேராலும் அதைப் பரப்புவது சரியில்லை’.

இன்று பூ.கொ. அடைந்திருக்கும் உயரத்திற்கு அவர் குடும்பம், குறிப்பாக அவர் அம்மா, அளித்த ஊக்கமும் அவரின் உழைப்பும் காரணம். அவரைச் சுற்றி அவரைப் படிக்க ஊக்குவித்தவர்கள் அநேகம் பேர் என்கிறார் பேட்டிகளில். நல்லது. அந்த முக்கியமான ஆதரவு இல்லாமல் அனிதாவின் சக்திக்கு மீறிய சம்பவச் சூழலில் சிக்கித் தானே அவர் இறந்தார். உணர்ச்சிக்கு ஆட்பட்டு எதிர்ப்பவர்களையெல்லாம் பிறப்பைச் சொல்லிப் பேசுவதும் உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தாண்டி பொது விவாதத்தின் இன்னொரு தரப்பை கேட்கவே மாட்டேன் என்பதும் என்ன பண்பு?

References:

1. Working a democratic Constitution - Granville Austin
2. Vivek Raghavan on Granville Austin http://www.india-seminar.com/2010/615/615_comment.htm 
3. Raghavan’s obituary http://scroll.in/article/670221/How-Granville-Austin-beat-Delhi-babudom-to-write-his-book-on-the-Indian-Constitution
4. Periyar on Keezvenmani http://mugamoodireader.blogspot.com/2014/12/blog-post.html
5. P.A. Krishnan's article http://thewire.in/179688/periyar-ev-ramasamy-dravida-nadu-brahmins-dmk/
6. பார்ப்பன எதிர்ப்பா, பார்ப்பணீய எதிர்ப்பா "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/27587-2014-12-25-13-07-40?code=1&state=tt"
7. Pu.Ko Related interviews http://tamil.thehindu.com/opinion/columns/படிச்சிட்டுத்-திட்டு-என்பாள்-அம்மா/article8685663.ece
8. Pu.kO interview http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37446&cat=1360&Print=1
9. EVR on Muthuramalinga Thevar (Excerpted from Dinakaran book by Keetru) http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48
10. A Thevar website http://thevarkalam.blogspot.com/2010/03/blog-post_2039.html
11. A Devendrakula Web site recounting the riots http://devendrarsangamam.blogspot.com/2008/11/1957.html
12. பூ.கொ. சரவணன் பதிவு https://www.facebook.com/pu.ko.saravanan/posts/1631893846841685

"தன் சாதிப்பற்றை விடாமல், வெறுப்போடு மட்டும் ஆளுமைகளை அணுகுகிறவர்களுக்கு மகத்தான தலைவர்கள், மக்கள் சேவகர்கள், அடையாளங்களைத் தாண்டி அயராது இயங்கியவர்கள் ஒற்றைப்படையாகவே தெரிவார்கள்.

பெரியாரை ஹிட்லரோடு ஒப்பிட்டு எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார். திராவிட நிலப்பரப்பில் அறிவுஜீவிகளே இல்லை என்றும் அதில் முளைத்த கள்ளிச்செடியே பெரியார் என்றும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார். இது தமிழ் அறிவுப்பரப்பை முற்றாகத் தட்டையாக அணுகும் மேட்டிமைப்பார்வை. 
பெரியாரின் நாத்திகவாதம் தட்டையானது என்கிற பி.ஏ.கிருஷ்ணன் இந்துவாக நம்பிக்கை அதன் மீது நம்பிக்கை இல்லாதவரும் இருக்கலாம் என்று எழுதிய முத்துக்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்கு கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும். 
சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் 'சவார்க்கர் தேசபக்தர்' என்கிற பதிவில் கேட்டதற்கு 'அது தனிக்கதை' என்ற நடுநிலையாளர் அவர். அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு 'இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்' என முத்தை உதிர்த்தார். நேரில் பார்த்து உரையாடிய போது, 'தேசியக்கட்சிகள் ஆட்சி செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்' என்றீர்களே பி.ஏ.கிருஷ்ணன். எப்படி என்று இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கிறேன். தமிழ் பரப்பின் அறிவுஜீவியாக ராஜாஜி மட்டுமே உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடும். மகிழ்ச்சி.
பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, 'பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்' எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார். வேறு பல அரசியல் அறிஞர்களும் அதையே வழிமொழிவதை ஆதாரத்தோடு அடுக்கினாலும் பெரியார் மீதான வெறுப்பால் 'ஆஸ்டினே அத்தாரிட்டி' என்றீர்கள். இட ஒதுக்கீட்டை தாராளமாகத் தந்த நேரு ஏன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பை 1953-ல் இழுத்து மூடினார் எனத் தெரிந்து கொள்ளலாமா? திறமைக்கு இட ஒதுக்கீடு தடை என உறுதியாகக் கருதிய நேரு மனம் உவந்து தானாகவே தமிழகத்திற்கு இட ஒதுக்கீட்டை ஈந்தார் எனக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். எதேனும் கேள்விகள் கேட்டால், 'பெரியாரிய நாஜி' என முத்திரை குத்திவிட்டே உரையாடுவீர்கள். இனவாதம் பேசினார் பெரியார் என்கிற நீங்கள் அவர் இடைநிலை சாதிகளைக் கண்டித்துப் பேசியது குறித்து மூச்சு விடாதீர்கள். முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா? 
ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது. ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். அவரின் உழைப்பின் கனிகளாகவே நாங்கள் இருந்து விட்டுப்போகிறோம்."


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard