New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காமம் - தமிழ்ப் பாசுரங்கள் - ஒரு புரிதல் - சுதாகர் கஸ்தூரி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
காமம் - தமிழ்ப் பாசுரங்கள் - ஒரு புரிதல் - சுதாகர் கஸ்தூரி
Permalink  
 


காமம் - தமிழ்ப் பாசுரங்கள் - ஒரு புரிதல் - சுதாகர் கஸ்தூரி

https://srimangai.blogspot.in/2018/01/blog-post.html

 
காமம் பற்றிய இத்தனை வெளிப்படையான பாடல்கள் அவசியமா?

ஆரோக்கியமாக, அறியும் எண்ணத்துடன் கேட்டோர்  முதல் ’ மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய் தவ வேடம் கொண்ட’ முத்தநாதன்கள் வரை பலரின் கேள்விகள் கேட்டாகிவிட்டது.

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன?!  ”காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே “ என்ற பாடல்கள் இன்றும் நம் அறிவைச் சீராக்குபவை. நம் முன்னோர்கள் காமத்தை ஒரு இயற்கை உந்தம் என்றே கருதினார்கள். இல்லாவிட்டால், ஒழுக்கம் பற்றி எழுதிய அதே திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பால் என்பதை இன்பத்துப் பால் எனச் சொல்பவருண்டு. சிற்றின்பத்துப்பால் என எவரும் சொல்வதில்லை.

தமிழர் மரபுமட்டுமல்ல,  மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை.. கலியுகத்தில் சன்யாஸம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று  என்பதாக ப்ரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது ( 185.180). சன்யாசம் தவிர்ப்பது என்பது , இந்திரியங்களை வெறுக்காது, அதன்வழி ஈர்க்கப்பட்டு, அதனை அதன்மூலமே தாண்டிச் செல்வது என்பதான உத்தியின் முதல் எழுத்து.

இதனாலேயே கோவில்களின் கோபுரங்களிலும், வெளி மதிள்களிலும் காமத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். அதுவும் பல்லாண் சேர்க்கை, பல்பெண் சேர்க்கை எனச் சமுதாயம் தவிர்த்த சில உறவுகளையும் அதில் காணலாம். இது “ஒரே கடவுள்” கொள்கையைக் கொணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனை எள்ளி நகையாடியே, காமம் பற்றிய நமது ஆரோக்கியச் சிந்தையை அழித்தார்கள். நாமும் விட்டொழிந்தோம்.

வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும் , ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது. அது வெறுமைப் பெருவெளி என சிதம்பர ரகசியமாகவும், தேவதேவியர் இணைந்து இருந்து (ஆனால் ஒருமைப்படாது இருக்கும்) விசிஷ்டாத்வைதமாகவும், ஜீவ பரமாத்வா ஸ்வரூபங்கள் வேறு வேறு எனும் துவைதமாகவும், அல்லது உணர்ச்சிப்பெருக்கில் தாய் மகன் உறவாகும் சக்தி வழிபாடாகவோ மாறுகிறது. நம்மாழ்வார் பாசுரத்தில் வருவது போல் “ அவரவர் விதிவழி அடைய நின்றனர்”

இன்று ஒரு வகையில் மனத்தைப் பதப்படுத்தி (பக்குவப்படுத்தி அல்ல) இருப்பவர்கள் மற்றொரு அனுபவ முறையைக் குறை சொல்வதில் சமூக அதிர்ச்சியைக் கையாளுகின்றனர்.  ஒவ்வாக் காமம், சிறுபெண் எப்படி இத்தனை காமத்தை வழிய வழிய எழுத முடியும்? இது தேவையா? என்ற கேள்விகள் , பக்குவப்படாத மனத்தில் உளறல்களே அன்றி வேறில்லை.

பதின்ம வயதுச் சிறுவன் இன்று ஒரு கணித மேதையாகிறான். செயற்கரிய செய்கைகளைச் செய்து வியப்பிலாழ்த்துகிறான். இப்படித் தன் வயதிற்கும் மூப்பானவர்கள் செய்யவேண்டியதைத் திறம்பாகச் செய்கிறவர்களை என்ன சொல்கிறோம்? Child Prodigy.  இதனைத் தமிழ்ப்படுத்தினால்..?
பிஞ்சில் பழுத்தவர்கள் எனலாமா?

இதையேதான் மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பற்றிப் பாடுகையில் சொல்கிறார்.
அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம்செயலை
விஞ்சி நிற்கும் தன்மையளாய் : பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைச் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து


பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது?

‘அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய்? எனக் கேட்கிறார். அதன்பின்னரே ஆண்டாளின் பெருமை வெளியே தெரிகிறது. அவளது தெளிவான முடிவில், அரங்கநாதனையே அவள் அடைகிறாள். அவள் கோவிலில் வாழ்ந்திருந்தால், அதுவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆண்டாள் தவிர  வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும். இவற்றைச் சொன்ன பெண்கள் எவரின் குலம்,  பற்றிய விவரமே எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பார்ப்பதற்கில்லை. 

 பெண்களை அடக்குகிற சமூகமென்றால், ஆண்டாள் என்ற பாத்திரத்தையே வைணவம் அழித்திருக்கலாமே? ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது?   வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்வாரை  ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார்? கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன்? எனக் கேட்கிறார்.

ஏனெனில் பக்திக்கு விலக்கானது எதுவுமில்லை. ஜாதியோ, பாலினமோ ஒரு பொருட்டேயல்ல. நம்மாழ்வார் “குலம்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து... அடியார் தம்மடியார் இவ்வடிகளே” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார்  ”ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே“, “அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்... அடியரை உகத்திபோலும்”  என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

சரி, இளைஞர்கள் இந்த வெளீப்படையான காமப் பேச்சால் கெட்டுப்போய்விடமாட்டார்களா?  நகைப்பிற்குரிய கேள்வி இது. இதுவரை ஊடகங்கள் கொடுக்காத விஷமா , நாச்சியார் திருமொழி படித்து ஒருவன் காமத்தைத் தவறாகப் புரிந்து விடப்போகிறான்? நாச்சியார் திருமொழியை இளவ்யதில் படிப்பதைத் தடுப்பதன் காரணம், அதன் குறையல்ல. படிப்பவனின் முதிர்வுக் குறையை மனதில் கொண்டே.
நாச்சியார் திருமொழி சொல்பவருக்கு 60 வயதும், கேட்பவருக்கு 50 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது ஒரு சொல் வழக்கு. இன்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு 60 வயது என்பது மிக அபூர்வம். 50ம் அபூர்வம். அந்த வயதில் உடல் சார்ந்த கிளர்வல்ல வருவது, அறிவு முதிர்ந்து, காமத்தின் பின்னிற்கும் கடவள் தேடும் வேட்கை புரியும். எதையும் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். இந்தத் தகுதி அறிவு முதிர்வு மட்டுமே. இன்றைய 60 வயதினர் முதிராமல் உளறுவது, அவர்கள் பதின்ம வயதைத் தாண்டவில்லை என்பதையே காட்டுகிறது.

நாச்சியார் திருமொழி பற்றிச் சொல்லுமுன், திருப்பாவையைச் சொல்லிக்கொடுங்கள். திருமண வயதில் பெரியாழ்வாரின் கண்ணன் வளர்ப்பு பற்றிய பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். குளிப்பாட்டுவது, பூச்சூட்டுவது, காப்பிடுவது, சப்பாணீ கொட்டுவது, காக்கையை அழைத்து மை இடுவது .. இதையெல்லாம் அனுபவித்து உணரும் பருவம் தாண்டி , நாச்சியார் திருமொழி படித்தால், அக்காமம் கிளர்வாகத் தோன்றாது. அனுபவத்தில் தோய்த்தெழுந்து அதனைத் தாண்டும் ஒரு முதிர்வான உணர்வைக் கொடுக்கும். அதனை அவரவர் மட்டுமே உணர முடியும் ஏனெனில் இந்த அனுபவ உணர்வு தன்னிலைப்பட்டது. நம்மாழ்வார் சொல்வது போல்

 “எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே”
http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/
 

sudhakar_kasturiசுதாகர் கஸ்தூரி  இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட  சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 61747.83 ஹெர்ட்ஸ், வலவன் (டிரைவர் கதைகள்)  ஆகிய  புனைவு நூல்களை எழுதியிருக்கிறார்.

நெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும்  தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: காமம் - தமிழ்ப் பாசுரங்கள் - ஒரு புரிதல்
Permalink  
 


tg thulasiram on January 29, 2018 at 2:01 pm

தவம் என்றால் என்ன?

ஏன் ப்ராமண சன்யாசியான- ஸ்ரீராமாநுஜர் , பிக்ஷைக்குச் செல்லும் பொழுது கூட திருப்பாவையை மட்டுமே, விடாமல் சேவித்தார் ?

ஸ்ரீஆண்டாள் குலமறியாதவளா? மநு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?

“தபஸா கில்பிஷம் ஹந்தி”(-மனு-ஸ்ம்ருதி-1-21) – தவத்தினால் மனிதன் அசுத்தங்களை விலக்கிக் கொள்கிறான் / பாவங்களைப் போக்கிக்கொள்கிறான்.
“வித்யயா அம்ருதம் அஶ்நுதே” (-மனு-ஸ்ம்ருதி-1-21) – ஞானத்தினால் மோக்ஷம் அநுபவிக்கின்றான்.

தவத்தினால் சித்த சுத்தியை அடையும் நிலையும், ஞானத்தினால் மோக்ஷத்தை அநுபவிக்கும் பாக்கியமும், வேத அத்யாயன சிந்தனைகளினால் ஏற்படுகின்றது. ஆகையால் மநு ஸ்ம்ருதிப்படி வேதாத்யயனமே பெரும் தவமாக போற்றப்படுகின்றது.

இங்கு “தப :” என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஆலோசனை/சிந்தனை என்று பொருள்படும்.

யதா ஜாதபலோ வஹ்நிர் தஹத் ஆர்த்ராநபி த்ருமான் |
ததா தஹதி வேதக்ஞ கர்மஜம் தோஷம் ஆத்மந: || -மனு-ஸ்ம்ருதி-12-101

எப்படி பலமடைந்த அக்னி ஈரமரங்களையும் எரித்து விடுகிறதோ அதுபோல வேதமறிந்தவன் தனது கர்மங்களினால் ஏற்பட்ட தோஷங்களைப் பொசுக்கி விடுகிறான் என்கீறது. (ஆண்டாள் இதைத்தான், திருப்பாவை 5 ஆம் பாசுரத்தில் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்” என்று பாடினார்.)
பித்ருதேவ மநுஷ்யாணாம் வேதஶ்சக்ஷு ஸநாதநம் |- -மனு-ஸ்ம்ருதி-12-94

பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேதமே நிரந்தரமான-ஞானசாதனமாயுள்ள அகக்கண்ணாக இருக்கிறது என்று திரும்பத்திரும்ப, அடிக்கடி கூறி இருப்பது வேதத்யயன சிந்தனைகளின் தனிச் சிறப்பையும் ,வேதங்களின் உயர்ந்த தன்மையையும் வெகு அழுத்தமாக நிரூபிக்கக் கூடிய வகையில் அமைந்துளது.

மேலும் அது “வேதாப்யாஸே யத்நவான் “ என்று ஒரு அந்தணனானவன் வேதாத்யயனத்தில் எப்பொழுதும் முயற்சி உடையவனாக இருக்க வேண்டும் என்றும்

வேதம் ஏவ அப்யஸேந் நித்யம் யதா காலம் அதந்த்ரித: |
தம் ஹி அஸ்யாஹு பரம் தர்மம், உபதர்மோ அன்ய உச்யதே ||
– மனு-ஸ்ம்ருதி -4-147

பொருள்: – எப்பொழுதும் வேதாத்யயனத்தை நித்தியமாகச் செய்ய வேண்டும் என்றும், அது மிகவும் உயர்ந்த தர்மம் என்றும், மற்றவை அதற்கு அடுத்தபடியாகத் தாழ்ந்துள்ளவைதான் என்றும் மனுஸ்ம்ருதி பல தடவைகள், பன்முறையாக வற்புறுத்திக் கூறுகின்றது.

எனவேதான் ஸ்ரீராமாநுஜர் “வேதம் அனைத்துக்கும் வித்து” என்று திருப்பாவையைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தானும் அனவரதம் அதையே சிந்தித்தார்.
4000 பாசுரங்களுக்கும், திருப்பாவை -29 ஆம் பாசுரமான “சிற்றஞ் சிறுகாலே” பாசுரத்தை சாரமாக அறிவித்தார். அதனை எல்லா கர்பக்ருஹங்களிலும் தினமும் சேவிக்கவும் வைத்தார். தானும் பிக்ஷைக்குச் செல்லும்பொழுது கூட அதன் பொருள்களை சிந்தித்தார்.
இவ்வாறு ஸ்ரீஆண்டாள் அருளிய பாசுரங்களுக்கு, இவ்வளவு ஏற்றம் இருந்தது என்றால் அவளும்கூட அந்தணக் குலத்தைச் சார்ந்தவள் என்பது தெளிவாகவே விளங்கும். அவற்றுள் விரசம் சிறிதும் கிடையாது என்பதும் விளங்கும்.

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

tg thulasiram on January 29, 2018 at 2:03 pm

வாலி என்பவன் யோகமார்க்கத்திற்கான ஒரு குறியீடு ஆவான். ஆனால்
சுக்ரீவ மஹாராஜரோ வைதீக -ஶரணாகதி மார்க்க குறியீடு ஆவார். வாலி
யானவன் மராமரம் ஒன்றினை பிடித்து, அதனுடைய அனைத்து இலைகளும் உதிரும்படி செய்வானாம். இவ்வாறே ஏழினையும் வாலி தனித்தனியே
ஜெயித்தவன். இந்த மராமரங்கள் என்பன 1)மூலாதாரம், 2)ஸ்வாதிஷ்டானம், 3)மணிபூரகம், 4) அநாகதம், 5)விஶுத்தி, 6)ஆக்ஞா, மற்றும் 7) ஸஹஸ்ராரம்
என்பன. வாலியானவன் மலைச் சிகரங்களைப் பெயர்த்து மேலே எறிதலும்,
திரும்ப பிடித்தலும் அணிமா,லகிமா,கரிமா, லட்டு, பூந்தி, காராசேவையாகும்.
இவை யாருக்கு வேண்டும்? ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு “உண்ணும் சோறு பருகு நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” தானே.

கிஷ்கிந்தையில், ஸ்ரீராமர் தன்னுடைய ஒரே அம்பால் ஏழு மராமரங்
களையும் ஏககாலத்தில் துளையிட்டார் என்கிறது ஸ்ரீராமாயணம். இங்கு துளையிடுவது என்பது அழித்தல் தொழில் ஆகும். அம்மரங்களை கொல்லாமல் வெறுமனே துளையிட்டார் என்பது காத்தல் தொழில் ஆகும். இவ்விரண்டினையும் செய்தவன் உருவாக்கவும் தெரிந்தவன் என்பது தன்னடையே கிட்டும் கருத்தாகும். வாலி(ஜீவாத்மா) போன்று தனித்தனியே ஜெயிக்காமல் ,ஏக காலத்தில்
துளையிட்டது, ஸ்ரீராமர் முக்காலத்திற்கும் தலைவர், (பரமாத்மா) என்பதாகும்.

ராவணன் மனத்திற்கும், சீதை பிராட்டி ஜீவாத்மாவுக்கும் குறியீடுகள். அவனுடைய பத்து தலைகள் என்பன நமது (5 அறிவு+5செயல்) புலன்களாகும். விபீஷணன் ஸாத்வீக மனநிலைக்கும், கும்பகர்ணன் தாமஸ மனநிலைக்கும் இந்திரஜித் ராஜச மனநிலைக்கும் குறியீடுகளாம்.
வாலீ ராவணனை ஜெயித்தது, மனத்தை யோகத்தால் வெல்லுவதே.
ஸ்ரீராமர் ராவணனை வென்றது ஜீவாத்மா ஶரணாகதி செய்து மனத்தை வெல்லுவதே.
சித்தர்கள் அயனத்தில்(வழி) சென்று 3000 வருடங்கள் யோகம்
செய்து, மிகமிகக் கடினமாக அடையும் நிலையை, எம்பெருமான் மீது காதல்
செய்து வெகு எளிதாக,வெகு விரைவில் கிட்டுவது என்பது ஆண்டாளுடைய
அயனம் என்னும் ராம +அயனம் (அ) ஶரணாகதி/வைதீக மார்க்கம். மேலும்
சித்தர்கள் சென்றது கேவலமான கைவல்ய மோக்ஷம். ஆண்டாள் அடைந்ததோ “ஸ்ரீகண்ணனுடன் உற்றோமேயாகி அவனுக்கே ஆட்செய்வது”
கொங்கை(முலை), அல்குல்(இடை) ஆகிய பெண்ணின் அங்க
வ்ர்ணனைகள், பக்தியின் உச்சநிலை குறியீடுகள்தாம். கொங்கை
பூரித்து பெருத்தல் என்பது பெருமாளின் மீதான விருப்பையும், இடை
சிறுத்தல் என்பது உலக பொருட்களின் மீதான வைராக்கியத்தையும் (ஆசையின்மை) குறிக்கும்.

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
உள்ளைகொள்ளிக் குறும்பனைக் கோவர்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே.
நாச்சியார் திருமொழி-13-9

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard