ஆரோக்கியமாக, அறியும் எண்ணத்துடன் கேட்டோர் முதல் ’ மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய் தவ வேடம் கொண்ட’ முத்தநாதன்கள் வரை பலரின் கேள்விகள் கேட்டாகிவிட்டது.
காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன?! ”காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே “ என்ற பாடல்கள் இன்றும் நம் அறிவைச் சீராக்குபவை. நம் முன்னோர்கள் காமத்தை ஒரு இயற்கை உந்தம் என்றே கருதினார்கள். இல்லாவிட்டால், ஒழுக்கம் பற்றி எழுதிய அதே திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பால் என்பதை இன்பத்துப் பால் எனச் சொல்பவருண்டு. சிற்றின்பத்துப்பால் என எவரும் சொல்வதில்லை.
தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை.. கலியுகத்தில் சன்யாஸம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதாக ப்ரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது ( 185.180). சன்யாசம் தவிர்ப்பது என்பது , இந்திரியங்களை வெறுக்காது, அதன்வழி ஈர்க்கப்பட்டு, அதனை அதன்மூலமே தாண்டிச் செல்வது என்பதான உத்தியின் முதல் எழுத்து.
இதனாலேயே கோவில்களின் கோபுரங்களிலும், வெளி மதிள்களிலும் காமத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். அதுவும் பல்லாண் சேர்க்கை, பல்பெண் சேர்க்கை எனச் சமுதாயம் தவிர்த்த சில உறவுகளையும் அதில் காணலாம். இது “ஒரே கடவுள்” கொள்கையைக் கொணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனை எள்ளி நகையாடியே, காமம் பற்றிய நமது ஆரோக்கியச் சிந்தையை அழித்தார்கள். நாமும் விட்டொழிந்தோம்.
வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும் , ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது. அது வெறுமைப் பெருவெளி என சிதம்பர ரகசியமாகவும், தேவதேவியர் இணைந்து இருந்து (ஆனால் ஒருமைப்படாது இருக்கும்) விசிஷ்டாத்வைதமாகவும், ஜீவ பரமாத்வா ஸ்வரூபங்கள் வேறு வேறு எனும் துவைதமாகவும், அல்லது உணர்ச்சிப்பெருக்கில் தாய் மகன் உறவாகும் சக்தி வழிபாடாகவோ மாறுகிறது. நம்மாழ்வார் பாசுரத்தில் வருவது போல் “ அவரவர் விதிவழி அடைய நின்றனர்”
இன்று ஒரு வகையில் மனத்தைப் பதப்படுத்தி (பக்குவப்படுத்தி அல்ல) இருப்பவர்கள் மற்றொரு அனுபவ முறையைக் குறை சொல்வதில் சமூக அதிர்ச்சியைக் கையாளுகின்றனர். ஒவ்வாக் காமம், சிறுபெண் எப்படி இத்தனை காமத்தை வழிய வழிய எழுத முடியும்? இது தேவையா? என்ற கேள்விகள் , பக்குவப்படாத மனத்தில் உளறல்களே அன்றி வேறில்லை.
பதின்ம வயதுச் சிறுவன் இன்று ஒரு கணித மேதையாகிறான். செயற்கரிய செய்கைகளைச் செய்து வியப்பிலாழ்த்துகிறான். இப்படித் தன் வயதிற்கும் மூப்பானவர்கள் செய்யவேண்டியதைத் திறம்பாகச் செய்கிறவர்களை என்ன சொல்கிறோம்? Child Prodigy. இதனைத் தமிழ்ப்படுத்தினால்..?
பிஞ்சில் பழுத்தவர்கள் எனலாமா?
இதையேதான் மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பற்றிப் பாடுகையில் சொல்கிறார்.
அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம்செயலை
விஞ்சி நிற்கும் தன்மையளாய் : பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைச் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது?
‘அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய்? எனக் கேட்கிறார். அதன்பின்னரே ஆண்டாளின் பெருமை வெளியே தெரிகிறது. அவளது தெளிவான முடிவில், அரங்கநாதனையே அவள் அடைகிறாள். அவள் கோவிலில் வாழ்ந்திருந்தால், அதுவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும். இவற்றைச் சொன்ன பெண்கள் எவரின் குலம், பற்றிய விவரமே எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பார்ப்பதற்கில்லை.
பெண்களை அடக்குகிற சமூகமென்றால், ஆண்டாள் என்ற பாத்திரத்தையே வைணவம் அழித்திருக்கலாமே? ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது? வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்வாரை ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார்? கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன்? எனக் கேட்கிறார்.
ஏனெனில் பக்திக்கு விலக்கானது எதுவுமில்லை. ஜாதியோ, பாலினமோ ஒரு பொருட்டேயல்ல. நம்மாழ்வார் “குலம்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து... அடியார் தம்மடியார் இவ்வடிகளே” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் ”ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே“, “அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்... அடியரை உகத்திபோலும்” என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
சரி, இளைஞர்கள் இந்த வெளீப்படையான காமப் பேச்சால் கெட்டுப்போய்விடமாட்டார்களா? நகைப்பிற்குரிய கேள்வி இது. இதுவரை ஊடகங்கள் கொடுக்காத விஷமா , நாச்சியார் திருமொழி படித்து ஒருவன் காமத்தைத் தவறாகப் புரிந்து விடப்போகிறான்? நாச்சியார் திருமொழியை இளவ்யதில் படிப்பதைத் தடுப்பதன் காரணம், அதன் குறையல்ல. படிப்பவனின் முதிர்வுக் குறையை மனதில் கொண்டே.
நாச்சியார் திருமொழி சொல்பவருக்கு 60 வயதும், கேட்பவருக்கு 50 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது ஒரு சொல் வழக்கு. இன்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு 60 வயது என்பது மிக அபூர்வம். 50ம் அபூர்வம். அந்த வயதில் உடல் சார்ந்த கிளர்வல்ல வருவது, அறிவு முதிர்ந்து, காமத்தின் பின்னிற்கும் கடவள் தேடும் வேட்கை புரியும். எதையும் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். இந்தத் தகுதி அறிவு முதிர்வு மட்டுமே. இன்றைய 60 வயதினர் முதிராமல் உளறுவது, அவர்கள் பதின்ம வயதைத் தாண்டவில்லை என்பதையே காட்டுகிறது.
நாச்சியார் திருமொழி பற்றிச் சொல்லுமுன், திருப்பாவையைச் சொல்லிக்கொடுங்கள். திருமண வயதில் பெரியாழ்வாரின் கண்ணன் வளர்ப்பு பற்றிய பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். குளிப்பாட்டுவது, பூச்சூட்டுவது, காப்பிடுவது, சப்பாணீ கொட்டுவது, காக்கையை அழைத்து மை இடுவது .. இதையெல்லாம் அனுபவித்து உணரும் பருவம் தாண்டி , நாச்சியார் திருமொழி படித்தால், அக்காமம் கிளர்வாகத் தோன்றாது. அனுபவத்தில் தோய்த்தெழுந்து அதனைத் தாண்டும் ஒரு முதிர்வான உணர்வைக் கொடுக்கும். அதனை அவரவர் மட்டுமே உணர முடியும் ஏனெனில் இந்த அனுபவ உணர்வு தன்னிலைப்பட்டது. நம்மாழ்வார் சொல்வது போல்
“எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே”