பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.
சிவப்பொருளை உள்ளீடாகக் கொண்டு, உறுதிப்பொருளுரைக்கும் மெய்யாற்றுப்படை இதுவென்று சைவத் தமிழர்களால் பேசப்படுவது; தலைமுறைகளால் பேணப்படுவது திருமந்திரம்.
சமய மறுப்பாளரும் இதனைச் சமயநூலென்று கருதவியலாது. நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய திருக்கோயில்கள் கண்டவிடத்து, சிற்பக் கலைக்குச் செழுமை சேர்த்த இனத்தார் பெருமை இதுவென்று கடவுள் மறுப்பாளரும் களிகூருமாறுபோல, திருமந்திரத்தின் சிவப்பொருள் கழித்தும் இது தமிழர் தத்துவ சாரத்தின் தனிப்பனுவல் என்று தடந்தோள் விரியலாம். இது அறமாக விளங்கும் தமிழர் மெய்யியலுக்கு வரமாக வந்த வரவென்றும், வெவ்வேறு கால வெளிகளில் விளங்கிவந்த தமிழர் தம் தத்துவ முத்துக்களை ஆரவாரமில்லாமல் தொடுத்த அறிவாரமென்றும் தமிழ்ச்சமயம் கருதுகிறது.
மந்திரம் என்ற சொல்லாட்சியை முன்னிறுத்தி, 'ஸ்ரீமந்த்ர மாலிகா' என்னும் வடமொழி நூலின் தமிழ் வடிவுதான் திருமந்திரம் என்று கருதிக் கழிந்தாருமுளர். ஆனால், மந்திரம் என்ற சொல் -
''நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப''
என்று தொல்காப்பியத்திலேயே துலங்கி விளங்கிப் புழங்குகிறது. மேலும் அவர்கள் விடயமாகச் சுட்டிய அந்த வடமொழி நூலுக்குத் தடயமே இல்லை. ஆகவே, இது தமிழர் தத்துவத்தின் முழுமுதல் காட்டும் முதுநூல் என்று கொள்வதே உண்மையை மகிழ்வுறுத்துவதாகும்.