கம்பன் என்றொரு கலைத்தமிழ்த் தத்துவத்தை ஜவஹர்லால் நேருவிடமிருந்து தொடங்க நேர்கிறது. "கண்டடைந்த இந்தியா' என்ற தம் நுண்ணாய்வு நூலில் மகாகவி காளிதாசன் என்ற யுகநிகழ்வைப் படம் பிடிக்கப் போந்த பண்டிதர், கட்டுரையாசிரியர் என்ற நிலையிற் கனிந்து கவிஞராகிறார். அது இது:
"கவிதையின் வடிவத்தைப் போலவேகவிஞனின் அறிவுமுதிர்ச்சியும் கவிதைக்கு இன்றியமையாதது. கவிதையின் சரளம் அபூர்வமானதன்று; அறிவு முதிர்ச்சியும் அபூர்வமானதன்று. இவை இரண்டின் சங்கமமே அபூர்வமானது. இவ்வுலகில் இவ்விரண்டின் சங்கமமும் உலகம் உருவான நாளிலிருந்து பத்துப் பன்னிரண்டுமுறை ஏற்பட்டிருக்கலாம். அவற்றுள் ஒன்றுதான் காளிதாசன்'.
அந்தப் பத்துப் பன்னிரண்டு யுகசங்கமங்களுள் ஒன்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சோழவானத்தின் கீழே ஒருமுறை நிகழ்ந்துள்ளது என்ற உண்மையைப் பண்டிதர் அறியாதது விதியின் பிழையன்று; கம்பனை அவர் கண்களுக்கருகே காட்சிப்படுத்தாத நம் மதியின் பிழை.
மனிதச்சிசுவைப் பத்து மாதம்தான் ஒரு தாய் சுமக்கிறாள். ஆனால் கம்பன் என்ற மகாகவியைப் பன்னிரண்டு நூற்றாண்டுகள் தன் கருவில் தமிழ்த்தாய் தரித்திருக்கிறாள்.
மொழியின் சரளம் ஒருநாளில் விளைவதன்று. புவியின் மேலோட்டின்மீது ஒரு செ.மீ மண் உற்பத்தியாவதற்கு 1000 ஆண்டுகள் ஆவதைப்போல சரளம் படிவதற்கு ஒரு மொழி பன்னூறாண்டுகள் பதமுற்றிருக்க வேண்டும்.
தொங்குசதையற்ற அகவல் யாப்பால் கட்டமைக்கப்பட்ட சங்க இலக்கியம் தமிழுக்கு ஓர் இழுமென் ஓசை வழங்கியிருந்தது; அறங்கூறும் ஆணைமொழியைத் திருக்குறள் தமிழுக்குத் தந்திருந்தது.
காப்பியப் பெருவடிவத்திற்கு இளங்கோவடிகள் மொழியைப் பழக்கியிருந்தார். காவிய அலகுகளையும் அழகுகளையும் திருத்தக்க தேவர் வரையறை செய்திருந்தார். இறைநம்பிக்கையற்ற அன்பருக்கும் ஓதும்போது என்புருக்கும் தேவாரத் திருப்பதிகங்கள் தமிழைக் குழைய வைத்திருந்தன. ஆழ்வார்கள் பாடிப் பரவிய பரவசப் பாசுரங்கள் மொழிக்கு ஒரு சௌந்தர்ய ஒய்யாரம் தந்திருந்தன.
இல்லாதன பெறுவதற்கும் சொல்லாதன சொல்வதற்கும் தமிழ் தகித்துக் கிடந்தது. பெரும்பகை புறம்கண்டு வெற்றிகளையெல்லாம் வீட்டுக்குள் குவித்து வைத்துக் கலையோடும் மொழியோடும் வாழ்வைத் துய்க்கச் சோழநாட்டுத் தமிழ்ச் சமூகம் தன்னைச் சமைத்திருந்தது.
இந்தக் கால அலைவெளியில்தான் முன்னோர்கள் பதப்படுத்திய மொழிச் சரளத்தோடும் போர்ச் சமூகம் தந்த அறிவு முதிர்ச்சியோடும் கவித்துவம் புரியவருகிறான் கம்பன்.
தன் அறிவென்ற பெரும்பொருளை இறக்கிவைக்க இந்தப் பச்சைபோன பனை ஓலை "பத்தா'தென்று, வானமென்ற அகன்ற திரைச்சீலை கிழித்து, உலகத்து வண்ணமெல்லாம் பிழிந்து கிண்ணம் நிரப்பி, பேரண்டத்தின் பேருண்மைகளைத் தமிழ்த் தூரிகைகொண்டு வரையத் துணிகிறான் வரகவி.
நீர்க்குமிழ்தான் வாழ்வு என்று நம்பப்பட்டது. அதற்குள் அது நிகழ்த்திப்போகும் நிறப்பிரிகை சொன்னவன் கம்பன்.
மனிதவாழ்வு மரணத்தில் முடியும்
சிறுமையுடைத்து என்று நம்பப்பட்டது. ஆனால் மரிக்கும் வாழ்வின் மரிக்காத பெருமைகளைச் சொல்லிச் சென்றவன் கம்பன்.
மொழி என்பது கருத்துக்களை ஒன்று கூட்டும் ஒலிச்சந்தை என்றே நம்பப்பட்டது. இல்லை... அது ஒரு பண்பாட்டின் இசைக்கூட்டம் என்று உணர்ந்தோதியவன் கம்பன்.
"மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிர் உள்ளவும் அல்லவும் அஃறிணை' - என்று நம்பப்பட்டது. உயர்திணையில் உள்ள அஃறிணைச் சிறுமைகளையும் அஃறிணையில் உள்ள உயர்திணைப் பெருமைகளையும் கண்டு தெளிந்து கலைசெய்தவன் கம்பன்.
போர் வெற்றிதான் புகழின் கல்வெட்டு என்று நம்பப்பட்டது. இல்லை...
யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது - என்று எதிர்வினை ஆற்றியவன் கம்பன்.
காளிதாசன் போன்றதொரு யுக நிகழ்வுதான் கம்பனும் என்பதைக் கண்டு தெளிய இருபெரும் கவிகளையும் உறழ்ந்துபார்ப்பதே உத்தமம்.
விலங்குகள் - பறவைகள் - பூச்சிகள் - தாவரங்கள் ஆகிய உயிர்த் தொகுதிகளோடு மனிதகுலத்துக்குரிய மரபுத் தொடர்ச்சியை விஞ்ஞானிகள் உணர்த்துவதற்கு முன்பே விளங்க உணர்ந்தவர்கள் கவிஞர்கள்.
கனவு காண்பவன் கவிஞன்; அதனைக் கண்டடைபவனே விஞ்ஞானி.
காதலைக் கொண்டாடுவதற்கு இரு மகாகவிகளும் இரு பறவைகளைத் துணைக்கழைக்கிறார்கள். காளிதாசன் துணைக்கழைப்பது குயிலை; கம்பன் துணைக்கழைப்பது மயிலை.
சிவபெருமான்மீது மனம் தோய்ந்த பார்வதியாளுக்கு நாணமென்னும் மெய்ப்பாடு நிகழ்கிறது. ஆயினும் தன் காதலைத் தானே மொழியாமல் தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள். குமார சம்பவத்தின் எட்டாம் சருக்கத்தில் காளிதாசன் இதை எழுதுகிறான்:
"நாணமென்னும் மெய்ப்பாடு போதாதா? தோழியை ஏன் தூதுவிடுக்கிறாள்? என்னதான் வசந்தத்தின் வருகையை மாந்தளிர்கள் உணர்த்தினாலும் மாங்குயிலின் துணையோடுதானே மாமரம் பேசுகிறது?'
கற்றதும் நெஞ்சு களிகொண்டாடுகிறது. "உன் கைகளைக்கொடு காளிதாசா முத்தமிட வேண்டும்' என்று மூச்சு முட்டுகிறது.
பாலகாண்டத்தின் நாட்டுப்படலத்தில் காதல் கொண்டாடும் கம்பனோ மயிலைத் துணைக்கழைக்கிறான். பெண்ணை மயிலோடு படிமப்படுத்துவது கவிதைமரபு. ஆனால் கம்பன் அதை நிறுவுகிற நேர்த்தியோ நிகரற்றது. அந்தப்பெண்கள் மயில்களைப் போன்றவர்கள். எந்த அளவுக்கெனில் - ஆண்மயில்கள் எல்லாம் தங்கள் பேடைமயில்கள் என்றுகொண்டு அந்தப் பெண்களைத் பின்தொடர்ந்து போகுமளவுக்கு.
இடங்கொள் சாயல்கண்டு
இளைஞர் சிந்தைபோல்
வடங்கொள் பூண்முலை
மடந்தை மாருடன்
தொடர்ந்து போவன
தோகை மஞ்ஞைகள் - இது கம்பசித்திரம்.
பெண்கள் பின்னால் "பயல்கள்' தொடர்வது பாலொழுக்கம்; மயில்கள் தொடர்வது பால் மயக்கம்.
காளிதாசன் ஒரு பறவையை மனிதக் காதலுக்குத் துணையாக வைக்கிறான். கம்பனோ ஒரு பறவையை மனிதக் காதலுக்கு இணையாக வைக்கிறான்.
இவ்விரண்டு படிமங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, காளிதாசனை முத்தமிடக் கைகளைக் கேட்ட நான், நெஞ்சு நிலம்பட நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்க "உன் கால்களெங்கே கம்பா' என்று கசிந்து கேட்கிறேன்.
ராமனைக் கொண்டாடக் கடுகளவு பக்தி இருந்தாலே போதும். ஆனால் கம்பனைக் கொண்டாட உலகியல் - உளவியல் - தமிழியல் - அழகியல் - ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணும் கலையியல் - அழியும் மனிதக் கூட்டத்தின் அழியாத அறவியல் ஆகிய அனைத்தும் கூடிப்பெற்ற கொள்ளையறிவு வேண்டும்.
வேள்விப் படலத்தில் விசுவாமித்திர முனிவனின் ஆசிரமத்தைக் கண்ணை இமைகாப்பதுபோல் காவல் காக்கிறார்கள் இராம இலக்குவர் இருவரும்.
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவர்
வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மண்ணின்
மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையிற்
காத்தனர் - இது கம்பனின் கவியாடல்.
இதில் சொற்களின் மேற்பரப்பில் மேய்வோர்க்குக் குறும்பொருள் மட்டுமே கிட்டும். சொற்களின் வேர்வழியே ஆழஞ்செல்வோர்க்கு மட்டுமே அரும்பொருள் கிட்டும்.
செய்யுட் துய்ப்பை திராட்சா பாகம் - கதலீபாகம் - நாரிகேளபாகம் என்று முவ்வகையாய்ப் பகுக்கிறது வடமொழி மரபு. திராட்சாபாகம் என்பது திராட்சைப் பழம்போல. வாயிலிட்டு முயற்சி ஏதுமின்றி முற்றும் சுவைப்பது. அதாவது பயின்றதும் பொருள் துலங்கும் செய்யுள். கதலீபாகம் என்பது வாழைப்பழம். சிறு முயற்சியால் உரித்ததும் உண்ணச் சுவைதருவது. அதாவது சற்றே முயலப் பொருள் விளங்கும் செய்யுள். நாரிகேளபாகம் என்பது "தெங்கம்பழம்'. அதாவது தேங்காய். சொல்லின் நார் உரித்து அதன் ஓடு கடந்து உட்கூடுபுக - தெங்கம்பழமென்னும் தின்பண்டமாகிய வெண்பண்டம் தோன்றுவது; உறுதியான பொருளுக்குக் கீழே உறுதிப்பொருள் பயப்பது. அதாவது, சொற்களைக் குடைந்து குடைந்து அதன் மையப்பொருள் அடைந்தால் செழும்பொருள் காட்டும் செய்யுள். மேற்குறித்த கம்பனின் செய்யுளை நாரிகேளபாகம் என்று கொள்ளலாம்.
இராமர் - இலக்குவர் இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் வேள்வி காத்தனர் என்பது தேங்காயின் மேற்பொருளாகிய நார்ப்பொருள். மேலிமை பெரிதாகையால் அது இராமன் என்பதும் கீழிமை சிறிதாகையின் அது இலக்குவன் என்பதும் உரிக்கத் துலங்கும் ஓட்டுப்பொருள்.
இனிமேல்தான் உள்ளது ஓடுகடந்த உட்பொருள்.
மேலிமை அசைவுடையது; கீழிமை அசைவற்றது. கீழிமையாகிய இலக்குவன் வேள்விக்குடில் வாசலில் அசையாது நின்று காக்கிறான். மேலிமையாகிய இராமனோ அசைதலாகிய தொழிற்பட்டு ஆசிரமத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறான். மேலிமை இறங்கி வந்து கீழிமையைத் தொடுதல்போல ஒவ்வொரு சுற்றிலும் இராமன் இலக்குவனைத் தொட்டு விழிப்புறுத்தி வினைப்படுகிறான். இதுதான்
ஓட்டுக்குள்ளிருக்கும் பாட்டுப்பொருள்.
இப்படி உட்குடைவோர்க்கெல்லாம் உறுபொருளும் விரிபொருளும் உரைப்பதுதான் கம்பனின் படைப்பு விடைப்பு.
தமிழ், தவத்தில் பிறந்தமொழி; ஆனால் தமிழன் தவக்குறையுடையவன். ஹோமர் - வர்ஜில் - தாந்தே - மில்டன் - ஷேக்ஸ்
பியர் என்ற உலகக் கவிகள் பெற்ற புகழைக்கூட அல்ல... வால்மீகி - காளிதாசர் - வியாசர் போன்ற உள்ளூர்க் கவிகள் பெற்ற புகழைக்கூட எங்கள் பெருங்கவி கம்பன் பெற்றானில்லை. இந்த உலகக் கவிகள் யாவருக்கும் இலக்கியச்செய்திறத்தில் கம்பன் இளைத்தவனில்லை; மானுட உறுதிப்பொருள் உரைத்த உயரத்தில் எவருக்கும் குறைந்தவனில்லை.
கம்பரையும் ஷேக்ஸ்பியரையும் ஓர் ஒப்பீட்டுக்கு உள்ளாக்குவோம்.
ஓர் உள்ளத்தை அறத்துக்கு வெளியே ஆற்றுப்படுத்தி அல்வினைக்குத் தூண்டுதல் என்ற ஒரே உள்ளடக்கத்தில் கவிகள் இருவரும் கலை செய்திருக்கிறார்கள். கணவன் மனதைத் திரிக்கிறாள் மாக்பெத் சீமாட்டி; கைகேயி மனதைத் திரிக்கிறாள் மந்தரை மூதாட்டி. இவ்விரு கலைப்பாடுகளையும் உறழ்ந்து பார்த்தால் உண்மை துலங்கும்.
ஸ்காட்லாந்து அரசன் டங்கன். அவன் தளபதி மாக்பத். தன் கணவனை அரசனாக்க டங்கனைக் கொலைசெய்யத் தூண்டுகிறாள் மாக்பத் சீமாட்டி.
'கொலைக் கருத்துக்களை வளர்க்கும் பூதங்களே! என் பெண்மையைத் திரித்து உச்சி முதல் உள்ளங்கால்வரை கழிபெருங் கொடுமையால் என்னை நிரப்புங்கள். கொலைக்குத் துணைபோகும் சக்திகளே! என் கொங்கையில் புகுந்து முலைப்பாலைப் பித்தமாய்த் திரித்து உங்கள் வன்கண்மையின் துணைகொண்டு என் தீவினைக்கு ஏவல் புரியுங்கள்' என்று கொலைக்குத் துணைபோகத் தன்னை முதலில் தயாரிக்கிறாள் மாக்பத் சீமாட்டி.
பிறகு தன் கணவனை வம்புக்குக் கொம்பு சீவுகிறாள்:
"ஊசலாட்டம் அச்சத்தின் அறிகுறி. உமது துணிச்சலுக்கு முடிந்த அளவு முறுக்கேற்ற வேண்டும். நேர்மைவேடம் பூண்டு காலத்தை ஏமாற்ற வேண்டும். மாசற்ற பூவாய்க் காட்சிதர வேண்டும். அதனடியில் உறையும் பாம்பாய்ச் செயல்பட வேண்டும். பொய்நெஞ்சம் காட்டிக் கொடுப்பதைப் பொய்முகத்தால் மறைக்க வேண்டும்'.
மாக்பத்தின் மனதை மாற்றுவதற்கு அவன் மனைவி செய்யும் வாதம் இவ்வளவுதான்.
மாக்பத் மனது ஏற்கெனவே ஆசையால் காய்ந்துபோன விறகு; அதைப் பற்றவைப்பது எளிது. ஆனால் கைகேயி மனது வாழைத்தண்டு. அதைப் பற்ற வைப்பது அரிது. கம்பனிடம் கடன் நெருப்பு வாங்கிப் பற்றவைக்கிறாள் மந்தரை.
* நீ வீழ்ந்தாய்; கோசலை வாழ்ந்தாள். இனி நீயும் நின் மைந்தனும்(மானமிழந்து) துயர்ப்படலாம்; நான் மாற்றாளின் தாதியர்க்கு அடிமைசெய்யேன்.
* மூத்தவன் இருக்க இளையவன் அரசுபெற ஆகாதெனில் வயதில் மூத்தவனாகிய தசரதன் இருக்க அவனினும் இளையனாகிய இராமன் மட்டும் எப்படி அரசு பெறலாம்? இனி கோசலை தரும் பொருளல்லால் உனக்கும் உன் மகனுக்கும் வேறுரிமை ஏது? நின்னைத் தேடிவந்து இரப்பவர்க்குக் கோசலையிடம்தான் இரந்து தருவாயோ? அன்றி இல்லையென்று நாணுவாயோ? விம்மி விம்மிச் செத்தழிவாயோ?
* தசரதனுக்கு அஞ்சித்தான் இராமனின் மாமன் உன் தந்தையை அழியாதுள்ளான். இனி உன் தந்தைக்கு வாழ்வுண்டோ?
* இராமன் முடிசூடினால் பிற்காலத்து அரசுரிமை அவன் மைந்தர்க்கோ தம்பி இலக்குவனுக்கோ சென்று சேருமன்றி உன் மகன் பரதனை ஒருபோதும் சேராது.
-இவையும் இன்ன பிறவும் பேசிப்பேசி வாழைத்தண்டை எரியூட்டுகிறாள்
மாகொடிய மந்தரை.
மண்ணின் அரசியல் - பெண்ணின் உளவியல் - மாறும் உலகியல் - மாறாத பொருளியல் - உறுத்தும் உறவியல் - உடையும் அறவியல் என்ற அனைத்துத் தத்துவங்களையும் ஒரே படலத்தில் உள்ளடைத்து தர்க்கவியலால் கைகேயியைத் தகர்த்தெறிகிறான் கம்பன்.
இந்த இரண்டு மனமாற்றங்களையும் நிகழ்த்திய கவிகளை ஒரே உரைகல்லில் வைத்து உரசிப்பார்த்தால் ஷேக்ஸ்பியரினும் கம்பர் மிக்கார் என்பது புலப்படும். கம்பர் மிக்கார் என்பதை ஷேக்ஸ்பியர் அன்பர் சிலர் ஒப்பாராயினும் ஷேக்ஸ்பியரோடு கம்பர் ஒப்பார் என்பதை ஒப்புவர்.
வால்மீகியோடு கம்பனை உராய்ந்து ஒப்பிடுவது தவிர்க்கவியலாதது. மற்றும் அது ஒரு காவியத் தேவையாகவும் கருதப்படுகிறது. வால்மீகியின் முதல் நூலிலிருந்து மரபு பிறழாத விகற்பகங்கள் செய்ததுதான் கம்பனின் பண்பாட்டு விழுமியத்திற்கு நிலைத்த சான்றாய் நிற்கிறது.
வாலி என்ற ஒற்றைப்பாத்திரத்தை இருபெரும் கவிகளும் இருவேறு உயரத்தில் இருத்துகிறார்கள். இராமனின் வாளியை நெஞ்சில் தாங்கிய வாலியின் வாய் மொழியை இருகவிகளும் இருவேறு நிலைகளில் நிகழ்த்துகிறார்கள்.
வால்மீகியின் வாலி தன்னை முன்னிலைப்படுத்தியே பேசுகிறான்; சுடுசரம் விட்டவன்மீது சுடுமொழி வீசுகிறான்.
"நீயா அரச குலத்தவன்? பூக்களால் மூடப்பட்ட பாழ்கிணறு நீ. தபசி வேடத்தில் பாவி நீ. என்னைக் கொல்ல ஏது காரணம்? என் தோலை முனிவர்கள் அணியார். உன்போன்ற தபசிகள் என் மாமிசம் புசியார். என்னை ஏன் பயனற்ற வழியில் பலிகொண்டாய்? மனைவியைக் கவர்ந்தவன்மீது காட்டாத வீரத்தை நிரபராதியாகிய என்மீது ஏன் ஏவினாய்? கண்ணுக்குத் தெரியாத கரமொன்றால் கொல்லப்படுகிறேன். உறங்கிக் கொண்டிருந்தவனைப் பாம்பு தீண்டிவிட்டது'
உயிர்வாதையை முன்னிலைப்படுத்தியே வால்மீகியின் வாதம் நிகழ அறத்திற்கு நேர்ந்த பழிகுறித்தே கம்பனின் வாதம் கவலையுறுகிறது.
"இராமா! அறம் திறம்பினாய். உனக்கேன் பழிதேடிக்கொண்டாய்? என்பால் எப்பிழை கண்டாயப்பா? நாட்டில் ஒரு புதுமை செய்தாய்; உன்னரசை உன் தம்பிக்கீந்தாய். காட்டிலொரு புதுமை செய்தாய்; என்னரசை என் தம்பிக்கீந்தாய்' என்றெல்லாம் கசிந்துருகும் கம்பன்வாலி, இறுதியில் இராமனால் வீழ்த்தப்பட்ட அறத்தைத் தன் துய்ய மதியால் தூக்கி நிறுத்துகிறான்.
ஆவியை சனகன் பெற்ற
அன்னத்தை; அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர்
திகைத்தனை போலும் செய்கை
-என்று கொன்றவனுக்காகக் கொல்லப்பட்டவன் கருணைமொழி காட்டுகிறான்.
"நீ மனமறிந்து செய்யவில்லை இராமா. மனைவியைப் பிரிந்த திகைப்பால் நீ மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்டாய்' என்று இராமனை மன்னிக்கும் காரணத்தை வாலியே கற்பிக்கிறான்.
திகைத்தல் என்ற சொல்லுக்கு "பிரமித்தல் - மயங்கல்' என்று பொருள் காட்டுகிறது கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி. சீதையைப் பிரிந்த இராமன் திகைத்துவிட்டான், அதாவது மதி
மயங்கிவிட்டான். மதிமயக்கத்தில் ஒருவன் செய்யும் பிழை குற்றமாகாது.
1860-இல் வகுக்கப் பெற்ற இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 84-ஆம் பிரிவு பின்வருமாறு பேசுகிறது:
"மனத் திரிபின் காரணமாகத் தாம் செய்யும் செயலின் தன்மையையோ அது பிழையானதா சட்டத்துக்குப் புறம்பானதா என்பதையோ அறிந்துகொள்ள இயலாமல் ஒருவர் செய்யும் செயல் எதுவும் குற்றமாகாது'.
இந்தியத் தண்டனைச் சட்டம் எழுதப்படுவதற்குச் சற்றொப்ப எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்படாத சட்டத்தை ஒரு கவிஞன் இயற்றியிருக்கிறான். சட்டத்தின்மீது அறத்தின் ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறான். கொல்லப்பட்டவனே குற்றவாளியின் தண்டனையைத் தவிர்த்துவிட்டுச் செத்திருக்கிறான்.
கவிஞனாகிய மனிதன் கடவுளைக் காப்பாற்றிய காரியம் கம்பனில் சம்பவித்திருக்கிறது.
கம்பனால் மொழிப்பெருக்கம் கண்டது தமிழ். எழுத்தில் கழிந்த வினைகளையும், நாவில் தொலைந்த பெயர்களையும் துலக்கிப் புதுக்கி எதுகையில் இருத்திப் புழங்காச் சொற்களுக்கும் புத்துயிர் தந்தான் கம்பன். பிறமொழிக் கலப்பு ஒரு மொழியின் பெயர்ச் சொற்களைச் சிதைக்கும் அளவுக்கு வினைச் சொற்களைச் சிதைக்கவியலாது. பன்மொழிப் படையெடுப்புக்குப் பிறகும் தமிழ் வீழ்ந்துவிடாமல் நிலைக்கக் காரணம் அது வினைச்சொற்களின் வேர்களில் நிற்பதுதான். அந்த வினைச் சொற்களை மழைச்சரமாய் அள்ளியெறிந்தவன் கம்பன்.
இராமன் முடிசூடும் சேதிசொன்ன மந்தரைக்கு மாலையொன்றைப் பரிசளிக்கிறாள் கைகேயி. அதனால் சினமுற்ற மந்தரையைச் சித்திரிக்கும் கம்பனின் கவியொன்று காட்டும் வினைச்சொற்களின் வெறியாட்டத்தை.
தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக
விழித்தனள் வைதனள் வெய்துயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன்
மாலையால்
குழித்தனள் நிலத்தைஅக் கொடிய கூனியே
தெழித்தல் - உரப்பல் - விழித்தல் - வைதல் - உயிர்த்தல் - அழித்தல் - அழுதல் - குழித்தல் என்று நான்கடிப் பாடலில் கம்பன் எட்டு வினைகள் செய்கிறான். இந்த வினைச்சொற்கள் மீதுதான் வினைப்படுகிறது தமிழ்; அந்தத் தமிழ்மீது நிலைபெறுகிறான் கம்பன்.
இராவணன் என்ற மகாபாத்திரத்தை எதிர்வினையாளன் என்று புனையாமல், எதிர்நாயகன் என்று வனைந்ததில் வரையினை எடுத்த அவன் தோள்களைப் போலவே கம்பனும் உயர்ந்து பரந்து விரிந்து போகிறான்.
ஒரு படைப்பின் நிலைபேறு என்பது யாது?
சௌந்தர்ய உபாசனை புரிவதும், அழகியலை அள்ளிப் பூசுவதும், சந்திர சூரியச்சாறு பருகத் தருவதும், மொழித்திறம் காட்டுவதும், கவித்திறன் நாட்டுவதும், வாழ்வின் போக்கில் வாழ்வைப் பதிவு செய்வதும், விதி என்ற பேரியாற்றில் வாழ்வு ஒரு குமிழி என்று நிலையாமையை நிலைப்படுத்துவதும், கடைசியில் வாழ்வைக் கடவுளுக்குப் பலியிட்டுக் கரைவதும் ஒரு படைப்பின் நிலைபேற்றுக்குப் போதுமானவை அல்ல. இந்தப் புவிக்கோள்மீது தோன்றியிருக்கும் தோன்றவிருக்கும் அனைத்துயிர்களுக்குமான அறம்தான் ஒரு கலைப்படைப்புக்கு நிலைபேறு தருகிறது. உடலும் உடல் சார்ந்த பொருள்களும், மனமும் மனம்சார்ந்த உலகமும் என்று இருகூறாய் இயங்கும் மனிதவாழ்வை அங்கிங்கு அலையவிடாமல் அறம் என்ற முளையடித்துக் கட்டிவைத்தவன் கம்பன். அந்த அறத்தின் மீதுதான் நிலைபெறுகிறது கம்பகாவியம். கம்பனின் ராமகாதை மதத்தையோ கதைநாயகனையோ காப்பாற்றப் பிறந்ததன்று; அறம் காக்கவே பிறந்தது.
அண்மைக் காலமாய் ஒரு குரல் வடக்கிலிருந்து கேட்கிறது : இராமன் உள்ளவரை இந்துமதம் இருக்கும்; எனவே இராமனைக் காப்பாற்றுங்கள். இந்துமதம் உள்ளவரை இராமன் இருப்பான்; எனவே இந்துமதத்தைக் காப்பாற்றுங்கள்.
தெற்கிலிருந்து ஒரு மாற்றுக்குரல் கேட்கிறது : தமிழ் உள்ளவரை கம்பன் இருப்பான்; எனவே தமிழைக் காப்பாற்றுங்கள். கம்பன் உள்ளவரை தமிழ் இருக்கும்; எனவே கம்பனைக் காப்பாற்றுங்கள்.