By கவிஞர் வைரமுத்து | Published on : 08th September 2017 04:09 PM |
அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் என்ற கிறித்தவரும், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மைந்தர் சாமிநாதன் என்ற அய்யரும் தோன்றாதுபோயின் திராவிடம் என்ற கலாசாரக்கட்டமைப்புக்குக் கச்சாப்பொருள் இல்லாது போயிருக்கும்.
ஆரியம் - திராவிடம் என்ற இரு சொற்களும் வடமொழி - தமிழ் என்ற பொருள் குறிக்கும் சுட்டுகளாகவே வழங்கப்பட்டு வந்தன.
''ஆரியம் தமிழோடு இசையானவன்'' என்று அப்பர் பதிகத்தில் ஆளப்பெறும் ஆரியம், வடமொழியை மட்டுமே சுட்டுகிறது. ஞானசம்பந்தன் என்ற ஒரு பிராமணக் குழந்தை 'திராவிட சிசு' என்று அடைமொழி பெறுமிடத்து அது தமிழ் மொழியை மட்டுமே சுட்டுகிறது.
வேதாந்த தேசிகர் - தாயுமானவர் போன்ற முன்னோடிகளும் திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்ற பொருள் வரையறைக்குள் மட்டுமே எடுத்தாளு
கிறார்கள். கும்பகர்ணன் இராவணனை 'ஆரிய' என்று விளித்தபோதும், பாரதியார் 'ஆரிய ராணியின் வில்' என்று களித்தபோதும் உயர்ந்தோர் சிறந்தோர் என்ற பொருள் மட்டுமே உணரப்பட்டது.
இவ்வண்ணமாக ஆரியம் என்பது வடமொழியென்றும், திராவிடம் என்பது தமிழ்மொழியென்றும் அறியப்பட்டும் ஆளப்பட்டும் வந்த நிலையில் திராவிடம் என்பது இனக்குறியீடு என்றும், ஆரியம் என்பது அதற்கு எதிர்ப்பதமான கலாசாரக் குறியீடு என்றும் மொழி அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து முன்மொழிந்தவர் கால்டுவெல் பாதிரியார்.
அவர் கண்டதெல்லாம் திராவிட இனத்திற்கு ஆதரவான இலக்கணச் சான்றுகள். ஆனால் உ.வே.சா என்ற மூதறிவாளர் கண்டெடுத்ததெல்லாம் திராவிட நாகரிகத்துக்குச் சார்பான இலக்கியச் சான்றுகள்.
வடமொழியின் ஊன்றுகோலின்றித் தனித்தியங்க வல்லது தமிழ் என்பதை இலக்கணத்தால் நிறுவியவர் கால்டுவெல் என்றால், இலக்கியத்தால் நிறுவியவர் உ.வே.சாமிநாதையர் ஆவார்.
19ஆம் நூற்றாண்டின் மையத்திலிருந்து 20ஆம் நூற்றாண்டின் மையம் வரையிலான காலப்பெருவெளியில் (1855-1942) நாடுதோறும் ஏடுதேடி ஓடி அலைந்து அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் -
* தமிழர் என்ற தொல்பழங்குடிக்குத் தோற்றுவாய் இல்லை
* சேர - சோழ - பாண்டிய மரபுகளின் செவ்விகள் இல்லை
* குழந்தை ஒன்று இறந்தாலும் அது ஒரு பிண்டமாகவே பிறந்தாலும் அதனை வாளால் கிழித்துப் புதைக்கும் வீரத்திற்குச் சான்றுகள் இல்லை
* ''புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்'' என்ற அரிய பண்பாட்டுக்கு ஆவணங்கள் இல்லை
* அன்பின் ஐந்திணை இல்லை
* எங்கள் புவிசார் பொருள்களுக்குப் பெயர்களில்லை
* உலக நாகரிகப் பொதுவெளியில் எங்கள் பெருமைகூறும் பெருமிதங்களில்லை
*அனைத்துக்கும் உச்சமாய் ஒரு செம்மொழியின் தலைமைத் தகுதியான தொன்மை என்பதற்குச் சங்க இலக்கியம் போலொரு தங்கப்பட்டயம் இல்லை
பனை ஓலைத் தமிழை மீட்டுப் பதிப்பித்தல் என்பது எலும்பைப் பெண்ணாக்கிய முன்னொரு கதையைப்போல் இன்னொரு கதையாகும்.
அச்சு வாகனத்தை அடைவதற்கு முன்பு பனை ஓலைதான் தமிழின் கடைசி ஊடகம். மூலப்படிகள் காலங்காலமாய்ப் பெயர்த்தெழுதப்பட்டு கரையான் தின்றதுபோக, அனல் உண்டதுபோக, புனல் கொண்டதுபோக, வாழ்ந்துகெட்ட ஒரு தலைமுறையின் எச்சம்போல் கொஞ்சம் கொஞ்சம் மிச்சமிருந்தன; மடங்களிலும் தமிழறியாத சில தனவந்தரிடத்தும் சிக்கிச் சிதிலமுற்றுக் கிடந்தன. அந்தத் தமிழ் தரித்த பனை ஓலைகளெல்லாம் சிலமடங்களில் பூஜைப் பொருளாய், சில வீடுகளில் அறிவாளிகளின் அடையாளமாய், சில விடங்களில் தற்குறிகளின் தனி உடைமையாய் மொத்தமாகவும் சில்லறையாகவும் முடங்கிக்கிடந்தன. எடுத்தாள நாதியற்று, எங்கு கிட்டும் என்ற சேதியற்று காக்கை கொத்திய கடுக்கனைப்போல மதிப்பறியாது மங்கிக்கிடந்தன. அந்தச் சுவடிகளில்தாம் பதிந்துகிடந்தன பழந்தமிழரின் சுவடுகள்.
இவ்விடத்து நாம் சற்றே சுவடி புராணம் சொல்லுவோம்.
தமிழ்நாட்டுப் பனைமரங்களை நாம் வணங்க வேண்டும். பன்னூறு ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட தமிழை 18ஆம் நூற்றாண்டுக்குக் கடத்திவர ஓலை தந்த கற்பகத்தருக்கள் அவைதாம். தென்
கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமே தங்கள் பதிவுறு பொருளாய்ப் பயன்படுத்தியது பனை ஓலைகளைத்தான். கல் - களிமண் - மரவுரி - மடல் - தோல் - துணி என்ற ஊடகங்களைக் காலந்தோறும் கடந்துவந்த மொழிஉரு, தன் இறுதி இளைப்பாறலுக்குப் பனை ஓலையில் வந்து படிந்தது.
இவற்றுள் கல்லில் காப்பியம் செதுக்குதல் கடிது. களிமண்ணோ கடத்தவும் கையாளவும் அரிதானது. மரவுரியோ அற்ப ஆயுள்கொண்டது. தோல் என்பது கொல்லாமைக்கு எதிரானது. பட்டயம் என்பது செல்வந்தர்களே செதுக்கத் தக்கது. துணியோ கிழிசலுறுவது. பனை ஓலைதான் எழுதவும் புழங்கவும் எளிதானது. காக்கவும் கடத்தவும் வசதியானது. 200 முதல் 300 ஆண்டுகள் ஆயுள்கொண்டது.
சுவடி படைக்கும் தொழில் நுட்பம் அற்புதமானது.
இளம் பதமுள்ள பனை ஓலை பொறுக்கி, அளவுக்குத்தக்க நறுக்கி, குழந்தைக்கு நகம் வெட்டுவதுபோல் நளினமாய் நரம்பு களைந்து, நிழலில் உலர்த்தி, பனியில் பதப்படுத்தி, இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்பி, பளபளப்பான சங்கு அல்லது கல்கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுறுத்தி, பக்குவமாய்ப் பாடஞ்செய்து, மஞ்சள் நீரிலோ அரிசிக் கஞ்சியிலோ உள்ளார ஊறவைத்து, பிள்ளைக்கு வலிக்காமல் காது குத்துவதுபோல சுவடிக்கு இரு துளைகளிட்டு, ஒரு முனையில் கயிறு செருகி, மறுமுனையில் சுள்ளாணி செருக, பனை ஓலை பாட்டுச் சுவடியாய் மோட்சமுறும். ஓலையின் மீது மஞ்சளும் வேப்பெண்ணெயும் பூசி, கோவை, ஊமத்தை இலைச்சாறுகளும், மாவிலை அருகம்புல் விளக்கு ஆகியவற்றின் கரியும் தடவி 'மையாடல்' செய்வதுமுண்டு.
இந்த ஓலைகளின் மீதுதான் தமிழின் மரபணுக்கள் மாறிமாறிப் பயணப்பட்டன. இந்த ஏடுகளைத்தான் தின்றழித்தது கடல்; நின்றழித்தது தீ; கொன்றழித்தது மதம்; உண்டழித்தது மூடம். தமிழை மறந்த ஆட்சியும் அழித்தது; தமிழ் தெரியாத பூச்சியும் அழித்தது. இப்படிக் காலவாய் என்ற காளவாயில் வீழ்ந்ததுபோக மிச்சமுள்ள ஏட்டுத் தமிழை மீட்டுத் தரத்தான் சாமிநாதன் என்ற மூளைக் கிழவனைக் காலம் அனுப்பியது.
ஏடு தேடுதல் என்பது சீதையை ராமன் தேடியதினும் துயரமானது. பழந்தமிழ் நூலாயின் எந்த ஏட்டுக்கும் மூலப்படி இராது. தலைமுறை தலைமுறையாய்ப் பெயர்த்தெழுதப்பட்ட ஏதேனும் ஒரு பிரதியே கிட்டும். அதிலும் பெயர்த்தெழுதியவனின் 'பேரறிவு' மூலத்தின் முகத்தையே சிதைத்திருக்கும். ஒருபடி நெல்லைக்குத்தி ஊருக்கே எப்படிப் பொங்க முடியாதோ அப்படி ஒரே ஒரு படியை நம்பிப் பதிப்பிக்கவியலாது. ஒப்பு நோக்கப் பலபடிகள் வேண்டும். அந்தப் படிகளை அடைவது திசைக்கொரு சீதையைக் கண்டறிவதுபோல் திகைப்புக்குரியதாகும். அப்படியே கண்டறிந்தாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போகாத பிரதிகளில் மெய்ம்மூலம் எதுவென்று கண்டறியும் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றிருக்க வேண்டும். பனை ஓலை எழுத்துக்களுக்குப் புள்ளி இராது. எல்லா எழுத்துக்களும் ஒன்றுபோல் இரா. பல நேரங்களில் உரையும் மூலத்தின் தாள ஒழுங்கிலேயே நடைபோடுவதால், மூலத்திற்கும் உரைக்குமான பிரிசுவர் யாங்குளது என்று பிரித்தறிவது, கடலுக்குள் எது இந்து மகா சமுத்திரம் - எது வங்காள விரிகுடா என்று பிரித்தறிவதுபோல் பெருந்துன்பம் தருவதாகும்.
இலக்கியப் பேரறிவும் இலக்கணச் சீரறிவும் கரையான் தின்ற மிச்சத்தை வாசித்துக் கொண்டுகூட்டிப் பொருள் காணும் கூரறிவும் வாய்த்திருந்தால் மட்டுமே பனை ஓலையைக் காகிதத்திற்குப் படிமாற்றம் செய்ய இயலும். இப்படி அனைத்தறிவும் கூடிப்பெற்ற கொள்கைக் கிழவராய் உ.வே.சா தமிழின் பழம்பரப்பெங்கும் பரவி நிற்கிறார்.
ஏடுதேடும் ஒரு மனிதன் எய்த வேண்டிய முதற்குணம் அவமானம் தாங்குதல்.
சேலம் ராமசாமி முதலியார் உ.வே.சாவுக்கு வழங்கிய சீவகசிந்தாமணி ஏட்டுப் பிரதி தொடங்கிவைக்கிறது அவரது பதிப்புப் பயணத்தை. 'பிரதி உபகாரம்' செய்தவர் என்று பெரிதும் வணங்கத் தோன்றுகிறது அந்த ராமசாமி முதலியாரை.
ஆனால் ஏடு பிரித்ததும் உள்ளங் கலங்கியது உ.வே.சாவுக்கு. இடவலமாய்ச் சுழலும் பூமிக்கு எதிராக, வலஇடமாய் சுற்றத் தொடங்கியது உ.வே.சாவின் தமிழறிந்த தலை.
''பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம்போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு. இது கொம்பு - இது சுழி என்று வேறு
பிரித்து அறியமுடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. 'ர'கரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. 'சரபம்' சாபமாகத் தோற்றும்; 'சாபம்' சரபமாகத் தோற்றும்'' என்று உள்ளங்கலங்கும் உ.வே.சா ஒப்பீடு செய்து உறழ்ந்து பொருள்காண வேறுவேறு படிகள் தேடி ஊர் தோறும் அலைகிறார்.
தஞ்சாவூர் விருட்சபதாச முதலியார் என்பவர் வீட்டில் பழஞ்சுவடிகள் உள்ளதறிந்து சில தஞ்சாவூர்க் கனவான்களை அழைத்துக்கொண்டு செல்கிறார். அவர் தேடிச் சென்ற சிந்தாமணிப் பிரதி பரணில் இல்லை; பையில் இல்லை; அலமாரியில் இல்லை; அடிமனை அறையிலும் இல்லை. முதலியாரின் பூஜை அறையில் இருக்கிறது. பிரதி கேட்டதற்கு முதலியார் என்ன சொன்னார் என்று எழுதுகிறார் உ.வே.சா.
''ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனே தவிர மற்றவர்களுக்குத் தரமாட்டேன். அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயங்களுக்கு விரோதம். எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. அந்நிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்குச் சாபம் சம்பவிக்கும்''.
இதைப் பயிலும் போது எனக்கோர் அய்யம். ''ஜைனரிடம் அய்யர் பிரதிதானே கேட்டார்; பெண்ணா கேட்டார்? அதற்கா இத்துணை ஆட்சேபணை?''
கலங்கவில்லை உ.வே.சா. தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்ய அய்யர், துக்காராம் என்ற மராட்டியர் ஒருவரைத் துணைக்கழைத்துச் சென்ற பிறகுதான் பூஜை அறையில் இருந்த சமணச் சுவடி அய்யராகிய சைவருக்கு மதம் மாறியது.
பயிலப் பயிலத்தான் தெரிந்தது சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தமிழறிவு மட்டும் போதாது சமணப் பேரறிவும் வேண்டுமென்று. ஜைனர்களிடம் சென்று சமயமறிந்தும் நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்துகொண்டார். சைவத்திலே புழங்கிவரும் பஞ்சாட்சரம் சமணத்திலும் ஓர் இடத்தில் பயின்று வருவது கண்டு குழம்பி நின்றார் தமிழ்த் தாத்தா.
''ஓரிடத்திலே திருத்தங்கு மார்பன் புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும்வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்'' என்றிருந்தது. இது ஜைன நூலாயிற்றே! பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்து கொண்டது என்ற சந்தேகம் வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரம் என்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில் 'அருகர் - ஸித்தர் - ஆசாரியர் - உபாத்தியாயர் - ஸாதுக்கள்' என்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம் என்று தெளிவுறுத்தினார்கள்'' (என் சரித்திரம்).
உண்மை என்ற ஒளியின் மையத்தை அடையும் வரை அய்யரின் பயணம் ஓய்வதில்லை என்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே உயர் சான்றாகும்.
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை. சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைந்ததும் அலுப்பு மிகுதியால் அச்சகத்தில் உறங்கிப்போன அய்யர் பெருமானை ''இந்தாருங்கள் பத்துப்பாட்டு'' என்றொரு குரல் எழுப்புகிறது.
வேலூர் வீர சைவராகிய குமாரசாமி அய்யரே அவரைக் குரல்கொடுத்து எழுப்பியவர். தமிழ்த் தொண்டு தொடரவேண்டும் என்று தமிழ் அன்னையே இவர் மூலம் கட்டளை இடுகிறாள் என்று கருதிக்கொண்ட அய்யர் அவர் கையில் 50 ரூபாயை அள்ளித் தந்து அனுப்புகிறார். பத்துப்பாட்டுக்கு 50 ரூபாய் எனில் ஒரு பாட்டுக்கு ஐந்து ரூபாய். அதன் பிறகு அய்யரைப் பத்துப்பாட்டு என்ற பேய்பிடித்து ஆட்டுகிறது.
பத்துப்பாட்டைப் பதிப்பிக்க அவர் பட்டபாடுகளும் உற்ற துயர்களும் எத்துணை என்பதை எண்ணிப்பார்க்க நிகழ்வொன்றை நினைவு கூரலாம். பத்துப்பாட்டின் எட்டாம் பத்தாகிய குறிஞ்சிப்பாட்டு ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழறிவிக்குமாறு கபிலர் பாடியது. தமிழ்நாட்டின் புவியியல் - தமிழின் சொல்லியல் - தமிழர் வாழ்வியல் மூன்றின் செழுமைகாட்டும் செய்யுள் அது. தினைப்புனம் காக்கச் சென்ற மலை வாணர் மகளாகிய தலைவியும் அவள் தோழியும் அருவி நீரில் ஆடி முடித்து மலைப்பாறையில் கொய்து கொய்து குவிக்கிறார்கள் கொழும் பூக்களை. குவிக்கப்பட்ட பாறைக்கும் கொள்ளை வாசம்தரும் அந்த 99 பூக்களின் பெயர்களை வரிசைப்படுத்துகிறார் புலவர். அந்தப் பூக்களில் மூன்றே மூன்று பூக்களின் பெயர்கள் மட்டும் ஏட்டில் இல்லை. அதுமட்டுமில்லை; புரியாத எந்தச் சொல்லின் பொருளைத் தேடுகிறோமோ அந்தச் சொல்மட்டும் எல்லா அகராதிகளிலும் மாயப்பொய் பலகாட்டி மறைவதைப்போல விட்டுப்போன அந்த மூன்று பூக்கள் மட்டும் எந்தப் பிரதியிலும் இல்லை. பூவிழந்த கைம்பெண்ணைப் போலப் புலம்புகிறார் உ.வே.சா. 261 அடிகள் கொண்ட குறிஞ்சிப் பாட்டில் 64 மற்றும் 65ஆம் அடிகளில் தொடுக்கப்பட்ட பூக்களே விடுபட்டுள்ளன. ''ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி ----------- -------- ----------------------------- கூவிளம்'' இங்கே விடுபட்டுப்போன மலர்கள் எவை? எந்த ஏட்டிலும் கிட்டவில்லையே! என்னடா இந்தக் குறிஞ்சிக்கு வந்த சோதனை என்று வேதனை உற்ற பொழுது அய்யரின் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது. தாம் தேடாத இடம் தருமபுர ஆதீனம் மட்டும்தான். அங்கு சென்று தேடினால் என்ன? ஆனால் திருவாவடுதுறை மடத்துக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் ''மனஸ்தாபம்'' என்ற சொல்லை அய்யர் பயன்படுத்தினாலும் உண்மையில் இரு மடங்களுக்குமிடையே வழக்கே நடந்துகொண்டிருந்தது என்பதே வரலாறு. அய்யர் துணிந்துவிட்டார். தமிழ்மானம் காப்பவன் தன்மானம் பார்ப்பதில்லை. தம்மைப் பெரிதும் ஆதரித்துவரும் திருவாவடுதுறையின் சம்மதம் பெற்றுத் தருமபுரம் புகுந்தார். உயரமான குத்துவிளக்குகளின் ஒளியில் இரவெல்லாம் தேடித் தேடிக் கடைசியில் ஓர் ஏடுகண்டார். ''நான் எந்தப்பாகம் காணாமல் தவித்தேனோ அதை ஓர் ஏட்டிலே பார்த்தேன். என் உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரே மயிர்க்கூச்சல் உண்டாயிற்று'' என்று எழுதுகிறார் உ.வே.சா. ''தேமா மணிச்சிகை உரிதுநாறவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்'' தேமா, மணிச்சிகை, உந்தூழ் என்ற மூன்று மலர்களின் பெயர்கள் கண்டதும் இழந்த குழந்தையைக் கண்டெடுத்த தாயானேன் என்று அழுது மகிழ்கிறார் தமிழ்த் தாத்தா. அவரது கண்ணீரின் மிச்சம் தமிழ்த் தாயின் கண்களிலிருந்தும் வழிந்திருக்கும்.
***
சிலப்பதிகாரத்தின் செப்பமான பிரதி தேடி அவர் ஊர் தோறும் அலைந்த கதை நினைத்தால் ஊறுங் கண்ணீர் ஊறும். திருச்சி சபாபதி முதலியார் - பாகற்பட்டி ஸ்ரீநிவாச நாயக்கர் - தாரமங்கலம் ஆதி சைவர் வீடுகளிலும் தேடித் தேடி ஏமாற்றமுற்று கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதன் சன்னதி அடைகிறார். அது வரகுண பாண்டியன் ஏட்டுச் சுவடிகளையெல்லாம் கூட்டுவித்த ஆலயம். தேவஸ்தானத்தின் தருமகர்த்தாவிடம் அந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் எங்கே என்று கேட்கிறார். 'ஆகமசாஸ்திரத்தில் சொன்னபடி அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட்டார்கள்' என்கிறார் தருமகர்த்தா. அதற்கு உ.வே.சா சொன்ன மறுமொழியில்தான் அவரது முற்போக்கு முகங் காட்டுகிறது. உ.வே.சா மீது எனக்கொரு வருத்தம் இருந்தது. அவர் மகாகவி பாரதியை மதித்ததில்லை. ''பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தைத் தூவென்று தள்ளியவர் என்றும், இவரையும் இவருடைய கொள்கையையும், இவரது தமிழையும்கூட அய்யர் மதித்திருந்தனர் என்பதற்குச் சான்று யாதும் இல்லை'' என்று வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார். ''தமக்கு நடந்த பாராட்டு விழாவில் பாரதி இயற்றி வந்த வாழ்த்துப்பா ஒன்றைப் பாட சாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை'' என்ற குறிப்பினைக் கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் இருவரும் எழுதுகிறார்கள். எனவே உ.வே.சாவை ஒரு பிற்போக்குவாதி என்றே பெருங்கருத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஆகம விதிகளின்படி சுவடிகளை எரித்துவிட்டோம் என்ற தருமகர்த்தாவின் பதிலுக்கு உ.வே.சா சொன்ன மறுமொழி அந்த வருத்தத்தைச் சற்றே போக்கியது. அவர் சொன்னது இது : ''அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்?''
ஒன்றிரண்டு அல்ல; ஒருநூறு சொல்லலாம் அய்யரின் பெருமைகளை. பத்துப்பாட்டு (1889) மொத்தத்தையும், புறநானூறு (1894) உட்பட எட்டுத்தொகையுள் ஐந்தனையும், சீவகசிந்தாமணி (1887), சிலப்பதிகாரம் (1891), மணிமேகலை (1898) என்ற ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றனையும் மீட்டெடுத்துப் பதிப்பித்த மேதைமை சொல்லவோ... 'சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' என்ற குறுந்தொகையைப் பதிப்பிக்குமிடத்து, அது 'பெரிதே காமம் என் உயிர்தவச் சிறிதே' என்று கலித்தொகையில் ஆண்டு வரலாயிற்று என்று ஒப்புமை காட்டும் ஒப்பிலா ஞானம் சொல்லவோ... தம் தமிழுக்குப் பொருளுதவி செய்த பொன்மனவேந்தர்களாகிய சேதுபதி அரசர், பாலவனத்தம் ஜமீன்தார், பாண்டித்துரைத் தேவர், சிறுவயல் ஜமீன்தார், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களைச் செம்பதிப்புகளில் நினைவு கூர்ந்த செய்ந்நன்றி சொல்லவோ... எவ்வளவு சொன்னாலும் தகும் அந்தத் தமிழ்ப் பெருங்கிழவனுக்கு. இத்துணை இடர்ப்பட்டு நம் முன்னோடிகள் சேர்த்துவைத்த தமிழ்ச்செல்வத்தைப் போற்றியும், புகழ்ந்தும், காத்தும், கற்பித்தும், வாசித்தும், வாழ்ந்தும் வருவதுதான் அந்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதையாகும். உத்தமதானபுரம் உ.வே.சாவின் சொந்த ஊராயினும் அவர் பிறந்த கிராமம் 'சூரிய மூலை'. அவரை எப்படிப் பாடிப் பரவுவது? சூரியமூலையில் பிறந்த ஆரிய மூளையே! உமக்கு எம் திராவிட வணக்கம்.