ஆண்டாள் காலத்தில் தமிழகத்தில் தேவதாசி முறை நிலவியதா? வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை! ---------------------------------------------------------------------------- 1) ஆண்டாள் வாழ்ந்த கிபி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில், மாபெரும் நிலவுடைமைப் பேரரசு (Great feudal empire) எதுவும் உருவாகி இருக்கவில்லை. இதுதான் வரலாறு.
2) இதைச் சரியாகப் புரிந்து கொள்ள kingdom, empire என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான பெருத்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
3) நிலவுடைமை அரசுகள் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்தன. அவை சாதாரண அரசுகள். (mere kingdoms). ஆனால் பெரும் பேரரசுகள் (feudal empires) அக்காலத்தில் தோன்றியிருக்கவில்லை. A kingdom is a state or territory ruled by a king. An empire is a large group of states under a single supreme authority.
4) தேவதாசி முறை என்பது நிலவுடைமைப் பேரரசு கொண்டுவந்த ஒரு முறை. பேரரசு என்றால் பெருமளவிலான உபரியைக் கொண்ட அரசு என்று பொருள்.
5) தமிழ்நாட்டில் கிபி பத்தாம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னரே நிலவுடைமைப் பேரரசுகள் உருவாகின. அப்போதுதான் தேவதாசி முறை கொண்டு வரப்பட்டது. ஆக, ஆண்டாள் வாழ்ந்த காலத்தில், பெரும் நிலவுடைமைப் பேரரசும் இல்லை; பெரும் உபரியும் இல்லை தேவதாசி முறையும் இல்லை. இதுதான் வரலாறு காட்டும் உண்மை.
6) தமிழகத்தில் காவிரி டெல்டாப் பகுதி மட்டுமே வளமான மருத நிலப்பகுதி. ஒரு மருத நிலப்பகுதியில்தான் நிலவுடைமைப் பேரரசு உருவாக முடியும். ஏனெனில் அங்குதான் உபரிக்கு வாய்ப்பு அதிகம்.
7) தமிழகத்தில் ஐந்து திணைகள் உண்டு. (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.) ஏன் பாலை நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் பேரரசுகள் (feudal empires) உருவாகவில்லை? காரணம் அங்கு உபரி என்பதே கிடையாது.
8) சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் ஏன் பெரும் பேரரசுகள் உண்டாகவில்லை? காரணம் அங்கு உபரி கிடையாது. அங்கு நிலவியது பற்றாக்குறை உற்பத்தியே.
9) ஆண்டாள் வாழ்ந்தது முல்லை நிலப்பகுதியில். முல்லை நிலம் பெரும் உபரியைத் தருவதில்லை.
10) ஆக, ஆண்டாள் வாழ்ந்த காலமான கிபி ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில். ஆண்டாள் வாழ்ந்த தென் தமிழகமான திருவில்லிபுத்தூரில், பெரும் நிலவுடைமைப் பேரரசு இருந்திருக்கவில்லை என்பதற்கு இவை வலு சேர்க்கும் ஆதாரங்களாகும்.
10) நிலவுடைமைப் பேரரசு இல்லை என்பதன் பொருள் அங்கு உபரி இல்லை என்பதாகும். உபரி இல்லையேல் இசை,நடனம், நாட்டியம் போன்ற கவின்கலைகள் செழித்து வளர்வதற்கு ஏற்ற சூழல் இல்லை என்று பொருள். தேவதாசி முறையோ, தாசி குலம் என்ற குலமோ உருவாகி இருக்கவில்லை என்று பொருள்.
11) ஆண்டாள் தாசி குலத்தைச் சேர்ந்தவர் என்று வைரமுத்து கூறுகிறாரே, தாசி குலம் என்ற ஒரு குலம் திடீரென ஒரு நாள் இரவில் உருவாகி விடுவதில்லை. ஒரு குலம் உருவாக குறைந்தது மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படாதா? ஆண்டாளின் காலமான ஏழாம் நூற்றாண்டிலேயே தாசி குலம் என்று ஒரு குலம் இருந்தது என்றால், அக்குலம் கிபி நான்காம் நூற்றாண்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் அல்லவா? இது சாத்தியமா?
12) எனவே ஆண்டாள் தாசி குலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஆண்டாள் காலத்தில் தேவதாசி முறையும் நிலவவில்லை என்பது இக்கட்டுரையில் நிறுவப் படுகிறது. ஆண்டாளின் காலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் கழித்தே தமிழகத்தில் தேவதாசி முறை உருவானது.