உளறல் 1.அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை.இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பதில் –ஆண்டாள் ஏதோ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற சாதாரண வாழ்வியல் விதியை வலியுறுத்துவதற்காகவே மார்கழி நோன்பு நோற்றாள் என்றும், அதற்காகவே திருப்பாவை பாடிக் கண்ணனை வணங்கினாள் என்றும் கவிஞர் கூறுகிறார்.
ஆண்டாள் ஏன் மார்கழி நோன்பு நோற்றாள்? திருப்பாவைக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்கள், “ஆண்டாள் கண்ணனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் தவித்தாள். எனினும் ஒருநாள் கண்ணன் வந்து தன்னை மணப்பான் என்ற திட நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது. அதனால் கண்ணன் வரும் வரை தற்காலிகமாகத் தன் பிரிவாற்றாமையைத் தணித்துக் கொள்ள, ஆயர்பாடியில் வாழ்ந்த கோபிகைகளின் மார்கழி நோன்பைப் பின்பற்றித் தானும் நோன்பு நோற்றாள். நோன்பு நோற்றால் அது வருத்தத்தில் தவிக்கும் தன் மனத்துக்கு ஒரு மாறுதலாக இருக்கும் எனக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆய்ப்பாடியாகக் கருதி, தன்னையே ஒரு கோபிகையாகக் கருதி, தன் தோழிகளை ஆயர்களாகக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள திருமுக்குளத்தையே யமுனை நதியாகக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலையே நந்தகோபனின் வீடாகக் கருதி, வடபத்ரசாயீ பெருமாளையே கண்ணனாகக் கருதி மார்கழி நோன்பு நோற்று அதை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையாக அருளினாள்” என்று கூறியுள்ளார்கள்.
இந்தநுட்பம் எதையும் அறியாமல், அவளது பக்தி, பிரிவாற்றாமை இவற்றின் ஆழத்தை உணராமல், வெறும் அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதை வலியுறுத்த மார்கழி நோன்பு நோற்றாள், திருப்பாவை பாடினாள் என்பது உளறலின் உச்சம்.
உளறல் 2. பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
பதில் – இது அதை விடப் பெரிய உளறல். “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று சொல்லி, கண்ணனை மட்டுமே தன் கணவனாக வரித்தாள் ஆண்டாள் என்று கவிஞரும் கட்டுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். அதே சமயம், அவள் நோற்ற திருப்பாவை நோன்பு கண்ணனைக் கணவனாக அடைவதற்காக அல்ல, நல்ல கணவன் கிடைக்கத் தான் என்று அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்.
உளறல் 3. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு. "நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்' - இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.
பதில் – நாடு நலம் பெற வேண்டும் என்று ஆண்டாள் கூறியதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வெறும் உயிரியல், வாழ்வியல், சமூகவியலை மட்டும் ஆண்டாள் முன்நிறுத்தவில்லை. திருப்பாவை மூன்றாம் பாசுரத்தில் “நாங்கள் நம் பாவைக்கு... வாங்கக் குடம் நிறைக்கும்...” முதலிய வரிகளைச் சொன்ன கவிஞர் அதற்கு அடுத்த வரி தனக்குச் சாதகமாக இல்லாமையால் விட்டுவிட்டார். “நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” என்று அடுத்த வரியில் ஆண்டாள் கூறுகிறாள்.
நீங்கும் செல்வமாகிய நீர் வளம், நில வளம், பால் வளம் முதலியவற்றை விரும்பிய ஊரார்க்கு அவை கிடைக்கட்டும். அந்த நாட்டு நலம் மட்டுமின்றி நீங்காத செல்வமான கண்ணன் எங்களுக்குக் கிட்ட வேண்டும். கிருஷ்ணாநுபவம் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறாளே. அது ஏன் கவிஞரின் கண்களில் படவில்லை?
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்” (திருப்பாவை - 19)
என்ற சொல் ஆண்டாளுக்கு அருளப்பட்டதா? அல்லது அக உணர்ச்சியின் அத்து மீறலா?
உரைகாரர்கள் இதற்கு வேறு பொருள் கூறித் தம் தீராப் புலமையின் திமிர் காட்டுவார்கள். “குத்து விளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்ச சயனமாவது தேவ, திர்யக், மநுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள். மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்” என்று பிரபந்த ரக்ஷையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும், அதை நயம் பாராட்டல் என்று சொல்ல இயலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்ல இயலாது. இதற்கு நேர் பொருளே ஏற்புடைத்து.
கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில் கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டும் என்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.
பதில் – ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல்.
“கோடும் புருவத்து உயிர்கொல்வை மன்நீயும்
பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்”
இந்தப் பாடலில் காம ரசம் உள்ளதே. சமணத் துறவியான இளங்கோ அடிகளுக்கு இப்பாட்டை எழுத யார் அதிகாரம் தந்தார்கள். இது அத்துமீறல் இல்லையா என்று கவிஞர் கேள்வி எழுப்பலாமே.
பதில் யாதெனில், காவியத்தில் ஒரு விஷயத்தை வருணிக்கும் போது, காட்சி எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத் தான் வருணனைகள் வரும். கோவலனும் மாதவியும் தனிமையில் இருக்கும் காட்சியை வருணிக்கையில் இளங்கோவடிகளாகிய சமணத்துறவி இவ்வாறு பாடுகிறார்.
அதுபோல, திவ்ய தம்பதிகளான கண்ணனும் நப்பின்னையும் ஏகாந்தமாக இருக்கும் காட்சியை வருணித்துள்ளாள் ஆண்டாள். தமிழ் இலக்கியத்தில் அதுவரை யாருமே இதை வருணிக்காதது போலவும், ஆண்டாள் ஏதோ அத்துமீறியது போலவும் கவிஞர் கூறுகிறார். இந்தக் கவிஞர் திரைப்படங்களில் பலப்பல இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதியவர் என்பதால் அவரது சிந்தனை அந்தத் திசையில் செல்கிறது போலும்.
இந்தப் பாசுரத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆசிரியர்கள் யாருமே வைரமுத்து கூறுவது போலப் பொருளைத் திரித்து, மடக்கி எல்லாம் எழுதவில்லை. நேரடியான பொருளைத் தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த நேர் அர்த்தத்தையே கவிஞர் தவறாகக் கூறிவிட்டார்.
உரையாசிரியர்கள் காட்டும் பொருள் யாதெனில் – கண்ணனும் நப்பின்னையும் ஏகாந்தமாக அறையில் எழுந்தருளியுள்ளார்கள். ஆண்டாளும் தோழிகளும் அறைக்கு வெளியே இருந்து அவர்களை எழுப்புகிறார்கள். அப்போது ஆண்டாள் கண்ணனிடம், "குத்து விளக்கு உள்ளே எரிந்து கொண்டிருக்க, குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தைக் கொண்டு செய்யப்பட்ட கால்களை உடைய கட்டில் மேல் மென்மை, வெண்மை, அழகு, குளிர்ச்சி, நறுமணம் என்ற ஐந்து குணங்கள் கொண்ட பஞ்ச சயனத்தில் உன் திருமார்போடு நப்பின்னையின் திருமார்பை அணைத்தபடி சயனித்துள்ள மலர்மார்பனே! வாய் திறந்து ‘அஞ்சேல்’ என்ற வார்த்தையை எங்களைப் பார்த்துச்சொல்! நீ கதவைத் திறக்காவிடிலும் பரவாயில்லை, வாயையாவது திற!” என்று வேண்டுகிறாள்.
ஆனால் இந்த அர்த்தத்தை மாற்றி அருவருக்கத்தக்க வகையில் கண்ணன் வாய் வைக்க இடம் தேடி வேறொரு இடத்தில் அதை வைத்தான் என்றெல்லாம் பொருள் சொல்வது நியாயமும் அல்ல, நயமும் அல்ல.
இங்கே இப்பாடலில் சிருங்கார ரசம் உண்டு. ஆனால் பெருமாளும் தாயாரும் திருமார்போடு அணைத்தபடி சயனித்துள்ளார்கள் என்ற அளவில் தான் உள்ளதே தவிர, இவரது சினிமா கற்பனைகள் போல வேறெதுவும் இல்லை.
இப்படிப்பட்ட சிருங்கார ரசங்கள் பக்தி இலக்கியங்களில் உண்டு. அது எதற்காக என்றால், உலக இன்பங்களிலேயே எப்போதும் ஈடுபட்டிருக்கும் மனிதனின் மனம் இந்த திவ்ய தம்பதிகளின் தெய்வீகக் காதல் ரசத்தைக் கண்டாலாவது அற்ப சுகங்களை விட்டுவிட்டு, இறைவனிடத்தில் ஈடுபடத் தொடங்கும் என்பதே. இறைவனைக் காண மாட்டேன் எனச் சொல்லும் நம் கண்கள் இந்தக் காம ரசத்தைக் காட்டினாலாவது இறைவனைப் பற்றிய விஷயத்தில் ஈடுபடாதா என்ற ஒரு ஏக்கத்தில் தான் சிறந்த அடியார்களும் இத்தகைய பாடல்களை அமைத்துள்ளனர்.
கண்ணன் கோபிகைகளுடன் இணைந்து நடனமாடிய ராச லீலையைத் தினமும் படிப்பவர்களுக்கு சந்நியாச ஆசிரமம் நன்கு சித்திக்கும், உலகப்பற்றுகள் அனைத்தும் விலகும் என்று அண்மையில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சாரியாரும் கூறியுள்ளார்.
உளறல் 5. மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். எவரிடம் கேட்பது அவனுடன் உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
பதில் - கருப்பூரம் நாறுமோ பாசுரம் lip kiss பற்றிச் சொல்லும் பாடல் என்று விமர்சகர் ஞாநியும் (பெயரளவில் மட்டுமே ஞாநி) ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கூறுகிறார்.
இது உலகியலில் நாம் காணும் காதலோ முத்தமோ அல்ல. இறைவனின் அழகு எப்படிப் பட்டதென்றால், அவனது அழகைக் கண்டவுடன் ஆண்களும் கூடத் தங்கள் ஆண் தன்மையை மறந்து பெண்களாக மாறிப் பாடல்கள் பாடுவதுண்டு. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோரும் முறையே பராங்குச நாயகி, பரகால நாயகி என்ற பெயர்களில் நாயகிகளாகப் பாடல்கள் பாடியுள்ளார்கள். அதிலும் சிருங்கார ரசம் உண்டு.
ஆனால் இது உலகில் காணும் சிருங்கார ரசம் அல்ல. உபநிடதம் எம்பெருமானைத் தியானிக்கும் முறையைக் கூறும் போது, “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:” என்கிறது. அதில் ‘நிதித்யாஸிதவ்ய:’ – ‘நிதித்யாஸனம்’ என்பதற்குப் பொருள் யாதெனில், காதலுடன் இடைவிடாது இறைவனைத் தியானிக்க வேண்டும் என்பது. நாயக-நாயகி பாவத்தில் இறைவனைப் பாடும்போது நிதித்யாஸனம் என்று உபநிடதம் சொல்வது போலக் காதலுடன் அவனைத் தியானிக்க எளிதாக இருப்பதால், அந்த பாவத்தை உயர்ந்த மகான்கள் கைக்கொள்கிறார்கள்.
இதற்கும் உலகில் நாம் காணும் காதல், முத்தம் இவற்றுக்கும் சம்பந்தமே இல்லை.
பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்றார் வள்ளுவர். உலகப் பற்றுகளை ஏல்லாம் அறவே அறுப்பதற்காக இறைவனின் திருவடிகளைப் பற்றுகிறார்கள் அடியார்கள். அப்படி உலகப்பற்றற்ற அந்த அடியார்களின் அமுத மொழிகளைக் கீழ்த்தரமான விஷயங்களோடு ஒப்பிடுவது மிகத்தவறு.
உலகியலிலுள்ள காதலையும் முத்தத்தையும் அறவே வென்று, வெறுத்து, ஒதுக்கி இறைவனே கதி என்று அவனைக் காதலிக்கும் அடியார்களை மிகவும் தரந்தாழ்ந்த முறையில் விமர்சிப்பது பெரும் பாவம்.
கோபிகைகளுடன் கண்ணன் இணைந்து உறவாடுகிறான் என்னும் போது, அதில் சரீர ரீதியான எந்த உறவும் கிடையாது. விந்து வெளியேறுதல் போன்ற நிகழ்வுகள் எதுவும் அதில் ஏற்படுவதில்லை என ரிஷிகளே தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றி இருக்கும் நிலையைத் தான் கோபிகைகள் கண்ணனுடன் இணைந்திருக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டாளும் அந்த கோபிகைகளுள் ஒருத்தியாகவே தன்னைக் கருதித் தெய்வீகக் காதலில் திளைத்து இப்பாடலைப் பாடியுள்ளாள்.
இதே மாதிரி பொருளில் ஒரு சுலோகத்தை நாராயண பட்டத்திரியும் நாராயணீயத்தில் பாடியுள்ளார்.
கோபிகைகள் கண்ணனின் புல்லாங்குழலைப் பார்த்து, நீ மட்டும் எப்போதும் கண்ணனின் திருவாய் அமுதத்தைப் பருகுகின்றாயே, அந்தப் பாக்கியம் எங்களுக்குக் கிட்டவில்லையே என்று பொறாமையுடன் சொல்வதாகக் கேரளாவைச் சேர்ந்த பட்டத்திரியும் பாடியுள்ளது நோக்கத்தக்கது.
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்ற பாசுரத்தையும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் நெருங்க வேண்டும் என்பதையே நயம்படச் சொன்னதாகத் தான் பார்க்க வேண்டுமே ஒழிய இதில் லௌகிகக் காமம் எதுவும் கிடையாது.
உளறல் 6. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாளைக் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. ___ (அந்த வார்த்தைகளை எழுத மனம் வரவில்லை)
பதில் - தமிழை ஆண்டாள் என்ற உங்கள் தலைப்புக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம். அவளது தமிழைச் சரியாக ஆராயத் தெரியாமல் தாறுமாறான அர்த்தம் சொன்னவர் அவளைப் பற்றியும் தாறுமாறாகப் பேசுவது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று.
யாரோ ஒரு மிலேச்சன் செய்த ஆய்வின் பெயரைச் சொல்லிக் கொண்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு வார்த்தை சொல்வது பெரும் தவறு.
நம் பாரத தேசத்தில் தோன்றிய ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம், திவ்யசூரி சரிதம் முதலிய தமிழ் நூல்களில் ஆண்டாளைப் பற்றியுள்ள செய்திகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்தவன் செய்த ஆராய்ச்சியைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்வதில் நியாயமே இல்லை.
ஆண்டாளின் குலத்தைப் பற்றிப் பேசுவோர்க்கு ஒரு செய்தி.
நம் மேல் கருணை கொண்ட பூமிதேவி, வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் 5 வயது குழந்தையாக ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றினாள்.
மணவாள மாமுனிகள் என்ற வைணவ குரு 'உபதேச ரத்தின மாலை' என்ற நூலின் 22-ம் பாடலில் இதைப் பாடியுள்ளார்:
"இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளார் ஆய்"
ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து பிறந்தவர்களுக்குத் தானே குலம் உண்டு. கர்ப்ப வாசமே செய்யாத ஆண்டாளின் குலம் என்னவென்று எப்படி கூறமுடியும்?
வேதாந்த தேசிகர் இயற்றிய கோதா ஸ்துதியின் முதல் சுலோகத்தில் "கமலாம் இவான்யாம்" - மகாலட்சுமியின் மறுவடிவம் என்று ஆண்டாளைப் போற்றுகிறார். எனவே உலகிலுள்ள அனைத்து இனத்தவர்க்கும் அன்னை அவள். அவளை இகழ்வது தன் தாயை இகழ்வதற்குச் சமம்.
அந்த அன்னை உலகுக்கே தந்தையான கண்ணனைக் குறித்து எழுதிய பக்தி இலக்கியத்தைப் போய் காமப் பாசுரம் என்று சொல்வது மடமை அல்லவா?
மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் எப்போதும் திருப்பாவயையே சொல்லிக் கொண்டிருப்பார், அதனால் திருப்பாவை ஜீயர் என்று அவர் அழைக்கப் பட்டார். காமப் பாசுரமாக இருந்தால், அதை ஒரு துறவி படிப்பாரா?
உபநிஷத், கீதையில் உள்ள கருத்துக்கள் யாவும் திருப்பாவையில் உள்ளதால், திருப்பாவை "கோதோபநிஷத்" என்று போற்றப்படுகிறது. அந்தக் கற்பூர வாசனை அறியாது ஆண்டாள் பாசுரங்களை விமர்சிக்கலாமா?