New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவாச்சாரியார்கள் - துக்ளக்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சிவாச்சாரியார்கள் - துக்ளக்
Permalink  
 


15-11-2017 தேதியிட்ட துக்ளக் வார இதழில் அதன் ஆசிரியர் திரு.எஸ். குருமூர்த்தி அவர்கள் நினைத்து பார்த்தேன் பகுதியில் "சிவாச்சாரியார்கள் "என்ற தலைப்பில் சிறு கட்டுரை எழுதியுள்ளார்கள்.

Image may contain: 1 person, smiling, textImage may contain: 1 person

 

துக்ளக் இதழ் மறைந்த திரு.சோ காலம் முதல் இன்று வரை ஆலயபூஜை, அர்ச்சகர் விஷயத்தில் சிவாச்சாரியார்களுக்கு ஆதரவாகவே இருந்து வருவது மகிச்சியிலும் மகிழ்ச்சி.

மேற்கூறிய சிறு கட்டுரையில், சிவாச்சாரியர்களுக்கும், பிராமணர்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்குங்கள் என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்கு ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி அவர்கள் அளித்துள்ள பதிலில் மூன்று விஷயங்களை குறிப்பிடுகின்றார்.

1)இதில் சிவாச்சாரியார்கள், பிராமணர்களுக்கான வேறுபாட்டை அழகாக எடுத்து கூறியுள்ளார்.சிவாச்சாரியார்கள் ஆகம, சைவசித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்கள் என்றும், கோயில் கர்ப்பக்கிருஹம் சென்று இறைவனை தீண்டும் உரிமை சிவாச்சாரியார்களுக்கே உண்டு.பிராமணர்களுக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.இது மிகச்சரி.

2)காஷ்மீர சைவத்திற்க்கும், சைவசித்தாந்தத்திற்க்கும் நீண்ட தொடர்பு உண்டு என்று கூறியுள்ளார்கள்.இதுவும் மிகச் சரி.

3)ராஜேந்திர சோழன் கங்கையில் நீராட சென்ற பொழுது அங்கிருந்து சிவாச்சாரியார்களை அழைத்து வந்து காஞ்சிபுரத்திலும், மற்ற இடங்களிலும் குடி அமர்த்தினான் என்று கூறியுள்ளார்கள்.

மூன்றாவதான இக்கருத்து சற்று நெருடலாக உள்ளது.இதனை படிப்போர்க்கு ராஜேந்திர சோழன் காலத்திற்க்கு முன்பு தமிழகத்தில் சிவாச்சாரியார்கள் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ராஜேந்திரசோழனின் ஆட்சிகாலம், கி.பி.1012 -1044 அதாவது பதினோறாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.இக்காலத்திற்க்கு முன்பே பல நூறாண்டுகளாக சிவாச்சாரியார்கள் தமிழகத்தில் வாழ்ந்து சிவாலய பூஜை தொண்டு செய்துவந்துள்ளார்கள் என்று சைவ இலக்கிய நூல்கள் உரைக்கின்றன.

சிவாலயங்களில் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமையாகிய அகத்தொண்டு புரியும் சிவாச்சாரியார்க ளை, குருக்கள், நாயனார், பட்டர், தேசிகர் என்று பலப் பெயர்களில் அழைத்தாலும், சைவத்திருமுறைகளும், பக்தி இலக்கியங்களும் இவர்களை "ஆதிசைவர்கள் " என்று அழைத்து போற்றுகின்றது.

அநாதி சைவன் சிவபெருமான்.அவருக்கு அடுத்த நிலையில் வைத்து சிவாச்சாரியர்களை ஆதிசைவர்கள் என்று தேவார திருமுறைகள் அழைக்கின்றன.

ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியார்கள் தமிழகத்தின் பூர்வீக குடிகள்.சங்ககாலம் முதலே தமிழக சிவாலயங்களில் வழி வழியாக பூஜை செய்துவரும் தனி மரபினர்.இவர்கள் வேதத்தை பொதுவாகவும், ஆகமங்களை சிறப்பாகவும் கற்று தொண்டு புரிந்து வருபவர்கள்.

ஆதிசைவர்கள் வரலாறு தொன்மையாது.

1)வரலாற்றில் கணிக்கமுடியாத ஸ்ரீ கண்ணப்பநாயனார் காலத்தில் வாழ்ந்த, ஆகமவிதிப்படி பூஜை செய்த ஸ்ரீ சிவகோசரியார் ஓர் சிவாச்சாரியார்.

2)சங்ககால தமிழ்பாடல்களில் பெருமைபட பேசப்படும், சிவபெருமானே சங்கப்பலகை ஏறிவாதிட்டு பொற்கிழி பெற்றுத்தந்த, சங்ககால தருமி ஓர் சிவாச்சாரியார்.

இவரை திருவிளையாடற் புராணம், 
"அந்த வேலையிலா ஆதிசைவரில்,
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையால்,
முந்தை யாட்சிமுயலும் பெற்றியான்,
தந்தை தாயிலான் தருமி என்றுளான் "
என்று உரைக்கின்றது.

3)தமிழகத்தின் இருண்டகாலமாகிய களப்பிரர் ஆட்சியில், கி.பி.5ம் நூற்றாண்டில் பல துன்பங்களுக்கும் வறுமைக்கும் நடுவில் சிவபூஜை செய்து வழிபட்ட 63 நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ புகழ்துணை நாயனார் ஓர் சிவாச்சாரியார்.இவரை தேவாரம் "அகத்தடிமை அந்தணன் " என்று போற்றுகின்றது.

4)கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தேவாரம் பாடி அருள்புரிந்த, நாயன்மார்களை இவ்வுலகிற்க்கு அறிமுகம் செய்த ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் ஓர் சிவாச்சார்ய மரபினர்.

5)அதே காலத்தில் வாழ்ந்து அருள்புரிந்த சுந்தரரின் தந்தை ஸ்ரீ சடைய நாயனார், ஓர் சிவாச்சாரியார்.இவர் திருநாவலூர் ஆலய சிவாச்சாரியார்.இவரை பற்றி திருத்தொண்டர் புராண சாரம்,
"தன்கயிலை யதுநீங்கி நாவலூர்வாழ் சைவனார் சடையனார் "என்று போற்றுகின்றது.

6) சுந்தரரின் தாயார் ஸ்ரீ. இசைஞானி அம்மையார்.இவர்கள் திருவாரூர் கோயிலில் பூஜை புரிந்த சைவகௌதம கோத்திரத்தை சேர்ந்த ஞான சிவாச்சாரியார் மகளாவார்.இவர் ஓர் சிவாச்சாரியார்.இவரை பற்றிய குலோத்துங்க சோழன் திருவாரூர் கோயில் கல்வெட்டில்,
"ஜனனீ பவதோ ஞான சிவாச்சார்ய குலே பவத்,
சைவே கௌதம கோத்ரேஸ்மின் ஞான்யாரவ்யா கமலாபுரீ. " என்பதாகும்.

7)ஸ்ரீ சுந்தரருக்கு முதலில் பெண் கொடுக்க வந்தவர் ஸ்ரீ சடங்கவி சிவாச்சாரியார்.இவரும் ஆலய சிவாச்சாரியார்.

8)ஸ்ரீ சுந்தரரின் தாத்தா ஸ்ரீ ஆரூரன் சிவாச்சாரியார், சுந்தரர் காலத்திற்க்கு முன்பே வாழ்ந்தவர்.இவரும் சிவாச்சாரியார்.இவரை பற்றி பெரியபுராணம்,
"அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் "என்று கூறுகின்றது.

9)கி.பி.ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பரமேஸ்வர வர்ம பல்லவன் தான் எழுப்பிய முதற் கற்கோயிலான கூரம் சிவாலயத்தில் பூஜை புரிய ஸ்ரீ அனந்த சிவாச்சாரியாரை நியமித்தான்.இவர் ஓர் சிவாச்சாரியார்.

10)கி.பி.9ம் நூற்றாண்டில் திருநாறையூரில் வாழ்ந்த, சிதம்பரத்தில் செல்லரிக்கும் நிலையில் இருந்த தேவார திருமுறைகளை கண்டெடுத்து தந்த ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி ஓர் சிவாச்சாரியார்.இவரை பற்றி திருமுறைகண்ட புராணம்,

"நாறையூரினில் ஆதிசைவ மறையோன்பால் வையமெல்லாம் ஈடேறச் சைவம் வாழ மாமணிபோல் ஒரு சிறுவன் வந்து தோன்றி " என்று கூறுகின்றது.

இவ்வாறு ராஜேந்திர சோழன் காலத்திற்க்கு முன்பே பல சிவாச்சாரியார்கள் தமிழகத்தில் சிவத்தொண்டு செய்து வந்துள்ளார்கள்.

மேற்கண் எடுத்துக்காட்டுகள், இலங்கியங்களில் பதிவானவை.இவ்வாறு பதிவுபெறாத எண்ணற்ற சிவாச்சாரியார்கள் தமிழகத்தில் குல குருவாக வீற்றிருந்து ஆகம சிவத்தொண்டு செய்துள்ளார்கள்.

பல்லவர்களும், சோழர்களும் மிகுந்த சிவபக்தி கொண்டவர்களாக விளங்கியமைக்கு காரணம் சிவாச்சாரியார்களே,.

பல்லவமன்னன் ராஜசிம்மன் தன்னை சைவசித்தாந்த வழிநடப்பவன் என்று கல்வெட்டில் அறிவித்ததன் மூலம், சிவாச்சாரியார்கள் செய்த ஆகம தொண்டை உணரமுடியும்.

எனவே ராஜேந்திர சோழன் காலத்தில் தான் சிவாச்சாரியார்கள் தமிழகத்திற்க்கு வந்தனர் என்பது தவறான செய்தியாகும்.

அவ்வாறாயின் சித்தாந்த சாராவளியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதே, காரணம் யாது என்றால்,

முதலில் ஒன்றை சரியாக புரிந்துகொள்ளவேண்டும் .சித்தாந்த சாராவளி ஸ்லோகத்தில் இவ்வாறு கூறப்படவில்லை.

சித்தாந்த சாராவளியில் ஆகமபரம்பரை கூறுமிடத்தில், கர்ணபரம்பரை செய்தியாகவே சோழன் கங்கை கரையில் இருந்து சிவாச்சாரியார்க ளை அழைத்துவந்தான் என்று கூறப்பட்டுள்ளது.அந்நூலின் மூலமான ஸ்லோகத்தில் இச்செய்தி இல்லை. கர்ணபரம்பரை செய்தியே இது.

கர்ணபரம்பரை செய்தி யாகிலும் இதன் உண்மை யாதெனில்,

ஒரு காலத்தில் காஷ்மீர் முதல், குமரிவரை வேத ஆகம வழிபாடு பாரததேசம் முழுவதுமே பரந்து விரிந்து இருந்தது.

பிற்காலத்தில் மாற்று மத மன்னர்களின் ஊடுருவல்களாலும், போர்களினாலும்,மற்ற இடங்களில் ஆகம வழக்கம் குறைந்தது.காஷ்மீரத்திலும், தமிழகத்தில் மட்டுமே நிலைபெற்றது.அதுவும் பிற்காலத்தில் காஷ்மீரத்தில் வழக்கொழிந்து, தமிழகத்தில் மட்டுமே ஆகம சித்தாந்தம் நிலைபெற்றது.இவ்வாறு தமிழகத்தில் ஆகமம் நிலைப்பெறக் காரணம் தமிழகத்தில் வாழ்ந்த சிவாச்சாரியார்களே.காஷ்மீரத்தில் ஆகம மரபு அழிந்தாலும், இன்றும் காஷ்மீர ஆகம தத்துவம் பேசப்படுவது சிறப்பு.

இவ்வாறு பாரதம் முழுவதும், ஆகம வழக்கம் இருந்த காலத்தில், காளிசம், ஆமர்த்தகி, புஷ்பகிரி, கோளகி, ரணபத்ரம் போன்ற ஆகம மடங்கள் தோன்றி சிறப்புற்றன.இம்மடத்தை சார்ந்த பலர் கங்கை கரையில் தத்துவ விசாரணை செய்தனர்.

முற்காலத்தில் கங்கை கரையில் கல்வி பயில்வதை புண்ணியமாக கருதிய(பாரதி,செந்திநாதையர், குமரகுருபரர் காசி சென்று கல்வி பயின்றதை நினைவில் கொள்க) தமிழக சிவாச்சாரியார்கள், இங்கிருந்து கங்கைகரைச் சென்று மேற்கண்ட மடங்களில் தங்கி பல ஆகம விஷயங்களை கற்று பயின்றதோடு அங்கேயே தங்கிவிட்டனர்.

சோழர்கள் காலத்தில் பல சிவாலயங்கள் புதுபிக்கப்பட்ட பொழுது, அக்கோயிலுக்குரிய சிவாச்சாரியார்கள் பலர் பல வம்சமாக ஆகம கல்வி பயில கங்கைகரை சென்றுள்ளனர் என்பதை அறிந்து ராஜேந்திர சோழ மன்னன் அவர்களை அங்கிருந்து வருவித்து கோயில்களில் நியமித்தான்.இதுவே உண்மை வரலாறு.இன்றும் காசியில் பல ஆகம சுவடிகள் உள்ளதாக கூறுகின்றார்கள்.இந்த உண்மையை உணர்தல் அவசியம்.

மேற்கண்ட ஆகம மடங்களில் கோளகி மடத்திற்க்கும் தமிழகத்திற்க்கும் பலமான தொடர்பு உண்டு.கோளகி மட சிஷ்யர்கள் பல ஆகம மடங்களை தமிழகத்தில் தோற்றிவித்தனர்.அதில் ஒன்று திருநெல்வேலி அருகே உள்ள திருவாலீஸ்வரம் ஆகம மடமாகும் .இம்மடத்தில் தோன்றிய ஞானாமிர்தம் என்ற நூலே தமிழில் எழுந்த முழுமையான முதல் சைவசித்தாந்த நூலாகும்.
சிவார்ப்பணம்.
பதிவு @தில்லை கார்த்திகேயசிவம்.

(சிவாச்சாரியர்களை பற்றி முழுமையாக அறிய, சென்னை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள "ஆதிசைவர்கள் வரலாறு "புத்தகத்தை வாசியுங்கள்.)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard