சிலப்பதிகாரத்தின் பதிகமும் அந் நூல் இயற்றப்பட்ட காலத்திற்கு மீமிகப் பின்னர் எழுதப்பெற்றுச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்ந்தோரின் கருத்தாகும். இதனால் தான், சிலப்பதிகாரத்தில் இருக்கும் முன்னுரைகளும் பின்னுரை களும் நூலின் ஆசிரியரால் செய்யப்படாது அவருக்கு மீமிகப் பின்னால் வந்தவர்களால் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்றும், அதன் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் வஞ்சிக்காண்டத்தில் வரும் செய்திகளோடு முரண்படுவனவென்றும் பி. தி. சீனிவாச ஐயங்கார் சொல்லிப் போந்தார். சிலப்பதிகாரத்தின் பதிகத்தைப் போன்றே மணிமேகலையின் பதிகமும்கூட நூலை இயற்றியவரால் எழுதப்பெறாது, பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டதென ஏ. வி. சுப்பிரமணிய ஐயரும் கூறுகின்றார். இதே கருத்தைச் சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானமும்கூட எதிரொலிக்கின்றார்.
கிரேக்கத்தில் கண்ணகி
கீரேக்கத் தொன்மத்தில் கணகி (Canace) என்னும் தெய்வம் உண்டு. கிரேக்க மொழியில் இத் தெய்வத்தின் பெயரை (கணகி ) என்றே எழுதுவர். அந்தக் கணகி என்பாள் போசெய்டன்(Poseidon) என்னும் கிரேக்கத் தெய்வத்தின் மனையாட்டியாம். கிரேக்கத் தெய்வமாகிய போசெய்டனை மணந்த கணகி, அவன் வழியில் பிள்ளைகள் பலவற்றைப் பெற்றெடுத்தாள். போசெய்டன் என்பது பண்டைக் கிரேக்கரின் கடல் தெய்வ மாகும். ஏவசு (Aeolus) என்பது காற்றுத்தெய்வம். ஏவசின் மகள்களில் ஒருத்தியே கணகி. அந்தக் கணகி, தன் உடன்பிறந்தானான மகரியசு(Macareus) என்பானுடன் தகாத உறவுகொண்டு குழந்தை யொன்றைப் பெற்றெடுத்தாள். அக் கணகிக்கு மகப்பேறு பார்த்த செவிலி, அக் குழந்தையை யாருக்கும் தெரியாது அகற்ற முனைகையில், அக் குழந்தை அழத் தொடங்கியது. இதனால், உண்மையைத் தெரிந்துகொண்ட அவளுடைய தந்தை ஏவசு, தின்று தீர்க்க அக் குழந்தையை நாய்களுக்கு எறிந்துவிட்டு, வாள் ஒன்றினை எடுத்து அதனைத் தன் மகளான கணகியிடம் கொடுத்து அவ் வாளால் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளுமாறு அவளுக்குக் கட்டளை பிறப்பித்தான். இதுவும்கூடக் கணகி பற்றிய கிரேக்கரின் கதை.
இதனால், கிரேக்கத் தெய்வமான கணகியின் கதை, சிலப்பதிகாரத்துக் கண்ணகியின் கதையோடு பொருந்தி வரவில்லை.
அந்தோனியோசு வாசிலெயாடிசு (Antonios Vasileiadis) என்ற கிரேக்க நாட்டு ஆய்வாளர், பண்டை எகிப்திலும், அனத்தோலியா என்ற சின்ன ஆசியாவிலும், பினிசியாவிலும் கவேரோசு (Kaveros; பன்மை Kaveiri) என்ற தெய்வம் வழிபடப்பட்டு வந்ததாகக் கூறு வார். இந்தச் செய்தியை அவர் வரலாற்றுப் புதிர்களில் ஒன் றாகக் கருதுகின்றார். இது போன்ற தெய்வங்கள் தீயைக் குறிக்கும் தெய்வங்களாம்.
கடலுக்கடியில் எரிமலைத் தெய்வங்களாயிருந்த ‘கவேரிகள்’, எண்ணிக்கையில் ஏழாக இருந்ததாகப் பினிசிய ஆவணங்கள் கூறு கின்றன. கிரேக்கத் தொன்மத்தில் வருகின்ற திமீத்தர் கவேரியா எனப்பட்ட (Demeter Kaveria) தெய்வத்திற்கும் சிலப்பதிகாரத்தின் தலைவியான கண்ணகிக்கும் இடையில் ஒற்றுமை உண்டு என்பது அந்தோனியோசு வாசிலெயாடிசின் கருத்தாகும். கண்ணகி தன் கணவன் இறந்ததால் துயருற்றாளெனின், தன் மகளான பெர்ச ஃபனி (Persephone) கீழுலகத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டதால் திமீத்தர் துயருற்றாள்.
இவ்விரு தெய்வங்களாலும் அவரவர்களின் நாட்டில் பெரிய வறட்சிகள் தோன்றி மக்களை வாட்டியெடுத்ததை எடுத்துரைக் கின்ற அவர், பிரிசியா (Phrygia)* நாட்டில் வழங்கிவந்த கைவேலி என்ற பெண் தெய்வத்தின் கதையையும் கூறுகின்றார்.
கைவேலி(Kayveli) என்பாள் அத்திசு(Attis) என்பவனை மணந்தாள். கோவலனைப் பாண்டிய மன்னன் கொல்வித்ததைப் போன்றே பிரிசிய அரசனும் அக் கைவேலியின் கணவனான அத் திசைக் கொல்வித்தான். கணவன் கொல்லப்பட்டதைக் கேட்டுக் பெருந்துயருற்ற கைவேலி, பித்துப்பிடித்தவளைப் போல் அரற்றிக் கொண்டு தாளவொலிகளுக்கு இடையில் ஊர் ஊராகவும் நாடு நாடாகவும் சுற்றியலைந்தாள். பிரிசியாவில் இதனால் கொள்ளை நோய் வந்ததுடன், பெரும்பஞ்சமும் வந்து வாட்டியது. கைவேலி என்ற தெய்வத்தை வழிபட்டவர்கள் அத் தெய்வத்தின் துயரத்தில் பங்குபெறும் வண்ணம் தங்களையே ஊறுபடுத்திக்கொண்டு அதி லிருந்து வழியும் குருதியில் தோய்ந்த கையை உயர்த்திக் காட்டிக் கைவேலியை வணங்கி வந்தனர். சேரலத்துக் கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலான கண்ணகிக் கோயிலில்$ பரணித் திரு விழாவின்போது நடக்கின்ற கொடிய வழிபாட்டை ஒத்ததே இக் கைவேலி வழிபாடு.
இதனால், கோவலன்-கண்ணகி கதையின் தாக்கம் கிரேக்கப் பண்பாட்டின் மீதும் சின்ன ஆசியா உள்ளிட்ட நடுத்தரைக்கடல் பண்பாடுகளின் மீதும் படர்ந்து நின்றது என்னும் மெய்ம்மை மிகப் பெரிய வரலாற்றுத் தடயமாகும். கழக(சங்க)த் தமிழிலக்கியங்களில் தமிழ் மூவேந்தர்களுக்கு யவனர்கள் மெய்காவலர்களாகப் பணி புரிந்ததைப்பற்றி வருவதையும், பண்டைத் தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையில் மிகப் பெரிய அளவிலான கடல் வாணிகம் விளங்கியமையையும் தெளிவுறக் காட்டுகின்றன. இந்த யவனர் (கிரேக்கர்)களின் வழியாகவும், கடலோடித் தமிழ் வாணிகர்களின் வாயிலாகவும் கண்ணகியின் கதை கடல்கடந்து நடுக்கிழக்கிலும் பரவியது என்பதையே இவையெலாம் புலப்படுத்துகின்றன.
இச் செய்திகளை யெல்லாம் வைத்துப் பார்த்தால், சிலப்பதி காரத்தின் பதிகத்தை வைத்து அந்தக் காப்பியம் கி. பி. 2ஆம் நூற் றாண்டில் இயற்றப்பட்டதெனக் கருதுவது பிழையான தென்பது புலப்படும். கோவலன்-கண்ணகி கதை இதனால் கி. மு. 5ஆம் நூற்றாண்டிற்குரியதாக இருக்க வேண்டும். ஓரிரு நூற்றாண்டுகள் கழித்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக அதனை வடித்திருக்கலாம்.
இலங்கை அரசன் கயவாகுவைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகா ரத்தின் பதிகத்தில் வருவதை வைத்தே சிலப்பதிகாரத்தின் காலம் கி பி. 2ஆம் நூற்றாண்டு என்று கூறலாயினர். ‘சதவாகனர்’ என்று கூறாது, ‘சதவா கன்னர்’ என்று குறிப்பிடப்பட வேண்டுமென ஆய் வாளர் இராம. கி. ஒரு திருத்தத்தை முன்மொழிகின்றார்.554 சதவா கன்னரையே சிலப்பதிகாரம் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடு கின்றது. கண்ணன் என்பது பாகத மொழியில் ‘கன்னன்’ என்றா கியது; பின்பு சங்கத மொழி தோன்றியபோது, அது ‘கிருஷ்ணன்’ ஆகியது. சதவாகன்னரில் முதலாமவனான சிமுகனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவன் கன்னன் (கிருஷ்ணன்). ‘கன்னன்’ என்பதும் ‘கிருஷ்ணன்’ என்பதும் ‘கருப்பன்’ என்றே பொருள்படும்.
சதவாகன்னர் அரசு மோரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அதற்குமுன் அவர்கள் மோரியரின்கீழ் வடநாட்டுக்குப் போகின்ற வடுகப்பெருவழியைக் காத்துநின்ற மாதண்டநாயகராயிருந்திருக்க வேண்டும். அவர்கள் மாதண்டநாயகராய் விளங்கியபோது சேரன் செங்குட்டுவன் கனக விசயருக்கு எதிராக வடக்குநோக்கிப் படையெடுத்துச் செல்ல, அந் நூற்றுவர் கன்னர்கள் அந்தச் சேரனுக்கு உதவியிருக்க வேண்டும். கண்ணகியின் கதையைக் கேட்டு இளங்கோவடிகள் சிலப்பதிகா ரத்தை இயற்றிய காலமும், சேரன் செங்குட்டுவன் வடக்குநோக்கிப் படையெடுத்த காலமும் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
மேலும், சிலப்பதிகாரத்தில் இடைச்செருகல்கள் பல உண் டென்பதும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.