ஷெல்டன் போலாக் (Sheldon Pollock) சம்ஸ்கிருதம், இந்தியப் பண்பாடு, இந்தியச் சிந்தனை மரபு ஆகிய துறைகளில் உலகளவில் கல்விப் புலங்களில் மிகவும் மதிப்புக்குரிய அறிஞராகக் கருதப்படுகிறார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றவர். தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் (South Asian Studies) துறையில் பேராசிரியராகவும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி குடும்பத்தினரின் பெருநிதியுடன் துவங்கப்பட்ட மூர்த்தி சம்ஸ்கிருத நூலகம் (Murty Sanskrit Library) என்ற நூல்வரிசையின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் 2010ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுத்துறையில் இவ்வளவு செல்வாக்குடன் திகழும் போலாக், சம்ஸ்கிருதம், இந்துப் பண்பாடு, இந்து சாஸ்திரங்கள் குறித்த மோசமான திரிபுகளையும், பிழையான சித்திரிப்புகளையுமே தனது ஆய்வுகளிலும் நூல்களிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். 19ம் நூற்றாண்டில் மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட காலனிய வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றைத் திரித்து எழுதுவதற்கு ஒரு சட்டகத்தை உருவாக்கியதற்கு ஈடாக 21ம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை நவீன மேற்கத்திய அணுகுமுறைகளின்படி திரித்து எழுதுவதற்கான சட்டகங்களாக போலாக் கட்டமைக்கும் கருத்துகள் உள்ளன. அதனால் அவற்றை விமர்சிப்பது மிகவும் அவசியமானதாகிறது. சிறந்த இந்திய சிந்தனையாளரான ராஜீவ் மல்ஹோத்ரா இக்கட்டுரையில் போலாக்கின் அணுகுமுறையை ஆதாரபூர்வமாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
ராஜீவ் மல்ஹோத்ரா |
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்?
ராஜிவ் மல்ஹோத்ரா
தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்
‘சம்ஸ்கிருதத்திற்கான போர்’ (Battle for Sanskrit) என்னும் எனது நூலில் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவியலின் (Indology) ஒருபிரிவின் கருத்தியல் நிலைப்பாடுகளைப் பற்றி விமர்சிக்க முயன்றுள்ளேன். கடும் உழைப்பாளி என்ற வகையில் போலாக் என்ற சம்ஸ்கிருத மொழியியல் ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சிச் சட்டகத்தை என்னால் ஏற்க இயலாது. ஹிந்து சமயத்தைத் தமது வாழ்வியல் நெறியாகப் பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப் போற்றும் சில ஆழ்ந்த கருத்துக்களை அவரது ஆராய்ச்சி அணுகுமுறை தகர்க்க முயல்கின்றது. ஹிந்துப் பாரம்பரியத்தின் ஆதாரக் கட்டமைப்பைத் தகர்த்துவிட அது முயல்கிறது. இந்தக் கட்டுரையில் போலாக்கின் கருத்துக்களில் முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்ல முனைகிறேன். கட்டுரையைப் படிக்கின்ற அன்பர்கள் எனது நூலை முழுமையாக வாசித்து, போலாக்கின் கருத்துகளையும் அதற்கு எதிரான எனது வாதங்களையும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
ஷெல்டன் போலாக்கின் சம்ஸ்கிருத ஆராய்ச்சி தோற்றுவித்திருக்கின்ற சிக்கல்களை, எனது நூல், ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சட்டகங்களின் (பார்வை) முரண்பாடாக, மோதலாக, போராட்டமாகக் காண்கிறது. முதலாவது, அகத்தவர் பார்வை; மற்றொன்று புறத்தவர் பார்வை. அகத்தவர் பார்வை என்பது வேத மரபின் உள்ளே அதன் வாழ்வியல் நெறியில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு வாழ்பவர்களுடையது. புறத்தியார் பார்வை அல்லது அன்னியர் நோக்கு என்பது வேதங்களை நிராகரிப்பவர்கள், புறக்கணிப்பவர்கள் மற்றும் ஒதுக்குவோர்களுடையது. இந்த அன்னிய அறிஞர்கள், சமூக அடக்குமுறை மற்றும் அரசியல் ஆதிக்கம் போன்ற மார்க்சிய, பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் வாயிலாக சம்ஸ்கிருத சாஸ்திரங்களை விமர்சிக்கின்றனர்.
ஷெல்டன் போலாக் மற்றும் பிற புறத்தவர்களுடைய பின்வரும் கருத்துக்களையும் ஆராய்ச்சி அணுகுமுறையையும் வேதப் பாரம்பரியத்தின் உள்ளே வாழ்கின்ற அகத்தவன் என்ற முறையில் நான் நிராகரிக்கின்றேன். .
· புனிதமானது-புனிதமற்றது என்ற நிரந்தரமான வேறுபாட்டை, சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தினை ஆராய்வதற்கான அடிப்படையாகக் கொள்ளும் அவரது பிளவுண்ட ஆராய்ச்சி முறையியல்.
· சிறுபான்மை இனக்குழுக்களை ஒடுக்குதல், இன அடக்குமுறை, வர்க்க முரண்பாடு, ஆண்-பெண் பாலினப் பேதம், பாரபட்சம் ஆகியவற்றை சம்ஸ்கிருதம் மற்றும் வேதத்தின் உள்ளீடாக இட்டுக் கட்டும் அவரது கருத்தியல் நிலைப்பாடு.
· பாரத நாட்டின் வரலாறு, சிந்தனை ஆகியவற்றிலிருந்து அதன் மிக முக்கியமான உந்துவிசையாக இயங்கும் வாய்மொழி மரபுகளைப் புறந்தள்ளுதல், ஒதுக்குதல், கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போக்கு.
· காவிய, காப்பிய இலக்கிய நடையை அரசியலாகக் காணும் நோக்கு.
·