இன்றைக்கு அறியக் கிடைக்கும் இந்திய வரலாறு முற்றிலும் மழுப்பல்களாலும், பொய்களாலும், புனைகதைகளாலும் ஆன ஒன்று. இந்திய சுதந்திரத்திற்குப்பின் இந்திய வரலாற்றை எழுதப் புகுந்த இடதுசாரிகளும், கிறிஸ்தவச் செயற்பாட்டாளர்களும், நேருவியச் சிந்தனையாளர்களும் உண்மையான இந்திய வரலாற்றை அவர்களின் இஷ்டத்திற்குத் திரித்து எழுதினார்கள். அந்த வரலாற்றையே உண்மையான வரலாறாக நிறுவ முயன்று, அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசாக இந்தியப் பெரும்பான்மையும், சுதந்திரத்திற்குப் பின் அவர்களை ஆள வந்தவர்களும் இது குறித்த அறிதல் சிறிதும் இல்லாதவர்களாக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள். இனிமேலும் அது மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே நான் நினைக்கிறேன். தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமுதாயமும் மெல்ல மெல்ல அன்னியர்களுக்கு இடம் கொடுத்து அவர்களிடம் அடிமைப்பட்டு அழிந்து போகும். தன்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து தெளிந்த ஒருவனுக்கு மட்டுமே, தான் எப்படி வாழவேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாறே மீண்டும் மீண்டும் இந்தியர்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஓரளவிற்கு உண்மையென்றாலும் அதுவே உண்மையும் அல்ல. அதனையும் தாண்டி இந்திய வரலாறு நீண்டது. நெடியது. அதனை அறிந்து கொள்ளாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இந்தியன் மீண்டும், மீண்டும் அடுத்தவனுக்கு அடிமைப்படுவான். அன்னியரின் வரலாற்றையே தனது வரலாறாகவும் நினைக்க முற்படுவான். அதுவே இன்றைக்கு இந்தியாவில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பைபிளும், குரானும் அன்னியர்களின் வரலாறே அன்றி வேரென்ன?
நம்மை வெற்றி கொண்டவர்களால் எழுதப்பட்ட வரலாறே இன்றைக்குப் பெரிதும் நமக்குக் கிடைக்கிறது என்பது உண்மையே. அதேசமயம், அதே காலத்தில் வாழ்ந்த பிற இந்தியக் குடிமக்கள் எழுதிய வரலாறுகள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் பெருமளவிற்கு வெளிச்சத்திற்கு வரவில்லை. அல்லது அதனை நாம் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை ஆழமாக ஆய்ந்து அறிய முற்பட வேண்டும். நமது கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இதற்கான முனைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்தியர்களால், குறிப்பாகத் தமிழர்களால் பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்ட ஆனந்த ரெங்கம் பிள்ளை நாட்குறிப்பு மிக முக்கியமானதொரு ஆவணம். பாண்டிச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னர்களின் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ‘துபாஷி’ ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1736ம் வருடம் துவங்கி 1761ம் ஆண்டு வரையிலான இருபத்தைந்து ஆண்டு காலகட்டத்தில், தான் கண்டு கேட்டு அனுபவித்தவற்றைக் குறித்து எழுதி வைத்த தகவல்களே இன்றைக்கு ‘ஆனந்த ரெங்கம் பிள்ளை’ நாட்குறிப்பாக அறியப்படுகிறது. அதில் அறியக் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் நமக்கு முற்றிலும் வேறொரு உலகத்தைக் காட்டுகின்றன. ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் பெயர்க்கப்பட்ட அந்த நாட்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
*****
ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1709ம் வருடம் மார்ச் மாதம் சென்னையை அடுத்த பெரம்பூரில், வணிகரான திருவேங்கிட பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். 1716ம் வருட காலத்தில் திருவேங்கிட பிள்ளை, பிரெஞ்சு அரசாங்கத்தில் அவர்களுக்கு உதவும் ஏஜெண்டாகப் (courtier) பணிபுரிந்த அவரது மாமனாரான நைனா பிள்ளையின் அறிவுறுத்தலின் பேரில், குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். அன்றைக்கு பாண்டிச்சேரி கவர்னராக இருந்த ஹெர்பெர்ட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு அழைப்பு அனுப்பியதாகத் தெரிகிறது. திருவேங்கிட பிள்ளையுடன் அவர்களது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த பல செல்வந்தர்களும் அங்கு வியாபாரம் செய்யும் நோக்கில் பாண்டிச் சேரிக்குக் குடிபெயர்ந்தார்கள்.
நைனா பிள்ளை மற்றும் திருவேங்கிட பிள்ளையின் மேற்பார்வையில் பாண்டிச்சேரியின் வணிகம் செழிக்கத் துவங்கியது. அவர்களின் துரித வளர்ச்சியைப் பொறுக்காத கவர்னர் ஹெர்பெர்ட், நைனா பிள்ளையை பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ய, அவர் சிறையிலேயே இறந்து போனார். தங்களையும் கவர்னர் சிறையில் அடைத்து விடுவார் என அஞ்சிய நைனா பிள்ளையின் மகனான குருவ பிள்ளையும், அவரின் மாமனாரான திருவேங்கிட பிள்ளையும் சென்னைக்குத் தப்பியோடினார்கள். பின்னர் குருவ பிள்ளை இங்கிலாந்திற்குப் பயணித்து அங்கிருந்து பிரான்ஸுக்குப் போய் அன்றைக்கு பிரான்ஸை ஆண்ட ட்யூக் ஆஃப் ஆர்லியன்ஸிடம், பாண்டிச்சேரி கவர்னர் ஹெர்பெர்ட்டின் நடத்தையைக் குறித்துப் புகார் செய்ய, அதன் அடிப்படையில் 1719ம் வருடம் ஹெர்பெர்ட்டை பிரெஞ்சு அரசாங்கம் திரும்ப அழைத்துக் கொண்டது.
இதற்கிடையில் பிரான்ஸ் முழுவதும் சுற்றித் திரிந்த குருவ பிள்ளை மதம் மாறி கிறிஸ்தவரானார். செவாலியே ஆஃப் செயிண்ட் மைக்கேலாக நியமிக்கப்பட்ட குருவ பிள்ளை, இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்குத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குருவ பிள்ளை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அவர் திரும்புவதற்கு முன்னர் புதிய பாண்டிச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட டி லா ப்ரெவோஸ்டி (de la Prdvostiere) திருவேங்கிட பிள்ளையை மீண்டும் பாண்டிச்சேரிக்கே திரும்பி வரும்படி அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்ற திருவேங்கிட பிள்ளை மீண்டும் அவரது ஐந்து செல்வந்த நண்பர்களான வியாபாரிகளையும், அவர்களின் குடும்பத்தையும் பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்தார். அதனைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கம்பெனிகளின் வியாபாரம் செழித்து வளரத் துவங்கியது. குருவ பிள்ளை 1724ம் வருடம் இறந்து போக, அடுத்த இரண்டாண்டுகளில் (ஜூன் 1726) திருவேங்கிட பிள்ளையும் இறந்தார்.
அதே 1726ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் லெனாய் (Lenoir) கவர்னராகப் பதவியேற்கும் பொருட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். லெனாய் பாண்டிச்சேரில் நீண்ட காலம் வசித்து விட்டு பிரான்ஸுக்குப் போனவர். அவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்தில் திருவேங்கிட பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவராக இருந்தவர். எனவே அவரது மரணச் செய்தியால் துக்கமடைந்த கவர்னர் லெனாய் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையை பிரெஞ்சு அரசாங்கத்தின் உள்நாட்டு ஏஜெண்டாக, திருவேங்கிட பிள்ளை வகித்த அதே பதவிக்கு, நியமினம் செய்தார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை மிகத் திறம்படச் செய்து கவர்னர் லெனாயின் நம்பிக்கையைப் பெற, லெனாய் போர்ட்டோ நோவோவில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தார். போர்ட்டோ நோவோவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட நீல நிறத் துணிகள் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிற வியாபாரிகளுக்கும் விற்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரத்தை விருத்தி செய்யும் முகமாக, ரெங்க பிள்ளை அவரது சொந்த முதலீட்டில் ஆற்காட்டிலும், லாலாபேட்டையிலும் வியாபார ஸ்தலங்களைத் (trading posts) துவக்கினார். அங்கிருந்து ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு, ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரெஞ்சு வணிகர்கள் பெரும் லாபமடைந்தார்கள்.
கவர்னர் லெனாயைத் தொடர்ந்து பாண்டிச்சேரி கவர்னாக 1735ம் வருடம் பதவிக்கு வந்த கவர்னர் டூமா (Dumas)வும் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் உடையவராக இருந்தார். வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த பிரெஞ்சுக்காரர்கள் 1740ம் வருடம் தென்னிந்தியாவின் மீது அரசாட்சி செலுத்த வந்த மராத்தியர்களால் பெரும் சரிவை சந்தித்தார்கள். அவர்களின் வியாபாரமும் தொழிற்சாலைகளும் பெருமளவிற்கு முடங்கின. மராத்தியர்கள் போர்ட்டோ நோவோ துணி தயாரிப்புத் தொழிற்சாலையின் மீது தாக்குதலைத் தொடுத்து அதனை அழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியாவில் வலிமையுள்ள அரசுகள் எதுவும் இல்லாமல், தென்னிந்தியா முழுமையும் ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலில் இருந்தது.
தமிழகம் முழுமையும் போர்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தியூப்ளே (Dupleix), 1742ம் வருடம் பாண்டிச்சேரியின் பிரெஞ்சுக் கவர்னராகப் பதவியேற்க பாண்டிச்சேரிக்கு வந்தார். அவருக்கு முன்னர் பாண்டிச்சேரியை ஆண்ட சில கவர்னர்களைப் போலவே தியூப்ளேவும் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரிக்கு வருகிறார். 1721 முதல் 1731ம் வருடம் வரைக்கும் பிரெஞ்சுக் கம்பெனியில் பணிபுரிந்த தியூப்ளே, திருவேங்கிட பிள்ளையையும் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையையும் நன்கு அறிந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
தியூப்ளேவின் வரவிற்குப் பின்னர் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவம் உச்சத்திற்குச் சென்றது. ஆனந்த ரெங்கம் பிள்ளை நேர்மையும் திறமையும் உடையவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய கவர்னர் தியூப்ளே அவரை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த courtier பதவி (chief of dubhash என்றும் இப்பதவி அறியப்பட்டது), குருவ பிள்ளையின் மரணத்திற்குப் பின்னர் வேறொரு குடும்பத்தின் வசம் இருந்தது.
முக்கியத்துவம் வாயந்த courtier பதவி ஒரு கிறிஸ்தவர் வசமே இருக்க வேண்டும் என்று தீர்மானித்த பாண்டிச்சேரியின் வலிமையுள்ள கிறிஸ்தவ குருமார்கள் அந்தப் பதவியை, குருவ பிள்ளை கிறிஸ்தவர் என்றாலும், வேறொரு கிறிஸ்தவருக்கு அளித்திருந்தார்கள். குருவ பிள்ளையின் குடும்பத்தில் அவரைத் தவிர வேறொருவரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறவில்லை என்பதுதான் காரணம். எனவே தியூப்ளே கவர்னராக இருந்த காலத்தில் கனகராய முதலி என்பவரே courtier பதவியில் இருந்தார். கவர்னருக்கும் ஆனந்த ரெங்கம் பிள்ளைக்கும் இருந்த நெருக்கத்தை கனகராய முதலி விரும்பவில்லை. எனவே அவர் ஆனந்த ரெங்கம் பிள்ளையைத் தனது எதிரியாக நினைத்து அதன்படியே நடந்தார். இருந்தாலும் 1746ம் வருடம் கனகராய முதலி மரணமடைய, 1747ம் வருடம் ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை அடைந்தார்.
கவர்னர் பதவியிலிருந்து தியூப்ளே நீக்கப்படும் வரையில் (1754) ஆனந்த ரெங்கம் பிள்ளை அரசாங்க முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை வகித்தார். அவரைத் தொடர்ந்து கமிஷனராக நியமிக்கப்பட்ட கொதே (Godeheu)யின் காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவமும் அதிகாரமும் படிப்படியாகச் சரிய ஆரம்பித்தது. அதனுடன் அவரது உடல் நலமும் சரியில்லாமல் போக, அவரால் அந்தப் பதவிக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாமல் போன காலத்தில், பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டி லெறி (de Leyrit) ஆனந்த ரெங்கம் பிள்ளையை courtier பதவியிலிருந்து (1756) நீக்கினார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்பு இதனைக் குறித்து நேரடியாக எதுவும் சொல்லாவிட்டாலும், தியூப்ளேவிற்குப் பின்னர் வந்த கவர்னர்கள் ஆட்சியில் அரசாங்க ஏஜெண்ட்களாக நியமிக்கப்பட்ட துபாஷிகள் லஞ்சம் வாங்குவதனையும், ஊழல்கள் செய்வதனையும் குறித்தும், பிரெஞ்சுக்காரர்களின் மோசமான நிர்வாகம் குறித்தும் கசப்புடன் எழுதிய குறிப்புகள் காணப்படுகின்றன. தனது கடைசிக் காலத்தை மன வருத்தத்துடனேயே கழித்த ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1761ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, பிரிட்டிஷ்காரர்கள் கர்னல் கூட்டே (Colonel Coote) தலைமையில் பாண்டிச்சேரியைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் மரணமடைந்தார். அவருக்கு மகன்கள் எவரும் இல்லை. பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளும் அவர்களின் சிறு வயதிலேயே இறந்து போனார்கள்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை எதற்காக இத்தனை நுணுக்கமாக இத்தனை தகவல்களையும் எழுதி வைத்தார் என்பது வியப்பிற்குரிய விஷயம். ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடும் எண்ணம் எதுவும் அவருக்கு நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரண ஒரு சிறிய தகவலிலிருந்து, வியாபார நடவடிக்கைகள், அவரது குடும்ப விவகாரங்கள், மக்களின் அன்றைய வாழ்க்கை முறை, வதந்திகள் என எல்லாத் தகவல்களையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பாண்டிச்சேரி கடற்கரையை வந்தடைந்த ஒவ்வொரு கப்பலின் பெயரிலிருந்து, அதன் கேப்டன்கள், அதில் வந்திறங்கிய முக்கியஸ்தர்கள், அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட பொருள்களின் தகவல்கள், வரவேற்பிற்காக வெடிக்கப்பட்ட பீரங்கிக் குண்டுகளின், துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை என ஒன்றுவிடாமல் அவரது நாட்குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உடல்நலம் குறைந்த அவரால் சுயமாக எழுத முடியாத காலத்தில் பிறரின் உதவி கொண்டும் அந்தக் குறிப்புகளை விடாமல் எழுதியிருக்கிறார்.
பெரிய கணக்குப் புத்தகங்களில் எழுதப்பட்ட இந்த டைரிக் குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பிக்கின்றன. ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மரணத்திற்குப் பிறகு அவரது உறவினரான திருவேங்கிட பிள்ளை 1770ம் வருடம் வரைக்கும் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். ஆனால் இந்தக் குறிப்புகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் வரைக்கும் பிறரது பார்வையிலிருந்து மறைந்திருந்தன. Montbrun என்கிற பிரெஞ்சுக்காரரின் பெரு முயற்சிக்குப் பின்னரே இந்த டைரிக் குறிப்புகளை உலகம் அறிய முடிந்தது. அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களும் அதனை ஆங்கிலத்தில் பெரும் முயற்சி செய்து 1892ம் வருடம் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.